ஒரு தோழி பலமுகம்

நேற்றைய பதிவின் தொடர்ச்சி

 

பொழுதுபோக்கு

இணையத்தில் எழுதுவது, புத்தகங்கள் படிப்பது. அவ்வப்போது கேண்டி க்ரஷ் விளையாடுவது, மற்றவர்கள் எழுதும் கதை, கட்டுரைகளைப் படித்து கருத்துத் தெரிவிப்பது. தொலைக்காட்சியில் நேஷனல் ஜியாக்ரபி சானலில் வரும் ‘ஸ்டோரி ஆப் காட்’ ரொம்பவும் பிடித்த நிகழ்ச்சி. தவறாமல் பார்ப்பேன்.

 

இயற்கை உங்கள் பார்வையில்…

முழுக்க முழுக்க நகரத்தில் வளர்ந்ததால் இயற்கையுடன் அத்தனை நெருக்கம் இல்லை. ஆனால் தும்கூரில் இருந்த இரு வருடங்களில் வீட்டில் நிறைய செடிகள் வளர்த்தேன். என் தோட்டத்தைப் பார்ப்பவர்கள் ‘உங்களுக்கு பசுமை விரல்கள்’ என்பார்கள். தும்கூரை விட்டு வரும்போது அப்போதுதான் படரத் துவங்கிய மல்லிகைக்கொடியை கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டே வந்தேன். நான் ஆசிரியை ஆக இருந்த பள்ளி தோட்டத்தின் நடுவே இருந்தது. தோட்டத்தைச் சுற்றி குழந்தைகளை தினமும் ‘பசுமை நடை’க்கு அழைத்துப் போவதை விரும்பிச் செய்தேன்.

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை வாழ்ந்தால் இயற்கையின் சீற்றத்தை அனுபவிக்க வேண்டியிருக்காது.

சமூகம் உங்கள் பார்வையில்…

நாமெல்லோரும் சேர்ந்ததுதான் சமூகம். அது நன்றாக இருக்க நாம் ஒவ்வொருவரும் நமது கடமைகளை சரிவரச் செய்யவேண்டும். நமது ஆரோக்கியத்தை பேணுவது கூட நமது சமூகக் கடமையே. நாம் சுகமாக வாழ பலவற்றைக் கொடுக்கும் இந்த சமூகத்திற்கு நாம் திருப்பி செய்யவேண்டிய கைம்மாறு ஒரு நல்ல மனிதனாக இருப்பது. நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்வது. நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பது. இந்த சமூகம் மேலும் மேலும் வளர நம் முழு ஒத்துழைப்பைக் கொடுப்பது.

 

மனிதர்கள்

அடுத்தவரிடம் இருக்கும் நிறைகளை மட்டும் பார்த்து,  நம்மிடம் குறைகள் இருப்பது போலவே அடுத்தவர்களிடமும் குறைகள் இருக்கும் என்பதை உணர்ந்தால் எல்லோருமே நல்லவர்களாக இருக்கலாம். என் அம்மா அடிக்கடி சொல்லும் சொலவடை ‘பாத்திரத்தைப் பார்க்காதே, பாலைப் பார்’ என்பது. இன்றுவரை அப்படித்தான் நடந்து வருகிறேன். வெள்ளம் வரும்போது மட்டுமே மனிதத்தைக் காட்டவேண்டும் என்பதில்லை. எல்லா நாட்களிலும் மனிதராக இருக்கலாம்,  தப்பில்லையே!

 

பிறந்த ஊர், சொந்தங்கள்

பிறந்த ஊர் ஸ்ரீரங்கம் என்பதில் மிகுந்த பெருமிதம் எனக்கு. வளர்ந்தது, படித்தது, திருமணம் எல்லாம் சென்னையில் தான். புகுந்த வீடு திருக்கண்ணபுரம் என்பதிலும் பெருமையே. இரண்டு ஊர்களுக்கும் பலமுறை சென்று வந்திருக்கிறேன். திரும்பத்திரும்ப அந்த ஊர்களுக்குப் போகவேண்டும் என்றே தோன்றும். எனது வேர்கள் இந்த ஊர்களில் இருப்பதாலோ என்னவோ. சொந்தங்கள் சென்னையிலும், பெங்களூரிலும் இருக்கிறார்கள்.

 

நேர நிர்வாகம்

முதலில் இல்லத்தரசி. அதனால் வீட்டு வேலைகளை கவனித்துவிட்டுத்தான் கணணி முன் உட்காருவது. முதலில் நான் எழுத வேண்டியதை எழுதிவிட்டு பிறகுதான் இணையத்திற்கு  வருவேன். அதேபோல ஒரு விஷயத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால் முதலில் எல்லா தகவல்களையும் சேகரித்து என்ன என்ன விஷயங்களைச் சொல்லவேண்டும் என்று தீர்மானம் செய்து அவைகளை எழுதிவிடுவேன். இதனால் கடைசி நிமிட அவசரங்களை தவிர்த்து விடுவேன். சிலசமயங்களில் திட்டம் போட்டபடி நடக்காது. அதற்காக ரொம்பவும் டென்ஷன் ஆக மாட்டேன்.

 

சமையல்

திருமணத்திற்குப் பின்தான் சமையல்கட்டிற்குள் நுழைந்தது. மாமியார்தான் குரு. ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு இதை எடு, அதை எடு என்பார்.  இது இத்தனை போடு, அது அத்தனை போடு என்று கையிலேயே அளவு காட்டிக்காட்டி சொல்லிக்கொடுத்ததால் இன்றைக்கும் எனக்கு ஸ்பூன் அளவு சொல்லத்தெரியாது. உப்பு எவ்வளவு போடவேண்டும் என்றால் கண்திட்டம் போடு என்பார்! ஒன்றும் புரியாது. ஏதோ போடுவேன். சரியாக இருக்கும். இப்படித்தான் சமையல் கற்றுக்கொண்டது. சமையல் குறிப்பு எழுதுவதில் அவ்வளவு ஆர்வம் இல்லை.

 

பிற கலை

ஒருகாலத்தில் நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். ‘பொன்னியின் செல்வனில் வரும் நந்தினியும் குந்தவையும் தான் என் ஓவியப் பெண்கள். அதுவும் வினுவின் படங்களைப் பார்த்து நிறைய வரைந்திருக்கிறேன். க்ராஸ் ஸ்டிச் போடுவது ரொம்பவும் பிடித்த வேலை. அந்த காலத்து கிராஃப் தாளில் நானாகவே நிறைய டிசைன்கள் வரைந்து வைத்திருப்பேன். கோலம் போடுவது மிகவும் பிடிக்கும். புள்ளிக்கோலங்களை விட எனது கற்பனைக்குத் தோன்றியபடி போடுவது பிடிக்கும். புள்ளிக்கோலங்கள் என்றால் புள்ளிகளுக்குள் அடக்கவேண்டும். கற்பனை என்றால் அப்படியில்லையே!

Office / work

திருமணத்திற்கு முன் ஸ்டெனோ-டைபிஸ்ட். திருமணம் ஆகி 25 ஆண்டுகளுக்குப் பின் ஸ்போக்கன் இங்க்லீஷ் ட்ரையினர். வெளியில் போய் வேலை செய்வது அவ்வளவாகப் பிடிக்காத விஷயம். அதனால் வேலைக்குப் போகவில்லை என்ற வருத்தம் கிடையாது.

 

கடந்து வந்த பாதை எப்படி இருக்கிறது?

திருமணத்திற்கு முன் அப்பா. திருமணம் ஆனபின் கணவர், நான் நம்பும் அரங்கன் இவர்களின் துணையோடு இத்தனை வருடங்களைக் கழித்துவிட்டேன். பள்ளம் மேடு நிறைந்த வாழ்க்கைதான் சுவாரஸ்யம், இல்லையா? ஒவ்வொருசமயம் திரும்பிப்பார்க்கும்போது இத்தனை இடர்களைக் கடந்து வந்திருக்கிறோமா என்று வியப்பாக இருக்கும். கொந்தளிக்கும் கடல்தான் ஒரு நல்ல மாலுமியை உருவாக்கும் என்பார்கள். நானும் இத்தனை வருடங்களில் நல்ல மாலுமி ஆகியிருக்கிறேன்.

 

சினிமா

திருமணத்திற்கு முன் சினிமா என்றாலே அப்பாவிற்குப் பிடிக்காது. அதுவும் எம்ஜிஆர் சினிமா பார்க்க அனுமதி கிடைக்கவே கிடைக்காது. திருமணம் ஆனபின் தான் ‘நான் எங்க வீட்டுப்பிள்ளை’ படமே பார்த்தேன்! இப்போதும் அதிகம் பார்ப்பது இல்லை. மலையாளப் படங்கள் பார்ப்பேன். பெங்களூரு வந்தபின் கன்னடப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். திரையரங்கில் பார்ப்பது ரொம்பவும் அபூர்வம். பார்த்து ரசித்த படங்களை விட ஏன் பார்த்தோம் என்று நொந்து கொண்டது அதிகம். சமீபத்தில் இறுதிச்சுற்று, சேதுபதி பார்த்தேன். சேதுபதி அதிகம் பிடித்திருந்தது.

 

உடல் நலம்- மன நலம்

மனநலம் நன்றாக இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்பதை நம்புபவள் நான். மனதை கூடியவரை அலைபாயாமல் பார்த்துக் கொள்வேன். கஷ்டம் தான். மனஅழுத்தம் அதிகரிக்கும்போது அழுதுவிடுவேன். அழுகையுடன் அழுத்தமும் கரைந்துவிடும். எழுதுவது என்னுடைய அழுத்தங்களைக் குறைக்கிறது.  சந்தோஷமோ, துக்கமோ எழுதுவது எனக்கு வடிகால்.

