என்ன ஊரு இது?

NATIONAL FLAG.jpg4

 

காலைல எழுந்தா தண்ணி வருமா? மின்சாரம் இருக்குமா? ரேஷன் கடைல இன்னிக்காவது சர்க்கரை வந்திருக்குமா? – அன்றாடம் காய்ச்சிகளின் பிரச்னை இது.

என்ன ஊரு இது! வேறெங்காவது பிறந்திருக்கலாம்!

 

குண்டும் குழியுமா இருக்கிற தெருக்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போவது தினசரி சர்க்கஸ். நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலும், எதிர்பாராத தருணத்தில் சின்ன சந்திலிருந்து வரும் டெம்போ. அதை ஓட்டும் விடலைப் பையனுக்கு தான் பிஎம்டபிள்யு ஓட்டுவதாக நினைப்பு. தடாலென்று இடப்பக்கம் ஒடித்து அங்கு அன்னநடை பயிலும் பாட்டியை எமதர்மனிடமிருந்து அப்போதைக்குக் காப்பாற்றி அந்தப் பெருமிதத்தில் முழு வீச்சில் ஆக்சிலரேட்டரை அழுத்துகிறான். தினமும் நடக்கும் நிகழ்வு என்றாலும் ஒவ்வொருமுறையும் இதயம் அலறுகிறது.

 

தான் ஒரு சுதந்திரத் தியாகி என்று செப்புப்பட்டயத்தை வாங்க படாதபாடு பட்ட ஒருவரின் நிஜ அனுபவங்களை இன்றைக்கு செய்தித்தாளில் படித்தேன். 32 வருடங்களில் அவர் தட்டிய கதவுகள் 321. அவர் ஏறி இறங்கிய படிகள் 60,000. எழுதிய கடிதங்கள் 1043. நீதி மன்ற முறையீடுகள் 2300. இப்படியாவது செப்புப்பட்டயம் தேவையா என்று தோன்றுகிறது. ‘எனக்கு உதவித்தொகை வேண்டுமென்பதற்காக இதைச் செய்யவில்லை. எனக்கு ஒரு அங்கீகாரம், மற்றும் மரியாதை வேண்டும் என்பதற்காக இத்தனை அலைச்சல்கள்’ என்கிறார் 85 வயதான, மும்பையை சேர்ந்த கௌர் ஹரி தாஸ். இவரது இந்த தொடர் முயற்சி திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. திரு அனந்த் மகாதேவனின் இயக்கத்தில். கௌர் ஹரி தாஸ் ஆக திரு விஜய் பாதக் நடித்திருக்கிறார்.

 

இதைப்போல இன்னும் எத்தனை எத்தனை தியாகிகள் தங்கள் ஊண் உறக்கம் மறந்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்களோ, தெரியாது. இவர்களைப் பற்றிய பெருமிதம் இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இந்தத் தலைமுறைக்கு நமது சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார் என்று தெரியாத – இன்றைக்கு ஒரு ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் கேட்ட கேள்விக்கு வந்த பதில்கள் ஏற்படுத்திய – வெட்கக்கேடு ஒரு பக்கம்.

 

ஒவ்வொரு முறையும் என்ன ஊரு இது என்று சலித்துக் கொண்டாலும், வேற எங்கயாவது பிறந்திருக்கலாம் என்று அலுத்துக் கொண்டாலும் சுதந்திர தினம் என்றால் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கிறதே, பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடியைப் பார்த்தால் அசாத்திய புத்துணர்வு உண்டாகிறதே, தேசிய கீதம் பாடும் போது கண்கள் பனிக்க எழுந்து நிற்க செய்கிறதே இதற்குப் பெயர் தான் தேசபக்தியோ?

 

குறைகளுக்கு அப்பாற்பட்டவள் நம் அம்மா என்றால் தாய் நாடும் அப்படித்தானே? எல்லா குறை நிறைகளுடன் நான் இந்தியன் என்கிற பெருமையுடன் என் நாட்டைப் போல வருமா என்ற பெருமிதத்துடன் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

ஹேப்பி பர்த்டே லால் ஏட்டா! 

