பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 8

 

 

இந்தத் தொடரில் இதுவரை உதாரண அம்மா, உதாரணத் தந்தை, ஆசிரியர்கள் என்று பார்த்துக் கொண்டு வந்தோம். இனி மாணவர்களைப் பார்ப்போம். உதாரண மாணவர்கள் என்று இருக்கிறார்களா? நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களைப் பார்ப்போம் இந்தப் பகுதியில். இந்தத் தொடரின் முக்கியமானவர்கள் இவர்கள் தான்.

ஆசிரியர்களுக்கு எல்லா மாணவர்களுமே முக்கியமானவர்கள் என்றாலும், சில மாணவர்கள் அதிக கவனம் பெறுகிறார்கள். அவர்கள் யார்?

 

கேள்வி கேட்கும் மாணவர்கள்:

ஆசிரியர் ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு புரிகிறதா என்று கேட்கிறார். எத்தனை மாணவர்கள் புரியவில்லை என்று நம் கலாம் ஐயா போல கேட்கிறார்கள்? ஆசிரியர் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் புரிந்தது என்று தலையாட்டிவிடும் மாணவர்கள் தான் இங்கு அதிகம். உண்மையான சந்தேகம் இருந்தால் எந்த ஆசிரியரும் கோபிக்க மாட்டார். மாறாக, இன்னும் அதிக கவனத்துடன் மாணவர்களுக்குப் புரியும் வகையில் விளக்குவார்.

வகுப்பில் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் என்ன? ஒரு புதிய கருத்துப் படிவத்தை ஆசிரியர் விளக்கும் போது புரிந்து கொண்டால் தான் அடுத்தடுத்த பாடங்கள் புரியும். அடிப்படை புரிந்தால் தான் அதே கருத்துப் படிவத்தை ஒட்டி வரும் பாடங்கள் புரியும். அதனால் மாணவர்கள் நிச்சயம் தங்களது சந்தேகங்களை உடனடியாக ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஒரு மாணவன் கேட்கும் கேள்வி பல மாணவர்களின் சந்தேகத்தைத் தீர்க்கலாம்.

 

கடுமையாக உழைக்கும் மாணவர்கள்:

எல்லா மாணவர்களுமே இயற்கையிலேயே புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. சிலர் தங்கள் கடின உழைப்பால் புத்திசாலியாக மாறுவார்கள். இப்படிப்பட்ட மாணவர்களை ஆசிரியரும் விரும்புவார். பள்ளிப் பருவத்திலேயே இத்தகைய கடின உழைப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் பிற்காலத்தில் பெரிய வெற்றியும் பெறுகிறார்கள். குறித்த நேரத்தில் பாடங்களைப் படித்து முடிப்பது, வீட்டுப் பாடங்களை தவறாமல் செய்து கொண்டு வருவது, தேர்வு சமயங்களில் அதிகப்படியான நேரம் படிப்பது என்று இவர்கள் தங்கள் உழைப்பினால் சிறந்த மாணவர்கள் ஆகிறார்கள். இவர்களில் சிலருக்கு தங்கள் குறைகளும் தெரிந்திருக்கும். அந்தக் குறையை எப்படி சரி செய்து கொள்வது என்பதையும் அவர்களே தீர்மானித்து அதற்கும் சேர்த்து உழைக்கிறார்கள் இந்த வகை மாணவர்கள்.

 

பாடங்களுக்கு வெளியே தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் மாணவர்கள்:

இந்த வகை மாணவர்கள் ஏதாவது விளையாட்டிலோ, அல்லது மாணவர் சங்கத்திலோ பங்கெடுக்கிறார்கள். இவற்றில் பங்கேற்பதன் மூலம் ஏற்படும் அனுபவங்கள் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. வெளியே கிடைக்கும் அனுபவங்கள் அவர்களை பன்முகத் திறமையாளர்களாக மாற்றுகிறது. முக்கியமாக பலருடன் கலந்து பழகுவது; ஒரு குழுவாக எல்லாரையும் அனுசரித்துப் போவது போன்ற அனுபவங்கள் அவர்களைப் படிப்பிலும் கவனம் செலுத்தும்படி செய்கிறது. தங்களுடன் கூடப் படிக்கும் மாணவர்களுக்கும் இவர்கள் உதாரணமாக இருந்து அவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு பொதுவான குறிக்கோளை வெற்றிகரமாக அடைகிறார்கள். தன்னிச்சையாக தலைமைப் பண்பும் இவர்களிடம் மலர்கிறது.

 

தலைமைப் பண்பை இயற்கையாகப் பெற்றிருக்கும் மாணவர்கள்:

சிறுவயதிலிருந்தே சில மாணவர்கள் வகுப்பறையில் சில வேலைகளை தாங்களாகவே முன்வந்து செய்வார்கள். உதாரணமாக ஆசிரியர் வருவதற்கு முன் கரும்பலகையைத் துடைத்து நாள், தேதி இவைகளை எழுதுவது; நல்ல வாக்கியங்களை எழுதுவது என்று  மிகவும் உற்சாகத்துடன் செய்வார்கள். பெரிய வகுப்பிற்குப் போனாலும் இந்த செய்கைகள் தொடரும் வேறுவிதமாக. ஆசிரியர் பாடம் நடத்தி முடித்தவுடன் தன் வகுப்பு மாணவர்களுடன் கலந்து உரையாடி, புரியாதவற்றைப் புரிய வைப்பது என்று தலைமைப் பண்பை வெளிப்படுத்துவார்கள். வகுப்பில் ஏதாவது தேவைப்பட்டால் இந்த மாணவர்களே ஆசிரியரிடம் பேசுவார்கள். மற்ற மாணவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவர்கள் மட்டுமே இப்படி தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த முடியும். உதாரணமாக இருந்து மற்றவர்களையும் நடத்திச் செல்லுவதுடன், சோர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்துவதும் இந்த வகை மாணவர்களே.

 

ஊக்கசக்தி அளிக்கும் மாணவர்கள்:

படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஆசிரியரிடமிருந்து வரலாம்; பெற்றோர்களிடமிருந்து வரலாம்; ஆனால் கூடப்படிப்பவர்களிடமிருந்து வரும்போது அதன் சக்தியே தனிதான். படிக்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாத மாணவனை கையாளுவது கடினமான விஷயம். வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களில் ஒன்றிரண்டு பேர்கள் இப்படிப்பட்டவர்களாக அமைந்துவிட்டால் ஆசிரியரின் பாடு திண்டாட்டம் தான். அவர்களை ரொம்பவும் நெருக்கினால் பள்ளிக்கூடத்தை விட்டே நின்று விடும் அபாயமும் இருக்கிறது. தாங்களாகவே உற்சாகத்துடன் படிக்கும் மாணவர்கள் படிப்பதில் ஆர்வம் காட்டாத மாணவர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வந்து படிக்க வைத்துவிடுவார்கள். ஆசிரியர்களுக்கும் உதவுவார்கள்.

 

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் மாணவர்கள்:

படிக்க வேண்டும் என்ற உந்துதலும், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துதலும் ஒரு மாணவனை சிறந்த மாணவனாக்குகிறது. கல்வி இலவசமாகக் கிடைத்தால் கூட அதை சரியானபடி பயன்படுத்தாத மாணவர்களை என்ன செய்ய? கட்டாயக்கல்வி என்று சொன்னால் கூட எத்தனை பேர்கள் பள்ளிக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பை விட்டுவிடாமல் அதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

 

ஆசிரியராக இருந்து நம் நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதரைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம். அவரது பிறந்தநாள் தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அடுத்த வாரம் சந்திக்கலாமா?

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3

ஆபிரகாம் லிங்கன்

 

சென்ற வாரம் ஒரு  அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்.

ஒரு குழந்தையை உருவாக்குவதுடன் தந்தையின் கடமை முடிவதில்லை. அந்தக் குழந்தை குடும்பத்தில் நல்ல மகனாக, பள்ளியில் சிறந்த மாணவனாக, அலுவலகத்தில் பொறுப்புள்ள ஊழியனாக, திருமணம் ஆனதும் அன்புக் கணவனாக, சமுதாயப் பொறுப்பு நிறைந்தவனாக  உருவாக்குவதில் தந்தையின் பங்கு கணிசமானது.

தந்தை ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் காரணகர்த்தாவாகவும், அவர்களது நலம் விரும்பியாகவும்,  அவர்களை நல்வழிப்படுத்துபவராகவும் இருக்கிறார்.

 

குழந்தை வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பாசம் மிகுந்த ஆதரவான தந்தை குழந்தையின் அறிவுத்திறன், மொழித்திறமை, சமூகத்திறன், படிப்புத்திறன், உள்ள உறுதி, சுய மரியாதை ஆரோக்கியமான சிந்தனை, நம்பகத்தன்மை போன்ற பன்முக வளர்ச்சிகளுக்கு வழி வகுக்கிறார்.

குழந்தைக்கு இளம் வயதில் தந்தையுடன் என்ன மாதிரியான உறவு ஏற்படுகிறதோ, அதுவே பிற்காலத்தில் மற்றவர்களுடனான அவனது உறவை தீர்மானிக்கிறது.

