டோரேமான்! முஜே பச்சாவ்வ்வ்வ்……….!

 

Image result

 

படம் நன்றி கூகுள்

 

 

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த டோரேமான் பற்றி தெரிந்திருக்கும். இது ஒரு ரோபாட். ஜப்பானிய தொலைக்காட்சி சீரியல் ஒன்றின் கதாநாயகன் – இல்லையில்லை, கதாநாயகனின் தோழன் – ஆனால் இதை கதாநாயகன் ஸ்தானத்தில் வைக்கும் அளவிற்கு இதற்கு இந்த சீரியலில் ஒரு முக்கியத்துவம் உண்டு.

 

என் சின்னப்பேரனுக்கு ரொம்பவும் பிடித்த இந்த சீரியல் ஹங்காமா என்ற சானலில் ஹிந்தி மொழியில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பேரன் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டால் நாள் முழுவதும் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்….!’ என்று எங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டி அலறியவண்ணம் இருக்கும். நோபிதா என்ற சிறுவனுக்கு இந்த டோரேமான் பலவிதங்களிலும் உதவுகிறது. அவ்வப்போது இருவரும் விண்வெளியில் பறக்கவும் செய்வார்கள். நோபிடாவின் வகுப்புத்தோழி ஸுஸுகா. அவர்களின் வகுப்பில் ஷீசான் என்ற ஒரு (B)புல்லியும் உண்டு. இந்த நோபிதா எப்போதும் நீலக்கலர் அரை டிராயர் போட்டுக்கொண்டு வருவான். ‘இவனுக்கு வயதே ஆகாதாடா? எப்போ பார்த்தாலும் அதே நீலநிற அரை டிராயர்? என்று என் பேரனை வம்புக்கு இழுப்பேன்.

 

நோபிதா வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றாலோ, அல்லது சக மாணவர்களுடன் போட்டி என்றாலோ அல்லது எந்த விதமான ஆபத்து என்றாலும் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’ என்று அலறுவான். ஒரு புதுவித கேட்ஜெட்டுடன் டோரேமான் ‘யாமிருக்க பயமேன்?’ என்று அவனைக் காப்பாற்றும். அம்மா, அப்பா, ஆசிரியர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவனைக் காப்பாற்றுவதே டோரேமானின் முக்கிய வேலை. இது ஒவ்வொரு நாளும் நடக்கும்.. சிலசமயம் அந்த கேட்ஜட்டை நோபிதா டோரேமானின் எச்சரிக்கையை மீறி பயன்படுத்தி ஆபத்தில் மாட்டிக்கொள்வதும் மறுபடியும் டோரேமான் அவனைக் காப்பாற்றுவதும் உண்டு. நோபிதா மேல் கோபம் கொண்டு டோரேமான் தன்னிடம் இருக்கும் கேஜட்டினால் அவனை பழிவாங்கும் காட்சிகளும் உண்டு. எப்படியோ, தினம் தினம் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’ என்ற அலறல் மட்டும் நிச்சயம்.

 

சிலசமயங்களில் சத்தம் தாங்கமுடியாமல் நான் என் பேரனைக் கோபித்துக் கொள்வேன். கொஞ்ச நேரம் எனக்குப் பிடித்த நேஷனல் ஜியாக்ரபி சானலை வைப்பான். நான் கொஞ்சம் அசந்தால் மறுபடியும் ‘டோரேமான்…….!’ தான். அதுமட்டுமில்லை; அவன் வந்துவிட்டால் தொலைக்காட்சிப் பேட்டியின் ரிமோட் கண்ட்ரோல் அவனிடம் தான்  இருக்கும். ஒரு நொடிக்கு ஒரு சானல் மாற்றுவான். பார்த்துக் கொண்டே இருக்கும்போது கைட் (guide) என்ற பட்டனை அழுத்துவான். திரை முழுவதும் அது அடைத்துக் கொண்டு ஒன்றுமே தெரியாது. கிடுகிடுவென சானல்கள் மாற்றுவதும், அவன் போகுமிடத்திற்கெல்லாம் அந்த ரிமோட் கண்ட்ரோல் போவதும் – அங்கங்கே வைத்துவிட்டு வருவதும்…! பிறகு எனக்கும் என் கணவருக்கும் அதைத் தேடுவது ஒரு பெரிய வேலை! சிலசமயங்களில் அவன் வீட்டிற்குத் திரும்பிப்  போனபின் ரிமோட் காணோம் என்றால் என் மகளுக்கு போன் செய்து அங்கு எடுத்துக்கொண்டு வந்துவிட்டானா என்று கேட்கும் கூத்தும் நடக்கும்!

