தங்ஜம் மனோரமா – ஆன்மாவைக் கிழிக்கும் குரல்

ஆழம் டிசம்பர் 2014 இதழில் வெளியான எனது கட்டுரை
 படம் நன்றி: கூகிள்
 பத்து வருடங்களாக  இருட்டில் இருந்த தங்ஜம் மனோரமாவின் கொலை பற்றிய அறிக்கை இப்போது வெளிவந்திருக்கிறது. காவல் கைதிகளின் மரணத்தைப் பற்றி ஆய்வு செய்யவேண்டுமென்று தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவு இட்டது.  2004 ஆம் ஆண்டு மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. . உச்ச நீதிமன்றத்தில் இப்போது சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை மனோரமா  மிகவும் கொடூரமான முறையில்  அசாம் 17வது ரைபிள்ஸ் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறது.
அதிர்ச்சியூட்டும் அறிக்கை
2004 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி மணிப்பூரி பெண்ணான தங்ஜம் மனோரமா தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு துணை இராணுவப்படையினரால் அவரது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டார். பீபிள்ஸ் லிபரேஷன் ஆர்மியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக நிச்சயமில்லாத ஒரு குற்றம் அவர் மேல் சுமத்தப்பட்டது. அடுத்த நாள் தங்ஜம் மனோரமாவின் உடல் அந்தரங்க உறுப்பிலும், தொடைகளிலும் பலமான துப்பாக்கிக் குண்டு துளைத்த காயங்களுடன்  வயல்வெளியில்  கண்டுபிடிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவரது ஆடையின் மீது இருந்த ஆண் விந்துக்கள் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவலை வெளிக்கொணர்ந்தது.
நீதித்துறை விசாரணைக் கமிஷன் கொடுத்துள்ள இந்த அறிக்கை, ஆயுதப் படை 17 ஆம் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் சித்திரவதைக்கு உள்ளான மனோரமாவின் கடைசி மணித்துளிகளை மிகத் தெளிவாக விவரிக்கிறது. இந்த கொலையின் விளைவாக  நாடு முழுவதும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு – முக்கியமாக நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவால் 2013 இல் கேட்டுக்கொள்ளப் பட்டது..
‘மிகுந்த அதர்ச்சி கொடுத்த காவல் நிலைய மரணங்களில் இதுவும் ஒன்று’ என்று விசாரணக் குழுவின் தலைவர் சி.உபேந்திர சிங், மணிபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தனது அறிக்கையில் எழுதினர். மனோரமா பலம் பொருந்திய அசாம் 17ஆம் துப்பாக்கிப் படைப்பிரிவினரால் ஜூலை 10-11 ஆம் தேதி இம்பால் கிழக்கு மாகாணத்திலிருக்கும் அவரது இல்லத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், பிறகு அவரது இறந்த உடல் பலத்த துப்பாக்கிக்குண்டு துளைத்த  காயங்களுடன் காரியன் யாயரிபோக் காவல் நிலையம் அருகே 2 கி.மீ. தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விவரமாகக் கூறுகிறது. மனோரமாவின் இளைய சகோதரன் தங்ஜம் பாசு ‘ராஜூ சாச்சா’ என்று ஹிந்தி திரைப்படத்தை அந்த நள்ளிரவில் பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளில் அசாம் ரைபிள்ஸ் ஆட்கள் வீட்டினுள் பலத்த ஓசையுடன் நுழைந்தனர். அம்மாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த மனோரமாவை பிடித்து அவர் ‘அம்மா, அம்மா இவர்களை நிறுத்து’ என்று அலற அலற இழுத்துக் கொண்டு சென்றனர். அவரது வீட்டின் முன்பகுதியிலேயே அவரது குடும்பத்தவர் கண் முன்னாலேயே அவர் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது சகோதரர் பாசு,’அந்தப் படையாட்கள் கேட்ட கேள்விகளுக்கு அவள் மங்கிய குரலில் முணுமுணுப்பாக எனக்குத் தெரியாது என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பிறகு அவளை வெளியே அழைத்துச் சென்றனர்’ என்று சொன்னதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அசாம் 17வது ரைபிள்ஸ் தாக்கல் செய்த இரண்டு முதல் அறிக்கைகள் மனோரமா அவர்களை கென்வுட் மாற்றம் சீன குண்டுகளையும் ஏகே 47 துப்பாக்கிளையும் மீட்பதற்காக அழைத்துச் சென்றதாகவும், அவர் தப்பிக்க முயலவே அவரை கால்களில் சுட்டதாகவும், இரத்தப்போக்கு அதிகமாகி அவர் இறந்துவிட்டதாகவும் கூறுகின்றன.
