விடைபெறும் நேரம்
கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்!
சாப்பாடு என்று சொல்லும்போது எனக்கு எங்கள் இரண்டு நண்பர்கள் நினைவிற்கு வருவார்கள். முதலாமவர் பார்த்தசாரதி. என் கணவரின் அலுவலக நண்பர். அவர்கள் குழந்தைகளும் எங்கள் குழந்தைளும் ஒரே பள்ளி ஆகையால் குடும்பமே நட்பானது.
‘என்ன இன்னிக்கு தோசை கைல ஓட்டறது? உளுந்து அதிகமோ?’ என்பார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது முதல் தடவை இப்படி ஒரு காமென்ட் கேட்டு. அப்புறம் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது! அவரது மனைவியை முதல் தடவை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். ‘எப்பவுமே இப்படித்தானா?’ அவரும் சிரித்துக்கொண்டே ‘எப்பவும் இப்படித்தான்!’ என்றார்.
‘பருப்பு துகையல் என்றால் தொட்டுக்கொள்ள நீர்க்க கூட்டு பண்ணவேண்டும். கூட்டு என்றால் கெட்டியாக துகையல் அரைக்க வேண்டும். பொரிச்ச கூட்டு என்றால் புளித்துகையல். ரசம் என்றால் அப்பளம்….’ என்று வகை வகையாக சாப்பாடுதான் எப்பவுமே பேச்சின் மைய பொருளாக இருக்கும். எனக்கு ரொம்பவும் அதிசயமாக இருக்கும். ஆண்கள் சமையலறைப் பக்கமே போகக்கூடாது என்ற குடும்ப வழக்கத்தில் வந்த எனக்கு இப்படி ஒரு ஆண் பேசுவது விந்தையாகவே இருந்தது.
அடுத்த நண்பர் பாலக்ருஷ்ணன். இவர் சமையலில் எக்ஸ்பர்ட். விடுமுறை நாட்களில் தானே சமையல் செய்ய ஆரம்பித்துவிடுவார். ‘புருப்புசிலி என்றால் பொலபொலவென்று மணல் மணலாக இருக்கணும்’ என்பார். நான் இவரது மனைவியிடம், ‘நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவரே எல்லாம் செய்கிறாரே’ என்றேன். அதற்கு அவர், ‘நீங்க வேற! வெளியில் போய் சாப்பிடக்கூட விடமாட்டார். உனக்கு போரடிச்சா நான் பண்றேன் என்று வந்துவிடுகிறார். இவர் எப்போ வெளியூர் போவார்னு காத்திருந்து நானும் என் பெண்ணும் போய் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவோம்’ என்றார்.
கொஞ்சம் சங்கீதம்
எனக்கு தெரிந்த மூன்று பாட்டு ஆசிரியைகள் பற்றி சொல்ல வேண்டும். சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். முதல் ஆசிரியை திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன். புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி பாட்டு டீச்சர். குரல் ரொம்ப நன்றாக இருக்கும். அனுபவித்துப் பாடுவார். நிறைய தியாகராஜ கீர்த்தனைகள் சொல்லிக் கொடுத்தவர்.
இரண்டாவர் திருமதி சரோஜா. இவரிடம் நான், என் பெண், பிள்ளை எல்லோரும் பாட்டு கற்றுக்கொண்டோம். அண்ணாநகரில் இருந்தவர். நிறைய நடன நாடகங்கள் போட்டிருக்கிறோம் இவர் இயக்கத்தில். ஒருமுறை கலைவாணர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. தசாவதார நடனம். முதல்நாள் அங்கு போய் ரிஹர்சல் பார்க்கப் போயிருந்தோம். அந்த மேடையைப் பார்த்த உடனே நான் டீச்சரிடம் இந்த மேடையில் உட்கார்ந்து ஒரு பாட்டுப் பாடி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு மேடையின் நடுவில் உட்கார்ந்து பாடினேன். அதுதான் எனது முதல் கடைசி மேடைக் கச்சேரி!