ஒரு குழந்தையை வளர்ப்பதில் அம்மா அப்பா இருவருக்குமே சரிசமமான பங்கு இருக்கிறது. அம்மா உணர்ச்சிபூர்வமான உறவை வளர்த்தால், அப்பா அறிவுபூர்வமாக குழந்தையுடன்  உறவாடுகிறார்.  இரண்டுமே குழந்தைக்குத் தேவை.

ஒரு மகனுக்கு அப்பாதான் முதல் ஹீரோ.ள மகளுக்கோ அவள் வாழ்வில் சந்திக்கும் முதல் ஆண் அப்பாதான். திருமண வயதில் இருக்கும் ஒரு பெண் அப்பாவைப் போல தனக்கு ஒரு துணை வேண்டும் என்றும் விரும்புகிறாள்.

ஒரு தந்தையின் முதல் கடமை தன் குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு கொடுப்பது. குழந்தைகளைச் சுற்றி அன்பு என்னும் அரண் அமைத்து, கூடவே பொருளாதாரப் பாதுகாப்பு கொடுப்பதும் தந்தைதான்.  குடும்பத்தினரின் தேவைகளை, ஆசைகளை, விருப்பங்களைப் பூர்த்தி செய்வது தந்தையின் தலையாய கடமையாகும்.

 

அதே சமயம் குழந்தைகள் சமூகத்தில் நல்ல மனிதர்களாக உருவாக அவர்களுக்கு உதாரணமாக நடந்து கொள்ள வேண்டியதும் தந்தையின் கடமைதான். குழந்தை பள்ளிப்பருவம் எய்தும் வேளையில் தந்தையின் பொறுப்பு பலமடங்கு அதிகரிக்கிறது.

 

எல்லா குழந்தைகளையும் போல தன் குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய  மதிப்பெண் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் விரும்புகிறார். இதை தவிர ஒரு தந்தை வேறு என்ன எதிர் பார்க்க முடியும் என்று தோன்றுக்கூடும். இதோ ஒரு உதாரணத் தந்தை என்ன செய்கிறார் என்று  பார்க்கலாம்.

அந்தக் குழந்தை பள்ளி செல்லும் வயதை எட்டுகிறது. பள்ளியில் அவன் என்ன கற்கப்போகிறான்? யாருக்குத் தெரியும்? பள்ளியில் சேர்த்து விட்டு விட்டால் நம் கடமை முடிந்தது. டீச்சர் பாடு குழந்தை பாடு என்று அந்தத் தந்தையால் இருக்க முடியவில்லை. எடுக்கிறார் காகிதத்தையும் எழுதுகோலையும். எழுதுகிறார் இப்படி:

 

மரியாதைக்குரிய ஆசிரியரே!

எல்லா மனிதர்களும் நியாயமானவர்களோ, உண்மையானவர்களோ இல்லை என்று என் மகன் கற்கக் கூடும். ஆனால் ஒவ்வொரு கெட்ட மனிதனுக்கும் ஒரு நல்லவன் உண்டு; சுயநல அரசியல்வாதிகளிடையே அர்பணிப்பு செய்யும் ஒரு தலைவன் இருப்பான்;  பகைவன் இருக்கும் இடத்தில் ஒரு நண்பன் இருப்பான் என்பதை அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தெருவில் கண்டெடுக்கும் ஐந்து ரூபாயை விட அவனாகச் சம்பாதிக்கும் ஒரு ரூபாய் உயர்ந்தது என்று அவனுக்கு சொல்லிக் கொடுங்கள்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை ரசிக்கவும் கற்றுக் கொடுங்கள்.

பகைமை என்பதிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்யுங்கள்.

அமைதியான சிரிப்பின் ரகசியத்தை அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். அடாவடித்தனம் செய்பவனை மிகச் சுலபத்தில் வீழ்த்தி விடலாம் என்று அவன் அறியட்டும்.

புத்தகம் என்னும் அதிசயத்தை அவனுக்கு அறிமுகப் படுத்துங்கள். அதே சமயம் வானத்தில் பறக்கும் பறவைகள், வெய்யிலில் அலையும் தேனீக்கள், பசுமையான மலைப்பகுதியில் தோன்றும் மலர்கள் போன்ற இயற்கை அதிசய ங்களை ரசிக்கும் ஆர்வத்தையும் அவனுக்கு ஏற்படுத்துங்கள்.

பள்ளியில் ஏமாற்றி வெற்றி அடைவதை விட தோல்வியில் மரியாதை ஏற்படும் என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள்.

அவனது சுயசிந்தனைகள் தவறானவை என்று எல்லோரும் சொன்னாலும், அவற்றின் மேல் நம்பிக்கை வைக்கச் சொல்லிக் கொடுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், கரடுமுரடானவர்களிடம் கரடுமுரடாகவும் இருக்கக் கற்றுக் கொடுங்கள்.

ஆட்டுமந்தையில் ஒரு ஆடாக இல்லாமல் தனித்து நிற்கும் பலத்தை அவனிடத்தில் ஏற்படுத்துங்கள்.

எல்லோர் சொல்வதையும்  கேட்கட்டும். தான் கேட்டதையெல்லாம் உண்மை என்னும் வடிகட்டி மூலம் வடித்து எடுத்துவிட்டு நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுங்கள்.

இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொல்லிக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் எந்த வெட்கமும் இல்லை என்று புரிய வையுங்கள். வெட்டிப் பேச்சாளர்களை விலக்கி வைக்கவும், தேனொழுகப் பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் சொல்லிக் கொடுங்கள்.

அவனது உடல் உழைப்பையும், அறிவுத்திறனையும் மதிப்பவர்களிடம் அவற்றை விற்கச் சொல்லிக் கொடுங்கள். ஆனால் இதயத்திற்கோ, ஆன்மாவிற்கோ விலை இல்லை என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

வெற்றுக் கூச்சலுக்குக் காதுகளை மூடிக் கொள்ளவும், தன்னுடைய உரிமைகளுக்கு போராடவும் சொல்லிக் கொடுங்கள். தான் சரி என்று நினைப்பதை போராடிப் பெறவும் சொல்லிக் கொடுங்கள்.

அவனை மென்மையாகக் கையாளுங்கள். ஆனால் ரொம்பவும் செல்லம் கொடுக்க வேண்டாம். தங்கத்தைப் புடம் போட்டால் தான் நகைகள் செய்ய முடியும்.

 

அநியாயத்தைக் கண்டு பொங்குவதற்கு பொறுமை வேண்டாம்; ஆனால் பொறுமையாக இருப்பதுவும் வீரத்தில் ஒரு வகை என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள். அவனிடத்தில் அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவனுக்கு நம்பிக்கை வரும்.

நான் மிக அதிகமாகக் கேட்பது போல உங்களுக்குத் தோன்றலாம். உங்களால் என்ன  செய்ய முடியும் என்று பாருங்கள். என் மகன் அருமையான ஒரு குட்டிப்பையன்.

இப்படிக்கு

ஆபிரகாம் லிங்கன்

ஆம் இந்தக் கடிதத்தை எழுதியது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தான்.

பள்ளியில் தன் மகன் என்ன கற்க வேண்டும் என்பதை சொல்வது போல தோன்றினாலும் ஒரு குழந்தையை உருவாக்குவதில்  ஆசிரியரின் பங்கு என்ன என்றும் நாசூக்காக சொல்லிச் செல்லுகிறார், இல்லையா?

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் – பகுதி 2

 

 

Image result for tenzing mount everest images

 

உலகத்தின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் மீது யார் முதலில் ஏறியிருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைத்திருக்கும். ஆனால் டென்சிங் நார்கே (Tensing Norgay) விற்கு கிடைத்த மரியாதை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் மலையேற்றம் செய்பவர்களுக்கு அவர்களது சாமான்களைத் தூக்கி வரும் கூலியாளாகத்தான் அவர் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மலையேறும் குழுவின் அங்கத்தினர் ஆனார். இந்த அவரது வளர்ச்சி மிகவும் ஆச்சர்யகரமானது. 1936 ஆம் ஆண்டு ஒரு பெரிய, தன்னம்பிக்கை கொண்ட ராணுவத்திற்குத் துணையாக தனது மலை ஏற்றத்தை ஆரம்பித்தார். 1947 ஆம் ஆண்டு எர்ல் டென்மன் என்ற தனிமனிதருடன் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து விடமுடியும் என்ற நம்பிக்கையுடன் மலை ஏறினார். நடக்கவில்லை. 1952 ஆம் ஆண்டு ஸ்விஸ் நாட்டு மலையேற்றக் குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்திற்கு மிக அருகில் – 1000 கி.மீ. தூரத்திற்குள் – அதுவரை யாரும் சென்றிராத அளவிற்கு அருகில் சென்றார். இப்படி பலமுறை ஏறி ஏறி 1953 ஆம் ஆண்டிற்குள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது அதிக நேரம் கழித்த மனிதர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

 

அந்தக் காலகட்டத்தில், அவரது இனத்தைச் சேர்ந்த மற்ற செர்பாக்களுக்கு மலையேற்றம் என்பது வாழ்க்கையை நடத்த பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக இருந்தபோது, இவருக்கு மாத்திரம் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவது மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. ‘கண்டிப்பாக நான் சிகரத்தைத் தொட்டே ஆக வேண்டும் என்பது எனது மனதின் மிகப்பெரிய ஆசையாக இருந்தது. அந்த அளவிற்கு எவரெஸ்ட் சிகரம் என்னை ஈர்த்தது’ என்கிறார் டென்சிங். சுமார் இருபது வருடங்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தை மனிதன் வெற்றி கொள்ள நடத்திய எல்லா மலையேற்றத்திலும் இவர் பங்கு கொண்டார்.