காவல்துறை இந்த வழக்கின் விசாரணையை அசாம் ரைபிள்ஸ்-இன் சுயேச்சையான விருப்பத்திற்கும், கருணைக்கும் விட்டுவிட்டதாக விசாரணைக் குழு குற்றம் சாட்டியது. அசாம் ரைபிள்ஸ், ஆயுதப்படையினரை இந்த வழக்கில் எப்படித் தூண்டிவிட்டனர் என்றும் விவரிக்கிறது இந்த அறிக்கை. ஆயுதப்படையினர் சுட்ட 16 குண்டுகளில் ஒன்று கூட மனோரமாவின் கால்களில் பாயவில்லை; அவர் தப்பிக்க முயன்றாதாகக் கூறுவது பச்சை போய் என்று விசாரணைக் குழு கூறுகிறது. 37 சாட்சிகளை விசாரித்தது இந்தக் குழு. அவர் உடலில் காணப்பட்ட முக்கால்வாசி காயங்கள் அவர் ஒன்றும் செய்ய இயலாதவராக இருந்தபோது சுடப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள். சில காயங்களைப் பார்க்கும்போது அவர் பாலியல் வன்முறைக்கும் ஆளானார் என்று தெரிகிறது என்றும் விசாரணைக் குழு கூறுகிறது.
இந்தக் கொலையைத் தொடர்ந்து ஒரு வினோதமான போராட்டம் நாட்டின் கவனத்தை கவரும் வகையில் நடந்தது. 2004, ஜூலை மாதம் 15 ஆம் தேதி முப்பது பெண்கள் – 45 வயதிலிருந்து 73வயதுவரை உள்ளவர்கள் – நிர்வாணமாக இம்பாலின் வீதிகளில் நடந்து அசாம் ரைபிள்ஸ் இருந்த கங்கள கோட்டைக்கு வந்தனர். ‘இந்திய இராணுவமே! எங்களை கற்பழி! நாங்கள் மனோரமாவின் அம்மாக்கள்!’ என்று இவர்களைப் பார்த்து விக்கித்துப் போய் நின்ற படைவீரர்களைப் பார்த்து கூக்குரலிட்டனர். இவர்கள் எல்லோருமே சாதாரணப் பெண்கள் – சிலருக்கு மட்டுமே மனோரமாவின் கொலைக்கு முன் அரசியல் அறிமுகம்  இருந்தது. இந்தப் பெண்கள் எல்லோருக்கும் கணவன், குழந்தைகள் சிலருக்கு பேரக்குழந்தைகள் கூட இருந்தனர். ஆனால் இதெல்லாம் அவர்களை இந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்க வைக்கவில்லை. ‘நாங்கள் யாருமே மனோரமாவை சந்தித்ததில்லை. ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை எங்களை அச்சுறுத்துகிறது. அரசு இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது மன்னிக்கமுடியாத குற்றம். ஒரு நாகரீக நாடு எப்படி இந்த மாதிரி விஷயத்தில் அமைதி காக்க முடியும்? ’மனோரமாவின் குண்டு துளைக்கப்பட்ட உடலைப் பார்த்த போது எங்கள் இதயம் நெருப்பில் வெந்துபோனது. அசாம் ரைபிள்ஸ் ஆட்கள் அவர்கள் செய்த கற்பழிப்பை மறைக்கக் அவளது அந்தரங்க உறுப்பில் துணியை அடைத்து அவளது உடம்பின் வழியே  குண்டு வெடித்திருக்கிறார்கள். அவர்களது வேலை முடிந்தபின் அவளது உடல் பயங்கரமான போர் நிகழ்ந்து முடிந்த போர்க்களம் போல இருந்தது’, என்று இந்த பெண்கள் கூறினார்கள்.
 ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA)
இந்த சட்டம் இந்தியப் பாராளுமன்றத்தால் 1958 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தேதி இயற்றப்பட்டது. இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களான அருணாச்சல் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் ‘கலவரப்பகுதிகள்’ அதாவது ‘அமைதி குறைவானப் பகுதி’ என்று சட்டம் குறிப்பிடும் இடங்களில் இந்தப் படையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்குகிறது. இந்தச் சட்டம் பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை (ஜம்மு காஷ்மீர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டம் என விரிவு படுத்தப்பட்டது.
மாநிலங்கள் தங்கள் பாதுகாப்பு பணிகளை தாங்களே நிர்வகித்து வந்தாலும், சில சமயங்களில் – உதாரணமாக தேர்தல் காலங்களில் – வழக்கமான பணிகளையும் பார்த்துக்கொண்டு கூடுதல் பொறுப்புகளை நிறைவேற்ற  முடியுமால் போகலாம்.  இதுபோன்ற தருணங்களிலும், தொடர்ந்து போராட்டங்கள் அல்லது புரட்சி ஏற்படும் சமயங்களில் – குறிப்பாக நாட்டின் எல்லைப் பகுதிகளில் அரசிற்கு அபாயம் வருமேயானால் அப்போது ஆயுதப்படைகள் இந்தப் பகுதிகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். இவர்களுக்கு எவரையும் கைது செய்யவும், சோதனை இடவும், கலவரம் ஏற்படும் சமயங்களில் சுடவும் அதிகாரங்கள் வழங்கப்படும்.
