வருகலாமோ? மே ஐ கமின்?

வலைச்சரம் ஐந்தாம் நாள்

நாங்கள் சென்னை அண்ணா நகரில் இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு தம்பதி. சித்ரா, தாசரதி என்று. சித்ரா நன்றாகப் பாடுவாள். (அவளே சொல்லிக்கொள்ளுவாள்!) அதனாலேயே தாசரதி பாடுபவர்களைக் கிண்டல் அடிப்பார். ரொம்பவும் உற்சாகமான தம்பதி அவர்கள்.  இருவரும் ஒருவரையொருவர் சீண்டி கொள்வது ரசிக்கும்படி இருக்கும். ஒருமுறை  அப்போது மிகவும் பிரபலமாக இருந்த – அவ்வப்போது சினிமாவிலும் பாடிக்கொண்டிருந்த பாடகரின் கச்சேரி தூரதர்ஷனில் ஒளிபரப்பானது. சித்ரா அவரது விசிறி. அவர்கள் வீட்டில் அப்போது தொலைக்காட்சி வந்திருக்கவில்லை. அதனால் நான் சித்ராவை எங்கள் வீட்டிற்கு வந்து கேட்குமாறு அழைத்திருந்தேன். தாசரதியும் கூடவே வந்தார்.

 

கச்சேரி ஆரம்பித்தது. அந்த காலத்தில் அவரது கச்சேரி கேட்டிருப்பவர்களுக்கு அவர் பாடும்போது செய்யும் சேட்டைகள் நன்றாகவே தெரியும். பின்னால் தம்பூரா போடும் பெண்ணைப் பார்த்து வழி…ஸாரி…சிரிப்பார். அவர் கூடவே வரும் அவரது மனைவியும் மேடையில் அமர்ந்திருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பார். அவரது பாட்டை விட இதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். சித்ராவின் பிள்ளை சுதர்சன் ரொம்பவும் சின்னவன் – கேள்வி கேட்பதில் மன்னன். கேள்வி கேட்டு நம்மைத் துளைத்து விடுவான். கச்சேரி ஆரம்பித்தவுடன் இவனது கேள்விக் கணைகளும் பறக்க ஆரம்பித்தன.

 

‘ஏன் இந்த மாமா இப்படி திரும்பித் திரும்பிப் பார்க்கறா?’

 

சித்ரா அவனை சமாளிக்க தயாராகவே வந்திருந்தாள். ‘அந்தப் பொண்ணு சரியா தம்பூரி போடறாளா இல்லையானு பார்க்கத்தான்….’

‘எதுக்கு சிரிக்கணும்?’

‘ப்ரெண்ட்லியா சிரிக்கறா…’

தூரதர்ஷன் காமிராமேனுக்கு அன்று செம மூடு போலிருக்கு. பாடகரையும் அந்த தம்பூரா பெண்ணையும் மாற்றி மாற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பாடகரின் மனைவியையும் அவ்வப்போது காண்பிக்கத் தவறவில்லை. கச்சேரியை விட இது தாசரதிக்கு பிடித்திருந்தது.

சுதர்சன் விடாமல் கேட்டான்: ‘அந்த மாமா மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? வாய ஏன் இப்படி கோணிக்கறார்?’

சித்ரா பதில் சொல்வதற்குள் குறுக்கே பாய்ந்தார் தாசரதி. ‘பாடறவா மூஞ்சியெல்லாம் இப்படித்தான் இருக்கும்! பாடும்போது இப்படித்தான் வாய கோணிப்பா…!’

எங்களுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.

 

உண்மையிலேயே பாடகரின் மூஞ்சி சிரிக்கறாரா அழறாரா என்றே தெரியவில்லை. ‘ழ……ழ……’ என்று வேறு வார்த்தைகளை முழுங்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ‘சுப்புடு’ தான் சங்கீத கச்சேரிகளுக்கு விமரிசனம் எழுதுவார். விமரிசனம் என்றால் அப்படி இப்படி இல்லை. கிழித்து தோரணம் கட்டிவிடுவார். இந்த பாடகர் சுப்புடு வாயால் நிறைய குட்டு வாங்கியவர். இருவருக்கும் பத்திரிகைகளில் வாக்குவாதமும் நடக்கும்.

