வாழி எதிராசன்!

நன்றி: கூகிள்

இன்றைக்கு சித்திரை மாதம் திருவாதிரைத் திருநாள். எம்பெருமானார் என்று உலகம் முழுவதும் உள்ளார்ந்த பக்தியுடன்அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜரின் 999 வது திருநட்சத்திரம் இன்று பூர்த்தியாகி 1000 வது வருடம் தொடங்குகிறது. எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு உத்சவங்கள் எல்லா திருக்கோவில்களிலும் ஆரம்பமாகியிருக்கின்றன.

 

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி எழுத பெரும் ஆசை மனதில் எழுகிறது. தினந்தோறும் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று திவ்ய பிரபந்தம் சேவிக்கத் தொடங்குவதைத் தவிர ஸ்வாமி பற்றி எழுத என்ன தகுதி இருக்கிறது என்று மனம் பரிதவிக்கிறது.

 

ஒருமுறை பிருந்தாவனம் போயிருந்தோம் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமியின் யாத்திரை கோஷ்டியுடன். அங்கு ஆண்டாளுக்கு என மிகப்பெரிய திருக்கோவில் – ரங்க்ஜி மந்திர் – இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் போலவே இங்கும் ஆண்டாள்-ரங்கமன்னார்-பெரியாழ்வார் மூவரும் ஒரே பீடத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். வடமாநிலத்தில் நம் ஆண்டாளுக்கு என்று ஒரு திருக்கோவில் என்பதே மிகவும் பரவசத்தைக் கொடுக்கும் விஷயம். இதற்கு முன்னாலும் ஒருதடவை இந்தத் திருக்கோவிலுக்குப் போயிருக்கிறேன்.

 

முதல்நாள் பெரிய கூட்டமாக எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் போன சமயம் திருகாப்பு நீக்கியிருக்கவில்லை. நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இங்கே காத்துக்கொண்டிருந்தால் அங்கே ஸ்வாமியின் பாகவத சப்தாகம் கேட்கமுடியாமல் போய்விடும். என்ன செய்வது என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தோம். சற்று நேரம் ஆனவுடன் திருகாப்பு நீக்கி எங்களை உள்ளே விட்டார்கள். கூட்டமான கூட்டம். மிகவும் அவசரம் அவசரமாக வெளியில் இருந்தபடியே சேவித்துவிட்டு பாகவதம் கேட்க சென்றோம். நாளை இன்னும் சீக்கிரமாக வந்து கியூவில் முன்னால் நின்று கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்.

 

எங்களுடன் கூட ஒரு ‘குடுகுடுப்பை’ மாமி – நீங்கள் நினைப்பது போல குடுகுடுப்பைக்காரரின் மனைவி இல்லை இவர். எல்லாவற்றிலும் அவசரம் இவருக்கு. பேருந்துவில் ஏறுவதிலிருந்து தான் தான் என்று முந்திக் கொள்ளும் சுபாவம் அந்த மாமிக்கு. இந்த மாமியைப் பற்றியே இரண்டு மூன்று பதிவுகள் எழுதலாம். கோவிலுக்குள் நுழைவதற்கும் முந்துவார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் விறுவிறுவென்று பிரதட்சணம் செய்ய ஆரம்பித்துவிடுவார். நிதானமாக சந்நிதியில் நின்று பெருமாளை சேவிக்கலாம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. ஒருமுறை பெங்களூரு வரும்போது எல்லோருக்கும் முன்னால் இறங்கி விடவேண்டும் என்ற பரபரப்பில் சிட்டி நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர் அவசரம் அவசரமாக கண்டோன்மெண்டில் இறங்கி சரித்திரம் படைத்தவர் இவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

 

