தென்றல் …. முதல் மின்னூல்

இந்தப்பதிவில் இரண்டு செய்திகள்.

thendral

முதல் செய்தி:

‘உங்கள் பதிவுகள் வருவது ரொம்பவும் குறைந்துவிட்டது வருத்தமாக இருக்கிறது’ என்று திரு ஓஜஸ் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். உண்மைதான். கொஞ்சநாட்களாக மனதில் சிறிது தொய்வு. நிறைய காரணங்கள். வழக்கமாகப் போகும் தளங்களுக்கும் போகவில்லை.

அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்டு எழுதுவதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பிக்க நினைத்தேன். அதற்குக் கட்டியம் கூறுவதுபோல அமெரிக்காவிலிருந்து வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எனது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்ட செய்தி எனது தோழி திருமதி சித்ரா சுந்தர் மூலம் தெரியவந்தது. இணைப்புக் கொடுக்கிறேன். ஆனால் தென்றல் இதழ் உள்ளே போக பதிவு செய்து கொள்ளவேண்டும். பயனர் பெயர், பாஸ்வேர்டு வேண்டும்.

வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நான் எழுதும் குழந்தைகள் வளர்ப்பு தொடர், அறிவியல் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நன்றி தென்றல் இதழ்! என்னுடன் எனக்குத் தெரிந்த நிறைய பெண்பதிவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். எல்லோர்க்கும் பாராட்டுக்கள்.

 

 

தென்றலின் பாராட்டுரை:

தென்றல் இதழில் வந்த வலைத்தள அறிமுகம்.

மார்ச் 2014

 

ரஞ்சனி நாராயணன் என்ற தனது பெயரையே வலைப்பதிவுக்கும் வைத்திருக்கும் இவர் மருத்துவம், சமூகம், அறிவியல், குழந்தை வளர்ப்பு பற்றிய சுவாரஸ்யமான கட்டுரைகளை எளிய நடையில் எழுதி வருகிறார். இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். குழந்தைகள் ஏன் பொய் சொல்லுகிறார்கள்? என்ற கட்டுரை புதிதாகப் பல விஷயங்களைச் சொல்கிறது. பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள், விசித்திர தோற்றங்களில் பால்வெளிகள், மரபணுக்கள் என்று பல அறிவியல் தகவல்கள் வியப்பளிக்கின்றன. பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பாளரும் கூட. விவேகானந்தர் பற்றி இவர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இணைய இதழ்களிலும் வலைப்பதிவிலும் சிறந்த பங்களிப்புகளைத் தந்து வருகிறார், 60 வயது கடந்த இந்த இளைஞி.

 

மேலேயிருக்கும் படத்தில் வலமிருந்து இரண்டாவதாக என் அழகிய முகம்!

 

நன்றி தென்றல் இதழ்!

ebook

அடுத்த விஷயம்:

எனது வலைப்பதிவில் இருக்கும் சில பதிவுகளின் தொகுப்புகள் மின்னூலாக வெளிவந்திருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எனது எழுத்துக்கள் எனது எழுத்துக்களாகவே வெளிவந்திருப்பது எத்தனை ஆறுதலைக் கொடுக்கிறது, தெரியுமா? இந்த என்னுடைய முதல் மின்னூலின் பெயர்:

சாதாம்மிணியின் அலப்பறைகள்

இந்த இணைப்பை சொடுக்கி புத்தகத்தை தரவிறக்கலாம்.

எனது வலைத்தளத்திலிருந்து தொகுக்கப்பட்டபதிவுகளை இந்த மின்னூலில் படிக்கலாம். ஒரே இடத்தில்  முப்பது பதிவுகளை வரிசையாகப் படிக்கலாம். சில நீங்கள் ஏற்கனவே படித்திருக்கக் கூடும். மின்னூல் என்பதால் நீங்கள் அதை தரவிறக்கம் (download) செய்துகொள்ள வேண்டும். அந்தத் தளத்திலேயே தரவிறக்கம் பற்றி விவரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

freetamilebooks.com திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், திரு ரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்களுக்கும் நல்ல முறையில் எனது மின்னூலை கொண்டு வந்ததற்கு முதலில் நன்றி. இதை அழகாக வடிவமைத்துக் கொடுத்த திரு கி. சிவ‍கார்த்திகேயன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பு செய்த திரு ‘ப்ரியமுடன் வசந்த்’ அவர்களுக்கும் நன்றி.

படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.