 

சுப்புடு சங்கீதம் மட்டுமில்லை நாட்டியக் கச்சேரிகளைப் பார்த்தும் விமரிசிப்பார். நம்மூரில் பிறந்து ஹிந்தி சினிமாவில் கொடி நாட்டிய தாரகை ஒருவரின் நாட்டியத்திற்கு சுப்புடு எழுதியிருந்தார்: ‘நந்தனாரின் ‘வருகலாமோ?’ பாட்டிற்கு இந்தப் பெண் செய்த அபிநயம் ‘காலிங் பெல்லை அழுத்தி ‘மே ஐ கமின்?’ என்று கேட்பதுபோல இருந்தது’ என்று.

 

நிற்க. அன்றைக்கு சித்ராவால் கச்சேரியை அதிகம் ரசிக்க முடியவில்லை.

‘சங்கடமான சங்கீதத்தை விட்டு சமையலைப் பார்க்கப் போறேன்’ என்று வீட்டிற்குப் போய்விட்டாள், பாவம்!

 

இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கும் பதிவர்கள்

 

முனைவர் இரா. குணசீலன் அவர்களின் குணாதமிழ்  வலைத்தளம்.

 

கணிதப் பெண்ணுக்கு வந்த காதல் கடிதம். இதைப்பற்றி முனைவர் கூறுவது

கணிதமேதை இராமனுசம் அவர்களின் பிறந்தநாளன்று மாணவர்கள், இராமானுசம் அவர்களின் பணியை நினைவுகொள்ளும் விதமாக கவிதை கட்டுரை பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபெற்று தம் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

இன்றைய மாணவர்கள் கணிதத்தை மனப்பாடம் செய்துதான் படிக்கிறார்கள்! இல்லை இல்லை புரிந்துதான் படிக்கிறார்கள் என்ற தலைப்புகளை முன்வைத்து விவாதகளமும் நடந்தது. இவர்களுக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்குரியது என்றாலும் கங்கா என்ற மாணவர் எழுதிய கவிதை பலரது பாராட்டுதலையும் பெற்றதாக அமைந்தது.

 

தமிழில் பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களில் கடவுளையோ, அரசரையோ, வள்ளல்களையோ குழந்தையாகப் பாவித்து பாடுவது மரபாகும். அதுபோல இந்த மாணவர் கணிதத்தைப் பெண்ணாகப் பாவித்து பாடிய கவிதை,  கணிதம் என்ற பாடத்தின் மீது இவருக்கு எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது. தொடர்ந்து படிக்க மேலே உள்ள சுட்டியை சொடக்கவும்.

 

 

காட்சி என்னும் தளத்தில் இந்தப் பதிவு.

எழுதியது யமுனா ராகவன்  மதிப்பிற்குரிய ஆண்களே இதைப்படிப்பீராக!

 

 

 

சதீஷ் செல்லத்துரை தமிழ்மொட்டு என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். நக்கீரன் பத்திரிகையில் வந்த ஒரு கடிதத்தைப் பகிர்கிறார்.

அதிர வைக்கும் ஒரு சிப்பாயின் திறந்த மடல்

‘ஒரு சக சிப்பாயாக இதனை பகிர்கிறேன்.எமக்கான குரலை இங்கு நாங்கள் எடுத்து வைத்ததே மிகப்பெரிய விடயமாகும்.சங்கங்கள் இல்லாது சட்டங்கள் தெரியாது தவிக்கும் சிப்பாய் ஜாதியை மனித உரிமை குழுக்கள்,ஊடகங்கள் மட்டுமே வெளியுலகுக்கு எடுத்து சொல்லி காப்பாற்ற முடியும்.பூனைக்கு எலிதான் மணி கட்டணும்னு இல்லையே… ஏனெனில் நீங்கள் எலிகள் அல்லவே… ‘ என்கிறார்.

