சிரித்துச் சிரித்து…..

smile

 

நீங்க தினமும் வாக்கிங் போவீங்களா? அங்கு உங்களைப் போலவே வாக்கிங் போறவங்களைப் பார்த்து புன்னகை செய்வீர்களா? அதுவும் முதல் முறை? அதெப்படி புன்னகை செய்யமுடியும்? அவங்க யாருன்னே எனக்குத் தெரியாதே அப்படீன்னு சொல்றீங்களா? நீங்க சொல்றது சரிதான். முன்பின் தெரியாதவங்களைப் பார்த்து எப்படி புன்னகைப்பது? நான் கூட உங்கள மாதிரி தான் இருந்தேன். பலவருடங்களுக்கு முன். இப்போது என்ன என்று கேட்கிறீர்களா? இப்போதெல்லாம் வாக்கிங் போகும்போது எதிரில் வருபவர்களைப் பார்த்து சிரிக்காவிட்டாலும் முகத்தில் ஒரு தோழமை பாவனையை காண்பிக்கிறேன். அவர்களும் பாசிடிவ் ஆக முகத்தை வைத்துக் கொண்டால் உடனே சிரிப்பேன். இரண்டாம் முறை பார்த்தால் கைகளைக் கூப்பி ‘நமஸ்தே’, ‘நமஸ்கார’ – சிலசமயம் நான் தமிழ் என்று தெரிந்து சிலர் ‘வணக்கம்’ என்பார்கள் – நானும் வணக்கம் என்று சொல்லிச் சிரிக்கிறேன். இந்த அற்புதமான மன மாற்றத்திற்குக் காரணம் டாக்டர் ஆர்த்தி.

 

பலவருடங்களுக்கு முன் குதிகாலில் வலி தாங்க முடியாமல் இருந்தபோது ராமகிருஷ்ணா நர்சிங் ஹோமில் பிசியோதெரபி செய்துகொள்ளச் சொல்லி என் மருத்துவர் யோசனை சொன்னார். முதல்நாள். முதலிலேயே பணம் கட்டிவிட்டு (பிசியோதெரபிக்குத்தான்) மாடிக்குச் சென்றேன். அங்குதான் பிசியோதெரபி அறை இருப்பதாக ரிசப்ஷனிஸ்ட் சொன்னார். பிசியோதெரபி என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறையை நோக்கி நடந்தேன். அந்த அறையின் வாசலில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் முகம் மலரச் சிரித்தார். எனக்கோ குழப்பம். யாரைப் பார்த்து சிரிக்கிறார்? அப்போதெல்லாம் நானும் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரிக்க மாட்டேன். என் பின்னால் யாரோ அவருக்குத் தெரிந்தவர் வந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவரைப் பார்த்துத்தான் சிரிக்கிறார் என்று நினைத்துப் பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை. என் குழப்பம் இன்னும் அதிகமாகியது. மறுபடியும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

 

‘ஏன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்து நான் சிரிக்கக் கூடாதா? முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து நீ சிரிக்கமாட்டாயா? சிரித்தால் என்ன? உன்னை நான் முழுங்கிவிடுவேனா? இல்லை உன் சொத்து குறைந்துவிடுமா? வாயிலிருந்து முத்து உதிர்ந்து விடுமா?’, படபடவென்று பொரிந்தார் அந்தப் பெண்.

‘ஸாரி, நான் இப்போதான் முதல் முறை வருகிறேன்………’

‘ஸோ வாட்?’

‘………….?’

‘சிரிப்பதற்கு உனக்கு என்னைத் தெரிந்திருக்க வேண்டுமா? நீ ஒரு மனுஷி; நான் ஒரு மனுஷி. இந்த ஒரு காரணம் போதாதா? ஊரு, பேரு எல்லாம் தெரிந்திருந்தால்தான் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க வேண்டுமா?…….’ இந்த முறை பட்டாசு மாதிரி பொரிந்து தள்ளிவிட்டு, ‘ஊம்?’ என்ற உறுமலுடன் நிறுத்தினார் அந்தப் பெண்மணி (பெண்புலி?)

 

எனக்கு ஒரு விஷயம் அவரிடம் மிகவும் பிடித்திருந்தது. இத்தனை பொரிந்த போதும், அவரது முகத்திலிருந்த சிரிப்பு மாறவேயில்லை. இப்படி ஒருவர் இருப்பாரா? அவர் சொல்வது எத்தனை நிஜம். நாமாகவே முன் வந்து சிரிக்காமல் போனாலும், ஒருவர் நம்மைப் பார்த்து சிரித்த பின் நாம் அவரைப் பார்த்து சிரிக்கலாமே.

 

‘ரொம்ப அப்செட் ஆகிவிட்டாயோ?’

 

‘இல்லையில்லை. நீங்க சொன்னதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்….’ என்று முதல்முறையாக என் முகத்தில் சிரிப்புடன் சொன்னேன். ‘அப்பாடி! இப்பவாவது சிரித்தாயே!’

 

‘நான் டாக்டர் ஆர்த்தி, பிசியோதெரபிஸ்ட்’ என்றபடியே கையை நீட்டினார். சிரிப்பு அவரது முகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தது. பிறக்கும்போதே இப்படிச் சிரித்துக் கொண்டேதான் பிறந்தாரோ என்று நினைக்கும்படி முகத்தில் நிரந்தரமாக இருந்தது அந்தச் சிரிப்பு.

 

பலவருடங்களுக்குப் பின் அவரை மறுபடி சந்தித்தபோது நான் அவரைப் பார்த்து சிரித்தேன் ரொம்பவும் தோழமையுடன் – அவர் சிரிப்பதற்கு முன்பாகவே! இளமையாகவே இருந்தார் – முகத்தில் அதே சிரிப்பு. இந்தச் சிரிப்பு தான் அவரது இளமையின் ரகசியமோ?

‘நீ ஏற்கனவே இங்கு வந்திருக்கிறாயா?’ என்றார். ‘ஓ! முதல் தடவை வந்திருந்தபோது உங்களைப் பார்த்து சிரிக்காததற்கு உங்களிடமிருந்தும் ‘திட்டு’ம் வாங்கியிருக்கிறேன்!’ என்றேன்.

‘ஓ! ரொம்பவும் கடுமையாக நடந்துகொண்டேனா? ஸாரி’

‘இல்லை. நான் ஒரு மிகப்பெரிய பாடத்தை அன்று கற்றுக்கொண்டேன்’ என்றேன்.

அன்றிலிருந்து எப்போது வாக்கிங் போனாலும் எதிரில் வருபவர்களைப்  பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! அதற்காகவே காத்திருந்தது போல பலரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். சிலர் சிரிக்காமலும் போனார்கள்.

 

நான் வாக்கிங் போகும் பூங்காவில் லாபிங் க்ளப் (laughing club) அங்கத்தினர்கள் நிறையப் பேர் வருவார்கள். தினமும் இவளும் வருகிறாளே, கொஞ்சம் புன்னகையாவது புரியலாம் என்று ஒருநாளாவது யாராவது என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள் என்று நினைத்து நினைத்து நான் ஏமாந்ததுதான் மிச்சம். ஆகாயத்தைப் பார்த்து, மரத்தைப் பார்த்து ‘ஹா….ஹா….’ என்கிறவர்கள் உடலும் உயிருமாக இருக்கும் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்!!  இதுவும் ஒரு பாடம் தான், இல்லையா?

