60 வயதினிலும் வாழ்க்கை இனிக்க……


ஆரோக்கியக் குறைவாலும், மன அமைதி இல்லாமையாலும் நம்மில் பலருக்கு 60 வயதுக்கு மேல் வாழ்க்கை என்பது இறக்கி வைக்க முடியாத ஒரு பெரும் பாரமாக தோன்றும். என்ன வாழ்க்கை என்ற அலுப்பு தலை காட்டும்.

 

இழந்துபோன முக்கியத்துவத்தை நினைத்து சிலர் வருத்தப்படுவார்கள். பெண்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி தாங்களாகவே முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு வந்திருப்பார்கள். இதைச் சில அப்பாக்களால் தாங்க முடியாது. அம்மாக்களுக்கோ மாட்டுப்பெண் வந்து பொறுப்பு எடுத்துக்கொண்டு தன் பதவியை பறித்துக்கொண்டு விட்டதாக கோவம் இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்க்கை எப்படி இனிக்கும் என்கிறீர்களா? கட்டாயம் இனிக்கும் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால்.

முதலில் ஒரு விஷயம் நினைவில் இருக்க வேண்டும். வயதாவதைத் தடுக்க முடியாது. அதனால் வரும் சில சில உபத்திரவங்களையும் தடுக்க முடியாது. இவற்றால் நம் மனது பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்; இது நம்மால் நிச்சயம் முடியும்.

நம் மனதை எது பாதிக்கும்? எதிர்பார்ப்பு: எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். இந்த எதிர்பார்ப்பு உங்களுக்கு துக்கத்தை கொடுக்கும். தூக்கத்தை கெடுக்கும்.

பிறரது குற்றங்களை மறக்கவும், மன்னிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் யாரையாவது, எதற்காகவாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பது பிறரை உங்களிடமிருந்து தூர விரட்டும். தப்பு செய்யாதவர்கள் யார்?

‘சும்மா’ இருக்காதீர்கள்: எப்போதும் மனதையும் உடலையும் எதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்துங்கள். சும்மா இருக்கும் மனமும் உடலும் சைத்தானின் கூடாரம் என்பது நினைவிருக்கட்டும். சிறு வயதுப்  பொழுதுபோக்கை இப்போது தொடரலாம். பாட்டுப் பாடுவது, தையல், கை வேலை என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள். இதெல்லாம் பெண்கள் வேலை. ஆண்கள் என்ன செய்ய?

ஆடவர்களுக்கு மிக அருமையான பொழுபோக்கு இருக்கிறது. ஆங்கில செய்தித்தாள் அல்லது தமிழ் தினப் பத்திரிகையை ஒரு வரி விடாமல் படிக்கிறீர்கள், இல்லையா? ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம்;

எல்லா ஆங்கிலப் பத்திரிகையிலும் தலையங்கம் வெளியாகும் பக்கத்தில் ‘மிடில்’ (middle) என்று அரைப் பக்கத்திற்கு ஓர் சிறிய பதிவு வரும். மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு உங்களின் அனுபவம், பிறரது அநுபவத்தில் நீங்கள் கற்ற பாடம், நகைச்சுவை நிகழ்ச்சிகள், மனதை உருக்கும் செய்திகள் என்ற பலவற்றையும் எழுதலாம்.

கொஞ்சம் கணணி அறிவு இருந்தால் போதும்; வலைப்பதிவு தொடங்கலாம். உங்கள் எழுத்துக்களை படிக்க உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். நான் எதோ விளையாட்டுக்கு சொல்லுகிறேன் என்று நினைக்காதீர்கள். எழுதத் துவங்குங்கள்; அப்புறம் நீங்களே அசந்து போகும் அளவு ‘விசிறிகள்’, நண்பர்கள் கிடைத்து விடுவார்கள்.

பெண்மணிகளும் எழுதலாம். சமையல் குறிப்பிலிருந்து, சிறுகதை வரை, கோலத்தில் இருந்து பண்டிகைகளை கோலாகலமாகக் கொண்டாடுவது வரை எழுதித் தள்ளலாம்.

