பதிவர் திருவிழா புகைப்படங்கள்

நினைவுப் பரிசு!
மேடை அலங்காரம்!

திண்டுக்கல் திரு தனபாலன், திருமதி ருக்மணி சேஷசாயியுடன் நான்
அழகு சமீாரா…. பின்னால் தூயா
திருமதி ராஜி
வல்லிசிம்ஹனுடன் நான்!
பெருமைக்குரிய நேரம்!
பொன்னாள் இதுபோலே வருமோ…..
திரு பட்டுக்கோட்டை பிரபாகர் உரை!
திருமதி லட்சுமி (குறையொன்றுமில்லை)

 

நான் பரிசு வாங்கும்போதும், இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் புகைப்படங்கள் எடுத்த குமாரி சமீராவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!

 

 

 

 

 

 

 

 

மனதில் பதிந்த பதிவர்கள் திருவிழா!

போன முறை சென்னையிலிருந்து ஷதாப்தி ரயிலில் திரும்பி வரும் போது பக்கத்தில் ஓர் இளம் பெண். வழக்கம்போல் நானும் என் புத்தகமும் என்று அமர்ந்திருந்தேன். காலை சிற்றுண்டி வந்தவுடன், தலை நிமிர்ந்த என்னைப் பார்த்து அந்த இளம் பெண் கேட்டாள்:

‘மாமியின் ஒரே பொழுதுபோக்கு படிப்பதுதானா?’

‘இல்லையில்லை…. படிப்பதுடன் ப்ளாக் எழுதுவதும் என் பொழுதுபோக்கு!”

‘ஆஹா…அப்போ நீங்க எங்க தலைமுறை…!’

ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடந்த தமிழ் பதிவர் திருவிழாவில் இதை நேரடியாக உணர்ந்தேன்.

ஆட்டோவிலிருந்து இறங்குபோதே “வணக்கம் ரஞ்ஜனியம்மா!” என்ற குரல்!

‘அட நம்மை அடையாளம் தெரிந்து கொள்ளுகிறார்களே!’

மாடி ஏறியவுடன் ஒரு அடையாள அட்டை கொடுத்தனர். நம் பெயர், நம் வலைத்தளத்தின் பெயர் எல்லாம் அதில் எழுதி இருந்தது. இதனால் பல சங்கடங்கள் தவிர்க்கப்பட்டன.

பலர் வந்து ரொம்ப நாட்கள் பழகியவர்கள் போல அறிமுகம் செய்துகொண்டனர். கொஞ்சம் ஆச்சரியம்; கொஞ்சம் ‘அப்பாடா’ என்ற ஆசுவாசம்!

ஒரு இளம் சிட்டு சிரித்தது என்னைப் பார்த்து. ‘கண்மணி?’ என்றேன். ‘இல்லையில்லை, சமீரா…!’ என்று மறுபடி கண்கள், முகம் எல்லாம் பளபளக்க சிரித்து முதல் பார்வையிலேயே மனதைப் பறிகொண்டாள், அந்தப் பெண். பதிவர் இல்லை; பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டு போஷாக்கு கொடுக்கும் பெண் இவள். ‘சேட்டைக்காரனைப் பார்க்க வேண்டும்….’ என்று நிமிடத்துக்கு நூறு  தடவை சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்லச்சொல்ல எனக்கும் ஆவல் அதிகரித்தது.

திருமதி வல்லிசிம்ஹன்  மல்லிகைப்பூ கொண்டு வந்து கொடுத்து, பூவைவிட வெள்ளையான தன் சிரிப்பால் எல்லோரையும் மயங்க வைத்துக்கொண்டு இருந்தார். திருமதி ராஜி, அவரது கவிதை வழிச் செல்லும் மகள் தூயாவுடன் வந்தார். நிகழ்ச்சி முடிவில் இந்தக் குழந்தை வந்து ‘போயிட்டு வரேன் பாட்டி’ என்று விடை பெற்றது நெகிழ வைத்தது.

திரு மதுமதி மைனஸ் தாடியுடன் வந்து வியப்பூட்டினார்! (தாடி இல்லாமல் ரொம்பவும் இளமையாக இருக்கிறீர்கள்!)

