ஆண்களுக்கு இந்தப் பதிவு!

‘குட்மார்னிங் ஆண்ட்டி…..!’

காலையில் வழக்கம்போல வாசல் தெளிக்க வந்த நான்  பக்கத்து வீட்டு இளைஞரின் குரல் கேட்டு ‘குட் மார்னிங்’ சொல்லியபடியே நிமிர்ந்து பார்த்தேன்.  சற்று வித்தியாசமாகத் தெரிந்தார். என்ன வித்தியாசம் மண்டையைக் குடைந்துகொண்டேன். ஆ! புரிந்து போயிற்று! புதியதாக மீசை வைத்திருக்கிறார். அதுவும் அடர்த்தியாக பார்ப்பவர்களை கேள்வி கேட்க வைக்கும்படியாக!

‘என்ன திடீரென்று மீசை?’

‘இந்த மாதம் முவம்பர்…….!’

‘முவம்பர்?’ மறுபடி என் புருவங்கள் முடிச்சிட்டன.

‘ஆமாம், நிறைய பேர் வேறு வேலை இல்லாமல் மீசை வளர்க்கிறாய் என்று சொல்லுகிறார்கள். அதனால மீசை வளர்க்கறதுக்கும் ஒரு குறிக்கோள் அதான் முவம்பர். அக்டோபர் மாதம் முழுக்க மழமழன்னு ஷேவ் பண்ணிக்கறது.  நவம்பர் மாதம் ‘முஷ்’ – மீசை மட்டும் வளர்க்கறது….’

‘எதுக்கு நவம்பர்ல மீசை மாத்திரம் வளர்க்கணும்….?’

‘என்னைப் பார்க்கறவங்க எல்லாம் உங்கள மாதிரி கேள்வி கேட்பாங்க, இல்லையா? அவங்க கிட்ட ஆண்களின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் இப்படி மீசை வளர்க்கிறேன் என்று சொல்லத்தான். நவம்பர் முழுக்க மீசை – ஆங்கிலத்தில் முஷ்டாஷ் – வளர்ப்பதால் நவம்பர் என்பது முவம்பர் ஆகிவிட்டது. நம்மால் எல்லோரையும் திருத்திவிட முடியாது. அட்லீஸ்ட் இரண்டு பேராவது என் பேச்சைக்கேட்டு முழு ஹெல்த் செக்கப் போனார்கள் என்றால் சந்தோஷமாக இருக்கும், இல்லையா?’

‘………………………’

இன்றைக்கு இணையத்தில் தேட ஒரு விஷயம் அகப்பட்டது என்று நினைத்துக் கொண்டேன்.

இனி முவம்பர் பற்றி இணையத்தில் நான் சேகரித்த தகவல்கள்:

முஷ் (moustache) என்பதன் முதல் இரண்டு எழுத்துக்கள் நவம்பர் (November) என்ற சொல்லில் உள்ள ‘No’ என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டு முவம்பர் ஆகியிருக்கிறது. இதில் பங்குபெறும் ஆண்கள் தங்களை MO BRO (முவம்பர் சகோதரர்கள்) என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும் இந்த இயக்கத்தில் தங்களது பங்கை செய்கிறார்கள். அவர்கள் MO Sistas என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் என்னுமிடத்தில் இரண்டு நண்பர்கள் – ட்ரேவிஸ் கரோன் (Travis Garone), லுயிக் ஸ்லாட்டரி (Luke Slattery) என்ற இரு நண்பர்கள் ஒரு மதுபானக் கடையில் சந்தித்த போது ஒரு எண்ணம் தோன்றியது. ஆண்களின் மீசையை அடையாளமாக வைத்து ஆண்கள் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்று. 30 இளைஞர்கள் இந்த சவாலை ஏற்க தயாராயினர். இது நடந்தது 2003 ஆம் ஆண்டு. இதை தொடர்ந்து இந்த முவம்பர் என்ற இயக்கம் பதிவு செய்யப்பட்டு இணையதளமும் உருவாக்கப்பட்டது. இதன் மையக் குறிக்கோள் மீசை வளர்ப்பது; அது பற்றிக் கேட்பவர்களிடம் ஆண்களின் உடல்நலம் பற்றிப் பேசுவது.