 

பல்வேறு இடங்களில் இருந்தாலும் என் வாக்கிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கூடவே புன்னகையும். சமீபத்தில் நாங்கள் குடியேறிய பகுதியில் எங்கள் வளாகத்தின் உள்ளேயே கட்டிடங்களைச் சுற்றி மிக நீண்ட வாக்கிங் டிராக்.  டிராபிக் பற்றிக் கவலைப்படாமல் எத்தனை நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். சிரிப்புப் பரிமாறல்களை இங்கும் தொடருகிறேன். நிறைய அனுபவங்கள். ஒரு சாம்பிள் இதோ:

 

‘வாக்கிங் போறீங்களா?’

பார்த்தால் எப்படித் தெரிகிறது? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தேன்.

கிட்டத்தட்ட என் வயதில் ஒரு பெண்மணி. என் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவர் தான் இந்தக் கேள்வியைக் கேட்டார். முகத்தில் சட்டென்று ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ‘ஆமாம்’.

கேட்டாரே இரண்டாவதாக ஒரு  கேள்வி: ‘உங்களுக்கு சுகரா? அதான் தினமும் இப்படி நடக்கறீங்களா?’

 

அடப்பாவமே! சுகர் இருந்தால் தான் நடக்கணுமா? நம் ஊரில் குண்டாக இருப்பவர்கள் தான் ஜிம் போகணும். சுகர் இருந்தால் தான் நடக்கணும். BP இருந்தால் தான் உப்பு குறைச்சலாக சாப்பிடணும்.

 

ஆரோக்கியமாக இருக்க எல்லோருமே இந்த மூன்றையும் செய்யலாம்!

smile

எலோனியின் சந்தோஷக் கோட்பாடு

 Image result for happiness images

// மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று மாணவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மறக்க முடியாத மாணவர்கள் என்று ஆசிரியர் சொல்லி இப்பொழுது படிக்கிறேன்.//

என்று திரு ஜீவி தனது பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார்.

 

இதோ இன்னொரு ஆசிரியையின் அனுபவம்: (நன்றி தி ஹிந்து ஆங்கில இதழ்)

எனக்கு இந்தக் கட்டுரை மிகவும் பிடித்திருந்ததால் அப்படியே தமிழில் கொடுத்திருக்கிறேன்.

 

திருமதி அன்சம்மா குரியன் என்ற ஆசிரியர் தன் மாணவி ஒருவரைப் பற்றி பகிர்ந்து கொள்ளுகிறார்:

 

சி.எச். எலோனி மிகவும் அறிவுள்ள பெண் மட்டுமல்ல; மணிப்பூரில் செனாபடியில் இருக்கும் ஜவஹர் நவோதயா பள்ளியின் தலைவியும் கூட. அங்கு படிக்கும் மாணவர்களில் மிகவும் இனிமையான, மிகவும் குண்டான, வீர விளையாட்டுக்களை விரும்பும் ஒரு மாணவி. ஒரு பசுமையான பின்னணியில் மாவோ கேட் மலையின் மீது அமைந்திருக்கும் இந்த பள்ளியின் மாணவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த பின்னணியில் இருந்து வந்திருப்பவர்கள். இவர்கள் மேய்டீஸ், நேபாளம் ஆகிய பகுதிகளிலிருந்தும், பல்வேறு நாகா பழங்குடி இனத்திலிருந்தும் வந்திருப்பவர்கள்.

 

வேறு வேறு குழுக்களிலிருந்து வந்திருந்தாலும் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் எப்போதுமே சந்தோஷமாக இருப்பவர்கள். நான் ஏதோ ஒரு கற்பனை உலகத்தைப் பற்றிப் பேசுவது போலத் தோன்றும். இல்லை. நான் இவர்களுடன் கழித்த மூன்று வருட அனுபவத்திலிருந்து  இதைச்சொல்லுகிறேன். எப்போதுமே பாடலும் சிரிப்புமாக இருப்பவர்கள். அது மட்டுமல்ல; அவர்கள் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பும், பாட்டுமாக உயிர் வாழ்வதே சிரிக்கவும் பாடவும் மட்டுமே என்று நினைப்பவர்கள் போல தோன்றும்.

 

மிகவும் எளிமையான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் இந்த மக்கள். ஆரோக்கியமான – நவீன வாழ்க்கையின் கவலைகள், ஆற்றாமைகள் இல்லாத – வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்.

 

இந்தப் பள்ளி, மாணவர்கள் தங்கிப் படிக்கும் பள்ளி. எல்லோருக்கும் பொதுவான ஒரு சாப்பாட்டுக்கூடம். எல்லா மாணவர்களும் ஒன்றாக தங்கள் உணவை அங்கு சாப்பிடுவார்கள். கூடவே இந்தப் பணிக்குப் பொறுப்பான ஆசிரியர்களும் வருவார்கள். இந்தப் பிரதேசத்தின் வானிலை யாராலும் கணிக்க முடியாத, கடுமையான ஒன்று. அதை எதிர்கொள்வது மிகவும் கடினம். வாழ்வதற்கு கொஞ்சம் கூட லாயக்கில்லாத இடம் இது. ஆனால் கரடுமுரடான நிலப்பரப்பு கற்றுக்கொடுத்த தைரியத்தின் துணையுடன் இவர்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளவும் வழி கண்டுபிடித்திருந்தனர்.  இந்த சந்தோஷம் நிரம்பிய மக்கள், தங்களது இனிமையான பாடல்களாலும், இதயம் திறந்த சிரிப்புகளாலும் அவ்வப்போது மலைகளின் மேலிருந்து வீசும் குளிர் காற்று தங்களை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுகிறார்கள். நடக்கும்போது கூட ஒருவரின் மேல் ஒருவர் ஒட்டிக் கொண்டே செல்வதை விரும்புகிறார்கள்.

 

இந்தப்பள்ளி மாணவர்கள் எல்லோரும் எல்லாவற்றிலும் சிறப்பாக இருப்பார்கள் பாடங்களைத்தவிர. அதிலும் விஞ்ஞானம் என்பது இவர்களுக்குத் தலைவலிதான். பெரும்பாலானவர்கள் இந்தப் பாடத்தை தவிர்க்கவே பார்ப்பார்கள். ஒரு சிலர் மிகவும் கஷ்டப்பட்டு அதில் வெற்றி பெற முயன்றாலும் பலன் இருக்காது.

 

ஒருமுறை இயற்பியல் தேர்வு நாளன்று அந்த ஆசிரியர் கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகச் சொன்னார். நான் எனது குடியிருப்பிற்கு திரும்பிப் போகும்போது தேர்வு முடிந்து, எலோனியும் அவளது தோழிகளும் பள்ளிக் கட்டிடத்தின் எதிரில் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். ‘கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?’ சட்டென்று வந்த எலோனியின் பதில் நான் எதிர்பாராதது. அதைப் போல நான் இதுவரை கேட்டதும் இல்லை. அவள் சொன்னாள்: ‘மேம், கேள்வித்தாள் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக வருத்தப்படுவது என்பது  எங்களுக்குத் தெரியாத ஒன்று!’

