இறந்தபின் உலகம் நம்மை எப்படி நினைவில் கொள்ள வேண்டும்?

யோசிப்போமா?

தினமணி வலைப்பூ பகுதியில் 29.10.2014 வந்த எனது கட்டுரை

 

 

 

 

அந்தப் பெரிய ஹால் முழுக்க மனிதர்கள். எல்லோரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் கையில் ஒரு தட்டுடன், அந்தத் தட்டு நிறைய தங்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை போட்டுக் கொண்டு சாப்பிட்டவாறே தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் உரையாடிக்  கொண்டிருந்தனர். சிலர் கையில் தட்டுடன் உட்கார இடம் தேடிக் கொண்டிருந்தனர். சிலர் இன்னும் என்ன என்ன உணவுவகைகள் இருக்கின்றன என்று நோட்டம் விட்டுக்கொண்டே உணவை ருசி பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

காலையில் திருமணம். மாலையில் இந்த வரவேற்பு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திருமணம் இதோ இன்று நடந்திருக்கிறது. பெண் வீட்டார் பிள்ளை வீட்டார் இருவருக்கும் மனம் நிறைந்திருந்தது. மேடையில்  மணப்பெண், மணமகன் இருவரும் வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். மிகவும் ரம்யமான சூழ்நிலை. மெல்லிய இசை எல்லோரையும் வருடிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

 

என் பெண்ணுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சந்கீதாவிற்குத் திருமணம். கல்யாணப் பிள்ளையும் அதே அலுவலகத்தில் பணிபுரிகிறான். இருவரும் ரொம்பவும் வற்புறுத்திக் கூப்பிட்டதால் வெளியூரில் திருமணம் என்றிருந்தும் நான் வந்திருந்தேன். என் பெண்ணும் அவளது உற்ற தோழி பங்கஜாவும்தான் வருபவர்களை வரவேற்கும் பணியை ஏற்றுக்கொண்டிருந்தனர். என் பெண்ணுடன் வேலை செய்யும் எல்லோரையும் எனக்கும் ஓரளவுக்குத் தெரியும் என்பதால் எல்லோரும் மணமக்களைப் பார்த்துவிட்டு என்னையும் குசலம் விசாரித்துவிட்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

 

சுற்றிவர யாராவது எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று தலையைத் திருப்பி திருப்பிப் பார்த்தேன். அதோ, அங்கு பங்கஜாவின் மாமியார். காலையில் திருமணத்திலும் பார்த்து பேசிக்கொண்டிருந்தேன். அருகில் சென்றேன். ஏனோ முகம் கடுகடுவென்று இருந்தது. கண்களில் கோபம். என்னவாயிற்று? ‘மாமி, சாப்பிடலையா?’ என்று மெதுவான குரலில் விசாரித்தேன். அதற்கென்றே காத்திருந்தவர் போல படபடவென்று பொரிந்தார் அந்த மாமி. ‘நான் சாப்ட்டா என்ன, சாப்பிடலைன்னா என்ன?  சாப்பாடும் வேணாம் ஒண்ணும் வேணாம்….’

 

இந்த திடீர் கோபத்தில் சற்றுத் தடுமாறினாலும் விடாமல் கேட்டேன். ‘என்ன ஆச்சு?’ ‘இன்னும் என்ன ஆகணும்? அதோ பாருங்கோ, பங்கஜா குறுக்கும் நெடுக்கும் போயிண்டிருக்கா. நான் சாப்பிட்டேனா என்று ஒரு வார்த்தை கேட்டாளா? வரவாளோட சிரிச்சு சிரிச்சு பேச்சு! மாமியார் நெனப்பு ஏன் வரப்போறது?’

 

எனக்குப் புரிந்தது. இங்கு வந்தும் தனக்கு மாமியார் மரியாதையை எதிர்பார்க்கும் மாமி. பங்கஜா ரொம்பவும் நல்ல பெண். எந்தக் கல்யாணம் ஆனாலும், விழாவானாலும் மாமியாரை அழைத்துக் கொண்டு தான் வருவாள். மாமியும் ‘ஜம்’மென்று மாட்டுப்பெண் பின்னால் ஸ்கூட்டியில் உட்கார்ந்து வருவார். இதோ வெளியூர் திருமணத்திற்கும் மாமியாரை அழைத்து வந்திருக்கிறாளே! மாமிக்கு இது ஏன் புரியவில்லை? எனக்கு வியப்பாக இருந்தது.

