ரயில் பயணங்கள் தொடர்கிறது……!

 

 

 

சிறுவயதுகளில் எங்களுக்குத் தெரிந்த ஒரே ரயில்நிலையம் சென்னை எழும்பூர். மலைக்கோட்டை ரயிலில் ஏறி ஸ்ரீரங்கம் போவோம். கோடை விடுமுறை ஆரம்பித்தவுடன் போனால், பள்ளிக்கூடம் திறப்பதற்கு முதல் நாள் திரும்பி வருவோம். ஸ்ரீரங்கம் தவிர வேறெங்கும் ரயிலில் சென்றது கிடையாது. பல வருடங்கள் சென்ட்ரல் ரயில் நிறுத்தம் பார்த்ததேயில்லை. எங்கள் உறவினர் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சென்னையில் தான் இருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் உள்ளூர் பேருந்துகள் அல்லது நடராஜா சேவை. முக்கால்வாசி நடைதான்.  மறந்துவிட்டேனே! அப்பாவைப் பெற்ற தாத்தா, பாட்டி பல்லாவரத்தில் இருந்தார்கள். அதற்கும் எக்மோர் போய் உள்ளூர் ரயிலில் போவோம். இந்த இரண்டு இடங்களைத் தவிர வேறெங்கும் ரயிலில் போனது இல்லை.

 

எங்கள் பெரியம்மாவின் குடும்பம் வடஇந்தியாவில் இருந்தது. அவர்களும் கோடை விடுமுறையில் ஸ்ரீரங்கம் வருவார்கள். எங்களைப் போல இரவு ஏறினால் காலையில் ஸ்ரீரங்கம் என்றிருந்ததில்லை அவர்கள் பயணம். சென்னை சென்ட்ரலுக்கு வந்து அங்கிருந்து இன்னொரு ரயில் பிடித்து ஸ்ரீரங்கம் வரவேண்டும். மூன்று நாட்கள் ஆகிவிடும் ஸ்ரீரங்கம் வந்து சேர. எனக்கும் அவர்களைப் போல மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டும் என்று அப்போதெல்லாம் ஆசையாக இருக்கும். மூன்று  நாட்கள் ரயிலில் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வரலாமே என்று தோன்றும். என் அம்மாவிடம் சொன்னால், ‘நாறிப் போய்விடுவோம்’ என்பாள்.

 

இன்னொரு ஆசையும் எனக்கு உண்டு. திருச்சி வந்து ஸ்ரீரங்கம் வரும் ரயிலில் வரவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ஏனென்றால் அப்போது இரண்டு பாலங்கள் வரும். காவிரிப் பாலம் ஒன்று; கொள்ளிடப் பாலம் ஒன்று.  காவிரிப் பாலத்தில் ரயிலில் போவது போல த்ரில் வேறில்லை என்று நினைத்திருந்தேன் – பிற்காலத்தில் சம்பல் நதியைப் பார்க்கும்வரை! சம்பல் நதி மேல் ரயில் போனபோது பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. திருப்பதி மலைமேல் பேருந்து போவதைப் பார்த்து பிரமித்தவள் பத்ரிநாத் போனபோது இமயமலை எதிரில் நம் திருமலா ஜுஜுபி என்று உணர்ந்தேன்!

 

ஸ்ரீரங்கம் வரும்போது பெரியம்மா பால் கோவா செய்து கொண்டு வருவாள். இன்னும் அதன் ருசி எங்கள் நாவில் இருக்கிறது. இனிக்கிறது. ஸ்ரீரங்கத்தில் எங்களை வரவேற்க மாமாக்களில் யாராவது ஒருவர் ஸ்டேஷனுக்கு வருவார்கள். ஒரு லொடலொட மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பின்மண்டையில் இடி பட்டுக்கொண்டே வீடு வந்து சேருவோம். ஸ்ரீரங்கத்தின் மண்வாசனையே அலாதிதான். நாங்கள் வந்திறங்கியவுடன் எங்கள் மாமா சொல்லுவார்: ‘மெட்ராஸ் அழுக்குப் போக எல்லோரும் குளித்துவிட்டு வாருங்கள். உங்களுக்காகவே ‘லைப்பாய் சோப்’ வாங்கி வைத்திருக்கிறேன். உங்களோட அழுக்கிற்கு அதுதான் சரி’ என்பார். இப்போது இந்த சோப்பிற்கு என்ன விளம்பரம் செய்கிறார்கள்!

 