******************

 

https://todayandme.wordpress.com/

‘ஜன கண மன’ தெரிந்தவர்களுக்கு மட்டும்…

தேசப்பற்று என்பது தானாகவே, இரத்தத்திலேயே, கலந்து வருவதில்லையா ?

நாட்டுப்பற்றை யாரும் வந்து ஊட்டவேண்டுமா? இங்கு ‘யாரும்’ என்பது அரசியல்வியாதிகளையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் குறிக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக சிறுவயதிலிருந்தே அப்படித்தான் பழக்கவேண்டும் என்றால், ஏன் அதைச் செய்யாமல் வேறுவித பழக்கங்களுக்கு அடுத்ததலைமுறையை அடிமையாக்குகிறார்கள் ?

 

ஆல் போல் தளைத்து அருகு போல் வேரோடி – நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

****************

சீனுகுரு என்ற வலைத்தளத்தில் எழுதும்  ஸ்ரீநிவாசன் என்கிற சீனு.

டயனா கிழவி பற்றி சொல்லுவதைப் படியுங்கள். நீங்களும் உங்கள் பள்ளிப் பிராயத்திற்குப் போய்விடுவீர்கள்.

குறும்பட நாயகனாகவும் மாறியிருக்கும் சீனுவிற்கு வாழ்த்துக்கள்.

தனது நண்பர் ஆவிக்கு இவர் எழுதியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்து மடல் இங்கே

***********************

கோவைஆவி சமீபத்தில் காதல் போயின் காதல் என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும்  ஆனந்த ராஜா விஜயராகவன் எனும் ஆவி.

அஜித்தை எனக்குப் பிடிக்காது என்கிறார். ஏன் என்று படித்துப் பாருங்களேன்.

நான் அடிமை இல்லை..! இவரைப் போலவே நாமும் ஒருநாள் இருந்து பார்க்கலாமே என்று தோன்றும் இந்தப் பதிவைப் படித்தபின்.

 

http://www.kovaiaavee.com/2014/02/aavippaa-book-release.html

ஆவிப்பா புத்தகம் வெளியாகியிருக்கிறது.

இரண்டாம் ப்ளாகர் திருவிழாவில் பாட்டு எழுதி பாடியவர்.

சிறந்த திரைப்பட இயக்குனர் ஆக வர வாழ்த்துக்கள்.

****************

தளிர் என்ற வலைத்தளத்தில் எழுதும்  சுரேஷ் வேலூர் அருகில் இருக்கும் ஸ்ரீபுரம் போய்விட்டு வந்து

பேசாமல் சாமியார் ஆகி விடலாமா?  என்று கேட்கிறார்.

சிறுவர் பகுதி, ஜோக்ஸ், கவிதை, சிறுகதை, புகைப்பட ஹைக்கூ, எளிய இலக்கணம் இனிய இலக்கியம், தித்திக்கும் தமிழ், ஆன்மிகம் என்று பலவற்றையும் எழுதுகிறார்

 

மூங்கில் காற்று என்ற வலைத்தளத்தில் எழுதும்  டி.என். முரளிதரன்

பிரபல விஞ்ஞானிகளின் வில்லத்தனங்கள்

திரு ஜோதிஜியின் தொழிற்சாலை குறிப்புகளுக்கு இவர் எழுதிய மதிப்புரை இங்கே

 

எனது எண்ணங்கள்   தமிழ் இளங்கோ

ரத்தக்கண்ணீர் வசன புத்தகம் வாங்கப் போனவர் வாங்கி வந்த புத்தகம் நவீன ஒப்பாரி கோர்வை.

ஒப்பாரிப் பாடல்கள் ஒப்பாரி இலக்கியம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறார்.

‘ஙப்போல் வளை’ என்பதற்கு பொருள் தெரியுமா? இங்கு படியுங்கள்.

 

 

 ஸ்கூல் பையன்

இத்தனை நாட்களாக ஸ்பை யாக இருந்த  கார்த்திக் சரவணன்.

