பாரத நாட்டின் தவ புதல்வா!

 

 

R day

‘பாரத நாட்டின் தவ புதல்வா

பாராய் அன்னை மணிக்கொடியை

வீர வணக்கம் செய்திடுவோம்

வெல்க பாரதம் என உரைப்போம்!’

 

இந்தப் பாடல் யார் இயற்றியது என்று தெரியாது. இதைப் படிக்கும் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

 

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பாட்டு டீச்சர் அழகான ராகத்தில் இசை அமைத்து எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடல் இது. இத்தனை வருடங்களுக்குப் பின் எனக்கு நினைவு இருப்பது இந்த நான்கு வரிகள் தான்.

 

ஒரு குடியரசு தினத்தன்று இந்தப் பாடலுக்கு நேரு மைதானத்தில் (அப்போது அதன் பெயர் கார்ப்பரேஷன் மைதானம் என்று நினைவு) நாங்கள் நடனம் ஆடியதும் நினைவிருக்கிறது.

 

வெள்ளைப் பாவாடை, வெள்ளை சட்டை (அதில் தேசியக்கொடியை குத்திக்கொண்டு) வெள்ளை ரிப்பன், வெள்ளை வளையல்கள், வெள்ளை  பொட்டு என்று சகலமும் வெள்ளை வெளேரென்று அணிந்து கொண்டு இந்தப் பாடலுக்கு நடனம் ஆடினோம்.

 

இதற்காக பள்ளி முடிந்தபின் ரிகர்சல் இருக்கும். தினமும் வீட்டிற்கு தாமதமாகப் போவேன். அம்மாவிடம் நல்ல திட்டு விழும்.

 

நடனம் தவிர, உடற்பயிற்சி போல ஒன்றும் செய்வோம். வெறும் இசை மட்டும் ஒலிக்கும். அதற்குத் தகுந்தாற்போல ஒன், டூ, த்ரீ, ஃபோர் என்று எங்கள் ஆசிரியை சொல்ல நாங்கள் செய்வோம்.

 

குடியரசு தின சிறப்பு பயிற்சியின் போது மூங்கிலினால் செய்த பெரிய பெரிய வட்டங்களை (லூ-லா- லூப் போல) கையில் வைத்துக்கொண்டு குனிந்த நிமிர்ந்து செய்வோம். முதல்  வரிசையில்  பச்சை காகிதங்கள் சுற்றப்பட்ட வட்டங்கள்; மூன்றாவது  வரிசையில்  காவி வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்ட வட்டங்கள்; நடுவில் வெள்ளைக் காகிதங்கள் சுற்றப்பட்ட வட்டங்கள் – நம் தேசியக் கொடியை போல – மிக அழகாக இருக்கும் பார்ப்பதற்கு.

 

அந்த வட்டங்களை வலது கையில் வைத்துக் கொண்டு சுற்றுவோம்; இடது கையில் வைத்துக் கொண்டு சுற்றுவோம். சில சமயம் அதிலேயே ஸ்கிப்பிங் செய்வோம். முடிவில் எங்கள் தலைக்கு மேலே வட்டங்களைப் பிடித்துக் கொண்டு ஒரு வரிசை உட்கார்ந்து எழுந்தவுடன் அடுத்த வரிசை அதே போலச் செய்ய அதற்கடுத்த வரிசை உட்கார்ந்து எழுந்திருக்க, தேசியக் கொடி பறப்பது போல இருக்கும்.

 

வேறு வேறு பள்ளிகளிலிருந்தும் மாணவ மாணவியர்கள் எங்களைப் போலவே தங்கள் திறமைகளைக் காண்பிப்பார்கள்.

 

ஒவ்வொரு திங்கட்கிழமையும் பள்ளியில் இறைவணக்கம் முடிந்தபின் கொடி ஏற்றுவோம். பள்ளி மாணவத் தலைவி இதைச் செய்யவேண்டும். இறைவணக்கத்துடன் அன்று ‘தாயின் மணிக்கொடி பாரீர்!’ பாடலையும் சேர்த்துப் பாடுவோம்.

எல்லோரும் கொடிக்கு ‘சல்யூட்’ அடிப்பது போல நெற்றியில் கையை வைத்துக் கொண்டு நிற்போம்.

 

‘ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்

உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே

பாங்கின் எழுதித் திகழும் செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!’

 

என்று பள்ளி மாணவிகள் அத்தனை பெரும் ஒரே குரலில்  பாடும் போது மனது தளும்பும்.

 

கடைசியாக

‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,

வாழிய பாரத மணித்திருநாடு

வந்தே மாதரம் வந்தே மாதரம்,

வந்தே மாதரம்!’

 

என்று பாடி முடித்தபின் அங்கு நிலவும் அமைதி இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது!

 

இனிய குடியரசு தின நினைவுகள்!