ஸ்ரீரங்கம் நினைவுடன் போட்டிபோட்டுக் கொண்டு நினைவிற்கு வருவது சிலோன் ரேடியோ. காலையில் எங்களை எழுப்புவதே இந்த வானொலி தான். முத்துமுத்தான பாடல்களுடன் மயில்வாகனம் எங்களை எழுப்புவார். ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?’ என்று டிஎம்எஸ், சுசீலா இனிமையாக பாடி எங்கள் கோடை விடுமுறையை துவக்குவார்கள். அதைத் தொடர்ந்து பல்தேய்த்து, காப்பி  குடித்துவிட்டு  குளிப்பதற்கு  கொள்ளிடம் போவோம். எங்களுடன் பெரியவர்கள் யாரும் வர மாட்டார்கள். நாங்களே போய்விட்டு  குளித்துவிட்டு வருவோம். ‘9 மணி சங்கு ஊதியவுடன் வந்துவிட வேண்டும் ‘ என்று சொல்லி அனுப்புவாள் பாட்டி. போகும் வழியில் எல்லாம் ‘ஸ்ரீரங்கம்மாவின் பேரன் பேத்தி’களாக அறியப்படுவோம். கொள்ளிடத்தில் அதிகம் நீர் இருக்காது. உட்கார்ந்துகொண்டு ஆறஅமரக் குளிப்போம் . ஆனால் ஊற்றுக்கள் நிறைய இருக்கும். என் சகோதரன் சொல்லுவான்: ‘நாமளே இந்த ஊற்றுக்களை எல்லாம் தோண்டிதோண்டி  இன்னொரு கொள்ளிடம் பண்ணிடலாம்’ என்று!

ஸ்ரீரங்கத்தில் இன்னொரு நிகழ்வு மறக்க முடியாதது: விளக்கெண்ணை போட்டல்!

நாளை தொடரலாம்….

 

ரயில் பயணங்களில்…….!

வரவர பிரயாணங்கள் அதிகமாகிவிட்டன. அதுவும் ரயில் பிரயாணங்கள். மோதிஜியைப் பற்றி ஒரு ஜோக் முகநூலில் வந்திருந்தது. ‘ஐந்துநாள் பயணமாக மோதி இந்தியா வருகை’ என்று. நானும் அப்படித்தான் அவ்வப்போது ‘செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பது போல மற்ற ஊர்களிலிருந்து அழைப்பு வராத போது பெங்களூருக்கு வந்து (இருந்து) கொண்டிருக்கிறேன்!

இப்போதெல்லாம் IRCTC ரயில் டிக்கெட் வாங்கும் தளம்  ரொம்பவும் வேகமாக வேலை செய்கிறது. உட்கார்ந்த இடத்தில் பயணச்சீட்டு வாங்கிவிடலாம். நான் எத்தனை முறை பயணச்சீட்டு வாங்கினேன் என்று தெரியவேண்டுமா? IRCTC யில் போனமுறை பயணச்சீட்டு வாங்க முயன்றபோது ‘நீங்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பயணச்சீட்டுக்கு மேல் வாங்க முயற்சிக்கிறீர்கள். மன்னிக்கவும். வேறு வழியில் முயற்சி செய்யவும்’ என்று மெசேஜ் வரும் வரை வாங்கியிருக்கிறேன். பிறகு நம்மவர் போய் ரயில்வே புக்கிங் கௌண்டரில் டிக்கெட் வாங்கி வந்தார்.

ஒவ்வொருமுறை பயணத்தின் போதும் விதவிதமான அனுபவங்கள். சில சின்னக் குழந்தைகள் – என் பேரு அனுஷ்கா ஸ்ரீராம் எஸ். தீட்சித், என் பேரு ரொம்ப நியூ!’ என்று சொன்னக் குட்டிப் பெண் –  சில பெரியவர்களின் குழந்தைத் தனங்கள்(!)  96 வயது அம்மாவுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்த 80 வயது இளம் பெண்(!) ‘அம்மாவிற்குக் காது கேட்காது’ என்று சொல்லிவிட்டு ரயிலின் சத்தத்தை மீறி அம்மாவுடன் விடாமல் பேசிக் கொண்டு வந்தது – இவர்களைத் தவிர நிஜமான இளம் பெண்கள், இளம் ஆண்கள் என்று கூடப் பிரயாணம் செய்தவர்கள் – நிறைய எழுதலாம்.

நான் உதவப் போகும் இடங்களிலும் சில வருத்தங்கள், சங்கடங்கள் இருந்தாலும் சில மனதை வருடும் சம்பவங்களும் நடந்தன. மனதை வருடும் சம்பவங்களை மட்டுமே எழுத உத்தேசம். வருத்தங்கள், சங்கடங்கள் எல்லாவற்றையும் மறக்க உத்தேசம்.

முதலில் மனதை வருடும் சம்பவம் ஒன்று.

திருச்சியிலிருந்து பெங்களூரு பிரயாணம். ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி ரயில் நிலையம் வந்தோம். எங்கள் ரயில் வரும் நடைமேடைக்கு கீழே இறங்கி மேலே ஏறவேண்டும். எங்கள் பெட்டிகளை இழுத்துக்கொண்டு  ஒவ்வொரு படியாக இறங்க ஆரம்பித்தோம். மூன்று இளைஞர்கள் எங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் சட்டென்று அருகில் வந்து ‘பெட்டிகளை நாங்கள் எடுத்துக் கொண்டு வருகிறோம் அம்மா’ என்றனர். கொஞ்சம் யோசித்தேன். யாரோ என்னவோ என்று. (நம் புத்தி போகாதே!) பிறகு கொடுத்தோம். ஆளுக்கு ஒரு பெட்டியாக எடுத்துக் கொண்டு எங்களுடன் கூடவே நடந்து வந்து எங்கள் ரயில் வரும் நடைமேடையில் வைத்துவிட்டுச் சென்றனர். ரயில் இன்னும் வந்திருக்கவில்லை. வாழ்த்துக்களும் நன்றியும் சொல்லி அனுப்பினோம். இன்றும் ஒவ்வொருமுறை இந்த இளைஞர்களைப் பற்றிய நினைவு வரும்போதும் அவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

சிரித்தது செங்கட் சீயம்!