திரு பால கணேஷ், திரு திண்டுக்கல் தனபாலன் (பின்னூட்டம் போடுவதில் சமீராவின் அண்ணன் இவர் – பதிவரும் கூட!) வந்து அறிமுகம் செய்து கொண்டனர். எப்படி எல்லோருடைய பதிவுகளையும் படிக்கிறீர்கள் என்று ஒவ்வொருவரும் இவரைக் கேட்டனர்.

திருமதி ருக்மிணி சேஷசாயி (சுட்டிக் கதைகள்), திருமதி லட்சுமி திருமதி சாதிகா, (எல்லாப்புகழும் இறைவனுக்கே), குட்டி சுவர்க்கம் திருமதி ஆமினா (தனது குட்டி சுவர்க்கத்தை கூடவே கூட்டி வந்திருந்தார்) கண்மணி அன்போடும், தனது தந்தையாரோடும் வந்திருந்தார்கள்.

காலை நிகழ்ச்சி பதிவர்களின் சுய அறிமுகத்துடன் முடிந்தது.

திரு கேபிள் சங்கர், திரு சி.பி. செந்தில்குமார், திரு சுரேகா, திரு தமிழ்வாசி, திரு சௌந்தர் (கவிதை வீதி), திரு மணவை தேவாதி ராஜன், வேல்வெற்றி வேல்முருகன், சேட்டைக்காரன், வலைசரம் திரு. சீனா புலவர் திரு ராமானுசம், திரு கணக்காயர்  சென்னைப் பித்தன் என்று பதிவுலகில் தங்களுக்கென்று முத்திரை பதித்திருக்கும் பதிவர்கள் பலரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

பல இளம் பதிவர்களுடன் பேச முடியவில்லை. தயக்கம் தான்!

மதிய இடைவேளைக்குப் பிறகு மூத்த பதிவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். திரு பட்டுக்கோட்டை பிரபாகர் மூத்த பதிவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

திருமதி சசிகலாவின் ‘தென்றலின் கனவுகள்’ கவிதைப்புத்தகம் திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் வெளியிடப்பட்டது.

திரு. மயிலன் (மருத்துவர்) தனது கவிதை வாசித்து கலகலப்பு மூட்டினார். சந்தடி சாக்கில்  தனது திருமண அழைப்பையும் கவிதையில் வழியே வைத்தார்.

திருமதி அகிலா,  கோவை மு. சரளா, திரு லதானந்த் தங்களது கவிதைகளை அரங்கேற்றினர்.

மதிய உணவு இடைவேளையில்  திரு சிவகுமார் (மெட்ராஸ் பவன்) ஒரு யோசனை சொன்னார்: ‘பெண் பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து இதுபோல ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் தோள் கொடுத்து நடத்தி வைக்கிறோம்’.

பதிவர்கள் என்று ஒரே பெயரில் இணைவது நல்லது; ‘பெண்’ என்று தனிப்பிரிவு வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது.

எல்லோருக்குமே நடந்தது தெரியும்; இத்தனை பெரிய பதிவு வேண்டுமா?

இதை நான் எழுதுவது ‘சொல்லுகிறேன்’ என்ற தலைப்பில் எழுதும் திருமதி காமாட்சி அவர்களுக்காக. தன்னால் வர இயலவில்லை; அதனால் நடந்தது அத்தனையும் எழுது என்றார் அவர். திருமதி ருக்மிணியைப் போல இவரும் வயதில் மூத்தவர்.

‘என்னவாயிற்று? ஏன் பதிவர் சந்திப்பைப் பற்றி ஏதுவுமே எழுதவில்லை?’ என்று  இன்றுகாலை மின்னஞ்சல் செய்திருந்த திருமதி பட்டு ராஜ் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு, துளிக் கூட குழப்பமில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்ட விழா இது. இதன் பின்னணியில் உழைத்த அத்தனை பேருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

திரு பிரபாகர் மூத்த பதிவர்கள் இன்றைய தொழில் நுட்பம் கற்று இளைஞர்களுக்கு சமமாக எழுதுவது மிகவும் பாராட்டத் தக்கது என்றார். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் செல்லவேண்டும் என்றார்.