 

எனது 25 வருட ஆசிரிய அனுபவத்தில் இத்தனை அழகான, மனதைத் தொடும் பதிலை நான் கேட்டதேயில்லை. உலகத்தில் மிக மோசமான பிரச்னைகளை எதிர்கொள்ளும் இனத்தை சேர்ந்த மக்கள் இவர்கள். ஆனால் அப்பழுக்கற்ற அன்பை இதயத்தில் சுமக்கும், ஆசீர்வதிக்கப்பட்ட, எளிமையான அதேசமயம் கடின உழைப்பாளிகளான இந்த மலைவாழ் மக்களைத் தவிர வேறு யாரால் இப்படி ஒரு பதிலைக் கொடுக்க முடியும்?

 

தேர்வு கடினமாக இருந்தபோது சந்தோஷமாக இருக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று எல்லோரையும் போல நானும் நினைத்திருந்தேன். அதாவது உங்கள் வாழ்க்கையே அந்த காகிதத்தைச் சார்ந்துதான் இருக்கிறது, என்பதைப் போல. எலோனியின் எளிமையான பதில் என் கண்களைத் திறந்தது.

 

எலோனி சோம்பேறி அல்ல. தன்னால் முடிந்த அளவு எல்லாவகையிலும் தன் பாடங்களைக் கற்றுத்தேற கடினமாக உழைக்கிறாள். ஆனால் அது நடக்காத போது அதன் பின்விளைவுகளைப் பற்றிய அனாவசிய கவலைகளைத் துறந்து அவளது இனமக்களைப்போல மனவலிமை மிக்கவளாக இருக்கவும் கற்றிருக்கிறாள்.

 

வாழ்க்கை மாறியது. சிலவருடங்களில் நான் கேரளாவிற்கு மாற்றலாகி வந்தேன். இந்தியாவின் மற்றொரு கோடி என்று சொல்லவேண்டும். என்னவொரு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை! பெரும்பாலானவர்கள் கற்றறிந்தவர்கள். ஆனால் என்ன பலன்? அரை மதிப்பெண் குறைந்துவிட்டாலும், ஏ+ ஒருமுறை தவறிவிட்டாலும், பெரும்பாலான மாணவர்கள் கரிய மேகம் சூழ்ந்ததுபோல முகம் கறுத்து, கண்களில் நீர் ததும்ப, தலையைக் குனிந்தபடி செல்வதைப் பார்க்கிறேன். இந்த மாணவர்களுக்கு சிரிப்பு என்பதே மறந்துவிட்ட நிலை – எலோனியை விட பலமடங்கு சுகபோகங்களை அடைந்திருந்தும், ஏற்கனவே சாதனைகள் படைத்திருந்தும் கூட இந்த நிலை. நல்ல மதிப்பெண்கள் வாங்கும் ஆனால் வாழ்க்கைப் பாடங்களைக் கற்காத இவர்களைப் பற்றி அந்த மலைப்பிரதேசப் பெண் என்ன நினைப்பாள்?

 

உங்களால் முடிந்த அளவிற்கு படியுங்கள், விளைவுகளைப் பற்றி யோசிக்காதீர்கள். மதிப்பெண் குறைந்தற்காக உங்கள் சிரிப்பை இழக்காதீர்கள் என்று நாம் எப்போது நம் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்போகிறோம்? வாய்விட்டு, மனம்விட்டு சிரிக்காமல் இந்த வாழ்க்கை ஏன் வாழவேண்டும்?

 

எலோனிக்கு என் இதயம் கனிந்த நன்றி, வாழ்க்கையின் முக்கியப்பாடத்தை எனக்குக் கற்றுத் தந்ததற்கு! ‘வருத்தப்படுவது என்பது எங்களுக்குத் தெரியாத ஒன்று மேம்!’ அவளது குரல், சிரிக்கும் முகம் என் மனதில் நீங்காமல் நிற்கிறது. நன்றி, எலோனி!

கோயிந்தா! கோயிந்தா!

ஜூலை 20, 2016 தீபம் ஆன்மீக இதழில் வெளிவந்துள்ள என் கதை:

விண்ணக வாழ்வை வெறுத்து ‘மனதிற்கு இனிமையாக இருப்பவற்றுள் இனிமையாக இருக்கும்’ திருமால் ஆசையாக வந்து அவதரித்த இடம் திருப்பதி. அங்கிருக்கும் ஸ்வாமி புஷ்கரிணியில் ஒரு சமயம் மகாவித்வான் ஒருவர் ஸ்நானம் செய்துகொண்டிருந்தார். மகா பண்டிதர் அவர். நிறையப் படித்தவர். வேதங்களையும், சாஸ்த்திரங்களையும் கரைத்துக் குடித்தவர். வாய்நிறைய பகவானின் திருநாமங்களைச் சொல்லியவாறே திருக்குளத்தில் மூழ்கி எழுந்து கொண்டிருந்தார்.

 

பக்கத்தில் ஒரு பாகவதர். அவரைப் பார்த்தாலே அதிகம் படித்திராதவர் என்று புரிந்தது. வெகுதூரம் நடந்து வந்து திருமலையப்பனை சேவிக்க வந்திருப்பவர் போல இருந்தது. அவரும் நம் மகாவித்துவானைப் போல திருக்குளத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து நீராடிக் கொண்டிருந்தார். ஒவ்வொருமுறை நீரில் அமிழ்ந்து எழும்போதும், ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று உரக்கப் பெருமாளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். நம் மகாவித்துவானுக்கோ பாகவதர் சொல்லும் ‘கோயிந்தா’ என்ற சொல்லே பிடிக்கவில்லை. ‘கோவிந்தன் என்பது என்ன அழகான பெயர்! அதைக்கூட சரியாக உச்சரிக்க வரவில்லை இவருக்கு! பெருமாள் சேவிக்க வந்துவிட்டார்!’ என்று மனதிற்குள் கோவம் கோவமாக வந்தது. ஆனால் யாரோ என்னவோ நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம். பெருமாளை சேவிக்க வந்தவிடத்தில் எதற்கு வீண்வம்பு என்று நினைத்து சும்மாயிருந்துவிட்டார்.

 

நீராடிவிட்டுக் கரையேறினார் மகாவித்துவான். கரையில் வந்தும் பாகவதரின் ‘கோயிந்தா’ கேட்டுக்கொண்டே இருந்தது. மகாவித்துவான் உடை உடுத்துக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு படியில் அமர்ந்து கொண்டார். அவர் உள்ளத்தில் ‘எப்படியாவது இந்த பாகவதருக்கு ‘கோவிந்தா’ என்று சரியான உச்சரிப்பைச் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்று ஒரு எண்ணம் தோன்றியது. அதனால் அந்த பாகவதர் நீராடி முடித்து கரைக்கு வரட்டும் என்று காத்திருந்தார்.

நீராடி முடித்த பாகவதர் கரையேறி வேறு உடை தரித்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஒவ்வொரு வேலைக்கு இடையிலும் ‘கோயிந்தா, கோயிந்தா’ என்றார். மகாவித்துவானுக்குப் பொறுக்க முடியவில்லை. ‘இந்தாப்பா…!’ என்று பாகவதரைக் கூப்பிட எத்தனித்தவர் அவர் ஏதோ பெருமாளுடன் பேசுவதைப் பார்த்து நிறுத்தினார். பாகவதர் திருப்பதி கோவிலின் கோபுரத்தைப் பார்த்து நின்று கொண்டு கைகூப்பியவாறே சொன்னார்: ‘கோயிந்தா, ஒண்ணுமே இல்லாம இருந்த என்னை ஒரு உருப்படியான ஆளாக ஆக்கியது நீதான். கோயிந்தா! கையிலே ஒரு தம்படி இல்லாம வியாபாரம் ஆரம்பிச்ச என்னை இன்னிக்கு ஒரு லட்சாதிபதி ஆக்கியிருக்கிறாய். கோயிந்தா, நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், செல்வம் என்று எனக்கு ஒரு குறையும் நீ வைக்கவில்லை கோயிந்தா! என்ன உன் கருணை! இந்த கோயிந்தா என்கிற பெயரைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது, கோயிந்தா! அழுகை வந்தாலும் கோயிந்தா, சந்தோஷம் வந்தாலும் கோயிந்தா! என்னைக்கு இருந்தாலும் நான், உன் பக்தனாகவே இருக்க வேண்டும் கோயிந்தா, கோயிந்தா, கோயிந்தா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை மறக்காத மனம் கொடு கோயிந்தா!’