படம்: நன்றி கூகிள்

ஒரு வாரமாக காத்திருந்தது நேற்று கைக்குக் கிட்டியது. சென்ற வாரம் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களை சந்தித்தோம். உள்ளத்தில் தோன்றுவதை  அப்பட்டமாக  எழுதும் விமரிசகர் அவர். அவரால் எனது டாலர் நகரம் மதிப்புரை பரிசிற்கு உரியதாகத் தெரிந்தெடுக்கப்பட்டது என்பது எனது எழுத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.

அன்றைக்கே மதியம் கம்பராமாயண முற்றோதலில் இரணியவதைப் படலம்; தூணிலிருந்து நரசிம்மம் வரப்போகிறது என்று திருமதி ஷைலஜா சொல்லிக்கொண்டிருந்தார். என் வீட்டில் விருந்தாளி வருவதாக இருக்கவே மனமில்லாமல் அவரிடம் ‘அடடா! நல்ல ஒரு கட்டத்தை இழக்கப் போகிறேனே’ என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன். வெ.சா அவர்களைச் சந்திக்க வந்திருந்த ஹரிக்ருஷ்ணன் ‘இந்த வாரம் அவ்வளவு பாடல்கள் படிக்க முடியாது; அதனால் நரசிம்மம் அடுத்த வாரம் தான் வரமுடியும்’ என்றார். அடுத்த வாரம் என்றால் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து நேற்று காலை கம்பராமாயண முற்றோதலுக்கு போகும்வரை 109 திவ்ய தேசத்து எம்பெருமான்களிடமும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தேன். (108 திவ்ய தேசம் தானே, நீங்கள் 109 என்கிறீர்களே, என்று கேட்பவர்களுக்கு, எங்கள் வீட்டில் இருக்கும் நாராயணன் எம்பெருமானிடமும் அனுமதி வாங்க வேண்டுமே!)

ஒரு வழியாக எல்லா நாளும் கோளும் நல்லதாக அமைய நேற்று சனிக்கிழமை 20.12.2014 அன்று நாங்கள் எல்லோரும் காலை பத்து மணியளவில் திரு சொக்கன் அலுவலகத்தில் கூடினோம். கம்பராமாயண முற்றோதலில் அது 93 வது அமர்வு. யுத்தகாண்டம்  படித்துக் கொண்டிருக்கிறார்கள். விபீஷணன் ராமனை அடைக்கலம் புகுவதற்கு முன் தன் அண்ணன் ராவணனுக்கு அறிவுரை கூறும் முகமாக இந்த இரணியவதையை கூறுகிறான்.

இந்த படலத்தின் உயிரான பாட்டு இது:

சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச்

சத கூறு இட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்;

இந்நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்;

இத்தன்மை காணுதி விரைவின்என்றான்; ‘நன்றுஎனக் கனகன் சொன்னான்.

நாங்கள் இந்த முற்றோதலின் போது ஆளுக்கு ஐந்து ஐந்து பாடல்கள் என்று படித்துக் கொண்டு போனோம். மேற்கண்ட பாடல் ஷைலஜாவிற்கு வந்தது. பாதிப் பாடலுக்கு மேல் அவருக்கு படிக்க முடியாமல் கண்களில் நீர் ததும்பியது. குரல் கம்மியது. சமாளித்துப் படித்து முடித்துவிட்டு சொன்னார்: மனதளவில் ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதியின் நுழைவாசலில், மேலே உள்ள மேட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு எதிரில் உள்ள கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்திற்குப் போய்விட்டதாகவும், சிறுவயதில் பல நேரங்களில் இந்த மண்டபத்தில் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருப்பது வழக்கம் என்றும் கூறிய போது நாங்களும் அவருடன் அந்தக் காலத்திற்குப் பயணப் பட்டோம். எங்களாலும் அவரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் பாடல்களை முழுவதும் படிக்க வேண்டுமென்பது தனது பல நாளைய கனவு என்றார் ஷைலஜா. தெய்வீகப் பாடல்களுக்கு இருக்கும் மேன்மையை என்ன சொல்ல? இதனால் தான் இப்பாடல்களை ஈரச் சொற்கள் என்கிறார்களோ?

மேலே கம்பனை அனுபவிப்போம் வாருங்கள். மகனைப் பார்த்துச் சொல்கிறான் இரணியன். ‘நீ இப்போது சொன்னாயே, எங்கும் பரந்துளான் உன் இறைவன் என்று. அவனை நீ நான் காணும் படி இந்தக் கம்பத்தின் வழியே  காட்டாது போவாயானால், மத்தகத்தை உடைய யானையை சிங்கம் கொல்வது போல உன்னை கொன்று உன்னுடைய இரத்தத்தையும் குடித்து, உன் உடலையும் தின்பேன்’ என்றான்.