ஆண்களைத் தாக்கும் ப்ரோஸ்டேட் மற்றும் டெஸ்ட்டிக்யூலர் புற்றுநோய்கள், மனநலம் குன்றுதல் அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளுதல்,  போதுமான அளவு உடல் உழைப்பின்மை அதனால் நேரிடும் மரணம் போன்றவை பற்றிய போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடையே – குறிப்பாக ஆண்களிடையே இல்லை. முவம்பர் இயக்கத்தின் குறிக்கோள் இவை பற்றிய விழிப்புணர்வை ஆண்களிடையே ஏற்படுத்தி அவர்களை தங்கள் உடல்நலம் பற்றி சிந்திக்க வைப்பதுதான்.

இந்த இயக்கத்தில் சேர விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது அக்டோபர் மாதம் முழுவதும் முகத்தை  மழுங்க சிரைத்துக் கொள்ள வேண்டும். நவம்பர் மாதம் முதல் நாளிலிருந்து  மீசை மட்டும் வளர்க்க வேண்டும். என்ன திடீரென்று மீசை என்று கேட்கிறவர்களிடம் ஆண்கள் உடல்நலம் பற்றி பேச வேண்டும். முவம்பர் இணையதளத்தில் உங்கள் பெயரை பதிந்து கொள்வதன் மூலம் இந்த இயக்கத்தில் நீங்கள் இணையலாம். ஆண்கள் தங்களின் உடல்நலத்தைப் புறக்கணிப்பதால் வரும் தீமைகள் பற்றி நிறைய தெரிந்து கொண்டு பின் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொல்லத் தொடங்கலாம். இந்த இயக்கத்திற்கான முகநூல் பக்கமும் இருக்கிறது.

பெண்களை போல ஆண்கள் தங்கள் உடல்நலம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என்கிற மனநிலைதான் இதற்குக் காரணம். அதிலும் இந்திய ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை ரொம்பவும் புறக்கணிக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. விரை வீக்கம் அல்லது விபரீதமான மனஅழுத்தம் போன்றவற்றைப் பற்றி பேச ஆண்களிடைய எப்போதும் ஒரு தயக்கம். குறிப்பாக படித்த, இளம்வயது ஆண்களிடையே இந்தத் தயக்கம் மிகவும் அதிகம் இருக்கிறது. அத்துடன் ஹெல்த் செக்-அப் என்பதை அவர்கள் விரும்புவதில்லை – ‘நான் நன்றாகத் தானே இருக்கிறேன்!’ என்ற மனப்பான்மை.

அடுத்தமுறை ரூபனைப் பார்த்தபோது நான் இணையத்தில் படித்துத் தெரிந்து கொண்டதை சொன்னேன். ‘இந்தியாவில் இன்னும் இந்த இயக்கம் அவ்வளவாக அறியப்படவில்லை’  என்பதை மிகவும் வருத்தத்துடன் சொன்னார் அவர். ‘நான் ஒருமுறை அலுவலக வேலை தொடர்பாக லண்டன் போயிருந்தபோதுதான் இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொண்டேன். என்னுடைய உறவினர்களிலேயே சிலரை புற்றுநோய் பறித்துக் கொண்டது. இந்த இயக்கத்தில் சேர்ந்து புற்றுநோய்க்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளவும், இந்நோயில் அவதிப்படுபவர்களுக்கு உதவவும், ஆண்களிடைய இந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்மானித்தேன்’.

‘பலர் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நன்கொடை அளிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். இந்த இயக்கத்தின் அலுவலகம் இந்தியாவில் இல்லாதது ஒரு பெரிய குறை. சிலர் முதலில் ஆர்வம் காட்டினாலும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு மறந்து விடுகிறார்கள். பெறப்படும் நன்கொடைகள் வசதி இல்லாதவர்களின் சிகிச்சைக்கும், இந்த நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன’ என்றார் மேலும்.

