ரயில் பயணங்களில்…..4 ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாமா?

 

ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாமா?’ என்றார் இன்னொரு பெண். நானும் என் கணவரும் ஒருவரையொருவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம் – இத்தனைக்குப் பிறகு சிற்றுண்டியா? என்று மயங்கி விழாமல் இருக்க! காலை சிற்றுண்டியை ஒரு அரசனைப் போல சாப்பிட வேண்டும் என்பார்களே அதன் முழு அர்த்தம் அன்றைக்குத் தான் புரிந்தது. முதலில் சிகப்புக் கலரில் பூரி வந்தது. எங்களுக்கும் தான்! (இந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்) அடுத்து நெய் தடவிய ரொட்டி. அடுத்தது ஃபூல்கா சப்பாத்தி. அதற்கு தொட்டுக்கொள்ள வகைவகையான மசாலாக்கள், கறிவகைகள் அதைத் தவிர ஊறுகாய்கள். அந்த சிற்றுண்டி அரசனுக்கு மட்டுமல்ல; அவனது அரசவைக்கும், ஏன் குடிமக்களுக்கும் கூட போதும். அத்தனை வகைகள்!

 

நடுநடுவில் ரயிலில் வரும் குர்குரே, லேஸ், பிஸ்கட் வகைகள் வேறு வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். டாங்கோ ஜூஸ் ரயிலிலேயே செய்து எல்லோருக்கும் விநியோகம் செய்தார்கள்.

‘ஆண்ட்டி நீங்கள் ‘தியா அவுர் பாத்தி’ (இது ஒரு ஹிந்தி சீரியல் – தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் வருகிறது)  பார்ப்பீங்களா? எங்கள் வீடுகளும் அப்படித்தான் இருக்கும். எல்லோரும் கூட்டுக் குடும்பத்தில் தான் இருக்கிறோம். நாங்கள் எல்லோரும் நண்பர்கள் தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; எங்கள் கணவன்மார்கள் – மொத்தம் 7 பேர்கள் – பள்ளிக்கூட நாட்களிலிருந்து நண்பர்கள். ஒவ்வொரு வருடமும் 7 குடும்பங்களும் சேர்ந்து எங்காவது சுற்றுலா போவோம். இந்த முறை நான்கு பேர்களால் வரமுடியவில்லை. நாங்கள் லோனாவாலாவில் இறங்கு ‘இமேஜிகா’ தீம் பார்க் போய்க்கொண்டிருகிறோம்.’

 

பேசிக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும்போது ஒரு பெண் யாருக்கோ போன் செய்து மொத்தம் 12 சாப்பாடு வேண்டும் என்று சொன்னார். மதிய உணவு! நல்லவேளை கைக்குழந்தை தப்பித்தது! என்னிடம் ஒரு நம்பர் கொடுத்து, ‘நீங்க திரும்பி வரும்போது சாப்பாடு வேண்டுமென்றால் இந்த எண்ணுக்கு போன் செய்தால் உங்களுக்கு சாப்பாடு ரயிலிலேயே கொண்டுவந்து கொடுப்பார்கள்’ என்றார். நாங்கள் மும்பையிலிருந்து திரும்பும்போது அந்த எண் பயன்பட்டது.

 

‘கூச்சப்படாமல் சாப்பிடுங்க ஆண்ட்டி, அங்கிள்’ என்று ஏக உபசாரம் வேறு. ‘எல்லாமே வீட்டில் செய்தது. எங்களை ரொம்ப படிக்க வைக்க மாட்டார்கள், ஆண்ட்டி. சமையல் வேலை செய்ய பழக்குவார்கள். விதம்விதமாக இனிப்பு வகைகள், சமோசா, கட்லெட் என்று செய்வோம். எங்கள் தலைமுறை பரவாயில்லை. நாங்கள் எல்லோருமே கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறோம். எங்கள் அம்மா எல்லாம் சரியாகப் பள்ளிக்கும் போனதில்லை. இப்போது நாங்களும் படிக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறோம்’

 

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தே எங்களுக்கு வயிறு நிரம்பிப் போயிருந்தது. ஒரு பூரி, ஒரு நெய் ரொட்டி, ஒரு பூல்கா என்று வாங்கிக் கொண்டோம். நாங்கள் எடுத்துப் போயிருந்த சப்பாத்தி, தக்காளி தொக்கு இரண்டையும் அவர்களுக்குக் கொடுக்கவே வெட்கமாக இருந்தது! நான் 6 சப்பாத்தி எடுத்துக் கொண்டு போயிருந்தேன். யானைப் பசிக்கு அது சோளப்பொரி இல்லையோ? என் கணவர் ஒரு ஸ்டேஷனில் இறங்கி வாழைப்பழங்கள் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுத்தார்.