 

இதைத்தவிர, சர் எட்மன்ட் ஹில்லரியுடன் இவர் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொண்டது இன்னொரு வகையிலும் சிறப்புப் பெற்றது. இரண்டாம் உலகப்போர் வரை மேற்கத்திய மோகத்திலேயே ஆசியா இருந்து வந்தது. ஐம்பதுகளின் ஆரம்பத்தில் தான் ஆசிய மக்கள் தங்கள் பலம் பற்றியும், தங்களது அடையாளம் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தனர். அந்தச் சமயத்தில் டென்சிங் நிகழ்த்திய இந்த அற்புதம் உலகையே ஆசியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. உலகத்தின் மிக உயர்ந்த சிகரத்தை ஒரு சாமானியனால் தொட முடியும் என்ற நம்பிக்கையை லட்சக்கணக்கான மக்களுக்குக் கொடுத்தது. வரலாற்றில் ஒரு ஆசியாக்காரர் செய்த சாதனை என்று கொண்டாடப்பட்டது. ‘பல லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் சிவனின் மறு அவதாரம்; புத்தரின் மறுபிறப்பு. கடவுளையும், மனிதனையும் ஒப்பிட்டுப் பார்த்து குழம்ப விரும்பாத சிலருக்கு அவர் ஒரு குறியீடு. ஆசிய மக்களுக்கு அவர் வெறுமனே எவரெஸ்ட் மீது ஏறி சாதனை படைத்தவர் மட்டுமல்ல; தங்களாலும் சாதனை புரிய முடியும் என்று நம்பவைத்த அத்தாட்சி அவர்’ என்று அமெரிக்க எழுத்தாளரும், மலை ஏறுபவருமான திரு ஜேம்ஸ் ராம்சே உல்மன் டென்சிங் பற்றிய ‘மேன் ஆப் எவரெஸ்ட்’ என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

 

எதற்காக இப்போது டென்சிங் பற்றி இத்தனை தகவல்களைச் சொல்லுகிறேன் என்று உங்களுக்குத் தோன்றலாம். இதோ சொல்லுகிறேன். இந்த சாதனையை அவர் செய்து முடித்தவுடன் அவரை ஒரு வானொலி நேர்முகப் பேட்டி கண்டது. ’19 வயதில் இந்த மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளீர்கள். என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. ‘நான் ஏற்கனவே எத்தனையோமுறை இந்த சிகரத்தில் ஏறியிருக்கிறேன். இப்போது உலகளவில் இது அறியப்பட்டுள்ளது’ என்றாராம். கேள்வி கேட்டவருக்கு திகைப்பு. ‘எந்த வயதில் ஏற ஆரம்பித்தீர்கள்?’ என்று நம்ப முடியாமல் கேட்டார். அதற்கு டென்சிங் சொன்னார்: ‘நேபாள தேசத்தில் நான் பிறந்தது இமயமலை சூழ்ந்த பகுதி. எங்களது தொழில் இந்த மலையடிவாரத்தில் யாக் எருமைகளை மேய்ப்பது. அதைத்தவிர மலை ஏறுபவர்களுக்கு துணையாக அவர்களது சாமான்களைத் தூக்கி வருவது. சிறுவனாக இருக்கும்போது தினமும் இந்த மலைகளை விழிகள் விரிய பார்த்துக் கொண்டே யாக் எருமைகளை ஓட்டிக்கொண்டு வருவேன். ‘வெறுமனே இந்த மலையைப் பார்க்காதே, மகனே! ஒருநாள் நீ இந்த மலைமேல் ஏறி இதன் சிகரத்தைத் தொடவேண்டும்!’ என்று என் அம்மா சொல்லுவார். தினமும் இதைச் சொல்லிச் சொல்லி என்மனதில் இந்த ஆசையை உருவேற்றியவர் என் அம்மா தான். அன்றிலிருந்தே நான் மானசீகமாக தினமும் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற ஆரம்பித்துவிட்டேன். இப்போது அதன் சிகரத்தைத் தொட்டுவிட்டு வந்திருக்கிறேன்!’

 

படிப்பறிவு இல்லாத ஒரு தாய் தன் மகனுக்கு எப்படிப்பட்ட உயர்ந்த குறிக்கோளை ஊட்டியிருக்கிறார், பாருங்கள். அதுமட்டுமல்ல; நார்கே என்ற இவரது பெயருக்கு ‘அதிர்ஷ்டக்காரன்’ என்றொரு அர்த்தம் உண்டு. தான் அதிர்ஷ்டக்காரன் என்று மிகவும் நம்பினார் டென்சிங். தான் பிறந்திருப்பது வெறுமனே ‘யாக்’ எருமைகளை மேய்க்க மட்டுமல்ல என்று திடமாக நம்பினார். அதேபோல கூலியாளாக தன் மலையேற்றத்தைத் துவங்கினாலும், ஒருநாள் தானும் ஒரு மலையேறுபவனாக எவரெஸ்ட் சிகரத்தில் காலடி வைப்போம் என்ற அவரது நம்பிக்கை, தாய் கொடுத்த கனவு இரண்டும் தான் சாமானியனான அவரை உலக சாதனை செய்ய வைத்தது.

 

இவரைப்போல மனதில் கனவுகளைச் சுமந்த மாணவர்களும், குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஒரு குறிக்கோளை மனதில் பதிய வைக்கும் தாயும் இருந்தால் புதிய சமுதாயம் மலரும், இல்லையா?

 

புதிய சமுதாயம் உருவாக்குவோம், வாருங்கள்.

 

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர்

 

முதல் பகுதி – அறிமுகம்

IMG-20180709-WA0003IMG-20180709-WA0004IMG-20180709-WA0002

எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது என்றால் மிகையாகாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறோம்.

ஒரு சமுதாயம் என்பது பலவிதப்பட்ட தனி மனிதர்களால் ஆனது. பலவிதப்பட்ட மனிதர்கள் என்று சொல்லும்போதே ஏற்றத்தாழ்வுகளும் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கம், இல்லையா? இந்த ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வது கல்வி என்று நாம் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். நம் குழந்தைகளின் கல்விக்கு பெற்றோர் ஆகிய நாமும் பொறுப்பு என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஒரு குழந்தை தனது கற்கும் அனுபவத்தை ஆரம்பிப்பதே வீட்டிலிருந்துதான். அதுவும் தனது பெற்றோரிடமிருந்து தான் தனது முதல் பாடத்தைக் கற்றுக் கொள்ளுகிறது. வீட்டில் கற்பதை வைத்துக் கொண்டே வெளியுலகத்தைப் பார்க்கிறது.

ஒருகாலத்தில் குருகுலம் என்ற அமைப்பு கல்வியை போதிக்கும் இடமாக இருந்து வந்தது. காலம் மாற மாற இந்த அமைப்பும் மாறி தற்போது குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட கல்விச்சாலைகளாக உருமாறியிருகின்றது. கல்விச்சாலைகள் மாறிவிட்டன. ஆனால் அங்கு கற்பிக்கப்படும் பாடங்கள் மாறினவா? குரு என்று அழைக்கப்பட்டவர்கள் இப்போது ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்தக் கால குருவிற்கும் இந்தக் கால ஆசிரியர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் மேம்பட்டவர்களா? இவர்கள் மேம்பட்டவர்களா?

அந்தக் காலப் பெற்றோர்களுக்கும், இந்தக் கால பெற்றோர்களுக்கும் என்ன வித்தியாசம்?  அந்தக் கால மாணவர்களுக்கும், இந்தக் கால மாணவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லா அமைப்புகளும் மாறியிருப்பது போலவே இவர்களும் மாறித்தான் இருக்கிறார்கள். இந்த மாற்றம் சரியானபடி நடந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கு விடை அளிப்பது சற்று கடினம் தான்.

பெற்றோர், ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு மாணவனை உருவாக்குகிறார்கள். வீட்டில் குழந்தையாக இருப்பவர்கள் வெளியில் கல்விச்சாலைக்குச் சென்று வெளி உலகத்தைக் காண்கிறார்கள். முதலில் பெற்றோர்களின் கண்களின் வழியே உலகத்தைப் பார்ப்பவர்கள் பிறகு ஆசிரியர் என்னுமொரு வழிகாட்டியுடன் வாழ்வியலைத் தொடங்குகிறார்கள்.