 

பாகவதரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மகாவித்துவானை உலுக்கி விட்டுவிட்டன. ‘குறை ஒன்றுமில்லாத கோவிந்தா! உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாமாட் செய்வோம்!’ என்ற ஆண்டாளின் திருவாக்கை எத்தனை எளிமையாக சொல்லிவிட்டார் இந்த பாகவதர்! நாம் தினம்தினம் சொல்லும் ஆயிரம் நாமாக்களை விட இந்த ஒரு கோயிந்தா போதுமே! இதைக்கேட்டு பெருமாள் உள்ளம் குளிரவேதானே இவருக்கு இத்தனை கருணை செய்திருக்கிறார்! இது புரியாமல் அவரைத் திருத்த நினைத்தேனே! திருந்த வேண்டியவன் நானல்லவோ?’ என்று மனதிற்கு நினைத்துக் கொண்டு ‘கோயிந்தா! கோயிந்தா!’ என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

 

 

குஜிலி குமாரி!

எத்தனை முறை சொன்னாலும் நமக்கும் இந்த ஹிந்தி மொழிக்கும் இந்த ஜென்மத்தில் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லை. பெங்களூருவிற்கு வந்த மூன்றாம் மாதம் கன்னடத்தில் பேச, எழுத, படிக்க ஆரம்பித்துவிட்டேன். அதேபோல மலையாளமும் வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டேன் – எழுத படிக்க கூட. இப்போது எல்லாம் மறந்துவிட்டாலும், மலையாளப் படங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது பேசினால் மறுபடி எனக்கும் மலையாளம் பேச வந்துவிடும். ஆனால் இந்த ஹிந்தி மொழி மட்டும் என்னுடன் ரொம்பவும் கண்ணாமூச்சி விளையாடுகிறது. மும்பை அல்லது டில்லியில் ஒரு ஆறுமாதங்கள் இருந்தால் கற்றுக் கொண்டுவிடுவேன்! (என்று இன்னமும் திடமாக நம்புகிறேன்!!!)
திடீரென்று இப்போது என்ன, ஹிந்தி மொழி பற்றிய கொசுவர்த்தி என்று கேட்பவர்களுக்கு: ‘நான் ஈ’ படத்தில் ஒரு காட்சி. நடிகர் சுதீப் ஒரு ஸ்பாவிற்குப் போய் ஸ்டீம்பாத் எடுத்துக் கொள்வார். அவரை உள்ளே உட்கார வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவார் உதவியாளர். அவராக திறந்துகொண்டு வெளியே வர முடியாது. அப்போது அந்த ஈ வந்து அவரைப் பாடாய் படுத்தும், இல்லையா? அந்த ஸ்டீம் பாத் காட்சி தான் இந்த கொசுவர்த்திக்குக் காரணம்.
பல வருடங்களுக்கு முன் நான், என் ஓர்ப்படி, அவள் பெண் மூவரும் பெங்களூரில் இருக்கும் நேச்சர் க்யூர் மையத்திற்கு ஒருவார காலம் சென்று தங்கியிருந்தோம். இங்கு இயற்கை முறையில் நமது ஆரோக்கியத்தை சீர் செய்வார்கள். மண்குளியல், ஸ்டீம் பாத், எண்ணைய் மசாஜ் என்று விதம் விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். எல்லா ஊர்களிலிருந்தும் இங்கு நிறைய பேர்கள் வருவார்கள். சிலர் பத்து நாட்கள் தங்குவார்கள். சிலர் பதினைந்து நாட்கள். அவரவர்கள் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அதற்கேற்றார்போல அங்கு தங்க வேண்டும். தினமும் மதியம் ஒருமணி நேரம் யோகா வகுப்புகளும் நடக்கும்.
முதல் மூன்று நாட்கள் வெறும் எலுமிச்சம்பழ ஜூஸ் வெல்லம் சேர்த்தது. எ.பழம், வெல்லம் இரண்டும் அந்த ஜூஸில் எங்கே என்று தேட வேண்டும். பெரிய கூஜாவில் காலையில் வந்துவிடும். மூன்று வேளையும் இதுதான் சாப்பாடு. நான்காம் நாள் காலை ஒரே ஒரு பப்பாளி துண்டு – முழுப் பழம் அல்ல. மாலை மறுபடியும் ஜூஸ்(எ.பழம் + வெல்லம்) மைனஸ் எ. பழம் + வெல்லம். ஐந்தாம் நாள் காலை ஒரே ஒரு சப்பாத்தி + நிறைய காய்கறிகள் போட்டு செய்த கறியமுது. உண்மையிலேயே நிறைய கொடுப்பார்கள். அதிள் தேங்காய் சேர்த்திருப்பார்கள். தேங்காயில் உள்ள கொழுப்பு மிகவும் நல்லது என்பார்கள். சப்பாத்தி மட்டும் ஒன்று தான். மாலை அதேபோல ஒரு சப்பாத்தி + கறியமுது. ஆறாம் நாள் காலை இரண்டு சப்பாத்தி + ஏதாவது ஒரு பச்சடி. மாலையும் அதேபோல. காலை மாலை எ.பழம் ஜூஸ் வரும். காபி, டீ? மூச்! (எப்படா வீட்டுக்குப் போய் சுடச்சுட காபி குடிப்போம் என்று காத்திருப்போம்!)
நாங்கள் மூவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். தினசரி வேறு வேறு சிகிச்சை எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு நாள் எண்ணைய் மசாஜ். சிலநாட்கள் ஸ்டீம் பாத் (சுதீப் இருந்தாரே அதே போல நாங்கள் அந்தப் பெட்டிக்குள் உட்கார்ந்திருப்போம்) சில நாட்கள் கால்களுக்கு மட்டும் மசாஜ். சில நாட்கள் முதுகிற்கு மசாஜ் + சுடச்சுட வெந்நீர் குளியல். எண்ணைய் என்று நான் குறிப்பிடுவது பல மூலிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களின் கலவை. நல்ல கெட்டியாக இருக்கும். எண்ணைய் மசாஜ் என்றால் நிச்சயம் ஸ்டீம் பாத் உண்டு. இல்லையென்றால் எண்ணைய் பிசுக்கு போகாது.
எங்கள் பக்கத்து அறையில் சீதா மஹாஜன் என்று ஒரு சின்ன வயதுப் பெண்மணி இருந்தாள்.  ஹிந்தியில் மட்டுமே பேசுவாள். நான் ஆங்கிலம் பேசச் சொல்லித் தரும் ஆசிரியை என்று அறிந்ததும் ‘எனக்கும் இப்பவே சொல்லிக்கொடு’ என்பாள். என் ஓர்ப்படி நாக்பூரில் இருந்தவளாதலால் நன்றாக ஹிந்தி பேசுவாள். அவளும் சீதாவும் ஹிந்தியில் பேசும்போது நான் வழக்கம்போல கிண்டல் அடித்துக் கொண்டிருப்பேன். (இப்படி கிண்டல் பண்ணினால் அடுத்த ஜன்மத்திலும் உனக்கு ஹிந்தி வராது – இது என் பெண் எனக்குக் கொடுத்த, கொடுக்கும் சாபம்!)
ஒருநாள் நான் எனது சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது சீதா ஸ்டீம் பாத்தில் உட்கார்ந்திருந்தாள் (சுதீப் போல!) என்னைப் பார்த்தவுடன், ‘குஜிலி….குஜிலி….!’ என்றாள். என்ன சொல்கிறாள்? ஒரு நிமிடம் தயங்கினேன். ஏதாவது புரிந்தால் தானே? அடுத்தாற்போல  ‘நாக் மே…..நாக் மே….!’ என்றாள். நாக்கா? அங்கு இருந்த கடியாரம் பத்து மணியைத் தொட்டிருந்தது. ஓ! பசி, பாவம்! நாக் மே சாப்பாடு வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு ‘ஃபினிஷ் யுவர் ஸ்டீம் பாத். வீ கேன் ஹாவ் பாத்’ (பிசிபேளே பாத், பகாளா பாத் என்று நினைத்துக் கொண்டு அந்த சப்பாத்தியை சாப்பிடலாம் – இதெல்லாம் என் மைன்ட்-வாய்ஸ் சொன்னது) என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பின்னாலேயே சீதா என்னை ‘பெஹென்ஜி, பெஹென்ஜி….!’ என்று அழைக்கும் குரல் கேட்டது. நான் ஏன் அங்கு நிற்கிறேன். சிட்டாகப் பறந்து என் அறைக்கு வந்துவிட்டேன்!
எங்கள் அறைக்குப் போனவுடன் என் ஓர்ப்படியிடம் ‘சீதா ஸ்டீம் பாத்தில் உட்கார்ந்திருக்கா. என்னைக் கூப்பிட்டு நாக், குஜிலின்னு என்னனவோ சொன்னா. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓட்டமாக ஓடி வந்துவிட்டேன்!’ என்றேன். என் ஓர்ப்படி பெண் சிரித்தாள் சிரித்தாள், சிரித்தாள், அப்படி சிரித்தாள். (இன்னும் கூட எனக்கு அந்த சிரிப்பு கேட்கிறது!) ஓர்ப்படியும் அவளுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள். எதற்கு இந்த சிரிப்பு என்று புரியவில்லை. ஆனால் நான் ஏதோ காமெடி பண்ணியிருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது. இருவரது சிரிப்பும் அடங்கியவுடன் என் ஓர்ப்படி சொன்னாள்: ‘சீதாவிற்கு மூக்கில் அரித்திருக்கிறது. உங்களைக் கூப்பிட்டு சொறியச் சொல்லியிருக்கா. அது உங்களுக்குப் புரியவில்லை!’
‘அடக் கஷ்டமே! அவளுக்கு பசிக்கிறது. அதுதான் நாக், நாக் என்று நாக்கைப் பற்றி சொன்னாள் என்று நினைத்தேன்!’ என்று சொல்லிவிட்டு நானும் சிரிக்க ஆரம்பித்தேன். அன்று சாயங்காலம் சீதாவைப் பார்த்தபோது எனது ஓர்ப்படியின் உதவியுடன் மனமார, உளமார எனது ஹிந்தி மொழிப் புலமையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன் – ஆங்கிலத்தில்தான்!
ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! சீதா சிகிச்சை முடிந்து எங்கள் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு போனாள்!
 தொடர்புடைய பதிவு: ஹிந்தி மாலும்?

