செல்வ களஞ்சியமே – 11  

 

‘நாம் கருவிலிருக்கும் போதே நமக்கான உணவை இறைவன் நம் தாயின் முலையில் வைக்கிறான் என்றால் அவன் கருணைக்கு எல்லை எது’ என்று சொல்வதுண்டு.

இன்றைக்கு நாம் மார்பகங்களை எப்படி பாதுகாப்பது, எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது என்பது பற்றிப் பேசப் போகிறோம். இதையெல்லாம் பற்றி இங்கு பேச வேண்டுமா என்று உங்களுக்குத் தோன்றலாம். இதைப்பற்றி இங்குதான் பேசவேண்டும்.

என் உறவினர் ஒருவர் துணைவியுடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம், ‘பாத்ரூம் போகணுமானால் போய்விட்டு வா’ என்று எல்லோர் எதிரிலும் கூற, எங்களுக்கு ஒரு மாதிரி ஆனது. பிறகு அந்த மாமி கூறினார்: ‘வெளியில் வந்து எப்படி இதைக் கூறுவது (சிறுநீர் கழிக்க வேண்டுமென்று) என்று எத்தனை நேரமானாலும் அடக்கி வைத்துக் கொள்வேன். போனவாரம் ஒரே வலி ‘அந்த’ இடத்தில். மருத்துவரிடம் போன போது ‘நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்ளுவீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.

என்ன ஆகும் இப்படிச் செய்வதால்?

சிறுநீர் என்பது நம் உடலில் உள்ள வேண்டாத கழிவுப் பொருள். வீட்டில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது போல இதையும் வெளியேற்ற வேண்டும். நமது சிறுநீரகங்களில் இருக்கும் சிறுநீர்ப்பையால் அதன் கொள்ளளவுக்கு  மேல் சிறுநீரை நீண்ட நேரம் தேக்கி வைத்துக் கொள்ள முடியாது. அடிக்கடி இப்படிச் செய்வதால் நாளடைவில் அவை பலவீனமடையும்.

பலவீனமான சிறுநீர்ப்பை அதிக நேரம் சிறுநீரை தாங்கிக் கொள்ள முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரை வெளியேற்ற ஆரம்பிக்கும். நாளடைவில் இது சிறுநீர் கசிவு (Female Incontinence) நோயாக மாறும் அபாயம் உள்ளது. இந்த நோய் பெண்களிடையே அதிகம் காணப்படுவதன் காரணங்களில் இப்படி சிறுநீரை வெளியேற்றாமல் அடக்க முற்படுவதும் ஒன்று. இது தேவையா?

சிறுநீர் போகாமல் கழிவுப் பொருட்கள் உடலில் உள்ளேயே தங்குவதால் UTI’ எனப்படும் நோய்த்தொற்று உண்டாகும். இந்த நோய் தொற்று வந்தால் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் கடுமையான வலி, எரிச்சல், சில சமயம் இரத்தம் கலந்த சிறுநீர் வெளிவருவது என்று பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். இது தேவையா?

சிறுநீரைக் கழிக்காமல் இருப்பதால் நீங்கள் திரவப் பொருள் உட்கொள்ளுவதை நீண்ட நேரம் ஒத்திப் போடுகிறீர்கள். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துப் பொருள் கிடைக்காமல் போகிறது.

இவ்வளவு பின்விளைவுகள் இருப்பதாலேயே என் உறவினர் தன் மனைவியை அவ்வாறு வெளிப்படையாக கேட்டார் என்று தெரிந்தது.

பெண்களின் உடம்பைப் பற்றி பேசுவது தவறல்ல; ஒவ்வொரு பெண்ணும் தன் உடம்பைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளுவது மிகவும் அவசியம்.

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான விஷயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது. அதற்கு உதவும் மார்பகங்களைப் பற்றி எப்படிப் பேசாமல் இருப்பது?

மார்பகங்கள் வெறும் ‘கிளுகிளுப்பு’ மட்டுமல்ல; அதையும் விட மிகவும் முக்கியமான உறுப்பு. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் வேலையைத் தவிர நீங்கள் பெண் என்று உலகுக்கு பறை சாற்றும் உறுப்பு அதுதான். தாய்ப் பாலுடன் குழந்தைக்கு ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கொடுக்கிறீர்கள் என்பதை பெண்கள் மறக்கக் கூடாது. ஆரோக்கியமான உடலும்  கூடவே நம் உடலைப்  பற்றி சரியான முறையில்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆரோக்கியமான மனமும்  பெண்களுக்கு அவசியம் தேவை.