 

நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தவை

என்னை எழுத்தாளராக அடையாளம் காட்டிய எனது முதல் கதை ‘அத்தையும் ராகி முத்தையும்’, இணையத்தில் நான் எழுதிய முதல் கட்டுரை ‘நானும் என் ஸ்னுஷாவும்’.

அதேபோல நான்குபெண்கள் இணையதளத்தில் எழுதிய ‘செல்வகளஞ்சியமே’ என்ற குழந்தைகள் வளர்ப்புத் தொடர். நூறு பகுதிகள் எழுதியிருக்கிறேன். அதே தளத்தில் எழுதிய மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ தொடரும். இரண்டையும் எழுத நிறைய புத்தகங்கள், இணைய தளங்கள் என்று தேடித்தேடிப் படித்தேன். கடுமையான உழைப்பிற்குப் பின் வரும் வெற்றி இனிமைதானே!

 

இசை

ஒருகாலத்தில் வீணை, வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டு ஜூனியர் பரிட்சையும் பாஸ் செய்தேன். இப்போது பாடுவதில்லை. ஆனால் இசையை ரசிக்கப் பிடிக்கும். பி.லீலா குரல் மிகவும் பிடிக்கும். பி.சுசீலாவின் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்’, ‘சொன்னது நீதானா?’ முதலிய பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதது. இந்தத் தலைமுறை பாடகிகளில் சைந்தவியின் குரல் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

 

பிடித்த ஆளுமைகள்

எம்.எஸ். அவர்களை ரொம்பவும் பிடிக்கும். அந்தக்காலத்தில் அவருக்கு பக்கவாத்தியம் வாசிக்கக் ஆண்கள் முன்வரமாட்டார்கள். திரு சதாசிவத்தைத் திருமணம் செய்துகொண்டு மடிசார் கட்டிக்கொண்டு காஞ்சி மடத்திற்குச் சென்றபோது மகாபெரியவர் எம்.எஸ். ஐ பார்க்க முதலில் மறுத்துவிட்டார் என்று படித்தபோது மனம் நொந்து போனேன். தன்னை எதிர்த்த அத்தனை பேர்களையும் தனது இசை என்னும் தவத்தால் வெற்றி கொண்டவர். தனக்கு நேர்ந்த அவமானங்கள் எதையும் அவர் எந்த பேட்டியிலும் சொன்னது கிடையாது. என்ன ஒரு மனவலிமை மிக்க பெண்மணி இவர்! தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னுடைய இசையை நமக்கென விட்டுச் சென்ற அவரை போல இன்னொருவர் இனி பிறக்கமுடியாது.

இப்போது திருமதி ஸ்ம்ருதி இரானி. தங்குதடையின்றிப் பேசும் ஆங்கிலம் அவரது பலம். எதிராளிகள் அவர் எதிரில் நிற்பதற்கே பயப்படுகிறார்களே!

 

பிடித்த பெண்கள் – குடும்பத்தில், வெளியில்

சிறுவயதில் கணவரை இழந்து தனித்து நின்று வாழ்க்கையின் சவால்களை ஏற்று சமீபத்தில் மறைந்த என் அக்கா ரமா. புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொடுத்த, 88 வயதிலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறையாத என் அம்மா.

வெளி உலகத்தில் திருமதி காமாட்சி மகாலிங்கம். பிள்ளைகள், பெண்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகி அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என்ற நிலையில் எல்லாப் பெண்களுக்கும் வரும் தனிமை உணர்வு தன்னை பாதிக்காமல், ‘சொல்லுகிறேன்’ என்ற வலைத்தளம் ஆரம்பித்து சமையல் குறிப்புகளுடன் தனது அம்மா பற்றிய நினைவுகள், பார்த்த ஊர்கள் என்று தொடர்ந்து எழுதி அசத்தி வரும் 85 வயது இளம்பெண் இவர். மும்பையில் இருக்கும் இவர், வலைத்தளம் மூலம் எனக்குக் கிடைத்த உற்ற நட்பு.

 

 

நகைச்சுவை நிகழ்ச்சிகள் வாழ்க்கையில்

 

ஒருமுறை என் இரண்டு பேரன்களுடன் உட்கார்ந்துகொண்டு ஒரு ஹிந்தி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் ஹீரோ ஹீரோயினை அலக்காகத் தூக்கிகொண்டு சிறிது தூரம் நடந்தார். அதைப்பார்த்த நான் என் பேரன்களிடம் சொன்னேன்: ‘இனிமேல் இவர் ஜிம் போகவே மாட்டாராம்…’ என்று. இருவரும் ஒரே குரலில் ‘ஏன்?’ என்றார்கள் திரையிலிருந்து கண்களை எடுக்காமலேயே. ‘‘இந்த ஹீரோயினையே தூக்கிவிட்டீர்கள். இதைவிட அதிகமான பளு ஜிம்மில் இல்லை’ என்று சொல்லிவிட்டார்களாம்!’ என்றேன் ரொம்பவும் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக் கொண்டு. சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தவர்களுக்கு நான் வேடிக்கை செய்கிறேன் என்று புரிந்து எல்லோருமாகச் சிரித்தோம்.

 

ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்

 

ஃபேஸ்புக்கில் ரொம்பவும் அதிகம் நடமாடுவதில்லை. ஒருகாலத்தில் எழுத்தாளர்கள் என்றால் ஒரு தனி இனம். அவர்களைப் பார்ப்பது, பேசுவது எல்லாமே நடக்காத ஒன்று என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது நிறைய எழுத்தாளர்களுடன் நட்பில் இருக்கிறேன். அதிகம் உரையாடுவதில்லை என்றாலும் அவர்கள் எழுதுவதைப் படித்துவிடுவேன்.- திரு சுதாகர் கஸ்தூரி, திரு அரவிந்தன் நீலகண்டன், திரு சொக்கன், திரு மருதன், திருமதி வித்யா சுப்பிரமணியம் என்று பலர் எழுதுவதை உடனே படிக்க முடிகிறது. நிறைய திறமைகள் நிறைந்த மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது ஃபேஸ்புக் வந்த பிறகு புரிந்தது.

 

அழகென்பது

குழந்தைகளின் கள்ளமற்ற சிரிப்பு.

 

வீடு

எத்தனை ஊர்களுக்குச் சென்றாலும் எத்தனை அழகழகான இடங்களைப் பார்த்தாலும் எவ்வளவு ருசியான உணவுகளை சாப்பிட்டாலும் நம் வீட்டிற்கு வந்து கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்து ரசம் சாதம் சாப்பிடுவது போல வருமா? வீடு என்பது மனதிற்கு நெருக்கமான ஒன்று. வீடு தரும் பாதுகாப்பு விலை மதிக்க முடியாதது.

எழுத்தும் வாசிப்பும்

அம்மாவிடமிருந்து கற்றது. அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். ஒரே சீராக எழுத்துக்கள். சமமான இடைவெளிகளுடன் கோர்வையான வார்த்தைக் கட்டுக்களுடன் அம்மாவின் கடிதங்கள் பொக்கிஷம். என்னுடைய  எழுத்தும் வாசிப்பும் எனக்கு என் அம்மா தந்த சீதனம்.

பின்குறிப்பு:

இதில் நான் சொல்லியிருக்கும் பலவிஷயங்கள் பத்திரிகையில் வெளிவரவில்லை.

 

‘பெருமாளிடம் சொன்னாயா?’

serthisevaiஜூன் 20, 2016 தீபம் இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை – எடிட் செய்யப்படாமல் இங்கே:

பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் இருக்கும் யதுகிரி யதிராஜ மடத்தில் நிறைய உபந்யாசங்கள், காலக்ஷேபங்கள் நடக்கும். சென்னையில் இருக்கும் மிகவும் பிரபலமான உபந்யாசகர்கள் எல்லோருமே இங்கு வந்து உபந்யாசங்கள் செய்வார்கள்.

 

எனக்கு மிகவும் பிடித்த உபன்யாசகர் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ஸ்ரீ பூவராகாச்சார்யார் ஸ்வாமி. இந்த ஸ்வாமி மெத்தப் படித்தவர். சம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் உள்ளவர். நிறைய விஷயங்கள் சொல்லுவார். தினசரி வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், கோவிலுக்குச் செல்லும்போது கைக்கொள்ள வேண்டிய நியமங்கள், பெரியவர்களுக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று எல்லாவிதமான விஷயங்களையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவார். எதற்காகவும் நம் சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவர் இந்த ஸ்வாமி. சொல்ல வேண்டிய விஷயங்களை மிகவும் நகைச்சுவையுடன் அதேசமயம் அசைக்கமுடியாத உதாரணங்களுடனும் இந்த ஸ்வாமி சொல்லுவார்.

