ரயில் பயணங்களில்…..4 ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாமா?

 

ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாமா?’ என்றார் இன்னொரு பெண். நானும் என் கணவரும் ஒருவரையொருவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம் – இத்தனைக்குப் பிறகு சிற்றுண்டியா? என்று மயங்கி விழாமல் இருக்க! காலை சிற்றுண்டியை ஒரு அரசனைப் போல சாப்பிட வேண்டும் என்பார்களே அதன் முழு அர்த்தம் அன்றைக்குத் தான் புரிந்தது. முதலில் சிகப்புக் கலரில் பூரி வந்தது. எங்களுக்கும் தான்! (இந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்) அடுத்து நெய் தடவிய ரொட்டி. அடுத்தது ஃபூல்கா சப்பாத்தி. அதற்கு தொட்டுக்கொள்ள வகைவகையான மசாலாக்கள், கறிவகைகள் அதைத் தவிர ஊறுகாய்கள். அந்த சிற்றுண்டி அரசனுக்கு மட்டுமல்ல; அவனது அரசவைக்கும், ஏன் குடிமக்களுக்கும் கூட போதும். அத்தனை வகைகள்!

 

நடுநடுவில் ரயிலில் வரும் குர்குரே, லேஸ், பிஸ்கட் வகைகள் வேறு வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். டாங்கோ ஜூஸ் ரயிலிலேயே செய்து எல்லோருக்கும் விநியோகம் செய்தார்கள்.

‘ஆண்ட்டி நீங்கள் ‘தியா அவுர் பாத்தி’ (இது ஒரு ஹிந்தி சீரியல் – தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் வருகிறது)  பார்ப்பீங்களா? எங்கள் வீடுகளும் அப்படித்தான் இருக்கும். எல்லோரும் கூட்டுக் குடும்பத்தில் தான் இருக்கிறோம். நாங்கள் எல்லோரும் நண்பர்கள் தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; எங்கள் கணவன்மார்கள் – மொத்தம் 7 பேர்கள் – பள்ளிக்கூட நாட்களிலிருந்து நண்பர்கள். ஒவ்வொரு வருடமும் 7 குடும்பங்களும் சேர்ந்து எங்காவது சுற்றுலா போவோம். இந்த முறை நான்கு பேர்களால் வரமுடியவில்லை. நாங்கள் லோனாவாலாவில் இறங்கு ‘இமேஜிகா’ தீம் பார்க் போய்க்கொண்டிருகிறோம்.’

 

பேசிக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும்போது ஒரு பெண் யாருக்கோ போன் செய்து மொத்தம் 12 சாப்பாடு வேண்டும் என்று சொன்னார். மதிய உணவு! நல்லவேளை கைக்குழந்தை தப்பித்தது! என்னிடம் ஒரு நம்பர் கொடுத்து, ‘நீங்க திரும்பி வரும்போது சாப்பாடு வேண்டுமென்றால் இந்த எண்ணுக்கு போன் செய்தால் உங்களுக்கு சாப்பாடு ரயிலிலேயே கொண்டுவந்து கொடுப்பார்கள்’ என்றார். நாங்கள் மும்பையிலிருந்து திரும்பும்போது அந்த எண் பயன்பட்டது.

 

‘கூச்சப்படாமல் சாப்பிடுங்க ஆண்ட்டி, அங்கிள்’ என்று ஏக உபசாரம் வேறு. ‘எல்லாமே வீட்டில் செய்தது. எங்களை ரொம்ப படிக்க வைக்க மாட்டார்கள், ஆண்ட்டி. சமையல் வேலை செய்ய பழக்குவார்கள். விதம்விதமாக இனிப்பு வகைகள், சமோசா, கட்லெட் என்று செய்வோம். எங்கள் தலைமுறை பரவாயில்லை. நாங்கள் எல்லோருமே கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறோம். எங்கள் அம்மா எல்லாம் சரியாகப் பள்ளிக்கும் போனதில்லை. இப்போது நாங்களும் படிக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறோம்’

 

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தே எங்களுக்கு வயிறு நிரம்பிப் போயிருந்தது. ஒரு பூரி, ஒரு நெய் ரொட்டி, ஒரு பூல்கா என்று வாங்கிக் கொண்டோம். நாங்கள் எடுத்துப் போயிருந்த சப்பாத்தி, தக்காளி தொக்கு இரண்டையும் அவர்களுக்குக் கொடுக்கவே வெட்கமாக இருந்தது! நான் 6 சப்பாத்தி எடுத்துக் கொண்டு போயிருந்தேன். யானைப் பசிக்கு அது சோளப்பொரி இல்லையோ? என் கணவர் ஒரு ஸ்டேஷனில் இறங்கி வாழைப்பழங்கள் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுத்தார்.

 

மதிய சாப்பாடு முடிந்தவுடன் இனிப்பு வகைகள் ஆரம்பமாயின. முதலில் லட்டு; அடுத்தது மலாய் சிக்கி; பிறகு பாதாம் பர்பி; பிறகு…..பிறகு…… எனக்கு பெயர்கள் கூட மறந்துவிட்டது. சாப்பாடு முடிந்தவுடன் பான் வேண்டுமே. அதுவும் கொண்டுவந்திருந்தார்கள். வகை வகையாகப் பாக்கு, சோம்பு, சாரைப்பருப்பு என்று. அது முடிந்தவுடன் உலர்ந்த எலந்தம் பழம். ‘ஜீரணத்திற்கு நல்லது’ என்று சொல்லி கொடுத்தார்கள்.

 

ஒருவழியாக லோனாவாலா ஸ்டேஷன் வந்ததோ, நாங்கள் பிழைத்தோமோ! பிரியாவிடை கொடுத்து ‘நன்றாக எஞ்ஜாய் பண்ணுங்கள்’ என்று வழியனுப்பி வைத்தோம்.

 

அவர்கள் இறங்கிப் போனதும் என் கணவர் கேட்டாரே ஒரு கேள்வி: ‘இப்படி விடாமல் சாப்பிடுகிறார்களே, அந்தப் பெண்கள் எப்படி ஒல்லியாவே இருக்காங்க?’

 

‘அம்பது வயசுக்கு மேலே குண்டடிப்பாங்க’ என்று சொன்னேன். சரிதானே? (ஹி…..ஹி…..சொந்த அனுபவந்தேன்!)

 

மறக்க முடியாத (சாப்பாட்டு) மனிதர்கள்!