 

‘அவள் வருகிறவர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள் என்னுடன் வாருங்கள். இருவரும் சாப்பிடலாம்’ என்றேன். மாமி என் வார்த்தைகளுக்கு மசியவில்லை. மாட்டுப்பெண் தன்னை சாப்பிடச் சொல்லவில்லை என்ற கோவத்திலேயே இருந்தார். எப்படி மாமியை சமாதனப்படுத்துவது என்று நானும் யோசித்தவாறே அமர்ந்திருந்தேன். என் நல்ல காலம் பங்கஜாவின் கணவர் அந்தப் பக்கம் வந்தவர், என்னையும், தனது அம்மாவையும் பார்த்துவிட்டு ‘என்னம்மா, மாமியுடன் சாப்பிட்டுவிட்டு வாயேன்’ என்றார். அடுத்த நொடி அவருக்கு அம்மாவின் கோபம் புரிந்தது போலிருக்கிறது. ‘என்ன இங்கேயும் பங்கஜா உன்னை கவனிக்கவில்லை என்று குற்றப்பத்திரிகை படிக்க ஆரம்பித்துவிட்டாயா? எங்க வந்தாலும் நீ இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு சண்டை போட்டால் என்னம்மா செய்வது? உன்னை அழைத்துக் கொண்டு வரவேண்டாம் என்று அவளிடம் சொன்னேன். அவள் கேட்கவில்லை. அம்மா தனியா இருப்பார் அழைச்சுண்டு போகலாம் என்று உனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிவிட்டாள். நீ இந்த மாதிரி வர இடத்திலெல்லாம் சண்டை போட்டாயானால் பங்கஜாவின் தோழிகள் இனிமே உனக்கு ‘சண்டைக்கார மாமியார்’ என்று தான் பெயர் வைப்பார்கள்.. உன்னோட யாரும் பேசக்கூட மாட்டார்கள். ‘அந்த சண்டைக்கார மாமி’ என்றுதான் உன்னை நினைவு வைத்துக்கொள்ளுவார்கள். எழுந்திரு. சாப்பிட வா…!’ என்று மாமியின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

 

‘உன்னை எப்படி இவர்கள் நினைவு வைத்துக்கொள்ளுவார்கள் தெரியமா?’ என்று மாமியின் பிள்ளை கேட்டது எனக்கு திரும்பத்திரும்ப மனதில் ஓடியது. சட்டென்று  நோபல் பரிசு நிறுவிய ஆல்பிரட் நோபல் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் என்று நான் படித்தது எனக்கு நினைவில் வந்தது. ஒருநாள் அவர் காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அதில் அவருக்கு ஒரு அதிர்ச்சி தரும் பயங்கரமான செய்தி இருந்தது. அவருடைய பெயர் ‘காலமானார்’ பகுதியில் பிரசுரமாகியிருந்தது. பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். நான் எங்கிருக்கிறேன்? பூமியிலா? மேலுலகத்திலா?

 

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார். செய்தித்தாளுக்கு உண்மையைச் சொல்வதற்கு முன் தம்மைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்,  பத்திரிகைகள் என்ன எழுதியிருக்கின்றன என்று பார்க்க விரும்பினார். காலமானார் பகுதியில் ‘அணுகுண்டு  சக்கரவர்த்தி’ காலமானார்;  ‘மரண வியாபாரி’ மரணத்தைத் தழுவினார்’ என்று போட்டிருந்தது. தன்னுடைய மரணச் செய்தியைக் காட்டிலும் இந்த விவரணைகள் அவரை இன்னும் பயமுறுத்தின. ‘நமது மரணத்திற்குப் பின் நம்மை இப்படித்தான் உலகம் நினைவு வைத்துக் கொள்ளுமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தார்.

 

தன்னைப் பற்றிய சுயபரிசோதனையில் இறங்கினார். நம்மைப் பற்றி நினைக்கும்போது உலகம் சந்தோஷப்பட வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். தன் வாழ்க்கையின் குறிக்கோளை மாற்றி அமைத்துக் கொண்டார். அன்று முதல் உலக அமைதிக்காக தன் வாழ்நாளை செலவழிக்க ஆரம்பித்தார். உலக அமைதிக்கான நோபல் பரிசு மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றது. பொருளாதாரம், விஞ்ஞானம் போன்ற மற்ற துறைகளுக்கும் இந்த நோபல் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன.

 

நாமும் சற்று யோசிப்போமா?  நாம் இருக்கும்போதும், நாம் மறைந்த பின்னும் நம்மைப் பற்றி இந்த உலகம் எப்படி நினைவில் கொள்ளவேண்டும்?

நண்பர்களை ஏமாற்றியவன்/வள்

தாயை ஏசியவன்/வள்

கூடப்பிறந்தவர்களை நெருங்க விடாதவன்/வள்

முதலில் சொன்ன மாமியைப் போல எங்கு போனாலும் சண்டை போடுபவள்/வன்?

நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்து என்ன? இந்த மாதிரியான அவப்பெயர் பெற்றவரின் பிள்ளை, பெண் என்ற பெயரா?

யோசிப்போமா?

http://blog.dinamani.com/?p=7354

 

ரவீந்திரநாத் தாகூர்

 

குருதேவ் என்று எல்லோராலும் அருமையாக அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூரின் 154வது பிறந்த நாள் இன்று. பல்கலை விற்பன்னரான இவர் மே மாதம் 7 ஆம் தேதி 1861 ஆண்டு பிறந்தவர். தனி ஒருவராக இவர் இலக்கியத்திற்கும் இசைக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம். 1913 இல் நோபல் பரிசு பெற்று அந்தப் பெருமை பெறும் முதல் இந்தியர் ஆனார். தனது படைப்புகள் மூலம் வங்காள உரைநடை, செய்யுள் வடிவம் ஆகியவற்றில் புதுபாணியை உருவாக்கினார். வங்காள மொழியில் இருந்த சமஸ்கிருத மொழியின் பாதிப்பையும், பழைய பாணியையும் மாற்றினார்.

  • இரண்டு நாடுகளின் தேசிய கீதம் எழுதிய ஒரு கவிஞர் இவர். இந்தியாவிற்கும், பங்களாதேஷ் தேசத்திற்கும் இவர் எழுதிய பாடல்கள் தான் தேசிய கீதமாக இருக்கின்றன.
  • தனது 8வது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர், 16வது வயதில் முதல் தொகுப்பை சூரிய சிம்மம் என்ற புனைப்பெயரில் வெளியிட்டார்.
  • இவரது பெற்றோர்களுக்கு  இவரையும் சேர்த்து 13 குழந்தைகள். பள்ளிக்குச் செல்லாமல் தனது மூத்த சகோதரர் ஹேமேந்திர நாத்திடம் கல்வியையும், உடற்பயிற்சியையும் கற்றுக் கொண்டார். கல்லூரிக்கும் ஒரே ஒருநாள் தான் போனார்.
  • பயணம் செய்வதில் மிகவும் விருப்பமுடையவர்.
  • தனது அறுபதாம் வயதில் ஓவியம் வரைதலையும், வண்ணங்கள் தீட்டுவதையும் ஆரம்பித்து பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தினார்.
  • மார்ச் 2004 இல் இவர் பெற்ற நோபல் பதக்கம்மும் மற்ற விலையுயர்ந்த பொருட்களும் சாந்திநிகேதனில் இருந்து காணாமல் போயின. இவரது நூறாவது பிறந்த நாள் அன்று நோபல் அமைப்பு புதிய பதக்கத்தை கொடுத்தது.

 

தேசிய கீதத்தின் வரலாறு:

மதனப் பள்ளியில் உள்ள பெசன்ட் தியோசொபிகல் கல்லூரி வளாகத்தில் தான் சம்ஸ்க்ருதம் கலந்த பெங்காலி மொழியில் இந்தப் பாடலை திரு.தாகூர் எழுதினார். தியோசொபிகல் கல்லுரியின் அப்போதைய முதல்வரும் திரு. தாகூரின் நண்பருமான ஜேம்ஸ் ஹெச். கசின்ஸ் (James H. Cousins) என்பவரின் மனைவி திருமதி மார்கரெட் கசின்ஸ் (இவர் ஒரு மேற்கத்திய இசை வல்லுநர்) பல வித மெட்டுக்களை போட்டுக் காண்பித்தார். கடைசியில் தாகூர் மனத்தைக் கவர்ந்த மெட்டில் இருப்பது தான் நாம் எல்லோரும் இப்போது பாடும் ‘ஜன கண மன’ பாட்டு. 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த மெட்டு போடப்பட்டது.

 

1911 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தின்  தத்வபோத பிரகாசிகை என்ற நூலில்  தாகூர் எழுதிய கவிதைதான் பிற்காலத்தில் நமது தேசிய கீதமாக மாறியது. முதல் முறையாக இந்தப் பாடல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1911 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம்   27 ஆம் தேதி  பாடப்பட்டது.

 

1911 ஆம் வருடம் எழுதப் பட்டிருந்தாலும், இந்தப் பாடலின் ஹிந்தி மொழியாக்கம் பல ஆண்டுகள் கழித்து 1950 ஆம் வருடம் ஜனவரி 24 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பால் தேசிய கீதமாக தத்தெடுக்கப் பட்டது.