பெற்றோர், ஆசிரியர் இருவரின் மேற்பார்வையில் வளரும் குழந்தையின் கடமை என்ன? எத்தனை காலம் பெற்றோர், மற்றும் ஆசிரியரைச் சார்ந்திருக்க முடியும்? தான் கற்கும் கல்வியிலிருந்து நல்லவை கெட்டவை பிரித்து அறிந்து தனது வாழ்க்கையின் பாதையை தீர்மானிப்பது தான் ஒரு மாணவனின் கடமை.

ஒரு குழந்தை மாணவனாகி, வாழ்வியலைக் கற்கத் தொடங்கும் இடமே கல்விச்சாலை. இங்கும் ஒரு கேள்வி கேட்கலாம். கல்விச்சாலைகள் தேவையா? கல்வி மற்றும் கல்வி கற்பித்தல் இவற்றின் பயன் என்ன? இந்த இரண்டிற்கும் யார் பொறுப்பேற்க வேண்டும்? இந்த விஷயங்களை பொதுவில் அவ்வளவாக யாரும் விவாதிப்பதில்லை. இவை பற்றி அறியாமல் நாமும் நம் குழந்தைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்; அவர்களும் கற்று வருகிறார்கள். அங்கு என்ன கற்கிறார்கள் என்பதும் கேள்விக்குறி தான்.

குழந்தைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்புவதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறதா? பெற்றோர்களுக்கும், கல்விச்சாலைகளுக்கும் வேறு எந்தவிதமான சம்மந்தமும் இல்லையா? வருடாவருடம் பணம் கட்டுவதுடன் அவர்களது கடமை முடிந்துவிடுகிறதா? கல்விச்சாலைகளின் வாசலில் குழந்தைகளை விட்டுவிட்டு வருவது மட்டுமே அவர்களின் தினசரி கடமையா? கல்விச்சாலைகளில் நடக்கும் எந்த விஷயத்திலும் அவர்கள் பங்கு பெற முடியாதா? குழந்தைகளிடம் ‘நன்றாகப்படி, நல்லவேலை கிடைக்கும்’ அல்லது ‘நன்றாகப்படித்து அமெரிக்கா போய் நிறைய சம்பாதி’ போன்ற அறிவுரைகளை கொடுப்பது மட்டுமே அவர்களது கடமையா?

குழந்தைகளின் கடமை என்ன? தினமும் சீருடை அணிந்துகொண்டு கல்விச்சாலைக்குப் போய், அவர்கள் கொடுக்கும் புத்தகங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி, தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வருவதா? நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவன் புத்திசாலி. ஒரு மாணவனின் புத்திசாலித்தனம் அவனது மதிப்பெண்ணை வைத்து தீர்மானிக்கப்படுவதா? ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட ஏதோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல அழும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்வது? தேர்வில்  தோல்வி என்றவுடன் வாழ்வை முடித்துக் கொள்ளும் மாணவர்கள்!

தற்சமயம் கல்விச்சாலைகளில் நடப்பதாக நாம் கேள்விப்படும் சம்பவங்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. ஆசிரியரை மாணவன் கொலை செய்கிறான். பேராசிரியை ஒருவர் மாணவிகளை மதிப்பெண்களுக்காக உயர் அதிகாரிகளுடன் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளச் சொல்லுகிறார். அதுவும் வெளிப்படையாக. என்ன நடக்கிறது இங்கு? கல்வி கற்பிக்கும் இடம் இதுபோன்ற அழிக்கமுடியாத களங்கத்தை அடையக் காரணம் என்ன? எங்கு தவறு நேருகிறது? யார் செய்யும் தவறு இது? இந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பு? பெற்றோரா? ஆசிரியரா? அல்லது மாணவர்களா? அல்லது கல்விச்சாலைகள் கொடுக்கும் கல்வியா?

கேள்விகள், கேள்விகள். நமது கல்விமுறை, கல்விச்சாலைகள் பற்றி இதுபோல நிறைய கேள்விகள். தொடர்ந்து பேசலாம்.

தினமலரில் கட்டுரைத் தொடர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை எனது வோர்ட்பிரஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. காலையில் கணினியைத் திறந்தவுடன் இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்ப்பதுதான் முதல் வேலை. அபூர்வமாக சிலர் கருத்துரையும் எழுதுகிறார்கள். எல்லோருக்கும் என் நன்றி.

வலைத்தளம் தூங்கிக் கொண்டிருந்தாலும் பத்திரிகையில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்தன. வலம் மாத இதழில் ஜூலை மாதத்தில் ஒரு கட்டுரை வரவிருக்கிறது. வரும் ஜனவரியில் ஒரு புத்தகம் வெளியாகலாம். எடிட்டிங் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக  திரு மருதன் (கிழக்கு பதிப்பகம் ஆசிரியர்) சொன்னார். இன்னொரு புத்தகம் நான் எழுதி முடிப்பதைப் பொறுத்து வெளிவரலாம். முதலில் வீடு. பிறகு தான் எழுத்தாளர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த முடியும் என்ற நிலையில் அதிகமாக எழுத முடியவில்லை. நிறைய விஷயங்கள் எழுத ஆரம்பித்து பாதியில் அல்லது முக்கால்வாசி முடிந்த நிலையில் இருக்கின்றன.

இந்த நேரத்தில் தான் தினமலரில் ஒரு கட்டுரைத் தொடர் எழுத கேட்டுக் கொண்டனர். 7 ஆம் தேதி ஜூலை இதழில் இந்தக் கட்டுரை ஆரம்பமாகியிருக்கிறது. அதற்கு முதல் இதழில் என் புகைப்படம் போட்டு கட்டுரை ஆரம்பமாகிறது என்று promo வெளியாகியிருந்தது. என்னுடைய நீண்ட நாளைய கனவு இது. ஒரு பிரபலப் பத்திரிக்கையில் தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்று. ஏற்கனவே குங்குமம் தோழியில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியிருந்தேன். இப்போது இரண்டாவது தொடர் தினமலரில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் மட்டுமே பெண்கள் மலரில் இந்தக் கட்டுரை வெளியாகிறது. அங்கிருக்கும் அன்பர்கள் படித்துப் பார்த்துக் கருத்துக்களை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.

Dinamalar promo

முதல் பகுதி வந்துவிட்டது. இந்த வலைப்பதிவைப் படிப்பவர்கள்  இந்த கட்டுரைத் தொடரில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று சொன்னால் என்னால் முடிந்த அளவிற்கு எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யலாம்.

முதல் பகுதியை கூடிய விரைவில் இங்கே பதிகிறேன்.

 

 

 

 

பணி ஓய்வு பெறப் போகிறீர்களா?

பணி ஓய்வு

நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வருடங்களாக ஒருநாளைப் போல காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருப்பதும் இயந்திரம் போல சமையல் செய்து முடித்து அலுவலகம் வருவதும், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது அடுத்த நாளைக்கு தேவையான கறிகாய்கள், பழம், சில சமயங்களில் மளிகை சாமான்கள் வாங்கிப்போவதும்…. மூச்சுவிடாமல் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இது மனதிற்கு மிகப் பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தாலும், அலுவலகத்தில் இத்தனை நாட்கள் செலவழித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் இனி என்ன செய்வது? சோம்பேறியாகி விடுவோமோ? மதிய நேரத்தில் தூங்கித் தூங்கி காலத்தைக் செலவிட வேண்டியிருக்குமோ? இத்தனை நாட்கள் தூங்குவதற்கு நேரமே கிடைக்காமல் தவித்தோம்; இனி தூக்கமே வாழ்க்கை என்று ஆகிவிடுமோ? பணியிலிருந்து ஓய்வு என்பது சிறிது நாட்களுக்கு நன்றாக இருக்கும். பிறகு என்ன செய்வது? இந்தக் கவலையும் கூடவே எழுந்தது விசாலத்திற்கு.

