மாக்டெய்ல்

எங்கள் ஊரில் மிகப் பிரபலமான பழச்சாறு விற்பனை கூடம் கணேஷ் ஜூஸ் சென்டர். ஒரு தடவை அங்கு போயிருந்த போது ஒருவர் வந்து “காக்டெய்ல் கொடுங்க” என்றார். எங்களுக்கு சற்று ஆச்சரியம். பழச்சாறு விற்பனை கூடத்தில் காக்டெய்ல்? கடைக்காரரிடமே கேட்டு விட்டேன். அவர் சிரித்துக் கொண்டே ‘எல்லாப் பழச்சாற்றையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொடுப்போம். அதுதான் காக்டெய்ல்’ என்றார். நான் உடனே ‘ஓ! அதுக்கு பேரு மாக்டெய்ல்!; காக்டெய்ல் இல்லை’ என்று அவரை திருத்தி விட்டு (ஆசிரியை ஆயிற்றே!) நகர்ந்தேன்.

ஆல்கஹால் சேர்க்காத, இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகளைச் சேர்த்து தயாரிப்பதுதான் இந்த மாக்டெய்ல். காக்டெய்ல் போலவே இரண்டு, மூன்று பானங்களை கலந்து தயாரிப்பதால் ‘mock’ (copy or imitation) என்ற ஆங்கில வார்த்தையுடன் காக்டெய்லின் வாலையும் (tail) சேர்த்து மாக்டெய்ல் என்ற பெயர் பெற்றது இந்தப் பானம். இன்னொரு பெயர் விர்ஜின் டிரிங்க்ஸ்.

பழச்சுவை பிடித்தவர்களும், மது அருந்தும் பழக்கமில்லாத பெண்களும் இந்தப் பானத்தை விரும்பிக் குடிப்பார்கள். இதன் அலாதியான சுவையும், வேறு வேறு பழச்சாறுகள் கலக்கப் படுவதால் ஏற்படும் வாசனையும் எல்லோரையும் கவர்ந்துவிடும். பொதுவாக மாக்டெய்ல் ஒரு குளிர்ந்த, கெட்டியான, மிருதுவான – பழக்கூழ், ஐஸ் க்ரீம், யோகர்ட் அல்லது பால் கலந்த பானம். பலவகைப்பட்ட பெர்ரீஸ், பீச்சஸ், மெலன்ஸ், ஆரஞ்சு ஜூஸ், பைனாப்பிள், மாம்பழம், மற்றும் கிவி பழங்கள் மாக்டெய்லில் சேர்க்கப் படும் பிரபலமான பொருள்கள். புத்தம்புதிதான பழங்கள் சேர்ப்பது சுவையைகூட்டும் என்றாலும், பதப்படுத்தப்பட்ட, இனிப்பு சேர்க்காத பழங்களையும் பயன் படுத்தலாம்.

கச்சிதமான விகிதத்தில் சுவையான மாக்டெய்ல் செய்ய பல வருட அனுபவம் வேண்டும் என்றாலும், ஒரு கற்பனைவளம் மிக்க சமையல் கலைஞர் சின்னச்சின்ன உத்திகளைக் கையாண்டு கண் இமைக்கும் நேரத்தில் வாயில் நீர் ஊற வைக்கும் மாக்டெய்ல்களை தயார் செய்துவிடலாம்.

மாக்டெய்ல் தயாரிப்பதற்கு முன், தேவையான எல்லாப் பொருள்களையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பழச்சாறுகளை சரியான அளவில் அளந்து வைத்துக் கொள்ளுங்கள்.

புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொடிக்கப்பட்ட ஐஸ் கட்டிகள்.

நீங்கள் தயாரிக்கப் போகும் மாக்டெய்லுக்கு புதிய தோற்றம் அளிக்க, பழங்களை சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வித்தியாசமான ஐஸ் கட்டிகள் தயார் செய்ய ஐஸ் தட்டில் எலுமிச்சை துண்டுகள், பழத்துண்டுகளை வைக்கலாம்.

மாக்டெய்ல் பரிமாற கண்ணாடி குவளைகள் விதவிதமாகத் தேவை:

ஷாம்பெய்ன் குவளைகள்: நீள வடிவிலான கண்ணாடிக் குவளைகள்;

காக்டெயில் குவளைகள்: ‘V’ வடிவ முக்கோண கண்ணாடிக் குவளைகள்;

பழங்காலக் குவளைகள்: வளைந்த ஓரங்கள் கொண்ட டம்ளர்கள்;

ஹை-பால் குவளைகள்: (Highball glasses): உயரமான, நேரான பக்கங்கள் கொண்ட குவளைகள்

ஸ்டெம் – ஒயின் குவளைகள்: ஒயின் குடிப்பதற்கு என்றே பலவித வடிவங்களில், அளவுகளில் கிடைப்பவை.

இத்தனை எழுதியபின் அட்லீஸ்ட் இரண்டு மூன்று செய்முறைகள் சொன்னால் தானே நன்றாக இருக்கும். இதோ உங்களுக்காக:

விர்ஜின் மோஜிடோ:

தேவையானவை:

புதினா இலைகள் 3 அல்லது 4

எலுமிச்சை துண்டுகள் (பெரியது) 2

எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி

ப்ரவுன் ஷுகர்: 1 மேசைக்கரண்டி

ஸ்ப்ரைட் அல்லது சோடா : 1 பாட்டில்

எலுமிச்சை துண்டங்கள், புதினா இலைகள், ப்ரவுன் ஷுகர் இவற்றை ஒன்றாகச் சேர்த்து பிழிந்து சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலக்கவும். இவற்றுடன் ஸ்ப்ரைட் அல்லது சோடா சேர்க்கவும். பொடியாக்கப்பட்ட ஐஸ் கட்டிகள் போட்டு பரிமாறவும்.

ப்ரூட் பஞ்ச்:

தேவையானவை:

லீச்சி பழச்சாறு 100 மிலி

மாம்பழச் சாறு 100 மிலி

ஆரஞ்சு பழச்சாறு 100 மிலி

புது க்ரீம்: 30 மிலி

எல்லாவற்றையும் ஷேக்கரில் போட்டு நன்றாகக் குலுக்கவும். புது க்ரீம் சேர்த்து கலக்கவும். பொடியாக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை போடவும். ஒரு பழத்துண்டை வைத்து அலங்கரிக்கவும்.

என்ன தோழிகளே, இந்த வாரக்கடைசியை மாக்டெய்லுடன் குளுகுளுவென்று செலவழிக்க தயாரா