 

முதலில் பிங்கு, ஆஸ்வால்ட் என்று பார்க்கத் தொடங்கியவன் சோட்டா பீம் பார்க்க ஆரம்பித்தான். பிறகு இந்த டோரேமான். இந்த சீரியல் பார்த்துப் பார்த்து ஹிந்தி நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டான். நான் ‘எப்போ பார்த்தாலும் ‘என்னடா டோரேமான்? டீவியை அணை’ என்று கோபித்துக் கொள்ளும்போது அணைத்துவிட்டு, பிறகு நான் நல்ல மூடில் இருக்கும்போது என்னிடம் வந்து ‘நீ இந்த டோரேமான் பார்த்துப் பார்த்து ஹிந்தி கத்துக்கலாம், பாட்டி!’ என்பான். சிரித்து மாளாது எனக்கு!

 

சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். வழக்கம்போல ரிமோட்டைக் கையில் எடுத்துக்கொண்டான். ‘என்னடா, இன்னும் டோரேமான் தானா?’ என்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏதோ ஒரு ஹிந்தி சானல் பார்க்க ஆரம்பித்தான். சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். சற்று நேரம் கழித்து என்ன சத்தத்தையே காணோமே என்று எட்டிப் பார்த்தேன். தாத்தாவினுடைய ஹெட்போன் அவன் காதில்! சரி போகட்டும் ஒருவழியாக டோரேமான் தொல்லையிலிருந்து விடுதலை என்று நினைத்துக்கொண்டு திரும்பினேன். திடீரென்று ‘இடிஇடி’ என்று சிரிப்பு! தூக்கிவாரிப் போட்டது. மறுபடி எட்டிப் பார்த்தேன். சிரிப்புடன் கூட சோபாவிலேயே துள்ளித் துள்ளிக் குதிக்கிறான்; கைதட்டுகிறான்; கையை நீட்டி தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்டிக் காட்டிச் சிரிக்கிறான். தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தேன். ஏகப்பட்ட மனிதர்கள். நானும் அவன் பக்கத்தில் வந்து நின்றுகொண்டேன். உடனே ‘நீயும் பார்க்கிறாயா, பாட்டி?’ என்று கேட்டுக்கொண்டே ஹெட்போனை காதிலிருந்து எடுத்தான்.

 

‘இது என்னடா புதுசு?’ என்றேன். ‘இது ‘தாரக் மெஹ்தா கா உல்டா சஷ்மா’’ என்கிறான். ‘ரொம்ப தமாஷ் பாட்டி! நீயும் பாரேன். ஹிந்தி நன்னா வரும்…!’ மறுபடி மறுபடி என் வீக்னெஸ் பற்றியே பேசுகிறானே என்று நினைத்துக்கொண்டு சும்மா இருந்தேன். கோகுல் தாம் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் குடித்தனங்களுக்கு இடையே நடக்கும் தினசரி நிகழ்வுகள் தான் இந்த சீரியல். தமிழ், பஞ்சாபி, குஜராத்தி, மகாராஷ்டிரா, பெங்கால் என்று வேறு வேறு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து குடியேறியிருக்கும் குடும்பங்கள்.

 

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குழந்தை. ஒரு வீட்டில் ஒரு தாத்தா இருக்கிறார். தாத்தாவிற்கு ஒரு இரவு விக்கல் வந்துவிடும். அதை எப்படி நிறுத்துவது என்பதுதான் அன்றைய கதை. உடல்நலத்திற்காக உடற்பயிற்சி செய்யப்போய் இடுப்பு பிடித்துக்கொண்டு விடும் ஒருவருக்கு. ஒரு கையைத் தூக்கிக்கொண்டு ஒருபக்கம் சாய்ந்த நிலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை எப்படி சரி செய்வது என்று எல்லோரும் பதறிக் கொண்டிருப்பார்கள். கால் வழியே பிறந்தவர் வந்து ஒரு உதை விட்டால் சரியாகிவிடும் என்பார்கள். இவரது மனைவியே கால்வழியே பிறந்தவள் தான். கணவனை எப்படி உதைப்பது என்று தயங்குவாள். கடைசியில் ஒரு கழுதையைக் கூட்டிக்கொண்டு வருவார்கள். கழுதை உதைப்பதற்கு வாகாக ஒரு கயிற்றுக்கட்டிலில் அவரைக் கட்டி வைப்பார்கள். கழுதை தன்னை உதைக்கப் போவதை நினைத்து மிரண்டு இடுப்புப் பிடித்துக் கொண்டவர் கட்டிலையும் தூக்கிக்கொண்டு ஓடுவார். கழுதை துரத்த, துரத்த கொஞ்சநேரத்தில் நேராக ஓட ஆரம்பித்துவிடுவார்.

