ரயிலில் கேட்ட குடும்ப அரசியல்!

இந்தப் பகுதியில் நான் எழுதும் அனுபவம் ஏற்பட்டது காலை 6 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பும் ஷதாப்தி விரைவு வண்டியில். இந்த முறையும் தனியாகத்தான் பயணம். எனக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் – வண்டி கிளம்புவதற்கு முன்னாலேயே கேட்க ஆரம்பித்தது. ‘நீங்க நினைக்கறாப்பல எங்க பெரியப்பா ஒண்ணும் நல்லவரில்ல…..!’ குரலைக் கேட்டால் சின்ன வயசுப் பெண் போலத் தெரிந்தது. அவள் பேசப் பேச எனக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிற்று. மெதுவாக சீட்டிலிருந்து எழுந்து திரும்பிப் பார்த்தேன். இளம்பெண்! அப்போது ஆரம்பித்த அந்தப் பெண் ரயில் சென்னை வந்து சேரும் வரை நிறுத்தவில்லை! முழுக்க முழுக்க குடும்ப அரசியல்! ரொம்பவும் வியப்பாக இருந்தது – இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளம்பெண் இப்படியா? ஒவ்வொருவரைப் பற்றியும் அடிவயிற்றிலிருந்து வரும் வெறுப்புடன் பேசுவது? அவள் கணவனிடமிருந்து அவ்வப்போது – அதுவும் அவள் – ‘கேட்டேளா?’ என்று கேட்கும்போது மட்டும் ஒரு ‘ஊம்’ அவ்வளவுதான்!

அன்று நான் கையில் எடுத்துக் கொண்ட போன புத்தகத்தைக் கூட பிரிக்கவில்லை. பின்னால் தான் லைவ் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதே! நான் மட்டும் கேட்டு அனுபவித்ததை உங்களுக்கும் கொஞ்சம் சாம்பிள் எழுதுகிறேன்: ‘எங்க அப்பா கடைசி பிள்ளை. பெரியப்பாதான் பெரியவர். எங்க அப்பாவைக் கண்டாலே எங்க பெரியப்பாவிற்குப் பிடிக்காது. Sibling rivalry என்று சொல்லுவா. அதை நான் நேரா பாத்துருக்கேன். எங்க அப்பாவை ரொம்ப பிடிக்கிறாப்பல நல்லா நடிப்பார். சிவாஜிலேருந்து கமலஹாசன் வரை அவர்கிட்ட பிச்ச வாங்க வேண்டும்!’ அந்தப் பெண் சொல்லச்சொல்ல, அவளது பெரியப்பாவிடத்தில் சிவாஜியும், கமலஹாசனும் கையேந்தி நின்று ‘நடிப்பு சொல்லிக்கொடுங்க…’ என்று பிச்சை கேட்பது போல ஒருநிமிடம் என் மனத்திரையில் ஒரு பிம்பம் ஓடிற்று. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை! கைப்பையில் இருந்த புத்தகத்தை எடுத்து என் முகத்தை மறைத்து, பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி சீரியலைத் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தேன்.

‘என் அம்மா இவங்களையெல்லாம் சூப்பரா ‘ஹாண்டில்’ பண்ணுவா. இவங்களை துளிக்கூட சிந்தவே மாட்டா. எங்கம்மா ஒரு டோன்ட் கேர் மாஸ்டர்! நானும் எங்க அம்மா மாதிரி தான்!’ இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த கணவனுக்கு எப்படி இருந்திருக்கும்? அவனது மனதில் எந்த மாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்?

 

இந்த குடும்ப அரசியல் என்பது புதியது ஒன்றுமில்லை. எல்லாக் குடும்பங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது தான். நம்முடைய விருப்பு வெறுப்புகளை இளையதலைமுறையின் மனங்களில் வேரூன்றச் செய்வது நல்லதல்ல என்பது என் கருத்து. அவர்கள் வளர்ந்து அவர்களே தெரிந்துகொள்ளட்டுமே. நமக்கு மாமியார், மாமனார், நாத்தனார் வெளி உறவாக இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளுக்கு இரத்த சம்மந்தம் இல்லையோ? திட்டும்போது மட்டும் அப்படியே பாட்டியைக் கொண்டு பொறந்திருக்கா. அத்தையை உரிச்சு வைச்சிருக்கா (அந்த உரிச்சு என்கிற வார்த்தையை சொல்லும்போது அத்தையையே உரிப்பது போல ஒரு அழுத்தம்!) என்றெல்லாம் திட்டுகிறோம். ஆனால் அவர்களைப் போல கச்சிதமாக ஒரு வேலையை செய்து முடித்தாலோ, அல்லது நன்றாகப் பாடினாலோ பாராட்டுகிறோமா? இல்லையே!

