யாரைப் போல மோதி?

யாரைப்போல மோதி?

 

 

 

 

இன்றைய நான்காம்தமிழ் ஊடகத்தில் வெளியாகியுள்ள எனது கட்டுரை:

 

தேர்தல் அமர்க்களங்கள் ஒருவழியாக முடிந்தன. இந்தியக் குடிமக்கள் தங்கள் கடமையைச் செய்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்? செய்தித்தாள்களும், தொலைகாட்சிசானல்களும் போட்டி போட்டுக்கொண்டு யார் அடுத்த பிரதம மந்திரி, எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று ஊகங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. பார்க்கவும் படிக்கவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்தச் செய்திகள் எல்லாம். இன்னும் ஒரு நாள், எல்லாம் தெரிந்துவிடும்.

 

பாஜக தனது பிரதமர் வேட்பாளராக திரு மோதியை அறிவித்தபோது, எல்லா அரசியல் கட்சிகளும் துள்ளி குதித்தன. மற்ற கட்சிகளை விடுங்கள், பாஜகவிலேயே அதிருப்தி வெளிப்படையாகத் தெரிந்தது. திரு அத்வானியைத் தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டும்; அவர்தான் அந்த கட்சியின் மூத்தவர்; திரு வாஜ்பாயிக்குப் பின் அவர்தான் கட்சியில் செல்வாக்கு வாய்ந்தவர் என்றெல்லாம் பேசப்பட்டது. அத்வானி கூட ஆரம்பத்தில் தனது அதிருப்தியை தெரிவித்தார். பின்னர் சமாதானமாகிவிட்ட போதிலும், தேர்தலில் போட்டியிடப்போகும் இடத்தைப் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தினார்.

 

எது எப்படியோ பாஜகவினர் எல்லோரும் மோதியின் தலைமையை ஏற்று, ‘இந்தியாவெங்கும் மோதி அலை’, ‘இந்த முறை மோதி அரசு’ என்று பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள். மே 12 ஆம் தேதியுடன் வாக்குப்பதிவுகள் நாடு முழுவதும் நடந்து முடிந்தன. இந்தத் தேர்தலில் நகைச்சுவைக்கும் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டனர் நம் அரசியல்வாதிகள். மோடி, லேடி, இல்லையில்லை எங்க டாடி என்ற தமிழ்நாட்டு நகைச்சுவையும், ராகுல் காந்தியின் நேர்முகம் என்ற காமெடி ஷோவும் நல்லமுறையில் நடந்தேறியது.

 

போன ஞாயிறு அன்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் மோதியைப் பற்றி வந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Modi Xeroxed என்ற தலைப்பில் பல்வேறு அரசியல் பார்வையாளர்கள், வல்லுனர்கள் உலகத் தலைவர்களுடன் மோதியை ஒப்பிட்டுப் பார்த்து யாரைப் போல மோதி இருக்கிறார் என்று சொல்லியிருந்தார்கள். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மோதி யாரை காப்பியடிக்கிறார், அல்லது யார் வழியைப் பின்பற்றுகிறார் என்று வெளியாகியிருந்த சில கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

 

ரீகனின் மறுபிறவி

மோதியின் பொருளாதார கொள்கைகள் ரொனால்ட் ரீகனின் பொருளாதார கொள்கையை ஒத்திருக்கிறது என்கிறார் அமெரிக்க அரசியல் வர்ணனையாளர் டேவிட் பி. கொஹேன்.

 

பிரதமர் பதவியைக் குறி வைக்கும் முன் இரண்டு தலைவர்களும் முதலில் மாநில அளவில் – ரீகன் கலிபோர்னியாவின் ஆளுநர் ஆகவும், மோதி குஜராத்தின் முதல் மந்திரியாகவும் – தங்கள் அடையாளங்களைப் பதித்தார்கள். இருவரும் கட்டுபாடற்ற சந்தை என்பதை முன் வைத்தார்கள். இருவரும் தங்களது நிர்வாகத் திட்டத்தில்  நலத் திட்டங்களுக்கு குறைவான இடத்தைதான் கொடுக்கிறார்கள். இந்தியாவில் படித்தவர்கள் முதலில் மோதியை ஓரம் கட்டியது  போலவே அமெரிக்காவில் ரீகனை புத்திசாலிகள் யாரும் அத்தனை சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.  ரீகனுக்கு இனவாதி அடையாளம் போல மோதிக்கு வகுப்புவாத அடையாளம். சிவப்பு நாடாவை இருவரும் வெறுக்கிறார்கள்.