இப்படிச் சொன்ன தந்தையைப் பார்த்து மகன் சொல்லுகிறான். ‘உன்னால் கொல்லும்படி என் உயிர் அத்தனை சுலபமானது அல்ல; நான் அப்போது சொன்னவன் நீ தொடும் இடம் எல்லாவற்றிலும் தோன்றுவான் அப்படித் தோன்றவில்லையாயின் என் உயிரை நானே மாய்த்துக் கொள்வேன்; அப்படியில்லையானின் நான் திருமாலுக்கு அடிமையானவன் இல்லை’

‘நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று, நன்று!’

என்ன நக்கு விசை திறந்து உருமு வீந்ததென்ன ஓர் தூணின்,

வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்;

எற்றலோடும் திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச்செங்கண் சீயம்’.

மகன் இத்தனை சொல்வதைக் கேட்ட அரக்கனுக்கும் இறைவனைக் காணலாம் என்கிற ஆசை அதிகமாக வர  மிகுந்த வேகத்துடன் ஓடி, இடி விழுவது போல ஒரு தூணை தன் கையால் அறைந்தான். அந்த நொடி திசைகள் எல்லாம் திறந்து அண்டம் பிளந்து கிழியுமாறு நரசிங்கம் சிரித்தது.

இந்தப் பாடலை படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்ன ஒன்று என்றால் நரசிங்கம் எனது மென்மையான குரலில் அமைதியாக வந்தார்! ஆனாலும் இந்தப் பாடலைப் படித்தவுடன் உடல் சிலிர்த்தது நிஜம்! ஆனால் அந்த மென்மையை ஈடு செய்யும் வண்ணம் ஹரிஜி அவர்கள் பெரும்குரலில் இந்தப் பாடலை படித்தார். (எல்லாப் பாடல்களையுமே நாங்கள் ஒருதரம் படித்தவுடன் ஹரிஜி மற்றொருமுறை பதம் பிரித்து கணீரென்ற குரலில் படிப்பார்)

ஷைலஜா சொன்னார்: இந்தப் பாடலை திருமூலநாதன் (எங்கள் குழுவிலிருக்கும் ஒரு இளைஞர்) படித்திருக்க வேண்டும் என்று. நான் அமைதியாகப் படித்த போதே உடல் சிலிர்த்தது என்றால் அவர் கம்பீரமாகப் படித்திருந்தால் எங்களுக்கு ‘நரசிம்ம ஸ்வாமியே’ வந்திருப்பார் என்று தோன்றியது.

இன்று நரசிம்மன் வருகிறார் என்பதற்காக ஷைலஜா பானகம் செய்து எடுத்து வந்திருந்தார். செங்கண் சீயம் சிரித்தவுடன் பானகத்தை அவருக்கு அமுது செய்வித்தார். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், சுண்டல் இவற்றுடன் நாங்களும் எங்கள் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு வழி நெடுக சிங்கப்பிரானைப் பற்றியும்,  நாங்கள் உணர்ச்சி வசப்பட்டதையும், உடல் சிலிர்த்ததையும் பேசியபடியே வந்தோம்.

என்னை ஒரு தாயினும் பரிந்து அழைத்துச் சென்ற ஷைலஜாவிற்கு எனது முதல் நன்றி. காரில் வந்து எங்களையெல்லாம் கூட்டிச் சென்ற மகேஷிற்கும், வழி நெடுக சிரித்து பேசியபடி வந்த ஐயப்பன், திருமூலநாதன், வகுப்பில் அவ்வப்போது தனது விளக்கத்தையும் தந்து வகுப்பை நடத்தி சென்ற சொக்கனுக்கும், ஒவ்வொரு பாட்டையும் கம்பீரமாகச் சொல்லி விளக்கம் அளித்த ஹரிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

இனி அடுத்த வருப்பிற்கு நான் போவேனா? தொடர்ந்து செல்ல முடியுமா என்ற வினாவெல்லாம் மனதுள் எழுந்தாலும், இந்த சனிக்கிழமை வகுப்பை எனது ஆயுள் முழுவதும் மறக்க இயலாது என்பது சரதம் (சத்தியம்) இந்த வார்த்தையை தந்த கம்பனுக்கு நன்றி!

கண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களும் தடுக்கும் முறைகளும்

blue eyes

 

நோய்நாடி நோய்முதல் நாடி – 17

 

சின்ன வயதில் ஸ்ரீரங்கம் போகும்போது கரி எஞ்ஜின் ரயிலில் தான் போவோம். அதுவும் பாசெஞ்ஜெர் வண்டி. ஒரு ஸ்டேஷன் விடாமல் நின்று நின்று – ஏன், யாராவது கை காண்பித்தால் கூட – நின்று ஏற்றிக்கொண்டு போகும். வெளியில் எட்டி எட்டிப்பார்த்துக் கொண்டு வருவோம். ஒவ்வொருமுறையும் கண்களில் கரி விழும். அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்வோம். ஆனாலும் அடுத்தமுறை எட்டிப் பார்ப்பது தொடரும். கண்களில் விழுந்த கரியை எப்படி எடுப்பது? அம்மா தன் புடவை தலைப்பை நாலாக மடித்து வாயில் வைத்து ஊதி, எங்கள் கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது மாதிரி வைப்பாள் – பல தடவை. இளம் சூடு கண்களில் பரவும். அப்படியும் சரியாகவில்லை என்றால் குடிப்பதற்கென்று கொண்டு வந்திருக்கும் நீரில் கண்களை அலம்பி விடுவாள். கொஞ்ச நேரத்தில் கண் சரியாகிவிடும்.

