பள்ளிக்கூட நினைவுகள்!

 

 happy-teachers-day-animated

 

ஐந்தாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த (இப்போது இருக்கிறதா?) கனகவல்லி எலிமெண்டரி பள்ளியில் படித்தேன். என்னுடன் கூட ஒரு பிரபல குழந்தை நட்சத்திரமும் படித்தார் அதே பள்ளியில். ‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’ பாடிய குட்டி பத்மினி தான் அந்த குழந்தை நட்சத்திரம்!

 

இப்போது புரிகிறதா என் பாபுலாரிடிக்குக் காரணம்?

 

முதல் வகுப்பு ஆசிரியை தர்மு என்கிற தர்மாம்பாள். வாரத்திற்கு ஒருமுறை வீட்டை ஒட்டடை அடித்து, ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து வீட்டை ‘பளிச்’சென்று வைத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் வகுப்பிலேயே எங்கள் பிஞ்சு மனதில் ஏற்றியவர்.

 

ஆறு, ஏழாம் வகுப்புகள் அங்கிருந்த ஒரு அரசு நடுநிலை பள்ளியில் படித்தேன். இந்தப் பள்ளியில் இருந்த பாட்டு ஆசிரியையும், (பெயர் மறந்து விட்டது. மன்னித்துவிடுங்கள் டீச்சர்) ஆங்கில ஆசிரியையும் (திருமதி கனகவல்லி) என்னால் மறக்க முடியாதவர்கள்.

 

‘தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்கொரு குணம் உண்டு’,

 

‘சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே?’

‘மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே, ஒரு வெள்ளிவோடம் போல வரும் வெண்ணிலாவே’ (இந்தப் பாட்டிற்கு கோலாட்டம் ஆடுவோம்) போன்ற அதி அற்புதமான பாடல்களை நான் கற்றது இந்த பாட்டு ஆசிரியையிடம் தான்.

 

அவரே எங்கள் பள்ளியின்  ‘ப்ளூ பேர்ட்’ (Blue bird) என்ற – கிட்டத்தட்ட ஸ்கௌட் போன்ற ஒரு அமைப்பிற்கும் ஆசிரியை. இந்த அமைப்பின் பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை அழகாகத் தமிழ் படுத்தி எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.

 

எனக்கு நினைவிருக்கும் ஒரு பாடல்:

bits of paper, bits of paper

lying on the floor, lying on the floor

make the place untidy, make the place untidy

pick them up, pick them up!

 

தமிழ் வடிவம்:

காகித துண்டுகள், காகித துண்டுகள்

தரையிலே பார், தரையிலே பார்,

அசுத்தபடுத்துதே, அசுத்தபடுத்துதே,

பொறுக்கி எடு, பொறுக்கி எடு.

 

 

இன்னொரு பாடல்

கரடி மலைமேல் ஏறி கரடி மலைமேல் ஏறி

கரடி மலைமேல் ஏறி அது என்ன பார்த்தது?

அது என்ன பார்த்தது? அது என்ன பார்த்தது?

மலையின் அடுத்த பக்கம் மலையின் அடுத்த பக்கம்

மலையின் அடுத்த பக்கம் அது எட்டி பார்த்தது

அது எட்டி பார்த்தது அது எட்டி பார்த்தது

திரும்ப மலைமேல் ஏறி திரும்ப மலைமேல் ஏறி

திரும்ப மலைமேல் ஏறி அது வீடு சென்றது!

 

இதே பாடலை ஆங்கிலம், கன்னட மொழிகளிலும் நான் பாட்டு ஆசிரியையாக இருந்தபோது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இவரை நினைத்துக் கொண்டே.

 

அவரே நடன ஆசிரியையும் கூட. பாரத நாட்டின் தவப்புதல்வா என்ற பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து எங்களை குடியரசு தினத்தன்று ஆட வைத்தவர்.

 

 லீலாவதி டீச்சர்

 

ஏழாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணியில் படித்துக் கொண்டிருந்த நான் எட்டாம் வகுப்பிற்கு புரசைவாக்கம் லேடி எம்.சி.டி.முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சமூக பாட ஆசிரியை குமாரி லீலாவதி. வரைபடம் இல்லாமல் பாடம் நடத்தவே மாட்டார். என்னுடைய மேப் ரீடிங் ஆசைக்கு விதை ஊன்றியவரே இவர் தான். பாடம் சொல்லிக் கொடுப்பதென்றால் இவர் சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் தலைக்குள் பாடத்தை ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.

 

அசாத்திய கோபம் வரும். பத்தாம் வகுப்பிற்கு போனவுடன், இவரே எங்கள் ஆங்கில ஆசிரியை. இன்று ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுகிறேன் என்றால் அடித்தளம் போட்டது இவர்தான். ஒருமுறை பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி: தலைப்பு ஆங்கிலக் கல்வி அவசியமா? எல்லோருமே அவசியம் என்று பேசவே தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் நான் ஒரு மாறுதலுக்கு வேண்டாம் என்று பேசினேன். வந்தது பாருங்கள் ஒரு கோபம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் என்னுடன் பேசவே இல்லை. என்னுடைய சமாதானங்கள் எதுவுமே அவர் காதில் விழவில்லை.