ஐரோம் சானு சர்மிளா
மார்ச் 14, 1972ஆண்டு பிறந்த சர்மிளா மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படுகிறார். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும், அதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட விளைவுகளுக்கும் காரணம் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம். இதை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2000 ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் பெண் இவர். உலகின் நீண்ட நாள் உண்ணாவிரதப் போராட்டமான இது 500 வாரங்களை தொட்டுவிட்டது.
2000ஆம் ஆண்டு நவம்பர்  2 ஆம் தேதி மலோம் என்ற சிற்றூரில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பத்து குடிமக்கள் அசாம் ரைபிள்சினால் சுட்டப்பட்டு மரணமடைந்தனர். இந்த நிகழ்வை மனித உரிமை போராட்டக்காரர்கள் ‘மலோம் படுகொலை’ என்று குறிப்பிடுகிறார்கள். சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு நீர் உண்ணாமல் தனது போராட்டத்தை ஆரம்பித்தார். போராட்டக்காரர்கள் என்று சந்தேகப்படும் எவரையும் காலவரையறையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பது இவரது முதல் கோரிக்கை. பிடிபட்டவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குதல், வேண்டுமென்ற காணாமல் போகச் செய்வது, நீதித் துறை சாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்தச் சட்டமே காரணம் என்று மனித உரிமைப் போராட்டக்காரர்கலும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.
உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய மூன்றாவது நாளே சர்மிளா ‘தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக’ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். அவரது ஆரோக்கியம் சீர் கெட்டதால் வலுக்கட்டாயமாக மூக்கு வழிய ஆகாரம் கொடுக்கப்பட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒருவரை ஓராண்டுக்கு மட்டுமே சிறையில் வைக்க முடியும் என்பதால் சர்மிளாவை ஒவ்வொரு வருடமும் விடுதலை செய்துவிட்டு மறுபடி கைது செய்து காவலில் வைக்கிறார்கள்.
இவரது உண்ணாவிரதப் போராட்டம் 14வது வருடத்தை தொட்டிருக்கிறது. பல அரசியல் தலைவர்களும், கட்சிகளும் இந்த போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டும் இவர் மறுத்துவிட்டார். இந்தக் கொடுமையான சட்டம் திரும்பப் பெற்றால் ஒழிய இந்த போராட்டத்தை தான் கைவிடுவதாக இல்லை என்கிறார் சர்மிளா. சர்மிளாவின் போராட்டம் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இரானிய மனித உரிமை ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான ஷிரீன் எபடி சர்மிளாவை சந்தித்து தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
‘எனக்கு வாழ்க்கையின் மேல் பிடிப்பு இருக்கிறது. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. எனக்கு வேண்டியது நீதியும் அமைதியும்’ என்கிறார் சர்மிளா. அமைதியை நிலைநாட்டுவதில் இவரது மனஉறுதியையும், தைரியத்தையும் பாராட்டி ரவீந்திரநாத் தாகூர் விருது கொடுக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசிற்கும் 2005 ஆம் ஆண்டு இவரது பெயர் கௌஹாத்தியில் உள்ள அரசு சாரா நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
இவரது முயற்சிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இவரது போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தங்ஜம் மனோரமாவுக்கு எதிராக இழைப்பட்டுள்ள அநீதியை எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண்ணுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு அநீதியாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது ஆபத்தானது. அனைவரும் ஒன்றுபட்டு உரத்தக் குரலில் இதனை எதிர்க்க வேண்டும். மக்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டாக வேண்டிய அவல நிலை இனியொருமுறை இன்னொரு உயிருக்கு ஏற்படக் கூடாது.