கடவுள் ஏன் சிரித்தார்?

சனிக்கிழமை இரவு  சென்னையிலிருந்து பெங்களூரு வருகை. பெங்களூரு மெயிலில் நிற்க இடமில்லை. உண்மையாகவே! கூட்டமான கூட்டம். RAC காரர்கள் பாடு ரொம்பவும் திண்டாட்டம். உட்கார்ந்துகொண்டே இரவு முழுக்க பயணம் செய்தார்கள். எனக்கும் இப்படித்தான் ஆகும் என்று நினைத்தேன். காரணம் எனக்கு அப்பர் பெர்த். எப்படி மேலே ஏறுவது? யாரிடமாவது மாற்றிக் கொள்ளலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தால் எல்லாமே நம் வயசுக்காரர்கள்!

எங்கள் கம்பார்ட்மெண்டில் லோயர் பெர்த்துகளில் படுத்திருந்த கணவன் மனைவி இருவருமே எங்களை விடப் பெரியவர்கள். பாவம் அந்த மாமி, ‘எங்களை கேட்காதேங்கோ’ என்றார் டென்ஷனுடன். நான் அவர்களை ஆசுவாசப்படுத்தி விட்டு, யாராவது சின்ன வயசுக்காரர்கள் லோயர் பெர்த் கிடைத்து என்னுடைய அப்பர் பெர்த்துக்குப் போகத் தயாரா என்று மறுபடியும் ஒரு நோட்டம் விட்டேன்.  ஒரு இளைஞர் மிடில் பெர்த் பரவாயில்லையா என்றார். மேலே ஏறுவதற்கு இது பரவாயில்லை என்று கொஞ்சம் முயற்சி செய்து (அவருக்கு நன்றி கூறிவிட்டுத்தான்) ஏறிவிட்டேன்.

காற்று வருமா என்று சந்தேகம். கீழ் பெர்த் மாமா, மாமி இருவரும் எல்லா ஜன்னல்களையும் இறுக்கி சாத்திவிட்டார்கள். இன்னைக்கு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டே படுத்தேன். ரயில் கிளம்பியவுடன் காற்று! அதிசயமாக இருந்தது. ரயில் வேகம் எடுக்க எடுக்க குபுகுபுவென காற்று. ‘ஆஹா! என்னைப் படைச்ச ஆண்டவனே! நன்றி! நன்றி!’ என மகிழ்ச்சிப் பெருக்கில் கையைக் கூப்பிவிட்டு, தூங்கிவிட்டேன். யாரோ தூரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டது. தூக்கக்கலக்கத்தில் அதை அசட்டை செய்துவிட்டேன். ஆ! எத்தனை தப்பு!

நடுவில் ஒரு முறை கீழே இறங்கி பாத்ரூம் போய்விட்டு வெற்றிகரமாக மேலே ஏறிவிட்டேன். மறுபடி என்னை படைத்தவனுக்கு நன்றி சொன்னேன். ‘ரஞ்சனி கண்டோன்மென்ட் வந்துவிட்டது’ என நம் ரங்கஸ் எழுப்ப கீழே இறங்கினேன்.  செருப்பைத் தேடினேன். காணோம்! இரண்டும் தொலைந்திருந்தால் கூட இத்தனை வருத்தம் வந்திருக்காது. வலது கால் செருப்பைக் காணோம். இடது காலில் என்னுடைய செருப்பைப் போட்டுக் கொண்டு கீழே குனிந்து குனிந்து தேடினேன். என் கணவர் தனது டார்ச் லைட்டை வேறு கொடுத்தார். ஊஹூம்! இதென்ன இன்னொரு  செருப்பு இருக்கிறதே என்று பார்த்தால் வலது கால் செருப்பு. என்னுடையது இல்லை. ஒரு ஆணின் செருப்பு. சட்டென்று ஒரு மின்னல். ஒருவேளை கீழே படுத்திருந்த மாமா இருட்டில் தெரியாமல் என்னுடையதைப் போட்டுக் கொண்டு போய்விட்டாரோ? இருட்டு என்றால் கூட செருப்பைப் போட்டவுடன் நம்மது இல்லை என்று தெரியாதோ?