மொத்தத்தில் இந்த நவம்பர் மாதத்தில் மீசை என்பது ஆண்களின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகை என்று சொல்லவேண்டும். ஆனால் அந்த மீசை மற்றவர்களின் கவனத்தைக் கவரக் கூடிய வகையில் இருக்க வேண்டும். ‘என்ன மச்சி! முகத்துல முறம் மாதிரி மீசை வச்சிருக்கே?’ என்று நக்கலடிக்கிறவர்களிடம் வித்தியாசமான இந்த இயக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

முவம்பர் இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றி அறிய கீழ்கண்ட தகவல்கள் உதவும்:

 • 7 ஆண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.
 • டெஸ்ட்டிக்யூலர் புற்றுநோய் 15-34 வயதுவரை உள்ள ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
 • ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 87 ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.
 • போதுமான அளவு உடல் உழைப்பு இல்லாமல் போவதால் வருடந்தோறும் 3.2 மில்லியன் இறப்புகள் நேரிடுகிறது.

நிறைய ஆண்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்து தங்கள் உடல்நலத்தைப் பேண வேண்டும் என்பதற்காக பல்வேறு பரிசுகள், விருதுகள் வழங்கப்படுகின்றன. அதிக நன்கொடை வசூலித்துத் தருபவர்களுக்கு பரிசுகள் உண்டு.

ஆரோக்கியத்தைப் பேண ஆண்களுக்கு இந்த இயக்கம் தரும் சில அறிவுரைகள்:

 • மற்ற விஷயங்களைப் போலவே நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். இதனால் உங்களுக்கும் நன்மை; உங்கள் நண்பர்களுக்கும் அப்படியே.
 • உங்களிடம் ஏதாவது மாறுதல் தெரிந்தால் சொல்லச் சொல்லுங்கள். அதேபோல அவரிடம் ஏதாவது வழக்கத்திற்கு மாறாக வித்தியாசம் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள்.
 • எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் நண்பர் சோர்வாகத் தெரிகிறாரா, உடனே அவரை மனம் விட்டுப் பேசச் சொல்லுங்கள். பொதுவா ஆண்கள் தங்கள் மனக்குறைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை விரும்புவதில்லை. உடல்நலக் குறைவு பற்றி பேசும் ஆண்கள் மிகமிகக் குறைவு.
 • உங்கள் நண்பருடன் சேர்ந்து நடக்கலாம், ஓடலாம்; உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
 • உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் உங்கள் குடும்பம் மட்டுமல்ல இந்த சமுதாயமும் ஆரோக்கியமாக மாறும்.
 • உங்கள் உடம்பைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஏதாவது ஒரு உறுப்பில் வலியோ, வீக்கமோ இருந்தால், தானாகவே சரியாகிவிடும் என்று அசட்டையாக இருக்காதீர்கள். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். முன்கூட்டி அறிதலினால் பல நோய்களை நாம் தடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
 • சுறுசுறுப்பாக இருங்கள். உங்களை எப்படி சுறுசுறுப்பாக வைத்திருப்பது என்பது உங்கள் கையில் இருக்கிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. ஒரு சின்ன நடை, சின்னதாக ஒரு ஓட்டம், அல்லது அரைமணிநேரம் விளையாடுதல் என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள்.
 • வாழ்க்கைத் துணையுடன் அல்லது விரும்பியவருடன் உறவு முறிதல், வேலையை இழத்தல், பணக்கஷ்டம், அல்லது முதல் முறையாக அப்பா ஆதல் முதலியவை உங்கள் வாழ்வில் மிகப்பெரிய விஷயங்கள். இவற்றினால் உங்களுக்கு ஏற்படும் துக்கம், மனக்கலக்கம், சந்தோஷம் இவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் தவறேதும் இல்லை.
 • உங்கள் குடும்ப சரித்திரம் பற்றி அறிந்துகொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அறிய இது உதவும். உங்கள் பெற்றோர்கள் எந்தெந்த நோய்களினால் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரம் உங்கள் உடல்நிலை பற்றியும், உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை பற்றியும் அறிய உதவும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் இது பற்றிப் பேசுங்கள். இறந்தவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.