 

 சாந்தா டீச்சர்

 பதினொன்றாம் வகுப்பு (SSLC) ஆங்கில இலக்கணம் மற்றும் துணைப் பாட (non-detailed) ஆசிரியை. வெகு எளிமையாக ஆங்கில இலக்கணத்தை சுவாரஸ்யமாக சொல்லித் தருவார். எனது வகுப்பில் ஒரு ஆங்கில ஆசிரியை வந்து சேர்ந்தார். ஒருநாள் வகுப்பு முடிந்தவுடன் சொன்னார்: ‘Present Perfect Tense இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நன்றி’. நான் ‘என் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி சாந்தாவிற்கு இந்த நன்றிகள் சேரட்டும்’ என்றேன்.

 

கேதாரேஸ்வர சர்மா என்னும் சர்மா ஸார்

எனது தமிழ் வாத்தியார். இன்று நான் ஒரு தமிழ் வலைப்பதிவாளர் ஆக பெயர் எடுத்திருப்பதற்கு இவரே காரண கர்த்தா. இவர் சொல்லிக் கொடுத்த ‘தேமா, புளிமா’ இன்னும் நினைவில் இருக்கிறது. இவர் வருடந்தோறும் செய்யும் ஆண்டாள் கல்யாணமும் மறக்க முடியாத ஒன்று.

 

லில்லி கான்ஸ்டன்டைன் டீச்சர்

 

 

எனக்குப் புரியாத கணிதத்தை என் தலையில் ஏற்றப் பார்த்து முடியாமல் போனவர். மன்னித்துக் கொள்ளுங்கள் டீச்சர். இன்றுவரை கணிதம் எனக்கு எட்டாக்கனிதான்.

 

இன்னும் பல பல ஆசிரியர்கள். நேரம் வரும்போது அவர்களைப் பற்றியும் எழுத வேண்டும். நிச்சயம் எழுதுகிறேன்.

 

நானும் ஒரு ஆசிரியை ஆவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. மிகவும் தாமதமாக எனக்கு ஆசிரியை ஆக ஒரு வாய்ப்புக் கிடைத்து, அதில் நான் வெற்றியும் பெற்றேன் என்றால் இந்த அத்தனை ஆசிரியர்களின் பங்களிப்புதான். இவர்கள் எல்லோருமே என்னை ஏதோ ஒருவிதத்தில் மெருகேற்றி இருக்கிறார்கள்.

 

 

எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் என் இதயம் கனிந்த வணக்கங்கள். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

 

 

 

 

சுருக்கெழுத்தும் நானும்!

சென்ற வாரம் செய்தித்தாளில் ‘சுருக்கெழுத்து இனி இல்லை’ என்ற செய்தி வந்திருந்தது. கணணி தொழில்நுட்பம் பல்கிப் பெருகுவதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது சுருக்கெழுத்து என்று சொல்லப்படும் Shorthand. சுருக்கெழுத்து சொல்லித்தரும் மையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாம். இன்னும் சில வருடங்களில் சுருக்கெழுத்து என்பதே இல்லாமல் மறைந்துவிடுமாம்.

இதை படித்ததிலிருந்து மனதிற்குள் வருத்தமோ வருத்தம். எத்தனை அருமையான ஒரு கண்டுபிடிப்பு, ஓர் அரிய கலை இந்த சுருக்கெழுத்து தெரியுமா? இதை கற்றுக் கொண்ட என் போன்றவர்களுக்குத்தான் இதன் அருமை நன்றாகத் தெரியும்.

எஸ்எஸ்எல்சி + டைப்பிங், ஷார்ட்ஹேண்ட் என்பது அந்தக் காலத்தில் வேலை கிடைக்க மிகப் பெரிய தகுதி. டைப்பிங், ஷார்ட்ஹேண்ட் தெரிந்தால் Stenographer  வேலைக்கு உத்தரவாதம். அதனால் (இன்றைய  +1) அன்றைய எஸ்எஸ்எல்சி முடித்தபின் கல்லூரிக்குப் போகாத என்னைப் போன்ற அத்தனை பெண்களும் மாலைப்பொழுதில் கையில் சுற்றிய வெள்ளைப் பேப்பருடன் டைப்பிங் வகுப்பிற்கு போக ஆரம்பிப்பார்கள்.

புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் இருந்தது மீனா இன்ஸ்டிட்யூட். டைப்பிங், ஷார்ட்ஹேண்ட்,  D.Com என்றழைக்கப்படும் Diploma in Commerce (இதில் அக்கௌண்டன்ஸி, புக்-கீப்பிங், பாங்கிங் எல்லாம் அடக்கம்.) இவற்றை சொல்லித் தரும் இன்ஸ்டிடியூட் தான் மீனா இன்ஸ்டிட்யூட் ஆப் காமர்ஸ்.