 

பணி ஓய்வுப் பெறப்போகிறோம் என்ற உணர்வே ஐந்தில் நான்கு மூத்த குடிமக்களுக்கு மனஅழுத்தத்தைக் கொடுக்கிறது. இனி என்ன செய்வது என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். நாமெல்லோருமே சிறிய வயதில் நம் சொந்த ஊரில் – முக்கால்வாசி அது ஒரு கிராமமாக இருக்கும் – காவிரிக் கரையிலோ, தஞ்சாவூர் பக்கமோ வயல்வெளியைப் பார்த்திருப்போம். பணிஓய்வு பெற்றுவிட்டோம் என்று இப்போது வயலில் இறங்கி வேலை செய்வது இயலாத ஒன்று. இத்தனை நாள் இல்லாத வழக்கமாக திடீரென  புத்தகம் படிப்பதும் முடியும் காரியமில்லை. பணிஓய்வு பெற்றவர்களில் 62.3% பேர்கள் உண்மையில் சலிப்பு அடைகிறார்கள். இந்த சலிப்பு அவர்களுக்கு தாங்கள் எதற்கும் லாயக்கில்லை என்ற உணர்வைக் கொடுக்கிறது. ஒரு சிலர் பழையபடி 9-5 நேரப்படியே வேலை வேண்டும் என்று வேலை தேடத் தொடங்குகிறார்கள். பலர் என்ன வேலையானாலும் பரவாயில்லை; ஒருநாளைக்கு மூன்று நான்கு மணிநேரம் வேலை என்றிருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

 

பெண்களைவிட தங்கள் பணி ஓய்வு பற்றி ஆண்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதல் காரணம் இதுவரை புருஷ லட்சணமாக இருந்த உத்தியோகம் இனி இல்லை என்ற நிலைதான். என்னதான் இப்போதெல்லாம் பணி ஓய்வு ஊதியம் என்பது தாராளமாக வந்தாலும், மாதாமாதம் வருவது போல ஆகுமா? கையில் காசு அவ்வளவாக இருக்காது. பணப் புழக்கம் குறைவதால், முன் போல நண்பர்களுடன் வெளியில் போவது, வெளியில் சாப்பிடுவது எல்லாமே குறையும். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் பொழுதை எப்படிப் போக்குவது என்பதுதான். சிறிய வயதிலிருந்தே ஏதாவது விளையாட்டோ, அல்லது படிப்பது, எழுதுவது என்று பழகியிருந்தால் அவற்றை வளர்த்துக் கொள்ளலாம். திடீரென்று இப்போது ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? செய்தித்தாள் தவிர வேறு புத்தகங்கள் எதுவும் படித்துப் பழகாதவர்களுக்கு புதிதாகப் புத்தகம் படிக்க ஆரம்பிப்பது சற்று கடினம் தான்.

 

புதிதாக பணி ஓய்வு பெற்ற ஆண்கள் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. முதலாவது புதிய வாழ்க்கை – அலுவலகம் செல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும். அலுவலகம் செல்லும் இத்தனை வருடங்களில் ஒரு ஒழுங்குமுறை வந்திருக்கும். நேரத்திற்கு எழுந்து, நேரத்திற்குக் குளித்து, நேரத்திற்கு சாப்பிட்டு என்று நேரம் தப்பாது நடந்து வந்தது. முதலில் செய்தித்தாள் படிப்பது, முதலில் டிபன் சாப்பிடுவது, முதலில் குளிப்பது என்று எல்லாவற்றிலும் முதல்வராக இருந்திருப்பார் இத்தனை நாட்கள்.

 

இப்போது வேறு ஒருவிதமான வாழ்க்கை. விருப்பப்பட்ட நேரத்தில் எழுந்திருப்பது;  நீண்ட நேரம் தொலைக்காட்சி முன் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு செய்திச் சானலாக மாற்றிக் கொண்டே இருப்பது. இதுவரை நேரப்படி நடந்து வந்த விஷயங்கள் நேரக் குளறுபடியுடன் நடக்க ஆரம்பிக்கும். எழுந்திருப்பது தாமதம் என்றால் மற்ற வேலைகளும் தாமதம் ஆகும். குளிப்பது, சாப்பிடுவது எல்லாமே நேரம் தவறி நடந்து வீட்டிலுள்ளவர்களின் கோபத்திற்கு இலக்காவார்கள். இவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லையென்றாலும், வீட்டில் இருப்பவர்களுக்கு – குறிப்பாக மனைவிக்கு நாள் முழுவதும் வேலை செய்யும்படி ஆகிவிடும். இப்படி நேரம் தவறிச் செய்வதும் கூட சில நாட்களில் அலுத்து விடும். அடுத்து என்ன?

 

இத்தனை நாட்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தவரின் பார்வை வீட்டிலுள்ளவர் மேல் விழுகிறது. முதலில் இவர் கண்களில் விழுவது மனைவி தான். அவள் செய்யும் ஒவ்வொரு செய்கையையும் கவனிக்க ஆரம்பிக்கிறார். சில கணவன்மார்கள் ‘பாவம் எத்தனை வேலை இவளுக்கு. நாம் கொஞ்சம் உதவலாம்’ என்று மனைவி மேல் கரிசனம் காட்டுவார்கள். சிலர் ‘எதற்கு இவள் இத்தனை நேரம் கழித்து சாப்பிடுகிறாள்? கிடுகிடுவென வேலையை முடிக்கத் தெரியவில்லை இவளுக்கு. நானாக இருந்தால் சீக்கிரம் முடித்து விடுவேன். சமர்த்து போதவில்லை!’ என்று நினைத்துக் கொண்டு அதை நிரூப்பிக்கவும் முயலுவார்கள். இரண்டுமே மனைவியை பாதிக்கும் என்பதை பல ஆண்கள் உணருவதில்லை. இவ்வளவு நாட்களாக இல்லத்தில் தனியரசு செலுத்திக் கொண்டிருந்த மனைவிக்கு இவரது தலையீடு நிச்சயம் ரசிக்காது.

 

என் தோழி ஒருவரின் கணவர் ஓய்வு பெற்ற புதிதில் அடிக்கடி இப்படிச் சொல்வாராம்: ‘இத்தனை நாள் ஓடி ஓடி உழைத்துவிட்டேன். இனிமேல் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி. வாழ்க்கையை ரசிக்கப்போகிறேன். வேளாவேளைக்கு சாப்பிட்டுவிட்டு டீவி பார்ப்பது, தூங்குவது தான் இனி என் வேலை’ என்று. நாள் முழுவதும் இவரை வீட்டில் எப்படி சமாளிப்பது என்று ஒருவித பயம் வந்துவிட்டது என் தோழிக்கு. நல்லகாலம் சீக்கிரமே தோழியின் கணவருக்கு ஒரு பகுதி நேர வேலை கிடைத்து அவர் மறுபடியும் ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்துவிட்டார்.

 

பணி ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைக்கும், என்ன செய்யலாம்? ஒன்றுமே செய்யாமல் இருப்பதோ, அல்லது அதிகமாகச் செய்வதோ மறுபடியும் உங்களுக்கு மனஅழுத்தம், அமைதியின்மை, ஞாபகமறதி, தூக்கமின்மை, பசியின்மையை ஆகியவற்றை கொண்டு வரும்.

 

இதற்கு ஒரே வழி உங்களை நீங்கள் எப்படி பிசியாக வைத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதுதான்.

 

தற்காலிகமாகச் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

 • வாரத்திற்கு ஒருமுறை .அரசு சாரா அமைப்பு ஏதாவது ஒன்றில் சேர்ந்து தன்னார்வலராக சேவை செய்யலாம்.
 • மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கலாம். உங்களுக்குத் தெரிந்த பாட்டு, நடனம் ஆகியவற்றைச் சொல்லித் தரலாம்.
 • புதிதாக ஒரு பகுதி நேர வேலையில் சேரலாம்.
 • வீட்டில் தோட்டம் போட்டு பராமரிக்கலாம்.
 • விட்டுப்போன படிப்பைத் தொடரலாம்.
 • புதிதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
 • பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிக்கலாம். இத்தனை நாட்கள் வாசகியாக இருந்த நீங்கள் இப்போது எழுத்தாளராக மாறலாம்.
 • வீட்டில் சின்னதாக ஒரு நூலகம் அமைத்துப் பராமரிக்கலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் புத்தகப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
 • வீட்டில் இணைய வசதி இருந்தால், வலைத்தளம் ஆரம்பித்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

 

 

இங்கும் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்:

 • எதுவாக இருந்தாலும், அந்த வேலை உங்களுக்குப் பிடித்ததாக, உங்களை மனமுவந்து செய்யத் தூண்டுவதாக இருக்க வேண்டும். சமூகத்திற்காக ஒரு வேலையைச் செய்வது உங்கள் மன ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இத்தனை நாள் இந்த சமூகம் உங்களுக்குச் செய்தவற்றை நீங்கள் சமூகத்திற்குத் திருப்பி செய்வதும் உங்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும்.

 

 • தேர்ந்தெடுக்கும் வேலை மிகவும் சுலபமாகவோ, அல்லது மிகவும் கஷ்டமாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் சுலபம் என்றால் சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று தோன்றும். இன்றில்லாவிட்டால் நாளை என்று ஒரு சின்ன அலட்சியம் கூடத் தோன்றக்கூடும். ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும். அதிக சிரமப்பட்டு செய்யவேண்டிய வேலை என்றாலும் மனஅழுத்தம் அதிகமாகி ஆர்வம் குறைந்துவிடும். உங்கள் கவனத்தையும், உங்கள் மனதையும் ஒருசேர கவரும் வண்ணம் ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.

 

பெண்கள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்:

பெண்கள் வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவார்கள் – வேலைக்குப் போனாலும், பணி ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சமையலறை. எத்தனை வயதானாலும் சமையல் செய்வதில் அலுப்பு வராது பெண்களுக்கு. ஆனால் காலம் மாறிவிட்டது. எல்லாத் துறைகளிலும் பெண்களும் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் பணி ஓய்வு பெற்ற பின்னும் தங்கள் நேரத்தை சமையலறைக்கு வெளியே நல்லவிதமாக செலவழிக்க பெண்கள் விரும்புகிறார்கள். சில பெண்கள் கோவில், குளம் என்று கிளம்பிவிடுவார்கள். சிலர் ஏற்கனவே கைவந்த தையல் கலை, சங்கீதம் போன்றவற்றை மறுபடி பழகத் தொடங்குவார்கள். எதுவாக இருந்தாலும் உற்சாகத்துடன் செய்யவேண்டும்.