குடும்பத்தலைவராக, குடும்பத்தை நடத்திச் செல்லுபவர்களின் ஆரோக்கியமும் முக்கியம். பெண்களின் உடல்நலத்திற்காக அக்டோபர் மாதம் பிங்க் ரிப்பன் என்று இருப்பது போலவே இந்த நவம்பர் – முவம்பர் மாதம் ஆண்களின் உடல்நலத்தை பேண.

எல்லா ஆண்களுக்கும் இந்த செய்தி போய்ச் சேர் வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் முக்கிய நோக்கம். படிப்பவர்கள் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள், ப்ளீஸ்!

மேலும் விவரங்களுக்கு: முவம்பர் பவுண்டேஷன் 

சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’

 

 

2014 ஏப்ரல் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான கட்டுரை

 

 

நிறைய எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்தாலும், ஒரு சிலரது எழுத்துக்கள் நம்மை மிகவும் கவர்ந்து விடுகின்றன. அந்த சிலரில் இன்று மறைந்த குஷ்வந்த் சிங் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர். நிறைய எழுதியிருக்கிறார். இவரது எழுத்துக்களில் கிண்டலும் கேலியும் அதிகமாக இருக்கும். எல்லோரையுமே நகைச்சுவை கலந்து சாடியிருப்பார். அதுவே இவரது எழுத்துக்களுக்கு சுவாரஸ்யம் கூட்டியது என்று சொல்லலாம். சம்பந்தப்பட்டவர் படித்தால் கூட நிச்சயம் சின்ன புன்னகையாவது செய்வார். பிறகுதான் கோபித்துக் கொள்வார். அவருக்கும் கூட சிலசமயம் இவர் எழுதுவது ‘நிஜம்தானே?’ என்று தோன்றலாம்!

 

இவர் எழுதும் பெரிய நூல்களை விட தினசரியில் இவர் எழுதி வந்த சின்ன சின்ன பத்திகள் மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்தவை. மற்றவர்களைப் பற்றி மட்டுமல்ல; தனது தவறுகளையும் வெளிப்படையாக பேச இவர் எப்போதும் தயங்கியது இல்லை. இவர் எழுதிய பத்திகளில் நான் படித்தவற்றில் எனக்கு நினைவு இருப்பது இதோ:

 

வெளிநாடு போயிருந்தபோது ஒருமுறை வயிற்று உபாதைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றாராம். மருத்துவர் இவரைப்பார்த்து, ‘கடந்த ஒரு வாரத்தில் என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டுவிட்டு இவர் சொல்வதைக் குறித்துக் கொண்டாராம். மருந்து எழுதிக்கொடுத்துவிட்டு, ‘ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

 

ஒருவாரம் கழித்து இவர் மருத்துவமனைக்குப் போனபோது அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒரு மேஜையின் மேல் இருந்ததாம். அதனுள் நிறைய திரவம், நிறைய திடப்பொருள் என்று ஒரு கலவை. அதைப்பார்க்கவே இவருக்கு ஒரு மாதிரி இருந்ததாம். மருத்துவர் சொல்லும்வரை காத்திருக்காமல், இவரே கேட்டாராம்: ‘அந்த ஜாடிக்குள் என்ன?’ என்று. ‘நீ ஒரு வாரமாக என்னென்ன சாப்பிட்டாயோ அதெல்லாம் அந்த ஜாடிக்குள் இருக்கிறது’ என்று பதிலளித்தாராம் மருத்துவர். ‘வயிறு என்பதை வயிறாக நினை. இதைபோல ஒரு கண்ணாடி ஜாடி என்று நினைத்து கிடைத்ததை எல்லாம் அதற்குள் போடாதே!’ என்றாராம் மருத்துவர்.

