எடுத்ததை எடுத்த இடத்தில்

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88

18.9.2016 தினமலர் வாரமலரில் வெளியான எனது கதை இங்கே:

 

 

இன்னும் சிறிது நேரத்தில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்கிற நினைவே இனித்தது. இந்த முறை அம்மாவிற்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அம்மா தனியாக இருப்பது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் அது அவனுக்கும் சௌகரியமாகவே இருந்தது. ஒரே இடத்தில் மனைவியையும், அம்மாவையும் சமாளிப்பது என்பது பெரும் சவாலான வேலையாக இருந்தது. இத்தனைக்கும் இருவரும் படித்தவர்கள்; அம்மா வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவள். மருமகள் வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவள்.

 

அம்மா பர்பக்ஷனிஸ்ட். இது இது இந்தந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று பழகிவிட்டதோடு குழந்தைளையும் அந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவள். ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்’ என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை கேட்டுக்கேட்டே வளர்ந்தவர்கள் அவனும் அவன்  அக்காவும். அக்கா திருமணம் ஆகி புக்ககம் போன பின்னும் அம்மாவின் தாரக மந்திரத்தை மறக்காமல் தன் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டு விட்டாள். இவன்தான் திருமணம் ஆனவுடன் தடம் மாறிப்போனான்.

 

திருமணம் ஆன புதிதில் மனைவியிடம் அம்மாவின் இந்தக் கொள்கையைச்  சொல்லாததன் பலனை வெகு சீக்கிரமே அனுபவிக்க ஆரம்பித்தான். அவன் மனைவிக்கு எதையுமே எடுத்த இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கமே இருக்கவில்லை. அவள் எடுத்து வைக்கவில்லை என்றால் என்ன, நாமே செய்வோம் என்று ஆரம்பித்து இன்று வரை அவன்தான் எல்லா ஒழுங்குமுறைகளையும் பின்பற்றி வருகிறான். அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. தலைவாரும் சீப்பிலிருந்து எது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கிடக்கும். ஆபீஸ் போகும் அவசரத்தில் அவளது சீப்பு கிடைக்கவில்லை என்றால் இவனுடைய சீப்பை எடுத்து வாரிக்கொண்டு போய்விடுவாள். அவனுக்கொன்றும் அதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அதில் சுற்றியிருக்கும் தலைமுடியை இடத்துச் சுற்றிப் போடாமல் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவாள். கோபம் தாங்காமல் அந்த சீப்பை எடுத்து அவளது கைப்பையில் போட்டிருக்கிறான், பலமுறை. பலன் எதுவுமில்லை. அவளைத் திருத்த அவனும் முயன்று முயன்று இன்றுவரை  தோல்விதான்.

 

காலையில் எழுந்ததிலிருந்து எதையாவது தேடிக்கொண்டே இருப்பாள். தேடுவதிலேயே நேரம் ஆகிவிடும். சரி இன்று தேடுகிறோமே, கிடைத்தவுடன்  சரியான இடத்தில் வைப்போம் என்று வைப்பாளா, அதுவும் கிடையாது. தினமும் தேடலோத்சவம் தான். காலைவேளையில் இவன் வீட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்திற்கு அம்மா வைத்த பெயர். இப்படிப் பெயர் வைப்பதில் அம்மாவிற்கு நிகர் அம்மாதான். பெங்களூர் வந்த புதிதில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போவார்கள். அங்கு ஒரு எழுதுபொருள் விற்கும் கடை. அங்கு எது கேட்டாலும் அந்தக்கடைக்காரர் தேட ஆரம்பிப்பார். ஒரே தடவையில், தேடாமல் கேட்டதை எடுத்துக் கொடுத்தே கிடையாது. அவருக்கு அம்மா ‘தேடல் மன்னன்’ என்று பெயர் வைத்துவிட்டாள். தேடல் மன்னன் கடை என்றே அம்மா சொல்லிச் சொல்லி அவரது கடைப்பெயர் என்னவென்றே மறந்து போய்விட்டது!