ஒரு பதிவர் இந்த எழுத்துக்கள் மூலம் சிறிது வருமானம் வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை சொன்னார். இதை வழி மொழிகிறேன் நான்!

இன்னொரு விஷயம் நான் இங்கே குறிப்பிட விரும்புவது: ‘பிளாக்ஸ்பாட்’ டில் எழுதுபவர்கள் அதிகபேர்களின்  கவனத்தை கவருகிறார்கள். வோர்ட் பிரஸ்ஸில் எழுதும் என்னைப் போன்றவர்கள் அதிகம் கவனிக்கப் படுவதில்லை.

கொஞ்சம் எங்களையும் கவனியுங்கள் ப்ளீஸ்!

படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்!

என்னுடைய 200 -வது பதிவாக இந்தப் பதிவு அமைந்தது சந்தோஷமாக இருக்கிறது!

திரு பிகேபி யின் உரையைப் படிக்க: http://minnalvarigal.blogspot.com/2012/08/blog-post_30.html

பி.கு. உடல் நலமின்மையால் தாமதமாக எழுதுகிறேன். மன்னிக்கவும்!

 

தமிழ் பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி!

 

 

 

தமிழ் பதிவுகள் எழுத ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகின்றன. இந்த எட்டு மாதத்தில் நான் அறிந்தது என்னவென்றால்…….ஆங்கிலத்தில் பதிவு எழுதுபவர்களுக்கு நிறைய உற்சாகம் தருகிறார்கள்; எக்கச்சக்க விருதுகள், போட்டிகள்; பல இணைய தளங்களிலிருந்து ‘விருந்தாளி பதிவு’ (guest post) எழுத அழைப்புகள் என்று மிகக் குறைந்த காலத்தில் புகழ் பெற்றுவிடுகிறார்கள், ஆங்கிலப் பதிவர்கள்.

 

பல சமயங்களில் தமிழ் பதிவர்களுக்கும் இத்தகைய உற்சாகம், ஊக்குவிப்பு இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றும் எனக்கு.

 

என் மனநிலையை வெகு நன்றாகப் புரிந்து கொண்டது போல  (டெலிபதி!) மக்கள்சந்தை.காம் குழுவினர் தொழில்களம் என்ற பெயரில் தமிழ் பதிவர்களின் படைப்புகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ளனர்.

 

இந்த மாதம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் தமிழ் பதிவர்கள் சந்திப்பு நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் தமிழ் பதிவர்களுக்கு பல பரிசுகளும், மேலும் பல வியப்புகளும்  காத்திருக்கின்றன என்று எங்க ஊர் பறவை ஒன்று சொல்லுகிறது.

 

இந்த சந்திப்பில் பல பிரபல பதிவர்களும், என்னைப்போல் கற்றுக்குட்டிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதுவரை இணையத்தில் மட்டுமே பார்த்து அவர்களது எழுத்துக்களை பாராட்டி வந்த நீங்கள் உங்கள் இதயம் கவர்ந்த  பதிவர்களை நேரில் சந்தித்துப் பாராட்ட  இது ஒரு பொன்னான வாய்ப்பு.

 

இணைய எழுத்துலக பிரம்மாக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கப் போகும் ஒரு பிரம்மாண்டமான விழா. தமிழர்கள் தவற விடக்கூடாத தங்கமான தருணம்!

 

இந்த என் பதிவைப் படிக்கும் அத்தனை தமிழ் பதிவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். இந்தப் பதிவைப் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு படித்தவர்கள் சொல்லுங்கள். இது நம்ம விழா. அனைத்துத் தமிழர்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

 

நான் சென்னை போக பயணச்சீட்டு எடுத்துவிட்டேன். நான் ரெடி! நீங்க?

 

மேலும் விவரம் அறிய:

 

http://tk.makkalsanthai.com/2012/08/naan-pathivan-money.html?showComment=1344750735595#comment-c2833790801399254222