 

அவரது பெயரைப்போலவே மிகவும் ஜாலியானவர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது எழுத்துக்களுக்கு ரசிகர்கள் உண்டு. 99 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த அவர் ஒரு மனிதனின்  என்ன தேவை என்று பட்டியலிடுகிறார்:

 

 1. முதல் தேவை: பரிபூரண ஆரோக்கியம். சின்ன நோய் என்றால் கூட உங்கள் சந்தோஷத்தை அது பாதிக்கும்
 2. இரண்டாவது தேவை: போதுமான அளவு வங்கித் தொகை: இது லட்சக்கணக்கில் இல்லாமல் போனாலும், வாழ்க்கையின் வசதிகளை அளிக்க வல்லதாக இருக்கவேண்டும். வெளியில் போய் சாப்பிடுவதற்கும், அவ்வப்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கும், பிடித்த இடங்களைப் போய் பார்த்து வருவதற்கும், விடுமுறையை மலை வாசஸ்தலத்திலோ அல்லது கடற்கரை அருகிலோ கழிக்கவும் உதவுவதாக இருக்க வேண்டும். பணப்பற்றாக்குறை உங்களை நிலைகுலையச் செய்யும். கடன் வாங்குவது, கிரெடிட் கார்டுகளில் வாழ்வது தவறான பழக்கம். நம்மைப் பற்றிய பிறரது கணிப்பில் நம் மதிப்பு குறையும்.
 3. மூன்றாவது தேவை: சொந்தவீடு. நம் வீட்டில் கிடைக்கும் சுகம் வாடகை வீடுகளில் கிடைக்காது. சின்னதாக ஒரு தோட்டம். நம் கையால் விதை போட்டு சின்னஞ்சிறு செடிகள் முளைத்து பூக்கள் மலருவதைப் பார்ப்பதும், அவற்றுடன் ஒரு நட்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.
 4. நான்காவது தேவை: நம்மைப் புரிந்துக்கொண்ட ஒரு மனைவி/கணவன்/ ஒரு நண்பன். புரிதல் இல்லாத வாழ்வில் சேர்ந்து இருந்து, ஒருவரையொருவர் கடித்துக் குதறிக் கொள்வதை விட மணவிலக்கு எவ்வளவோ மேல்.
 5. ஐந்தாவது தேவை: நம்மைவிட நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் இருத்தல்: பொறாமை உங்களை அரித்துவிடும். மற்றவருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
 6. ஆறாவது தேவை: விலகி இருத்தல். வதந்திகளைப் பரப்புபவர்களை கிட்டே நெருங்க விடாதீர்கள். அவர்களது வார்த்தைகள் உங்களை செயலிழக்கச் செய்வதுடன், உங்கள் மனதையும் விஷமாக்கும்.
 7. ஏழாவது தேவை: உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். தோட்டவேலை, புத்தகம் படித்தல், எழுதுதல், படங்கள் வரைதல், விளையாடுதல் அல்லது இசையைக் கேட்டல் என ஏதாவது உங்களுக்கென்று வேண்டும்.
 8. எட்டாவது தேவை: தினமும் காலையும் மாலையும் 15 நிமிடங்கள் சுயபரிசோதனைக்கு ஒதுக்குங்கள். காலை பத்து நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்தவும், 5 நிமிடங்கள் இன்று என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவும் ஒதுக்கவும். அதேபோல மாலை 5 நிமிடங்கள் மனதை நிலைநிறுத்தவும், பத்து நிமிடங்கள் என்னென்ன செய்து முடித்தீர்கள் என்று பார்க்கவும் நேரத்தை செலவிடுங்கள்.
 9. கடைசியாக கோபம் கொள்ளாதீர்கள். முன்கோபம், பழி வாங்கும் எண்ணம் வேண்டவே வேண்டாம். உங்களின் நண்பர் கடுமையாகப் பேசினால் கூட சட்டென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள்.

 

இவையெல்லாவற்றையும் விட மிகவும் தேவையான ஒன்று:

இறக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய வருத்தங்களோ, உறவினர்கள், நண்பர்கள் பற்றிய எந்தவிதமான மனக்குறைகளோ இல்லாமல் மரணிக்க வேண்டும். பாரசீக மொழியில் கவிஞர் இக்பால் சொல்லுவதை நினைவில் கொள்வோம்: ‘உண்மையான மனிதனின் லட்சணங்கள் என்ன தெரியுமா? மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பதுதான்’.