டைப்பிங் கற்றுக்கொள்ள வரும் எல்லோரும் ஷார்ட்ஹேண்ட் கற்க மாட்டார்கள்.  ஒரு சிலரே ஷார்ட்ஹேண்ட் கற்பார்கள். ஏனெனில் மிகவும் உழைக்க வேண்டும் இது கற்க. பயிற்சி, பயிற்சி, இடைவிடாப் பயிற்சி இதுதான் முதல் நாள் எங்களுக்கு சொல்லித் தரப்படும் மந்திரம்.

தட்டச்சிற்கு எப்படி fingering முக்கியமோ அதேபோல ஷார்ட்ஹேண்ட் –க்கு strokes முக்கியம்.

என் தோழிகள் ஒருவர் விடாமல் கல்லூரிக்குப் போக நான் மட்டும் கையில் வெள்ளைப் பேப்பருடன் இன்ஸ்டிடியூட் போக ஆரம்பித்த போது அழுகை அழுகையாக வரும்.. ஏற்கனவே அங்கு சேர்ந்திருந்த எங்கள் பள்ளியின் பழைய மாணவிகள் ‘ஏண்டி, காலேஜ் சேரலையா?’ என்று கேட்டாலே அழுகை பொத்துக் கொண்டு வரும். ஒரு நாள், ‘பரவால்ல, விடு, அடுத்த ஜென்மத்துல படிப்பியாம்!’ என்று ஒருவள் ஜோக்கடிக்க, அன்று நான் பட்ட மனத்துயரம்……! (அப்போது தொலைதூர பல்கலைகழகம் எல்லாம் வந்திருக்கவில்லை.)

ஆனால் ஷார்ட்ஹேண்ட் கற்க ஆரம்பித்தவுடன் தன்னிச்சையாக அதில் ஒரு ஆர்வம் வர, என் அழுகையும் மாறியது.

இந்த சுருக்கெழுத்து என்பது ஆங்கில உச்சரிப்பின் அடிப்படையில் உருவானது. நாங்கள் கற்றது Pitman Shorthand. வேறு சில முறைகளும் சுருக்கெழுத்தில் உண்டு. முதலில் வெறும் கோடுகள்தான். அதாவது P, B, T, D, என்று ஆரம்பிக்கும். இவைகளுடன் பிறகு உயிரெழுத்துக்கள் புள்ளி, சின்னக் கோடு, சின்ன v வடிவில் என்று சேரும்.

shorthand strokes

சுருக்கெழுத்து எழுதுவதற்கென்றே தனியாக நோட்டுப் புத்தகங்கள் கிடைக்கும். சாதாரண நோட்டுப் புத்தகங்கள் போல் இல்லாமல் இதில் ஒரு கோட்டுக்கும், இன்னொரு கோட்டுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கும். அதேபோல பென்சிலும் உண்டு.

வெறும் கோடுகளாலேயே எல்லா வார்த்தைகளையும் எழுதுவதால் P என்பதற்கு மெல்லிய சாய்வுக் கோடு என்றால் B என்பதற்கு அதையே அழுத்தமாக எழுத வேண்டும்.

நன்றி: http://pitmanshorthand.homestead.com/BasicsofPitman.html

இந்தக் கோடுகளையும் வளைவுகளையும் நான்கு விதமாக எழுதுவோம்.  Above the line, On the line, Under the line, Through the line என்று. உயிர் எழுத்துக்களுக்கு பயன்படும் புள்ளி, சின்னக் கோடு, v வடிவம் ஆகியவையும் stroke க்குகளின் மேலே, நடுவே, கீழே, மற்றும் behind stroke, in front of the stroke என்று எழுதும் போது வேறு வேறு வார்த்தைகள் வரும். அதெல்லாம் ஆரம்பம்தான். போகப்போக பெரிய பெரிய சொற்களையும் ஒரு சின்ன கோடு, ஒரு வளைவுக்குள் அடக்கிவிடுவோம். எனக்கு இப்போது எவ்வளவு நினைவு இருக்கிறது என்று கேட்காதீர்கள். ஒன்றும் நினைவில்லை அடிப்படைக் கோடுகளைத் தவிர.

எங்கள் சுருக்கெழுத்து ஆசிரியர் திரு பாலசுந்தரம் மாஸ்டர். ரொம்பவும் கண்டிப்பானவர். வகுப்பு காலை 6.30 மணிக்கு என்றால் ‘டாண்’ என்று வந்துவிடுவார். டிக்டேஷன் ஆரம்பமாகிவிடும். சுருக்கெழுத்தில் எழுதியதை திரும்பவும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு transcription என்று பெயர். மாஸ்டர் கொடுக்கும் டிக்டேஷனை எப்படியோ ஆங்கிலத்தில் படித்துவிடுவோம். ஹப்பா! படித்தாயிற்று என்று சந்தோஷப்பட முடியாது. எழுதிய நோட்டை வாங்கிப் பார்ப்பார். எந்தெந்த ஸ்ட்ரோக்ஸ் சரியாக இல்லை என்று சொல்லி மறுபடி எழுதச் சொல்லுவார்.