 

வேறு என்ன செய்யலாம்?

 

புதிதாக பணி ஓய்வு பெற்றவர்கள் 9 மணியிலிருந்து 5 மணிவரை என்ற பழக்கத்திலிருந்து வேலையே இல்லை நிலைக்கு வரும்போது மிகவும் திணறி விடுகிறார்கள் என்று ஹார்வர்ட் உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

 

பணி ஓய்வுக்குப் பிறகு புதிய ஒரு போழுதுபோக்கையோ, புதியதாக ஒரு விளையாட்டையோ தேர்ந்தெடுத்து செய்யும் ஆண்கள் பல புதிய சாதனைகளைச் செய்கிறார்கள்; மிகவும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள்; தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளுகிறார்கள். தங்கள் வயது, தங்களைப் போன்ற ஆர்வம் உள்ளவர்களுடன் பழகுகிறார்கள். பயிற்சியாளர்களுடன் அல்லது ஆசிரியர்களுடன் விடாமல் பேசிப் பழகி தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்வதுடன் தீவிரப் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

 

ஒரே ஒரு விஷயம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை உங்கள் மனதிற்குப் பிடித்ததாகவும், உங்களிடம் இதுவரை மறைந்திருந்த திறமையை வெளிக் கொண்டு வரும்படியாகவும் இருக்க வேண்டும். நாம் செய்யும் வேலையில் இருக்கும் சவால் நமது மூளையை மிகுந்த சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வயதான பிறகு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது இதில் தான். உடலுக்கு உடற்பயிற்சி போல நமது மூளைக்கும் பயிற்சி அவசியம் தேவை.

 

இப்போது புதிதாக ஒரு வழக்கம் பணி ஓய்வு பெற்றவர்களிடைய மிகவும் பிரபலமாகி வருகிறது. அதுதான் ‘சீனியர் இன்டர்ன்ஷிப்’ (Senior internship). இதையே ரோல் ரிவர்சல் (Role Reversal) என்றும் சொல்லலாம். அது என்ன என்கிறீர்களா?

 

வாருங்கள் 61 வயதான திரு கிருஷ்ணனைச் சந்திக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர் இவர். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது, கான்பரென்ஸ் கால்களுக்குக்காக வெகுநேரம் விழித்திருப்பது போன்ற விஷயங்களிலிருந்து பணிஓய்வு விடுதலை கொடுத்தது இவருக்கு. படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். பணிஓய்விற்குப் பிறகு  விருப்பமான புத்தகங்களைப் படித்துக்கொண்டு, நல்ல சங்கீதத்தை ரசித்துக் கொண்டு, அவ்வப்போது சமையலிலும் தன் கைத்திறமையைக் காண்பித்துக் கொண்டு, தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார். இவை எல்லாமே சில மாதங்களில் அலுத்துவிட்டன.

 

என்ன செய்யலாம் என்று அங்கே இங்கே தேடியபோது தான் அவருக்கு இந்த ‘சீனியர் இன்டர்ன்ஷிப்’ என்பது பற்றித் தெரிய வந்தது. பலரிடம் விசாரித்து அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது பாஸ் 22 வயது இளைஞர்! தனியாக ஒரு அறை; உதவியாளர் என்று வேலை செய்து பழகியவருக்கு தன்னைச் சுற்றி 20 வயது இளைஞர்கள்; அவர்கள் கேட்கும் உரத்த இசை; கையில் டென்னிஸ் பந்தை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம், ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேசிக் கொள்வது எல்லாமே முதலில் கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தாலும், வெகு விரைவிலேயே அந்த சூழ்நிலைக்குப் பழகிப் போனார்.

 

‘நான் அவர்களை விட அனுபவத்தில் பெரியவன். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு வருபவர்கள். எனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களது ஆர்வமும் ஈடுபாடும் என்னை மிகவும் கவர்கிறது’ என்கிறார் கிருஷ்ணன்.

 

‘இவருக்கு என்ன வயது என்று நான் அவரை நேராகச் சந்திக்கும் வரை எனக்குத் தெரியாது’ என்கிறார் இவரது 22 வயது பாஸ் இளைஞர் திரு பாலாஜி நரசிம்மன். திரு கிருஷ்ணனின் பல வருட அனுபவம் இந்தப் புதிய வேலையிலும் அவருக்குக் கை கொடுத்தது. அவருக்குத் தெரிந்த வியாபார நுணுக்கங்களை இளையவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் அவருக்கு மன நிறைவு ஏற்படுகிறது என்கிறார்.

 

ஆண்கள் மட்டுமல்ல; இதைப்போலப் பெண்களும் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம். திருமதி உன்னிக்கிருஷ்ணன் இதற்கு உதாரணமாக இருக்கிறார். வேலை என்னும் ஓட்டப்பந்தயம் அலுத்து விட்டது அவருக்கு. இரண்டு வருடம் பணியிலிருந்து விலகி இருந்தவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் கன்டென்ட் ரைட்டர் ஆகச் சேர்ந்தார். வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற சலுகை அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. தனது பிள்ளைகள் இருவரையும் தனி ஒருவராக வளர்த்தவர் இவர். டெட் லைன் அழுத்தங்கள், தொலைதூர தொலைபேசி அழைப்புகள், மீட்டிங்குகள் இவை இல்லாமல் நிம்மதியாக வேலை செய்வதாக இவர் சொல்லுகிறார். ‘கணவரைப் பறிகொடுத்தபடியால் நான் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லையென்றால் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்திருப்பேன். இப்போது எனக்குப் பிடித்த வேறு வேலைகளையும் செய்ய எனக்கு நேரம் கிடைக்கிறது. தகவல் தொடர்பு சம்மந்தமாகவே என் வேலை இருந்தபடியால் இந்தப் புது வேலையும் எனக்கு மன நிறைவைக் கொடுக்கிறது’ என்கிறார் இவர்.

 

தினமும் 3 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் இவருக்கு. தான் எழுத வேண்டிய விஷயத்திற்காக இணையத்தில் தேடுவதும் இந்த மூன்று மணி நேரத்திற்குள் அமைகிறது. வருமானம்? நிச்சயம் இவர் வாங்கியதை விட பல மடங்கு குறைவுதான். ‘வயதாக ஆக ஓட்டத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்த இன்டர்ன்ஷிப்பில் தினமும் பயணம் செய்ய வேண்டியதில்லை; மன அழுத்தங்கள் இல்லை. கூடவே வருமானமும் வருகிறது. அதனால் எனது பழைய வேலை போய்விட்டதே என்ற வருத்தம் வருவதில்லை’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லுகிறார் கிருஷ்ணன்.

 

இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? ’என்னிடம் இரண்டு மூத்த குடிமகன்கள் ‘இன்டர்ன்’ ஆக இருக்கிறார்கள். முதலில் மூன்று மாதங்களுக்கு என்று இவர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டேன். தேவைப்பட்டதால் இந்த கால அளவை நீட்டித்தேன். இவர்களது வேலையைப் பொறுத்து வழக்கமான ஊழியர்களுக்குக் கொடுப்பதை விட 10% – 15% குறைவாகக்கொடுக்கிறேன். எங்களுடையது இப்போது தான் தொடங்கிய ஒரு நிறுவனம். இவர்களது அனுபவம் எங்களுக்கு பலவிதங்களில் உதவுகிறது’ என்கிறார் திரு கிருஷ்ணனின் இளம் பாஸ்.

 

இளம் பாஸ்களின் கீழ் வேலை செய்வது, ‘இன்டர்ன்’ என்று அழைக்கப்படுவது இவையெல்லாம் சில மூத்த குடிமகன்களுக்கு ஆரம்பகாலத்தில் சற்று சங்கடத்தை விளைவிக்கிறது என்ற தனது கருத்தைத் தெரிவிக்கிறார் விசாகா மோகன். ஆனால் வேறு சிலர் தங்களது வயதே தங்களுக்கு மரியாதையை வாங்கிக் கொடுக்கிறது என்று சொல்லுகிறார்கள். ‘முதலில் கணனியில் வேலை செய்வது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. சில இளம்வயதுக்காரர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். வயதானவர்கள் வேலை செய்வதற்கும், இந்த இளம் தலைமுறை வேலை செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ‘போனால் போகிறது’ என்கிற மனப்பான்மை, எல்லாவற்றையும் ‘லைட்’ ஆக எடுத்துக் கொள்வது, வேலைகளை தள்ளிப் போடுவது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்’ என்று சொல்லும் விசாகா தொடர்ந்து கூறுகிறார்.

