கன்னட கொத்து!

 

முதல் முறையாக சிங்காரச் சென்னையை விட்டு நான் வெளியே வந்தது 1987 ஆம் ஆண்டுதான்.

அதுவே பெரிய சாதனையாக எனக்குத் தோன்றியது. இரண்டு நாட்கள் எங்காவது வெளியூர் போனாலே ‘ஆனந்தம் ஆனந்தம்’ பாடும் நான், சில வருடங்கள் பெங்களூரில் இருப்போம் என்றவுடன் ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டேன்.

ஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்தவுடன் இங்கு வந்து விட்டோம். பசவங்குடியில் ஒரு பிரபல பள்ளியில் (TVS கம்பெனி என்று சொல்லுங்கள். உடனே இடம் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள்!) இருவரையும் சேர்த்தோம்.

என் அம்மா மல்லேஸ்வரத்தில் வீடு பார்க்கச் சொன்னாள்: ’தமிழ்காரா நிறைய இருப்பா. நீ கன்னடம் கத்துக்க வேண்டிய சிரமம் இருக்காது….’

ஆனால் என் எண்ணமே வேறு. ‘ரோமில் இருக்கும்போது ரோமாநியனாக இருக்க வேண்டும் இல்லையா? வாழ்வில் முதல் முறையாக வெளி ஊருக்கு வந்திருக்கிறோம். புது ஊர், புது பாஷை, புது மனிதர்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும், இல்லையா?

ஆங்கிலம் பேச வராமல் நான் தவித்த போது என் அப்பா சொன்ன ஒரு அறிவுரை: காதுகளை திறந்து வைத்துக் கொள். கவனமாகக் கேள். ஓரளவுக்குப் புரியும்.’

அப்பா சொன்ன அறிவுரையை பெங்களூர் வந்தவுடன் செயலாற்றத் தொடங்கினேன்.

நாங்கள் அப்போது இருந்து இடம் நரசிம்ம ராஜா காலனி. நிறைய கன்னடக்காரர்கள் இருக்குமிடம். கன்னடம் காதில் விழுந்து கொண்டே இருந்ததால் மூன்று மாதத்தில் கன்னட மொழியை தமிழில்– நான் பேச ஆரம்பிக்கும்போதே ‘தமிளா?’ என்று கேட்கும் அளவுக்கு பேச ஆரம்பித்தேன்!

என் குழந்தைகள் இருவரும் ‘அம்மா, ப்ளீஸ் கன்னடத்துல பேசாதம்மா! நீ தமிழ் உச்சரிப்புல பேசறது எங்களுக்கு வெக்கமா இருக்கு…. என்று கெஞ்சினர்.

‘ ச்சே…ச்சே….இதுக்கெல்லாம் வெக்கப்படக் கூடாது….  தப்புத்தப்பா பேசித்தான் புது பாஷையைக் கத்துக்கணும்’, என்று  அவர்களை அடக்கினேன்.

என் கணவர் இந்த விளையாட்டுக்கு வரவே இல்லை. ‘இந்த வயதுக்கு (40+) மேல்(!) இன்னொரு மொழி கற்பது கஷ்டம் என்று அன்று சொல்லி இன்று வரை கற்காமலேயே காலம் தள்ளுகிறார்!

ஒரு முறை என்னவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆபீஸ் போகவில்லை. வீட்டிலேயே படுத்திருந்தார்.

இதை அறிந்து எங்கள் வீட்டு சொந்தக்காரரின் மனைவி எங்கள் வீட்டுக்கு வந்தாள். என்னவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு விட்டு ‘………….பாப்பா…………!’ என்றாள்.

‘………….பாப்பா……!’

ஒவ்வொரு வாக்கியத்தின் முன்னும் பின்னும் பாப்பா, பாப்பா என்று…..

என் கணவரைப் பார்த்து இவள் ஏன் பாப்பா பாப்பா என்கிறாள்? குழந்தைகளும் வீட்டில் இல்லையே? ஸ்கூல் போய் விட்டார்களே! கணவரை கன்னடத்தில் ‘பாப்பா’ என்பார்களோ?