ஏனெனில் நேர்முகத் தேர்வுக்கு  முன் கொடுக்கப்படும் சுருக்கெழுத்து பரீட்சைகளில் transcription உடன் ஸ்டெனோக்ராபர்கள் தாங்கள் எழுதிய shorthand பேப்பரையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். எங்களது ஸ்ட்ரோக்ஸ் – க்கும் மதிப்பெண் உண்டு. ‘ஆங்கிலத்தில் ஒரு கடையின் பெயரைப் பார்த்தால் கூட உங்கள் கைகள் தன்னிச்சையாக ஸ்ட்ரோக்ஸ் போட வேண்டும்’ என்பார் மாஸ்டர்.

சுருக்கெழுத்து கீழ் நிலையில் 80 வார்த்தைகள் ஒரு நிமிடத்திற்கு எழுத வேண்டும். மேல் நிலையில் 120 வார்த்தைகள். டிக்டேஷன் சொல்லப்படும்போது கவனச் சிதறல் கூடவே கூடாது. சொல்பவரின் வார்த்தைகள் மட்டுமே நம் உடல், பொருள் ஆவி எல்லாவற்றிலும் நிறைந்திருக்க வேண்டும். ஒரு நொடிப் பொழுது கவனச் சிதறல் ஒரு முழு வாக்கியத்தை தவற விட்டுவிடச் செய்யும்.

எங்களுக்கு வீட்டில் யார் டிக்டேஷன் கொடுப்பார்கள்? அதற்கும் கூட முறைப்படி பயிற்சி பெற்றவர்கள் வேண்டும். ஆங்கிலச் செய்திகள் வாசிப்பவர்கள் தான் எங்கள் டிக்டேஷன் குரு.

எழுத எழுதத்தான் வேகம், கவனம் எல்லாம் சரிவர வரும்.

எழுதி முடித்த பின் இப்படித்தான் இருக்கும்:

shorthand - 2

இதைக் கற்று பல வருடங்களுக்கு பிறகு ஒரு முறை எனது ஆங்கில வகுப்பில் இந்த அரிய கலையை பற்றி பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த வகுப்பு உயர்நிலை வகுப்பு. தினமும் ஒருவர் ஏதாவது ஒரு தலைப்பில் பேச வேண்டும். பொதுவாக மாணவர்கள் பேசும் விஷயங்கள்  எனக்குத் தெரிந்ததாகவே இருக்கும். அவர்கள் பேசி முடித்தபின் என்னுடைய கருத்துக்களையும் சேர்த்துச் சொல்லுவேன்.

ஒருமுறை ஒரு மாணவி இந்த சுருக்கெழுத்து பற்றி பேச ஆரம்பித்தாள். அறிமுக உரையில் ‘இன்றைக்கு நான் பேச இருக்கும் விஷயம் பற்றி நம் ஆசிரியைக்குக் கூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே..’ என்றபடி சுருக்கெழுத்துப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் பேசி முடித்தவுடன் சொன்னேன், நான் ஒரு ஸ்டெனோவாக இருந்தவள் தான் என்று.

‘எப்படி மேடம், உங்களுக்குத் தெரியாததே இருக்காதா?’ என்று மாணவர்கள் வியந்தபோது சொன்னேன்:

‘எனக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் சுருக்கெழுத்து தெரியும்  என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன்.’ என்று.

இன்றும் அதே பெருமையுடனேயே இந்தப் பதிவை எழுதுகிறேன். இதைக் கற்பித்த திரு பாலசுந்தரம் மாஸ்டரை நினைவு கூர்வதில் மிகப் பெருமை அடைகிறேன். நன்றி ஸார்!

 

***********************************************************

எனது மாமா திரு டி.எஸ் சுந்தரராஜனின் கருத்துரை:

சுருக்கெழுத்து / ஸ்டெநோகிராபி பற்றின கட்டுரை
மிக அருமை.
நலிந்த பிறப்புகளைப்பற்றி மிகவும் இரங்கி எழுதின
சார்லஸ்-டிகென்ஸ்  ஸ்டெநோ ஆகவே தொழில் ஏற்றார்.
பெர்னார்டு-ஷா லண்டன் மாடி-பஸ்-இல்
தொடக்கத்திருந்து இறுதிவரை டிக்கட் எடுத்து,
மாடியில் முதல் ஸீட்-இல் பொருந்தியமர்ந்து
தனது ஆச்சர்யமான நாடகங்களையும், அவற்றையும்
விஞ்சும் முன்னுரைகளையும் ஷார்ட்-ஹாண்டிலேயே
எழுதித்தள்ளி, அகம் திரும்பி அவருக்கென்று வாய்த்த
மிகப் பொறுமைசாலியான மனைவியிடம் ஒப்படைக்க,
அவள் சிறப்பாக டைப் செய்து கொடுத்து விடுவாளாம்.
இவ்விதம் பேரிலக்கியத்தைக் காத்துக்கொடுத்த
ஷார்ட்-ஹாண்டு எனும் சிறந்த திறமையைக்
கழற்றிவிட்டோமானால் எவ்வளவு நஷ்டம் !
இவ்வாறே டெலிகிராப் தந்தியும் இந்நாட்டில்
ஜூலை 2013 வரைதான் இருக்கும் !
*********************************************************