 

‘பணிஓய்வு பெற்றபின் ரொம்பவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பயனற்றவள் ஆகிவிட்டேனோ என்கிற பதைபதைப்பு. அதனாலேயே நான் முன்பு வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் இப்போது பாதி தான் கிடைக்கிறது என்ற போதிலும் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். நாள் முழுவதும் பிஸியாக இருக்கிறேன். வெளியே போகிறேன்; என்னுடைய பங்கு பாராட்டப்படுகிறது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது’ என்கிறார் விசாகா.

 

மொத்தத்தில் பணிஓய்வு என்பது இத்தனை வருட உழைப்பிற்குப் பின் கிடைத்த அமைதியான வாழ்க்கை என்று சொல்லும்படியாக அமைத்துக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்தபின் சற்று ஆற அமர வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆரம்பியுங்கள். மிகவும் கடுமையான உழைப்பு வேண்டாம். ஒரேயடியான ஓய்வும் வேண்டாம். உங்களுக்குப் பிடித்த வேலைகளை, பொழுதுபோக்குகளைச் செய்யவும் நேரம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

 

வாழ்க்கையை ரசித்தபடியே உங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

எடுத்ததை எடுத்த இடத்தில்

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88

18.9.2016 தினமலர் வாரமலரில் வெளியான எனது கதை இங்கே:

 

 

இன்னும் சிறிது நேரத்தில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்கிற நினைவே இனித்தது. இந்த முறை அம்மாவிற்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அம்மா தனியாக இருப்பது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் அது அவனுக்கும் சௌகரியமாகவே இருந்தது. ஒரே இடத்தில் மனைவியையும், அம்மாவையும் சமாளிப்பது என்பது பெரும் சவாலான வேலையாக இருந்தது. இத்தனைக்கும் இருவரும் படித்தவர்கள்; அம்மா வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவள். மருமகள் வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவள்.

 

அம்மா பர்பக்ஷனிஸ்ட். இது இது இந்தந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று பழகிவிட்டதோடு குழந்தைளையும் அந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவள். ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்’ என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை கேட்டுக்கேட்டே வளர்ந்தவர்கள் அவனும் அவன்  அக்காவும். அக்கா திருமணம் ஆகி புக்ககம் போன பின்னும் அம்மாவின் தாரக மந்திரத்தை மறக்காமல் தன் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டு விட்டாள். இவன்தான் திருமணம் ஆனவுடன் தடம் மாறிப்போனான்.

 

திருமணம் ஆன புதிதில் மனைவியிடம் அம்மாவின் இந்தக் கொள்கையைச்  சொல்லாததன் பலனை வெகு சீக்கிரமே அனுபவிக்க ஆரம்பித்தான். அவன் மனைவிக்கு எதையுமே எடுத்த இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கமே இருக்கவில்லை. அவள் எடுத்து வைக்கவில்லை என்றால் என்ன, நாமே செய்வோம் என்று ஆரம்பித்து இன்று வரை அவன்தான் எல்லா ஒழுங்குமுறைகளையும் பின்பற்றி வருகிறான். அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. தலைவாரும் சீப்பிலிருந்து எது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கிடக்கும். ஆபீஸ் போகும் அவசரத்தில் அவளது சீப்பு கிடைக்கவில்லை என்றால் இவனுடைய சீப்பை எடுத்து வாரிக்கொண்டு போய்விடுவாள். அவனுக்கொன்றும் அதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அதில் சுற்றியிருக்கும் தலைமுடியை இடத்துச் சுற்றிப் போடாமல் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவாள். கோபம் தாங்காமல் அந்த சீப்பை எடுத்து அவளது கைப்பையில் போட்டிருக்கிறான், பலமுறை. பலன் எதுவுமில்லை. அவளைத் திருத்த அவனும் முயன்று முயன்று இன்றுவரை  தோல்விதான்.

 

காலையில் எழுந்ததிலிருந்து எதையாவது தேடிக்கொண்டே இருப்பாள். தேடுவதிலேயே நேரம் ஆகிவிடும். சரி இன்று தேடுகிறோமே, கிடைத்தவுடன்  சரியான இடத்தில் வைப்போம் என்று வைப்பாளா, அதுவும் கிடையாது. தினமும் தேடலோத்சவம் தான். காலைவேளையில் இவன் வீட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்திற்கு அம்மா வைத்த பெயர். இப்படிப் பெயர் வைப்பதில் அம்மாவிற்கு நிகர் அம்மாதான். பெங்களூர் வந்த புதிதில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போவார்கள். அங்கு ஒரு எழுதுபொருள் விற்கும் கடை. அங்கு எது கேட்டாலும் அந்தக்கடைக்காரர் தேட ஆரம்பிப்பார். ஒரே தடவையில், தேடாமல் கேட்டதை எடுத்துக் கொடுத்தே கிடையாது. அவருக்கு அம்மா ‘தேடல் மன்னன்’ என்று பெயர் வைத்துவிட்டாள். தேடல் மன்னன் கடை என்றே அம்மா சொல்லிச் சொல்லி அவரது கடைப்பெயர் என்னவென்றே மறந்து போய்விட்டது!

 

திருமணம் ஆகி அவள் வந்த ஒருவாரத்திலேயே அம்மாவிற்கு அவளது ஒழுங்கின்மை புரிந்துவிட்டது. அவனுக்காகப் பேசாமல் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தாள். புது மனைவி அதிகம் சொல்லமுடியவில்லை என்ற அவனது பலவீனம் அம்மாவிற்குப் புரிய, ‘தவிட்டுப்பானை தாடாளனை சேவித்துக்கொண்டு சீர்காழியிலேயே இருக்கிறேன்’ என்று கிளம்பிவிட்டாள்.

 

அம்மா அவனது திருமணத்திற்கு முன்பும் அங்கேதான் இருந்தாள். அவன் படித்ததும் அங்குதான். சின்ன வயதிலேயே அப்பா பரமபதித்துவிட, அப்பா வேலை பார்த்துக்கொண்டிருந்த வங்கியிலேயே அம்மாவுக்கு வேலை கிடைத்தது. மேல்படிப்பிற்காக சீர்காழியை விட்டு வெளியே வந்தவன், படித்து முடித்து சில வருடங்கள் வெளிநாடும் போய்விட்டு வந்தான். திருமணத்திற்கு முன் சென்னையில் வீடு வாங்கினான். அம்மாவிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். புது வீட்டைப் பார்த்துப்பார்த்து அலங்கரித்தாள். ஷோ-கேஸ் பொம்மைகளை தினமும் மாற்றி மாற்றி வைத்தாள். வீட்டினுள் செடிகளை வைப்பது அம்மாவிற்கு மிகவும் பிடித்த விஷயம். அவைகளையும் அவ்வப்போது மாற்றுவாள். ஒவ்வொரு செடியின் அடியிலும் ஒரு அலுமினிய தட்டு வைத்திருப்பாள். செடிகளுக்கு விடும் நீர் அவற்றில் தேங்கும். தரை பாழாகாது என்பாள் அம்மா. செடிகளின் இலைகளுக்கும் நீர் தெளிப்பானால் தண்ணீர் அடிப்பாள். பச்சைபசேல் என்று வீடே ஜொலிக்கும்.

 

முக்கியமாக தளிகை உள் அம்மாவின் மனதிற்கு நெருக்கமான இடம். ஒரே மாதிரியான கண்ணாடி பாட்டில்கள் வாங்கி சாமான்களைக் கொட்டி வைத்தாள். எல்லா சாமான்களுக்குள்ளும் ஒரு எவர்சில்வர் கரண்டி. அம்மா எதையும் கையால் தொடவே மாட்டாள். சிங்கில் ஒரு பாத்திரம் கூட இருக்காது. எவர்சில்வர் சிங்க் அம்மாவின் கைவண்ணத்தில் பளபளவென்று மின்னும்.

 

அம்மா எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவனுக்கு இன்னும் நினைவிருக்கும் ஒரு விஷயம்: அவர்கள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வருடமும் பள்ளி முடிந்தவுடன் அம்மா நோட்டுப் புத்தகங்களில் மீதியிருக்கும் எழுதாத பக்கங்களை எடுத்து ஒன்றாக வைத்துத் தைத்துக் கொடுப்பாள். அம்மாவின் கைத்திறன் இதிலும் தெரியும். வேறு வேறு நோட்டுப் புத்தகங்களில் இருக்கும் தாள்களை எடுத்து ஓரங்களை ஒரே அளவில் கத்தரித்து, அதற்கு வீட்டில் இருக்கும் பழைய காலண்டர்களின் கெட்டியான தாள்களை வைத்து அட்டை மாதிரி தைத்துக் கொடுப்பாள். பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். இதை எங்கே வாங்கினாய் என்று அவர்களது வகுப்பு மாணவர்கள்  கேட்கும் அளவிற்கு அந்த நோட்டுப்புத்தகம் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அதை ரஃப் நோட் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். சிலர் எங்களுக்கும் அதைப் போலத் தைத்துக் கொடுக்கச் சொல்லு என்று கேட்பார்கள். அம்மா மறுத்துவிடுவாள்.

