வாழி எதிராசன்!

நன்றி: கூகிள்

இன்றைக்கு சித்திரை மாதம் திருவாதிரைத் திருநாள். எம்பெருமானார் என்று உலகம் முழுவதும் உள்ளார்ந்த பக்தியுடன்அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜரின் 999 வது திருநட்சத்திரம் இன்று பூர்த்தியாகி 1000 வது வருடம் தொடங்குகிறது. எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு உத்சவங்கள் எல்லா திருக்கோவில்களிலும் ஆரம்பமாகியிருக்கின்றன.

 

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி எழுத பெரும் ஆசை மனதில் எழுகிறது. தினந்தோறும் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று திவ்ய பிரபந்தம் சேவிக்கத் தொடங்குவதைத் தவிர ஸ்வாமி பற்றி எழுத என்ன தகுதி இருக்கிறது என்று மனம் பரிதவிக்கிறது.

 

ஒருமுறை பிருந்தாவனம் போயிருந்தோம் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமியின் யாத்திரை கோஷ்டியுடன். அங்கு ஆண்டாளுக்கு என மிகப்பெரிய திருக்கோவில் – ரங்க்ஜி மந்திர் – இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் போலவே இங்கும் ஆண்டாள்-ரங்கமன்னார்-பெரியாழ்வார் மூவரும் ஒரே பீடத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். வடமாநிலத்தில் நம் ஆண்டாளுக்கு என்று ஒரு திருக்கோவில் என்பதே மிகவும் பரவசத்தைக் கொடுக்கும் விஷயம். இதற்கு முன்னாலும் ஒருதடவை இந்தத் திருக்கோவிலுக்குப் போயிருக்கிறேன்.

 

முதல்நாள் பெரிய கூட்டமாக எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் போன சமயம் திருகாப்பு நீக்கியிருக்கவில்லை. நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இங்கே காத்துக்கொண்டிருந்தால் அங்கே ஸ்வாமியின் பாகவத சப்தாகம் கேட்கமுடியாமல் போய்விடும். என்ன செய்வது என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தோம். சற்று நேரம் ஆனவுடன் திருகாப்பு நீக்கி எங்களை உள்ளே விட்டார்கள். கூட்டமான கூட்டம். மிகவும் அவசரம் அவசரமாக வெளியில் இருந்தபடியே சேவித்துவிட்டு பாகவதம் கேட்க சென்றோம். நாளை இன்னும் சீக்கிரமாக வந்து கியூவில் முன்னால் நின்று கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்.

 

எங்களுடன் கூட ஒரு ‘குடுகுடுப்பை’ மாமி – நீங்கள் நினைப்பது போல குடுகுடுப்பைக்காரரின் மனைவி இல்லை இவர். எல்லாவற்றிலும் அவசரம் இவருக்கு. பேருந்துவில் ஏறுவதிலிருந்து தான் தான் என்று முந்திக் கொள்ளும் சுபாவம் அந்த மாமிக்கு. இந்த மாமியைப் பற்றியே இரண்டு மூன்று பதிவுகள் எழுதலாம். கோவிலுக்குள் நுழைவதற்கும் முந்துவார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் விறுவிறுவென்று பிரதட்சணம் செய்ய ஆரம்பித்துவிடுவார். நிதானமாக சந்நிதியில் நின்று பெருமாளை சேவிக்கலாம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. ஒருமுறை பெங்களூரு வரும்போது எல்லோருக்கும் முன்னால் இறங்கி விடவேண்டும் என்ற பரபரப்பில் சிட்டி நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர் அவசரம் அவசரமாக கண்டோன்மெண்டில் இறங்கி சரித்திரம் படைத்தவர் இவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

 

இரண்டாம் நாள் நாங்கள் நால்வர் (குடுகுடுப்பை மாமியுடன் சேர்த்து) ஒரு ஆட்டோ பிடித்து ரங்கஜி மந்திர் வந்தோம். வழக்கம்போல கு.மாமி முன்னால் போய் நின்றார். கோவிலின் திருக்காப்பு நீக்க பட்டாச்சார் ஸ்வாமி வருவதைப் பார்த்தவுடன் இந்த மாமி பெரிய குரலில், ‘மாமா! மாமா! நாங்க கோமளா மாமிக்குத் தெரிந்தவர்கள். கோமளா மாமி உங்க கிட்ட சொல்லச் சொன்னாள். எங்களை கொஞ்சம் முன்னால உள்ள விடுங்கோ’ என்று இரைந்தார். கதவைத் திறக்கப் போனவர் கொஞ்சம் நின்று நம் குடுகுடு மாமியைப் பார்த்தார். பிறகு ஒன்றும் சொல்லாமல் சந்நிதிக்குள் நுழைந்துவிட்டார். சிறிது நேரத்தில் நாங்களும் உள்ளே சென்றோம். எங்களுக்கு சடாரி தீர்த்தம் கொடுத்த பட்டாச்சார் ஸ்வாமி எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். குடுகுடு மாமி ‘கிர்’ரென்று எல்லா சந்நிதிகளையும் சேவித்துவிட்டு நாலே எட்டில் வெளியே போய்விட்டார். அவர் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டாச்சார் ஸ்வாமி சொன்னார்: ‘கோமளா மாமிக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ, நம் எல்லோரையும் ஸ்வாமி இராமானுஜருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நாமெல்லாம் இராமானுஜ சம்பந்திகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர் தான் நமக்கு வழிகாட்டி. நாம் நமது வர்த்தமான (நிகழ்கால) ஆச்சார்யன் மூலம் சேவிப்பது எம்மிராமானுசனைத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கோமளா மாமிக்குத் தெரியும் என்று சொல்வதைவிட ‘அடியேன் இராமானுஜ தாசன் என்று சொல்லுங்கள். பெருமாளுக்கு அதுதான் உகப்பாக இருக்கும். எத்தனை கூட்டமாக இருந்தாலும் ‘அடியேன் இராமானுஜ தாசன் வந்திருக்கிறேன்’ என்று சொல்லுங்கள். பெருமாள் சேவை கிடைத்துவிடும். தினமும் 108 தடவை ‘ராமானுஜா, ராமானுஜா’ என்று சொல்லுங்கள். உங்களின் பாபங்கள், துக்கங்கள், நோய்கள், எல்லாம் போய்விடும்’ என்று மனமுருகக் கூறினார்.

 

எத்தனை பெரிய உபதேசம், ஒரு எளிய மனிதரிடமிருந்து என்று மெய் சிலிர்த்து நின்றோம் நாங்கள் மூவரும். குடுகுடு மாமிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து தினமும் எப்போதெல்லாம் ரங்க்ஜி மந்திர் ஸ்வாமி கூறியது நினைவிற்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஸ்வாமியின் திருநாமத்தை சேவித்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஸ்வாமியின் ஆயிரமாவது திருநட்சத்திரத்தை கொண்டாடும் இந்த வேளையில் இந்த பூமியில் நாம் இருப்பது எத்தனை பெரிய அதிர்ஷ்டம்!

 

பற்பமெனத் திகழ் பைங்கழலும் தண்பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்

முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!

 

இந்தப் பாடலைப் பாடும்போதே நம் கண் முன் ஸ்வாமியின் வடிவழகு தோன்றும். ஸ்வாமியின் திருத்தம்பி எம்பார் என்கிற கோவிந்தபட்டரால் இயற்றப்பட்ட பாடல் இது.

 

ஸ்வாமியை நினைத்தவர்களுக்கு எது எதிர்? வாழி எதிராசன்!