 

இந்திராகாந்தியை ஒத்திருக்கிறார்:

 

இப்படிச் சொல்பவர் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா. அதாவது, 1971-77 களில் நாம் பார்த்த இந்திராவின் சாயலை மோதியிடம் பார்க்கலாம். தனது கட்சி, தனது அரசு, தனது நிர்வாகம் தனது நாடு இவைகளை தனது ஆளுமையின் தொடர்ச்சியாகவே உருவாக்க எண்ணிய இந்திராவின் செயலை மோதியின் செயலும் ஒத்திருக்கிறது என்று ஒரு செய்திதாளில் எழுதிய தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார், குஹா. மோதி குறிப்பிடும் ரோம் ராஜ், மியான் முஷ்ராஃப் ( பிறகு இந்த வார்த்தைகள் மியான் அஹ்மத் படேல் என்று மாற்றப்பட்டது) இவையெல்லாம் இந்திராவின் ‘வெளிநாட்டு சதி’ ‘எனது எதிரிகள்’ என்ற சொற்களை போலவே இருக்கின்றன என்கிறார் குஹா.

 

நிக்சனின் நிழல்:

 

முக்கிய நிகழ்வுகளை மறுப்பது, ரகசியம் காப்பது, உயர்குடி மக்களை அலட்சியப்படுத்துவது போன்ற விஷயங்களில் மோதி நிக்சனை போலிருக்கிறார் என்கிறார் ராப் ஜென்கின்ஸ்.

 

இருவருமே தங்கள் சொந்த வாழ்க்கையில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க விரும்பினார்கள். தான் சாய் விற்பவராக இருந்ததை வெளியில் சொன்ன மோதி தனது சிறுவயது திருமணத்தை இந்த வருடம் ஏப்ரல் வரை ரகசியமாக வைத்திருந்தார். நிக்சன் தனது நண்பர் கழக (quaker) தொடர்பையும் ரகசியமாகவே வைத்திருக்க விரும்பினார். தேவைப்பட்ட போது மட்டும் இந்தத் தொடர்பை பயன்படுத்தினார். இருவரின் ‘நம்பிக்கைக்கு உகந்தவர்கள்’ பட்டியல் மிகச் சிறியது. கென்னடி குடும்பத்தவர்களின் அறிவுசார்ந்த அரசியலையும், அவர்களுக்குக் கிடைத்த ராஜ மரியாதையையும் ஏளனமாகவே பேசியவர் நிக்சன். சோனியா, ராகுல் இவர்களைப் பற்றி மோதி சொல்லும் விரும்பத்தகாத விஷயங்களை இதனுடன் ஒப்பிடலாம். குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இருவருக்கும் பொதுவானது என்னவென்றால் நடந்ததை மறுப்பது: நிக்சனுக்கு வாட்டர்கேட் என்றால் மோதிக்கு 2002 கலவரங்கள்.

 

தாட்சரின் தம்பி  

 

மோதியிடம் நாம் காணும் சர்வாதிகாரப் போக்கு, நலத்திட்டங்களுக்கு எதிரான போக்கு, சந்தைக்கு ஆதரவான போக்கு ஆகியவை தாட்சரை நினைவு படுத்துகின்றன என்கிறார்கள் அரசியல் நோக்குனர்கள்.

 

பல அரசியல் கண்காணிப்பாளர்கள் மோதியை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் பிரதி பிம்பமாகக் காண்கிறார்கள். இருவரும் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். சிறிய அரசாங்கம், தனியார் மயமாக்கலின் நன்மைகள் ஆகியவற்றில் பெரும் நம்பிக்கை உள்ளவர் மோதி. மோதியின் ஆலோசகர் வட்டம், நலத்திட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி, சந்தையை குறிவைக்கும் கொள்கையை முன்னுக்குத் தள்ளும் பொருளாதார நிபுணர்களைக் கொண்டது. இவையெல்லாம் அப்படியே தாட்சரின் முத்திரை பதித்த செயல்கள். தாட்சர் தனது சர்வாதிகாரத்திற்கும், எதிர்கட்சிகளை இகழ்வாகப் பார்க்கும் குணத்திற்கும் பெயர் பெற்றவர். இவையெல்லாம் மோதிக்கும் பொருந்தும். தனக்கு எதிர்ப்பு என்பதை மோதி விரும்புவதில்லை. அவர் ஒரு குழுவாக ஆடவும் விரும்புவதில்லை.

 

யாரை வேண்டுமானாலும் மோதி காப்பியடிக்கட்டும். இந்தியாவிற்கு ஒரு நிலையான அரசை கொடுக்கட்டும் என்பதுதான் இந்தியர் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா மோதி?

 

 

10 thoughts on “யாரைப் போல மோதி?