 

ஒருமுறை சொன்னார்: ‘ஊருக்குப் போகிறேன், ஊருக்குப் போகிறேன் என்று எதிர்வீட்டில், பக்கத்து வீட்டில், மேல்வீட்டில் என்று எல்லோரிடமும் சொல்லுகிறீர்களே, உங்கள் அகத்துப் பெருமாளிடம் சொன்னீர்களா?’ இதைக்கேட்டு நாங்கள் எல்லோரும் முதலில் சிரித்தாலும், ஏதோ பெரிய விஷயம் வரப்போகிறது என்று சிரிப்பதை நிறுத்திவிட்டு அவர் தொடரக் காத்திருந்தோம். அவர் சொன்னார்:

 

‘ஸ்ரீரங்கத்தில் ஒரு அரையர் ஸ்வாமி இருந்தார். தினமும் பெருமாளின் திருமுன்பு திவ்யப்பிரபந்தம் சேவிப்பதை கைங்கர்யமாகச் செய்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக திருவேங்கடம் போய் திருமலையப்பனை சேவித்துவிட்டு வரவேண்டும் என்ற ஆசை. பெருமாளிடம் எப்படிக் கேட்பது என்று மிகவும் தயங்கினார். ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பெருமாளிடம் தனது ஆசையை விண்ணப்பம் செய்தார். பெருமாள் சற்று நேரம் யோசனை செய்தார். ‘இவன் எதற்கு அங்கு போக ஆசைப்படுகிறான் நான் இங்கிருக்கும்போது?’ என்று மனதிற்குள் நினைத்தவாறே ‘சரி, நீ உன் விருப்பபடியே போய்விட்டுவா. ஆனால் அதற்கு முன் ‘அமலனாதிபிரான்’ சேவித்துவிட்டுப் போ’ என்றார்.

 

அரையரும் ‘அப்படியே ஆகட்டும், அடியேன்’ என்று சொல்லிவிட்டு அமலனாதிபிரான் சேவிக்க ஆரம்பித்தாராம். அமலனாதிபிரான் என்பது திருப்பாணாழ்வார் சாதித்த திவ்யப்பிரபந்தம். முதல் பாசுரம் ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்குவதால் அந்த பாசுரங்களுக்கு அமலனாதிபிரான் என்றே பெயர்.

 

அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.

முதல் பாசுரம் ஆயிற்று. இரண்டாம் பாசுரம் ஆயிற்று. மூன்றாம் பாசுரம் சேவிக்க ஆரம்பித்தார் அரையர். முதல் முறை சேவித்தார். அந்தப் பாசுரத்தை எப்போதுமே இரண்டுமுறை அனுசந்திக்க வேண்டும்.

மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்ததோரெழில்

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே.

 

அரையரும் இரண்டுமுறை சேவித்தார். அவர் சேவித்து முடித்ததும் பெருமாள் ‘எங்கே மறுபடியும் சேவியும்’ என்றார்.

‘மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’

‘மறுபடி சேவியும்’ பாதி பாசுரத்திலேயே பெருமாளின் ஆக்ஞை பிறந்தது.

‘மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’

 

அரையருக்கு பெருமாள் சொல்ல வந்த செய்தி புரிந்துவிட்டது. ‘அடியேன் எங்கேயும் போகவில்லை’ என்று சொல்லிவிட்டு பெருமாளை சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து விட்டு சென்றாராம்.

வடவேங்கட மாமலையில் இருப்பதும் இந்த அரங்கத்தரவினணையான் தானே?

இங்கே இருப்பவரை மெனக்கெட்டு அங்கே போய் ஏன் சேவிக்க வேண்டும்? என்று பெருமாள் நினைத்தாராம்.

அரையர் போக விரும்பியும் பெருமாள் விரும்பவில்லை. அதனால் அவரால் போக முடியவில்லை. அதனால் நீங்களும் எங்கு போவதானாலும் முதலில் பெருமாளிடம் சொல்லி உத்தரவு வாங்கிக் கொள்ளுங்கள். அவன் விருப்பப்படவில்லை என்றால் நாம் எங்கேயும் போகமுடியாது!’ என்று முடித்தார் ஸ்வாமி.

அன்றிலிருந்து நான் அப்படியே கடைப்பிடித்து வருகிறேன். நீங்களும் செய்து பாருங்களேன்.

ரமாவும் ரஞ்சனியும் 2

 ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதைப்படித்துவிட்டு என் அக்கா ரமா ரொம்பவும் நெகிழ்ந்து போனாள். ஆனால் இந்தக் கட்டுரையை நான் மிகவும் மனம் நொந்து, நெகிழ்ந்து எழுதுகிறேன். இதைப் படிக்க அவள் இல்லை என்கிற உண்மை என்னை மிகவும் வதைக்கிறது.

அக்கா பிறக்கும்போதே ‘பெரியவள்’ ஆகப் பிறந்தாள் என்று எனக்குப் பல சமயங்களில் தோன்றும். கோடை விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் போகும்போது நான் தெருவில் பாண்டி, கோலி எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பேன் என் சகோதரர்களுடன். இவள் என் பாட்டியுடன் இருப்பாள். பாட்டியுடன் கூடவே வெளியே போவாள். வீட்டிலும் பாட்டியுடன் அடுப்படியில் என்னவோ பேசிக்கொண்டு இருப்பாள். பாட்டியும் அவளை பெரியவள் ஆகவே நினைத்து எல்லாக் கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பாள். திரும்ப ஊருக்கு வந்தாலும் இவள் என் அம்மாவுடனே இருப்பாளே தவிர தன் வயதை ஒத்த தோழிகளுடன் விளையாட மாட்டாள். என் அம்மா, பெரியம்மா, பாட்டி இவர்களே இவளது தோழிகள் என்று தோன்றும் அளவிற்கு அவர்களுடன் பழகுவாள்.

 

அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெகு அக்கறையாகக் கேட்பாள். என்னிடம் பேசும்போது ‘பாவம், பாட்டி, பாவம் பெரியம்மா’ என்பாள். எனக்குத் தெரியாத உறவினர்களை எல்லாம் இவள் தெரிந்து வைத்திருப்பாள். அவளுடன் கோவிலுக்குப் போனால் எதிரில் வருகிறவர்கள் அத்தனை பேர்களும் இவளை விசாரித்துவிட்டுப் போவார்கள். ‘பாட்டியோட அத்தான் மன்னி இவர்’, ‘பாட்டியோட அம்மாஞ்சி இவர்’ என்று உறவுமுறை சொல்லுவாள். ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!’ என்றால் ‘நீ எப்போ பார்த்தாலும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறாய். பாட்டி பெரியம்மாவுடன் எல்லாம் பேச வேண்டும்’ என்பாள். என்னால் முடியவே முடியாத காரியம் இது என்று நினைத்துக் கொள்ளுவேன்.

 

ஸ்கூல் முடித்தவுடன் ‘மேலே படிக்க விருப்பம் இல்லை. நான் வேலைக்குப் போய் உனக்கு உதவறேன்’ என்று அப்பாவிடம் சொல்லிவிட்டாள். நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடனே என்னிடமும், ‘மேலே படிக்க வேண்டாம். வேலைக்குப் போய் அப்பாவிற்கு உதவி செய்’ என்று அதையே சொன்னாள். எனக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் (திருமணத்திற்கு ஐந்தாறு மாதங்கள் இருக்கும்போது) வேலையை விட்டுவிட்டேன். அவளுக்கு ரொம்பவும் வருத்தம். திருமணம் ஆகும்வரை வேலைக்குப் போனால் அப்பாவிற்கு உதவியாக இருந்திருக்கும், இல்லையா என்றாள்.

 

மொத்தத்தில் அக்கா உண்மையில் அக்காவாக இருந்தாள். பாட்டி, அம்மா, பெரியம்மா என்று எல்லோருடைய கஷ்டங்களையும் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ அக்காவிற்கும் கஷ்டங்களே வாழ்க்கை ஆனது. 22 வயதில் திருமணம். 34 வயதில் அத்திம்பேரை இழந்தாள். யாரையும் எதிர்பார்க்கவில்லை. யார் கூடவும் இருக்கவும் விரும்பவில்லை. கையில் வேலை இருந்தது. அம்மாவின் துணையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். எதற்கும், யாரையும் அண்டி இருக்காமல் தன் முடிவுகளைத் தானே எடுத்தாள்.

 

தன் வாழ்க்கையை அலுவலகம், வீடு என்று அமைத்துக் கொண்டாள். அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு திவ்ய தேச யாத்திரை. அம்மாவையும் அழைத்துக் கொண்டு எல்லா திவ்ய தேசங்களையும் சேவித்துவிட்டு வந்தாள். முக்திநாத் தவிர மற்ற திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்திருக்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஒரு வீடு வாங்கினாள். முடிந்த போதெல்லாம் போய் நம்பெருமாளை சேவித்துவிட்டு வருவாள். ஸ்ரீரங்கம் போவது என்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். தன் பேத்திகள் இருவர் மேலும் உயிரை வைத்திருந்தாள். பேத்திகள் இருவரையும் பார்த்துக் கொள்வதை ஆசைஆசையாகச் செய்தாள். பேத்தியை மடியில் விட்டுக் கொண்டு நிறைய பாட்டுக்கள் பாடுவாள்.

‘மாணிக்கம் கட்டி, வயிரமிடை கட்டி….’ என்று பாசுரம் பாடிப் பாடி அவர்களை கொஞ்சி மகிழ்வாள்.

ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பதே அவளது வாழ்நாளின் குறிக்கோள் என்பது போல அடிக்கடி ஸ்ரீரங்கம் போவாள். நம்பெருமாளை அவள் சேவிக்கும் அழகைக் காண வேண்டும். அந்தப் பக்கம் நின்று சேவிப்பாள். இந்தப் பக்கம் வந்து சேவிப்பாள். வீதியில் எழுந்தருளும் போதும் இந்த வீதியில் சற்று நேரம் சேவித்துவிட்டு அடுத்த வீதிக்கு பெருமாள் எழுந்தருளுவதற்குள்  அங்கு போய் நிற்பாள்.