கருவுற்ற  முதல் மூன்று மாதங்களில் மார்பகங்கள் மிருதுவாக ஆகும். சிலருக்கு ப்ரா அணியும்போது சற்று வலி ஏற்படலாம். இரண்டு அறிகுறிகளுமே வழக்கமாகத் தோன்றுபவைதான்.

இரண்டாவது மூன்று மாதங்களில் முலைக் காம்புகள் கருத்து மார்பகங்கள் பெரிதாகும். இதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் சற்றுப் பெரிய அளவில் ப்ரா அணியவேண்டும். மிகவும் இறுக்கமான செயற்கை இழைகளால் ஆன ப்ரா அணியக்கூடாது. அணிந்தால் என்ன ஆகும்? பால் வரும் துவாரங்கள் அடைபட்டு தாய்ப்பால் சுரப்பது தடைப்படும். பருத்தியால் ஆன ப்ரா உத்தமம். தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதற்கென்றே வசதியாக ப்ராக்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்தலாம். எதை பயன்படுத்தினாலும் சுகாதாரம் முக்கியம்.

குழந்தை பிறந்து பாலூட்ட ஆரம்பித்தவுடன், தினமும் குளிக்கும்போது வெறும் நீரால் மார்பகங்களை அலம்பவும். சோப் வேண்டாம். சோப் பயன்படுத்துவதால் மார்பகங்களைச் சுற்றியுள்ள தோல் வறண்டு போகும். இதனால் முலைக் காம்புகளில் சின்னச்சின்ன வெடிப்புகள்  ஏற்படலாம். வெடிப்புகளின் மேல் பேபி லோஷன் தடவலாம். குழந்தைக்குப் பால் புகட்டுவதற்கு முன் நன்றாக அலம்பிவிட வேண்டும். உங்கள் கையையும் நன்றாக அலம்பிக் கொள்வதால் நோய்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை குழந்தை பால் அருந்திய பின்னும்  ஒரு சுத்தமான துணியினால் மார்பகங்களை நன்றாகத் துடைத்துவிட்டு பிறகு ப்ரா ஊக்குகளை போடுங்கள். ஈரத்தில் நோய்தொற்றுகள் வளருகின்றன.

குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்க ஆரம்பித்தாலும், இரண்டு மூன்று நாட்களில், அதாவது குழந்தை பால் குடிக்க ஆரம்பித்து சில நாட்களுக்குப் பிறகுதான் நல்ல சுரப்பு இருக்கும்..

குழந்தை பிறந்த முதல் ஓரிரு நாட்கள் தாய்ப்பால் லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இதற்கு கொலஸ்ட்ரம் என்று பெயர். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணவும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கவும் இது கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும்.

முதல் இரண்டு மூன்று நாட்கள் குழந்தையும் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும்; அதிகப் பசியும் ஏற்படாது. இந்த இரண்டு மூன்று நாட்கள் நீங்களும், குழந்தையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளவே. முதல் சில நாட்கள் குழந்தைக்கு மார்பகத்தைப் பிடித்துக் கொள்ளத் தெரியாது. உங்களுக்கும் எப்படி பாலூட்டுவது என்று தெரியாது. குழந்தையின் தலை உங்கள் இடது கை / வலதுகை முழங்கையில் பதிய இருக்காட்டும். இன்னொரு கையால் அதன் இரண்டு கன்னங்களையும் சேர்த்து பிடியுங்கள். குழந்தையின் வாய் திறக்கும். உங்கள் மார்பகத்தின் அருகில் அதன் திறந்த வாயைக் கொண்டு செல்லுங்கள்.  குழந்தைக்கு தன் உள்ளுணர்வினால்  ‘ஓ! சரவண பவன் இங்கிருக்கிறது’ என்று தெரிந்துவிடும். பொறுமைதான் ரொம்பவும் தேவை.

பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் உட்கார்ந்த நிலையிலேயே ‘எடுத்து’ விடவேண்டும். நீங்கள் உட்காரும் நிலை சரியாக இருக்க வேண்டும். நன்றாக சாய்ந்து கொண்டு முதுகிற்கு கெட்டியான தலையணை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை சரியான நிலையில் கையில் ஏந்திக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் மிகவும் முக்கியம். மூன்றாவது முக்கிய விஷயம் மன அமைதி.