கோபல்ல கிராமம்

வல்லமை இதழில் புத்தக மதிப்புரைக்காக எழுதியது.

gopalla gramam

எழுதியவர்: கி. ராஜநாராயணன்

பதிப்பகம்: காலச்சுவடு

விலை: ரூ. 150

பக்கங்கள் : 199

வெளியான ஆண்டு: 1976

ஆசிரியர் குறிப்பு:

ஆசிரியர் திரு கி.ரா என்கிற கி. ராஜநாராயணனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கரிசல் காட்டின் வளமையை தமிழ் எழுத்துலகிற்குக் கொண்டு வந்தவர். கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவரின் கதைகளில் கரிசல் பூமியும் அங்கு வாழ்ந்த மக்களும்தான் கதைக் களம், கதை மாந்தர்கள். இவரது கதைகளுக்கு பின்புலம் தனது தந்தையாரிடத்தில் இவர் கேட்ட கதைகள் தாம்.

எனது பணிவான வேண்டுகோள்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த மூத்த எழுத்தாளரை விமரிசிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை. அதனால் நான் இங்கு பகிர்ந்து இருப்பது நான் படித்து ரசித்த ‘கோபல்ல கிராமம்’ புத்தகத்தில் இருந்து சில துளிகள். என்னைக் கவர்ந்த பாத்திரங்கள், வியக்க வைத்த நிகழ்வுகள் அவ்வளவே. இதைப் படித்துவிட்டு சிலராவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால் எனது ஜென்மம் சாபல்யம் பெறும். ஏற்கனவே படித்தவர்கள் என்னுடன் கூட இன்னொருமுறை கோபல்ல கிராமத்திற்குப் போய்வரலாம்.

கோபல்ல கிராமம்

ஒரு கிராமத்தின் விடியலுடன் தொடங்குகிறது கதை. ஒரு ஜீவ இயக்கத்துடன் கிராமம் பூரணமாக விழித்துச் செயல்பட ஆரம்பிப்பதை படிக்கத் துவங்கும்போது நமக்குள் தோன்றும் நவரசமான உணர்வுகள் புத்தகத்தை முடிக்கும்வரை நீடிக்கிறது.  கோட்டையார் வீடு, அதன் வாரிசுகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் கண் முன் கோபல்ல கிராமம் விரிகிறது. கோட்டை கட்டி வாழ்ந்தவர்கள் இல்லை; அந்த வீட்டை சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருந்ததனால் கோட்டையார். ‘ரொம்பத் தாட்டியாக வாழ்த்த குடும்பம்; இப்போது சிதிலமடைந்த வீடும், இடிபாடுகள் அடைந்த கோட்டைச் சுவரும் புராதன சின்னங்கள் போல சோகமாய் நின்று கொண்டிருக்கின்றன’. கோட்டையார் வீட்டு சகோதரர்கள் ஏழு பேர்கள். அண்ணன் தம்பி ஏழுபேரும் குடும்பத்தில் ஒவ்வொரு ‘இலாகா’வை நிர்வகித்தார்கள்.