 

சமீபத்தில் ஒருநாள் அடையாறு அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு போக ஆசைப்பட்டிருக்கிறாள். அவள் பிள்ளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறான். ‘கோவிலுக்குள் நுழைந்தவுடன் அம்மா கிடுகிடுவென சந்நிதிக்குள் சென்ற வேகம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, சித்தி. அம்மாவிற்கும் பெருமாளுக்கும் நடுவில் ஏதோ பேச்சு வார்த்தை நடப்பது போல இருந்தது. அம்மாவை அவர் வா என்று சொல்வது போலவும் அம்மாவும் வேறு எங்கும் பார்க்காமல் உள்ளே சென்றதும்….. என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சட்டென்று வேகமாக நடக்கும் அம்மாவைப் பிடித்துக் கொண்டேன்’ என்றான் அக்கா பிள்ளை. அதுதான் ரமா.

தனது சோகங்களை சற்று மறந்து பேத்திகளுடன் வாழ்க்கையை கழிக்க ஆரம்பித்த வேளை அந்தக் கொடிய நோய் அவளை பீடித்தது. சென்ற பிப்ரவரி மாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் போயிருந்தோம். இரண்டு நாட்களில் அக்காவும் வருவதாக இருந்தது. முதல் நாள் போன் செய்து ரொம்பவும் வயிற்றுவலி அதனால் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்துவிட்டேன் என்று அவள் கூறியபோது மனதில் இனம் புரியாத சங்கடம். என்னவானாலும் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்யாதவள் இப்போது செய்கிறாள் என்றால்…என்று மனதை கவலை சூழ்ந்து கொண்டது. சில நாட்களில் தெரிந்துவிட்டது, வயிற்றில் புற்றுநோய் இருப்பது. அப்போதே முற்றிய நிலை தான். ஆறு கீமோதெரபி என்று மருத்துவர் கூறினார். ஒவ்வொரு மாதமும் நான் சென்னைக்குப் போய் அவளுடன் மருத்துவமனையில் தங்குவேன். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தபின் இரண்டு நாட்கள் அவளுடன் இருந்துவிட்டு திரும்புவேன்.

 

40 வருடங்களுக்கு முன் எங்கள் அப்பாவை இந்த நோய் தாக்கியபோது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்த நினைவுகள் வந்து என்னை பயமுறுத்தின. ஆனால் இத்தனை வருடங்களில் மருத்துவம் நிறைய முன்னேறியிருக்கிறது அதனால் அக்கா பிழைத்துவிடுவாள் என்று நினைத்தேன். அம்மா தினமும் திருவள்ளூர் பாசுரம் சேவிக்க ஆரம்பித்தாள். நாளாக ஆக, எங்கள் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

 

இன்றைக்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்று அக்கா நினைத்தால் அதை செய்து முடித்துவிட்டு மறுவேலை பார்ப்பாள். அசாத்திய சுறுசுறுப்பு. அம்மா சொல்வாள்: ‘ரமா அடுப்படியில் நுழைந்தால் அடுப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். உலை தானாகவே கொதிக்கும்!’ என்று. எப்போதும் ஒரு பரபரப்பில் இருப்பாள். ஒருநிமிடம் அயர்ந்து உட்கார மாட்டாள். அப்படிப்பட்டவளை இந்தக் கொடிய நோய் முடக்கிப் போட்டுவிட்டது. மிகவும் சுதந்திரமானவள் அக்கா. அப்படிப்பட்டவள் இப்போது துணையில்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. கூடவே ஒரு ஆள் அவளுடன் இருக்க வேண்டியிருந்தது. இந்த நிலை அவளை மிகவும் பாதித்திருக்க வேண்டும்.

 

அவள் செய்யும் காரியங்களில் எல்லாம் ஒரு ஒழுங்கு இருக்கும். ‘போன் பேசுவது எப்படி என்று ரமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அவள் தோழிகள் சொல்வார்கள். ‘சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென்று சொல்லிவிட்டு ‘வைக்கட்டுமா?’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். வளவளவென்று பேசவே மாட்டாள்’

 

நிறைய தானதர்மம் செய்வாள். கோவில்களுக்கு வாரி வழங்குவாள். அவளுக்கு வரும் கடிதங்கள் எல்லாமே கோவில்களிலிருந்து வரும் பிரசாதக் கவர்கள் தான். சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வைகுண்ட ஏகாதசி பிரசாதம் செல்வர் அப்பம் வந்திருந்தது. அவளால் அதை சாப்பிட முடியவில்லை, பாவம்.

 

நான் அவளுடன் மருத்துவமனையில் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை. எங்கள் திருமணத்திற்கு முன் நாங்கள் இருவரும் எப்படி இருந்தோமோ அதேபோல இப்போது இருந்தோம். அக்கா தங்கை என்ற உறவை மீறி தோழிகள் போல இருவரும் ஒருவரின் அண்மையை இன்னொருவர் விரும்ப ஆரம்பித்தோம். நான் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாள். ‘நீ வந்துட்டயா? நான் பிழைத்துவிடுவேன்’ என்பாள். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். நான் அறியாத ரமாவை இந்த ஒரு வருட காலத்தில் அறிந்தேன். எத்தனை வேதனை பட்டிருக்கிறாள்! தனி ஒரு ஆளாக எல்லாவற்றையும் தாண்டி சற்று நிம்மதியாக இருக்க வேண்டிய நிலையில் எதற்கு இப்படி ஒரு நோய் அவளுக்கு? ‘யார் சோற்றில் மண்ணைப் போட்டேனோ, சாப்பிடக்கூட முடியவில்லையே’ என்று மனம் நொந்து அழுவாள். கடைசியாக நான் அவளைப் பார்த்தது ஜனவரி 9. நான் ஊருக்குப் போகிறேன் என்றவுடன் முகத்தில் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள். கட்டாயம் போகணுமா என்றாள். பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் வருகிறேன் என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டேன். ‘சீக்கிரம் என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளச் சொல்லி நம்பெருமாளை வேண்டிக் கொள்’ என்றாள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

 

மருத்துவர்கள் சொன்ன காலக்கெடு 3 மாதங்கள். ஆனால் ஒரே வாரத்தில் அக்காவின் கதை முடிந்துவிட்டது. இனி அவள் பிழைக்க மாட்டாள் என்று தெரிந்தவுடன் நான் நம்பெருமாளிடம் இந்தக் கோரிக்கையைத் தான் வைத்தேன்: ‘இனியும் இந்த சித்திரவதை அவளுக்கு வேண்டாம். நிறைய பாடுபட்டு விட்டாள். அதிக சிரமம் கொடுக்காமல் அவளுக்கு இரங்கு’

 

ஜனவரி 13 காலையிலேயே அக்காவிற்கு நினைவு தப்பிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். நினைவு போன நிலையில் ஒருமுறை என் பெயரை சொன்னாள் என்று அக்காவின் பிள்ளை சொன்னான். அவ்வளவுதான். நாங்கள் காஞ்சீபுரம் அருகில் போய்க்கொண்டிருந்த போது செய்தி வந்துவிட்டது. ‘அம்மாவின் முகம் ரொம்பவும் அமைதியாக இருக்கிறது’ என்று அக்கா பிள்ளை சொன்னான். அவளது எல்லாக் கஷ்டங்களும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டன பிறகு அமைதி தானே!

 

‘நீ இப்படி எனக்காக ஓடி ஓடி வருகிறாயே!’ என்பாள் ஒவ்வொருமுறை நான் போகும்போதும். என்ன பலன்? அவளுடைய வலி, வேதனைகளை என்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லையே! நான் மாறனேர் நம்பி இல்லையே! பலமுறை இப்படி நினைத்து அவளுக்குத் தெரியாமல் அழுவேன்.

சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின

ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின

என்ற நம்மாழ்வாரின் வாக்குப்படி என் அக்காவிற்கும் பரமபதத்தில் வரவேற்பு கிடைத்திருக்கும். முமுக்ஷுக்களுக்கு (மோக்ஷத்தை விரும்பும் நாரணனின் பக்தர்கள்) கிடைக்கும் திரும்ப வர முடியாத உலகத்தில் என் அக்கா ரமாவிற்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும்.  அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று விரஜா நதியில் நீராடி வந்திருக்கும் அவளை நம்பெருமாள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு ‘ரொம்பவும் சிரமப்பட்டு விட்டாயோ?’ என்று முதுகை தடவி விட்டுக் கொண்டிருப்பார்.

 

இனி அவளுக்குப் பிறவி கிடையாது. இந்த ரஞ்சனியின் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்திருப்பாள் ரமா.

 

அதீதம் இதழில் படிக்க இங்கே

 

 

 

கார்த்திகையில் கார்த்திகை நாள் வந்துதித்தான்

இதை எழுதியவர் திரு ராஜசேகரன், வரவரமுனி சம்மந்திகள் சபை

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது. நள வருஷத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் பிறந்ததாக குறிப்புகள் உள்ளன. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக சோழ மன்னன் இவரைத் திருமங்கை என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.

ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லை
என்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள். எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச் சொத்து.

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.

கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும். அதற்கும் நேரமில்லாமல் பல உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறேன் என்று தப்பை ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன முதிர்ச்சி வேண்டும்.

மற்றொரு பாடலில் ஆழ்வார் தன் வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு வரிகளில் தருகிறார்.

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்

சின்ன வயசில் அறியாமையால் பல தீமைகள் செய்துவிட்டேன், பெரியவனானதும் மற்றவர்க்கு உழைத்து ஏழையாகிவிட்டேன் என்று ஒப்புக்கொள்ள யாருக்கு மனம் வரும்?

திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரை நம்மாழ்வாருக்கு அருகில் கொண்டு செல்கின்றன. நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார் _ முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப் பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க வைக்கும்.

வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார்
வனமுலைப் பயனே பேணினேன்…
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்

என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப் பேணியதற்கு நாணினேன் என்று  பல பாடல்கள் பாடியுள்ளார். இளம் வயதில் வாலிபமும் வீரமும் பொருந்திய இளைஞராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கையை ஒரு பெண் திசை திருப்பினாள். குளத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார். விசாரித்ததில் பெயர் குமுதவல்லி, திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகள் என்று தெரிந்தது. நீலன் இவளுடைய அழகால் கவரப்பட்டு வெள்ளக் குளத்திற்கு வந்து அவள் தந்தையிடம் ஆடை ஆபரணங்களைப் பரிசாக வைத்து இவளை எனக்குக் கட்டிக் கொடும் என்று கேட்டார்.

பெண்ணோ பிராமணப் பெண். இவர் கள்ளர் ஜாதி. இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார். பெண்ணைக் கேட்டதில் நான் ஒரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று சொல்லிவிட்டாள். அவ்வளவுதானே நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று என்னை பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார். திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; என்னை மணம் செய்வாய் என்று குமுதவல்லியிடம் கேட்க, அந்தப் பெண் இன்னொரு நிபந்தனை வைத்தாள். ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு சோறு போடச் சம்மதமா என்று கேட்டாள்.

பரகாலன் விரும்பினதை அடைந்தே தீர்பவர். பின்விளைவுகளை யோசியாமல் அதற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது. தினம் ஆயிரம் பேருக்கு சோறு போடும் செலவை சமாளிப்பது ஒரு குறுநில மன்னனுக்குக்கூட கஷ்டமாக இருந்தது. திருமங்கை மன்னன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய திறையையும் செலவழித்து விட்டார். அரசன் கோபங் கொண்டு அவரைக் கைது செய்ய காவலர்களை அனுப்ப, திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு அவர்களை அடித்து விரட்டிவிட்டார். அரசனுக்கு மேலும் கோபம் மூண்டது. ஒரு சைன்யத்தையே அனுப்பி அவரைத் தோற்கடித்துச் சிறை வைத்தார். திரையைக் கொடுத்தால் சிறையில்லை என்றார். திருமங்கை மன்னன் மந்திரியை என்னுடன் காஞ்சிக்கு அனுப்புங்கள், காஞ்சியில் பொருள் கிடைக்கும் என்றார். அரசனும் தன் மந்திரியை உடன் அனுப்ப காஞ்சிபுரத்துக்கு வந்தார். வேகவதி நதிக்கரையில் அவருக்குப் புதையல் கிடைத்தது. அரசனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்துவிட்டு மிச்சமுள்ள தனத்தை அன்னதானத்துக்கு வைத்துக் கொண்டார். அரசர் இவருடைய நேர்மையை வியந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். திருமங்கை மன்னன் தன் ததியாராதனப் பணியைத் தொடர்ந்தார். மீண்டும் பணத்தட்டுப்பாடு. பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார். வழிப்பறி! செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த அந்தக் காலத்து ராபின்ஹூட் அவர்… நான்கு தேர்ந்த கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார். அந்தப் பணத்தை வைத்து ஏழை வைணவர்களுக்கு சோறு போட்டார். இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார். புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள். இன்று நமக்கு பெரிய வேட்டை என்று அத்தம்பதியை சூழ்ந்து கொண்டு கழற்று எல்லா நகைகளையும் என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்.

நாளை தொடரும்…..

ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளி

படம் நன்றி கூகுள்

ஸ்ரீரங்கத்து வீடு

ஒருமுறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது என் அக்காவுடன் ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அக்கா அங்கே படித்துக் கொண்டிருந்தாள். மே மாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் போகும்போது கோடை விடுமுறையாக இருக்கும். ஒருநாள் என் அக்கா என்னிடம் ‘எங்கள் ஸ்கூலுக்கு வருகிறாயா?’ என்று கேட்டாள். மிகவும் மகிழ்ச்சியுடன் அவளுடன் போனேன். அவள் படித்துக் கொண்டிருந்த பள்ளியின் பெயர் ஸ்ரீரங்கம் கேர்ல்ஸ் ஹை ஸ்கூல். உள்ளே நுழைந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியில் என் அக்கா ஓரிடத்தில் நின்றாள். அண்ணாந்து பார்த்து என்னிடம் சொன்னாள்: ‘ இதோ பார், இவர் தான் நம் கொள்ளுத் தாத்தா. இவர் தான் இந்த ஸ்கூலை ஆரம்பித்தவர்’.

நான் அப்படியே ஸ்தம்பித்துப் போய் அந்தப் புகைப்படத்தையே பார்த்தபடி நின்றேன். அக்கா சொன்னதை உள்வாங்கிக் கொள்ளவே எனக்கு நேரம் ஆயிற்று. ஒரு பள்ளியை ஆரம்பிப்பதா? எத்தனை பெரிய காரியம்! அதைச் செய்தவர் என் கொள்ளுத் தாத்தா! நம்பவே முடியவில்லை. ‘நிஜமாவா?’ என்றேன். ‘இதற்கெல்லாம் யாராவது ஜோக் அடிப்பார்களா?’ என்றாள்.

ஸ்ரீரங்கம் என்கிற ஊர் எப்போதுமே ஒரு யாத்திரை ஸ்தலமாகவே அன்றும் இன்றும் அறியப்பட்டு வரும் நிலையில், நான்கு தலைமுறைகளுக்கு முன்பு ஒருவருக்கு அந்த ஊரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியது என்பது எத்தனை ஆச்சர்யமான விஷயம்! அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துவந்த போது. கிழக்கிந்திய கம்பனியின் கையிலிருந்த அதிகாரம் பிரிட்டிஷ் கைக்கு வந்து 38 வருடங்களே ஆகியிருந்த சமயம் அது. 1896 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீமான் ஆர். வீரராகவாச்சாரி அவர்கள் இந்தப் பள்ளிக்கு தனது சொந்த நிலத்தை கொடுத்தார். எனது கொள்ளுத் தாத்தா ஸ்ரீமான் திருமஞ்சனம் ராமானுஜ ஐய்யங்கார் கையில் சல்லிக்காசு இல்லை; அரசு இயந்திரத்திலும் அவருக்குத் தெரிந்தவர்கள் யாரும் அந்தநாளில் இருக்கவில்லை. ஆனாலும் பள்ளிக்கூட ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது ஆசையை எப்படியோ நிறைவேற்றிக் கொண்டார்.

‘க்வீன் விக்டோரியா கோல்டன் ஜுபிலி லோயர் செகண்டரி ஸ்கூல்ஸ்’ (Queen Victoria Golden Jubilee Lower Secondary Schools) என்ற பெயரில் ஸ்ரீரங்கத்திலேயே பல பள்ளிகளை ஆரம்பித்தார் ஸ்ரீமான் ராமானுஜ ஐய்யங்கார். ஆனால் பள்ளிகளுக்கு மாணவர்களின் சேர்க்கை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. ஊரில் நடந்து கொண்டிருந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஸ்ரீரங்கத்துக் குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்து, கணிதம் ஆகியவற்றை போதித்துக் கொண்டிருந்தன. அதிலிருந்து மாறி முழு நேரப் பள்ளி என்பது அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் கொள்ளுத் தாத்தா வீடு வீடாகச் சென்று தனது பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்த செய்கை ஊர்காரர்களுக்கு ‘இவர் எதற்கு இந்த வேண்டாத வேலையைச் செய்கிறார்’ என்ற எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கக்கூடும்!

இதையெல்லாம் எங்கள் தாத்தா ஸ்ரீமான் திருமஞ்சனம் ஸ்ரீனிவாச ஐய்யங்கார் தனது அழகான தொடர்சங்கிலிக்  கையெழுத்தில் தனது தந்தையைப் பற்றிய நெகிழ்வான  நினைவுகளாகப் பதிந்து வைத்திருக்கிறார். மாணவர்களின் சேர்க்கைப் பிரச்னையுடன் பள்ளியை நடத்துவதிலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் இனிய முடிவாக ஸ்ரீமான் சி.ஏ. கிருஷ்ணமூர்த்தி ராவ் என்பவர் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றார். ‘ஸ்ரீமான் ராவ் மிகச்சிறந்த கனவான்; ஒழுக்கத்திலும், அறிவிலும் கற்பிக்கும் முறையிலும் ஒப்பற்றவராக இருந்தது மட்டுமல்ல கவர்ந்திழுக்கும் ஆளுமையையும் கொண்டிருந்தார். பள்ளியை நிர்வகிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். எனது தந்தைக்கு வலது கையாக இருந்து பள்ளியை நடத்தினார். அவர் ஒரு சிறந்த ஆங்கிலக்கவி. பல கவிதைகளைப் புனைந்தவர். என் தந்தையை மிகவும் நேசித்ததுடன் தனது தந்தைக்கு நிகரான மரியாதையையும் அவருக்கு அளித்தார்’ என்று எங்கள் தாத்தாவின் குறிப்பு ஸ்ரீமான் சி.ஏ. கிருஷ்ணமூர்த்தி ராவ் பற்றிக் கூறுகிறது. இவரே பிற்காலத்தில் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளிக்கு மாறி, பிறகு சென்ட்ரல் ஹிந்து கல்லூரி, மதுரையில் சரித்திர உதவி விரிவுரையாளராகவும் இருந்தார்.