சென்னையில் ரயிலிலிருந்து இறங்கியவுடன் அந்தப் பெண்ணைப் பார்த்து ‘பிற்காலத்தில் நல்ல அரசியல்வாதியாக வருவாயடி பெண்ணே!’ என்று சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை! கணவன் என்கிற அப்பிராணியை நினைத்து வருத்தப்பட்ட படியே வெளியே நடந்தேன். வேறு என்ன செய்ய?

ஸ்ரீஜயந்தி நினைவுகள்

srijayanthi thiruvadigal

ப்போதுமே எங்கள் வீட்டில் ஸ்ரீஜயந்தி ரொம்ப பெரிய பண்டிகைதான். இரண்டு நாட்கள் முன்னாலேயே எங்கள் அம்மா பட்சணங்கள் செய்ய ஆரம்பித்துவிடுவாள். வாசனை மூக்கைத் துளைக்கும். சீடை உருட்டிக் கொடுப்பது நாங்கள் தான். அம்மாவிற்கு சீடை சின்னச்சின்னதாக உருட்ட வேண்டும். நாங்கள் பெரிது பெரிதாக உருட்டிப் போட்டால் எங்களைக் கோபித்துக் கொள்வாள். அதை மறுபடி இரண்டாகவோ, மூன்றாகவோ உருட்டிப் போடுவாள். தீபாவளி போலவே ஸ்ரீஜயந்திக்கும் நிறைய பட்சணங்கள் செய்வாள் அம்மா. ஆனால் தீபாவளிக்கு செய்வதை உடனே சாப்பிட அனுமதி உண்டு. ஸ்ரீஜயந்தியின் போது ‘மூச்!’

 

DSCN2947

 

அம்மாவைப் போலவே நானும் நிறைய பட்சணங்கள் செய்வேன்.  உப்புச் சீடை, வெல்லச்சீடை முக்கியம். அவை தவிர தேன்குழல், மனோப்பு என்கிற முள் முறுக்கு, (சில சமயம் உப்புச் சீடை மாவிலேயே  கைமுறுக்கு சுற்றிப் பார்ப்பேன்!) நாடா, எள்ளுருண்டை, சுகியன், அப்பம், ரவை லாடு, வடை ஆகியவை உண்டு. இவை தவிர எல்லாப் பழங்களும் வாங்கி வந்து கண்ணனுக்கு அமுது செய்வோம். இரவு முழு தளிகையும் உண்டு – திருக்கண்ணமது நிச்சயம் உண்டு. வெண்ணெய் கல்கண்டு ஏலக்காய் சேர்த்தது, சுக்கு வெல்லம் இவையும் உண்டு.

 

இப்போதெல்லாம் ரொம்பவும் சாப்பிட முடிவதில்லை. அதனால் தேன்குழல் அல்லது முள் முறுக்கு அல்லது நாடா என்று செய்கிறேன். மற்றவை செய்துவிடுவேன்.

 

DSCN2944

 

எனக்கு இந்தப் பண்டிகையில் ரொம்பவும் பிடித்தது கிருஷ்ணனின் திருவடி போடுவதுதான். திருமணம் ஆன புதிதில் வாசலிலிருந்து தளிகை உள் மேடை வரை திருவடிகளை போட்டுக் கொண்டே போய்விட்டேன். ரொம்பவும் பெருமையுடன் என் மாமனாரிடம், ‘எப்படி இருக்கிறது, அப்பா?’ என்றேன். அவர் ஒருமுறை திருவடிகளைப் பார்த்துவிட்டு, ‘கிருஷ்ணன் நம்மாத்திற்கு நொண்டி நொண்டி வந்திருக்கிறான், பார்…..!’ என்றார். திக்கென்று திரும்பிப் பார்த்தேன். ‘வலது காலாகப் போட்டுக் கொண்டு போயிருக்கிறாய், பார்!’ என்றார். அட, கஷ்டமே! இரண்டு திருவடிகளுக்கு இடையே இன்னொன்று திருவடி (கவனமாக பார்த்து இடது திருவடி) போட்டேன்!

கூட்டுக் குடும்பத்திலிருந்து தனியாக வந்தபின் நாங்கள் குடியேறிய முதல் வீடு மாடிவீடு. அன்று முதல் இன்றுவரை மாடி வீடுகள் தான் எப்போதுமே. ஒவ்வொரு வீட்டிலும் வாசலிலிருந்து திருவடிகள் போட்டுக் கொண்டு வருவேன். அதில் அவ்வளவு ஆசை. இப்போது இருக்கும் வீட்டிற்கு முன் நாங்கள் இருந்தது இரண்டாவது மாடியில். வருடந்தோறும் வெளி வாசலிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு படியிலும் திருவடிகளைப் போட்டுக் கொண்டு போவேன். இரண்டு மாடிகள் கடந்து அடிமேல் அடி வைத்து கண்ணன் எங்கள் அகத்தினுள் வருவான். பத்து வருடங்களுக்கு முன் மாடிப்படியில் விழுந்து காலை உடைத்துக் கொண்டேன். அந்த ஒரு வருடம் என்னால் கண்ணனின் பாதங்களைப் போட முடியவில்லை. அடுத்த வருடத்திலிருந்து போட ஆரம்பித்தேன்.