 

காதல் பொக்கிஷம் – காதல் கதை 3

love symbol

அன்று ஞாயிற்றுக்கிழமை.

“மேடம் ஃப்ரீ தானே? இன்னிக்கு உங்களோட குப்பைத் தொட்டியை ( என் புத்தக அலமாரியின் செல்லப் பெயர்!) சரி பண்ணலாமா?” என்றார் கணவர்.

“எத்தனை புத்தகங்கள்! ஏன் இப்படிச் சேர்த்துச் சேர்த்து வைக்கிறே? படிச்சதை எல்லாம் தூக்கிப் போடக் கூடாதா? எப்படி அடைச்சு அடைச்சு வெச்சிருக்கே, பாரு! இதிலேருந்து பாம்பு, தேள் – ஏன் சிங்கம் புலி வந்தாலும் ஆச்சரியமில்லை!” – என்னைக் கடிந்தவாறே புத்தகங்களை எடுத்து வெளியே வைக்க ஆரம்பித்தார். சற்று நேரத்தில் எங்களைச் சுற்றிப் புத்தக மலை.

“இதோ பாரு…இதென்ன ஃபைல்? இவ்வளவு பேப்பர்களையும் ஒரே ஃபைலில் போட்டு திணிக்க வேண்டுமா?”

புத்தக தீவுக்குள் அமர்ந்திருந்த நான் கையை மட்டும் நீட்டி, அந்த மஞ்சள் நிற பைலை வாங்கினேன். திறந்தவுடன் ‘குப்’பென்று ஓர் ஆனந்தம் உடல் முழுக்க ஹை- வோல்டேஜ் மின்சாரம் போல் பாய்ந்தது. சூழ்நிலை மறந்து, புத்தக மலைகளை ஒரே தாண்டாகத் தாண்டி, கணவரின் பக்கத்தில் போய் அமர்ந்தேன்.

என்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே பைலைத் திறந்தவர், அடுத்த நொடி முகம் மலர்ந்தார். “ஏய்! இன்னுமா இதையெல்லாம் வெச்சிருக்கே? தூக்கிப் போட்டு இருப்பேன்னு நினைச்சேன்!” என்றார்.

“சேச்சே! இதையெல்லாம் தூக்கிப் போட முடியுமா?” என்றேன். இருவருமே மௌனத்தின் வசமானோம்.

எங்களுடைய திருமணம் காதல் – கம் அரேஞ்ஜ்டு  மேரேஜ்.  இருவரும் சந்தித்து ஆறு மாதங்கள் கழித்து நிச்சயதார்த்தம். பிறகு ஆறு மாதங்கள் கழித்து திருமணம். ஆக, இந்த ஒரு வருடம் நாங்கள் காதலர்களாக இருந்தபோது பரிமாறிக் கொண்ட கடிதங்கள், வாழ்த்து அட்டைகள்தான் அந்த பைலில் இருந்தன!

வாயு வேகம், மனோ வேகம் என்பார்களே அதைவிட வேகமாக மனத் திரையில் எங்கள் ரொமான்ஸ் மலர்ந்தது.

நாங்கள் இருவரும் சென்னையில்தான் இருந்தோம். அவர் அசோக்நகர். நான் புரசைவாக்கம். ஆனாலும் தினமும் சந்தித்திக்கொள்ள முடியாது. தொலைபேசியில் (உபயம்: அவரவர் அலுவலகங்கள்) மணிக்கணக்கில் அரட்டையடிப்போம். அத்தோடு, தினம் ஒரு கடிதம், மாதம் ஒரு வாழ்த்து அட்டை என அனுப்பிக் கொள்வோம்.

“ஏய்!, இந்த கிரீட்டிங் கார்ட் பாரு…” – கணவரது குரலால், நினைவுகள் என்னும் மேகக் குவியலிலிருந்து சட்டென்று தரையிறங்கினேன்.

ஆஹா….! அவர் அனுப்பிய முதல் கார்ட்! அதின் என்னவர் ‘டு ரஞ்சனி’ என்று எழுதியிருந்தார். ‘ஐயோ! இதென்ன ஆபீஸ் கடிதமா? டியர் என்று எழுதக் கூடாதா?’ என்று செல்லமாக நான் கடிந்து கொண்டதும், அடுத்த கார்டில் ‘டியர்’ என்று எழுதினார்.