அடுத்தது உங்கள் ஆரோக்கியத்திற்கு போதுமான கவனம் கொடுங்கள். எல்லோருக்குமே ஆரோக்கியம் மிக மிக அவசியம். வேலையில் இருக்கும்போதே ஆரோக்கியக் காப்பிடுகளில் முதலீடு செய்வது இன்றியமையாதது. வேளாவேளைக்கு மருந்து சாப்பிடத் தவற வேண்டாம். வருடத்துகொரு முறையோ அல்லது சரியான இடைவெளியில் பரிசோதனைகள் செய்து கொள்ளவும். மருந்துகள் சாப்பிடுவதோ எத்தனை முக்கியமோ இப்பரிசோதனைகளும் அவ்வளவே முக்கியம்.

வயதானவர்களுக்கும் உடற்பயிற்சி மிக அவசியம். காலை மாலை இரண்டு வேளையும் ‘விறுவிறு’ நடை கட்டாயத் தேவை. கணவன், மனைவி இரண்டு பேரும் சேர்ந்து போவது நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். ஒருவருக்கு ஒருவர் துணையாகவும் இருக்கும்.

உடற்பயிற்சியைப் போலவே உணவுக் கட்டுப்பாடும் வேண்டும். வீட்டுச் சாப்பாடு நல்லது. எப்போதாவது ஒருமுறை வெளியில் போய் சாப்பிடுவது தப்பில்லை.

சேமிப்பு மிக அவசியம்: ஓய்வு பெற்றபின் கிடைத்த பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்யுங்கள். அநாவசியச் செலவுகளைக் குறையுங்கள். அதே சமயம் கருமித்தனம் வேண்டாம்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோவில்களுக்கு யாத்திரை போகலாம். ஒரு குழுவுடன் போவது மாறுதலாகவும், பல புதிய நண்பர்களையும் ஏற்படுத்தும். இல்லையானால் வருடத்திற்கு ஒருமுறைநண்பர்களுடன் சுற்றுலாத்தலங்களுக்குப் போகலாம். இங்கு அவசியம் நினைவில் கொள்ள வேண்டியது: கைபேசியை எடுத்துச் செல்லுங்கள். தினமும் ஒருமுறை நீங்கள் இருக்குமிடம், உங்கள் ஆரோக்கியம் பற்றி உங்கள் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ தெரிவியுங்கள்.

 

மனத் திருப்தியுடன் வாழுங்கள். பழையவற்றை, நடந்துபோன கசப்பான விஷயங்களை திரும்பத் திரும்ப பேசி ஆறிப்போன புண்களை கீறி விட்டுக் கொள்ளாதீர்கள். இது உங்கள் மனதை நஞ்சாக்கும். உடலையும் வருத்தும். உடல் நலத்துடன் இருக்க மன நலம் மிகவும் முக்கியம்.

 

‘வயதாகிவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். வயது என்பது ஒரு எண்ணிக்கை தான். நமக்கு chronological, biological, psychological என்று 3  வயதுகள் உண்டு. முதலாவது நாம் பிறந்த தேதி வருடம் இவற்றை வைத்துச் சொல்லுவது. இரண்டாவது நம் ஆரோக்கியத்தை வைத்து தீர்மானம் செய்வது. மூன்றாவது நமக்கு எத்தனை வயது என்று நாம் உணருவது.

 

முதல் வகை வயதை மாற்ற முடியாது. இரண்டாவது வயதை தேவையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் நம் கைக்குள் அடக்கலாம். மூன்றாவது வயதினை நேர்மறையான எண்ணங்கள், நம்பிக்கை நிறைந்த யோசனைகள், செயல்கள் மூலம் குறைக்க முடியும்.

 

முடிவாக நீங்கள் ஏற்கனவே ஒரு ‘இன்னிங்ஸ்’ ஆடி முடித்தாகி விட்டது. நாமெல்லோரும் சச்சின் டெண்டுல்கர் அல்ல; ஆடிக் கொண்டே இருப்பேன் என்று சொல்வதற்கு.

 

மாற்றங்களை சரியான கோணத்தில் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

 

60 அல்ல 90 வயதில் கூட வாழ்க்கை இனிக்கும்.