 

இப்போது நாங்கள் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தம் 39 வீடுகள். பாதிப்பேர் வீட்டுச் சொந்தக்காரர்கள். மீதிப்பேர்கள் குடியிருப்பவர்கள். இங்கும் என் கோலம் தொடர்ந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒருமுறை குடியிருந்தவர்களில் ஒரு குடும்பத்தினர் ஹோலி கொண்டாடுவதாகச் சொல்லி கட்டிடம் முழுவதும் – லிப்ட்டைக் கூட விடவில்லை – வண்ணங்களை அள்ளித் தெளித்து விட்டனர். அவர்கள் தளத்தில் மட்டுமில்லாமல் மற்ற தளங்களிலும் வண்ணங்களைக் கொண்டு வந்து சுவர்களில் எல்லாம் அடித்து ஒருவழி பண்ணிவிட்டனர்.
இதற்கு பலர் ஆட்சேபம் தெரிவித்தனர். பண்டிகை என்றால் அவரவர்கள் வீட்டிற்குள்ளேயே கொண்டாட வேண்டும். பொதுவிடங்களை இப்படி அலங்கோலம் செய்யக்கூடாது என்று அசோசியேஷன் மெயில் அனுப்பியது. எல்லோருமே ஒப்புக் கொண்டனர். ஒரு வீட்டுச் சொந்தக்காரரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. ஹோலி கொண்டாடக்கூடாது என்றால் ஸ்ரீஜயந்தி அன்று வாசலிலிருந்து கோலம் போடுகிறார்களே, அது மட்டும் சரியா? என்று.

 

அந்த வருடத்திலிருந்து நான் வெளிவாசலிலிருந்து கோலம் போட்டு கண்ணன் திருவடிகளைப் போடுவதை நிறுத்தி விட்டேன். எங்கள் வீட்டு வாசலிலிருந்தே கண்ணனை உள்ளே அழைக்கிறேன். அதுவும் இதுவும் ஒன்றா என்று முதலில் தோன்றினாலும் சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு விட்டேன். என் மாட்டுப்பெண்ணிற்கும் மிகுந்த வருத்தம் தான். என்ன செய்வது?

DSCN2929

இன்னொரு ஸ்ரீஜயந்தி நினைவு: எனது மைத்துனர் பிள்ளை இங்கு படித்துக் கொண்டிருந்தபோது அவனது நண்பன் ஒருவன் மண்டயம் ஐய்யங்கார் குடும்பத்தை சேர்ந்தவன் ஒருமுறை எங்களை ஸ்ரீஜயந்தியன்று அவர்கள் வீட்டிற்கு அழைத்திருந்தான். எல்லோருமாகப் போனோம். அவர்கள் வீட்டில் பூஜையில் சின்னதும் பெரியதுமான தவழும் கிருஷ்ணன் நிறைய வைத்திருந்தார்கள். அவர்களே ஒவ்வொரு வருடமும் வாங்கி சேர்த்திருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் சொன்ன பதில் வேறு. ஒவ்வொரு வருட ஸ்ரீஜயந்தியின் போதும் இவர்கள் வீட்டிற்கு வருபவர்கள் வாங்கிக் கொடுக்கும் கிருஷ்ண விக்கிரகங்கள் அவை என்றார்கள். இவர்களும் நண்பர்கள் வீட்டிற்குப் போகும்போது இதுபோல வாங்கிக் கொடுப்பார்களாம். என்ன ஒரு அழகிய பழக்கம், இல்லையா?

ஸ்ரீஜயந்தியன்று கண்ணனின் பிறந்தநாள் பாசுரமாகிய ‘வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்’, நீராட்டப் பாசுரங்கள், பூச்சூட்டல் பாசுரங்கள் எல்லாவற்றையும் சேவித்து அகத்தில் செய்திருக்கும் பட்சண வகைகளை வைத்து, எல்லாப் பழங்களையும் வைத்து ஆண்டாளின் பாசுரங்களான

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்

நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்

ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ

மற்றும்

இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்

ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்

தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே

என்ற பாசுரத்தையும் சேவித்து பூஜையை முடிப்போம்.

 

இவை தவிர நம்மாழ்வாரின் பாசுரமான
‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே’
என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களையும் நாங்கள் சேவிப்போம். சிறுவயதிலிருந்தே என் குழந்தைகளுக்கு இந்த பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அந்தாதி பாசுரங்கள் ஆனதால் மிக எளிதாக மனதில் படிந்துவிடும். எல்லோருமாக சேர்ந்து சேவித்து தலைக்கட்டுவோம்.