 

Cover photo

 

படம் நன்றி: கூகுள்

சில வாரங்களுக்கு முன் மகாலக்ஷ்மி விஜயன் முகநூலில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்: ‘உங்களுக்குப் பிடித்த, இப்போதும் இன்னும் ஒருமுறை பார்த்து  மகிழ வேண்டும் என்று நினைக்கும் திரைப்படம் எது’? என்று. நான் அதற்கு ‘எரடு கனசு’ என்கிற கன்னடப் படம் மற்றும் ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ என்னும் மலையாளப் படம் என்று எழுதியிருந்தேன்.

 

கன்னடப் படங்கள் பார்ப்பது போலவே மலையாளப் படங்களும் பார்ப்பேன். எப்போது முதல் நான் மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்? சென்னையில் எங்கள் பக்கத்து வீட்டிற்கு ஒரு குடும்பம் கேரளாவிலிருந்து வந்தார்கள். அந்த பெண்மணிக்கு தமிழ் தெரிந்திருக்கவில்லை. அவருக்கு நான் தமிழும் அவர் எனக்கு மலையாளமும் கற்றுக் கொடுப்பது என்று ஒப்பந்தம் செய்து கொண்டோம். மலையாளம் எழுத படிக்கக் கற்றுக் கொண்டேன். பெங்களூரு வந்தபின் இங்கும் ஒரு மலையாளக் குடும்பம் நண்பர்களானார்கள். லதா வைத்யன் என்று அந்தப் பெண்மணியின் பெயர். அவர்களது பிள்ளைகள் இருவரும் எனது பிள்ளையின் நண்பர்களானார்கள். லதா தான் என்னை மலையாளப் படம் பார்க்கச் செய்தவர். நான் பார்த்த முதல் படம் ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’. மோகன்லால் நடித்து 1990இல் வந்த படம். பாடல்கள் எல்லாமே காதுக்கு இனிமையானவை. கதை இதுதான்:

 

உதய வர்ம தம்புரான் என்கிற அரச குடும்பத்தை சேர்ந்த செல்வந்தருக்கு வாரிசு இல்லை. இருந்த ஒரு பிள்ளையும் இறந்துவிடுகிறான். மனைவி பாகீரதி தம்புராட்டி. பிள்ளையின் அகால மரணத்தால் சித்தப்பிரமை பிடித்திருக்கும் பாகீரதி தம்புராட்டிக்கு பணிவிடை செய்யும் ராதை (கௌதமி) தம்புரானின் (உண்மையில் தம்புரானின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவள் இவள்) நல்லெண்ணத்தை சம்பாதித்திருப்பவள். வாரிசு இல்லாத சொத்து அவளுக்கு போய்விட்டால் என்ன செய்வது என்று கவலைப்படுகிறார்கள் தம்புரானின் சகோதரிகளின் பிள்ளைகள். வெளி ஆள் ஒருவனை வைத்து தம்புரானை (உதயவர்மா) கொன்று விட்டு சொத்தை பங்கு போட்டுக் கொள்ளத் திட்டம் போடுகிறார்கள். மும்பையிலில் கவ்வாலி பாடிப் பிழைக்கும் அப்துல்லா (மோகன்லால்) அனந்தன் நம்பூதிரியாக மாற்றப்பட்டு தம்புரானைக் கொல்வதற்காக தயார் செய்யப் படுகிறான். தம்புரானின் நல்ல குணங்கள் கொல்ல வந்தவனை மனம் மாறச் செய்கிறது.  தம்புராட்டி அனந்தன் நம்பூதிரி வடிவில் தன் மகன் ‘உன்னியை’ காண, கூடவே கௌதமியின் காதல் என்று சூழ்நிலை மாறுகிறது. தம்புரானைக் காப்பாற்றி அவரிடம் தன் உண்மைக் கதையையும் சொல்ல ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ கதை முடிகிறது சுபமாக.