என்னுடைய செருப்பு  இப்படி இருக்கும் (மேலே)

எனக்குக் கிடைத்த இன்னொரு செருப்பு (இங்கே ஜோடியாக இருக்கிறது. எனக்குக் கிடைத்தது வலது கால் செருப்பு)

என்னுடையதும் அங்கிருந்தும் முழுக்க முழுக்க வேறு மாதிரி இருக்கிறது. எப்படி அதைப் போட்டுக் கொண்டு போயிருக்க முடியும்? ம்….ம்…..ம்……!எப்படியோ, செருப்பு போய்விட்டது. என்ன செய்வது என்று யோசிக்கும் போது ரங்க்ஸ் சொன்னார்: ‘அதையே போட்டுண்டு வா. செருப்பில்லாமல் எப்படி நடப்பாய்?’ செருப்பு என்னவோ புதிதாக இருந்தது. ஆனால் ரொம்ப பெரிசு. ஒரு காலில் லேடீஸ் செருப்பு; இன்னொரு காலில் ஜென்ட்ஸ் செருப்பு! ‘காமெடி ஷோ ஆயிடும். அய்யய்யோ! வேணாம் சாமீ! நான் செருப்பில்லாமலேயே வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு (நம் அதிர்ஷ்டம் ரயில் மூன்றாவது நடைமேடையில் வந்திருந்தது. மாடிப்படிகள் மேலே ஏறி, இறங்கி வெளியில் வரவேண்டும். கஷ்டம்!) வெறும் காலுடனேயே நடந்து வந்தேன். எத்தனை நாளாயிற்று. பூமியில் நம் கால் பட்டு என்று நினைத்துக் கொண்டே நடந்தேன்.

புது செருப்பு வாங்கவேண்டும். பாவம் அந்த மாமாவும்!

ராத்திரி சிரித்தது யார் என்று தெரிந்ததோ? என்னைப் படைச்சவன் தான்! ‘இப்ப எஞ்சாய்! காலைல உனக்கு இருக்கு ஹப்பா(திருவிழா!) என்று சிரித்தான் போலிருக்கு!

‘இங்க த்ரிஷா யாரு?’

 

 

கண் மருத்துவ மனையில் உட்கார்ந்திருந்தோம். பொதுவாக மற்ற மருத்துவமனைகள் போல கண் மருத்துவமனை இருக்காது. வந்திருப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அல்லது ஒரு கண்ணை மட்டும் அவ்வப்போது திறந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். கூட வந்திருப்பவர்களும், கண்ணைக் காண்பித்துக் கொள்ள வந்திருப்பவர்களும்  எப்போது மருத்துவர் கூப்பிடுவார், எப்போது இந்த ஒற்றைக்கண் தரிசனம் முடியும்  என்று காத்திருப்பார்கள்.

 

அன்றும் அப்படித்தான் அந்த மருத்துவமனை சத்தமே இல்லாமல் இருந்தது. எங்களுக்கு முன் வரிசையில் ஒரு அப்பா, அம்மா இரண்டு சிறுமிகள் – ரொம்பவும் சின்னவர்கள் பத்து அல்லது பதினோரு வயது இருக்கலாம் – கூட ஒரு ஆண்ட்டி. கிசுகிசு என்று சன்னக்குரலில் அந்தப் பெண்கள் பேசிக்கொண்டே இருந்தனர். கூடவே சிரிப்பு வேறு. எனக்கு பார்க்கவே ரொம்பவும் பிடித்திருந்தது. மருத்துவ மனையின் சூழலையே அவர்களது சன்னக் குரல் பேச்சும் சிரிப்பும் மாற்றிக் கொண்டிருந்தது. முதலில் அவர்களது அம்மா மருத்துவரின் அறைக்குள் சென்றார். கூடவே இந்தப் பெண்களும் போனார்கள். ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து தங்கள் தந்தையிடம் ‘அம்மாவிற்கு கடைசி வரி தெரியலை, அப்பா!’ என்று கொஞ்சம் கவலை நிறைய சிரிப்புடன் கூறினர். அடுத்து சிறுமிகளின் அப்பா உள்ளே போனார். இது முதல் சுற்று செக்-அப் தான். சிறுமிகள் தங்கள் அப்பாவின் கண்பார்வை பற்றி வெளியே வந்து பேசிச் சிரித்தனர்.

 

தங்களுக்குள் என்னவோ பேசிக்கொண்டு துளிக்கூட தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தச் சிறுமிகள் சிரித்துக் கொண்டிருந்தது பார்க்கவே பரவசமாக இருந்தது. என்ன ஒரு அழகான பருவம்! எனது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டேனோ என்னவோ, அவர்கள் அறியாமல் அவர்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

 

சற்று நேரத்தில் நர்ஸ் வந்தார். ;த்ரிஷா…!  த்ரிஷா…!’ என்று கூப்பிட்டுக் கொண்டே சுற்றிவரப் பார்த்தார். யாரும் எழுந்திருக்கவில்லை. நர்ஸ் உள்ளே போய்விட்டார். இந்த பெண்களுக்கு சிரிப்பு இன்னும் அதிகமாகியது. ‘ஏய்! யாரோ த்ரிஷாவாம்…..! யாரோ தெரியலையே….!என்று அங்கு உட்கார்ந்திருப்பவர்களை திரும்பிப் பார்த்து  கிளுகிளுத்தனர். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மறுபடி அந்த நர்ஸ் வந்தார்: ‘இங்க யாரு   த்ரிஷா….?’ இந்த முறையும் யாரும் நான் தான் த்ரிஷா என்று முன்வரவில்லை. அதனால் உள்ளே போய் கையில் ஒரு ஃபைலுடன் திரும்ப வந்தார். ‘குமாரஸ்வாமி லேஅவுட்…..’ என்று விலாசத்தைப் படிக்க ஆரம்பித்தார். அடுத்த நொடி! இந்தச் சிறுமிகளின் ‘குபீர்’ சிரிப்பு அந்த ஹாலை நிறைத்தது. ‘ஹேய்….நம்ம ஆண்ட்டி! ஆண்ட்டி உங்கள அந்த நர்ஸ்ம்மா த்ரிஷா ஆக்கிட்டாங்க… ஹே……ஹே……..ஹி……ஹி…..ஹோ….!’ அவர்கள் இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

 

அந்த ஆண்ட்டி பொங்கி வரும் சிரிப்பை (புடவைத் தலைப்பால் வாயைப் பொத்தி) அடக்கிக் கொண்டு எழுந்து உள்ளே போனார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் சிரிப்பு தாங்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம். மெல்ல எழுந்து அந்த சிறுமிகளின் அருகில் போனேன். ‘உங்க ஆண்ட்டி பேரென்ன?’ என்றேன். ‘தெரேசா’ என்றனர் சிரிப்பு அடங்காமலேயே அந்தச் சிறுமிகள். அன்னை தெரேசா த்ரிஷாவான விந்தையை எண்ணி எண்ணி சிரித்துக்கொண்டே வந்து என்னிடத்தில் உட்கார்ந்தேன்.