அந்தக் காலத்தில் காற்றில் அவ்வளவு மாசு தான் இருந்தது. ஆனால் இப்போது? வண்டியில் போக வேண்டாம். நடந்து போனாலே கண்களில் தூசி வந்து விழும் அபாயம் இருக்கிறது. ஒரு வண்டி நம்மைக் கடந்து சென்றால் தெருவில் கொட்டிக் கிடக்கும் அத்தனை தூசியும் மேலெழும்பி கண்களை மறைக்கும்.

கண்களுக்கு வரும் ஆபத்துக்கள்:

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

எங்கள் பாட்டி!

patti

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கோடை விடுமுறை என்றால் பாட்டி வீடுதான். மூன்று மாமாக்களும் பாட்டியும்  ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்  என் பெரியம்மாவின் மகன், மகள், என் அண்ணா,  என் அக்கா (சில வருடங்கள் ) ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் தங்கிப் படித்தவர்கள்.

 கோடைவிடுமுறை முழுக்க அங்குதான். பாட்டியின் கை சாப்பாடு, கொள்ளிடக் குளியல், மாலையில் கோவில், வெள்ளைக் கோபுரம் தாண்டி இருக்கும் மணல்வெளியில் வீடு கட்டி விளையாட்டு, சேஷராயர் மண்டபத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு – இவைதான் தினசரி பொழுது போக்கு.

தாத்தா மிகச் சிறிய வயதிலேயே (45 வயது) பரமபதித்துவிட்டார். கடைசி மாமாவுக்கு 1 1/2 வயதுதான் அப்போது. தாத்தாவிற்கு ஆசிரியர் வேலை – ஊர் ஊராக மாற்றல் ஆகும் வேலை. பாட்டிக்கு மொத்தம் 14 குழந்தைகள். எங்களுக்கு நினைவு தெரிந்து 6 பேர்தான் இருந்தனர். பெரிய பிள்ளைக்கும் பெரிய பெண்ணிற்கும் தாத்தா இருக்கும்போதே திருமணம்.

எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் பாட்டி எப்படி இத்தனை குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினாள்  என்பது இன்றுவரை புரியாத புதிர்தான்.

கணவரின் மறைவுக்குப் பிறகு இன்னொரு மகளுக்கு (என் அம்மா) திருமணம் செய்தாள் பாட்டி. இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 1944 இல் அன்றைய மதராசில் திருமணம். மகள்களுக்குத் திருமணம் செய்தபின் தொடர்ந்து அவர்களது பிரசவங்கள். பெரியம்மாவிற்கு நான்கு குழந்தைகள்; நாங்கள் நாலுபேர்கள்.

நாங்கள் கோடைவிடுமுறை க்குப் போகும்போது நல்ல வெயில் கொளுத்தும். ஆனாலும் பாட்டி வீடு தான் எங்களின் சொர்க்கம். வாசலிலேயே காய்கறி, பழங்கள் என்று வரும். மாம்பழங்கள் டஜன் கணக்கில் வாங்கி கூடத்தில் இருக்கும் உறியில் தொங்கவிடப்படும். இரவு எல்லோருக்கும் கட்டாயம் பால் உண்டு.

இத்தனை செலவுகளை பாட்டி எப்படி சமாளித்தாள்? தெரியாது. மூன்று வேளை  சாப்பாடு, மதியம் ஏதாவது நொறுக்குத் தீனி. எதற்குமே குறைவில்லை.

கோழியின் பின்னால் ஓடும் குஞ்சுகளைப் போல பாட்டி எங்கு போனாலும் – காவேரி வீட்டிற்கு பால் வாங்க (சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் உனக்கு – நீ கொடுக்கற பாலில்  காவேரிதான் இருக்கு,  என்று என் பாட்டி அவளைக் கடிந்து கொள்வாள்.) செக்கிற்குப் போய் எண்ணெய் வாங்க என்று பாட்டி எங்கு போனாலும் அவள் பின்னே  நாங்கள் – பாட்டி சொல்வாள் – ‘பட்டணத்துலேருந்து குழந்தைகள் வந்திருக்கா பால் இன்னும் கொஞ்சம் கொசுறு ஊற்று, மாம்பழம் குழந்தைகள் கையில் ஆளுக்கு ஒண்ணு கொடு’ என்று பாட்டியின் வியாபர தந்திரங்கள் எங்களுக்கு வேடிக்கையாய் இருக்கும்.

பாட்டி காலையில் தீர்த்தாமாடிவிட்டு வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொள்வாள். மூக்கின் மேல் திருமண்; அதற்கு மேல்  சின்னதாக ஸ்ரீசூர்ணம். பாட்டியை நெற்றிக்கு இல்லாமல் பார்க்கவே முடியாது.

அக்கம்பக்கத்தில் இருக்கும் அத்தனை பேருடனும் சுமுக உறவு. பாட்டிக்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவுதான் அம்மாஞ்சி (மாமாவின் பிள்ளை) அவரது மனைவி  அம்மாஞ்சி மன்னி, அத்தான் (அத்தையின் பிள்ளை) அத்தான் மன்னி (அத்தானின் மனைவி) அத்தங்கா (அத்தையின் பெண்) அத்தங்கா அத்திம்பேர் (அத்தங்காவின் கணவர்) என்று பல பல உறவுகள்.

