
ஐந்தாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த (இப்போது இருக்கிறதா?) கனகவல்லி எலிமெண்டரி பள்ளியில் படித்தேன். என்னுடன் கூட ஒரு பிரபல குழந்தை நட்சத்திரமும் படித்தார் அதே பள்ளியில். ‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’ பாடிய குட்டி பத்மினி தான் அந்த குழந்தை நட்சத்திரம்!
இப்போது புரிகிறதா என் பாபுலாரிடிக்குக் காரணம்?
முதல் வகுப்பு ஆசிரியை தர்மு என்கிற தர்மாம்பாள். வாரத்திற்கு ஒருமுறை வீட்டை ஒட்டடை அடித்து, ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து வீட்டை ‘பளிச்’சென்று வைத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் வகுப்பிலேயே எங்கள் பிஞ்சு மனதில் ஏற்றியவர்.
ஆறு, ஏழாம் வகுப்புகள் அங்கிருந்த ஒரு அரசு நடுநிலை பள்ளியில் படித்தேன். இந்தப் பள்ளியில் இருந்த பாட்டு ஆசிரியையும், (பெயர் மறந்து விட்டது. மன்னித்துவிடுங்கள் டீச்சர்) ஆங்கில ஆசிரியையும் (திருமதி கனகவல்லி) என்னால் மறக்க முடியாதவர்கள்.
‘தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்கொரு குணம் உண்டு’,
‘சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே?’
‘மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே, ஒரு வெள்ளிவோடம் போல வரும் வெண்ணிலாவே’ (இந்தப் பாட்டிற்கு கோலாட்டம் ஆடுவோம்) போன்ற அதி அற்புதமான பாடல்களை நான் கற்றது இந்த பாட்டு ஆசிரியையிடம் தான்.
அவரே எங்கள் பள்ளியின் ‘ப்ளூ பேர்ட்’ (Blue bird) என்ற – கிட்டத்தட்ட ஸ்கௌட் போன்ற ஒரு அமைப்பிற்கும் ஆசிரியை. இந்த அமைப்பின் பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை அழகாகத் தமிழ் படுத்தி எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.
எனக்கு நினைவிருக்கும் ஒரு பாடல்:
bits of paper, bits of paper
lying on the floor, lying on the floor
make the place untidy, make the place untidy
pick them up, pick them up!
தமிழ் வடிவம்:
காகித துண்டுகள், காகித துண்டுகள்
தரையிலே பார், தரையிலே பார்,
அசுத்தபடுத்துதே, அசுத்தபடுத்துதே,
பொறுக்கி எடு, பொறுக்கி எடு.
இன்னொரு பாடல்
கரடி மலைமேல் ஏறி கரடி மலைமேல் ஏறி
கரடி மலைமேல் ஏறி அது என்ன பார்த்தது?
அது என்ன பார்த்தது? அது என்ன பார்த்தது?
மலையின் அடுத்த பக்கம் மலையின் அடுத்த பக்கம்
மலையின் அடுத்த பக்கம் அது எட்டி பார்த்தது
அது எட்டி பார்த்தது அது எட்டி பார்த்தது
திரும்ப மலைமேல் ஏறி திரும்ப மலைமேல் ஏறி
திரும்ப மலைமேல் ஏறி அது வீடு சென்றது!
இதே பாடலை ஆங்கிலம், கன்னட மொழிகளிலும் நான் பாட்டு ஆசிரியையாக இருந்தபோது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இவரை நினைத்துக் கொண்டே.
அவரே நடன ஆசிரியையும் கூட. பாரத நாட்டின் தவப்புதல்வா என்ற பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து எங்களை குடியரசு தினத்தன்று ஆட வைத்தவர்.
லீலாவதி டீச்சர்
ஏழாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணியில் படித்துக் கொண்டிருந்த நான் எட்டாம் வகுப்பிற்கு புரசைவாக்கம் லேடி எம்.சி.டி.முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சமூக பாட ஆசிரியை குமாரி லீலாவதி. வரைபடம் இல்லாமல் பாடம் நடத்தவே மாட்டார். என்னுடைய மேப் ரீடிங் ஆசைக்கு விதை ஊன்றியவரே இவர் தான். பாடம் சொல்லிக் கொடுப்பதென்றால் இவர் சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் தலைக்குள் பாடத்தை ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.
அசாத்திய கோபம் வரும். பத்தாம் வகுப்பிற்கு போனவுடன், இவரே எங்கள் ஆங்கில ஆசிரியை. இன்று ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுகிறேன் என்றால் அடித்தளம் போட்டது இவர்தான். ஒருமுறை பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி: தலைப்பு ஆங்கிலக் கல்வி அவசியமா? எல்லோருமே அவசியம் என்று பேசவே தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் நான் ஒரு மாறுதலுக்கு வேண்டாம் என்று பேசினேன். வந்தது பாருங்கள் ஒரு கோபம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் என்னுடன் பேசவே இல்லை. என்னுடைய சமாதானங்கள் எதுவுமே அவர் காதில் விழவில்லை.
சாந்தா டீச்சர்
பதினொன்றாம் வகுப்பு (SSLC) ஆங்கில இலக்கணம் மற்றும் துணைப் பாட (non-detailed) ஆசிரியை. வெகு எளிமையாக ஆங்கில இலக்கணத்தை சுவாரஸ்யமாக சொல்லித் தருவார். எனது வகுப்பில் ஒரு ஆங்கில ஆசிரியை வந்து சேர்ந்தார். ஒருநாள் வகுப்பு முடிந்தவுடன் சொன்னார்: ‘Present Perfect Tense இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நன்றி’. நான் ‘என் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி சாந்தாவிற்கு இந்த நன்றிகள் சேரட்டும்’ என்றேன்.
கேதாரேஸ்வர சர்மா என்னும் சர்மா ஸார்
எனது தமிழ் வாத்தியார். இன்று நான் ஒரு தமிழ் வலைப்பதிவாளர் ஆக பெயர் எடுத்திருப்பதற்கு இவரே காரண கர்த்தா. இவர் சொல்லிக் கொடுத்த ‘தேமா, புளிமா’ இன்னும் நினைவில் இருக்கிறது. இவர் வருடந்தோறும் செய்யும் ஆண்டாள் கல்யாணமும் மறக்க முடியாத ஒன்று.
லில்லி கான்ஸ்டன்டைன் டீச்சர்
எனக்குப் புரியாத கணிதத்தை என் தலையில் ஏற்றப் பார்த்து முடியாமல் போனவர். மன்னித்துக் கொள்ளுங்கள் டீச்சர். இன்றுவரை கணிதம் எனக்கு எட்டாக்கனிதான்.
இன்னும் பல பல ஆசிரியர்கள். நேரம் வரும்போது அவர்களைப் பற்றியும் எழுத வேண்டும். நிச்சயம் எழுதுகிறேன்.
நானும் ஒரு ஆசிரியை ஆவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. மிகவும் தாமதமாக எனக்கு ஆசிரியை ஆக ஒரு வாய்ப்புக் கிடைத்து, அதில் நான் வெற்றியும் பெற்றேன் என்றால் இந்த அத்தனை ஆசிரியர்களின் பங்களிப்புதான். இவர்கள் எல்லோருமே என்னை ஏதோ ஒருவிதத்தில் மெருகேற்றி இருக்கிறார்கள்.
எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் என் இதயம் கனிந்த வணக்கங்கள். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
Like this:
Like Loading...