அடுத்து நான் ‘ரத்தத்தின் ரத்தமே’ ஸ்டைலில் ‘டியரஸ்ட் டியர்’ என்று தடாலடி காட்ட, ‘அம்மா, தாயே! எனக்கு இதுபோல எழுதத் தெரியாது. என்னை விட்டுடு!’ என்று அவர் சரண்டரான காட்சி கண்முன்னே வந்து நின்றது. இரண்டு பேருமே வாய்விட்டு சிரித்தோம். அப்பா! எத்தனை நாளாயிற்று, இப்படிச் சிரித்து!

ஒரு திங்கட்கிழமை – இவர் வெளியூர் போயிருந்தார். அப்போதுதான் புரிந்தது – பிரிவு என்பது எத்தனை துயரமானது என்று! தினமும் சந்தித்துக் கொள்வது இல்லை என்றாலும், டெலிபோனிலாவது பேசிக் கொள்வோம். இன்று அதுவும் முடியவில்லையே என்று நான் நொந்து நூலாகியிருந்த சமயம், தபாலில் வந்தது ‘Miss you…’ கார்ட்! அடடா… நான் அந்த வினாடி பெற்ற குதூகலம், இன்று நினைக்கையிலும் மனம் சிலிர்க்கிறது!

“ஆமா…சனிக்கிழமையே ஹைதராபாத் போறேன்னு சொல்லிட்டுக் கிளம்பினீங்க! எப்படி திங்கட்கிழமை ‘மிஸ் யூ’ கார்ட் கரெக்டா வந்தது எனக்கு?

“சனிக்கிழமை காலையிலே கார்டை போஸ்ட் பண்ணிட்டு ஊருக்குப் போயிட்டேன்….” என்றவர், “எனக்குத் தெரியும் – திங்கட்கிழமை என்னோடு பேச முடியலையேனு நீ அப்செட் ஆயிடுவேன்னு. அதனாலதான் சர்ப்ரைசா இருக்கட்டும்னு இப்படிப் பண்ணினேன்!” என்று கூறிச் சிரித்தார்.

“யப்பா….நாலு பக்கத்துக்கு ஒரு கடிதம்! எப்போ எழுதினே இதை?” என்றார் இன்னொரு கடிதத்தைக் காட்டியபடி.

எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அப்போது நான் பி.ஏ. கரஸ்பாண்டன்ஸில் பண்ணிக் கொண்டிருந்தேன். பரீட்சை நெருங்கிய நேரம். ‘நோ போன் கால்ஸ்…நோ லெட்டர்ஸ்..’ என்று அவருக்கு கண்டிஷன் போட்டு விட்டு படிப்பில் மூழ்கினேன். கஷ்டப்பட்டு ஒரு வாரம், மூன்று பரீட்சைகள் முடித்து விட்டேன். அடுத்த பரீட்சைக்கு முன்னால்  இரண்டு நாட்கள் லீவு. ‘கொஞ்சம் ரிலாக்ஸ்டாகப் படிப்போம்’ என்று மாடிக்குப் புத்தகங்களுடன் போனால், அவர் நினைவே….! ‘ச்சே! அனாவசியமாக நானே கண்டிஷன் போட்டு, மாட்டிக் கொண்டு தவிக்கிறேனே!’ – சுய இரக்கம் மேலிட்டது. ‘நோ போன் கால்ஸ்…நோ லெட்டர்ஸ்..’ என்றுதானே சொன்னேன். நேர்ல வரலாமே…! என்று அவர் மேல் இருந்த கோபம் அழுகையாக மாறத் தொடங்கிய நேரம்….

என் தம்பி மூச்சிறைக்க ஓடி வந்தான். “சீக்கிரம் கீழே வா. அவர் வந்திருக்கார்!”

‘அவரா??! – தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கி வந்த நான், எங்கள் வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்துப் பரவசமானேன்.

‘நோ போன் கால்ஸ்…நோ லெட்டர்ஸ்.. என்றுதானே சொன்னே? நேர்ல வரலாம், இல்லையா?’ என்றபடி என்னைப் பார்த்துக் கண் சிமிட்ட…ஆஹா இதுவல்லவோ டெலிபதி!

அன்றிரவு என் மனநிலையை அப்படியே படம் பிடித்தாற் போல உணர்ந்து, அவர் நேரில் வந்ததை பற்றியும்  எங்கள் மனநிலையின் ஒற்றுமையையும் வார்த்தைகளில்  கொட்டி நான் எழுதிய கடிதம் தான் அது.

ஒவ்வொரு கடித்தத்தின் பின்னாலும் இதைப் போன்று ஒரு இனிய நினைவு. இத்தனை வருடங்களாகியும் இருவருமே எதையும் மறக்கவில்லை என்பதுதான் ஹைலைட்!