இவர்களுடன் பாட்டி பேசும் ‘என்னங்காணும், ஏதுங்காணம் வாருங்காணம், சொல்லுங்காணம், சௌக்கியமாங்காணம்’ என்கிற பாஷை எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நாங்களும் இப்படியே பேசிப் பார்ப்போம்.

பாட்டி கொஞ்சம் கனத்த சரீரம். லோ பிரஷர் வேறு. அவ்வப்போது தலை சுற்றுகிறது என்று உட்கார்ந்து கொள்வாள். ஓடிப் போய் சோடா வாங்கி வருவோம். ‘சோடா வேண்டுமென்றால் சொல்லேன். வாங்கித் தருகிறோம் அதற்கு ஏன் லோ பிரஷரைத்  துணைக்குக் கூப்பிடுகிறாய்’ என்று என் பெரிய அண்ணா கேலி செய்வான்.

அங்கிருக்கும் நாட்களில் கட்டாயம் குறைந்த பட்சம் இரண்டு சினிமா உண்டு. காலையிலிருந்தே நாங்கள் ஆரம்பித்து விடுவோம்: ‘பாட்டி சீக்கிரம் கிளம்பணும். லேட் பண்ணாத; எங்களுக்கு முதல் ஸீன் லேருந்து பார்க்கணும்’. ஸ்ரீரங்கத்தில் நான் பார்த்த எனக்கு நினைவில் இருக்கும் சினிமாக்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், பார்த்தால் பசி தீரும்.

பாட்டி பட்சணம், தீர்த்தம் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் நாங்கள் பரபரத்துப் போய்விடுவோம். மாட்டு வண்டி வேறு எங்கள் அவசரம் புரியாமல் நிதானமாக நடக்கும்.

பேரன்கள் முதலிலேயே போய்  (சேர் (chair) 8 அணா, தரை 4 அணா ) டிக்கட் வாங்கிவிடுவார்கள். பாட்டியுடன் போனால் தரை டிக்கட்டுதான். பாட்டிக்கு காலை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும்.  பாட்டிக்கு அங்குதான் ஓய்வு கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

பாட்டி கையால் கட்டாயம் ஒரு முறை எல்லோருக்கும் விளக்கெண்ணெய்  கொடுக்கப்படும். பாட்டி அன்று பண்ணும் சீராமிளகு சாத்துமுதுவும், பருப்புத் தொகையலும் ஆஹா! ஓஹோ! தான்.

என்னுடன் ஒருமுறை வந்து இருந்தபோது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பண்ணுவது சொல்லிக் கொடுத்தாள் பாட்டி. மோர்க்களி செய்து தளதளவென்று அப்படியே தட்டில் போட்டு மைசூர் பாகு மாதிரி துண்டம் போட்டுக் கொடுப்பது பாட்டியின் ஸ்பெஷாலிடி!

இத்தனை வேலை செய்து ஓய்வு ஒழிச்சல் இல்லாத போதும் பாட்டி கைவேலைகளிலும் ஆர்வம் மிகுந்தவள். வண்ண  வண்ண உல்லன்  நூலில் ரோஜாப்  பூ போடுவாள். 10, 15       ரோஜாப்பூக்கள் பின்னியதும் அவற்றிற்கு பொருத்தமான நூலில் அவற்றை வைத்துப் பின்னி ரோஜாப்பூ சவுக்கம் (டவல்) தயார் செய்வாள். பாட்டி பின்னிய கைப்பைகள் சதுரம் வட்டம்,அறுகோணம் என்று எல்லா வடிவங்களிலும் இருக்கும். அவற்றிக்கு உள்ளே தடிமனான அட்டை வைத்து ஜிப் வைத்துத் தைப்பது என் அம்மாவின் கைவேலை.

பாசிமணி எனப்படும் சின்னச்சின்ன மணிகளில் பொம்மைகள் செய்து, அந்த மணிகளிலேயே செடி, கொடி, மரம் செய்து இந்தப் பொம்மைகளை அவற்றின்மேல் உட்கார வைத்து அவற்றை ஒரு பாட்டிலுக்குள் நுழைத்து செய்யும் கைவேலையும் பாட்டி செய்வாள். ‘பாட்டிலுக்குள் இதெல்லாம் எப்படி போச்சு?’ என்ற எங்கள் கேள்விகளுக்கு ‘நான் உள்ள போ அப்படின்னு சொன்னேன் போயிடுத்து’ என்பாள்  பாட்டி!

பாட்டிக்குக் கோவமே வராது. சாப்பிடும் நேரம் யாராவது முதலில் சாப்பிட்டுவிட்டு  ‘எனக்கு, எனக்கு’ என்றால் பாட்டி சொல்வாள்: ‘முதல் பசி ஆறித்தா? கொஞ்சம் சும்மா இரு!’

இன்றும் நாங்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் எங்கள் குழந்தைகளிடத்தில் – தற்சமயம் பேரன் பேத்திகளிடத்தில்.

