வாங்க, வாங்க! போட்டிகளில் கலந்து கொள்ளுங்க! பரிசுகளை வெல்லுங்க!

 மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015

“வலைப்பதிவர் திருவிழா-2015புதுக்கோட்டை“

“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“

…இணைந்து நடத்தும்…

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!

முதல் பரிசு ரூ.5,000

இரண்டாம் பரிசு ரூ.3,000

மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்

“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்

மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!

இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

————————————

போட்டிகளுக்குரிய பொருள் (Subject) மட்டுமே தரப்படுகிறது
(அதற்குப் பொருத்தமான தலைப்பை எழுதுவோர் தரவேண்டும்)

வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி – கட்டுரைப் போட்டிகணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் – ஏ4 பக்க அளவில் 4 பக்கம் – இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – கட்டுரைப் போட்டிசுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் – ஏ4 பக்க அளவில் 4 பக்கம் – பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் – கட்டுரைப் போட்டிபெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், – ஏ4 பக்க அளவில் 4 பக்கம் – தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டிமுன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை – 25 வரிகளில் – அழகியல் மிளிரும் தலைப்போடு…

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டிஇளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் – அழகியல் ஒளிரும் தலைப்போடு…

போட்டிக்கான விதிமுறைகள் :

(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு 11.59க்குள்)
(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com
(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.

(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.

(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.

சந்தோஷமோ சந்தோஷம்!

 

காலையிலேருந்து எனக்கு சந்தோஷமோ சந்தோஷம்! எனக்கு வந்த ஒரு இமெயில் தான் என்னோட இத்தனை சந்தோஷத்திற்குக் காரணம் அப்படின்னா நீங்க நம்பணும், சரியா?

 

வயசாச்சுன்னா பாசஞ்ஜர் வண்டி மாதிரி மெதுவா ஆயிடறாங்க; அந்த வண்டி எப்படி ஒரு ஸ்டேஷன் விடாம நின்னு நின்னு மெதுவா போறதோ அதேபோல இவங்களும் ஒவ்வொண்ணுக்கும் நின்னு நின்னு மெதுவா யோசிச்சு யோசிச்சு….ஆ!  தாங்க முடியலடா சாமீ! ஆமை கூட இவங்களை தோற்கடிச்சுடும் அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க, இல்லையா? அது ஏன் அப்படின்னு அதாவது வயசானவங்க ஏன் slow coach ஆகறாங்கன்னு  ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. அதுல என்ன தெரிஞ்சுது அப்படின்னா வயசானவங்க புத்திசாலித்தனத்துல குறைஞ்சு போயிடறது இல்ல; அவங்க புத்தி கெட்டுப் போறதில்ல; அவங்களோட மூளையில எக்கசக்கமாக விவரங்கள் குமிஞ்சு கிடக்கறதால அவங்க யோசிக்க கொஞ்சம்(!!) அதீ…………..க நேரம் எடுத்துக்கறாங்க, அவ்வளவுதான். இத நான் சொல்லல. விஞ்ஞானிகள் ஆதார பூர்வமா சொல்றாங்க. என்ன ஆதாரம் அப்படின்னு கேட்கறவங்களுக்கு:

 

உங்களோட கணனி ஹார்ட் டிரைவ் ல விவரங்கள் அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிட்டால், அது எப்படி நீங்க கேட்கிற தகவலை எடுத்துக் கொடுக்கத் திணறுதோ அதேபோலத் தான் வயசானவங்களும். அவங்களோட மூளை தகவல்களால் நிரப்பப்பட்டு விடுவதால் நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதிலை தேட நேரம் எடுத்துக்கறாங்க. இத நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு, ‘வயசானாலும் ‘கெத்து’ போகல பாரு. ரத்தம் சுண்டிப் போனாலும் கொழுப்பு அடங்கல பாரு’, கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா என்ன? வாயில கொழுக்கட்டையா?’ அப்படின்னு எடுப்பு எடுக்கக்கூடாது.

 

இந்த மெத்தனம் புலனுணர்வு மெத்தனம் அல்ல. மனித மூளை வயதான காலத்தில் மெதுவாக வேலை செய்யக் காரணம் நாங்கள் அதிக அதிக விவரங்களை பலபல வருடங்களாக சேமித்து சேமித்து வைத்துக் கொள்ளுகிறோம். எங்களது மூளைகள் பலவீனமடைவதில்லை. மூளை மழுங்கி போச்சு, மூளைய கழட்டி வச்சுட்டீங்களா? ன்னு குத்தம் சொல்லக்கூடாது. இதற்கு நேர்மாறாக எங்களுக்கு அதிகம் தெரியும். அதிலேருந்து நீங்க கேட்குற ‘தம்மாத்துண்டு’ விவரத்த எடுத்துக் கொடுக்க வேணாமா? அது என்ன அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? அதான் லேட் ஆகிறது. அவ்வளவுதான்.

 

அதேபோல இன்னொன்று நாங்க திடீர்னு எழுந்து இன்னொரு அறைக்கு கனகாரியமாகப் போவோம். அங்கு போனவுடன் எதற்கு அங்கு வந்தோம் என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மூளையை கசக்கிக் கொண்டு நிற்போம். நினைவிற்கே வராது. எதற்கு இங்கு நிற்கிறோம் என்று வியப்பாகக் கூட இருக்கும். முதல்ல உட்கார்ந்திருந்த இடத்துக்கு திரும்பி வந்தவுடனே ‘பளிச்’ என்று பல்பு எரியும். மறுபடி எழுந்து போய் அந்த வேலையை முடிச்சுட்டு வருவோம். இதற்குப் பெயர் ஞாபகமறதி இல்லை. இயற்கையே எங்களை அதிக உடற்பயிற்சி செய்ய வைப்பதற்காக ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் இது. புரிகிறதா?

 

அதான்!

 

இந்த செய்தியை என்னோட எல்லா  நண்பர்களுக்கும் அனுப்ப ஆசைப்படுகிறேன். இதைப் படிச்சுட்டு அவங்களும் என்ன மாதிரியே சந்தோஷப்படுவாங்க இல்லையா? ஆனா எனக்கு அவா அத்தனை பேர்களோட பேரும் உடனே நினைவுக்கு வரல; அதனால ஒரு சின்ன உதவி பண்ணுங்களேன். உங்கள் நண்பர்களுக்கு இத அனுப்பிடுங்கோ. அவங்கள்ளாம் என்னோட நண்பர்களாகவும் இருக்கலாம், இல்லையா?

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் சினேகிதி ஜூலை 2015 இதழில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை இது.