எலெக்ட்ரானிக் அடிமைகள் இவரும் ஆவியும் ஒரே விஷயத்தைத் தான் வேறு வேறு கோணங்களில் பேசியிருக்கிறார்கள்.

ஸ்கூல் பையன் என்னும் நான்

 

 

 பின்னோக்கியான்  என்ற பெயரில் சற்குணம் எழுதும் வலைப்பதிவு இது. பல வித்தியாசமான கட்டுரைகளை கொண்டிருக்கிறது. விகடனில் வந்த செய்திகளும், பேட்டிகளும் நிறைய இருக்கின்றன.

கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது http://pinnokiyan.blogspot.in/2012/11/blog-post_6.html

 

மகாத்மா காந்தி முதல் மன்மோகன் வரை என்று பல பகுதிகள் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். பெரியாரின் பேட்டி மிகவும் சுவாரஸ்யம்.

 

கரந்தை ஜெயகுமார்

16 வயது தலைமையாசிரியர்

‘நண்பர்களே, வாருங்கள். பள்ளி செல்ல இயலவில்லையே, படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இனியும் வேண்டாம். வாருங்கள், எழுதவும், படிக்கவும் நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். வாருங்கள், நண்பர்களே வாருங்கள்’ என்று அழைத்து தன் கிராமத்து சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறுவன் பாபர் அலி பற்றிய பதிவு இது.

இசை மேதை பீத்தோவன் பற்றிய பதிவு இதோ

 

நாளை பார்க்கலாம் இன்னொரு சங்கீத பதிவுடன் …….

 

வலைச்சரம் முதல்நாள் 

வலைச்சரம் இரண்டாம் நாள் 

வலைச்சரம்  மூன்றாம் நாள்

வலைச்சரம் நான்காம் நாள்

 

சீயத்தின் சிரிப்பு தொடருகிறது……!

சென்ற சனிக்கிழமை நினைவுகள் தொடருகின்றன…..

படம் நன்றி: கூகிள்

செங்கட் சீயம் சிரிப்பதற்கு முன் நடந்தது என்ன?
இரணியகசிபு தனது மகன் பிரகலாதனை கடலில் தள்ளுமாறு தன் வீரர்களுக்கு கட்டளையிடுகிறான். அவன் செய்த தவறு என்ன?

‘பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம், ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி….’

பள்ளியில் படித்து வந்த சின்னஞ்சிறு பாலகனின் வாயில் நாராயணின் நாமங்கள் ஆயிரமாயிரம்! இதைத்தான் இரணியனால் பொறுக்க முடியாமல் போயிற்று. தானே எல்லாம் என்று நினைத்திருக்கும் ஒரு தந்தைக்கு ‘நீயில்லை பரமன். பரமன் என்று ஒருவன் உனக்கும் மேலானவன்’ என்று சொல்லும் ஒரு மகன். தந்தையின் வீரர்களால் கடலில் எறியப்பட்ட பின்னும் அவன் கடலுள் மூழ்காமல் ஒரு கல்லின் மீது கிடக்கிறான்.

‘நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின், வேலை
மடு ஒத்து, அங்கு அதின் வங்கமும் அன்றாய்,
குடுவைத் தன்மையது ஆயது, குன்றம்.

வாய் முழுவதும் நாராயண நாமம். நாராயணனின் திருநாமத்தை சொல்லுவதை பிரகலாதன் நிறுத்தவில்லை. அதனால் அந்தப் பெருங்கடல் ஒரு சிறிய மடுவைப் போலவும், அவனைக் கட்டி எறிந்த மலை ஒரு சுரைக் குடுவை போலவும் ஆயிற்று.

சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்.
அன்று ஆலிலையின் மேல் பள்ளி கொண்ட சிறுபாலகனைப் போல திருமாலை ஒத்து கிடந்தான்.
காரார விந்தேன பதார விந்தம் முகார விந்தே வினிவேசயந்தம்
வடசஸ்ய பத்ரசஸ்ய புடேசயானம் பாலம் முகுந்தம் மனசாஸ்மராமி – என்ற முகுந்தாஷ்டக ஸ்லோகம் நினைவிற்கு வருகிறது, இல்லையா?