 

2014 மார்ச் மாதம் 20 நாள் மரணத்தைத் தழுவிய இந்த மனம்கவர் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்!

 

இதையும் படிக்கலாமே!

மரணம் என்பது என்ன? 

 

 

 

 

 

மரணம் என்பது என்ன?

kushwant singh

 

4tamilmedia.com – தளத்தில் இன்று பிரசுரம் ஆகியிருப்பது

20.3.2014 அன்று மறைந்த பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களின் Absolute Kushwant: The Low-Down on Life, Death & Most Things In-Between – என்ற  புத்தகத்திலிருந்து:

இறப்பு என்பதை நம் வீடுகளில் அவ்வளவாக பேசுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்ததுதானே – மரணம் என்பது வந்தே தீரும்; தவிர்க்க இயலாதது என்று. பின் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசுவது இல்லை என்று நான் வியப்பதுண்டு. உருது கவிஞர் யஸ் யகானா சாங்கேசி (Yas Yagana Changezi) வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘கடவுள் இருப்பதைநீ  சந்தேகிக்கலாம்; சந்தேகிக்காமல் இருக்கலாம். ஆனால் மரணம் என்பதன் நிச்சயத்தன்மையை நீ சந்தேகிக்க முடியாது’. மரணத்திற்கு ஒருவர் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.

 

இந்த 95வது வயதில் மரணத்தைப் பற்றி நான் நினைக்கிறேன். அடிக்கடி நினைக்கிறேன். ஆனால் அதை நினைத்து என் தூக்கத்தை இழப்பதில்லை. மறைந்து போனவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன். எங்கு இருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்? எங்கு இருக்கக்கூடும்? என்னிடம் விடைகள் இல்லை. எங்கு போகிறோம்? மரணத்திற்குப் பின் என்ன?

உமர் கய்யாம் சொல்லுகிறார் ‘எங்கிருந்தோ இந்த பூமியில் ஏன் என்று தெரியாமலேயே… மெல்ல ஓடும் நீர் போல…..’

‘அதோ ஒரு கதவு என்னிடம் திறவுகோல் இல்லை;

அதோ ஒரு திரை என்னால் ஊடுருவி பார்க்கமுடியவில்லை;

என்னைப் பற்றியும் போனவர்களைப் பற்றியும்

சின்ன சின்ன பேச்சு சில காலத்திற்கு

பிறகு பேச்சு நான், அவர்கள் யாரும் இருப்பதில்லை…..’

 

ஒருமுறை தலாய் லாமாவைக் கேட்டேன்: மரணத்தை ஒருவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று. அவர் தியானத்தை அறிவுறுத்தினார். மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. அது என்னை பயமுறுத்துவதும் இல்லை. மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்தைப் பற்றி நான் அதிகமாக நினைத்தாலும் அதை நினைத்து நினைத்து மாய்வதில்லை. மரணத்திற்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ளுகிறேன்.

 

அசதுல்லாகான் காலிப் சரியாகச் சொன்னார்:

‘வயது நாலுகால் பாய்ச்சலில் பிரயாணம் செய்கிறது;

யாருக்குத் தெரியும் அது எப்போது நிற்கும் என்று?

அதன் கடிவாளம் நம் கைகளில் இல்லை

நம் கால்களும் அதன் வளையத்தில் இல்லை’

 

என் வயதொத்தவர்கள், சமகாலத்தவர்கள் – இந்தியாவில், இங்கிலாந்தில், பாகிஸ்தானில் – எல்லோரும் போய்விட்டார்கள். இன்னும் இரண்டொரு வருடத்தில் நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. மரணத்திற்கு அஞ்சவில்லை; ஆனால் நான் பயப்படுவது ஒரு நாள் கண் தெரியாமல் போய்விட்டால்? வயதானதால் இயலாதவனாகிவிட்டால்? இப்படி ஒரு நிலையில் இருப்பதை விட இறப்பது மேல். ஏற்கனவே என் பெண் மாலாவிற்கு நான் பாரமாகவிட்டேன். மேலும் சுமக்க முடியாத பாரமாக விரும்பவில்லை.