 

கிட்டத்தட்ட 2000 (ஆமாம், நான் சரியாகவே எழுதியிருக்கிறேன்) எபிசோடுகள் வந்துவிட்டனவாம். சிறிது நேரம் பார்த்தேன். அவ்வளவுதான் என்று நினைத்தால் இன்னொரு எபிசொட். தொடர்ந்து இன்னொன்று. ‘என்னடாது?’ என்றால் ‘நாள் முழுக்க இது வந்துண்டே இருக்கும், பாட்டி!’ என்கிறான். அட கஷ்டமே! இப்படிக் கூட ஒரு சானலில் தொடர்ந்து ஒரு சீரியலைப் போடுவார்களா, என்ன? வேடிக்கையாக இருக்கிறது என்றால் கூட எத்தனை நேரம் பார்ப்பது? காலை, மதியம், மாலை, இரவு தூங்கும் வரை ‘தாரக் மெஹ்தா’ தான்!

 

காலையில் எழுந்தவுடன் இன்று என்ன பாட்டு மனதில் வந்தது தெரியுமா? ‘தாரக் மெஹ்தா கா உல்டா சஷ்மா!’ சீரியலின் பாட்டுதான். அடக் கடவுளே! என்ன இப்படி ஆகிவிட்டேன்! யார் என்னைக் காப்பாற்றப் போகிறார்கள்?

 

சட்டென்று நினைவிற்கு வர உரக்கக் கூவினேன்: ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’

 

 

 

செல்வ களஞ்சியமே 100

twins 1

சமீபத்தில் புனே சென்றிருந்தபோது உறவினர் வீட்டில் ஒரு இரண்டு வயது, இல்லை இன்னும் கொஞ்சம் பெரியதாகவோ ஒரு  குழந்தை. ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் அது படுத்திய பாடு! பாவம் அந்தக் குழந்தையின் பின்னால் ஆறு பேர்கள்! குழந்தையின் அப்பா, அம்மா, அம்மாவின் அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா அப்பா! ‘சாப்பிடு! சாப்பிடு!’ என்று சாப்பாட்டு வேளையை வியர்த்து வழிய வழிய ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடவே மாட்டேனென்கிறான்’ என்று எல்லோரிடமும் தாத்தா பாட்டிகள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

‘அப்பளாம், அப்பளாம்’ என்றால் வாயைத் திறக்கும். அப்பளத்தை குழந்தையின் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு கீழே சாதத்தை மறைத்து ஊட்டுவாள் அந்தப் பெண். இரண்டு முறை அப்படி சாப்பிட்ட அந்தக் குழந்தை மூன்றாவது முறை உஷாராகிவிட்டது. சாப்பிட மறுத்துவிட்டது. இப்போது அதற்கு வேறு ஏதாவது காண்பிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை பெரிய மனஅழுத்தம் கொடுக்கும் விஷயமாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது. அந்த பெண் வேலைக்குப் போகிறவள். அவளுக்கு அலுவலக நாட்களில் சீக்கிரம் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அதை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டுப் போகவேண்டிய கட்டாயம். இப்போது லீவு தானே நிதானமாக வேலைகளைச் செய்யலாம் என்றால் குழந்தையின் சாப்பாட்டு வேளை நாள் முழுவதும் அவளை உட்காரவிடாமல் செய்கிறது, என்ன செய்ய? இந்தச் சின்னக் குழந்தையை கையாள பெரியவர்களால் முடியவில்லையா?