 

மதிய சாப்பாடு முடிந்தவுடன் இனிப்பு வகைகள் ஆரம்பமாயின. முதலில் லட்டு; அடுத்தது மலாய் சிக்கி; பிறகு பாதாம் பர்பி; பிறகு…..பிறகு…… எனக்கு பெயர்கள் கூட மறந்துவிட்டது. சாப்பாடு முடிந்தவுடன் பான் வேண்டுமே. அதுவும் கொண்டுவந்திருந்தார்கள். வகை வகையாகப் பாக்கு, சோம்பு, சாரைப்பருப்பு என்று. அது முடிந்தவுடன் உலர்ந்த எலந்தம் பழம். ‘ஜீரணத்திற்கு நல்லது’ என்று சொல்லி கொடுத்தார்கள்.

 

ஒருவழியாக லோனாவாலா ஸ்டேஷன் வந்ததோ, நாங்கள் பிழைத்தோமோ! பிரியாவிடை கொடுத்து ‘நன்றாக எஞ்ஜாய் பண்ணுங்கள்’ என்று வழியனுப்பி வைத்தோம்.

 

அவர்கள் இறங்கிப் போனதும் என் கணவர் கேட்டாரே ஒரு கேள்வி: ‘இப்படி விடாமல் சாப்பிடுகிறார்களே, அந்தப் பெண்கள் எப்படி ஒல்லியாவே இருக்காங்க?’

 

‘அம்பது வயசுக்கு மேலே குண்டடிப்பாங்க’ என்று சொன்னேன். சரிதானே? (ஹி…..ஹி…..சொந்த அனுபவந்தேன்!)

 

மறக்க முடியாத (சாப்பாட்டு) மனிதர்கள்!

 

 

 

 

 

ரயில் பயணங்களில்…….3 அட்சய பாத்திரம் கொண்டுவந்த ஜெயின் குடும்பம்

kaaraa boonthiமும்பைக்குப் பயணம். பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து இரவு கிளம்பும் உதயான் விரைவு வண்டி. பெங்களூரு கண்டோன்மென்ட்டில் ஒரு குடும்பம் ஏறியது. எங்கள் குடும்பம் பெரிசு என்பதுபோல நிறைய குழந்தைகள், பெண்கள், ஆண்கள். அதைவிட நிறைய சாமான்கள். ‘எத்தனை லக்கேஜ் ?’ என்று நினைத்துக் கொண்டவள் மௌனமானேன்.

ஏனென்றால் ஒருமுறை இப்படித்தான் ஒரு குடும்பம் –பெரிய குடும்பம் தான் – எங்கள் பெட்டியில் ஏறியது. எங்கள் சாமான்களை அப்படியும் இப்படியும் நகர்த்தி நகர்த்தி அவர்கள் சாமான்களை வைக்க ஆரம்பித்தனர். ‘எங்க சாமான்கள் அப்படியே இருக்கட்டும்; மூன்று airbags தான் என்றேன். ‘ஏனம்மா, உங்க ரெண்டு பேருக்கு மூணு பைன்னா நாங்க 6 பேரு எவ்வளவு பை இருக்கும், சொல்லுங்க’ என்றார் அந்தக் குடும்பத் தலைவர்! அன்றிலிருந்து லக்கேஜ் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஒவ்வொருத்தர் எடுத்துக் கொண்டு வருவார்கள் பாருங்கள், பிரயாணத்திற்கா இல்லை வீட்டையே – சில சமயம் ஊரையே – காலி பண்ணிக் கொண்டு போகிறார்களா என்று தோன்றும்!