 

ஸ்ரீகிருஷ்ணனின் திருவருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். ‘செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று’ எல்லோரும் இன்புற பிரார்த்திக்கிறேன்.

சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்…!

 

வலைச்சரம் மூன்றாம் நாள்

படம் நன்றி தினகரன்

 

 

திடீரென்று ஒருநாள் இனிமேல் நான் சப்பாத்திதான் சாப்பிடப் போகிறேன்’ என்று அறிக்கை விட்டான் என் மகன். சப்பாத்தி செய்வதும் எனக்கு எளிதுதான். அதிலேயும் 35 வருட அனுபவம். அதிலும் சுக்கா என்று சொல்லப்படும் பூல்கா நன்றாக வரும். ஒவ்வொரு சப்பாத்தியும் பூரி மாதிரி தணலில் போட்டவுடன் உப்பும். ஆனால் என்ன கஷ்டம் என்றால் அதற்கு தொட்டுக் கொள்ள என்ன செய்வது? நாங்கள் சின்னவர்களாய் இருக்கும்போது எங்கள் அம்மா ரொட்டி பண்ணுவாள். (எண்ணெய் போட்டு செய்தால் ரொட்டியாம். எண்ணெய் போடாமல் செய்தால் சப்பாத்தியாம். என் ஓர்ப்படி இப்படி ஒரு விளக்கம் கொடுத்தாள்.) காலையில் செய்த குழம்பு, ரசவண்டி, இல்லை கறியமுது, கீரை கூட்டு இப்படி எது இருந்தாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடுவோம். வேறு ஒன்றும் செய்யவும் மாட்டாள் அம்மா.

 

ஆனால் இப்போது சப்பாத்தி செய்தால் சன்னா, ராஜ்மா, பட்டாணி இவைகளை வெங்காயம், மசாலா போட்டு – கீரை என்றால் பாலக் பனீர் என்று செய்ய வேண்டியிருக்கிறது. எங்களைப் போல எதை வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் என்  குழந்தைகள். ‘சப்பாத்திக்கு குழம்பா? ரசவண்டியா? தமாஷ் பண்ணாதம்மா!’ என்கிறார்கள். இந்த சமையல் சாப்பாடே தினசரி பெரிய பாடாகிவிடும் போலிருக்கு. ஒரு வழியாக காலை டிபன், மதியம் சாப்பாடு முடித்துவிட்டு வந்து ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் ‘சாயங்காலம் என்ன?’ என்ற கேள்வி வருகிறது. அப்போதுதான் இந்த ‘சங்கடமான சமையலை விட்டு’ பாட்டு அசரீரியாக காதுக்குள் ஒலிக்கும்.

 

நான் சப்பாத்தி செய்ய ஆரம்பித்த புதிதில் கூட்டுக் குடித்தனம். தினசரி  சமையல் என்ன என்று மாமனார் மாமியார் கூட்டு சேர்ந்து ரொம்ப நேரம் யோசித்து(!!!) சொல்வார்கள். வெங்காயம் வீட்டினுள்ளேயே வரக்கூடாது. சப்பாத்திக்கு என்ன சைட் டிஷ்? சாயங்காலம் முக்கால்வாசி நாட்கள் பயத்தம்பருப்பு போட்டு செய்யும் கூட்டுதான் சாதத்திற்கு. சிலநாட்கள் தேங்காய் துவையல், அல்லது கொத்துமல்லி, கறிவேப்பிலை, பருப்புத் துவையல்  இருக்கும். துவையல் இல்லாத நாட்களில் ஊறுகாய்தான் கூட்டு சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள. என் கணவருக்கு மட்டும் நான்கு சப்பாத்திகள். மற்றவர்களுக்கு சாதம் என்று தீர்மானமாயிற்று. கரெக்ட்டாக நான்கு சப்பாத்திகள் செய்ய வராது எனக்கு. ஒன்றிரண்டு அதிகம் இருக்கும். என் மைத்துனர்கள் எனக்கு எனக்கு என்று போட்டுக்கொள்வார்கள். ஆசையாக சாப்பிடுகிறார்களே என்று கொஞ்சம் அதிகமாகவே மாவு கலந்து சப்பாத்தி செய்ய ஆரம்பித்தேன். நாளடைவில் மாமனார், மாமியார் தவிர மற்ற எல்லோரும் சப்பாத்திக்கு மாறினோம். ஆ…….சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேனே! சைட் டிஷ்! வெங்காயம் உள்ளே வரக்கூடாதே அதனால் ஒரு யோசனை தோன்றியது. நான் செய்யும் கூட்டிலேயே (மாமனார் மாமியாருக்கு தனியாக எடுத்து வைத்துவிட்டு) கொஞ்சம் மசாலா பொடியை (வெளியில் வாங்கியதுதான்!) போட ஆரம்பித்தேன். உற்சாகமான வரவேற்பு! காணாது கண்ட மாதிரி எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

 

இரண்டு நாட்கள் சமையல் பார்த்தாயிற்று. நாளை சங்கீதம்!

