டோரேமான்! முஜே பச்சாவ்வ்வ்வ்……….!

 

Image result

 

படம் நன்றி கூகுள்

 

 

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த டோரேமான் பற்றி தெரிந்திருக்கும். இது ஒரு ரோபாட். ஜப்பானிய தொலைக்காட்சி சீரியல் ஒன்றின் கதாநாயகன் – இல்லையில்லை, கதாநாயகனின் தோழன் – ஆனால் இதை கதாநாயகன் ஸ்தானத்தில் வைக்கும் அளவிற்கு இதற்கு இந்த சீரியலில் ஒரு முக்கியத்துவம் உண்டு.

 

என் சின்னப்பேரனுக்கு ரொம்பவும் பிடித்த இந்த சீரியல் ஹங்காமா என்ற சானலில் ஹிந்தி மொழியில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பேரன் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டால் நாள் முழுவதும் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்….!’ என்று எங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டி அலறியவண்ணம் இருக்கும். நோபிதா என்ற சிறுவனுக்கு இந்த டோரேமான் பலவிதங்களிலும் உதவுகிறது. அவ்வப்போது இருவரும் விண்வெளியில் பறக்கவும் செய்வார்கள். நோபிடாவின் வகுப்புத்தோழி ஸுஸுகா. அவர்களின் வகுப்பில் ஷீசான் என்ற ஒரு (B)புல்லியும் உண்டு. இந்த நோபிதா எப்போதும் நீலக்கலர் அரை டிராயர் போட்டுக்கொண்டு வருவான். ‘இவனுக்கு வயதே ஆகாதாடா? எப்போ பார்த்தாலும் அதே நீலநிற அரை டிராயர்? என்று என் பேரனை வம்புக்கு இழுப்பேன்.

 

நோபிதா வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றாலோ, அல்லது சக மாணவர்களுடன் போட்டி என்றாலோ அல்லது எந்த விதமான ஆபத்து என்றாலும் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’ என்று அலறுவான். ஒரு புதுவித கேட்ஜெட்டுடன் டோரேமான் ‘யாமிருக்க பயமேன்?’ என்று அவனைக் காப்பாற்றும். அம்மா, அப்பா, ஆசிரியர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவனைக் காப்பாற்றுவதே டோரேமானின் முக்கிய வேலை. இது ஒவ்வொரு நாளும் நடக்கும்.. சிலசமயம் அந்த கேட்ஜட்டை நோபிதா டோரேமானின் எச்சரிக்கையை மீறி பயன்படுத்தி ஆபத்தில் மாட்டிக்கொள்வதும் மறுபடியும் டோரேமான் அவனைக் காப்பாற்றுவதும் உண்டு. நோபிதா மேல் கோபம் கொண்டு டோரேமான் தன்னிடம் இருக்கும் கேஜட்டினால் அவனை பழிவாங்கும் காட்சிகளும் உண்டு. எப்படியோ, தினம் தினம் ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’ என்ற அலறல் மட்டும் நிச்சயம்.

 

சிலசமயங்களில் சத்தம் தாங்கமுடியாமல் நான் என் பேரனைக் கோபித்துக் கொள்வேன். கொஞ்ச நேரம் எனக்குப் பிடித்த நேஷனல் ஜியாக்ரபி சானலை வைப்பான். நான் கொஞ்சம் அசந்தால் மறுபடியும் ‘டோரேமான்…….!’ தான். அதுமட்டுமில்லை; அவன் வந்துவிட்டால் தொலைக்காட்சிப் பேட்டியின் ரிமோட் கண்ட்ரோல் அவனிடம் தான்  இருக்கும். ஒரு நொடிக்கு ஒரு சானல் மாற்றுவான். பார்த்துக் கொண்டே இருக்கும்போது கைட் (guide) என்ற பட்டனை அழுத்துவான். திரை முழுவதும் அது அடைத்துக் கொண்டு ஒன்றுமே தெரியாது. கிடுகிடுவென சானல்கள் மாற்றுவதும், அவன் போகுமிடத்திற்கெல்லாம் அந்த ரிமோட் கண்ட்ரோல் போவதும் – அங்கங்கே வைத்துவிட்டு வருவதும்…! பிறகு எனக்கும் என் கணவருக்கும் அதைத் தேடுவது ஒரு பெரிய வேலை! சிலசமயங்களில் அவன் வீட்டிற்குத் திரும்பிப்  போனபின் ரிமோட் காணோம் என்றால் என் மகளுக்கு போன் செய்து அங்கு எடுத்துக்கொண்டு வந்துவிட்டானா என்று கேட்கும் கூத்தும் நடக்கும்!