இப்போது எங்கள் பெட்டியில் ஏறியவர்கள் மொத்தம் மூன்று குடும்பங்கள் – கணவன், மனைவி மூன்று ஜோடி, ஏழு குழந்தைகள். ‘நான் இங்க, நீ அங்க’ என்று சளசளவென்று ஒரே சத்தம். இன்னிக்கு ராத்திரி அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டேன். அதிர்ஷ்டவசமாக எங்களிருவருக்கும் லோயர் பெர்த்! IRCTC வாழ்க! சிறிது நேரம் கழித்து புடவையில் வந்த பெண்கள் அனைவரும் நைட் உடைக்கு மாறினார்கள். குழந்தைகளைப் படுக்க  வைத்துவிட்டு அவர்களும் படுத்துவிட்டனர். இரவு நான் நினைத்த அளவிற்கு சத்தம் இல்லை   doughtnut 2காலை விடிந்ததோ இல்லையோ, சாப்பாடுக் கடை ஆரம்பமாகியது. முதலில் MTR பன். குழந்தைகளுக்கு, கணவன்மார்களுக்குக் கொடுத்துவிட்டு எங்களிடம் நீட்டினார் ஒரு பெண். நாங்கள் மென்மையாக மறுத்துவிட்டோம். அடுத்து சுருமுறி (லேசான தின்பண்டங்கள்) அதுவும் எங்களுக்கு கொடுக்க வந்தார்கள். மறுத்தோம். ஒரு பெண் எங்களிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினார்.’என்ன ஆண்ட்டி, புடவையில் வந்தவர்கள் உடை மாற்றி விட்டார்களே என்று பார்த்தீர்களா? எங்கள் வீட்டில் நாங்கள் புடவையில் தான் இருப்போம். வெளியிடங்கள், வெளியூர் சென்றால் எங்கள் விருப்பப்படி உடுத்துவோம். எங்கள் மாமியாருக்கும் இது தெரியும். இப்போதெல்லாம் அவர்களே வீட்டில் கூட சுடிதார் போட்டுக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.  நாங்கள் தான் புடவையே கட்டிக் கொள்ளுகிறோம். அவர்களுக்கு புடவை தான் விருப்பம். அதை ஏன் மறுக்க வேண்டும்?’ பேசிக்கொண்டே சாப்பிட்டார்களா, சாப்பிட்டுக் கொண்டே பேசினார்களா என்றே தெரியவில்லை. ஒவ்வொரு air-bag லிருந்தும் ஏதோ ஒரு சாப்பாட்டு சாமான் வந்த வண்ணம் இருந்தது.     cucumber ஒரு பெண் ஆரஞ்சு பழங்கள் கொடுத்தார். எல்லாவற்றையும் மறுத்தால் எப்படி என்று பழங்களை வாங்கிக் கொண்டோம். ஆரஞ்சு பழத்தை அடுத்து கொய்யா வந்தது; அடுத்து ஆப்பிள், அடுத்து சப்போட்டா …….! ஒரு பழமுதிர்சோலையே வந்துவிட்டது!

அடுத்து பச்சைக் காய்கறிகள். ஆளுக்கு ஒரு தட்டு. ஒரு பெண் முதலில் வெள்ளரிக்காயை எடுத்து அலம்பிக் கொண்டு வந்தார். தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி அதற்கு உப்பு, காரம், மசாலா பொடி எல்லாம் போட்டு கொடுத்தார். இந்த பொடிகள் எல்லாம் ஒரு சின்ன – ரொம்ப ரொம்ப சின்ன – டிபன் கேரியரில்(4 அடுக்குகள்) குழந்தைகள் விளையாடுவார்களே அந்த அளவு தான் – பார்க்கவே மிக மிக அழகாக இருந்தது – கொண்டு வந்திருந்தார்கள். எங்களுக்கு ஆளுக்கு ஒரு தட்டு. பார்க்கவே கலர்புல் ஆக இருந்தது. ஆனாலும் நாசுக்காக ஒரு தட்டு போதும் என்று வாங்கிக் கொண்டோம்.   எல்லாம் ஆயிற்று (என்று நாங்கள் நினைத்தோம்!) ஆனால்……..!??

நாளை: தொடரும் சாப்பாட்டுக் கடை

சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்…!