 

ஹோட்டலில் கவாலி பாடும் அப்துல்லாவாக அறிமுகமாகும் மோகன்லால், அனந்தன் நம்பூதிரியாக அரண்மனையில் நுழையும் காட்சி எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது, முதல் தடவை இந்தப் படத்தைப் பார்க்கும் போது. அடுத்து அடுத்து பார்க்கும்போது (எத்தனை முறை?) அந்தக் காட்சியை  பார்க்கவே காத்துக் கொண்டிருப்பேன். அப்படி ஒரு மாற்றம். தாடியும் மீசையும் கம்பளிக் குல்லாவுமாக கையில் மல்லிகைப் பூவை சுற்றிக் கொண்டு பாடும் அப்துல்லா, சரிகை வேஷ்டி, மேலே போர்த்திக் கொண்ட உத்தரீயம், நெற்றியில் கோபி சந்தனம் என்று அனந்தன் நம்பூதிரியாக முழுக்க மாறியிருப்பார். உருவம் மட்டுமல்ல, உடல்மொழியும் மாறியிருக்கும். வாவ்! இப்போது பார்த்தாலும் ரொம்பவும் ரசிக்க வைக்கும் காட்சி இது.

இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து மோகன்லால் படங்கள் நிறைய பார்க்கத் தொடங்கினேன் – சித்ரம், பரதம், தசரதம் என்று. சித்ரம் படத்தில் காமெடியில் கலக்குவார். பரதம் (அண்ணன் தம்பி பாசம்) நெகிழ வைத்த படம். தசரதம் படத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பாத ஆனால் biological குழந்தையை பெற விரும்பும் கதாபாத்திரம். இதற்கு ஒப்புக் கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பெண் கடைசியில் இவரிடத்தில் குழந்தையை கொடுக்க மறுத்துவிடுகிறாள். தசரதனைப் போலவே பிள்ளைப் பாசத்தால் துடிக்கும் ஒரு கதாப்பாத்திரம். ஆ! லால் ஏட்டனைத் தவிர வேறு யாரால் இந்தப் பாத்திரங்களை செய்ய முடியும்? இவரது திரைப் படங்களின் பாடல்கள் எல்லாமே ஹிட் தான். முக்கால்வாசிப் பாடல்கள் கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்த பாடல்கள். சித்ரம் படத்தில் ‘நகுமோமு’, பரதம் படத்தில் ‘ராமகதா கானலயம்’, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ‘பிரமதவனம் வேண்டும்’ பாடல்கள் என்றென்றும் காதுக்கு விருந்தானவை.

சமீபத்தில் பார்த்து ரசித்த இவரது படம் ‘த்ருஷ்யம்’. கதைக்களன் மிகவும் வித்தியாசமானது. நடிக்கிறார் என்று சொல்லமுடியாத அளவிற்கு இயற்கையான நடிப்பு இந்தப் படத்தில். ஒரு ‘class’ மூவி என்று இதைச் சொல்லலாம். நம்மூர் கமலஹாசன் இந்தப் படத்தை ரீமேக் செய்வதாக இருக்கிறார் என்று கேள்வி. வேண்டாம், விட்டுவிடுங்கள், ப்ளீஸ்! கமலஹாசன் யோசித்து முடிவு எடுப்பதற்குள் எங்கள் ஊர் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை எடுத்து வெளியிட்டும் விட்டார். லால் ஏட்டனை ரசித்த என்னால் இவர்களை நிச்சயம் ரசிக்க முடியாது.

 

இன்று மோகன்லாலின் பிறந்தநாள் என்று ரொம்பவும் லேட்டாகத் தெரிந்தது. அதனால் லேட்டாக ஒரு பதிவு இவரைப் பற்றி.

 

ஹேப்பி பர்த்டே லால் ஏட்டா!