 

முதலில் பிங்கு, ஆஸ்வால்ட் என்று பார்க்கத் தொடங்கியவன் சோட்டா பீம் பார்க்க ஆரம்பித்தான். பிறகு இந்த டோரேமான். இந்த சீரியல் பார்த்துப் பார்த்து ஹிந்தி நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டான். நான் ‘எப்போ பார்த்தாலும் ‘என்னடா டோரேமான்? டீவியை அணை’ என்று கோபித்துக் கொள்ளும்போது அணைத்துவிட்டு, பிறகு நான் நல்ல மூடில் இருக்கும்போது என்னிடம் வந்து ‘நீ இந்த டோரேமான் பார்த்துப் பார்த்து ஹிந்தி கத்துக்கலாம், பாட்டி!’ என்பான். சிரித்து மாளாது எனக்கு!

 

சிறிது நாட்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். வழக்கம்போல ரிமோட்டைக் கையில் எடுத்துக்கொண்டான். ‘என்னடா, இன்னும் டோரேமான் தானா?’ என்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஏதோ ஒரு ஹிந்தி சானல் பார்க்க ஆரம்பித்தான். சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். சற்று நேரம் கழித்து என்ன சத்தத்தையே காணோமே என்று எட்டிப் பார்த்தேன். தாத்தாவினுடைய ஹெட்போன் அவன் காதில்! சரி போகட்டும் ஒருவழியாக டோரேமான் தொல்லையிலிருந்து விடுதலை என்று நினைத்துக்கொண்டு திரும்பினேன். திடீரென்று ‘இடிஇடி’ என்று சிரிப்பு! தூக்கிவாரிப் போட்டது. மறுபடி எட்டிப் பார்த்தேன். சிரிப்புடன் கூட சோபாவிலேயே துள்ளித் துள்ளிக் குதிக்கிறான்; கைதட்டுகிறான்; கையை நீட்டி தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்டிக் காட்டிச் சிரிக்கிறான். தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தேன். ஏகப்பட்ட மனிதர்கள். நானும் அவன் பக்கத்தில் வந்து நின்றுகொண்டேன். உடனே ‘நீயும் பார்க்கிறாயா, பாட்டி?’ என்று கேட்டுக்கொண்டே ஹெட்போனை காதிலிருந்து எடுத்தான்.

 

‘இது என்னடா புதுசு?’ என்றேன். ‘இது ‘தாரக் மெஹ்தா கா உல்டா சஷ்மா’’ என்கிறான். ‘ரொம்ப தமாஷ் பாட்டி! நீயும் பாரேன். ஹிந்தி நன்னா வரும்…!’ மறுபடி மறுபடி என் வீக்னெஸ் பற்றியே பேசுகிறானே என்று நினைத்துக்கொண்டு சும்மா இருந்தேன். கோகுல் தாம் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் குடித்தனங்களுக்கு இடையே நடக்கும் தினசரி நிகழ்வுகள் தான் இந்த சீரியல். தமிழ், பஞ்சாபி, குஜராத்தி, மகாராஷ்டிரா, பெங்கால் என்று வேறு வேறு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து குடியேறியிருக்கும் குடும்பங்கள்.

 

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குழந்தை. ஒரு வீட்டில் ஒரு தாத்தா இருக்கிறார். தாத்தாவிற்கு ஒரு இரவு விக்கல் வந்துவிடும். அதை எப்படி நிறுத்துவது என்பதுதான் அன்றைய கதை. உடல்நலத்திற்காக உடற்பயிற்சி செய்யப்போய் இடுப்பு பிடித்துக்கொண்டு விடும் ஒருவருக்கு. ஒரு கையைத் தூக்கிக்கொண்டு ஒருபக்கம் சாய்ந்த நிலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை எப்படி சரி செய்வது என்று எல்லோரும் பதறிக் கொண்டிருப்பார்கள். கால் வழியே பிறந்தவர் வந்து ஒரு உதை விட்டால் சரியாகிவிடும் என்பார்கள். இவரது மனைவியே கால்வழியே பிறந்தவள் தான். கணவனை எப்படி உதைப்பது என்று தயங்குவாள். கடைசியில் ஒரு கழுதையைக் கூட்டிக்கொண்டு வருவார்கள். கழுதை உதைப்பதற்கு வாகாக ஒரு கயிற்றுக்கட்டிலில் அவரைக் கட்டி வைப்பார்கள். கழுதை தன்னை உதைக்கப் போவதை நினைத்து மிரண்டு இடுப்புப் பிடித்துக் கொண்டவர் கட்டிலையும் தூக்கிக்கொண்டு ஓடுவார். கழுதை துரத்த, துரத்த கொஞ்சநேரத்தில் நேராக ஓட ஆரம்பித்துவிடுவார்.