மூன்றாமவர் இங்கு பெங்களூரில் எங்களுக்குக் கிடைத்த பாட்டு டீச்சர் திருமதி லக்ஷ்மி நரசம்மா. எனது தீவிர ஆர்வத்தைப் பார்த்து தனது பாட்டு நோட்டையே என்னிடம் தூக்கிக் கொடுத்தவர். என்ன பாட்டு வேணுமோ காப்பி பண்ணிக்கோங்க. நான் சொல்லித் தருகிறேன்’ என்றார். ஒரே ஒரு பிரச்னை பாட்டுக்கள் எல்லாம் கன்னட மொழியில்! நான் அப்போதுதான் அந்த மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். அதனால் என் கன்னட மொழிப் புலமை வளரவும் இந்த பாட்டு நோட்டு உதவியது!
இத்தனை கற்றுக்கொண்டும் பயிற்சி இல்லாததால் (பாடப்பாட ராகம்; மூட மூட ரோகம் என்பது போல) என் பாட்டு நின்று போய்விட்டது. ஆனால் இசையை ரசிக்கிறேன். அது போதுமே!
இன்றைய வலைச்சரத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் எனக்கு எழுதுவதற்கு தூண்டுதலாக இருப்பவர்கள். என்னுடைய எழுத்துக்களுக்கு தவறாது வந்து கருத்துரை சொல்பவர்கள். இவர்களுடைய எழுத்துக்களுக்கு நான் ரசிகை. வலைச்சரத்தின் கடைசி நாளான இன்று இவர்களை இங்கு கௌரவிப்பதில் பெருமை கொள்ளுகிறேன்.
அதிகமாக திருப்பூர் பற்றித்தான் எழுதுவார். அங்கு நூற்பாலையில் பொதுமேலாளராக இருப்பதால். அவற்றைவிட தனது குடும்பத்தைப் பற்றி ஒரு தந்தையாக, மகனாக அவர் எழுதும் பதிவுகள் நான் அதிகம் விரும்புபவை. நல்ல நண்பர். நல்ல நல்ல வலைத்தளங்களை எனக்கு அறிமுகம் செய்தவர். ‘தினமும் ஒருமணி நேரம் இணையத்தில் நல்ல தளங்களாகத் தேடிப்பிடித்து படியுங்க’ என்பார்.
தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்
“ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா” என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும்.
தொலைவில் இருப்பதால் தன் குழந்தைகளுக்கும், தன் அம்மாவிற்கும் தொடர்பில்லாமல் இருக்கும் நிலை பற்றிப் பேசுகிறார் இந்தப் பதிவில்.
‘வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படி சொல்ல முடியும்?’ என்று கேட்கிறார் இந்தப் பதிவில்.
ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய பதிவு இது.
இவரும் மிகப்பிரபலமான வலைப்பதிவர். தினம் ஒரு பதிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. ஆனால் எழுதினால் அன்று இவரது வலைப்பதிவு ஹவுஸ்ஃபுல் தான்!
பின்னூட்ட புயல் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.
பொதுவாக திருக்குறளை வைத்து பதிவுகள் எழுதுவார். திருக்குறளுடன் திரைப்பாடல்களும் இடம் பெறும். ISO பற்றிய பதிவுகளும் உண்டு.
இப்போது புதிய/பழைய பதிவர்களுக்கு ‘லிங்கா…?’ என்று தொழில்நுட்பம் கற்றுத் தருகிறார்.
சென்ற ஆண்டு பதிவர் விழா சிறக்க இவரது உழைப்பும் முக்கியக் காரணம்.
வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் அத்தனை தளங்களும் இவருக்குத் தெரிந்தவையே. ஒன்றிரண்டு புதிது என்றால் நாம் அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக்கொள்ளலாம். பெரிய மீசையின் பின் ஒளிந்திருக்கும் நல்ல மனிதர்.
இவரை அறியாதவர்கள் வலையுலகத்தில் இல்லை. கோவில் கோவிலாகப் போய் ‘ஹையோ…..ஹையோ’ என்று தெய்வங்களை தரிசித்துவிட்டு வருபவர்.