 

இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கப் போகிறவர்கள்: இங்கே 

 

வலைச்சரம் இரண்டாம்நாள் 

வலைச்சரம் முதல்நாள் 

அடிச்சுப் பாடடி பெண்ணே..!

 

 

படம்: நன்றி கூகிள்

சமீபத்தில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். மணப்பெண்ணின் அம்மா ரொம்பவும் பரபரப்பாக இருந்தார். பெண்ணின் கல்யாணம் என்றால் சும்மாவா? அடிக்கடி கண்ணைத் துடைத்துக்கொண்டு உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார். இத்தனை நாள் குழந்தை குழந்தை என்று பொத்திப் பொத்தி வளர்த்த பெண் இன்று இன்னொரு வீட்டிற்குப் போகப்போகிறாள் என்பது சாமானியமான விஷயமா? எல்லோரையும் வரவேற்று உபசரித்து சிரித்து சிரித்து பேசிப் பேசி அவருக்கு தொண்டை கமறிப் போயிருந்தது. தொண்டை சரியில்லை என்று காற்று மட்டுமே வந்துகொண்டிருந்த வாயாலும், கைகளாலும் சைகை காட்டி விடாமல் தன் உபசாரத்தை மற்றவர்களின் மேல் பொழிந்து கொண்டிருந்தார். அப்புறம் நடந்தது பாருங்கள் ஒரு விஷயம், அதுதான் இந்தப் பதிவின் சாரம்.

 

மாப்பிள்ளைத் தோழன் ஒரு பக்கம் குடையை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு வர, ஒரு கையில் தாத்தா தடியை வைத்தக் கொண்டு  ‘டக், டக்’ என்று நடந்தபடியே, இன்னொரு கையில் சுந்தர காண்டம் புத்தகத்துடன், விசிறியையும்எடுத்துக் கொண்டு, தோளில் கட்டித் தொங்கவிடப்பட்ட அரிசி, வெல்ல மூட்டை சகிதமாக மாப்பிள்ளை நேராகக் காசிக்குக் கிளம்பிவிட்டார் படிக்க.  சுந்தர காண்டத்தை படிக்க காசிக்குப் போவானேன் என்று அதிகப் பிரசங்கித்தனமாக கேட்கப்படாது.

 

இதைப்பார்த்த மாமனார் சும்மா இருக்கலாமோ? பல லட்சங்களை தண்ணீர் மாதிரி வாரியிறைத்து கல்யாணச் சத்திரம்,  சமையல், சாப்பாடு ஏற்பாடு செய்து (கேடரிங் மட்டும் பல லகரங்கள்!) இதெல்லாம் போதாதுன்னு தொண்டை கட்டின பெண்டாட்டியுடன் சைகையில் வேறு பேசிண்டு…பாவம் மனுஷனுக்கு நுரை தள்ளிக் கொண்டிருந்தது. ஆனாலும் மாப்பிள்ளை காசிக்குப் போறேன்னால்? அடிச்சு பிடிச்சு ஓடி வந்தார். மாப்பிள்ளை கையில் இரண்டு தேங்காயைக் கொடுத்து, ‘காசிக்கு போகாதீர்! என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கும்…(ரெண்டும் ஒண்ணுதான்…;-)) அப்படின்னு சொல்லி உள்ளே கூட்டிண்டு வந்து பொண்ணோட கையைப் பிடிச்சு அவர்கிட்ட ஒப்படைச்சு…! அப்பாடா!  எத்தனை பெரிய பொறுப்பு!

 

பெண்ணை அவளோட மாமாவும் அவளோட தமையனுமாக தோள்ல  எடுத்துக் கொண்டு ரிவர்ஸ்ல போக மாப்பிள்ளை தடால்புடலான்னு ஓடி வந்து மாலை அவள் கழுத்தில் போட்டார். இப்போ மாப்பிள்ளை வீட்டுல  ‘அட! அவாதான் பொண்ணை தோள்ல தூக்கிப்பாளா? நாங்க என்ன இளிச்சவாயனா அப்படின்னு தூக்க முடியாம அவரை தூக்க… பொண்ணு ஓடிவந்து மாலையை அவர் கழுத்துல போட்டா. ஒருவழியா மாலை மாத்தல் ஆச்சு. ஊஞ்சல் ஆட ஆரம்பித்தார்கள் பொண்ணும் பிள்ளையும். ‘நேரமாயிடுத்து….பொம்மனாட்டிகள் எல்லாம் சீக்கிரம் சீக்கிரம் பால் தொட்டு, பிடி சுத்தி பெண்ணையும் மாப்பிள்ளையையும் உள்ளே கூட்டிண்டு வாங்கோ…’ அப்படின்னு குரல் கொடுத்துட்டு நம்ம வாத்தியார் ஸ்வாமி டிபனை ஒரு பிடி பிடிக்க டைனிங் ஹாலுக்குள் பாய்ஞ்சார்.