தனக்கு எதற்காக இந்த மாதிரியான கொடிய தண்டனை என்று பிரகலாதன் ஹரியிடம் கேட்கிறான்: ‘உன்னுடைய அடியார்க்கு அடியன் என்னும் நிலை தவிர வேறேதேனும் நான் விரும்பியதுண்டா? ‘உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி’ என்பது போல உனக்குத் தெரியாதது ஒன்று உண்டோ? பிரம்ம தேவனும், தேவர்களுமே உன்னை அறியாமல் இருக்கும்போது, என் போன்றவர்கள் ஒருநாளில் உன்னை அறியமுடியுமோ? இன்றைக்கு நீ என்னை மறந்தது ஏனோ? நீதான் எனக்குத் தாய் தந்தை என்னும் உறவுகளைக் கொடுத்தாய். அவர்களை வழிபடும் நெறியையும் நீதான் தந்தாய். நீ குடியிருக்கும் நெஞ்சை உடையவன் நான். நீ தந்த இந்த நோயை நீயே தீர்க்கவும் வேண்டும்’ என்று இறைஞ்சினான்.

பிரகலாதனின் இந்த நிலையை அறிந்து கொண்ட இரணியன் தன் வீரர்களிடம் ‘அவனை என் முன் கொண்டு வாருங்கள். இவனைக் கொல்வது ஒன்றே இனி வழி. இவனது பைத்தியம் தீர இவனுக்கு கடுமையான் விஷத்தை கொடுங்கள்’ என்றான். அப்படியே தனக்குக் கொடுக்கப்பட்ட கடுமையான விஷத்தை சாப்பிட்டும் பிரகலாதன் சோர்வடையவில்லை. முடிச்சுகள் போடப்பட்ட சாட்டையினால் பல வீரர்கள் அவனை அடித்தனர். இதைப் பார்த்தவர்கள் இனி பிரகலாதன் பிழைக்க மாட்டான் என்று நினைத்திருக்கையில் அவன் தன்னுள்ளத்துள் ‘ஆயிரம் கைகள் என்று எண்ணிக்கையில் அடக்க முடியாத கைகளை உடைய எம்பெருமான் என் உள்ளத்தில் இருக்கின்றான்’ என்று அந்தப் பரமனை தியானம் செய்தவாறு இருந்தான். பிரகலாதன் மேல் விழும் கணக்கில்லாத அடிகளை அந்தப் பரமன் தனது எண்ணிக்கை இல்லாத கைகளினால் தடுத்தான் என்றும் கொள்ளலாம். இதனைக் கண்ட இரணியன் ‘இவன் எதோ மாயசக்தியினால் பிழைத்திருக்கிறான். இவன் உயிரை நானே மாய்ப்பேன்’ என்று வருகிறான். அவனைப் பார்த்துப் பிரகலாதன் கூறுகிறான்: ‘ உன்னால் என் உயிரைப் பறிக்க முடியாது. எல்லா உலகங்களையும் படைத்தவனின் செயல் அது’.

இவ்வார்த்தைகளை கேட்ட இரணியன் கொதித்து எழுந்து பேசுகிறான்: ‘யாருடா இந்த உலகத்தை படைத்தது? என்னை புகழ்ந்து பேசி வாழ்கின்றன மூம்மூர்த்திகளா? இல்லையென்றால் முனிவரா? என்னிடம் எல்லாவற்றையும் தோற்று ஓடிய தேவர்களா? இல்லை வேறுயாராவதா? யாரு சொல்லடா’ என்கிறான்.