இரண்டாம் நாள் நாங்கள் நால்வர் (குடுகுடுப்பை மாமியுடன் சேர்த்து) ஒரு ஆட்டோ பிடித்து ரங்கஜி மந்திர் வந்தோம். வழக்கம்போல கு.மாமி முன்னால் போய் நின்றார். கோவிலின் திருக்காப்பு நீக்க பட்டாச்சார் ஸ்வாமி வருவதைப் பார்த்தவுடன் இந்த மாமி பெரிய குரலில், ‘மாமா! மாமா! நாங்க கோமளா மாமிக்குத் தெரிந்தவர்கள். கோமளா மாமி உங்க கிட்ட சொல்லச் சொன்னாள். எங்களை கொஞ்சம் முன்னால உள்ள விடுங்கோ’ என்று இரைந்தார். கதவைத் திறக்கப் போனவர் கொஞ்சம் நின்று நம் குடுகுடு மாமியைப் பார்த்தார். பிறகு ஒன்றும் சொல்லாமல் சந்நிதிக்குள் நுழைந்துவிட்டார். சிறிது நேரத்தில் நாங்களும் உள்ளே சென்றோம். எங்களுக்கு சடாரி தீர்த்தம் கொடுத்த பட்டாச்சார் ஸ்வாமி எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். குடுகுடு மாமி ‘கிர்’ரென்று எல்லா சந்நிதிகளையும் சேவித்துவிட்டு நாலே எட்டில் வெளியே போய்விட்டார். அவர் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டாச்சார் ஸ்வாமி சொன்னார்: ‘கோமளா மாமிக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ, நம் எல்லோரையும் ஸ்வாமி இராமானுஜருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நாமெல்லாம் இராமானுஜ சம்பந்திகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர் தான் நமக்கு வழிகாட்டி. நாம் நமது வர்த்தமான (நிகழ்கால) ஆச்சார்யன் மூலம் சேவிப்பது எம்மிராமானுசனைத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கோமளா மாமிக்குத் தெரியும் என்று சொல்வதைவிட ‘அடியேன் இராமானுஜ தாசன் என்று சொல்லுங்கள். பெருமாளுக்கு அதுதான் உகப்பாக இருக்கும். எத்தனை கூட்டமாக இருந்தாலும் ‘அடியேன் இராமானுஜ தாசன் வந்திருக்கிறேன்’ என்று சொல்லுங்கள். பெருமாள் சேவை கிடைத்துவிடும். தினமும் 108 தடவை ‘ராமானுஜா, ராமானுஜா’ என்று சொல்லுங்கள். உங்களின் பாபங்கள், துக்கங்கள், நோய்கள், எல்லாம் போய்விடும்’ என்று மனமுருகக் கூறினார்.

 

எத்தனை பெரிய உபதேசம், ஒரு எளிய மனிதரிடமிருந்து என்று மெய் சிலிர்த்து நின்றோம் நாங்கள் மூவரும். குடுகுடு மாமிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து தினமும் எப்போதெல்லாம் ரங்க்ஜி மந்திர் ஸ்வாமி கூறியது நினைவிற்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஸ்வாமியின் திருநாமத்தை சேவித்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஸ்வாமியின் ஆயிரமாவது திருநட்சத்திரத்தை கொண்டாடும் இந்த வேளையில் இந்த பூமியில் நாம் இருப்பது எத்தனை பெரிய அதிர்ஷ்டம்!

 

பற்பமெனத் திகழ் பைங்கழலும் தண்பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்

முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!

 

இந்தப் பாடலைப் பாடும்போதே நம் கண் முன் ஸ்வாமியின் வடிவழகு தோன்றும். ஸ்வாமியின் திருத்தம்பி எம்பார் என்கிற கோவிந்தபட்டரால் இயற்றப்பட்ட பாடல் இது.

 

ஸ்வாமியை நினைத்தவர்களுக்கு எது எதிர்? வாழி எதிராசன்!