 

‘மாலை சாத்தினாள் கோதை மாலை மாத்தினாள்….! திடீர்னு கிளம்பின இந்தப் பாட்டு எல்லோரையும் ஸ்தம்பிக்க வெச்சுடுத்து. இருக்காதா பின்னே! ‘கரகர’னு வந்தக் குரல் எல்லோரையும் நடுநடுங்க  வைத்தது. குரலா அது? காதில யாரோ ரம்பம் வெச்சிண்டு ‘கர்…கர் ….னு அறுக்கறாப் போல சத்தம்! யாரோட குரல் அப்படின்னு பார்த்தா….பொண்ணுக்கு அம்மாதான் தன்னோட கமறிப் போன குரல்ல பாடிண்டு இருக்கா. நாலு வரில நானூறு அபஸ்வரம். நானூறு தப்பு! ‘பாலாலே காலலம்பி…’ என்கிற பல்லவி காலாலே பாலலம்பி என்று மாறியது!  எதுக்காக இப்படி ஒரு குரல்ல பாடணும்? சரி, நம்ம பொண்ணு கல்யாணம் நாம பாடினாதான் நெறைவா இருக்கும் அப்படின்னு நினைச்சு ஒரு பாட்டோட நிறுத்தினாளா ஊஹூம்….

 

கரகர குரல்லயே காஞ்சனமாலையை  பொன்னூஞ்சல்ல ஆட்டினாள். (பாவம் ரொம்ப பயந்திருப்போ) ஒடப்பாட்டுல  ‘தசரதர் மகனாக வந்த ஸ்வாமி’ இனி வருவேனான்னு தல தெறிக்க ஓடினார். ‘க்ஷீர சாகர விஹாரா’ விழுந்தடிச்சுண்டு எனக்கு என்ன க்ஷீர சாகரம் வேண்டிருக்குன்னு அதைக் காலி பண்ணிட்டு காணாமப் போனார்!

 

எங்கள் வீட்டில் ஒரு பரம்பரை கதை உண்டு. கதையின் நாயகி பெயர் யதி என்கிற யதிராஜவல்லி. (அந்தக் காலத்துக் கதை அதுனால பெயர் இப்படித்தான் இருக்கும்) யதி பாட வேண்டும் என்று அவளோட அம்மாவிற்கு ஆசை. யதிக்கு இல்லை. அம்மா எங்கிருந்தோ ஒரு பாட்டு வாத்தியார தேடித் பிடிச்சு பொண்ணுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தாள். பாவம் வாத்தியார்! ‘எங்க, கொழந்தே! ‘ஸா’ பிடி பார்க்கலாம்’ ன்னு ஹார்மோனியத்துல ஆறாவது கட்டையில கையை வச்சு சொல்லிக் கொடுத்தா நம்ம யதி சமத்தா ‘நீங்க கையை எடுங்கோ ஸார்! நான் ‘ஸா’ வை பத்திரமா பிடிச்சுக்கறேன்’ அப்படின்னா!

 

தொடரும்

 

பின்குறிப்பு: இந்த தொடர் எழுதக் காரணங்கள்:

தொடர் எழுதணும்னு எனக்கு அநியாயத்துக்கு ஆசையாக இருக்கிறது.

அரியலூர் படிச்சு மனசு நொந்து போனவர்களுக்கு இந்த நகைச்சுவை தொடர் ஆறுதல் கொடுக்கும்.

சங்கீத சீசன்ல நானும் இதுபோல பதிவு எழுத வேண்டாமா? என்கிற நல்ல எண்ணம் தான்!

 

 

 

கிணற்றுக்குள் சொம்பு!

well

என் மாமியார் ரொம்பவும் ஆசாரம் பார்ப்பவர். திருமணம் ஆன புதிதில் சமையலறைக்குள் செல்ல வேண்டுமென்றால் கையை அலம்பிக்கொண்டுதான் நுழைய வேண்டும். இது என்ன பெரிய இதுவா என்கிறீர்களா? சற்று பொறுங்கள், நான் இன்னும் மெயின் கதைக்கே வரவில்லையே!

சமையலறைக்கு வெளியே ஒரு சொம்பு இருக்கும். தங்கம், வெள்ளி, பித்தளை, மண் இவற்றால் ஆன சொம்பு அல்ல; சிமென்ட் சொம்பு! என் வாழ்க்கையில் அப்போதுதான் முதன்முதலாக சிமென்ட் சொம்பு பார்க்கிறேன். குளியலறைக்குள் போய் அந்த சொம்பில்  இருக்கும் நீரில் கையை அலம்ப வேண்டும்.

