சிரித்துச் சிரித்து…..

smile

 

நீங்க தினமும் வாக்கிங் போவீங்களா? அங்கு உங்களைப் போலவே வாக்கிங் போறவங்களைப் பார்த்து புன்னகை செய்வீர்களா? அதுவும் முதல் முறை? அதெப்படி புன்னகை செய்யமுடியும்? அவங்க யாருன்னே எனக்குத் தெரியாதே அப்படீன்னு சொல்றீங்களா? நீங்க சொல்றது சரிதான். முன்பின் தெரியாதவங்களைப் பார்த்து எப்படி புன்னகைப்பது? நான் கூட உங்கள மாதிரி தான் இருந்தேன். பலவருடங்களுக்கு முன். இப்போது என்ன என்று கேட்கிறீர்களா? இப்போதெல்லாம் வாக்கிங் போகும்போது எதிரில் வருபவர்களைப் பார்த்து சிரிக்காவிட்டாலும் முகத்தில் ஒரு தோழமை பாவனையை காண்பிக்கிறேன். அவர்களும் பாசிடிவ் ஆக முகத்தை வைத்துக் கொண்டால் உடனே சிரிப்பேன். இரண்டாம் முறை பார்த்தால் கைகளைக் கூப்பி ‘நமஸ்தே’, ‘நமஸ்கார’ – சிலசமயம் நான் தமிழ் என்று தெரிந்து சிலர் ‘வணக்கம்’ என்பார்கள் – நானும் வணக்கம் என்று சொல்லிச் சிரிக்கிறேன். இந்த அற்புதமான மன மாற்றத்திற்குக் காரணம் டாக்டர் ஆர்த்தி.

 

பலவருடங்களுக்கு முன் குதிகாலில் வலி தாங்க முடியாமல் இருந்தபோது ராமகிருஷ்ணா நர்சிங் ஹோமில் பிசியோதெரபி செய்துகொள்ளச் சொல்லி என் மருத்துவர் யோசனை சொன்னார். முதல்நாள். முதலிலேயே பணம் கட்டிவிட்டு (பிசியோதெரபிக்குத்தான்) மாடிக்குச் சென்றேன். அங்குதான் பிசியோதெரபி அறை இருப்பதாக ரிசப்ஷனிஸ்ட் சொன்னார். பிசியோதெரபி என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறையை நோக்கி நடந்தேன். அந்த அறையின் வாசலில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் முகம் மலரச் சிரித்தார். எனக்கோ குழப்பம். யாரைப் பார்த்து சிரிக்கிறார்? அப்போதெல்லாம் நானும் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரிக்க மாட்டேன். என் பின்னால் யாரோ அவருக்குத் தெரிந்தவர் வந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவரைப் பார்த்துத்தான் சிரிக்கிறார் என்று நினைத்துப் பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. என் குழப்பம் இன்னும் அதிகமாகியது. மறுபடியும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

 

‘ஏன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்து நான் சிரிக்கக் கூடாதா? முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து நீ சிரிக்கமாட்டாயா? சிரித்தால் என்ன? உன்னை நான் முழுங்கிவிடுவேனா? இல்லை உன் சொத்து குறைந்துவிடுமா? வாயிலிருந்து முத்து உதிர்ந்து விடுமா?’, படபடவென்று பொரிந்தார் அந்தப் பெண்.

‘ஸாரி, நான் இப்போதான் முதல் முறை வருகிறேன்………’

‘ஸோ வாட்?’

‘………….?’

‘சிரிப்பதற்கு உனக்கு என்னைத் தெரிந்திருக்க வேண்டுமா? நீ ஒரு மனுஷி; நான் ஒரு மனுஷி. இந்த ஒரு காரணம் போதாதா? ஊரு, பேரு எல்லாம் தெரிந்திருந்தால்தான் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க வேண்டுமா?…….’ இந்த முறை பட்டாசு மாதிரி பொரிந்து தள்ளிவிட்டு, ‘ஊம்?’ என்ற உறுமலுடன் நிறுத்தினார் அந்தப் பெண்மணி (பெண்புலி?)

 

எனக்கு ஒரு விஷயம் அவரிடம் மிகவும் பிடித்திருந்தது. இத்தனை பொரிந்த போதும், அவரது முகத்திலிருந்த சிரிப்பு மாறவேயில்லை. இப்படி ஒருவர் இருப்பாரா? அவர் சொல்வது எத்தனை நிஜம். நாமாகவே முன் வந்து சிரிக்காமல் போனாலும், ஒருவர் நம்மைப் பார்த்து சிரித்த பின் நாம் அவரைப் பார்த்து சிரிக்கலாமே.