 

 

 

 

 

 

ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளி

படம் நன்றி கூகுள்

ஸ்ரீரங்கத்து வீடு

ஒருமுறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது என் அக்காவுடன் ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அக்கா அங்கே படித்துக் கொண்டிருந்தாள். மே மாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் போகும்போது கோடை விடுமுறையாக இருக்கும். ஒருநாள் என் அக்கா என்னிடம் ‘எங்கள் ஸ்கூலுக்கு வருகிறாயா?’ என்று கேட்டாள். மிகவும் மகிழ்ச்சியுடன் அவளுடன் போனேன். அவள் படித்துக் கொண்டிருந்த பள்ளியின் பெயர் ஸ்ரீரங்கம் கேர்ல்ஸ் ஹை ஸ்கூல். உள்ளே நுழைந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியில் என் அக்கா ஓரிடத்தில் நின்றாள். அண்ணாந்து பார்த்து என்னிடம் சொன்னாள்: ‘ இதோ பார், இவர் தான் நம் கொள்ளுத் தாத்தா. இவர் தான் இந்த ஸ்கூலை ஆரம்பித்தவர்’.

நான் அப்படியே ஸ்தம்பித்துப் போய் அந்தப் புகைப்படத்தையே பார்த்தபடி நின்றேன். அக்கா சொன்னதை உள்வாங்கிக் கொள்ளவே எனக்கு நேரம் ஆயிற்று. ஒரு பள்ளியை ஆரம்பிப்பதா? எத்தனை பெரிய காரியம்! அதைச் செய்தவர் என் கொள்ளுத் தாத்தா! நம்பவே முடியவில்லை. ‘நிஜமாவா?’ என்றேன். ‘இதற்கெல்லாம் யாராவது ஜோக் அடிப்பார்களா?’ என்றாள்.

ஸ்ரீரங்கம் என்கிற ஊர் எப்போதுமே ஒரு யாத்திரை ஸ்தலமாகவே அன்றும் இன்றும் அறியப்பட்டு வரும் நிலையில், நான்கு தலைமுறைகளுக்கு முன்பு ஒருவருக்கு அந்த ஊரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியது என்பது எத்தனை ஆச்சர்யமான விஷயம்! அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துவந்த போது. கிழக்கிந்திய கம்பனியின் கையிலிருந்த அதிகாரம் பிரிட்டிஷ் கைக்கு வந்து 38 வருடங்களே ஆகியிருந்த சமயம் அது. 1896 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீமான் ஆர். வீரராகவாச்சாரி அவர்கள் இந்தப் பள்ளிக்கு தனது சொந்த நிலத்தை கொடுத்தார். எனது கொள்ளுத் தாத்தா ஸ்ரீமான் திருமஞ்சனம் ராமானுஜ ஐய்யங்கார் கையில் சல்லிக்காசு இல்லை; அரசு இயந்திரத்திலும் அவருக்குத் தெரிந்தவர்கள் யாரும் அந்தநாளில் இருக்கவில்லை. ஆனாலும் பள்ளிக்கூட ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது ஆசையை எப்படியோ நிறைவேற்றிக் கொண்டார்.

‘க்வீன் விக்டோரியா கோல்டன் ஜுபிலி லோயர் செகண்டரி ஸ்கூல்ஸ்’ (Queen Victoria Golden Jubilee Lower Secondary Schools) என்ற பெயரில் ஸ்ரீரங்கத்திலேயே பல பள்ளிகளை ஆரம்பித்தார் ஸ்ரீமான் ராமானுஜ ஐய்யங்கார். ஆனால் பள்ளிகளுக்கு மாணவர்களின் சேர்க்கை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. ஊரில் நடந்து கொண்டிருந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஸ்ரீரங்கத்துக் குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்து, கணிதம் ஆகியவற்றை போதித்துக் கொண்டிருந்தன. அதிலிருந்து மாறி முழு நேரப் பள்ளி என்பது அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் கொள்ளுத் தாத்தா வீடு வீடாகச் சென்று தனது பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்த செய்கை ஊர்காரர்களுக்கு ‘இவர் எதற்கு இந்த வேண்டாத வேலையைச் செய்கிறார்’ என்ற எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கக்கூடும்!