 

எந்த வேலையையும் அம்மா ஒத்திப்போட்டதே இல்லை. செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். இவன் மனைவி நேர்மாறு. ‘இப்படி ஒரு மாமியாருக்கு இப்படி ஒரு மாட்டுப்பெண். உன்னோட தவிட்டுப்பானை தாடாளனின் திருவுள்ளம்!’ என்று அம்மாவைக் கிண்டல் அடிப்பான். அம்மாவும் இவனைப் பார்த்து ‘பாரதியார் உனக்காகத்தான் இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறார் ‘திக்குத் தெரியாத காட்டில் – ……………… தேடித்தேடி இளைத்தே……ஏ………ஏ……னே……! ‘ என்று பாடிவிட்டு, ‘அந்த கோடிட்ட இடத்தில் ‘சீப்பு சோப்பு இன்ன பிற என்று நிரப்புக….!’  என்று சொல்லி வாய்விட்டு சிரிப்பாள்.

 

ஒவ்வொருமுறை ஊருக்கு அம்மாவைப் பார்க்க வரும்போதும் அம்மாவை தன்னுடன் வரச்சொல்லிக் கூப்பிடுவான். மறுத்துவிடுவாள்.

‘என்னால அந்த ஊழல சகிச்சுக்க முடியாதுடா!’

‘ஏம்மா! அவகிட்ட இருக்கற நல்லத பார்க்கமாட்டியா?’

வாயைத் திறக்கமாட்டாள் அம்மா.

பிறகு ஒருநாளில் சொன்னாள்: ‘அடிப்படை சுத்தம் வேண்டாமா? நான் ஒன்றும் மடி ஆசாரம் என்று சொல்லிக்கொண்டு இதைத்தொடாதே, அதைத் தொடாதேன்னு சொல்றதில்லை. வீட்டுக்குள்ள நுழைஞ்சா எங்க பார்த்தாலும் சாமான்கள்! அததற்கு என்று இடம் இருக்கிறது இல்லையா? துப்பட்டாவை ப்ரிட்ஜ் மேல போடுவாளா? ஆபீஸ்ல சாப்பிட்ட டிபன் பாக்ஸ் ஒரு அலம்பு அலம்பி எடுத்துண்டு வரக்கூடாதா? வரக் வரக்குனு காஞ்சு போயி…… அப்படியே வெளி சிங்க்ல போடறா! என்னால பாக்க முடியலடா! வேற எந்த விஷயத்துலயும் அவ மேல எனக்குக் கோவம் இல்லை. புரிஞ்சுக்கோ!’

 

‘ஆபீஸ் போறவம்மா….!’ அம்மா பளிச்சுன்னு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள். கோவம் இல்லை அந்தக் கண்களில். அடிபட்ட உணர்வு. ‘நானும் ஆபீஸ் போனவதாண்டா! உங்க அப்பா போகும்போது நீங்க ரெண்டுபேரும் பள்ளிக்கூடம் போற குழந்தைகள். உங்களையும் பார்த்துண்டு, வீட்டையும் கவனிச்சுண்டு, ஆபீஸுக்கும் போயிண்டு இருந்தேன். இத்தனைக்கும் வீட்டுல வேலை செய்ய ஆள் கூட இல்லை….! என்னிக்காவது அழுக்கான ட்ரெஸ் போட்டுண்டு போயிருக்கேளா? தோய்க்காத சாக்ஸ்? பெருக்காம, தண்ணி தெளிக்காம, வாசலுக்குக் கோலம் போடாம இருந்ததுண்டா? இங்க கைக்கு ஒரு ஆள், காலுக்கு ஒரு ஆள்…!’

 

‘அம்மா…! இது வீடா? இல்லை மியூசியமாம்மா? எல்லாம் அததோட இடத்துல இருக்கணும்னா?’ என்று ஜோக் அடித்து அம்மாவின் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பான்.

 

ஒவ்வொருமுறை இவன் ஊருக்கு வரும் போதும் அம்மாவின் மனதை மாற்ற ஆனவரை முயலுவான்.

 

‘நான் உனக்கு முக்கியமில்லையா?’ என்று கூட கேட்டுவிட்டான். ‘நீ எனக்கு முக்கியம். கூடவே வீடு ஒழுங்கா இருக்கறது இன்னும் முக்கியம்!’

 

அவனுக்கு குழந்தை பிறந்தவுடன் அம்மா குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக வந்தாள். குழந்தைக்கு என்று தனது காட்டன் புடவைகளை நான்காக மடித்து ஓரங்கள் தைத்துக் கொண்டு வந்திருந்தாள். குழந்தைக்கு கீழே போட்டிருந்த பிளாஸ்டிக் ஷீட்டை எடுத்துவிட்டு தன் புடவைகளைப் போட்டாள். ‘இந்த காலத்துல யாரு மாமி இப்படித் துணி போட்டு குழந்தையை விடறா?’ என்று கேட்ட சம்பந்தி மாமியை அம்மா கண்டுகொள்ளவே இல்லை. வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு டயபர் கட்டக்கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னாள். கொஞ்சநாட்கள் தான் அம்மாவின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது. குழந்தைத் துணிகள் வீடு முழுவதும் இறைந்து கிடக்க ஆரம்பித்தன. சகிக்க முடியாமல் அம்மா சீர்காழிக்குத் திரும்பினாள்.

 

குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. அவனால் முன் போல அதிகம் ஊருக்குப் போகமுடியவில்லை. அம்மா ஒன்று இரண்டில் வந்த போய்க்கொண்டிருந்தாள். குழந்தையின் சாமான்கள் இப்போது வீடு முழுவதும்! குழந்தை விளையாடுகிறதோ, இல்லையோ, காலையில் அதனுடைய விளையாட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு வந்து ஹாலில் கொட்டிவிடுவாள் இவன் மனைவி. அம்மா வரும்போது குழந்தையின் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டுப் போவாள்.

 

ஒரு விஷயம் இவனுக்கு அம்மாவிடம் பிடித்தது – மாட்டுப்பெண்ணிடம் சகஜமாகவே இருந்தாள். தன்னால் முடிந்தவரை அவளுக்கு உதவினாள். அவள் செய்யும் தளிகையைப் பாராட்டினாள். முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்தாள்.

 

‘ஏம்மா! நீயே அவளிடம் சொல்லேன், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள் என்று. உன்னோட தாரக மந்திரத்தையும் சொல்லிக்கொடேன்…!’ என்று சீண்டினான். அம்மா சொன்னாள் : ‘சுத்தம், ஒழுங்கெல்லாம் பிறவியிலேயே வரணும்டா! சொல்லி வராது. அட்லீஸ்ட் என்னைப் பார்த்தாவது கத்துக்கலாம்….!’ அதைக்கூட அவளிடம் சொல்லமாட்டாள். இவனிடம் தான் சொல்லி வருத்தப்படுவாள்.

 

நினைவுகளில் பயணித்துக் கொண்டிருந்தவன் ‘சீர்காழி, சீர்காழி’ என்ற கூவல் கேட்டுக் கண் விழித்தான். பேருந்திலிருந்து இறங்கி குழந்தையையும் அழைத்துக் கொண்டு  நடந்தான். அம்மா இவனுக்காகக் காத்திருந்தாள். குழந்தை ‘பாட்டீ…..! என்று ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக்கொண்டது. ‘அட என் பட்டுகுட்டி! நீயும் வந்திருக்கியா?’ என்று ஓடிவந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அணைத்து முத்தமிட்டாள். குழந்தை பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ‘நீயும் எங்களோட ஊருக்கு வந்துடு பாட்டி!’ என்றது.

 

இவனும் பின்னாலேயே வந்து வீட்டுக்கூடத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தான். குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு, அம்மா இவனுக்கு சுடச்சுட காப்பி கொண்டுவந்தாள். ‘இந்தா, முதலில் இதைச் சாப்பிடு! சாப்பாடும் ரெடி’ என்றாள்.

 

‘கோந்தைக்கு என்ன கொடுக்கட்டும்?’ என்று கேட்டவாறே குழந்தைக்காகத் தான் வாங்கிவைத்திருந்த புது விளையாட்டு சாமான்களை குழந்தையிடம் கொடுத்தாள். குழந்தை சந்தோஷமாக விளையாட ஆரம்பித்தது.

 

அவன் உட்கார்ந்த இடத்திலேயே செருப்பைக் கழற்றிவிட்டு, ‘இரும்மா! கைகால் அலம்பிக்கொண்டு வருகிறேன்’ என்று எழுந்தான். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இவனைத் திரும்பிப் பார்த்து சொல்லிற்று:

 

‘செருப்பை செருப்பு அலமாரில விடுப்பா! அத அத அந்தந்த இடத்தில வைக்கணும்!’

 

அம்மாவும் அவனும் அதிர்ந்து போனார்கள். அதிர்ச்சியிலிருந்து முதலில் விடுபட்டது அம்மாதான். ‘எனக்கு வாரிசு வந்துட்டா! இந்த தடவை உன்னோட ஊருக்கு வரேண்டா!’ என்றபடியே குழந்தையை இறுக்கிக்கட்டிக்கொண்டாள் அம்மா.

 

அவனும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்!