 

‘ரொம்ப அப்செட் ஆகிவிட்டாயோ?’

 

‘இல்லையில்லை. நீங்க சொன்னதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்….’ என்று முதல்முறையாக என் முகத்தில் சிரிப்புடன் சொன்னேன். ‘அப்பாடி! இப்பவாவது சிரித்தாயே!’

 

‘நான் டாக்டர் ஆர்த்தி, பிசியோதெரபிஸ்ட்’ என்றபடியே கையை நீட்டினார். சிரிப்பு அவரது முகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தது. பிறக்கும்போதே இப்படிச் சிரித்துக் கொண்டேதான் பிறந்தாரோ என்று நினைக்கும்படி முகத்தில் நிரந்தரமாக இருந்தது அந்தச் சிரிப்பு.

 

பலவருடங்களுக்குப் பின் அவரை மறுபடி சந்தித்தபோது நான் அவரைப் பார்த்து சிரித்தேன் ரொம்பவும் தோழமையுடன் – அவர் சிரிப்பதற்கு முன்பாகவே! இளமையாகவே இருந்தார் – முகத்தில் அதே சிரிப்பு. இந்தச் சிரிப்பு தான் அவரது இளமையின் ரகசியமோ?

‘நீ ஏற்கனவே இங்கு வந்திருக்கிறாயா?’ என்றார். ‘ஓ! முதல் தடவை வந்திருந்தபோது உங்களைப் பார்த்து சிரிக்காததற்கு உங்களிடமிருந்தும் ‘திட்டு’ம் வாங்கியிருக்கிறேன்!’ என்றேன்.

‘ஓ! ரொம்பவும் கடுமையாக நடந்துகொண்டேனா? ஸாரி’

‘இல்லை. நான் ஒரு மிகப்பெரிய பாடத்தை அன்று கற்றுக்கொண்டேன்’ என்றேன்.

அன்றிலிருந்து எப்போது வாக்கிங் போனாலும் எதிரில் வருபவர்களைப்  பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! அதற்காகவே காத்திருந்தது போல பலரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். சிலர் சிரிக்காமலும் போனார்கள்.

 

நான் வாக்கிங் போகும் பூங்காவில் லாபிங் க்ளப் (laughing club) அங்கத்தினர்கள் நிறையப் பேர் வருவார்கள். தினமும் இவளும் வருகிறாளே, கொஞ்சம் புன்னகையாவது புரியலாம் என்று ஒருநாளாவது யாராவது என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்று நினைத்து நினைத்து நான் ஏமாந்ததுதான் மிச்சம். ஆகாயத்தைப் பார்த்து, மரத்தைப் பார்த்து ‘ஹா….ஹா….’ என்கிறவர்கள் உடலும் உயிருமாக இருக்கும் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்!!  இதுவும் ஒரு பாடம் தான், இல்லையா?

 

பல்வேறு இடங்களில் இருந்தாலும் என் வாக்கிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கூடவே புன்னகையும். சமீபத்தில் நாங்கள் குடியேறிய பகுதியில் எங்கள் வளாகத்தின் உள்ளேயே கட்டிடங்களைச் சுற்றி மிக நீண்ட வாக்கிங் டிராக்.  டிராபிக் பற்றிக் கவலைப்படாமல் எத்தனை நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். சிரிப்புப் பரிமாறல்களை இங்கும் தொடருகிறேன். நிறைய அனுபவங்கள். ஒரு சாம்பிள் இதோ:

 

‘வாக்கிங் போறீங்களா?’

பார்த்தால் எப்படித் தெரிகிறது? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தேன்.

கிட்டத்தட்ட என் வயதில் ஒரு பெண்மணி. என் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவர் தான் இந்தக் கேள்வியைக் கேட்டார். முகத்தில் சட்டென்று ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ‘ஆமாம்’.

கேட்டாரே இரண்டாவதாக ஒரு  கேள்வி: ‘உங்களுக்கு சுகரா? அதான் தினமும் இப்படி நடக்கறீங்களா?’

 

அடப்பாவமே! சுகர் இருந்தால் தான் நடக்கணுமா? நம் ஊரில் குண்டாக இருப்பவர்கள் தான் ஜிம் போகணும். சுகர் இருந்தால் தான் நடக்கணும். BP இருந்தால் தான் உப்பு குறைச்சலாக சாப்பிடணும்.

