WOW

Image result for chennai marina beach photos

image

It was my last day in the city …….

– ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.

 

நான் இப்போது சொல்லப்போகும் இந்த நிகழ்வு 30 வருடங்களுக்கு முன் நடந்தது. நான் சென்னையை விட்டு வெளியேறி முப்பது வருடங்கள் ஆகிவிட்டதா? நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. 1987 ஆம் வருடம் சென்னையை விட்டு கிளம்பினோம்.

 

என்னுடைய பள்ளிப்படிப்பு, முதல் வேலை (கடைசி வேலையும் அதுதான்!) திருமணம், குழந்தைகள் பிறந்தது என்று எல்லாமே சென்னையில் தான். எப்படி நான் வேறு ஒரு இடத்திற்குக் குடிபெயர முடியும்? எனது வேர்கள் பரவி இருப்பது இங்கு அல்லவா? ஏற்கனவே ஒருமுறை நான் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டேன், திருமணம் என்ற பந்தத்தின் மூலம். அதை நான் மிகவும் பெருமையுடன் ஏற்று, நடப்பட்ட இடத்தில் பற்றிப் பரவினேன். அது சென்னைக்குள்ளேயே தான். சென்னையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் சென்றேன் அவ்வளவே. அதுவுமில்லாமல், எல்லாப் பெண்களின் வாழ்விலும் நடப்பது தான் இந்த நாற்று நடும் நிகழ்ச்சி. இதனாலேயே பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குக் குடிபெயரும் பெண் நாட்டுப்(நாற்றுப்)பெண் என்று அழைக்கப்படுகிறாளோ?

 

இத்தனை வருடங்கள் வளர்ந்த இந்த நகரத்தை விட்டுப் போவதென்பது- அதுவும் முதல் முறையாக – மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.  மனமெல்லாம் கனத்தது. கிட்டத்தட்ட திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குப் போகும் பெண்ணின் மனநிலையில் இருந்தேன் நான். சிறிய வயது – திருமண வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் கூடவே புதிய இடம், புதிய மனிதர்களுடன் வாழப் போகிற புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயமும் கலந்த ஒரு இரண்டுங்கெட்டான் நிலை அப்போது. இப்போது 30 வயதைக் கடந்த,  இரண்டு குழந்தைகள் பெற்ற பொறுப்புள்ள தாய். என்றாலும் புதிய ஊர், புதிய மொழி, புதிய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கவலையுடன் கூடவே சின்ன உற்சாகமும் இருந்தது என்பது தான் உண்மை.

 

குழந்தைகள் இருவரும் தங்கள் தோழர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் புதிய பள்ளி. புதிய தோழர்கள். புதிய மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளைத் தவிர வேறு மொழி எதுவும் தெரியாத எனக்கும் புதிய மொழி அது. எப்படிச் சொல்லித் தரப்போகிறேன்? மிகப்பெரிய சவால் என் முன்னே காத்திருக்கிறது. வாழ்க்கையில் சவால்கள் இருந்தால் தானே சுவாரஸ்யம்?

 

நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டேன். பத்து நாட்களாகவே விருந்து சாப்பாடுதான். அம்மா, அக்கா வழி அனுப்ப வந்திருந்த தம்பியின் குடும்பம் என்று எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டேன்.

 

கடைசியாக அம்மா சொன்ன வார்த்தைகள் இவை: ‘இங்கிருக்கிற பெங்களூருக்குத் தானே போகிறாய். பிருந்தாவன் ரயில் தினமும் பெங்களூருக்கும், சென்னைக்கும் ஓடுகிறது. நினைத்த போது நீயும் வரலாம்; நாங்களும் வரலாம். கவலைப்படாமல் போய்விட்டு வா’.

 

ஏதோ கண்காணாத ஊருக்குப் போவது போல ‘ஸீன்’ போட்டுக் கொண்டிருந்த என்னை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தன இந்த வார்த்தைகள். சட்டென்று என் மனநிலை மாறியது. அட! அதானே! இதோ இருக்கிற பெங்களூரு தான்! சென்னையின் வெயில் இல்லாமல், தண்ணீர் கஷ்டம் இல்லாமல் குளுகுளுவென்று இருக்கப் போகிறது எங்கள் வாழ்க்கை என்று சந்தோஷமாக விமானம் ஏறினேன். முதலில் சில நாட்களுக்கு சென்னையின் நினைவு வந்து கொண்டிருக்கத்தான் செய்தது. வெகு சீக்கிரம் புதிய ஊர் பழகிவிட்டது.

 

கூடவே அவ்வப்போது கல்யாணம், சின்னச்சின்ன விசேஷங்கள் என்று அவ்வப்போது சென்னைக்குச் சென்று வந்து என்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறேன்.

 

ஒவ்வொருமுறையும் ‘என்ன வெயில்!, என்ன வியர்வை’ என்று அலுத்துக் கொண்டாலும், சென்னை செல்வது என்பது பிறந்தகம் செல்வது போல இனிக்கத்தான் செய்கிறது. சென்னை போல வருமா என்று பலமுறை சொல்வதும் உண்டு.  எங்கள் ஊர் சென்னை என்று சொல்லிக் கொள்வதில் வரும் சந்தோஷம் மாறவேயில்லை இத்தனை வருடங்களில்.  சென்னையின் மேல் நான் கொண்ட பாசம் இன்றுவரை சற்றும் குறையவில்லை! அதுதான் சென்னையின் விசேஷம் என்று கூடச் சொல்லலாம்.

 

This post is a part of Write Over the Weekend, an initiative for Indian Bloggers by BlogAdda.’