இரணியனுக்கு பிறந்த பிரகலாதன் அவனுக்கு சற்றும் சளைக்காமல் பதில் சொல்லுகிறான். ‘தந்தையே! எல்லா உலகங்களையும் படைத்தளித்தவனும், பல்வேறு வகையான உயிர்களைப் படைத்தவனும், அந்த உயிர்கள் தோறும் நீக்கமற நிறைந்திருப்பவனும், மலரிலே மணமாயும். எள்ளிற்குள் எண்ணையாயும் இருப்பவனும், எல்லாப் பொருள்களையும் தன்னில் கொண்டிருப்பவனும் ஆகிய அந்த ஹரி தான் அது’

‘தந்தையே! நான் உன்மேல் வைத்துள்ள அன்பினால் நான் உறுதியாகக் கூறுவதை நீ கேட்க மாட்டாய்; என் கண்ணால் நான் காணுமளவிற்கு எங்கும் நிறைந்திருக்கிறான். உன் கண்ணால் பார்க்கும் அளவிற்கு எளியவனோ அவன்? உனக்குப் பின் பிறந்த உன் தம்பி இரணியாட்சன் உயிரைக் குடித்த புண்டரீகக் கண் எம்மான் அவன்’ என்கிறான் பிரகலாதன்.

‘பொற்கணான் (இரணியாட்சன்) ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்’ என்று இந்தப் பாடலில் வரும் வரிகள் மிக அழகானவை.

கொஞ்சம் கொஞ்சமாக தந்தை தனயனின் வாக்குவாதம் சூடேறுகிறது. ‘எல்லாப் பொருளிலும் உறையும் உன் இறைவனைப் பார்த்துவிட்டு பிறகு நான் நல்லவற்றை செய்கிறேன். இந்த தூணில் இருக்கிறான் என்றாயே, எங்கே அவனை இங்கு நீக்கமற நிறையச் செய் எனக்குத் தெரியும் படி’ என்று பிள்ளையை அழைக்கிறான் இரணியன்.

அவனுக்குச் சற்றும் குறையாத பிரகலாதன் சொல்லுகிறான்: ‘நான் சொல்லும் ஹரி சாண் அளவே உள்ள பொருள்களிலும் இருக்கிறான். பிரிக்க இயலாத ஒன்றுபட்ட தன்மையை உடைய அணுவை நூறு நூறு துண்டாக வெட்டி அதில் வரும் பகுதியான ‘கோண்’ இலும் இருக்கிறான். மிகப் பெரிய மேரு மலையிலும் இருக்கிறான். இங்கிருக்கும் தூணிலும் உளன். இப்போது நீ எங்கே எங்கே என்று பேசுகிறாயே, அந்தப் பேச்சினுள்ளும் இருக்கிறான். இதை நீ வெகு விரைவில் இங்கு காண்பாய்’ என்று சொல்ல இரணியன் ‘நல்லது நல்லது’ என்கிறான்.

‘நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று, நன்று!’
என்ன நக்கு விசை திறந்து உருமு வீந்ததென்ன ஓர் தூணின்,
வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்;
எற்றலோடும் திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச்செங்கண் சீயம்’.

பிரகலாதனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆடினான்; பாடினான்; துள்ளிக் குதித்தான். அப்படியிருக்கும் போது இரணியன் நரசிம்மத்தைப் போருக்கு அழைத்தான்: ‘யாரடா சிரித்தது? என் பிள்ளை சொன்னானே, அந்த அரியா? எனக்குப் பயந்து ஓடி கடலினுள் ஒளிந்து கொண்டது போதாது என்று இப்போது இந்தத் தூணினுள் ஒளிந்து கொண்டாயா? வா வா, சீக்கிரம், போர் செய்யலாம்’ என்று கூப்பிட்டான்.

இப்போதுதான் பிளக்கிறது தூண். சீயம் அந்தத் தூணினுள் பிறந்தது. பிறகு எட்டுத் திசையெங்கும் வளர்ந்தது பேரண்டத்தை அளந்தது; அதற்கப்புறமும் வளர்ந்ததை யார் அறியமுடியும்? அது வளர்ந்ததால் உலகமாகிற முட்டை மேலும் கீழுமாகக் கிழிந்தது. அடுத்து வரும் பாடல்களில் அந்த நரசிங்கம் அரக்கர்களை எல்லாம் அழித்ததைக் கூறுகிறார் கம்பர். தனது கூரிய நகங்களால் அரக்கர்களை பிடித்து மலைகளில் மோதியது. நீருக்குள் குமிழி வரும்படி அழுத்தியது; கைகளால் பிசைந்தது.