 

வலைச்சரம் மூன்றாம் நாள்

படம் நன்றி தினகரன்

 

 

திடீரென்று ஒருநாள் இனிமேல் நான் சப்பாத்திதான் சாப்பிடப் போகிறேன்’ என்று அறிக்கை விட்டான் என் மகன். சப்பாத்தி செய்வதும் எனக்கு எளிதுதான். அதிலேயும் 35 வருட அனுபவம். அதிலும் சுக்கா என்று சொல்லப்படும் பூல்கா நன்றாக வரும். ஒவ்வொரு சப்பாத்தியும் பூரி மாதிரி தணலில் போட்டவுடன் உப்பும். ஆனால் என்ன கஷ்டம் என்றால் அதற்கு தொட்டுக் கொள்ள என்ன செய்வது? நாங்கள் சின்னவர்களாய் இருக்கும்போது எங்கள் அம்மா ரொட்டி பண்ணுவாள். (எண்ணெய் போட்டு செய்தால் ரொட்டியாம். எண்ணெய் போடாமல் செய்தால் சப்பாத்தியாம். என் ஓர்ப்படி இப்படி ஒரு விளக்கம் கொடுத்தாள்.) காலையில் செய்த குழம்பு, ரசவண்டி, இல்லை கறியமுது, கீரை கூட்டு இப்படி எது இருந்தாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடுவோம். வேறு ஒன்றும் செய்யவும் மாட்டாள் அம்மா.

 

ஆனால் இப்போது சப்பாத்தி செய்தால் சன்னா, ராஜ்மா, பட்டாணி இவைகளை வெங்காயம், மசாலா போட்டு – கீரை என்றால் பாலக் பனீர் என்று செய்ய வேண்டியிருக்கிறது. எங்களைப் போல எதை வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் என்  குழந்தைகள். ‘சப்பாத்திக்கு குழம்பா? ரசவண்டியா? தமாஷ் பண்ணாதம்மா!’ என்கிறார்கள். இந்த சமையல் சாப்பாடே தினசரி பெரிய பாடாகிவிடும் போலிருக்கு. ஒரு வழியாக காலை டிபன், மதியம் சாப்பாடு முடித்துவிட்டு வந்து ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் ‘சாயங்காலம் என்ன?’ என்ற கேள்வி வருகிறது. அப்போதுதான் இந்த ‘சங்கடமான சமையலை விட்டு’ பாட்டு அசரீரியாக காதுக்குள் ஒலிக்கும்.

 

நான் சப்பாத்தி செய்ய ஆரம்பித்த புதிதில் கூட்டுக் குடித்தனம். தினசரி  சமையல் என்ன என்று மாமனார் மாமியார் கூட்டு சேர்ந்து ரொம்ப நேரம் யோசித்து(!!!) சொல்வார்கள். வெங்காயம் வீட்டினுள்ளேயே வரக்கூடாது. சப்பாத்திக்கு என்ன சைட் டிஷ்? சாயங்காலம் முக்கால்வாசி நாட்கள் பயத்தம்பருப்பு போட்டு செய்யும் கூட்டுதான் சாதத்திற்கு. சிலநாட்கள் தேங்காய் துவையல், அல்லது கொத்துமல்லி, கறிவேப்பிலை, பருப்புத் துவையல்  இருக்கும். துவையல் இல்லாத நாட்களில் ஊறுகாய்தான் கூட்டு சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள. என் கணவருக்கு மட்டும் நான்கு சப்பாத்திகள். மற்றவர்களுக்கு சாதம் என்று தீர்மானமாயிற்று. கரெக்ட்டாக நான்கு சப்பாத்திகள் செய்ய வராது எனக்கு. ஒன்றிரண்டு அதிகம் இருக்கும். என் மைத்துனர்கள் எனக்கு எனக்கு என்று போட்டுக்கொள்வார்கள். ஆசையாக சாப்பிடுகிறார்களே என்று கொஞ்சம் அதிகமாகவே மாவு கலந்து சப்பாத்தி செய்ய ஆரம்பித்தேன். நாளடைவில் மாமனார், மாமியார் தவிர மற்ற எல்லோரும் சப்பாத்திக்கு மாறினோம். ஆ…….சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேனே! சைட் டிஷ்! வெங்காயம் உள்ளே வரக்கூடாதே அதனால் ஒரு யோசனை தோன்றியது. நான் செய்யும் கூட்டிலேயே (மாமனார் மாமியாருக்கு தனியாக எடுத்து வைத்துவிட்டு) கொஞ்சம் மசாலா பொடியை (வெளியில் வாங்கியதுதான்!) போட ஆரம்பித்தேன். உற்சாகமான வரவேற்பு! காணாது கண்ட மாதிரி எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

 

இரண்டு நாட்கள் சமையல் பார்த்தாயிற்று. நாளை சங்கீதம்!

 

இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கப் போகிறவர்கள்: இங்கே 

 

வலைச்சரம் இரண்டாம்நாள் 

வலைச்சரம் முதல்நாள்