எங்கள் கொள்ளுத் தாத்தா 1912 ஆம் ஆண்டு பரமபதித்தார். அவரது பள்ளிகள் எல்லாம் அப்போதைய பள்ளி இயக்குனர் ஸ்ரீ பென்னிங்க்டன் என்பவரது சிபாரிசினால் 1909 ஆம் ஆண்டு தி ஹை ஸ்கூல் ஆப் ஸ்ரீரங்கம் என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன. அந்தப் பள்ளியின் வளர்ச்சியைப் பார்க்க எங்கள் கொள்ளுத் தாத்தாவிற்கு ஆயுசு இருக்கவில்லை.

தன் தந்தையைப் பற்றி எங்கள் தாத்தா எழுதிய குறிப்பிலிருந்து மேலும் சிலவரிகள்: ‘எனது தந்தை கையில் காசில்லாமலேயே தனது வாழ்க்கையைத் துவங்கினார். தனது நேர்மை, திறமையுடன் கூடிய நன்முயற்சிகள், ஒழுக்கமான நடவடிக்கை முதலியவற்றால் இந்த உலகத்திலும், தன் மாணவர்களின் இதயங்களிலும்  ஒரு மிக உயரிய இடத்தையும் பிடித்தார். அவரது அயர்வில்லாத காலநேரம் பார்க்காத உழைப்பு, அவரைச் சோர்வடையச் செய்து அவரது ஆயுளை அகாலத்தில் முடித்துவிட்டது. தனது 49வது வயதில் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் திருவடி நீழலை அடைந்தார். கடைசி நாட்களில் ஆழ்வார்களின் ஈரச்சொற்களைக் கொண்டு பெருமாளின் திருநாமங்களை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தார். தனது இரு மகன்களுடன் கூடப் பெருமாளையும் தனது மூன்றாவது குழந்தையாகவே நினைத்து வாழ்ந்தார்’.

இந்தத் தகவல்கள் எனது மாமா திருமஞ்சனம் சுந்தரராஜன், ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழா மலரில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு

பின் குறிப்பு:

நீண்ட நாட்களுக்குப் பின் ஸ்ரீரங்கத்து வீடு தொடர்ந்து எழுதுகிறேன். இந்த விவரங்களைச் சேகரிக்க எனக்கு நேரம் தேவைப்பட்டது. இனி இந்தத்தொடர் தொய்வின்றி தொடரும்…பெரிய பெருமாள், நம்பெருமாள் அருளாலே.

வாசகர் கடிதம் – மின்னூலை எதிர்நோக்கி……

writer

மனதில் உற்சாகம் குறையும் போதெல்லாம் இது போல ஒரு கடிதம் வந்து என்னை உயிர்ப்பிக்கிறது. நன்றி ஸ்ரீவித்யா!

Hi Ranjani madam,

Good evening. I love reading your blog posts and never miss one though it may take time for me to complete.

I’ve been reading your blog and posts in ‘fourladiesforum’ since last year. I found the child care articles very practical and useful to myself ( mom of 2 yrs kid). I’ve suggested them to my friends who are new moms. But I dint see anyone reading online. If செல்வ களஞ்சியமே is published as book I will definitely purchase and gift them to my friends.

Apart from that, my mom in law loved reading your ariyalur adukku dosai posts though she found it difficult reading in the blog site. Later, when it was published as eBook I felt happy that it will be easy for sharing to elder people. Eagerly waiting for more ebooks on serial posts like srirangam memories.

Wishing you all success and happiness.

Thanks and regards,
Srividhya

PS: this mail was drafted on 20th Aug. But when I tried sending the same it was not delivered. Then I learnt a basic thing that the replies to new blog post mails go to comment box and since this is a long message it could not be posted. Later, I was searching for your mail I’d in the WordPress blog and finally found the same in …… and thus sending this mail. Please bear with my English.

செல்வ களஞ்சியமே புத்தகமாக வர வேண்டும் என்று எனக்கும் ஆசை இருக்கிறது. நான்குபெண்கள் தளத்திலும் அதைப் புத்தகமாகக் கொண்டு வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எப்போது என்று தெரியவில்லை. இப்போதைக்கு மின்னூல் ஆக வெளியிடும் எண்ணம் எனக்கு இருக்கிறது. கூடிய விரைவில் செயல் படுத்துகிறேன்.

செல்வ களஞ்சியம் தொடரின் முதல் ஐம்பது பகுதிகள் ப்ரதிலிபி என்ற இணைய தளத்தில் வெளிவந்திருக்கிறது.  இணைப்பு இதோ: செல்வ களஞ்சியம் – முதல் பகுதி

ஸ்ரீரங்கத்து வீடு – கொள்ளுப்பாட்டியும், கொள்ளுத் தாத்தாவும்

ஸ்ரீரங்கத்து வீட்டை மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் இந்த வீட்டின் நாயகி ஸ்ரீரங்கம்மாவைப் பார்த்துவிடலாம். தாத்தா பெயர் திருமஞ்சனம் ராமானுஜம் ஸ்ரீனிவாச ஐய்யங்கார். திருமஞ்சனம் எனும் குடும்பப்பெயரானது உடையவரின் காலத்திலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. திருமஞ்சனம் என்பது ஸ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கு செய்விக்கப்படும் புனித நீராடலைக் குறிக்கிறது. இந்தக் குடும்பத்தின் முன்னோர்களுள் ஒருவரான திருவரங்கவள்ளலார்  என்பவர் எம்பெருமானாரால் பெருமாளின் திருமஞ்சனக் கைங்கர்யம் செய்ய பணிக்கப் பட்டவர். திருக்கரகக்கையார் என்று இவரை கூப்பிடுவது வழக்கம். ஐய்யங்கார் என்பதற்கு ஐந்து அங்கம் கொண்ட ஸம்ஸ்காரம் செய்து கொண்டவர்கள் என்று பொருள்.

 

பாட்டி அவளது பெற்றோருக்கு ஒரே பெண். கூடப்பிறந்தவர்கள் யாரும் கிடையாது. என் அம்மா அடிக்கடி – இப்போது கூட சொல்லும் விஷயம் ஒன்று இங்கு நினைவிற்கு வருகிறது. சிறுவயதில் என் அம்மாவிற்கு ‘மாமா’ என்று ஒரு உறவு முறை இருப்பதே தெரியாதாம். மாமா மாமி எல்லாம் அயலகத்தவர்களை அழைக்கும் சொற்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தாளாம். ஒருமுறை அம்மாவின் சிறுவயதுத் தோழி தன வீட்டிற்கு தனது மாமா வந்திருப்பதாகக் கூறியதை அம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லையாம். தன் அம்மாவிடம் வந்து கேட்டபோது தான் தாயின் கூடப் பிறந்தவர்கள் மாமாக்கள் என்று தெரிந்து கொண்டாளாம்.

 

ஸ்ரீரங்கத்து வீடு என் பாட்டிக்கு அவளது பெற்றோர்களால் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. பாட்டியின் குழந்தைகள் யாருமே இந்த வீட்டில் பிறக்கவில்லை. தாத்தாவிற்கு மாற்றல் வேலையாதலால் குழந்தைகள் வேறு வேறு ஊரில் பிறந்தவர்கள். ஆனால் நாங்கள் – பாட்டியின் பெண் வயிற்றுப் பேரன் பேத்திகள் – இந்த வீட்டில் பிறந்தவர்கள் என்பதில் எனக்குப் பெருமை அதிகம்.

 

என்னைவிட நன்றாக ஸ்ரீரங்கம் பற்றியும், எங்கள் பாட்டி பற்றியும் எழுதக் கூடிய பாட்டியின் மற்ற பேரன்கள், பேத்திகள் இருக்கிறார்கள். ஆனால் ஏனோ அவர்களுக்கெல்லாம் இந்த விஷயங்களைப் பற்றி எழுத முயற்சி இல்லை. எனக்கும் ஸ்ரீரங்கத்திற்குமான தொடர்பு கோடை விடுமுறையின் இரண்டு மாத காலம் மட்டுமே. அப்போது நான் பார்த்த நிகழ்வுகளை மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன். அவற்றைத் தவிர என் அம்மா அவ்வப்போது எங்களுக்குச் சொன்ன விஷயங்களையும் எழுதுகிறேன்.

 

பாட்டி ஒரே பெண்ணாக இருந்தும் பாட்டிக்கு மக்கள் செல்வத்திற்கு பெருமாள் எந்தக் குறைவும் வைக்கவில்லை. தாத்தாவைப் பற்றி அதிகம் தெரியாது. நிறையப் படித்தவர் – கல்லூரி படிப்பு என்பதைத் தாண்டி புத்தகங்களை நேசித்தவர். தாத்தா பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு கோட் போட்டுக்கொண்டு தலையில் தொப்பியுடன், கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் உட்கார்ந்திருக்கும் போட்டோ ஒன்று எங்கள் குடும்ப ஆல்பத்தில் இருக்கிறது. நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் துலங்கும் கம்பீரமான உருவம். நல்ல லட்சணமான முகம். அந்தக் கால வழக்கப்படி கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருப்பார்.  பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகள் கூட அந்தக் காலத்தில் தொப்பி போட்டிருப்பார்கள். எங்கள் முன்னோர்கள் சிலரின் புகைப்படங்களில் அவர்கள் தொப்பி அணிந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த நாளைய Fashion Statement!