 

திருமணம் ஆகி அவள் வந்த ஒருவாரத்திலேயே அம்மாவிற்கு அவளது ஒழுங்கின்மை புரிந்துவிட்டது. அவனுக்காகப் பேசாமல் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தாள். புது மனைவி அதிகம் சொல்லமுடியவில்லை என்ற அவனது பலவீனம் அம்மாவிற்குப் புரிய, ‘தவிட்டுப்பானை தாடாளனை சேவித்துக்கொண்டு சீர்காழியிலேயே இருக்கிறேன்’ என்று கிளம்பிவிட்டாள்.

 

அம்மா அவனது திருமணத்திற்கு முன்பும் அங்கேதான் இருந்தாள். அவன் படித்ததும் அங்குதான். சின்ன வயதிலேயே அப்பா பரமபதித்துவிட, அப்பா வேலை பார்த்துக்கொண்டிருந்த வங்கியிலேயே அம்மாவுக்கு வேலை கிடைத்தது. மேல்படிப்பிற்காக சீர்காழியை விட்டு வெளியே வந்தவன், படித்து முடித்து சில வருடங்கள் வெளிநாடும் போய்விட்டு வந்தான். திருமணத்திற்கு முன் சென்னையில் வீடு வாங்கினான். அம்மாவிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். புது வீட்டைப் பார்த்துப்பார்த்து அலங்கரித்தாள். ஷோ-கேஸ் பொம்மைகளை தினமும் மாற்றி மாற்றி வைத்தாள். வீட்டினுள் செடிகளை வைப்பது அம்மாவிற்கு மிகவும் பிடித்த விஷயம். அவைகளையும் அவ்வப்போது மாற்றுவாள். ஒவ்வொரு செடியின் அடியிலும் ஒரு அலுமினிய தட்டு வைத்திருப்பாள். செடிகளுக்கு விடும் நீர் அவற்றில் தேங்கும். தரை பாழாகாது என்பாள் அம்மா. செடிகளின் இலைகளுக்கும் நீர் தெளிப்பானால் தண்ணீர் அடிப்பாள். பச்சைபசேல் என்று வீடே ஜொலிக்கும்.

 

முக்கியமாக தளிகை உள் அம்மாவின் மனதிற்கு நெருக்கமான இடம். ஒரே மாதிரியான கண்ணாடி பாட்டில்கள் வாங்கி சாமான்களைக் கொட்டி வைத்தாள். எல்லா சாமான்களுக்குள்ளும் ஒரு எவர்சில்வர் கரண்டி. அம்மா எதையும் கையால் தொடவே மாட்டாள். சிங்கில் ஒரு பாத்திரம் கூட இருக்காது. எவர்சில்வர் சிங்க் அம்மாவின் கைவண்ணத்தில் பளபளவென்று மின்னும்.

 

அம்மா எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவனுக்கு இன்னும் நினைவிருக்கும் ஒரு விஷயம்: அவர்கள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வருடமும் பள்ளி முடிந்தவுடன் அம்மா நோட்டுப் புத்தகங்களில் மீதியிருக்கும் எழுதாத பக்கங்களை எடுத்து ஒன்றாக வைத்துத் தைத்துக் கொடுப்பாள். அம்மாவின் கைத்திறன் இதிலும் தெரியும். வேறு வேறு நோட்டுப் புத்தகங்களில் இருக்கும் தாள்களை எடுத்து ஓரங்களை ஒரே அளவில் கத்தரித்து, அதற்கு வீட்டில் இருக்கும் பழைய காலண்டர்களின் கெட்டியான தாள்களை வைத்து அட்டை மாதிரி தைத்துக் கொடுப்பாள். பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். இதை எங்கே வாங்கினாய் என்று அவர்களது வகுப்பு மாணவர்கள்  கேட்கும் அளவிற்கு அந்த நோட்டுப்புத்தகம் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அதை ரஃப் நோட் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். சிலர் எங்களுக்கும் அதைப் போலத் தைத்துக் கொடுக்கச் சொல்லு என்று கேட்பார்கள். அம்மா மறுத்துவிடுவாள்.