  1. தக்க சமயத்தில் பதியப்பட்ட பதிவு
    கூடுதல் சிறப்புப்பெறுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  2. நீங்களும் தேர்தல் ஜூரத்தில் இருப்பது நன்றாகப் புரிகிறது. நீங்கள் எழுதியதுபோல் யாரை வேண்டுமானாலும் திரு மோதி காப்பியடிக்கட்டும் நிலையான ஆட்சியைத் தந்தால் போதும் என்பது தான் எங்கள் ஆசையும் பொறுத்திருந்து பார்ப்போம். உங்களுக்கு அரசியலில் இவ்வளவு ஆர்வம் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

  3. நாளை இவ்வளவு நேரம் திரு. மோதி தான் பிரதமர் என்பது முடிவாகியிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் கட்சிக்குள் அவருக்கு இருந்த எதிர்ப்பு மீண்டும் தலை தூக்குவது தெரிகிறது.
    நாளை என்ன ஆகிறது பார்ப்போம்.

    நான்காம் தமிழ் ஊடகத்தில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  4. ஆசிரியையிடமிருந்து அரசியல் சார்ந்து ஒரு பதிவை வருவதை வரவேற்கிறேன். நன்றி.

    குறிப்பாக காங்கிரஸ் வரலாகாது என்று மக்கள் நினைத்ததன் விளைவுதான் மோதி வெற்றிபெற்றது. முந்தைய பா.ஜ. அரசைப்பற்றி பெரிதாக குறை கூற இயலாது என்றாலும் தவறான அணுகுமுறையால் ஆட்சியை இழந்தது. அப்போது சோனியாவைச் சிலாகித்து ஒரு கட்டுரை எழுதினேன். ஓஓ. அது எவ்வளவு தவறென்று பத்தாண்டுகளில் புரிந்து கொண்டேன்.

    முக்கியமாக நான் மோதியிடம் எதிர்பார்ப்பது – எளிதில் செய்யக்கூடியதே.

    1. நீண்ட நாள் பிரச்சினைகளை அதிகமாகக் கிளறாமல் உள்நாட்டுக் கட்டமைப்பில் கவனம் செலுத்துதல்
    2. அடிமட்ட சுரண்டல்களையும் ஊழல்களையும் முடிந்தவரை கலைதல்
    3. அரசு செயல்பாடுகளை இணையமாக்குதல் (ஊழலை ஓரளவு ஒழிக்க இது அவசியம்)
    4. அனைத்து மானில அரசுப் பணியாளர் தேர்வாணயங்களை இணைய மயமாக்குதல்
    5. டெண்டர்கள் கணினி மயமாக்குதல், இணையமயமாக்குதல் – வேலையின் தரத்தை வைத்து குத்தகைதாரர்களை ஊக்குவித்தல் அல்லது ஒழித்தல்.
    6. சால்ஜாப்பு சொல்லாது கல்வியின் தரத்தை மேம்படுத்துதல். எல்லா வகுப்பிலும் பாஸ், நுழைவுத்தேர்வு நீக்கம் போன்ற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மடத்தனமான கொள்கைகளை விடுத்து கல்வியை மேம்படுத்துதல்
    7. விவசாயம், கால்நடை, ஜவுளி, இயந்திரவியல் துறைகளில் உள்நாட்டுத் துறைகளை ஊக்குவித்தல் – உலகளாவிய துறைகளில் இந்தியாவையும் போட்டியாளராக மேம்படுத்துதல்
    8. அந்நிய நாடுகளிடம் நல்லுறவு கலந்த கண்டிப்பு, பிரிக்ஸ் கருத்தாக்கத்தை வலிமை மிக்கதாக்குதல்

    1. வரவேற்பிற்கு நன்றி, பாண்டியன். எனது பதிவுகளை படித்து கருத்துரை போட்டு என்னை மறுபடி இங்கு வரவழைத்ததற்கு இன்னொரு நன்றி.

      ஆழம் என்றொரு மாதாந்திரப் பத்திரிக்கையிலும் இதைபோலக் கட்டுரைகள் எழுதுகிறேன். இந்தப் பத்திரிகை கொஞ்சம் சீரியஸ் விஷயங்களை பேசும். அதனால் நானும் சீரியஸ் விஷயங்களையே இதில் எழுதி வருகிறேன்.
      ஜூலை இதழில் நான் எழுதிய கட்டுரையின் இணைப்பு இதோ: http://www.aazham.in/?p=4121
      படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

      1. படித்தேன் அம்மா. விரிவாக மடல் (அ)பதிவு இடுகிறேன். நன்றி

  5. பாண்டியன்,
    இந்த இணைப்பில் உங்களது இதுபோன்ற கோரிக்கைகளை எழுதலாம். பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கபடுகின்றன. http://mygov.nic.in/index.html

Leave a comment