 

இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் ஆகவும், மிகச் சிறந்த ஆசிரியராகவும் இருந்தவர் தாத்தா என்று அம்மா, மாமாக்கள் சொல்லுவார்கள். அருணாச்சல கவிராயரின் இராமநாடகப் பாடல்களை இராகத்துடன் தாத்தா பாடுவார் என்று என் அம்மா சொல்வாள். அம்மாவும் அந்தப் பாடல்கள் பலவற்றைப் பாடுவாள். திருமூலரின் திருமந்திரங்கள் புத்தகத்தையும் தாத்தா படித்ததற்கு அடையாளமாக அங்கங்கே கோடிட்டும், பக்கங்களில் எழுதியும் வைத்திருப்பாராம். ஆனால் தாத்தாவின் தொழிலான ஆசிரியர் தொழிலை அவரது பிள்ளைகள் யாரும் பார்க்கவில்லை. பல வருடங்கள் கழித்து நான் ஆங்கிலம் பேசச் சொல்லித் தரும் ஆசிரியை ஆனபோது என் அம்மா சொன்னாள்: ‘என் அப்பாவிற்குப் பிறகு நீதான் நம்மாத்தில் ஆசிரியை ஆகியிருக்கிறாய்’ என்று.

 

தாத்தாவிற்கு நேரம் கிடைக்கும்போது குழந்தைகளை அழைத்துக் கொண்டு நீள நடந்து போவாராம். நடந்து போகும்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுப்பாராம். தாத்தாவின் அம்மா (எங்கள் கொள்ளுப்பாட்டி) நெடுநாட்கள் நீண்ட ஆயுளுடன் எங்கள் பாட்டியுடன் இருந்திருக்கிறார். பளிச்சென்று இருப்பாராம் இந்தப் பாட்டி. ஆனால் இவருக்கு ஸ்ரீரங்கத்தில் கருப்பச்சிப் பாட்டி என்று பெயராம். இந்தப் பாட்டியிடமிருந்துதான் நறுவிசு தங்களுக்கு வந்திருப்பதாக அம்மா சொல்லுவாள். கொள்ளுப்பாட்டி ரொம்பவும் அப்பாவியாம். சூது வாது தெரியாதவர்; புடவையில் ஏதாவது மறைத்து எடுத்துக்கொண்டு போனால் கூட என்னவென்று கேட்க மாட்டார் என்று அம்மா நிறைய சொல்லுவாள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் இந்தப் பாட்டிக்கு நிகர் யாருமில்லை என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பாள் அம்மா. என் அம்மா தன சிறு வயதில் கணவனை இழந்த எங்கள் பாட்டிக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இந்தப் பாட்டி இருந்திருக்கிறார். மிகச் சிறந்த மாமியாராக இருந்திருக்கிறார்.

 

குழந்தைகளை அப்படிப் பார்த்துக் கொள்வாராம் கொள்ளுப்பாட்டி. நிறைய பாடல்கள், கதைகள் சொல்லி விளையாட்டுக் காண்பிப்பாராம். குழந்தைகளுக்கு இரண்டு மூன்று வயதிற்குள் எண்ணுவதற்கு, கூட்டுவதற்கு, கழிப்பதற்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து விடுவாராம் பாட்டி. தமிழில் ‘அ, ஆ’ தொடங்கி, அ,ம்,மா=அம்மா என்று சொல்லிக் கொடுப்பாராம். அதேபோல க,ஞ, ச,ங வும் சொல்லிக் கொடுத்து விடுவாராம். இந்தப் பாட்டிக்கு இரண்டு பிள்ளைகள். எங்கள் தாத்தா, அவரது அண்ணா. கோர்ட்டில் ஜட்ஜ் ஆக இருந்ததால், கோர்ட் அண்ணா அவர். கணவனை இழந்து, இரண்டு பிள்ளைகளையும் இழந்து ரொம்பவும் துக்கப்பட்டிருக்கிறார் இந்தப் பாட்டி.

 

எங்கள் கொள்ளுத் தாத்தாவைப் பற்றிய ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் நாளை சொல்லுகிறேன்.

 

செல்வ களஞ்சியமே 100

twins 1

சமீபத்தில் புனே சென்றிருந்தபோது உறவினர் வீட்டில் ஒரு இரண்டு வயது, இல்லை இன்னும் கொஞ்சம் பெரியதாகவோ ஒரு  குழந்தை. ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் அது படுத்திய பாடு! பாவம் அந்தக் குழந்தையின் பின்னால் ஆறு பேர்கள்! குழந்தையின் அப்பா, அம்மா, அம்மாவின் அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா அப்பா! ‘சாப்பிடு! சாப்பிடு!’ என்று சாப்பாட்டு வேளையை வியர்த்து வழிய வழிய ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடவே மாட்டேனென்கிறான்’ என்று எல்லோரிடமும் தாத்தா பாட்டிகள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

‘அப்பளாம், அப்பளாம்’ என்றால் வாயைத் திறக்கும். அப்பளத்தை குழந்தையின் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு கீழே சாதத்தை மறைத்து ஊட்டுவாள் அந்தப் பெண். இரண்டு முறை அப்படி சாப்பிட்ட அந்தக் குழந்தை மூன்றாவது முறை உஷாராகிவிட்டது. சாப்பிட மறுத்துவிட்டது. இப்போது அதற்கு வேறு ஏதாவது காண்பிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை பெரிய மனஅழுத்தம் கொடுக்கும் விஷயமாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது. அந்த பெண் வேலைக்குப் போகிறவள். அவளுக்கு அலுவலக நாட்களில் சீக்கிரம் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அதை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டுப் போகவேண்டிய கட்டாயம். இப்போது லீவு தானே நிதானமாக வேலைகளைச் செய்யலாம் என்றால் குழந்தையின் சாப்பாட்டு வேளை நாள் முழுவதும் அவளை உட்காரவிடாமல் செய்கிறது, என்ன செய்ய? இந்தச் சின்னக் குழந்தையை கையாள பெரியவர்களால் முடியவில்லையா?

 

baby creeping

தட்டு நிறைய சாதத்தை வைத்துக்கொண்டு குழந்தையின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அவளைக் கூப்பிட்டேன். ‘இதோ பாரும்மா! முதலில் நீ இத்தனை சாதத்தைக் கொண்டு வராதே. நாலே நாலு ஸ்பூன் கொண்டுவா. குழந்தை அதை சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் நாலு ஸ்பூன் கொண்டுவா. முதல் நாலு ஸ்பூன் குழந்தையின் வயிற்றினுள் போனாலே உனக்கு சந்தோஷமாக இருக்கும். நீ கொண்டு வந்ததை குழந்தை சாப்பிட்டுவிட்டது என்று சந்தோஷம் கிடைக்கும். நீ இத்தனை சாதத்தை ஒரேயடியாகக் கொண்டு வந்தால் குழந்தையின் வயிற்றில் எத்தனை போயிற்று என்று தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தைப் பார்த்து குழந்தை சாப்பிடாததுபோல உனக்குத் தோன்றும்’ என்றேன். நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு ரசிக்கவில்லை. ‘எத்தனை முறை மாமி திரும்பத் திரும்ப சாதம் கலப்பது?’ என்று அலுத்துக் கொண்டாள். அவள் அம்மாவிற்கு நான் சொன்னது ரொம்பவும் பிடித்துவிட்டது. ‘சாப்பிடலை சாப்பிடலை என்று நொந்து கொள்வதைவிட நாலு ஸ்பூன் உள்ள போச்சே என்று சந்தோஷப்படலாம் அது அவளுக்குப் புரியவில்லை, பாருங்கோ’ என்றார் என்னிடம்.

 

‘ரயில் பயணங்கள்’ பாதியில் நிற்கிறது; ஸ்ரீரங்கத்து வீட்டுப் புழக்கடையில் நின்று கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போ என்ன குழந்தைக்கு சாதம் ஊட்டுவது பற்றி பேச்சு?

 

நான் நான்குபெண்கள் தளத்தில் எழுதிவந்த செல்வ களஞ்சியமே நூறாவது வாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது.  என்னை குழந்தைகள் வளர்ப்புப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்புப் பற்றி என்று ரொம்பவும் யோசித்தேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என்றவுடன் உற்சாகமாக ஆரம்பித்தேன். என்னுடன் கூட டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் சேர்ந்து கொண்டார். படிக்கும் செய்திகள், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்.

 

சமீபத்தில் ஒரு வாசகி இந்தத் தொடர் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். திருமதி ஆதி வெங்கட் ஸ்ரீரங்கத்தில் பார்த்த போது அதையே சொன்னார். முதல் வேலையாக மின்னூல் ஆக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டு பாகமாக வரும். இந்தத் தொடரைப் படித்து பயனுள்ள கருத்துரைகள் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

 

எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நான் எழுதுவதை அப்படியே பிரசுரம் செய்த நான்குபெண்கள் ஆசிரியை திருமதி மு.வி. நந்தினிக்கு சொல்லில் அடங்காத நன்றி. நடுவில் என்னால் எழுத முடியாமல் போனபோது மிகுந்த பொறுமையுடன் நான் திரும்பி வரக் காத்திருந்தது மிகப்பெரிய விஷயம்.

உடல் நலக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ அடுத்த இதழிலிருந்து தொடரும்.

எனது இந்த சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்து கொள்ள முடியும்? இந்தக் கட்டுரையைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்களது தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.

 

இன்னொரு சந்தோஷச் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதீதம் இணைய இதழில் எனது தொடர் ‘எமக்குத் தொழில் அசைபோடுதல்’ நாளையிலிருந்து ஆரம்பமாகிறது. எல்லோரும் படித்து இன்புற்று கருத்துரை இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஸ்ரீரங்கத்து வீடு

IMG_20130221_145709

 

இது ஸ்ரீரங்கம் வீடு அல்ல. சிவராமபுரம் வீடு.