சரி, கையை அலம்பியாயிற்று; உள்ளே போய் ஏதாவது எடுக்கலாம் என்றால், ‘இரு, இரு…’ என்று என் மாமியாரின் குரல் ஒலிக்கும் – அவர் எங்கிருந்தாலும் நான் சமையலறைக்குள் நுழைவது அவருக்குத் தெரிந்துவிடும். இது என்ன மாய மந்திரம் என்று இதுவரை எனக்குப் புரிந்ததே இல்லை!

அடுத்தாற்போல சமையலறையில் இருக்கும் குழாயில் கையை அலம்ப வேண்டும். அந்தக் குழாயை –  விரல்களால் அல்ல – மேல் கைகளால் இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு –– திறந்து கையை அலம்ப வேண்டும்.

ஒரொரு சமயம் இப்படியாவது கையை அலம்பி அலம்பி சமையலறையிலிருந்து ஏதாவது எடுக்க வேண்டுமா என்று தோன்றும். உள் பாத்திரங்கள், வெளி பாத்திரங்கள் என்று இருக்கும். உள் பாத்திரங்களை வெளியே கொண்டு வரக் கூடாது. வெளியில் இருப்பது உள்ளே போகக் கூடாது.  வெளியே குடிக்கும் நீருக்கு தனியாக ஒரு பாத்திரம். அதில் நீர் காலியாகிவிட்டால், சமையலறைக்குள் போய் சொம்பில் (இது வேறு சொம்பு – பித்தளை சொம்பு!)  இருக்கும் கொதித்து ஆறின நீரை மேலே சொன்ன முறையில் கையை அலம்பிக் கொண்டு எடுத்து வந்து வெளியில் இருக்கும் பார்த்திரத்தில் ஊற்ற வேண்டும். பொதிகை தொலைக்காட்சியில் வரும் ‘அத்தே! நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வரேன்’ விளம்பர மாமியார் போல என் மாமியாரும் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

எனக்கு சவாலாக இருந்தது அந்த சிமென்ட் சொம்பு தான். (இப்போது கூட அவ்வப்போது கனவில் வந்து ‘ஹா…..ஹா…..!’ என்று வீரப்பா ஸ்டைலில் சிரிக்கும் அந்த சொம்பு) திருமணம் ஆன அடுத்த நாள் ‘வாசல் தெளித்து கோலம் போடு’ என்றார் என் மாமியார். ‘கிணற்றிலிருந்து தண்ணி சேந்திக்கோ..!’ இது உபரி கட்டளை. கிணறு, தண்ணி இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு சேந்திக்கோ என்றால் இறைப்பது என்று அர்த்தம் புரிந்து கொண்டேன். (I am always good at reading in between the lines….!)

நான் கேட்க மறந்தது எதால் சேந்திக் கொள்வது? நான் மரியாதையாக (திரு திரு) முழிப்பதைப் பார்த்து ‘அந்த சிமென்ட் சொம்பு இருக்கு பாரு, அதில் சேந்திகோ..!’ என்றார் என் மாமியார்.

‘எனக்குதான் கிணற்றில் நீர் சேந்த வருமே! ஸ்ரீரங்கத்தில் என் பாட்டி அகத்தில் கிணற்றில் நீர் ‘சேந்தி’ இருக்கிறேனே’ என்று மனதிற்குள் தன்னைபிக்கை ஊற்றுப் பெருக்கெடுக்க, சிமென்ட் சொம்பை தூக்கிக் கொண்டு கிணற்றை நோக்கி நடந்தேன். தாம்பக் கயிற்றில் சொம்பைக் கட்டி உள்ளே இறக்கினேன். மேலே இழுத்தால் கனமே இல்லை. சிமென்ட் சொம்பில் இத்துனூண்டு தண்ணீர்!

அசோக்நகரில் எங்கள் வீடு. MIG அடுக்குக் குடியிருப்பு. 2 பெட்ரூம் வீடு. வீட்டின் முன்னாலும் பின்னாலும் நிறைய இடம் இருக்கும். சிமென்ட் சொம்பில் வந்த நீரைப் பார்த்து எனக்கு கண்ணில் நீர்! இத்தனூண்டு இத்தனூண்டாக எத்தனை முறை நீர் சேந்தி வாசல் தெளிப்பது?

‘மொதல் தடவ சேந்தினத கீழ கொட்டிடு…!’ பின்னாலிருந்து கட்டளை. ‘ரெண்டாவது தடவ தண்ணி எடுத்து வாசல் தெளி…!’

‘ராத்திரில கிணற்றை பூதம் காவல் காக்கும். அதனால மொத தண்ணியை கொட்டிடணும்…!’ காரணம் புரிந்தது.