பாட்டி எங்கள் அம்மாவிற்குக் கொடுத்து எங்கள் அம்மா எங்களுக்கு கொடுத்தது என்று வெள்ளிப் பாத்திரங்கள் இன்றும் எங்களிடம் உள்ளன. ஒரு சின்ன துரும்பைக் கூட வீணாக்காமல் பாட்டி அன்று நடத்திய குடும்பம்தான் இன்று எங்களிடம் வெள்ளிச் சாமான்களாக இருக்கின்றன.

பாட்டி நிறைய துக்கப் பட்டிருக்கிறாள். கணவனை இழந்த பாட்டியின் வாழ்க்கையில் எனது பெரிய மாமா அதே 45 வயதில் பரமபதித்தது பெரிய துக்கம். பாட்டி ரொம்பவும் ஒடுங்கிப் போனது இந்த  ஈடுகட்ட முடியாத இழப்பிற்குப் பிறகுதான்.

ஒரு கோடைவிடுமுறையில் சித்திரை த் தேர் எங்கள் வீட்டு வாசலைத் தாண்டியபின் மாமாவின் இழப்புச் செய்தி வந்தது. ‘ராமாஞ்ஜம் …!’ என்று கதறியபடியே பாட்டி நிலைகுலைந்து போனது இன்னும் எனக்கு நினைவில் நீங்காமல் இருக்கிறது.

அதேபோல பாட்டியுடன் கூடவே இருந்து ஸ்ரீரங்கத்தில் படித்து IPS ஆபிசர் ஆன  எங்கள் பெரியம்மாவின் மகன் இளம்வயதில் இறைவனடி சேர்ந்தது, என் அக்காவின் கணவர் மறைந்தது என்று என் பாட்டி பல இழப்புகளைப் பார்த்து மனம் நொந்து போனாள்.

எனக்கும் வயதாவதாலோ என்னவோ இன்று பாட்டியின் நினவு அதிகமாக வந்து விட்டது. அன்னையர் தினத்தன்று எங்கள் அருமைப் பாட்டியைப் பற்றி எழுதுவதில் ரொம்பவும் சந்தோஷப் படுகிறேன்.

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

***************************************************************************

இந்தப் பதிவு படித்துவிட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் என் மாமா (திருமஞ்சனம் சுந்தரராஜன்) எழுதிய கடிதம் இது. சில திருத்தங்கள் சொல்லியிருக்கிறார். அவற்றை அப்படியே மாமாவின் கடிதத்திலிருந்தே கொடுக்கிறேன். மாமாவின் பாராட்டையும் இணைத்துள்ளேன்.

சௌபாக்யவதி ரஜிக்கு 
சுந்துமாமாவின் ஆசீர்வாதம் 
 
பாட்டியைப் பற்றி உனது கட்டுரை படித்தேன், (தில்லியில் ஆண்டு 1985 கண்ணப்பா மாமா எடுத்த) போட்டோவும் பார்த்து சந்தோஷப் பட்டேன்.
 
இரண்டு வாஸ்தவமான திருத்தங்கள்  ~ 
 
என் தகப்பனார் (மாத்த்யூ ஆர்னல்ட் போன்று) 
ஸ்கூல்ஸ்-இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார், 
அவர் ஆயுள் 54 வருஷம்.
மாமா” (ராமாநுஜம்) ஆயுள் 49 வருஷம் 7 மாசம் 
கொண்டது.   தான் பிறந்தது ருஷ்ய போல்ஷ்விக் புரட்சி
நிகழ்ந்த ஆண்டு 1917 என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.  
அவர் நீங்கியது மே-1967. 
உன் கட்டுரை மிக அருமை.
ஏதோ இலக்கிய உத்தி / ரீதி என்று கற்பனை
பண்ணிக்கொண்டு முண்டும் முடிச்சுமாக
எழுதி அவஸ்தைப் படுகிறவர்களை நான்
பார்த்திருக்கிறேன்.
 
உன் எழுத்து கி. ராஜநாராயணன் என்கிறவர்
நடை போல ஸ்வதந்த்ரமாக, போலி இன்றி 
அமைந்திருக்கிறது.
 
உன்னுடைய readers’ feedback புகழ்ச் சொற்கள் 
அனைத்தும் தகும்.    பாராட்டுகள்.   மிக அருமை.
 
நான் எனது சுய-சரிதை எழுதி, அதற்கு  முன்னர் 
உன் கட்டுரை கிடைத்திருந்தால், அதை அப்படியே 
தூக்கி ஒரு முழு அத்தியாயமாகச் சேர்த்திருப்பேன் !
அன்புடன்,
சுந்து மாமா
(ஸ்ரீரங்கம்)
 

எங்கள் மாமா

ஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.

எங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.

அடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.

நாங்கள் சிறுவயதினராக இருந்த போது  மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.

மாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது  புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.

என் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை!

எங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.

தன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.

மாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.

இப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.

காவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.

எனக்கு நினைவு இருக்கும் மாமாவின்  புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.

நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.

திரும்பத் திரும்பத் திரும்பத் ……….

எத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.

மாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.

‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.

கண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான்.

‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி.

பல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின்  கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.

இத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.

எங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின்  கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.

பழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.

மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.