 

எங்கள் ஸ்ரீரங்கத்து அகம் பேரன் பேத்திகள் நிறைந்து இரண்டு பட்டுக் கொண்டிருக்கும். காலையில் எங்களுக்கு சாதேர்த்தம் (இரவு சாதத்தில் நிறைய நீர் ஊற்றி வைத்துவிட்டு, காலையில் அதில் உப்பு, மிளகாய், நிமிண்டிப் போட்டு கூடவே பெருங்காயம் போட்டு டம்ப்ளரில் கொடுப்பாள் பாட்டி – இது தான் சாதம்+ தீர்த்தம் = சாதேர்த்தம்)  தான் காலை சிற்றுண்டி.  சாதேர்த்தம் இல்லை அது அமிர்தம்! ‘கம்’மென்று வயிறு நிரம்பிவிடும்.

 

பாட்டியின் அகம் பெரியது. இந்தக் காலத்தைப் போல அறைகள் இருக்காது. அத்தனை பெரிய வீட்டில் ஒரே ஒரு அறை தான் – காமிரா உள். வேறு அறைகள் கிடையாது. வாசலிலிருந்து வரலாம், வாருங்கள். வாசலில் நுழைந்தவுடன் இடது பக்கம் மிகப்பெரிய திண்ணை. திண்ணையின் ஒரு பக்கம் பாதித் திண்ணைக்கு வெய்யில் வராமல் மூங்கில் தட்டி போட்டிருக்கும். இப்போது நாம் ‘ஜாலி’ என்கிறோமே, அது போல. திண்ணையில் தலைகாணி போல ஒரு அமைப்பு. ‘சாய்வு’ என்பார்கள் அதை. அங்கிருந்தே மாடிக்கு ஒரு மரப்படி போகும். இடது பக்கத் திண்ணை போலவே வலது பக்கத்திலும் ஒரு சின்ன திண்ணை. சும்மா உட்காரலாம், அவ்வளவுதான். திண்ணை உலர்ந்த தென்னங்கீற்றுகளால் மூடப்பட்டிருக்கும். சிலசமயம் இந்தக் கீற்றுகளை மாற்றுவார்கள். ரொம்பவும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருப்போம், கீற்றுகள் அடுக்கப்படுவதை.

 

எங்களின் பகல் பொழுதுகள் இந்தத் திண்ணையில் தான். பாட்டியின் அகத்தில் நிறைய புளியங்கொட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். திண்ணை முழுக்க இவைகளைப் பரப்பி, கொந்தி கொந்தி விளையாடுவோம். ஐந்துகல் விளையாட்டும் உண்டு. ஆடுபுலி ஆட்டம்; தாயம் பரமபதம் என்று எல்லா உள்அரங்கு விளையாட்டுகள் பகல் பொழுதில். சாயங்காலம் கிட்டிபுள், கோலி பம்பரம் என்று வெளியரங்கு விளையாட்டுக்கள் வாசலில். ஏழெட்டு வயது ஆகிவிட்டால் என் பெரியம்மா பிள்ளை சைக்கிள் விடச் சொல்லிக் கொடுப்பான். விழுந்து எழுந்து விடுமுறை முடிவதற்குள் கற்றுக்கொண்டு விடுவோம். நான் தான் சைக்கிள் விட சரியாகக் கற்றுக்கொள்ளாத ஆள். பிற்காலத்தில் இருசக்கர வண்டி விட ரொம்பவும் திண்டாடினேன் அதனால்.

 

திண்ணையைத் தாண்டி உள்ளேபோனால் சின்னதாக தாழ்வாரம். இங்குதான் கயிற்றுக்கட்டில்கள்  வைக்கப்பட்டிருக்கும். இரவு வெளியே எடுக்கப்பட்டு வாசலில் போடப்பட்டு நாங்கள் இதன் மேல் படுத்துக் கொள்வோம். ஆஹா! வானத்தில் மினுமினுக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி ரொம்ப நேரம் கதை பேசுவோம். எப்போது தூங்கினோம் என்றே தெரியாது. நடு இரவில் சிலசமயம் குளிரும். அப்போது எழுந்து திண்ணையில் படுத்துக்கொள்வோம்.

 

தாழ்வாரத்தில் இடது பக்கம் வாசப்பக்கத்து உள். அது எப்போதும் பூட்டியே இருக்கும். இந்தப் பூட்டு இந்த தலைமுறைகளுக்கு தெரியாத ஒன்று. இந்த உள்ளிற்கு இரண்டு கதவுகள் ஒரு கதவு முதலில் சாத்தப்பட்டு மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள் போடப்படும். பிறகு இன்னொரு கதவும் சாத்தப்படும். இந்தக் கதவின் மேல் புறத்தில் ஒரு சங்கிலி இருக்கும். கதவின் நிலையில் ஒரு கொக்கி இருக்கும். சங்கிலியை இந்தக் கொக்கியில் போட்டு பிறகு பூட்டுப் போடுவார்கள்.

 

தாழ்வாரத்தைத் தாண்டினால் பெரிய கூடம். கூடத்தில் இரண்டு தூண்கள். தூண்களுக்கு அந்தப் பக்கம் ஊஞ்சல். புளியங்கொட்டை, பல்லாங்குழி ஆட்டங்கள் அலுத்துவிட்டால் ஊஞ்சல் ஆட வந்துவிடுவோம். ஊஞ்சல்தான் ரயில் வண்டி. அதில் உட்காருபவர்களுக்கு எந்த ஊர் என்று கேட்டு மாமாக்கள் சேர்த்து வைத்திருக்கும் ரயில் டிக்கட்டுகளை விநியோகிப்போம். நடுவில் ஸ்டேஷன்கள் வரும் அப்போது நிறுத்தி என் கடைசி மாமா ‘பஜ்ஜி, போண்டா, முறுக்கு, வடை!’ என்று  விற்றுக்கொண்டு வருவார். இதுவரை நாங்கள் சீரியஸ் ஆகக் கேட்டுக் கொண்டு வருவோம். உடனே ‘தண்ணிக் காபி, தண்ணிக் காபி, கடுப்பு டீ’ என்று குரல் கொடுப்பார். கிளுகிளுவென்று சிரிப்போம் நாங்கள்.

 

ஊஞ்சல் பற்றியே ஒரு பதிவு முழுக்க எழுதலாம். நாங்கள் எல்லோரும் அதில் உட்கார்ந்துகொண்டால் என் மாமாக்களில் ஒருவர் அந்த ஊஞ்சலை ஒரு பக்கத்து உச்சிக்குக் கொண்டுபோய் சட்டென்று விட்டுவிட்டு பக்கத்தில் ஒதுங்கி விடுவார். அந்த ஊஞ்சல் கீழே வரும் வேகத்தில் நாங்கள் ‘ஓ’ என அலறுவோம். சிலசமயம் அவரும் ஓடிவந்து ஏறிக்கொள்ளுவார்.

 

எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவோம். ஆளாளுக்கு ஒவ்வொன்று கேட்போம் – பாட்டி சா போ சா (சாதம் போட்டு சாத்தமது) சா போ கு, சா போ மோ என்று. பாட்டி பாவம் எங்களை சமாளிக்க முடியாமல் எல்லோரும் ஒண்ணா கேளுங்கோ என்பாள். அவ்வளவுதான். சா போ சா என்று கோரஸ் ஆகக் கத்துவோம். பாட்டி ‘முதல் பசி ஆறித்தா? பேசாமல் இருக்கணும்’ என்பாள். தட்டை எடுத்துப் போவதற்கு முன் கட்டாயமாக தட்டை சுற்றி நீர் சுற்ற வேண்டும். அப்போதுதானே எச்சில் பிரட்ட உதவும்? சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே யாராவது ஒருவர் ‘லொடக்’ என்று தீர்த்தத்தைக் கொட்டுவோம். அது அப்படியே இன்னொருவர் தட்டு வரை ஓடும். சாப்பிடும் நேரம் அமர்க்களம் தான். பாட்டி எங்களை எதற்காகவும் கோபிக்கவே மாட்டாள்.

 

இப்படியிருக்கும் பாட்டி ஒருநாள் மட்டும் ‘வில்லி’யாக மாறிவிடுவாள். விளக்கெண்ணை போட்டும் நாள் தான் அது. முதல் நாள் இரவே எங்களிடம் சொல்லிவிடுவாள் பாட்டி: நாளைக்குக் காலை காபியில் விளக்கெண்ணை கலந்து கொடுக்கப்படும் என்று. நாங்கள் எல்லோருமே இஞ்சி தின்ற ஏதோ போல அன்றைக்கு படுக்கப் போவோம். எல்லோருக்குமே தெரியும் பாட்டியிடமிருந்து தப்ப முடியாது என்று. ஆனால் என் சகோதரன் இரவே அழுது அடம் பிடிக்க ஆரம்பிப்பான். ‘நாளைக்குத் தானே இன்னிக்கே ஏன் அழற?’ என்று அவனை சமாதானப் படுத்துவோம். அழுது கொண்டே தூங்கப்போவான். தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘நான் இன்னிக்கே ஊருக்குப் போறேன்’ என்பான். ‘விடிஞ்சதும் விளக்கெண்ணை குடித்துவிட்டு நீ கிளம்பு’ என்பாள் பாட்டி விடாக்கண்டனாய்.

அடுத்த நாள் விடியும்……….கூடவே என் சகோதரனின் அழுகையும் ஆரம்பிக்கும் !

நாளை க்ளைமாக்ஸ்!