 

baby creeping

தட்டு நிறைய சாதத்தை வைத்துக்கொண்டு குழந்தையின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அவளைக் கூப்பிட்டேன். ‘இதோ பாரும்மா! முதலில் நீ இத்தனை சாதத்தைக் கொண்டு வராதே. நாலே நாலு ஸ்பூன் கொண்டுவா. குழந்தை அதை சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் நாலு ஸ்பூன் கொண்டுவா. முதல் நாலு ஸ்பூன் குழந்தையின் வயிற்றினுள் போனாலே உனக்கு சந்தோஷமாக இருக்கும். நீ கொண்டு வந்ததை குழந்தை சாப்பிட்டுவிட்டது என்று சந்தோஷம் கிடைக்கும். நீ இத்தனை சாதத்தை ஒரேயடியாகக் கொண்டு வந்தால் குழந்தையின் வயிற்றில் எத்தனை போயிற்று என்று தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தைப் பார்த்து குழந்தை சாப்பிடாததுபோல உனக்குத் தோன்றும்’ என்றேன். நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு ரசிக்கவில்லை. ‘எத்தனை முறை மாமி திரும்பத் திரும்ப சாதம் கலப்பது?’ என்று அலுத்துக் கொண்டாள். அவள் அம்மாவிற்கு நான் சொன்னது ரொம்பவும் பிடித்துவிட்டது. ‘சாப்பிடலை சாப்பிடலை என்று நொந்து கொள்வதைவிட நாலு ஸ்பூன் உள்ள போச்சே என்று சந்தோஷப்படலாம் அது அவளுக்குப் புரியவில்லை, பாருங்கோ’ என்றார் என்னிடம்.

 

‘ரயில் பயணங்கள்’ பாதியில் நிற்கிறது; ஸ்ரீரங்கத்து வீட்டுப் புழக்கடையில் நின்று கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போ என்ன குழந்தைக்கு சாதம் ஊட்டுவது பற்றி பேச்சு?

 

நான் நான்குபெண்கள் தளத்தில் எழுதிவந்த செல்வ களஞ்சியமே நூறாவது வாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது.  என்னை குழந்தைகள் வளர்ப்புப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்புப் பற்றி என்று ரொம்பவும் யோசித்தேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என்றவுடன் உற்சாகமாக ஆரம்பித்தேன். என்னுடன் கூட டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் சேர்ந்து கொண்டார். படிக்கும் செய்திகள், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்.

 

சமீபத்தில் ஒரு வாசகி இந்தத் தொடர் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். திருமதி ஆதி வெங்கட் ஸ்ரீரங்கத்தில் பார்த்த போது அதையே சொன்னார். முதல் வேலையாக மின்னூல் ஆக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டு பாகமாக வரும். இந்தத் தொடரைப் படித்து பயனுள்ள கருத்துரைகள் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

 

எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நான் எழுதுவதை அப்படியே பிரசுரம் செய்த நான்குபெண்கள் ஆசிரியை திருமதி மு.வி. நந்தினிக்கு சொல்லில் அடங்காத நன்றி. நடுவில் என்னால் எழுத முடியாமல் போனபோது மிகுந்த பொறுமையுடன் நான் திரும்பி வரக் காத்திருந்தது மிகப்பெரிய விஷயம்.

உடல் நலக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ அடுத்த இதழிலிருந்து தொடரும்.

எனது இந்த சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்து கொள்ள முடியும்? இந்தக் கட்டுரையைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்களது தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.

 

இன்னொரு சந்தோஷச் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதீதம் இணைய இதழில் எனது தொடர் ‘எமக்குத் தொழில் அசைபோடுதல்’ நாளையிலிருந்து ஆரம்பமாகிறது. எல்லோரும் படித்து இன்புற்று கருத்துரை இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல்

வலைத்தமிழ் இணைய தளத்தில் தொடராக வந்த திரு ஜோதிஜியின் ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ பற்றிய மதிப்புரை

வலைத்தமிழில் படிக்க இங்கே 

 

புகைப்படம் நன்றி: தேவியர் இல்லம்

ஜோதிஜியின் திருப்பூர் பற்றிய மற்றுமொரு தொடர். இரண்டு தொழிற்சாலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தனது பாணியில் வழங்கியிருக்கிறார்.

 

எழுத்து என்பதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பவர் திரு ஜோதிஜி என்பது அவரது எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால் அவரது எழுத்துக்களை வாசிக்க வரும்போது அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக வர வேண்டும். மேலோட்டமாக வாசிப்பது என்பது இங்கு நடக்காத விஷயம். கவனச் சிதறல் இங்கு மன்னிக்க முடியாத ஒன்று.

 

இவரது முதல் அச்சுப் புத்தகம் டாலர் நகரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த போது நாம் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்! அங்கு நாம் ஊகித்த கதைகளின் உண்மை மாந்தர்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்டுகிறார், ஜோதிஜி.