 

 

 

 

 

 

 

அரியலூர் அடுக்கு தோசை – 3   

    

படம் பார்த்தாதானே என்ன படம்னு நினைவிருக்கும்? படம் பார்க்கவிடாமல் நண்டு சிண்டுகள் கொட்டம் அடித்தன. கொட்டாய் உள்ளே நுழைந்து ‘பெஞ்சு’ சீட்டுக்கு போனோமோ இல்லையோ, ‘நான் மன்னி பக்கத்துல’, ‘நான் மன்னி பக்கத்துல’ என்று முட்டி மோதி ஒண்ணோட ஒண்ணு சண்டை. ‘நா நடுவுல உக்காந்துக்கறேன், நீங்க என் ரெண்டு பக்கத்துலயும் உக்காருங்கோ’ என்றால் என் பெண் ‘ஹோ’ என்று அழுகை. ‘நாந்தான் ஒன் கப்பத்துல (பக்கத்துல) என்று. ஒரு வழியா பெஞ்சின் ஒரு கோடியில் என் அகத்துக்காரர். இந்த கோடியில் நான். நடுவில் ஐந்து வாண்டுகள். எனக்கு அப்புறம் என் பெண். என் அகத்துக்காரருக்கு அந்தப் பக்கம் சித்தியா.

கொட்டாய் உள்ளே போறதுக்கு முன்னால நடந்துதே ஒரு கூத்து அதைச் சொல்லலையே. எழுந்து நின்ற ஆள் சீட்டு உள்ள போடல என்று தெரியவந்ததும் வாண்டுகள் ‘நா போய் இடம் பிடிக்கிறேன்; நா போய் எடம் பிடிக்கிறேன்’ என்று ஒரே சத்தம். சித்தியா ஒரு அதட்டல் போட்டார். கொஞ்சம் அமைதி. என் குழந்தைக்கோ இவர்கள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்து ஒரே சிரிப்பு. என் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு குதிகுதின்னு குதிச்சுண்டிருந்தா. என் அகத்துக்காரர் சித்தியாவிடம் ‘நா டிக்கட் வாங்கறேன்’ ன்னு பர்ஸை எடுத்தார். ‘அண்ணா சேர் வாங்குங்கோ…. அண்ணா….!’ என்று எல்லாம் கோரஸ்ஸாக சொன்னதுகள்.  ‘அம்மாவோட வந்தா நாங்கள்ளாம் தரை டிக்கட்டுல தான் படம் பார்ப்போம். மணலை குமிச்சி வெச்சி அதும்மேல உக்காந்துண்டு படம் பார்ப்போம். கண்ணம்மா (சித்தியின் கடைசிக் குழந்தை) தூங்கியே போய்டுவா!’

‘மன்னி மெட்ராஸ். அதனாலே அண்ணா சேர்தான் வாங்குவார்’ என்று என்னைப்பார்த்து சிரித்தபடியே பெரியவன் சொன்னான்.

‘மெட்ராஸ் மெட்ராஸ்’ அப்படிங்கறது பாராட்டா, கேலியான்னு எனக்குப் புரியல. ஸ்ரீரங்கம் போனாலும் எல்லோரும் எங்களை ஒருமாதிரிதான் பார்ப்பார்கள். அதுவும் கொள்ளிடத்திற்குக் குளிக்கப் போனா நாங்கள் எல்லாம் கட்டிண்டு வந்த துணியோட ஆத்துல உக்காறத பார்த்து ஒரு நமுட்டு சிரிப்புடன், ‘பட்டணத்துலேருந்து வரேளா’ என்று அங்கருக்கற மாமிகளெல்லாம் கேலியா கேட்பா. அவா மாதிரி எங்களுக்கு ஒரு துண்டை கட்டிண்டு இடுப்புப் புடவையை தோய்ச்சுக் கட்டிக்கற வித்தை தெரியாது அதனால. இங்க இந்த குழந்தைகளும் மெட்ராஸ்ன்னு சிரிக்கறதுகளே! மெட்ராஸ்காரான்னா இளப்பமா?

டிக்கட் வாங்கின உடனே ‘உள்ள போலாம், உள்ள போலாம்’ ன்னு அமர்க்களம்.