இந்த சகோதரர்களின் கதையை வாசித்துக் கொண்டே இருக்கும்போது அந்த கதைக்குள் ஒரு கதைசொல்லியாக 137 வயதான பூட்டி மங்கத்தாயாரு அறிமுகம் ஆகிறாள்.  ‘எலும்பும் தோலுமாய் நீண்ட மூக்குடன் இருக்கும்’ மங்கத்தாயாருவை ‘பார்க்கும்போதெல்லாம் ரோமத்தை எல்லாம் இழந்துவிட்ட ரொம்ப வயசான ஒரு கழுகின் ஞாபகம் வரும்’ என்கிறார் கி.ரா.

இவள் கதை சொல்லும் அழகில் நாமும் அவளைப்போலவே நேரம் காலம் தெரியாமல் லயித்து விடுகிறோம். அந்த லயிப்பில் இவள் வர்ணிக்கும் சில அமானுஷ்யங்கள், இவள் எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதெல்லாம் கேள்வி கேட்கப்படாமல் நம்மால் ஒத்துக்கொள்ளப்பட்டுவிடுகிறது. மங்கத்தாயாரு தாங்கள் துலுக்க ராஜாவிடமிருந்து தப்பி வந்த கதையை சொல்லும்போது அந்தக் கதைக்குள்  ஒரு பெண்மணி தனது பெண் துளசியின் கதையை சொல்லுகிறார். கதைக்குள், கதைக்குள், கதை!

மங்கத்தாயாருவின் கதையின் கதாநாயகி சென்னாதேவி தன் அழகால் எல்லோரையும் தன்னை கையெடுத்துக் கும்பிடும் தேவியாக நினைக்க வைக்கிறாள். ஆனால் அத்தனை அழகு இருக்கும் பெண்ணின் வாழ்க்கை துன்பமயமாகத்தான் இருக்கும் என்று மங்கத்தாயாரு சொல்லும்போதே நம் மனம் பதறத் தொடங்கிவிடுகிறது. என்ன ஆகியிருக்கும் சென்னாதேவிக்கு? துலுக்க ராஜாவிற்கு ராணியாக வாழ்க்கைப்படும் ‘அதிர்ஷ்டம்’ உண்டாகிறது சென்னாவிற்கு. திருமணத்திற்கு முன் தினம்தான் தெரிகிறது மாப்பிள்ளை வீட்டவர்கள் பசு மாமிசத்தை தங்களுக்கு விருந்தாகக் கொடுக்க இருக்கிறார்கள் என்று! அதிர்ந்து போய் அங்கிருந்த தப்பி ஓடிவரும் இவர்கள் வந்து சேருவது ‘அரவ’ (தமிழ்) தேசத்திற்கு. அங்கு தங்களுக்கென்று ஒரு கிராமத்தை அமைத்துக் கொள்ளுகிறார்கள். இதுதான் கோபல்ல கிராமம். இந்தப் பூர்வ கதை மங்கத்தாயாருவின் மூலம் சொல்லப்படுகிறது.