நான் மிகவும் விரும்பிப்படிக்கும் தளம். பயணக் கட்டுரைகள், இவர் இருக்கும் நியுசிலாந்து நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று எப்பவுமே பிசியாக இருக்கும் இவரது தளம். மெல்லிய நகைச்சுவையுடன் ஒரு விவரம் விடாமல் தான் பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவார் இந்த வலைப்பதிவாளர் துளசி கோபால்.
சுமார் பத்து வருடங்களாக வலைப்பதிவு செய்துவருகிறார். இவரது வலைப்பதிவுகளை ஆரம்பகாலத்திலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அப்படி படிக்க விருப்பம் இருக்கிறவர்களுக்கு இந்த சுட்டி உதவும்.
மொத்தம் ஐந்து ஆசிரியர்கள். ஒவ்வொரு வாரம் பாசிடிவ் செய்திகள் போடுவது ஸ்பெஷாலிட்டி. நான் ரொம்ப விரும்பிப் படிப்பது ‘திங்க’ கிழமைப் பதிவுகள் தான். இந்த முறை மாறுதலாக ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார், ஸ்ரீராம். அலேக் அனுபவங்களும் அருமையாக இருக்கும்.
வரிக்கு வரி நகைச்சுவை யுடன் எழுதும் பாலகணேஷ் – இன் வலைத்தளம். போன வருடம் இவரது சரிதாயணம் புத்தகம் (வலைபதிவில் எழுதியது) வெளியாகியது. விடாமல் சிரித்து மனதை லேசாக்கிக் கொள்ள சிறந்த வலைத்தளம்.
மேய்ச்சல் மைதானம் என்று இன்னொரு தளமும் வைத்திருக்கிறார்.
தனது அம்மாவின் பிறந்த நாளன்று தானும் அவருமாகப் போய் கல்லூரியில் சேர்ந்ததை விவரிக்கிறார்.
எத்தனை வயதானாலும் நம் அம்மா அப்பா என்றால் தனி பாசமும், பிணைப்பும் இல்லையா?
ஹுசைனம்மா
‘இப்படியாக, ஒரே மாதத்தில் 6 -7 கிலோ எடை குறையவும், பார்ட்டி பயங்கர சந்தோஷமும் பெருமையுமாக என்னிடம் வந்து சொன்னார்’ பார்ட்டி என்பது இவரது கணவர் தான். அவர் மேற்கொண்ட டயட் பற்றி வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க சிரிக்க எழுதுகிறார்.
சுமார் 30 வருடங்களாக குர் ஆனை அரபு மொழியில் ஓதி வருகிறேன். பிறந்ததிலிருந்து பேசி, எழுதி, படித்து, சுவாசித்து வரும் தமிழிலேயே நான் புலமை பெறவில்லை எனும்போது, கேள்வியறிவைக் கொண்டு மட்டுமே வாசித்து வரும் அரபு மொழியில் புலமை இருக்குமா என்ன? என்று கேட்கிறார். மேலே படித்துப் பாருங்கள்.
கீதா சாம்பசிவம்
சாதாரண மனிதனின் சாமர்த்தியத்தைப் பார்ப்போம்!
ஆம்ஆத்மி கட்சின்னா இவங்களுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்! இவங்க சொல்லியிருப்பதும் நிஜம் என்றாலும், கொஞ்சம் பாஸிடிவா யோசனை பண்ணுங்க, ப்ளீஸ்!
கிச்சடின்னா உண்மையில் என்னனு தெரியுமா?
சமையலை ரசிச்சு ரசிச்சு எழுதறாங்க!
கீதாவும் 2005 லிருந்து பதிவு எழுதுகிறார். முதலிலிருந்து இரண்டு மூன்று பதிவுகள் படித்திருக்கிறேன். தொடர வேண்டும். தொடருவேன்.
இவரது மற்ற தளங்கள்
கண்ணனுக்காக
சாப்பிடலாம் வாங்க
பேசும் பொற்சித்திரமே
என் பயணங்களில்
ஆன்மீக பயணம்
ராஜலக்ஷ்மி பரமசிவம் அரட்டை என்ற தளத்தில் எழுதுபவர்.