 

கிட்டத்தட்ட 2000 (ஆமாம், நான் சரியாகவே எழுதியிருக்கிறேன்) எபிசோடுகள் வந்துவிட்டனவாம். சிறிது நேரம் பார்த்தேன். அவ்வளவுதான் என்று நினைத்தால் இன்னொரு எபிசொட். தொடர்ந்து இன்னொன்று. ‘என்னடாது?’ என்றால் ‘நாள் முழுக்க இது வந்துண்டே இருக்கும், பாட்டி!’ என்கிறான். அட கஷ்டமே! இப்படிக் கூட ஒரு சானலில் தொடர்ந்து ஒரு சீரியலைப் போடுவார்களா, என்ன? வேடிக்கையாக இருக்கிறது என்றால் கூட எத்தனை நேரம் பார்ப்பது? காலை, மதியம், மாலை, இரவு தூங்கும் வரை ‘தாரக் மெஹ்தா’ தான்!

 

காலையில் எழுந்தவுடன் இன்று என்ன பாட்டு மனதில் வந்தது தெரியுமா? ‘தாரக் மெஹ்தா கா உல்டா சஷ்மா!’ சீரியலின் பாட்டுதான். அடக் கடவுளே! என்ன இப்படி ஆகிவிட்டேன்! யார் என்னைக் காப்பாற்றப் போகிறார்கள்?

 

சட்டென்று நினைவிற்கு வர உரக்கக் கூவினேன்: ‘டோரேமான் முஜே பச்சாவ்வ்வ்…..!’

 

 

 

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது…..

நன்றி: கூகிள்

 

இப்போதெல்லாம் தொலைக்காட்சி பார்க்கும்போது மறக்காமல் ரிமோட்டை கையில் வைத்துக்கொள்ளுகிறேன். இடைவேளையின்போது சானல் சானலாக அலைவதற்கா? நாங்களும் அதைச் செய்கிறோமே, என்கிறீர்களா? நான் அதைச் சொல்லவில்லை. நான் அதைச் செய்யவும் மாட்டேன். நான் ஸ்ரீராமன் மாதிரி அவருக்கு ஒக பாணம், ஒக வார்த்தை, ஒக மனைவி. எனக்கு ஒக சானல் ஒக நிகழ்ச்சி. பார்த்து முடித்துவிட்டுத்தான் அடுத்த சானல். சரி, ரிமோட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்? விளம்பரம் வரும்போது mute செய்துவிடுவேன். உடனே என் காது ‘அப்பாடி’ என்று நன்றி சொல்லும். அப்பப்பா! இந்த விளம்பரங்கள் படுத்தும்பாடு, சொல்லி மாளாது. விளம்பரங்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லுகிறேன்.

 

விளம்பரச் சத்தத்தை சில நிமிடங்களாவது நிறுத்துவது போல வேறு சில விஷயங்களையும் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அழகான நீர்வீழ்ச்சியின் அருகில் சகிக்காத உடையுடன் ஆடும் கதாநாயகி கதாநாயகனை அப்படியே அந்த நீர்வீழ்ச்சியில் தள்ளிவிட முடிந்தால்?  கதாநாயகனை விட கூடுதல் பெர்சனாலிட்டியுடன் கதாநாயகனின் பின்னால் ஆடும் அந்த இளைஞனை க்ளோசப்பில் பார்க்க முடிந்தால்? ஆடுகிறேன் பேர்வழி என்று சாணி மிதிக்கும் நாயக நாயகியரை அப்படியே freeze செய்ய முடிந்தால்? வெள்ளை உடையுடன் வரும் அழகிகளை அப்படியே புகைபோல மறையச் செய்தால்? இப்படி எனக்குள் நிறைய தோன்றும். முக்கியமாக ‘மலரே…மௌனமா….?’ பாடல் காட்சியில் ஒரே ஒருமுறையாவது ரஞ்சிதாவையும், அர்ஜுனையும் ‘காக்கா உஷ்’ செய்துவிட்டு அந்த இயற்கை அழகை ரசிக்க ஆசை!