இதையெல்லாம் எங்கள் தாத்தா ஸ்ரீமான் திருமஞ்சனம் ஸ்ரீனிவாச ஐய்யங்கார் தனது அழகான தொடர்சங்கிலிக்  கையெழுத்தில் தனது தந்தையைப் பற்றிய நெகிழ்வான  நினைவுகளாகப் பதிந்து வைத்திருக்கிறார். மாணவர்களின் சேர்க்கைப் பிரச்னையுடன் பள்ளியை நடத்துவதிலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் இனிய முடிவாக ஸ்ரீமான் சி.ஏ. கிருஷ்ணமூர்த்தி ராவ் என்பவர் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றார். ‘ஸ்ரீமான் ராவ் மிகச்சிறந்த கனவான்; ஒழுக்கத்திலும், அறிவிலும் கற்பிக்கும் முறையிலும் ஒப்பற்றவராக இருந்தது மட்டுமல்ல கவர்ந்திழுக்கும் ஆளுமையையும் கொண்டிருந்தார். பள்ளியை நிர்வகிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். எனது தந்தைக்கு வலது கையாக இருந்து பள்ளியை நடத்தினார். அவர் ஒரு சிறந்த ஆங்கிலக்கவி. பல கவிதைகளைப் புனைந்தவர். என் தந்தையை மிகவும் நேசித்ததுடன் தனது தந்தைக்கு நிகரான மரியாதையையும் அவருக்கு அளித்தார்’ என்று எங்கள் தாத்தாவின் குறிப்பு ஸ்ரீமான் சி.ஏ. கிருஷ்ணமூர்த்தி ராவ் பற்றிக் கூறுகிறது. இவரே பிற்காலத்தில் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளிக்கு மாறி, பிறகு சென்ட்ரல் ஹிந்து கல்லூரி, மதுரையில் சரித்திர உதவி விரிவுரையாளராகவும் இருந்தார்.

எங்கள் கொள்ளுத் தாத்தா 1912 ஆம் ஆண்டு பரமபதித்தார். அவரது பள்ளிகள் எல்லாம் அப்போதைய பள்ளி இயக்குனர் ஸ்ரீ பென்னிங்க்டன் என்பவரது சிபாரிசினால் 1909 ஆம் ஆண்டு தி ஹை ஸ்கூல் ஆப் ஸ்ரீரங்கம் என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன. அந்தப் பள்ளியின் வளர்ச்சியைப் பார்க்க எங்கள் கொள்ளுத் தாத்தாவிற்கு ஆயுசு இருக்கவில்லை.

தன் தந்தையைப் பற்றி எங்கள் தாத்தா எழுதிய குறிப்பிலிருந்து மேலும் சிலவரிகள்: ‘எனது தந்தை கையில் காசில்லாமலேயே தனது வாழ்க்கையைத் துவங்கினார். தனது நேர்மை, திறமையுடன் கூடிய நன்முயற்சிகள், ஒழுக்கமான நடவடிக்கை முதலியவற்றால் இந்த உலகத்திலும், தன் மாணவர்களின் இதயங்களிலும்  ஒரு மிக உயரிய இடத்தையும் பிடித்தார். அவரது அயர்வில்லாத காலநேரம் பார்க்காத உழைப்பு, அவரைச் சோர்வடையச் செய்து அவரது ஆயுளை அகாலத்தில் முடித்துவிட்டது. தனது 49வது வயதில் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் திருவடி நீழலை அடைந்தார். கடைசி நாட்களில் ஆழ்வார்களின் ஈரச்சொற்களைக் கொண்டு பெருமாளின் திருநாமங்களை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தார். தனது இரு மகன்களுடன் கூடப் பெருமாளையும் தனது மூன்றாவது குழந்தையாகவே நினைத்து வாழ்ந்தார்’.

இந்தத் தகவல்கள் எனது மாமா திருமஞ்சனம் சுந்தரராஜன், ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழா மலரில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு

பின் குறிப்பு:

நீண்ட நாட்களுக்குப் பின் ஸ்ரீரங்கத்து வீடு தொடர்ந்து எழுதுகிறேன். இந்த விவரங்களைச் சேகரிக்க எனக்கு நேரம் தேவைப்பட்டது. இனி இந்தத்தொடர் தொய்வின்றி தொடரும்…பெரிய பெருமாள், நம்பெருமாள் அருளாலே.