 

நான் வேண்டுவது எல்லாம் மரணம் வரும்போது அது சடுதியில் வரட்டும்; அதிக வலி இல்லாமல், ஆழ்ந்த தூக்கத்திலேயே மறைவது போல. அதுவரை நான் வேலை செய்து கொண்டே ஒவ்வொரு நாளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ விரும்புகிறேன். இன்னும் நான் செய்து முடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் நான் ‘பெரிய அண்ணா’ (கடவுளை இப்படித்தான் குறிப்பிடுகிறேன்) விடம் சொல்ல விரும்புவது இது தான்: ‘நான் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை நீ எனக்காக காத்திரு’.

 

ஜெயின் தத்த்வத்தில் மரணத்தை கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நானும் இதை நம்புகிறேன். முன்பெல்லாம் உற்சாகம் குறைந்தால் நான் சுடுகாட்டிற்குப் போவதுண்டு. மனதை தூய்மைபடுத்தி, எனது மனவருத்தத்திற்கு சிகிச்சையாக இது இருக்கிறது.  பல வருடங்களுக்கு முன்பே எனக்காக நான் ஒரு கல்லறை வாசகம் எழுதினேன்.

இங்கே உறங்குகிறான் ஒருவன்

மனிதனையும், ஏன் இறைவனையும் கூட

சாடத் தயங்காத ஒருவன்

இவன் ஒரு பதர்,  இவனுக்காக உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள்

மோசமாக எழுதுவதை நகைச்சுவை என்று நினைத்தவன்

பாவி மகன் ஒழிந்தான் என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்

 

1943 ஆம் வருடத்திலேயே (எனது இருபது வயதுகளில் இருந்தேன் அப்போது) என்னுடைய நினைவுநாள் செய்தி எழுதினேன். பல வருடங்களுக்குப் பின் இது ‘இறப்பிற்குப் பின்’ என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் வெளியானது. என்னுடைய மறைவு ‘டிரிப்யூன்’ பத்திரிகையில் இப்படி வருகிறது:

முதல் பக்கத்தில் ஒரு சின்ன புகைப்படத்துடன்: ‘சர்தார் குஷ்வந்த் சிங் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஒரு இளம் விதவையையும், இரண்டு சின்னக் குழந்தைகளையும், ஏராளமான நண்பர்களையும், நேசித்தவர்களையும் விட்டுவிட்டுச் சென்று விட்டார், செய்தி அறிந்து சர்தாரின் வீட்டிற்கு வந்தவர்கள் தலைமை நீதிபதி, பல மந்திரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் உதவியாளர்கள்’.

 

என் மனைவி இறந்த போது மரணத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஒரு லோகாயுதவாதி. மதம் சார்ந்த சடங்குகளில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. நான் ஒரு தனிமை விரும்பி ஆதலால் என் நண்பர்கள், உறவினர்கள் என்னை சமாதனப்படுத்த வருவதை தவிர்த்தேன். மனைவி இறந்த அன்று இரவு தனிமையில் இருட்டில் எனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அந்த இரவுப் பொழுதை கழித்தேன். சிலசமயம் அடக்க முடியாமல் அழுதேன். வெகு சீக்கிரம் தேறினேன். ஓரிரு நாட்களில் எனது மாமூல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். விடியலிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உழைத்தேன். இனி தனிமையில்தான் வாழவேண்டும் என்ற நிதர்சனத்தை, காலி வீட்டில் எனது மீதி வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்ற நிலையை என் மனதிலிருந்து மறக்க இந்த உழைப்பு உதவியது. நண்பர்கள் வந்து எனது சமநிலையை கெடுப்பதற்குமுன் கோவாவிற்குச் சென்றுவிட்டேன்.