ரமாவும் ரஞ்ஜனியும்!

ரஞ்ஜனியை எல்லோருக்கும் தெரியும். அதாங்க, அ. உ. பு. பதிவாளர்.

ரமா யார்? அ. உ. பு. பதிவாளர் ரஞ்ஜனியின் அக்கா. என்னைவிட 3 வயது மூத்தவள்.

என்னைவிட புத்திசாலி. எல்லாவிதத்திலும் என்னைவிட சிறந்தவள். மிக நன்றாகப் பாடுவாள்.

சின்ன வயதில் அவளுடன் நான் எப்பவுமே எல்லாவற்றிற்கும் போட்டி போடுவேன். அவள் திருமணம் ஆகிப் போகும் வரையிலும் இது தொடர்ந்தது.

கோலம் போடுவதில் வல்லவள். புள்ளிக் கோலங்கள் அனாயாசமாகப் போடுவாள். எனக்கு வராத பல கலைகளில் இதுவும் ஒன்று. நான் போடும் கோலங்கள் மாடர்ன் ஆர்ட் வகையை சார்ந்தவை. மிகுந்த பொறுமையுடன் புள்ளிகள் வைத்து அவள் கோலத்தை போடுவதைப் காணக் கண் கோடி வேண்டும். ‘நீ புள்ளி வைத்துப் போடும் கோலத்தை நான் புள்ளி இல்லாமலேயே போடுவேன்’ என்று பல தடவை சவால் விட்டு தோற்றவள் நான்.

 

வெள்ளிக்கிழமைகளில் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து  கூடத்தை அடைத்துக் கோலம் போடுவாள், பாருங்கள்! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்.

 

கோலத்திற்கு அடுத்தபடியாக இப்போது அவள் விரும்பிச் செய்வது ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பது.

 

திருமணம் ஆவதற்கு முன் சுருக்கெழுத்து.

 

வானொலியில் வரும் ஆங்கில செய்திகளை கேட்டு சுருக்கெழுத்தில்  எழுதிக் கொண்டே இருப்பாள். சுருக்கெழுத்தில், சுருக்கெழுத்தாளர் எழுதும் ஸ்ட்ரோக்ஸ் (strokes) ரொம்ப முக்கியம். அதை வைத்துதான் எழுதிய விஷயத்தை ஆங்கிலத்தில் transcribe செய்ய வேண்டும். அக்காவின் ஸ்ட்ரோக்ஸ் perfect ஆக இருக்கும். நான் எப்போதும் போல ‘சமாளி’ தான்!

 

அவளுக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ஆபீஸிற்கு அப்பா போன் செய்திருந்தார். ‘அக்காவை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறோம். முடிந்தால் லீவு சொல்லி விட்டு வா’ என்று.

 

எனக்கு ஆபீஸ் போவதை விட லீவு போடுவது பிடித்தமான விஷயம் ஆயிற்றே! உடனே லீவு சொல்லிவிட்டுப் பறந்தேன்.

 

இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. அம்மா அப்போதுதான் அக்காவிற்கு காபி கலந்து எடுத்துப் போகலாம் என்று வீட்டிற்கு வந்திருந்தாள். ‘கொஞ்சம் போய் அவள் பக்கத்தில் இரு’ என்றாள்.

 

நான் உள்ளே நுழையவும் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு ஆயா வெளியே வந்து ‘இத பாரு, உங்க அக்கா குழந்தை’ என்று சொல்லிய படியே நல்ல ரோஸ் கலரில் ஒரு பஞ்சு உருண்டையை என் கையில் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டேன்.

 

‘முதன்முதலில் நான் தான் உன்னைப் பார்த்தேன்; நான்தான் எடுத்துக் கொண்டேன்’ என்று (அதிலும் போட்டி!) இன்றும் என் அக்காவின் பிள்ளை சம்பத்குமாரனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை அவன் தான் என் முதல் பிள்ளை. அந்த வாத்சல்யம் இன்னும் குறைய வில்லை. அவனுக்கு மட்டுமில்லை – அவனுடைய இரு குழந்தைகளுக்கும் – (ஷ்ரேயா, மேக்னா)   நான் சித்தி தான்! இருவரையும் என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

 

எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்து விட்டார். அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. அடுத்த வருடம் என் அக்காவும் அத்திம்பேரும் எங்களை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விருந்து கொடுத்தனர்.

 

எனக்கு பூச்சூட்டல் செய்து, சீமந்தத்திற்கு சீர்கள் கொண்டு வந்து வைத்து, தலைப் பிரசவத்திற்கும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனாள் அம்மாவாக இருந்து.

 

எங்கள் அத்திம்பேர் சின்ன வயதில் பரமபதித்தது எங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

 

தைரியமாக தனக்கு நேர்ந்ததை எதிர் கொண்டு தனி ஒருவளாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள். அம்மாவும் அவளும் அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்து இருக்கிறார்கள். நாலாயிர திவ்யப்பிரபந்தம் அத்தனையும் அத்துப்படி.

 

கண்களில் நீர் தளும்பப் பெருமாளை அலுக்காமல் சலிக்காமல் சேவிப்பாள்.

 

எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.

 

அவளுடன் கொண்டாடிய தலை தீபாவளி நினைவுகளுடன்………