நிகழ்காலத்தில் நடக்கும் கதை இரண்டாம் அத்தியாத்தில் தொடங்குகிறது. ‘காதுல பாம்படம் போட்டுக்கொண்டு, சேப்புக் கண்டாங்கிச் சேலை கட்டியிருக்கும் ஈருசுரு ஆள்’ மங்கம்மா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வருகிறாள். வழியில் ஊருணியில் இறங்கி நீர் குடிக்கும்போது ஒரு வழிப்போக்கனால் கொல்லப்படுகிறாள் அவளது காதுகளில் தொங்கும் பாம்படங்களுக்காக. முதல் அத்தியாயத்திலேயே கோபல்ல கிராமத்தின் பஞ்சாயத்து பற்றி ஆசிரியர் விலாவாரியாகச் சொல்லிவிடுவதால் இந்தக் கொலைக்கு என்ன தண்டனை, அது எப்படி நிச்சயிக்கப்படுகிறது, எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதெல்லாம் நமக்குள் கதையை ஊன்றிப் படிக்க உத்வேகம் கொடுக்கும் விஷயங்கள். பூர்வ கதைக்கும் இப்போது நடக்கும் கதைக்கும் நடுவில் வேறு வேறு மனிதர்களின் கதைகள் – எல்லாமே கோபல்ல கிராமத்தின் கதைதான்.

சீரியஸ்ஸான கதையாக இருக்குமோ என்று இந்தப் புத்தகத்தைப் படிக்க யோசிப்பவர்களுக்கு இந்த கோபல்ல கிராமத்தின் காமெடியன் அக்கையாவின் வேடிக்கை வினோதங்கள் நல்ல சிரிப்பு விருந்து. சுந்தரப்ப நாயக்கரை ‘புதூச் சுண்ணாம்பு எடுத்துக்க…’ என்று சொல்லி ஏமாற்றுவதும், தான் ரொம்பவும் அழகி என்ற இறுமாப்பால் இவரை மதிக்காமல் இருக்கும் துண்டபண்டு (கோவைப்பழம் போல சிவப்பாக இருந்ததால் வந்த பெயர்) வெங்கிடம்மாவை விளையாட்டாக ஒரு பொய்யைச் சொல்லி பழி வாங்குவதும் இவரது முத்திரை காமெடிகள். இவர் வெறும் காமெடியன் மட்டுமல்ல; ஒரு கண்டுபிடிப்பாளியும் கூட! கோடை உழவு முடிந்து, முதல் மழை பெய்ததும் விதைப்புக்குத் தயாராக்க நிலத்தை உழ ஆரம்பிக்கும் உழவுக்கு எழுப்படிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு ஒத்தைக் கலைப்பையை வைத்துக் கொண்டு உழுவதால் உழுது முடிக்கும் முன்பு மழை வந்துவிடும். மழைக்கு முன் உழுது முடிக்க அன்று அக்கையாவால் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைக் கலப்பை கரிசல் காட்டில் பெருத்த மாறுதலையும், பரபரப்பையும் அந்த நேரத்தில் உண்டு பண்ணியது. அக்கையா சொல்லும் ராஜகுமாரனின் கதை நிச்சயம் படித்து, ரசித்து, சிரித்து மகிழ வேண்டிய ஒன்று. அக்கையாவின் தலைமையில் கிராம மக்கள் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுடன் ‘சந்திப்பு’ நடத்துவது இந்நாளைய திரைப்படங்களில் வரும் ‘க்ளைமேக்ஸ்’ காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை!

ஜோஸ்யம் எங்க்கட்ராயலு, மண்ணுதின்னி ரெங்க நாயக்கர், பச்சைவெண்ணெய் நரசய்யா, பயிருழவு பங்காரு நாயக்கர், வைத்தி மஞ்சையா, வாகடம் புல்லையா, ஜலரங்கன் யாரைச் சொல்ல, யாரை விட? இவர்களது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கதை! ஒரு நிகழ்வு! இப்படி பல பாத்திரங்கள் நம்முடன் சகஜமாக உலா வருகிறார்கள். எழுத்தாளருக்கும் நமக்கும் இடையில் இடைவெளி என்பதே இல்லை என்பதே இந்தக் கதையின் சிறப்பம்சம்.

நான் இங்கு சொன்னது 25% அவ்வளவே. மீதி 75% புத்தகம் வாங்கி நீங்களாக படித்து ரசிக்க வேண்டியவை. திரு கிரா வின் நடையின் கோபல்ல கிராமம் நம் கண் முன் உயிர்த்தெழுந்து வருகிறது என்று சொன்னால் மிகைப்படுத்தல் இல்லை.