 

இறந்த பின் புதைக்கப்படுவதையே விரும்பினேன். எந்த மண்ணிலிருந்து வந்தோமோ அதே மண்ணுக்குப் போகிறோம், புதைக்கப்படுவதால். பஹாய் முறையில் நம்பிக்கை கொண்ட நான் இறந்த பின் என்னைப் புதைக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் ஒப்புக்கொண்ட அவர்கள், பிறகு ஏதேதோ சட்டதிட்டங்களுடன் வந்தார்கள். ஒரு மூலையில் புதைக்கப்பட்டு எனது புதைகுழி அருகே ஒரு அரச மரம் நடவேண்டும் என்றேன். இதற்கும் சரி என்றவர்கள் பிறகு வந்து எனது புதைகுழி ஒரு வரிசையின் நடுவில் இருக்குமென்றும், மூலையில் இருப்பது சாத்தியம் இல்லையென்றும் சொன்னார்கள். எனக்கு இது சரிவரவில்லை. இறந்தபின் எல்லாம் ஒன்றுதான் என்று தெரிந்தாலும் ஒரு மூலையில் புதைக்கப்படுவதையே விரும்பினேன். இன்னொன்றும் அவர்கள் சொன்னார்கள் நான் இறந்தபின் சில பிரார்த்தனைகளை சொல்வார்கள் என்று. இதற்கும் நான் ஒப்பவில்லை –  நான் மதத்தையோ, மதச் சடங்குகளையோ நம்பாதவன் என்பதால்.

 

நான் இப்போதைக்கு நல்ல ஆரோக்கியத்தில் இருந்தாலும் அதிக நாட்கள் என்னிடம் இல்லை என்று தெரியும். மரணத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மரணம் என்பது எனது பாவ புண்ணியங்களுக்கு தீர்ப்பு சொல்லும் நாள் என்பதையும், சுவர்க்கம் நரகம் இவற்றிலும் நம்பிக்கை இல்லை. மறுபிறவியிலும் நம்பிக்கை இல்லை. அதனால் மரணம் என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும்.  மரணமடைந்தவர்களைக் கூட நீ விடுவதில்லையா என்று என்னை விமரிசிக்கிறார்கள் சிலர். மரணம் ஒருவனைத் தூய்மைப்படுத்துவதில்லை. ஒருவர் ஊழல்வாதியாக இருந்தால் மரணத்திற்குப் பின்னும் அவரை நான் விடுவதில்லை; சாடுகிறேன்.

 

மரணம் என்பதன் இறுதிநிலையை ஏற்றுக்கொள்ளுகிறேன். மரணத்திற்குப் பின் நமக்கு என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவர் அமைதியாக மரணத்தைத் தழுவ நாம் உதவ வேண்டும். தான் வாழ்ந்த வாழ்க்கை, இந்த உலகம் இரண்டிலும் சமாதானம் அடைந்தவனாக முழுமை அடைந்தவனாக மரணத்தை தழுவ வேண்டும்.

 

எல்லாவற்றையும் விட மரணவேளையில் வருத்தங்களோ, மனக்குறைகளோ இல்லாதவனாக ஒருவன் இருக்க வேண்டும். பாரசீகக் கவிஞன் இக்பால் சொன்னது போல: ‘உண்மையான மனிதனின் அறிகுறி என்ன என்று என்னைக் கேட்டால் – மரணம் வரும்போது அவனது இதழில் புன்னகை இருக்க வேண்டும்!’

 

தமிழ் மொழியாக்கம், கட்டுரை ஆக்கம்: ரஞ்சனி நாராயணன் 

 

சரியாத்தான் சொன்னாரு குஷ்!

 

நிம்மதி சூழ்க 

நிம்மதி சூழ்க!

 

நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

 

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

 

பாசம் உலாவிய கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?

தேசம் அளாவிய கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே?

 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க

எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக

எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

 

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை

இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை

நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை

மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

 

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன!

 

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட செடி வந்து சேரும்

 

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்

நித்திரை போவது நியதி என்றாலும்

யாத்திரை என்பது தொடர் கதையாகும்

 

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்

சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

 

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க!

தூயவர் கண்ணொளி சூரியர் சேர்க!

பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

கவிஞர் வைரமுத்து 

 

மரணம் என்பது என்ன?