அமெரிக்காவில் இருக்கும் தனது மகள் வீட்டிற்குப் போனபோது ஸ்மோக் டிடெக்டரால் தான் பட்ட அவஸ்தையை நகைச்சுவையாக வர்ணிக்கிறார்.
இவரது இரண்டு மின்னூல்கள் வெளி வந்திருக்கின்றன. இவரது கதாபாத்திரங்கள் ராசியும் விஷ்ணுவும் பதிவுலகில் பிரசித்தி பெற்ற தம்பதி.
ஊஞ்சல் என்ற தனது சமீபத்திய பதிவில் ‘சோம்பலாயிருந்தது. உடல், மனம் இரண்டும் தான்’ என்று எழுதியிருந்தார். சீக்கிரமே மறுபடி எழுத ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் இதுவரை எதுவும் எழுதவில்லை.
மிக விரைவில் இவர் இந்த மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் மீண்டும் பதிவுலகில் வலம் வர வாழ்த்துக்கள்!
மனோ சாமிநாதன் முத்துச்சிதறல்
இவரது வலைத்தளத்தில் கொட்டிக் கிடக்கும் முத்துக்களில் சில:
அனுபவ முத்துக்கள், ஓவிய முத்துக்கள், கவிதை முத்துக்கள், குறிப்பு முத்துக்கள், கைவினைக்கலை முத்துக்கள், சமையல் முத்துக்கள், சிந்தனை முத்துக்கள், சிறுகதை முத்துக்கள், மருத்துவ முத்துக்கள், முத்துக்குவியல் ரசித்த முத்துக்கள்
‘ரொம்ப ரொம்ப சின்ன உதவிகளை அவசரத்திற்கு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு அதன் பின் அதுவே பழக்கமாகி விடும். அதன் பின் எத்தனை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்கிறார்கள் என்று பாருங்கள்! பிரமித்துப்போவீர்கள்!! உதவும் மனப்பான்மை நம்மில் வளர வித்திடுங்கள்!!’ என்கிறார்.
இவரது ஓவிய முத்துக்களிலிருந்து
.
ராதா பாலு – எழுத்துலகில் எனது நீண்ட நாளைய தோழி. இன்னும் நேரில் பார்த்ததில்லை. நிறைய பத்திரிகைகளில் எழுதுகிறார். பல வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார். அந்த அனுபவங்களையும் எழுதுகிறார்.
‘புத்தகங்களைப் படிப்பதும்,அறிந்தவற்றையும்,அனுபவங்களையும் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நான் எழுதிய கதை,கட்டுரை,ஆலய தரிசனம்,சமையல் குறிப்புகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகின்றன. அவற்றின் தொகுப்பே இந்த வலைப்பூ.சமையல் குறிப்புகளை அறுசுவைக் களஞ்சியத்தில் காணலாம்’ என்று சுய அறிமுகத்தில் கூறுகிறார்.
.
எண்ணத்தின் வண்ணங்கள் என்று இன்னொரு வலைத்தளமும் வைத்திருக்கிறார்.
சமையல் குறிப்பிற்காக அறுசுவை களஞ்சியம் என்ற தளம் வைத்திருக்கிறார்.
திருமதி இராஜராஜேஸ்வரி ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர். சமீபத்தில் உடல்நிலை சரியில்லை என்று எழுதியிருந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக கட்டாய ஓய்வில் இருப்பதாக தனது பதிவில் சொல்லியிருந்தார். பிறகு தகவல் எதுவுமில்லை. பதிவர்கள் யாருக்காவது அவரை வலைப்பதிவிற்கு வெளியே தெரியுமா என்று தெரியவில்லை. யாருடனாவது அவர் தொடர்பில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. மிக விரைவில் அவர் குணமாகி மறுபடியும் வலையுலகில் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் எனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பை முடிக்கிறேன்.
இந்த ஒருவாரம் என்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.
எனது வலைத்தளத்தில் தொடர்ந்து சந்திக்கலாம்.