சாவியின் விசிறி வாழை

நேற்று ஒரு நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இது:

அன்பு வணக்கம். நலம் என நம்புகிறேன்.

விசிறி வாழை நாவலை ஒரே மூச்சில், படு வேகமாக வாசித்து முடித்தேன்.அலையோசை, குறிஞ்சி மலர் கொடுத்த அதே கனத்தை, ரணத்தை உணர்ந்தேன்.

உங்களுக்கு மிக பிடித்த நாவல் இது தான் என்று அறிவேன். ஏன் என்று காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இதனை பற்றி பதிவு ஏதும் எழுதி ஊள்ளீர்களா? இருந்தால் சுட்டி தரவும்

அன்புடன்,

……………..

என்று முடித்திருந்தார். இந்த நாவலை சிலமுறை படித்திருந்தாலும் பதிவு எதுவும் எழுதியதில்லை.

விசிறி வாழை நாவல் எந்த வருடம் வந்தது என்று நினைவில்லை. ஆனால் விகடனில் தொடராக வந்து கொண்டிருந்தபோதே படித்திருக்கிறேன். அப்போது புரியாத சில விஷயங்கள் இப்போது படிக்கும்போது புரிகிறது. பல வருடங்களுக்குப் பின் இந்த புத்தகத்தின் pdf கிடைத்தது. இதை அனுப்பியவரும் மேற்கண்ட மின்னஞ்சலை அனுப்பியவர்தான் –  எனது பிறந்த நாளைக்கென்று தனது பரிசாக இந்தக் கதையின் pdf அனுப்பியிருந்தார்.

இந்தக் கதையின் கதாநாயகி பார்வதி முதிர்கன்னி. சிறுவயதிலேயே அம்மா அப்பாவை இழந்து ஒரே அண்ணனின் குழந்தையை (அண்ணா-அண்ணியின் மறைவிற்குப் பிறகு) தன் குழந்தையாக வளர்த்து வருபவள். தான் படித்த கல்லூரியிலேயே வேலைக்கு சேர்ந்து இன்று அதன் பிரின்சிபால் ஆக இருப்பவள். கல்லூரியின் புதிய ஹாஸ்டல் கட்டிடத்தை திறந்து வைக்க வரும் சேதுபதியின் மேல் ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது.

இனி நண்பருக்கு நான் எழுதிய பதில்:

இந்தக் கதையில் இருவகையான காதல் வருகிறது. ஒன்று இளம் நெஞ்சங்களில்  – பாரதிக்கும் ராஜாவுக்குமிடையில் மலருவது. இன்னொன்று பார்வதியின் நெஞ்சில் சேதுபதியின் நினைவாகத் தோன்றுவது. இந்த வயதான பருவத்தில் மலரும் காதலை துளிக்கூட விரசம் என்பது இல்லாமல் சாவி சொல்லியிருப்பார். சேதுபதியின் பெயரைக் கேட்கும்போதெல்லாம், அவரைப் பார்க்கும்போதெல்லாம் பார்வதியின் உள்ளம் துடிக்கும். வியர்த்துப் போவாள். ஆனால் நமது நெஞ்சில் அவளைப் பற்றி ஒரு ‘ஐயோ பாவம்’ உணர்ச்சி மட்டுமே ஏற்படும்.

முதலிலிருந்தே பார்வதியைப் பற்றி நமக்கு உயர்ந்த எண்ணம் வரவேண்டுமென்று அவர்களது வீட்டில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் போட்டோ, சாரதா தேவியின் போட்டோ மாட்டியிருக்கும் என்று சொல்லிக்கொண்டு போவார் சாவி. தனது உயர்ந்த எண்ணங்களை (குறிக்கோள்களை நிறைவேற்ற) மற்ற இன்பங்களை துறந்துவிட்டவள். அப்படிப்பட்டவளுக்கு சேதுபதியின் மேல் ஏன் ஒரு ஆசை? 46 வயதானவள் நெஞ்சில் தோன்றும் இந்த ஆசை என்ன மாதிரியானது? கடைசிப் பக்கம் படித்துவிட்டு நிமிரும்போது நம் மனதில் பார்வதி அழுத்தமாக வந்து உட்கார்ந்து கொள்ளுவாள்.

சேதுபதிக்கும் பார்வதியின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இருவரும் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் தவிப்பது கூட ரொம்பவும் decent ஆகச் சொல்லப்பட்டிருக்கும். உண்மையில் இந்தக் கதை ‘சேவற்கொடியோன்’ கொடுத்த கதைக் கருவை வைத்துக் கொண்டு தான் எழுதியது என்று கதையின் கடைசியில் சாவி சொல்லியிருப்பார். சேவற்கொடியோன் இந்தக் கருவை சாவியிடம் சொல்லிவிட்டு தன்னால் இதுபோல ஒரு கருவை வைத்து எழுதமுடியாது என்றும், சாவியோ, அல்லது ஜெயகாந்தனோ எழுத வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் சொன்னாராம். ஜெயகாந்தன் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்பேன்.

ஜெயகாந்தனின் ‘கருணையினால் அல்ல’ படித்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட இதேபோல இருக்கும். வயதான இருவருக்கு இடையில் வரும் காதல். கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

இப்போதெல்லாம் இந்த மாதிரியான அழுத்தமான கதைகளை யாரும் எழுதுவதில்லை.

இந்தக் கதையைப் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

நண்பரின் பதில்:

வணக்கம்

இது ஒரு Tragedy நாடகமாக இருக்காது என்று முதலில் நம்பினேன். பின் அசந்தே போனேன்…

நாலே பாத்திரங்களை வைத்து கொண்டு என்ன ஒரு விந்தை செய்துள்ளார் சாவி. பலவகையான கருத்துகளை நாசுக்காக அங்கங்கே பொதிந்து வைத்துள்ளார். மதிப்பும் மரியாதையும் உள்ள மனிதர்களை பற்றி படிக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.

எழுத்து நடையில் என்னை கவர்ந்தது : ஒரு சம்பவம் நடந்த உடன், இருவரின் மனநிலைகளையும் தெளிவுர, மிகவும் சரியாக எழுத்தில் வடித்துள்ள விதம் தான்!

விரசமில்லா காதல் தான் வசந்த காலத்தின் அறிகுறி.

ஜெயகாந்தனின் அந்த புத்தகத்தை படித்தில்லை. அவர் கருவை இவ்வளவு இலகுவாக சொல்லி முடிப்பாரா என சிந்திக்கிறேன்…

இப்பொழுது இது போன்ற கதைகள் வருகிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். வாசகர்கள் உள்ளார்களா ?

இது எல்லாம் நமக்கு எதுக்கு, படிக்க (இது போன்ற) பிரசித்தி பெற்ற நாவல்கள் கடல் போல், ஏற்கனவே உள்ளது, முத்தெடுத்து மகிழ்வோம் !

அன்புடன்,

இந்தப் பதிவைப் படிக்கும் வலைபதிவாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்: ஒருமுறை விசிறி வாழை படித்துப் பாருங்களேன்.

விசிறி வாழை PDF நூலின் official பிரதிhttp://tamilvu.org/library/nationalized/pdf/87-saavi/visirevalzai.pdf.

நன்றி ஓஜஸ்!