 

நேற்று மறுபடி அதே கண் மருத்துவ மனை. அந்தச் சிறுமிகள் இல்லை. ஆனால் அன்றைக்கு நடந்த அதே சம்பவம் சற்று மாறுதலுடன் நடந்தது. இந்த நர்ஸ் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தார். கூப்பிட வரும்போதே ஃபைலைக் கொண்டுவந்துவிட்டார்! ‘ பேரு என்ன?  ராஜாமணியா, ரோஜாமணியா…?’ என்று கேட்டுவிட்டு சரியான பெயரை நிச்சயப்படுத்திக் கொண்டு பிறகு ‘ராஜாமணி’ என்று அந்தப் பெண்மணியை கூப்பிட்டார்!

 

இந்த சம்பவங்கள் எனக்கு இன்னொரு சம்பவத்தை நினைவிற்கு கொண்டு வந்தது. கிட்டத்தட்ட இதே போல. உங்களுடன் அதையும் இங்கே பகிர்ந்து கொள்ளுகிறேன். அப்படியே உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி!

 

எங்கள் உறவினர் ஒரு பெண்மணி இதே போல ஒரு மருத்துவமனைக்கு போயிருக்கிறார். அவரது பெயர் குமுதா. அவரை எப்படி நர்ஸ் கூப்பிட்டிருப்பார் என்று ஒரு guess அடியுங்களேன்!

 

ஒரு சின்ன க்ளூ: இந்தப் பெயருடன் ‘அம்மா’ சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு சந்தோஷச் செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

எனது வலைத்தளம் மூன்று வருடங்களை முடித்து நான்காம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பதிவு எனது ஐநூறாவது பதிவு.

 

தவறாமல் வந்து கருத்துரை கொடுக்கும்  சக பதிவாளர்கள், என்னைப் பின்தொடர்பவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி.

சீயத்தின் சிரிப்பு தொடருகிறது……!

சென்ற சனிக்கிழமை நினைவுகள் தொடருகின்றன…..

படம் நன்றி: கூகிள்

செங்கட் சீயம் சிரிப்பதற்கு முன் நடந்தது என்ன?
இரணியகசிபு தனது மகன் பிரகலாதனை கடலில் தள்ளுமாறு தன் வீரர்களுக்கு கட்டளையிடுகிறான். அவன் செய்த தவறு என்ன?

‘பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம், ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி….’

பள்ளியில் படித்து வந்த சின்னஞ்சிறு பாலகனின் வாயில் நாராயணின் நாமங்கள் ஆயிரமாயிரம்! இதைத்தான் இரணியனால் பொறுக்க முடியாமல் போயிற்று. தானே எல்லாம் என்று நினைத்திருக்கும் ஒரு தந்தைக்கு ‘நீயில்லை பரமன். பரமன் என்று ஒருவன் உனக்கும் மேலானவன்’ என்று சொல்லும் ஒரு மகன். தந்தையின் வீரர்களால் கடலில் எறியப்பட்ட பின்னும் அவன் கடலுள் மூழ்காமல் ஒரு கல்லின் மீது கிடக்கிறான்.

‘நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின், வேலை
மடு ஒத்து, அங்கு அதின் வங்கமும் அன்றாய்,
குடுவைத் தன்மையது ஆயது, குன்றம்.

வாய் முழுவதும் நாராயண நாமம். நாராயணனின் திருநாமத்தை சொல்லுவதை பிரகலாதன் நிறுத்தவில்லை. அதனால் அந்தப் பெருங்கடல் ஒரு சிறிய மடுவைப் போலவும், அவனைக் கட்டி எறிந்த மலை ஒரு சுரைக் குடுவை போலவும் ஆயிற்று.

சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்.
அன்று ஆலிலையின் மேல் பள்ளி கொண்ட சிறுபாலகனைப் போல திருமாலை ஒத்து கிடந்தான்.
காரார விந்தேன பதார விந்தம் முகார விந்தே வினிவேசயந்தம்
வடசஸ்ய பத்ரசஸ்ய புடேசயானம் பாலம் முகுந்தம் மனசாஸ்மராமி – என்ற முகுந்தாஷ்டக ஸ்லோகம் நினைவிற்கு வருகிறது, இல்லையா?

தனக்கு எதற்காக இந்த மாதிரியான கொடிய தண்டனை என்று பிரகலாதன் ஹரியிடம் கேட்கிறான்: ‘உன்னுடைய அடியார்க்கு அடியன் என்னும் நிலை தவிர வேறேதேனும் நான் விரும்பியதுண்டா? ‘உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி’ என்பது போல உனக்குத் தெரியாதது ஒன்று உண்டோ? பிரம்ம தேவனும், தேவர்களுமே உன்னை அறியாமல் இருக்கும்போது, என் போன்றவர்கள் ஒருநாளில் உன்னை அறியமுடியுமோ? இன்றைக்கு நீ என்னை மறந்தது ஏனோ? நீதான் எனக்குத் தாய் தந்தை என்னும் உறவுகளைக் கொடுத்தாய். அவர்களை வழிபடும் நெறியையும் நீதான் தந்தாய். நீ குடியிருக்கும் நெஞ்சை உடையவன் நான். நீ தந்த இந்த நோயை நீயே தீர்க்கவும் வேண்டும்’ என்று இறைஞ்சினான்.

பிரகலாதனின் இந்த நிலையை அறிந்து கொண்ட இரணியன் தன் வீரர்களிடம் ‘அவனை என் முன் கொண்டு வாருங்கள். இவனைக் கொல்வது ஒன்றே இனி வழி. இவனது பைத்தியம் தீர இவனுக்கு கடுமையான் விஷத்தை கொடுங்கள்’ என்றான். அப்படியே தனக்குக் கொடுக்கப்பட்ட கடுமையான விஷத்தை சாப்பிட்டும் பிரகலாதன் சோர்வடையவில்லை. முடிச்சுகள் போடப்பட்ட சாட்டையினால் பல வீரர்கள் அவனை அடித்தனர். இதைப் பார்த்தவர்கள் இனி பிரகலாதன் பிழைக்க மாட்டான் என்று நினைத்திருக்கையில் அவன் தன்னுள்ளத்துள் ‘ஆயிரம் கைகள் என்று எண்ணிக்கையில் அடக்க முடியாத கைகளை உடைய எம்பெருமான் என் உள்ளத்தில் இருக்கின்றான்’ என்று அந்தப் பரமனை தியானம் செய்தவாறு இருந்தான். பிரகலாதன் மேல் விழும் கணக்கில்லாத அடிகளை அந்தப் பரமன் தனது எண்ணிக்கை இல்லாத கைகளினால் தடுத்தான் என்றும் கொள்ளலாம். இதனைக் கண்ட இரணியன் ‘இவன் எதோ மாயசக்தியினால் பிழைத்திருக்கிறான். இவன் உயிரை நானே மாய்ப்பேன்’ என்று வருகிறான். அவனைப் பார்த்துப் பிரகலாதன் கூறுகிறான்: ‘ உன்னால் என் உயிரைப் பறிக்க முடியாது. எல்லா உலகங்களையும் படைத்தவனின் செயல் அது’.