‘படம் ஆரம்பிச்சிருக்குமா?’

‘ஊஹும். முதல்ல பீடி, சிகரெட் விளம்பரம். அப்புறம் அரசாங்க செய்திச் சுருள் வரும். ‘அஸ்ஸாமில் வெள்ளம்’, பஞ்சாபில் பஞ்சம்’ அப்படின்னு. அதுவும் சரியாத் தெரியாது. பிலிம் முழுக்க மழையா இருக்கும்!’

‘மழையா?’

‘ஆமா, மன்னி  ஒரே பிலிம காமிச்சு காமிச்சு தேஞ்சு போயிருக்கும்!’

பரவாயில்ல. பசங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. ‘சீவா பசங்களா கொக்கா?’ என்றார் என் அகத்துக்காரர் என் மனசப் படிச்சா மாதிரி.

அதற்குள் ஒரு வாண்டு திடீரென நினைவிற்கு வந்தது போல சொல்லித்து: ‘போனதடவ ஒரு கேலிப்படம் காமிச்சா. அதுல ஒரு மாமா முண்டாசெல்லாம் கட்டிண்டு  ரயில்ல வருவா. தன்னோட ஊர் வந்தவுடனே – ரயில் அவா ஊருல நிக்காது – அதனால ரயில்ல இருக்கற செயினப் பிடிச்சு இழுத்துடுவா. ரயில் நின்னவுடனே ஜாலியா விசில் அடிச்சுண்டே ரயில்ல இருந்து இறங்கி நடந்து போவா. அப்போ ஒரு கை நீளமா பின்னாலேருந்து வந்து அந்த மாமாவோட கழுத்தைப் பிடிச்சு அழைச்சுண்டு போயி, ஜெயில்ல போடும்…! செயினைப் பிடிச்சு இழுக்கக் கூடாதுன்னு எழுதிக் காட்டுவா’.

‘மன்னி நீங்க அந்தப் படம் பார்த்திருக்கேளா? மெட்ராஸ்ல அதெல்லாம் காட்டுவாளா?’

‘ம்ம்ம்…. காட்டுவா…’ என்றேன். அப்போது இந்தக் கேலிச்சித்திரம் தொலைக்காட்சிகளில் வந்துகொண்டிருந்தது.

ஒரு வழியா உள்ள போயி உக்காந்துண்டோம். அங்கே ஒரு அமர்களம் ஆச்சு. உண்மையிலேயே குழந்தைகள் சொன்னா மாதிரி அரசாங்கச் செய்திச் சுருள், செயினைப் பிடிச்சு இழுக்கற ஆள் என்று எல்லாப்படங்களுக்கு காண்பித்தார்கள். எனக்குக் கதை சொன்ன வாண்டு ரொம்பவும் என்ஜாய் பண்ணிண்டு ‘கிலுகிலு’ வென்று சிரித்துக் கொண்டிருந்தது. படத்தைவிட இதுகளைப் பார்க்கிறது எனக்கு பெரிய எண்டர்டெயின்மென்ட் ஆக இருந்தது.

இடைவெளில நான் சொன்னேன்: ‘குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கோ’

காதுல விழுந்துதோ இல்லையோ, ‘அண்ணா, காளிமார்க் சோடா’, ‘ இல்லண்ணா எனக்கு கோலி சோடா’ , ‘எனக்கு குச்சி ஐஸ்க்ரீம்!’ என்று ஒரே கூச்சல், கும்மாளம்.

எல்லோருக்கும் அவரவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். குழந்தைகளுக்கு குஷியோ குஷி.

படம் முடிஞ்சு வெளியே வந்தவுடன் இவர் கேட்டார் ‘பசிக்கறது, ராத்திரிக்கு என்ன சாப்பாடு?’

‘அடுக்கு தோசை….!’ என்றேன்.

(தொடரும்)

அரியலூர் அடுக்கு தோசை பார்ட் 1 

அரியலூர் அடுக்கு தோசை 2