 

எந்த வேலையையும் அம்மா ஒத்திப்போட்டதே இல்லை. செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். இவன் மனைவி நேர்மாறு. ‘இப்படி ஒரு மாமியாருக்கு இப்படி ஒரு மாட்டுப்பெண். உன்னோட தவிட்டுப்பானை தாடாளனின் திருவுள்ளம்!’ என்று அம்மாவைக் கிண்டல் அடிப்பான். அம்மாவும் இவனைப் பார்த்து ‘பாரதியார் உனக்காகத்தான் இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறார் ‘திக்குத் தெரியாத காட்டில் – ……………… தேடித்தேடி இளைத்தே……ஏ………ஏ……னே……! ‘ என்று பாடிவிட்டு, ‘அந்த கோடிட்ட இடத்தில் ‘சீப்பு சோப்பு இன்ன பிற என்று நிரப்புக….!’  என்று சொல்லி வாய்விட்டு சிரிப்பாள்.

 

ஒவ்வொருமுறை ஊருக்கு அம்மாவைப் பார்க்க வரும்போதும் அம்மாவை தன்னுடன் வரச்சொல்லிக் கூப்பிடுவான். மறுத்துவிடுவாள்.

‘என்னால அந்த ஊழல சகிச்சுக்க முடியாதுடா!’

‘ஏம்மா! அவகிட்ட இருக்கற நல்லத பார்க்கமாட்டியா?’

வாயைத் திறக்கமாட்டாள் அம்மா.

பிறகு ஒருநாளில் சொன்னாள்: ‘அடிப்படை சுத்தம் வேண்டாமா? நான் ஒன்றும் மடி ஆசாரம் என்று சொல்லிக்கொண்டு இதைத்தொடாதே, அதைத் தொடாதேன்னு சொல்றதில்லை. வீட்டுக்குள்ள நுழைஞ்சா எங்க பார்த்தாலும் சாமான்கள்! அததற்கு என்று இடம் இருக்கிறது இல்லையா? துப்பட்டாவை ப்ரிட்ஜ் மேல போடுவாளா? ஆபீஸ்ல சாப்பிட்ட டிபன் பாக்ஸ் ஒரு அலம்பு அலம்பி எடுத்துண்டு வரக்கூடாதா? வரக் வரக்குனு காஞ்சு போயி…… அப்படியே வெளி சிங்க்ல போடறா! என்னால பாக்க முடியலடா! வேற எந்த விஷயத்துலயும் அவ மேல எனக்குக் கோவம் இல்லை. புரிஞ்சுக்கோ!’

 

‘ஆபீஸ் போறவம்மா….!’ அம்மா பளிச்சுன்னு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள். கோவம் இல்லை அந்தக் கண்களில். அடிபட்ட உணர்வு. ‘நானும் ஆபீஸ் போனவதாண்டா! உங்க அப்பா போகும்போது நீங்க ரெண்டுபேரும் பள்ளிக்கூடம் போற குழந்தைகள். உங்களையும் பார்த்துண்டு, வீட்டையும் கவனிச்சுண்டு, ஆபீஸுக்கும் போயிண்டு இருந்தேன். இத்தனைக்கும் வீட்டுல வேலை செய்ய ஆள் கூட இல்லை….! என்னிக்காவது அழுக்கான ட்ரெஸ் போட்டுண்டு போயிருக்கேளா? தோய்க்காத சாக்ஸ்? பெருக்காம, தண்ணி தெளிக்காம, வாசலுக்குக் கோலம் போடாம இருந்ததுண்டா? இங்க கைக்கு ஒரு ஆள், காலுக்கு ஒரு ஆள்…!’

 

‘அம்மா…! இது வீடா? இல்லை மியூசியமாம்மா? எல்லாம் அததோட இடத்துல இருக்கணும்னா?’ என்று ஜோக் அடித்து அம்மாவின் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பான்.

 

ஒவ்வொருமுறை இவன் ஊருக்கு வரும் போதும் அம்மாவின் மனதை மாற்ற ஆனவரை முயலுவான்.

 

‘நான் உனக்கு முக்கியமில்லையா?’ என்று கூட கேட்டுவிட்டான். ‘நீ எனக்கு முக்கியம். கூடவே வீடு ஒழுங்கா இருக்கறது இன்னும் முக்கியம்!’