 

இந்தப் பாடலை தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இடமும் இதே மதனப் பள்ளி தான். மதனப் பள்ளியில் இருக்கும் பெசன்ட் தியோசொபிகல் கல்லூரிக்கு  ‘தெற்கு சாந்தி நிகேதன்’ என்றே தாகூர் பெயரிட்டார். இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தன் கைப்பட எழுதிய  ‘ஜன கண மன’ பாடல் மதனப் பள்ளி தியோசொபிகல் கல்லூரி நூலகத்தில் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தாகூர் இந்த ஆங்கில மொழியாக்கப் பாடலுக்கு ‘The Morning Song of India’ என்று பெயரிட்டார்.

 

தாகூரால் எழுதப்பட்ட 5 பத்திகள் கொண்ட இந்தப் பாட்டின் முதல் பத்தி மட்டும் தேசிய கீதமாக இசைக்கப் படுகிறது. இதைப் பாடுவதற்கு 52 வினாடிகள் ஆகும். முழுவதும் பாடாமல் சுருக்கமாக முதல் அடியும், கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்பங்களில் பாடப் படுகிறது. சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் நம் நாட்டின் தலை நகரமான புது தில்லி செங்கோட்டையில் நமது தேசியக் கோடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப் படுகிறது.

 

பிரபலமானவற்றைச் சுற்றி சச்சரவு எப்போதும் இருக்கும், இல்லையா? அதுபோல தாகூர் எழுதிய இந்த தேசிய கீதமும் பல சமயங்களில் சச்சரவுக்கு ஆளாகி இருக்கிறது.

 

இந்தப் பாடல் இயற்றப்பட்ட 1911 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூடிய ஆண்டு. ‘பாக்கிய விதாதா’, ‘அதிநாயக’ என்ற சொற்கள் அரசரைப் புகழ்ந்து எழுதப் பட்டவை; கடவுளின் புகழ் இல்லை என்று சிலர் அப்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்ச்சி அப்போது இந்தியா வந்திருந்த ஐந்தாம் ஜார்ஜ் அரசரை வரவேற்பதுதான். இந்த மாநாட்டைப் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடும் போது “வங்கக் கவி ரவீந்திர நாத் தாகூர் இங்கிலாந்து அரசரை வரவேற்பதற்காக தான் இயற்றிய பாடலைப் பாடினார்” என்று குறிப்பிட்டிருந்தன.

 

ஆனால் தாகூர் ஒரு சிறந்த தேச பக்தராகவே கருதப் பட்டார். 1919 இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பின், தனக்குக் ஆங்கிலேய அரசால் (யாரைப் புகழ்ந்து பாடினார் என்று குற்றம் சாட்டப் பட்டாரோ அந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால்) கொடுக்கப் பட்ட ‘சர்’ பட்டத்தையும் துறந்தார். இந்த சச்சரவுகளின் பின்னிலையில் தாகூர் 1937,1939 ஆம் ஆண்டுகளில் தான் எழுதிய கடிதங்களில் தாம் கடவுளையே ராஜா என்று குறிப்பிட்டதாகவும், தன்னை குறை சொல்பவர்களின் அறிவின்மை பற்றி வருத்தப் படுவதாகவும் கூறுகிறார்.

 

‘ஜன கண மன’ பாடலில் குறிப்பிடும் ‘ராஜா’, ‘அரியணை’, ‘ரதம்’ போன்ற சொற்கள் பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பதாகவே திரு தாகூரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

 

இன்னொரு குற்றச்சாட்டு:

‘ஜன கண மன’ வில் குறிப்பிடும் இந்திய பிரதேசங்கள் எல்லாம் அப்போதைய ஆங்கில அரசின் கீழ் இருந்தவை; மன்னர்களால் ஆளப்பட்டு வந்த மாநிலங்களைப் (காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர்) பற்றி எதுவும் எழுதவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள இந்து மகா சமுத்திரம், அரபிக் கடல் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எல்லைப் பிரதேசங்களைப் பாடியதால், ஒட்டு மொத்த இந்தியாவையுமே தன் பாட்டில் சேர்த்திருக்கிறார் திரு. தாகூர்; ‘திராவிட’ என்பது தெற்குப் பகுதியையும், ‘ஜொலதித’ என்ற வார்த்தை கடல், மற்றும் சமுத்திரத்தைக் குறிக்கும் வடச் சொல் என்றும் பதில் அளிக்கிறார்கள் தாகூரின் ஆதரவாளர்கள்.

 

இத்தனை விவகாரங்கள் இருந்தாலும் தேசிய கீதம் பாடும்போது நமக்குள் எழும் தேசபக்தியை யாரும் குறை சொல்ல முடியாது இல்லையா? இதுவே தாகூரின் பாடலின் மகிமை என்று சொல்லலாம்.