 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளு’க்குள் நுழைவோம், வாருங்கள்.

 

‘நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம்’

 

முதல் அத்தியாயத்திலேயே இவ்விதம் எழுதி திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலையின் உள்ளே வாழும் மனிதர்களிடையே நடக்கும் ஒரு நிழல் யுத்தத்திற்கு நம்மை தயார் செய்வதுடன், இந்த குறிப்புகளில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு ‘டீசர்’ கொடுத்து விடுகிறார் ஜோதிஜி. அதனால் நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத் தயாராகிறோம். ஜோதிஜியின் எழுத்துக்களை படிக்க நீங்கள் மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம். இந்தக் குறிப்புகளில் அவரே நம்மை முதலிலேயே இப்படித் தயார் செய்துவிடுகிறார். ஒவ்வொரு துறையிலும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நிழல் யுத்தத்தில் பங்குபெறும் மாந்தர்களின் நடவடிக்கைகளில் ஒன்றிப் போய்விடுகிறோம்.  வெள்ளைத் துணிகளில் மட்டுமா சாயம் ஏற்றப்படுகிறது, இங்கே? மனிதர்களும் சமயத்திற்குத் தகுந்தாற்போல நிறம் மாறுவதை இந்தக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது.

 

முதலில் தனது முதலாளிகளாகிய ‘பஞ்ச பாண்டவர்களையும், அவர்களை தான் கையாண்ட விதத்தையும் சொல்லும் வேளையில், இந்த நிறுவனத்துக்குள் தாம் அடியெடுத்து வைத்த நிகழ்வையும் சொல்லுகிறார். அந்த நிறுவனத்தின் நிலைமையையும் சொல்லி, தான் அவற்றை மாற்ற எடுத்த முயற்சிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் பட்டபாடு எதிர்கொண்ட எதிர்ப்புகள் எல்லாமே விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றன.

 

இங்கு நமக்கு ஒரு புதிய ஜோதிஜி அறிமுகமாகிறார். டாலர் நகரத்தில் நாம் சந்தித்த அந்த ‘ஒன்றும் தெரியாத அப்பாவி’ ஜோதிஜி இங்கு இல்லை என்பது இந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தொழிலில் நீண்ட நாட்கள் பட்ட அனுபவத்தில் புடம் போடப்பட்ட ஜோதிஜியை சந்திக்கிறோம்.

 

 

தனது அனுபவம் பற்றி ஜோதிஜியின் வார்த்தைகளில்:

தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள்,  தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது.

 

அவர் கற்றது மட்டுமல்ல நமக்கும் பலவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறார். அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல்வேறு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மாடசாமியிலிருந்து தொடங்கி ராஜா வரை. ‘அவள் பெயர் ரம்யா’ என்ற தலைப்பில் ஜோதிஜி எழுதிய ஒவ்வொன்றும் மணிமணியானவை. ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி அவரை பயிற்று வைப்பதன் மூலம் வெளிக்கொணரலாம் என்று இங்கு சொல்லுகிறார். ஆனால் அதுவே அவரை இக்கட்டில் மாட்டி வைத்ததையும் சொல்லிப் போகிறார். சுவாரஸ்யமான அத்தியாயம்.

 

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தான் கண்டது, கேட்டது அனுபவித்தது என்று தனது ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற எழுத்துப்பாணியில் விவரிக்கிறார். நீங்கள் திருப்பூரிலோ அல்லது வேறு ஏதாவது ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் தான் இந்த ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்பு’களை ரசிக்க முடியும் என்றில்லை. யாராக இருந்தாலும், என்னைபோன்ற இல்லத்தரசி ஆனாலும் ரசிக்கலாம். அதேபோல ஜோதிஜி இங்கு சொல்லியிருக்கும் மனிதர்களைப் போல நாம் வெளியிலும் பலரைப் பார்க்கிறோமே. அதனால் மனிதர்களை எடை போடவும் இந்தக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.

 

 

ஒரு சின்ன குறை: ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நீண்டுகொண்டே போகிறது. சிலசமயம் வேண்டுமென்றே வளர்க்கிறாரோ என்று கூடத் தோன்றுகிறது. அத்தியாயங்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அல்லது இன்னும் இரண்டு மூன்று அத்தியாங்களாக கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ என்பதை ‘வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய குறிப்புகள்’ என்று கூடக் கொள்ளலாம்.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் முழுமையாகப் படிக்க இங்கே