 

அவனுக்கு குழந்தை பிறந்தவுடன் அம்மா குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக வந்தாள். குழந்தைக்கு என்று தனது காட்டன் புடவைகளை நான்காக மடித்து ஓரங்கள் தைத்துக் கொண்டு வந்திருந்தாள். குழந்தைக்கு கீழே போட்டிருந்த பிளாஸ்டிக் ஷீட்டை எடுத்துவிட்டு தன் புடவைகளைப் போட்டாள். ‘இந்த காலத்துல யாரு மாமி இப்படித் துணி போட்டு குழந்தையை விடறா?’ என்று கேட்ட சம்பந்தி மாமியை அம்மா கண்டுகொள்ளவே இல்லை. வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு டயபர் கட்டக்கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னாள். கொஞ்சநாட்கள் தான் அம்மாவின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது. குழந்தைத் துணிகள் வீடு முழுவதும் இறைந்து கிடக்க ஆரம்பித்தன. சகிக்க முடியாமல் அம்மா சீர்காழிக்குத் திரும்பினாள்.

 

குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. அவனால் முன் போல அதிகம் ஊருக்குப் போகமுடியவில்லை. அம்மா ஒன்று இரண்டில் வந்த போய்க்கொண்டிருந்தாள். குழந்தையின் சாமான்கள் இப்போது வீடு முழுவதும்! குழந்தை விளையாடுகிறதோ, இல்லையோ, காலையில் அதனுடைய விளையாட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு வந்து ஹாலில் கொட்டிவிடுவாள் இவன் மனைவி. அம்மா வரும்போது குழந்தையின் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டுப் போவாள்.

 

ஒரு விஷயம் இவனுக்கு அம்மாவிடம் பிடித்தது – மாட்டுப்பெண்ணிடம் சகஜமாகவே இருந்தாள். தன்னால் முடிந்தவரை அவளுக்கு உதவினாள். அவள் செய்யும் தளிகையைப் பாராட்டினாள். முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்தாள்.

 

‘ஏம்மா! நீயே அவளிடம் சொல்லேன், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள் என்று. உன்னோட தாரக மந்திரத்தையும் சொல்லிக்கொடேன்…!’ என்று சீண்டினான். அம்மா சொன்னாள் : ‘சுத்தம், ஒழுங்கெல்லாம் பிறவியிலேயே வரணும்டா! சொல்லி வராது. அட்லீஸ்ட் என்னைப் பார்த்தாவது கத்துக்கலாம்….!’ அதைக்கூட அவளிடம் சொல்லமாட்டாள். இவனிடம் தான் சொல்லி வருத்தப்படுவாள்.

 

நினைவுகளில் பயணித்துக் கொண்டிருந்தவன் ‘சீர்காழி, சீர்காழி’ என்ற கூவல் கேட்டுக் கண் விழித்தான். பேருந்திலிருந்து இறங்கி குழந்தையையும் அழைத்துக் கொண்டு  நடந்தான். அம்மா இவனுக்காகக் காத்திருந்தாள். குழந்தை ‘பாட்டீ…..! என்று ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக்கொண்டது. ‘அட என் பட்டுகுட்டி! நீயும் வந்திருக்கியா?’ என்று ஓடிவந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அணைத்து முத்தமிட்டாள். குழந்தை பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ‘நீயும் எங்களோட ஊருக்கு வந்துடு பாட்டி!’ என்றது.

 

இவனும் பின்னாலேயே வந்து வீட்டுக்கூடத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தான். குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு, அம்மா இவனுக்கு சுடச்சுட காப்பி கொண்டுவந்தாள். ‘இந்தா, முதலில் இதைச் சாப்பிடு! சாப்பாடும் ரெடி’ என்றாள்.

 

‘கோந்தைக்கு என்ன கொடுக்கட்டும்?’ என்று கேட்டவாறே குழந்தைக்காகத் தான் வாங்கிவைத்திருந்த புது விளையாட்டு சாமான்களை குழந்தையிடம் கொடுத்தாள். குழந்தை சந்தோஷமாக விளையாட ஆரம்பித்தது.

 

அவன் உட்கார்ந்த இடத்திலேயே செருப்பைக் கழற்றிவிட்டு, ‘இரும்மா! கைகால் அலம்பிக்கொண்டு வருகிறேன்’ என்று எழுந்தான். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இவனைத் திரும்பிப் பார்த்து சொல்லிற்று:

 

‘செருப்பை செருப்பு அலமாரில விடுப்பா! அத அத அந்தந்த இடத்தில வைக்கணும்!’