எத்தனையோ வாக்குவாதங்கள், சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் என்று வாழ்க்கை எங்களைப் புரட்டி எடுத்துப் புடம் போட்டிருந்தாலும், எல்லாவற்றுக்கும் அடித்தளமாக, அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருப்பது – இந்த இளவயதுக் காதல்தானே!

இருட்டு அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றினால், சட்டென்று ஒரு ஒலி பரவுமே….அதுபோல எங்கள் இதயங்களில் ஒரு புது ஒளியை பரவச் செய்தன இந்தக் கடிதங்கள்!

நீறு பூத்த நெருப்பாக இருந்த எங்கள் அன்பு இந்தக் கடிதங்களினால் மறுபடி புதுப் பொலிவைப் பெற்றது என்று சொல்ல வேண்டும்.

பழைய காதல் பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைப்பதும், அவ்வப்போது அவற்றை எடுத்துப் பார்த்து புதுப்பித்துக் கொள்வதும் கூட  ரொமான்ஸ் ரகசியங்களில் ஒன்று என்பது புரிந்தது.

 

2004 ஆம் ஆண்டு அவள் விகடன் ‘ரொமான்ஸ் ரகசியம்’ பகுதியில் வெளியான என் கட்டுரை.

 

காதல் கதை – 1

 

காதலர் தினம் – காதல் கதை 2

 

 

அந்த நாள் முதல் இந்த நாள் வரை…..

 

ஜெயந்தியை நான் எப்போது சந்தித்தேன்?

 

நினைவில்லை.

 

‘உனக்கும் நினைவில்லையா?’ இருவரும் ஆச்சரியப் பட்டோம்.

 

ஒரே பள்ளியா? இல்லை.

 

ஒரே அலுவலகத்தில் வேலை செய்தோமா? இல்லை.

 

ஒரே வீதியில் வீடா? அதுவும் இல்லை.

 

பின் எப்படி தோழிகளானோம்?

 

பலத்த யோசனைக்குப் பின் நினைவுக்கு வந்தது. ஒரே பேருந்தில் அலுவலகத்திற்குப் பயணம் செய்திருக்கிறோம். பேருந்து தோழிகள்! அதுவும் சில மாதங்களுக்குத் தான். ஜெயந்தி பிறகு வேறு வேலைக்கு மாறிவிட்டாள்.

 

ஆனால் எனக்கு திருமணம் ஆகும் வரை நானும் அவளும் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாலை வேளைகளில் சந்தித்திருக்கிறோம். புரசைவாக்கம் டேங்க், எதிரில் இருக்கும் (இப்போது இருக்கிறதா?) அனுமார் சந்நிதி, கங்காதரேஸ்வரர் கோவில் என்று சுற்றிக் கொண்டே இருப்போம்.

 

எங்களுக்குள் பேச எத்தனையோ. ‘அதென்ன மணிக்கணக்கா பேச்சு?’ என்று இருவர் வீட்டிலும் கோபித்துக் கொள்ளுவதால் இருவரும் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றி சுற்றி வருவோம் – கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு!

 

பிறகு எனக்குத் திருமணம் ஆகி அசோக் நகர் வந்து விட்டேன். ஜெயந்தியின் தொடர்பும் விட்டுப் போயிற்று. ’79 இல் ஜெயந்தியின் குடும்பம் அசோக் நகரில் இருந்த போஸ்டல் குவார்ட்டர்ஸ் –இல் இருந்தபோது ஒரு முறை சந்தித்தோம். என் பெண்ணுக்கு அப்போது மூன்று வயது.

 

பிறகு நாங்கள் அண்ணாநகர் வந்து, அங்கிருந்து பெங்களூரு வந்து….ஜெயந்தி நினைவிலிருந்து மறைந்தே போனாள்.

 

இப்போது எங்கிருந்து வந்தாள் என்று கேட்கிறீர்களா?

 

என் ப்ளாகின் மூலம்தான்! ஆச்சரியம் இல்லையா?

 

எனது ப்ளாகில் ஒரு முறை திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களின் மறைவின் பின்னணியில், அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ‘கடுகு’ என்கிற திரு ரங்கநாதன் அவர்களும் அவரது கடுகு தாளிப்பு என்ற வலைப்பூவில் திரு ராகிரா பற்றி எழுதி இருந்தார். அதை அவரது தளத்தில் படித்த நான் ‘நானும் திரு ராகிரா பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்’ என்று என் வலைதளத்தின் இணைப்பையும் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன்.

 

ஜெயந்தி திரு ‘கடுகு’ அவர்களின் எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிப்பாள். அவள் எனது பின்னூட்டத்தைப்  படித்து விட்டு என் பதிவைப் படித்திருக்கிறாள். எனது அழகான(!!!)  புகைப் படத்தையும் பார்த்துவிட்டு நீ புரசைவாக்கத்தில் இருந்த ரஞ்சனி தானே என்று கேட்டு எங்கள் ஊர் சுற்றலையும் குறிப்பிட்டிருந்தாள்.

