உனக்கு 70, எனக்கு 60….!

hubby bdayஆனந்தவல்லி கல்யாண மண்டபத்தில் எங்கள்  திருமணம் நேற்றுதான் (23.05.1975) நடந்தது போல இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் 38 வருடங்கள் ஓடிவிட்டன.

எல்லாப் பெண்களைப் போலவே நானும் திருமணம் என்ற பந்தத்தின் பொருள் புரியாமலேயே திருமணம் செய்து கொண்டேன். பெரிய குடும்பத்தில் இரண்டாவது (எண்ணிக்கையில் மட்டும்) பிள்ளை. ஆனால் பொறுப்பில் முதல் பிள்ளையாக இருந்தார்.

திருமணம் ஆன அடுத்தநாள் இவர்  தன் தந்தையின் தேவைகளை கவனிக்கக் காலை 5 மணிக்கு எழுந்த போது  – எனக்கு மட்டுமல்ல இவர் – என்கிற முதல் பாடம் புரிந்தது.

இவரது பக்குவம் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. எனது மாமனார் பக்கவாத நோயால் செயலிழந்திருந்தார். அவருக்கு தினமும் காலைக் கடன்களை கழிக்க உதவுவதிலிருந்து, குளித்துவிட்டு உடை உடுத்தி அவரை கூடத்தில் உட்கார்த்தி வைக்கும் பொறுப்பு இவருடையது. ஒருநாள் கூட இந்த பணிவிடையை இவர் செய்ய மறந்ததில்லை. ஆத்மார்த்தமாகச் செய்வார்.

இதே ஆத்மார்த்தமான பணிவிடையை நான் பத்து வருடங்களுக்கு முன் கீழே விழுந்து காலை முறித்துக் கொண்ட போது எனக்குச் செய்தார். இதற்கு கைம்மாறு செய்ய வேண்டுமென்றால் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?

இவருடைய பக்குவமான தோழமையால் கொஞ்சம் கொஞ்சமாக திருமணம் என்பதின் உண்மைப் பொருள் புரிய ஆரம்பித்தது. பலசமயங்களில் தடுமாறிய போதும், இவர்  எனக்கு முக்கியம் என்பது புரிய மற்ற உறவுகள் ஏற்படுத்திய காயங்கள் என்னைத் தாக்குவது குறைந்தது.  அம்மா அடிக்கடி சொல்லும் ‘பாத்திரத்தைப் பார்க்காதே, பாலைப் பார்’ என்பதன் அர்த்தம் புரியப் புரிய வாழ்க்கை கொஞ்சம் எளிதாயிற்று.

பத்து வயது வித்தியாசம் எங்களுக்குள். எனது பிடிவாதங்கள், எதிர் கேள்விகள் இவரது பக்குவப்பட்ட பேச்சுகளினால் மெல்ல மெல்ல குறையத்  தொடங்கின.

ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்று இரண்டு குழந்தைகள். ஆசை நிறையவும், ஆஸ்தியாக எங்களிடம் இயற்கையாக அமைந்திருக்கும்  நல்ல பழக்கங்கள், எண்ணங்களையும் குறைவில்லாமல் கொடுத்து வருகிறோம்.

இன்று இத்தனை வருடங்களுக்குப்  பிறகு திரும்பிப் பார்த்தால் மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்ற மன நிறைவு ஏற்படுகிறது.

என்னுடைய பல ‘முதல்’ கள் இவரைத் திருமணம் செய்த பின் தான் நடந்தேறின.

முதல் எம்.ஜி.ஆர் படம்;

முதல் ஐஸ்க்ரீம்;

முதல் கார்/விமான பயணங்கள்;

முதல் வீடு;

பங்குனி உத்திரத்தில் பிறந்த இவருக்கு இன்று எழுபது வயது நிறைகிறது.

வாழ்க்கையின் எல்லா மேடு பள்ளங்களிலும் இருவருமாகக் கை கோர்த்துப் போய்க்கொண்டிருக்கிறோம்.

இன்னும் மீதம்  இருக்கும் எங்கள் வாழ்க்கைப் பயணம் இப்படியே இப்படியே….செல்ல வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

 

thank you 1

 

 

 

 

 

 

 

Thank you my dear Husband for everything!

நலம் நலம் தானே நீயிருந்தால்…!

சென்ற வாரம் வாழ்க்கை துணைக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல்.

மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார்.

‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’

எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது வா.து. வுக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. வா.து. விடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன்.

‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’

அடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டேன்!

மருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா?’ என்று அடுத்த கேள்வி கேட்டார்.

 

‘பின்ன? உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார்.  தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…!’

 

மருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’

 

‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

 

அடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….!’ என்றார்.

 

‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான்.

 

மருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார்.

 

ஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் வா.து. வை படுக்க வைத்து, எழ வைத்து…..  ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார்.

 

வீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார்.

 

‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார்.

 

நான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல  ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன்.

 

வாழ்க்கை துணையும் கூடவே சிரித்தார்

 

வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே?

 

நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்!