 

அம்மாவும் அவனும் அதிர்ந்து போனார்கள். அதிர்ச்சியிலிருந்து முதலில் விடுபட்டது அம்மாதான். ‘எனக்கு வாரிசு வந்துட்டா! இந்த தடவை உன்னோட ஊருக்கு வரேண்டா!’ என்றபடியே குழந்தையை இறுக்கிக்கட்டிக்கொண்டாள் அம்மா.

 

அவனும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்!

 

 

 

‘பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது!

 குங்குமம் தோழி 15.7.2016 இதழில் வெளிவந்த கட்டுரை

 kungmam 16.7.16

சென்ற பகுதியில் திருமணம் வேண்டும் ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெண்களைப் பார்த்தோம். இந்தப்பகுதியில் நீங்கள் சந்திக்கப்போவது ஒரு வித்தியாசமான பெண்மணி:

 

‘என் பெண்களைக் கேட்டீர்களானால் என்னை ஒரு நல்ல அம்மாவாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’

இப்படிச் சொன்னது ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்திருந்தால் நான் இதை இங்கு எழுதியே இருக்கமாட்டேன். அது ஒரு செய்தியாகவே ஆகி இருக்காது. சொன்னது உலகில் உள்ள – முக்கியமாக இந்தியாவில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பொறாமை கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்மணி! போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் 13 ஆம் இடத்தைப் பிடித்தவரும், உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்தின் உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி! அவர் இப்படிச் சொன்னார் என்றால் உலகமே கவனிக்காதோ? ஆம் கவனித்தது! உலகின் அத்தனை பகுதியிலிருந்தும் இவர் இப்படிச் சொன்னது குறித்து வாதங்கள், விவாதங்கள் என்று ஒரே அல்லோலகல்லோலம் தான்!

 

இத்துடன் இவர் நிற்கவில்லை. தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். கீழே அவர் சொன்னது:

 

‘14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். எப்போதும் நான் வெகு நேரம் வேலை செய்பவள். ஒரு முக்கியமான மீட்டிங்கின் நடுவே என் மேலதிகாரி என்னைக் கூப்பிட்டார். அப்போது மணி இரவு 9.30. ‘இந்திரா, உன்னை நமது நிறுவனத்தின் பிரெசிடென்ட் என்று அறிவிக்கப் போகிறேன். இயக்குனர் குழுவில் நீயும் இருக்கப் போகிறாய்’ என்றார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை – என்னுடைய பின்னணி, எனது பயணத்தின் ஆரம்பக் கட்டங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது – உலகின் மிகச் சிறந்த ஒரு அமெரிக்கா நிறுவனத்தின் ப்ரெசிடென்ட், இயக்குனர் குழுவில் இடம் என்பது எனக்குக் கிடைத்திருக்கும் தனிச்சிறப்பு என்று நினைத்தேன்.

 

சாதாரண நாட்களில் அலுவலகத்திலேயே இருந்து நடுநிசி வரை வேலை செய்பவள் அன்று வீட்டிற்கு சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை என் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். பத்து மணிக்கு வீட்டை அடைந்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பினால் என் அம்மா மாடிப்படிகளின் உச்சியில் நின்றுக்கொண்டிருந்தார். ‘அம்மா! உனக்கு ஒரு நல்ல செய்தி!’ என்றேன்.

 

‘நல்ல செய்தி கொஞ்சநேரம் காத்திருக்கட்டும்! வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வர முடியுமா?’ என்றார்.

நான் கார் நிறுத்துமிடத்தைப் பார்த்தேன். என் கணவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

‘எத்தனை மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தார்?’ நான் கேட்டேன்.

‘8 மணிக்கு!’

‘அவரை வாங்கிக் கொண்டு வரச் சொல்வது தானே?’

‘அவர் ரொம்ப சோர்வாக இருந்தார்!’

‘சரி சரி. நம் வீட்டில் இரண்டு பணியாட்கள் இருக்கிறார்களே!’

‘அவர்களிடம் சொல்ல நான் மறந்துவிட்டேன்!’

‘………………..!’

‘போய் பால் வாங்கிக் கொண்டு வா! அவ்வளவுதான்!’

ஒரு கடமை தவறாத மகளாக நான் வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வந்தேன்.