தலையே வெடித்துவிடும் போலிருந்தது. நாங்கள் இருந்த வீட்டில் கார் வைக்க இடமில்லாததால் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் என் கணவர் காரை நிறுத்துவார். அவர்களுக்கு தமிழும் தெரியும். அவர்களுக்கு தொலைபேசினேன்.

நான் சொன்னதைக்கேட்டு அந்த மாமி ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பாபம் (பாவம்) என்பதை தான் அந்த பெண்மணி பாப….பாப… என்றிருக்கிறாள்!

இதற்கு அடுத்தபடி என்னை அதிர வைத்த வார்த்தை டாக்டர் ஷாப்!

மகனுக்கு உடல்நிலை சரியில்லை. வீட்டு சொந்தக்காரரிடம் போய் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்றேன்.

அவர் பதறிப்போய் ‘வீட்டுக்கெல்லாம் போகதீங்கம்மா. ஷாப்புக்கு போங்க!’ என்றார்.அவர் காட்டிய திசையில் போனேன். அங்கு ஒரு மெடிக்கல் ஷாப். இதைதான் சொன்னாரோ? கடைக்காரரிடம் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்று கேட்டேன். அவரும் ஷாப்புக்குப் போங்க என்றார்.

என்ன இது? அவரிடமே கேட்டேன். ‘தமிளா?’ என்று கேட்டு விட்டு அரைகுறை தமிழில் (என் அரைகுறை கன்னடத்திற்கு சமமாக!) இங்க டாக்டர் வீடுன்னு சொல்ல மாட்டோம். டாக்டர் ஷாப்பு (கிளினிக்) என்றுதான் சொல்லுவோம்’ என்றார்.

இப்படி பேச ஆரம்பித்த நான் என் பிள்ளையுடன் சேர்ந்து கன்னட மொழியை எழுத படிக்கக் கற்று, இரண்டாம் வகுப்பிற்கு கன்னட ஆசிரியையாகவும் ஆனேன் பிற்காலத்தில்!

முயற்சி திருவினையாக்கும் இல்லையா?

 

 

 

 

 

 

 

.

 

 

 

குடும்ப டாக்டர்!

உலகத்தில் இருக்கும் டாக்டர்கள் அனைவருக்கும் டாக்டர் தின வாழ்த்துக்கள்

டாக்டர் என்றவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது டாக்டர் ரிஷி தான். அந்த காலத்து டாக்டர். அவரது முழுப் பெயர் டாக்டர் சப்த ரிஷி. எங்கள் இளமைக்கால நோய் நொடிகளை நொடிப்பொழுதில் விரட்டி அடித்த டாக்டர் இவர். வெகு உற்சாகமாகப் பேசுவார். பேசியே நோய்களைப் போக்கிவிடுவார் என்று அம்மா சொல்லுவார்.

ஜுரம் என்று போனால் இரண்டு மாத்திரைகளை எடுத்து – குட்டியாக ஒரு குழிந்த உரல்,  குட்டியான உலக்கை வைத்திருப்பார் – (pestle & mortar.)அதில் போட்டு ‘டக்..டக்..’ என்று பொடி செய்து அதை 6 ஆகப் பிரித்து ஆறு பொட்டலம் பண்ணிக் கொடுப்பார். பிறகு மிக்ஸர் என்று ஒரு திரவம் தயார் செய்வார். எங்களது நோயைப் பொறுத்து இந்த மிக்ஸரின் கலர் – சிகப்பு, மஞ்சள் கலந்த சிகப்பு, மரூன் என்று மாறும். வயிறு சரியில்லை என்றால் வெள்ளைக் கலரில் சற்று கெட்டியான திரவம்.

அவரிடம் போகும்போது நாமே ஒரு பாட்டில் எடுத்துப் போகவேண்டும். அதில் மிக்ஸரை ஊற்றி, ஒரு சிறிய காகிதத்தை நான்காக மடித்து அதன் நான்கு மூலையிலும் கொஞ்சமே கொஞ்சம் கத்தரித்து அதை பிரித்து பாட்டிலில் ஒட்டி விடுவார். அதுதான் அளவுகோல். ‘இரண்டு நாளைக்குக் குடுங்கோ, சரியாயிடும்’ என்பார். சரியாகிவிடும்!