‘இத்துனூண்டு தண்ணி தான் வரது…’ தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டேன். ‘இன்னொரு தடவ தண்ணி எடுத்துண்டு வா…!’

‘எத்தன தடவ?’

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ‘சரி பெரிய பக்கெட் எடுத்துக்கோ!’ ஒரு வழியாக பெரிய பக்கெட்டில் நீர் எடுத்து வாசல் தெளித்து எனக்கு தெரிந்த ‘மாடர்ன் ஆர்ட்’ கோலத்தைப் போட்டு முடித்தேன்.

‘புள்ளிக் கோலம் வராதா?’

‘வராது…’

அரிச்சந்திரனின் தங்கை நான்!

ஒரு நாள் காலை எழுந்திருக்கும்போதே தூக்கமான தூக்கம். முதல் நாள் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வந்ததன் விளைவு.

‘ஆவ்வ்வ்….!’ என்று கொட்டவி விட்டுக் கொண்டே சிமென்ட் சொம்பை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கினேன். மேலே இழுத்தால் சிமென்ட் சொம்பு காணோம்! அய்யய்யோ!

சட்டென்று தூக்கம் கலைந்து, கயிற்றைப் பார்த்தால் சொம்பின் கழுத்து மட்டும் கயிற்றில்!  தூக்குப்போட்டுக் கொண்டு விட்டதோ? சொம்பு கிணற்று சுவற்றில் பட்டு உடைந்து விட்டது. தூக்கக்கலக்கத்தில் எனக்கு இது உறைக்கவே இல்லை!

மாமனார் வேறு ரொம்ப கோபக்காரர். என்ன செய்வது? கயிற்றை மறுபடி கிணற்றில் இறக்கிவிட்டு – சொம்பின் கழுத்துடன் தான் – ஆபத் பாந்தவா, அனாத ரக்ஷகா என்று கணவரிடம் ஓடி – இல்லையில்லை – நடந்து தான் – போய் சொன்னேன்.

ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு சொன்னார்: ‘ அந்தக் (சொம்பின்) கழுத்தையும் கிணற்றில் போட்டுவிடு. அம்மாவிடம் சொம்பு கிணற்றுக்குள் விழுந்துடுத்து அப்படின்னு சொல்லிடு’ என்றார்.

மாமியாரிடம் போய் சொன்னேன் ‘சொம்பு கிணத்துக்குள் விழுந்துடுத்து!’ நான் சொன்னது மாமனாரின் காதிலும் விழுந்துவிட்டது.

மாமனார் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தார். மாமியார் சொன்னார் : ‘புது பொண்ணு; விடுங்கோ!’

அப்பாடி பெரிய ரிலீப். மாமனார் மாமியார் கோவிச்சுக்கலை என்பதற்காக இல்லை.

NO MORE சிமென்ட் சொம்பு!

பாவம் அந்த சொம்பு. நான் கரித்து கொட்டியதிலேயே தற்கொலை பண்ணிண்டுடுத்தோ?

well 1

செல்வ களஞ்சியமே : பகுதி -14

அலுவலகம் செல்லும் பெண்களுக்கு …..

‘உங்க பேரு என்ன?’

‘என் பேரா?’
‘ஆமாங்க…’
‘வசந்தி….’
‘என்ன பண்றீங்க வசந்தி?’
‘நானா?’
‘ஆமாங்க நீங்கதான்…..’

‘ஒண்ணுமில்லீங்க, வீட்டுல சும்மா ஹவுஸ்வைஃப் – ஆ இருக்கேன்….!’
நம்ம ஊரு தொலைக்காட்சிகளில் அடிக்கடி கேட்கும் உரையாடல் இது.
இந்த உரையாடலைக் கேட்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். ஹவுஸ்வைஃப் வீட்டுல சும்மாவா இருக்காங்க? அதென்னவோ வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைக்குப் போனால்தான் தங்களுக்கு மதிப்பு; அலுவலகம் செல்லும் பெண்களைப் போல நாம இல்லையே என்ற மனக்குறை. அக்கரைப் பச்சை!

இந்தப் பகுதியை தொடர்ந்து படிக்க:

பின்குறிப்பு: இந்தச் செல்வ களஞ்சியமே தொடர் இந்தமுறை 14 வது வாரத்தை தொட்டிருக்கிறது. 3 மாதங்கள் முடிந்து நான்காவது மாதம், இரண்டாவது வாரத்தில் காலடி வைத்திருக்கிறது.

எனக்கு உற்சாகம் கொடுத்து தொடர்ந்து படித்து ஊக்கம் அளிக்கும் எல்லா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என்னை எழுதச் சொல்லி உற்சாகம் கொடுக்கும் நான்குபெண்கள் தளத்திற்கு ஸ்பெஷல் நன்றி!

 

எல்லோருக்கும் விஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்!