இவ்வார்த்தைகளை கேட்ட இரணியன் கொதித்து எழுந்து பேசுகிறான்: ‘யாருடா இந்த உலகத்தை படைத்தது? என்னை புகழ்ந்து பேசி வாழ்கின்றன மூம்மூர்த்திகளா? இல்லையென்றால் முனிவரா? என்னிடம் எல்லாவற்றையும் தோற்று ஓடிய தேவர்களா? இல்லை வேறுயாராவதா? யாரு சொல்லடா’ என்கிறான்.

இரணியனுக்கு பிறந்த பிரகலாதன் அவனுக்கு சற்றும் சளைக்காமல் பதில் சொல்லுகிறான். ‘தந்தையே! எல்லா உலகங்களையும் படைத்தளித்தவனும், பல்வேறு வகையான உயிர்களைப் படைத்தவனும், அந்த உயிர்கள் தோறும் நீக்கமற நிறைந்திருப்பவனும், மலரிலே மணமாயும். எள்ளிற்குள் எண்ணையாயும் இருப்பவனும், எல்லாப் பொருள்களையும் தன்னில் கொண்டிருப்பவனும் ஆகிய அந்த ஹரி தான் அது’

‘தந்தையே! நான் உன்மேல் வைத்துள்ள அன்பினால் நான் உறுதியாகக் கூறுவதை நீ கேட்க மாட்டாய்; என் கண்ணால் நான் காணுமளவிற்கு எங்கும் நிறைந்திருக்கிறான். உன் கண்ணால் பார்க்கும் அளவிற்கு எளியவனோ அவன்? உனக்குப் பின் பிறந்த உன் தம்பி இரணியாட்சன் உயிரைக் குடித்த புண்டரீகக் கண் எம்மான் அவன்’ என்கிறான் பிரகலாதன்.

‘பொற்கணான் (இரணியாட்சன்) ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்’ என்று இந்தப் பாடலில் வரும் வரிகள் மிக அழகானவை.

கொஞ்சம் கொஞ்சமாக தந்தை தனயனின் வாக்குவாதம் சூடேறுகிறது. ‘எல்லாப் பொருளிலும் உறையும் உன் இறைவனைப் பார்த்துவிட்டு பிறகு நான் நல்லவற்றை செய்கிறேன். இந்த தூணில் இருக்கிறான் என்றாயே, எங்கே அவனை இங்கு நீக்கமற நிறையச் செய் எனக்குத் தெரியும் படி’ என்று பிள்ளையை அழைக்கிறான் இரணியன்.

அவனுக்குச் சற்றும் குறையாத பிரகலாதன் சொல்லுகிறான்: ‘நான் சொல்லும் ஹரி சாண் அளவே உள்ள பொருள்களிலும் இருக்கிறான். பிரிக்க இயலாத ஒன்றுபட்ட தன்மையை உடைய அணுவை நூறு நூறு துண்டாக வெட்டி அதில் வரும் பகுதியான ‘கோண்’ இலும் இருக்கிறான். மிகப் பெரிய மேரு மலையிலும் இருக்கிறான். இங்கிருக்கும் தூணிலும் உளன். இப்போது நீ எங்கே எங்கே என்று பேசுகிறாயே, அந்தப் பேச்சினுள்ளும் இருக்கிறான். இதை நீ வெகு விரைவில் இங்கு காண்பாய்’ என்று சொல்ல இரணியன் ‘நல்லது நல்லது’ என்கிறான்.

‘நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று, நன்று!’
என்ன நக்கு விசை திறந்து உருமு வீந்ததென்ன ஓர் தூணின்,
வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்;
எற்றலோடும் திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச்செங்கண் சீயம்’.

பிரகலாதனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆடினான்; பாடினான்; துள்ளிக் குதித்தான். அப்படியிருக்கும் போது இரணியன் நரசிம்மத்தைப் போருக்கு அழைத்தான்: ‘யாரடா சிரித்தது? என் பிள்ளை சொன்னானே, அந்த அரியா? எனக்குப் பயந்து ஓடி கடலினுள் ஒளிந்து கொண்டது போதாது என்று இப்போது இந்தத் தூணினுள் ஒளிந்து கொண்டாயா? வா வா, சீக்கிரம், போர் செய்யலாம்’ என்று கூப்பிட்டான்.

இப்போதுதான் பிளக்கிறது தூண். சீயம் அந்தத் தூணினுள் பிறந்தது. பிறகு எட்டுத் திசையெங்கும் வளர்ந்தது பேரண்டத்தை அளந்தது; அதற்கப்புறமும் வளர்ந்ததை யார் அறியமுடியும்? அது வளர்ந்ததால் உலகமாகிற முட்டை மேலும் கீழுமாகக் கிழிந்தது. அடுத்து வரும் பாடல்களில் அந்த நரசிங்கம் அரக்கர்களை எல்லாம் அழித்ததைக் கூறுகிறார் கம்பர். தனது கூரிய நகங்களால் அரக்கர்களை பிடித்து மலைகளில் மோதியது. நீருக்குள் குமிழி வரும்படி அழுத்தியது; கைகளால் பிசைந்தது.

பிரகலாதன் தனது தந்தையைப் பார்த்து ‘இப்போதாவது இறைவனை வணங்கு; அவன் உன்னுடைய அடாத செயல்களை எல்லாம் பொறுப்பான்’ என்கிறான். அவனோ ஒரு கையில் வாளை ஏந்தி இன்னொரு கையில் கேடயத்தை பற்றிக்கொண்டு நரசிம்மத்தை எதிர்க்கத் தயாரானான்.

‘இந்த சிங்கத்தின் தோளையும் தாளையும் வெட்டிக் களைந்து அதே கையோடு உன்னையும் வெட்டிச் சாய்ப்பேன் பிறகு இப்படிச் செய்த எனது வாளை வணங்குவேன். அது செய்யாமல் இந்தச் சிங்கத்தை நான் வணங்குவேனோ?’ என்றான். இப்படிச் சொன்ன இரணியனது கால்களை தனது ஒரு கையால் பற்றி நரசிங்கப் பெருமாள் சுழற்றினான்.

இரணியனை மாலைப் பொழுதில் அவனது அரண்மனையின் வாசலில், தனது மடியின் மேல் இருத்திக் கொண்டு தனது கை நகத்தின் முனையாலே, குருதி பொங்க அவனது வயிரம் பாய்ந்த மார்பினை இருபிளவாகப் பிளந்து கொன்றான்.
சீற்றத் தோற்றமுடைய சிங்கப் பிரானைக் கண்டு தேவர்கள் அஞ்சினர். பிரமன் வந்து துதிக்கிறான்.
‘நின்னுள்ளே என்னை நிருமித்தாய்; னின் அருளால்,
என்னுளே, எப்பொருளும் யாவரையும் யான்
ஈன்றேன்; பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஒரு பொற்கலனே போல்கின்றேன்’.

இதன் பிறகு சிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்களுக்கு அபயம் அளிக்கிறார் என்ற பாடலுடன் சென்ற சனிக்கிழமை வகுப்பு நிறைவடைந்தது.

இன்னும் நிறைய எழுதலாம். ஒவ்வொரு பாடலுக்கும் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! என்ன இனிமையான தமிழ்! கம்பராமாயணத்தை எப்போது முழுமையாக அனுபவிக்கப் போகிறோம் என்று மனது ஏங்குகிறது என்பதுதான் உண்மை.