ஜுரம் வந்தால்தான் அவரிடம் போவோம் என்பதில்லை; எங்கள் வீட்டு நவராத்திரி கொலுவுக்கு கூப்பிடவும் போவோம். ‘டாக்டர் மாமி’ வந்து தாம்பூலம் வாங்கிக்கொண்டு போவார். எங்கள் ‘குடும்ப டாக்டர்!’

நாங்கள் திருவல்லிக்கேணியிலிருந்து புரசைவாக்கம் வந்தவுடன், டாக்டர் ஆச்சார்யா எங்கள் குடும்ப டாக்டர் ஆனார். டாக்டர் ரிஷி போல நவராத்திரிக்கு வந்து போகும் அளவுக்கு நெருக்கம் இல்லையென்றாலும், எந்த நோயானாலும் அவர்தான்.

அவரது 4 பிள்ளைகளும் டாக்டர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லுனர்கள். 4 பேருமே காலையில் அப்பாவுடன் சேர்ந்து நோயாளிகளைப் பார்ப்பார்கள்.

இங்கே மருந்து கொடுக்க தனியாக கம்பௌண்டர் உண்டு. (நெற்றியில் ‘பளிச்’ என்று ஸ்ரீசூர்ணத்துடன் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார்) மாத்திரையை பொடி செய்யாமல் மாத்திரையாகவே கொடுத்துவிடுவார் கம்பௌண்டர் மாமா. மாற்றமில்லாத அதே மிக்ஸர் தான். ஆச்சார்யா டாக்டரிடம் கூட்டம் அலை மோதும். ‘first come first served’ எத்தனை பேர் இருந்தாலும் கடைசி நோயாளி வரை அதே பொறுமை, அதே நிதானம் தான். மருந்துக்கு மட்டும்தான் காசு.

சமீபத்தில் என் பிள்ளைக்கு ஒரு சின்ன தொந்திரவு. பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்குப் போனோம். ஒரு வாரம் மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. ‘சர்ஜனைப் போய் பாருங்கள்’ என்றார் அங்கிருந்த டாக்டர். கொஞ்சம் பயந்துபோய் விட்டோம். ‘குடும்ப டாக்டர்’ யாருமில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன்.

சட்டென்று நினைவுக்கு வந்தார் டாக்டர் சிவராமையா. என் கணவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்தவர் இவர். உடனே தொலைபேசினேன். “ஒரு அறுவை சிகிச்சை இருக்கிறது. நான் வருவதற்கு தாமதம் ஆகும். பரவாயில்லையா?” என்றார். பரவாயில்லை என்று சொல்லிவிட்டு மருத்துவ மனைக்குப் போய் காத்துக்கொண்டு இருந்தோம். எங்களுக்கு முன்னால் 8 பேர்கள் இருந்தனர். எங்கள் முறை வந்தபோது இரவு 11 மணி.

டாக்டர் சிவராமையாவைப் பார்த்து சுமார் 5, 6 வருடங்கள் இருக்கும். நினைவு இருக்குமோ இல்லையோ என்று மனதிற்குள் ஒரு சின்ன சந்தேகம்.

என்னைப் பார்த்தவுடன் “ரஜனி, தஞ்சாவூர், என்று நீ ஏன் சொல்லவில்லை. நான் யாரோ என்று நினைத்து விட்டேன்” என்று வெகு உற்சாகத்துடன் என்னை வரவேற்றார். என் கணவரின் உடல் நலம் பற்றி மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார்.அந்த பேச்சிலேயே எங்கள் கவலை பாதி குறைந்துவிட்டது.

என் பிள்ளையை பார்த்தார். “ஒன்றுமே இல்லம்மா, வெறும் ஸ்கின் இன்ஃபெக்ஷன் தான். என் நண்பர் டாக்டர் சுதீந்திரா வைப் போய் பார்.” என்று அவருக்கு ஒரு கடிதமும் அவரது தொலைபேசி எண்ணும் கொடுத்தார். பீஸ் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். “நான் ஒன்றுமே பண்ண வில்லையே; என் நண்பரிடம் அனுப்புகிறேன். அவ்வளவு தான்!”

மறுபடியும் எனக்கு ஒரு ‘குடும்ப டாக்டர்’ கிடைத்து விட்டார்!