 

பல வருடங்களுக்குப் பிறகு தோழிகள் ஒருவரையொருவர் மறுபடி கண்டுகொண்டோம் கண்டு கொண்டோம்…..!!!

 

போன மாதம் சென்னை சென்ற போது ஒரே ஒரு நிகழ்வு:  ஜெயந்தியை சந்திப்பது மட்டும்தான்!

 

காலை சதாப்தி வண்டியில் கிளம்பினோம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே வருவதாக ஜெயந்தி சொல்லியிருந்தாள். நான் தான் வழக்கம்போல CCC2 கோச் என்பதற்கு பதிலாக CC1 என்று சொதப்பி இருந்தேன். பாவம் ஜெயந்தி, C1 கோச் முழுவதும் தேடி என்னைக் காணாமல் என்னவோ ஏதோ, நான் ஏன் வரவில்லை என்று பதறி எனக்கு போன் மேல் போன் செய்து….தவித்துக் கொண்டிருக்க,

 

நான் நிதானமாக அடுத்த பெட்டியிலிருந்து இறங்கி, யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார்கள் என்று தொலைபேசியில் கண்ணையும் கருத்தையும் வைத்துக் கொண்டு நடக்க….

 

‘ரஞ்சனி……’ என்று ஓடி வந்தவள் என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

 

‘உங்களைக் காணோமென்று ஆடிப் போய்விட்டாள்’ என்றார் ஜெயந்தியின் துணைவர் திரு ஸ்ரீதரன்.

 

‘ஸாரி, ஸாரி’ என்று அசடு வழிந்தேன். ஜெயந்தி என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

 

‘நீங்கள் வரப்போவது அமெரிக்கா முதல் ஆஸ்திரியா வரை தெரியும்…’

 

ஜெயந்தியின் பிள்ளைகள் இருவரும் இந்த இரண்டு ஊர்களில் இருந்தனர்.

 

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ?’ என்பார்கள். ஆனால் நாங்கள் இருவரும் விடாமல் – மூச்சு விடாமல் பேசினோம். வீடு போய் சேரும்வரை, சேர்ந்த பின், சாப்பிடும்போது, பேசிக் கொண்டே, பேசிக் கொண்டே……!

 

ஜெயந்தியின் அம்மா பக்கத்திலேயே இருந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘என்ன ரஞ்சனி, எத்தனை குழந்தைகள், எல்லோருக்கும், கல்யாணம் ஆயிற்றா, பேரன், பேத்திகள் இருக்கிறார்களா…..?’ என்றார்.

 

‘ஐயோ! மாமி அதையெல்லாம் கேட்காதீங்கோ! நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்றேன்.

 

எவ்வளவுதான் இந்த நாளின் நிஜம் இருவருக்கும் தெரிந்தபோதும், மறுபடி மறுபடி பழைய நினைவுகளிலேயே இருவரும் மூழ்க ஆசைப்பட்டோம்.

 

‘குட்டி குட்டியா நகம் வளர்த்துப்பியே என்ன ஆச்சு?’ என்றாள் ஜெயந்தி.

 

‘பேருந்தில் நம்முடன் கூட ‘குட்டி ப்ளஷ்டோர்’ அலுவலகத்தில் வேலை செய்யும் சௌபாக்யவதி என்ற ஒரு பெண் வருவாள் நினைவிருக்கிறதா?’- நான்.

 

‘ஓ!…’

 

‘நான் அவளிடம் உனக்கு சௌபாக்யவதி என்று பெயர் வைத்திருக்கிறார்களே…கல்யாணப் பத்திரிகையில் சௌபாக்யவதி சௌபாக்யவதிக்கு என்று போடுவார்களா என்று ஒரு நாள் கேட்டேன்….!’

 

இருவரும் பெரிதாகச் சிரித்தோம்….எங்கள் துணைவர்கள் இருவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு!

 

அந்தநாள் நடந்த சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் நினைவலைகளில் மோதி மோதி வந்தன.

 

 

 

அரவிந்த அன்னையின் பக்தையாகி விட்டாள் ஜெயந்தி. ‘பிரார்த்தனை நேரத்தில் ஒருமுறை கூட உன் நினைவு வந்ததில்லை ரஞ்சனி. ஆனாலும் நீயும் நானும் மறுபடி சந்திக்க வேண்டும் என்று அன்னை நினைத்திருந்தாள் போலிருக்கிறது. அதனால் தான் என் உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் படி ‘கடுகு தாளிப்பு’ படிக்க ஆரம்பித்தவள் அதன் மூலமே உன்னையும் மறுபடியும் சந்தித்தேன். இல்லையானால் நான் எங்கே நீ எங்கே?’

 

அன்னை சேர்த்து வைத்தாளோ? இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ? எப்படியானால் என்ன? அந்தநாள் முதல் இந்த நாள் வரை எங்கள் நட்பு மாறவில்லை என்பதை ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்திருந்த விதம் சொல்லியது.