 

வீட்டிற்குள் சென்று சமையலறை மேடை மேல் பால் பாக்கட்டை ‘பொத்’ என்று வைத்தேன். ‘நான் உனக்காக ஒரு பெரிய செய்தி கொண்டுவந்தேன். எங்கள் நிறுவன இயக்குனர் குழுவில் நான் தலைவராகப் பதவியேற்கப் போகிறேன். நீ என்னவென்றால் ‘போய் பால் வாங்கிக் கொண்டு வா’ என்கிறாய்! என்ன அம்மா நீ?’ பொரிந்து தள்ளினேன்.

 

என் அம்மா அமைதியாகச் சொன்னார்: ‘சில விஷயங்களை நீ தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீ பெப்ஸிகோ வின் தலைவராக இருக்கலாம். இயக்குனர் குழுவில் இருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், நீ ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மருமகள், ஒரு தாய். இவை எல்லாம் கலந்த ஒரு கலவை நீ. அந்த இடத்தை வேறு யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அந்தப் பாழாய்ப்போன அலுவலகக் கிரீடத்தை கார் நிறுத்தத்திலேயே விட்டுவிட்டு வா! அதை வீட்டினுள் கொண்டு வராதே! நான் அந்த மாதிரி கிரீடங்களைப் பார்த்ததே இல்லை!’

 

இதைச் சொன்னவர் யாரென்று இதற்குள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். திருமதி இந்திரா நூயி CEO, பெப்ஸிகோ!

 

இவர் மேலும் சொல்லுகிறார்:

‘பெண்களால் எல்லாவற்றையும் அடைய முடியாது. முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நமக்கு எல்லாம் கிடைத்துவிட்டது போல நாம் பாவனை செய்கிறோம். எனக்குத் திருமணம் ஆகி 34 வருடங்கள் ஆகின்றது. எங்களுக்கு இரண்டு பெண்கள். தினமும் நீங்கள் இன்று ஒரு மனைவியாக இருக்கப் போகிறீர்களா, அல்லது அம்மாவாக இருக்கப் போகிறீர்களா என்று முடிவு எடுக்க வேண்டும். காலை நேரத்தில் அந்த முடிவை எடுக்க வேண்டும். இதற்கு பலரின் உதவி தேவை. நாங்கள் இருவரும் எங்கள் குடுக்பத்தினரின் உதவியை நாடினோம். ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்க நாங்கள் இருவரும் மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறோம். ஆனால் நீங்கள் என் பெண்களைக் கேட்டால் நான் ஒரு நல்ல அம்மா என்று அவர்கள் சொல்லுவார்களா தெரியாது. எல்லாவிதத்திலும் அனுசரித்துக் கொண்டு போக நான் முயலுகிறேன்.

 

என்னுடைய பெண்ணின் பள்ளியில் நடந்ததைக் கூறுகிறேன். ஒவ்வொரு புதன்கிழமையும் அவளது பள்ளியில் ‘ வகுப்பறை காபி’ என்ற நிகழ்வு இருக்கும். மாணவர்கள் தங்கள் அம்மாக்களுடன் சேர்ந்து வகுப்பறையில் காபி அருந்துவார்கள். அலுவலகத்திற்குப் போகும் என்னால் காலை 9 மணிக்கு அதுவும் புதன்கிழமை எப்படிப் போக முடியும்? முக்கால்வாசி நேரம் நான் வகுப்பறைக் காபியை மிஸ் பண்ணிவிடுவேன். என் பெண் மாலையில் வீட்டிற்கு வந்து யார் யாருடைய அம்மாக்கள் வந்தார்கள் என்று பெரிய லிஸ்ட் படித்துவிட்டு, ‘நீதான் வரலை’ என்பாள். ஆரம்பத்தில் மனது மிகவும் வலிக்கும், குற்ற உணர்ச்சி கொன்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக சமாளிக்கக் கற்றேன். அவளது கோபத்திற்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து யார் யாருடைய அம்மாக்கள் வரவில்லை என்ற பட்டியலைப் பெற்றேன். அடுத்தமுறை அவள் வந்து ‘நீ வரலை, நீதான் வரலை’ என்று சொன்னபோது, ‘மிஸஸ் கமலா வரலை; மிஸஸ் சாந்தி வரலை; நான் மட்டுமே கெட்ட அம்மா இல்லை’ என்றேன்.