 

கொஞ்சம் பின்னால் போகலாம். தொலைக்காட்சி வராத காலம். வானொலியில் மட்டுமே சில பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பேன். நாளை நமதே படம் வெளிவந்த ‘75 ஆம் ஆண்டின் பிற்பகுதி. அந்தப் படத்தில் வரும் ‘நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது….’ பாடல் மிகவும் பிரபலம். வானொலியில் மட்டுமல்ல; அன்றைய தினத்தில் மேடைப்பாடகர்களில் பிரபலமாக இருந்த திரு ஏ.வி. ரமணன், திருமதி உமா ரமணன் இருவரும் இந்தப் பாடலை மேடைதோறும் பாடுவார்கள். என் கணவருக்கு இவர்கள் இருவரும் பாடும் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். எங்கு இவர்கள் கச்சேரி என்றாலும் போய்விடுவார். திருமணத்திற்கு முன் தனியாக. திருமணம் ஆனவுடன் என்னையும் அழைத்துக்கொண்டு.

 

காதல் டூயட்கள் பாடுவதில் இவர்கள் இருவரையும் அடித்துக்கொள்ள இன்றுவரை வேறு மேடைப்பாடகர்கள் இல்லை. போர்த்திய தலைப்புடன் துளிக்கூட ஆடாமல் அசையாமல் உமா பாடுவதைக் காண மிகவும் வியப்பாக இருக்கும். அவரது குரல் தேன், அமிர்தம் இன்னும் என்னென்னவோ! பாடல்களில் வரும் அத்தனை நெளிவு, சுளிவுகள், குழைவுகள் எல்லாவற்றையும் அப்படியே கொடுப்பார் உமா.

 

நாளை நமதே படம் நான் பார்த்ததில்லை இன்று வரை. ஒவ்வொருமுறை உமா ‘நீலநயனங்களில்……’ என்று ஆரம்பிக்கும்போது கூடியிருக்கும் கூட்டம் மகுடி கேட்ட நாகமாக மயங்கும். இந்தப் பாடலுக்காகவாவது இந்தப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை. அந்த ஆசை சமீபத்தில் தான் நிறைவேறியது. ஏன் நிறைவேறியது என்று நான் நொந்துவிட்டேன். பார்க்காமலேயே இருந்திருக்கலாமே என்று இன்றுவரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல பாட்டைக் கெடுக்கமுடியுமா? நிச்சயம் கெடுக்கலாம் மோசமான படப்பிடிப்பால் என்று இந்தப்பாட்டைக் கேட்டவுடன் – ஸாரி பார்த்தவுடன் புரிந்தது.

 

மோசமான உடைகள், மோசமான காட்சியமைப்பு, மோசமான உடல் அசைவுகள் மோசமான, மோசமான, மோசமான என்று எத்தனை மோசமான என்று எழுதினாலும் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு மோசமோ மோசம். இனி இந்தப்பாட்டை காதால் மட்டுமே கேட்கவேண்டும் கண்ணால் காண்பது கூடாது என்று முடிவு செய்தேன். ஒருவேளை நான் தொலைக்காட்சி எதிரே உட்கார்ந்திருக்கும்போது இந்தப்பாட்டு வந்தால் உடனடியாக இடத்தைக் காலி செய்துவிடுகிறேன்.