 

ஆரோக்கியமாக இருக்க எல்லோருமே இந்த மூன்றையும் செய்யலாம்!

smile

ரயில் பயணங்களில்………. ஒரு சாகசப் பயணம்!

இந்தமுறை பயணம் ஆரம்பிக்கும்போதே சாகசப் பயணமாக அமைந்தது. சாகசம் என்றவுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறினேன் என்றோ, வேகமாக வரும் ரயிலை ஒற்றைக்கையால் நிறுத்தினேன் என்றோ நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பு இல்லை!

வீட்டிலிருந்து கிளம்பி சற்று தூரம் போனவுடன் கேட்டேன்: ‘இன்சுலின் எடுத்துக் கொண்டீர்’களா?’ (வீட்டிலேயே கேட்டிருக்கலாம் தான். அவரவர் பொருட்களை அவரவர் எடுத்துக் கொள்வது தான் எப்போதுமே பழக்கம். அதனால் மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டவுடன் இன்சுலினையும் எடுத்து வைத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.) திடீரென வண்டியில் போகும்போது நினைவிற்கு வருவானேன்? அதைத்தான் விதி என்பார்களோ? ‘இன்சுலின் எடுத்துக்கொள்ளவில்லை’ என்றவுடன் பதறிப்போய்விட்டேன். திரும்பப் போய் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். ‘அதெல்லாம் வேண்டாம். நான்கு நாட்கள் தானே சமாளித்துக் கொள்ளலாம். இல்லைன்னா அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். என்னிடம் இருக்கும் மருந்துகளை ‘அட்ஜஸ்ட்’ பண்ணி சாப்பிடுகிறேன்’ என்ற ரீதியில் பதில் சொல்லி என் வாயை மூடியாகி விட்டது.

எனக்கு ஊருக்குப் போகும் மனநிலையே போய்விட்டது. காலில் வேறு காயம். இப்படி செய்கிறாரே என்று பதட்டம் ஆரம்பமாகியது. மறுபடி சொன்னேன். ‘வீட்டிற்குப் போய் எடுத்துக் கொண்டு வரலாம்’. கோபத்துடன் பதில் வரவே சும்மா இருந்தேன். இன்றைக்கு போட்டுக் கொண்டாகிவிட்டது. இனி நாளைக் காலையில் தான்  இன்சுலின். அதற்குள் டாக்டரிடம் போன் செய்து கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்தேன். வெளியில் சொல்லவில்லை. சொன்னால் அதற்குத் தனியாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

வண்டி வந்தது. எங்கள் பெட்டிக்கு அருகில் போய் பெயர் இருக்கிறதா என்று பார்த்து ஏறி…… ஒரு படியில் காலை வைத்து ஏறி இன்னொரு படியில் காலை வைக்கப் போனேன்… செருப்பு நழுவி கீழே பள்ளத்தில் விழுந்துவிட்டது! அடக்கடவுளே! இது என்ன இப்படி சோதனை மேல் சோதனை! பின்னால் ஏறியவரிடம் எப்படிச் சொல்வது?  சொல்லாமலும் இருக்க முடியாதே! நான் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்தவரிடம் சொன்னேன்: ‘செருப்பு கீழே விழுந்துடுத்து!’ ‘என்னம்மா, நீ? பார்த்து ஏறக் கூடாதா?’ என்ன பதில் சொல்ல? ஆடு திருடின கள்வன் போல முழித்தேன்.

அங்கிருந்த இரண்டு மூன்று பேரிடம் உதவி கேட்டேன்.  செருப்பு எங்கே என்றே தெரியவில்லையே எப்படி எடுப்பது என்றனர். இப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய செருப்பு. செருப்பு இல்லாமலேயே இந்தமுறை பயணம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஒரு டீ விற்கிறவர் வந்தார். நானும் இவரும் குனிந்து குனிந்து பார்ப்பதைப் பார்த்து ‘ஏனாயித்து ஸார்?’ என்றார். ‘செப்பலி கேளகே பித்துபிட்டிதே!’ என்றேன். ‘நோட்தினி’ என்றவாறே பார்த்தவரின் கண்களில் செருப்பு அகப்பட்டது. நிதானமாக ரயில் மேடையில் உட்கார்ந்த வாறே தன் ஒரு காலை விட்டுத்  துழாவித் துழாவி எடுத்துக் கொடுத்துவிட்டார்!

அப்பாடா!  இன்சுலின் கதை நாளைக்கு!