 

சமாளிக்க வேண்டும்; ஈடு கொடுக்க வேண்டும். இல்லாவிடில் குற்ற உணர்ச்சியிலேயே மடிய நேரிடும். நமது சொந்த வாழ்க்கை கடியாரமும் தொழில் வாழ்க்கைக் கடியாரமும் எப்போதுமே ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கிறது. மொத்தமான, முழுமையான முரண்பாடு! நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; தொழில் வாழ்க்கையின் ஆரம்பநிலையைத் தாண்டி நடுக்கட்டத்திற்கு வரும்போது, குழந்தைகள் பதின்ம வயதில் காலடி வைத்திருப்பார்கள்.

 

அதே சமயம் உங்கள் கணவரும் குழந்தையாக மாறியிருப்பார். அவருக்கும் நீங்கள் வேண்டும்! குழந்தைகளுக்கும் நீங்கள் வேண்டும். என்ன செய்ய முடியும்? உங்களுக்கு வயது ஏற ஏற உங்கள் பெற்றோர்களுக்கும் வயது ஏறிக்கொண்டே போகும். அவர்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஊஹூம்! பெண்களால் எல்லாவற்றையும் அடையவே முடியாது. எல்லாவற்றையும் சமாளிக்க ஒரே வழி – எல்லோருடனும் ஒத்துப்போவதுதான். உங்களுடன் வேலை செய்பவர்களை பழக்குங்கள். உங்கள் குடும்பத்தை ஓர் நீட்டிக்கப்பட்ட குடும்பமாக மாற்றுங்கள்.

 

பெப்சியில் இருக்கும்போது நான் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனது குழந்தைகள் சின்னவர்களாக இருந்த போது குறிப்பாக இரண்டாமவள் நான் எங்கிருந்தாலும் – சீனா, ஜப்பான் – எனது ஆபிஸிற்கு போன் செய்வாள். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு நான் மிகவும் கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருந்தேன். எனது வரவேற்பாளர் போனை எடுப்பார். ‘நான் என் அம்மாவிடம் பேச வேண்டும்!’ எல்லோருக்கும் தெரியும் அது யார் என்று. ‘என்ன வேண்டும் உனக்கு? ‘எனக்கு கேம்ஸ் விளையாட வேண்டும்’ வரவேற்பாளர் உடனே சில வழக்கமா கேள்விகளைக் கேட்பார் : ‘உன்னுடைய வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டாயா?’ என்பது போல. கேள்விகள் முடிந்தவுடன் ‘சரி, நீ ஒரு அரைமணி நேரம் விளையாடலாம்!’ என்பார்.

 

எனக்கும் செய்தி வரும். ‘டீரா கூப்பிட்டாள். நான் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். அவளுக்கு அரைமணி நேரம் விளையாட அனுமதி கொடுத்திருக்கறேன்’ என்று. இதுதான் அல்லது இப்படித்தான் தடங்கல் இல்லாத குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோருடனும், வீட்டில், அலுவலகத்தில் உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் சுமுகமாக இயங்கினால் தான் எல்லாம் நடக்கும். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் ஆக இருப்பது என்பது மூன்று ஆட்கள் செய்யும் முழு நேரப்பணியை ஒருவர் செய்வது. எப்படி எல்லாவற்றிற்கும் நியாயம் செய்ய முடியும்? முடியாது. இவ்வளவையும் சமாளித்துக் கொண்டு போகையில் உங்களை அதிகமாகக் காயப்படுத்துபவர்  உங்கள் துணைவராக இருக்கக்கூடும். என் கணவர் சொல்லுவார்: ‘உன்னுடைய லிஸ்டில் பெப்ஸிகோ, பெப்ஸிகோ, பெப்ஸிகோ, உன் இரண்டு குழந்தைகள், உன் அம்மா பிறகு கடைசி கடைசியாக கீழே நான்…!’ இதை நீங்கள் இரண்டு விதமாகப் பார்க்கலாம் நீங்கள் லிஸ்டில் இருக்கிறீர்களே என்று நினைக்க வேண்டும். புகார் செய்யக் கூடாது!’ இப்படிச் சொல்லித்தான் கணவரை சமாளிக்க வேண்டும்!’

 

இப்படிச் சொல்லியதற்காக இவருக்கு வந்த கண்டனங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.