 

அதேபோல இன்னொரு பாட்டு: உமா ரமணன், ஜேசுதாஸ் பாடும் ‘ஆகாய வெண்ணிலாவே….’ உமா+தாஸ்யேட்டனின் தேன் குரலைக் கேட்டும் அந்த நடன அமைப்பாளருக்கு எப்படி பிரபுவையும், ரேவதியையும் கோமாளி மாதிரி ஆட வைக்க முடிந்தது என்பது இன்று வரை எனக்குப்புரியாத புதிர். இன்னொரு பாட்டு ‘வெண்ணிலவே, வெண்ணிலவே….’. கண்ணை மூடிக்கொண்டு அனுபவித்துக் கேட்க வேண்டிய பாடல் இது. கண்ணை தப்பித்தவறி திறந்து வைத்துக்கொண்டு பார்த்துவிட்டால் ‘பெண்ணே…..பெண்ணே….’ என்று பிரபுதேவா வாயைப்பிளக்கும்போது ‘பட்’டென்று கன்னத்தில் ஒன்று போட்டு இளையராஜா கேட்டது போல ‘அறிவிருக்கா?’ என்று கேட்கத்தோன்றும்.

 

கண்களை மூடிக்கொண்டு கேட்கவேண்டிய பாடல்களின் லிஸ்ட் கொடுக்கலாம் என்றால் ரொம்ப ரொம்ப நீளமானது அது. நான் பார்க்க ஆசைப்பட்டு நொந்து போன பாடல் காட்சிகளில் இன்னொன்று ‘பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்’ பாடல். இந்தப் பாடலின் நினைவு வந்தவுடன் கே.ஆர். விஜயாவின் நினைவு நிச்சயம் வரும். ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று இவர் வாயை அசைக்கும் பாடல் காட்சியைப் பார்த்துவிட்டு என் பிள்ளை (அப்போது அவன் மிகவும் சின்னவன்) கேட்டான்: ‘இந்த மாமி ஏன் வாயைக் கோணிண்டு அழகு காட்டறா?’ என்று.

 

நம்மை விட குழந்தைகள் உள்ளதை அப்படியே சொல்லுபவை, இல்லையா?

 

 

 

கண்டேன் ரிமோட்டை!

 

DSCN3260

உங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும்?

கேள்வியே தப்பு! சோபாவில் ஜடப்பொருள் இருக்குமா? யாரெல்லாம் இருப்பார்கள் – உட்கார்ந்திருப்பார்கள் என்று கேட்க வேண்டும்!

சரி, நீங்கள் உட்கார்ந்திருப்பீர்கள் கூட என்னவெல்லாம் இருக்கும்?

ம்ம்…..செய்தித்தாள்?…..

அப்புறம்?

ம்ம்ம்…..

விடுங்கள்…. ரொம்ப யோசிக்க வேண்டாம். எங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும், தெரியுமா?

ம்ம்ம்.. அதே செய்தித்தாள்….கூடவே ரிமோட் கண்ட்ரோல் ஒன்றல்ல இரண்டு…. ஒன்று தொலைக்காட்சியை ஆன் செய்ய… இன்னொன்று வால்யூம் கூட்ட, சானல் மாற்ற….

கூடவே இன்னொன்றும் இருக்கும்… எனது கணவரின் இன்சுலின் பென். பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும். உணவு வேளையின் போது வெளியே வரும்.

நேற்று காலை.

‘டிபன் ரெடி, நீங்க மருந்து எடுத்துக்கலாம்!’

‘என்னோட இது எங்க?’

‘உங்களோட எது எங்க?’

‘அதாம்மா… நான் போட்டுப்பேனே!’

‘மருந்து பவுச்?’

‘மருந்தைப் போட்டுப்பேனா? மருந்தை சாப்பிடுவேன். நான் கேட்கறது இன்னொண்ணு…’

சிறிது நேரம் மவுனம். கிடைத்துவிட்டதோ? சமையலறையிலிருந்து எட்டி பார்த்தேன். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அனுமனை மனதில் நினைத்துக் கொண்டு, பஜ்ரங் பலி, எட்டணா வைக்கிறேன், தேடுவது கிடைக்கட்டும் என்று வேண்டினேன்.

சட்டென்று கண்ணில் பட்டது. இன்சுலின் பென், சோபாவின்  மேல் ரிமோட் அருகில்.

‘இதோ இருக்கே…!’ எடுத்துக் கொடுத்தேன். அப்பாடா!

சற்று நேரம் கழித்து, ‘இன்னொண்ணைக் காணுமே!’

பஜ்ரங் பலி! இன்னிக்கு உனக்கு ஒரு ரூபா வேணுமா?