பிரகலாதன் தனது தந்தையைப் பார்த்து ‘இப்போதாவது இறைவனை வணங்கு; அவன் உன்னுடைய அடாத செயல்களை எல்லாம் பொறுப்பான்’ என்கிறான். அவனோ ஒரு கையில் வாளை ஏந்தி இன்னொரு கையில் கேடயத்தை பற்றிக்கொண்டு நரசிம்மத்தை எதிர்க்கத் தயாரானான்.

‘இந்த சிங்கத்தின் தோளையும் தாளையும் வெட்டிக் களைந்து அதே கையோடு உன்னையும் வெட்டிச் சாய்ப்பேன் பிறகு இப்படிச் செய்த எனது வாளை வணங்குவேன். அது செய்யாமல் இந்தச் சிங்கத்தை நான் வணங்குவேனோ?’ என்றான். இப்படிச் சொன்ன இரணியனது கால்களை தனது ஒரு கையால் பற்றி நரசிங்கப் பெருமாள் சுழற்றினான்.

இரணியனை மாலைப் பொழுதில் அவனது அரண்மனையின் வாசலில், தனது மடியின் மேல் இருத்திக் கொண்டு தனது கை நகத்தின் முனையாலே, குருதி பொங்க அவனது வயிரம் பாய்ந்த மார்பினை இருபிளவாகப் பிளந்து கொன்றான்.
சீற்றத் தோற்றமுடைய சிங்கப் பிரானைக் கண்டு தேவர்கள் அஞ்சினர். பிரமன் வந்து துதிக்கிறான்.
‘நின்னுள்ளே என்னை நிருமித்தாய்; னின் அருளால்,
என்னுளே, எப்பொருளும் யாவரையும் யான்
ஈன்றேன்; பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஒரு பொற்கலனே போல்கின்றேன்’.

இதன் பிறகு சிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்களுக்கு அபயம் அளிக்கிறார் என்ற பாடலுடன் சென்ற சனிக்கிழமை வகுப்பு நிறைவடைந்தது.

இன்னும் நிறைய எழுதலாம். ஒவ்வொரு பாடலுக்கும் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! என்ன இனிமையான தமிழ்! கம்பராமாயணத்தை எப்போது முழுமையாக அனுபவிக்கப் போகிறோம் என்று மனது ஏங்குகிறது என்பதுதான் உண்மை.

சம்மர் கேம்ப் தேவையா?

 

 

செல்வ களஞ்சியமே 66

 

எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது அவனும் யோகாசனம் கற்க வருகிறான் என்று. துறுதுறுவென்று இருக்கும் அந்தக் குழந்தைக்கு எதற்கு யோகாசனம் இப்போது? ஓடிவிளையாடும் குழந்தையை இப்படி ஒரு இடத்தில் உட்காரச் சொல்வது பெரிய கொடுமை, இல்லையோ?

 

கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. குழந்தைகள் வீட்டில் என்ன செய்வார்கள்? சம்மர் கேம்ப் என்று குழந்தைகளை வதைக்கும் வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒன்று மட்டும் நான் பார்த்துவிட்டேன். குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு வகுப்பிற்கு அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். என்ன கற்கிறார்கள்? யாருக்குக் கவலை? பள்ளி மூடியிருக்கும் சமயங்களிலும் பெற்றோர்களிடமிருந்து பணம் கறக்க பள்ளிகள் கண்டுபிடித்திருக்கும் புதுவழி இந்த சம்மர் கேப்ம்ஸ். முன்பெல்லாம் தனியார்கள் நடத்தி பணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நாமே செய்யலாமே என்று பள்ளிகளும் களத்தில் இறங்கிவிட்டன.

 

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

 

செல்வ களஞ்சியமே 65