இந்த மாதிரி தேடும்போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் நினைவு வருகிறது. சின்ன வயதில் நாங்கள் ஏதாவது தேடினால், ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கணும்….’ என்பாள் அம்மா. அதேபோல நடக்கும்போது காலில் ஏதாவது இடறினால், ‘காலுக்கு கண் வைக்கணும்….!’ அந்தக்காலத்தில் ஒவ்வொரு அறையிலும் அலமாரிகள் இருக்காது. எங்கள் புத்தகங்கள் எங்கள் பைகளிலேயே இருக்கும். பைகள் அறையின் ஒரு முலையில். புத்தகங்கள் நாங்கள் எங்கு உட்கார்ந்து படிக்கிறோமோ, அங்கேயே இருக்கும். தேடுதலும் காலில் பொருட்கள் இடறுதலும் தினசரி நடக்கும் விஷயங்கள். அம்மாவின் இந்த இரண்டு வாக்கியங்களும் தினமும் கேட்டு கேட்டு பழகிப் போன ஒன்று.

‘இப்போ என்ன காணும்?’

‘ரிமோட்!’

‘அதோ இருக்கே!’

‘இன்னொண்ணு……?’

செந்தில் மாதிரி அதுதாங்க இது என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.

தீவிரமான தேடுதலைப் பார்த்துவிட்டு ஜோக் அடித்தால் எனக்கு அடி கிடைக்கும் போல இருக்கவே, சும்மா இருந்தேன்.

‘எங்க வைச்சீங்க?’

‘அது நினைவு இருந்தால் உன்னை ஏன் கேட்கிறேன்….?’

அதுவும் சரிதான்.

‘காலைலேருந்து டீவி போட்டீங்களா?’

என்னைத் திரும்பி, நீ என்ன துப்பறியும் சாம்புவா? என்பது போல ஒரு பார்வை.

‘இல்ல…..’

‘…………………………….?’

‘இங்க தான் சோபா மேல இருந்தது. டிபன் சாப்பிடறதுக்கு முன்னால இருந்தது. மூணும் ஒண்ணா….’

மூணும் ஒண்ணா இருந்ததா? கேள்வி கேட்கவில்லை. மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

‘இன்சுலினைப் போட்டுண்டு பார்க்கறேன்…காணோம்..!’

கொஞ்சம் யோசித்தேன். எங்கே போய்விடும்?

வர வர தேடுதல் அதிகமாகிவிட்டது. ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் ஒரு ஸ்டேஷனரி கடை. எந்த பொருள் கேட்டாலும் அந்த கடை சிப்பந்தி தேடுவார். அவருக்குத் தேடல் மன்னன் என்று பெயர் வைத்தேன். இப்போது என்ன ஆயிற்று தெரியுமோ? கடையின் நிஜப்பெயர் மறந்து போய் தேடல் மன்னன் கடை என்று ஆகிவிட்டது.

காலையிலிருந்து டீவியைப் போடவில்லை. எங்கே போயிருக்கும்? மறுபடியும் எங்கள் வீட்டு சோபாவைப் பார்த்தேன். ஒரு ரிமோட், பக்கத்தில் பென்சுலின் இன். கடவுளே! மறதி என்னையும் குழப்புகிறதே! இன்சுலின் பென்!

ஆ! பளிச்! மின்னல்! துப்பு கிடைத்துவிட்டது!

ஃபிரிட்ஜை திறந்தேன். ‘குளுகுளு’வென இன்சுலின் பென் இருக்குமிடத்தில் அமர்ந்திருந்தது அந்த ‘இன்னொண்ணு!’

பைதாகரஸ் போல ‘யுரேகா….’ – ச்சே! ஆர்க்கமீடிஸ் இல்லையோ யுரேகா? நமக்கு இவர்களெல்லாம் வேண்டாம். எனக்கு உதவிய அனுமனைப் போல கண்டேன் ரிமோட்டை!

எப்படிக் கண்டுபிடித்தேன் என்கிறீர்களா? நேற்று இரவு இன்சுலின் போட்டுக் கொண்டு அதை உள்ளே வைப்பதாக நினைத்துக் கொண்டு ரிமோட்டை வைத்து விட்டாரோ, என்று தோன்றியது.

என் யூகம் சரிதான். இன்சுலின்  பென்னிற்கு பதிலாக ரிமோட் உள்ளே போயிருக்கிறது!

பஜ்ரங் பலிக்கு இன்று ஒரு ரூபாய்!