இது உங்களுக்கும் குழந்தைக்குமான பிரத்யேகமான நேரம். அப்போது புத்தகம் படிப்பது, தொலைக்காட்சியில் அழுகைத் தொடர்கள் பார்ப்பது வேண்டாம். ஆற அமர, அமைதியாக உளமார, மனமார குழந்தையுடன் பேசிக் கொண்டே பாலூட்டுங்கள். பாலுடன் கூட பாசிடிவ் எண்ணங்களையும் ஊட்டுங்கள். பாடத் தெரியுமா, குழந்தைக்கும் உங்களுக்குமாகப் பாடுங்கள்.

இதனால் உங்களுக்கும் பால் நன்றாக சுரக்கும். குழந்தையும் நன்றாகப் பால் குடிக்கும். ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை குழந்தைக்கு உருவாக்கலாம்.

சில குழந்தைகள் சிறிது குடித்துவிட்டு அப்படியே தூங்கிவிடும். குழந்தையின் காதுகளை தடவினால் விழித்துக் கொள்ளும். இல்லையானால் பிஞ்சுக் கால்களில் ‘குறுகுறு’ பண்ணலாம்.

பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் கோலிக்குண்டு அளவிலும், இரண்டாம் நாள் பிங்க்பாங் பந்து அளவிலும், மூன்றாம் நாள் ஒரு பெரிய வளர்ந்த முட்டை அளவிலுமாக சிறிது சிறிதாக வளர தொடங்கும்.

குழந்தை தனக்கு வேண்டிய பாலை முதல் 5  நிமிடங்களில் குடித்துவிடும். நாள் ஆக ஆக குழந்தைக்கு வயிறு வளர்ந்து அதன் பசியும் கணிசமான அளவு அதிகரித்தவுடன் பாலூட்டும் நேரமும் அதிகமாகும்.

இரண்டு பக்கமும் பால் கொடுத்து பழக்குங்கள். குழந்தை நன்றாகப் பால் குடித்தவுடன் மார்பகங்கள் லேசாக ஆகும். குழந்தை குடிக்கக் குடிக்க பால் நன்றாக ஊற ஆரம்பிக்கும்.

பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் வேதனை கொடுப்பது ‘பால் கட்டிக்’ கொள்வது தான். குழந்தைக்கு சரியாக குடிக்கத் தெரியாததாலும், நீண்ட நேரம் எடுத்து விடாமல் போனாலும் இதைப்போல பால் கட்டிக் கொண்டுவிடும்.

கையாலேயே பாலை பிய்ச்சி வெளியேற்றிவிடுங்கள். இல்லையென்றால் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது சுடுநீரால் மார்பகத்தை கழுவலாம். இதனாலும் பால் வெளியேறும்.

இன்னொரு முறை: தோசைக் கல்லை அடுப்பின் மேல் இடுங்கள். சூடானவுடன், ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை அதன்மேல் வைத்து, பொறுக்கும் சூட்டில் மார்பகத்தின் மேல் வைக்கலாம். தானாகவே பால் வெளியேறும். இல்லையானால் நிதானமாக ஆனால் உறுதியாக மார்பகத்தை முலைக்காம்புப் பக்கம் அழுத்தித் தடவுங்கள். பால் வெளியேறும்.

பொதுவாக இந்த மாதிரி ‘கட்டி’ விட்ட பாலை குழந்தைக்குக் கொடுப்பது நல்லதல்ல. அதனால் ஒரு சுத்தமான துணியை வைத்துக் கொண்டு வெளியேறும் பாலை துடைத்து விடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் எல்லாப் பெண்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

பாலூட்டும் நேரத்தை  குழந்தையுடன் ரசித்து அனுபவித்துக் கொண்டிருங்கள். அடுத்தவாரம் பார்க்கலாம்!

 

paguthi 10

paguthi 12

 

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 4

        

prayer

திரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் திருமதி பர்கா தத் நிகழ்த்திய ஒரு நேர்முக பேட்டியை சமீபத்தில் பார்த்தேன். அதிலிருந்து சுவாரஸ்யமான ஒரு பகுதி:

பேட்டியாளர்: ‘நமக்கு குரு – சத்குரு – தேவையா?’

நேரடியான பதிலைச் சொல்லாமல் திருப்பி ஒரு கேள்வியைக் கேட்கிறார் திரு ஜக்கி: ‘நீங்கள் கார் ஓட்டுவீர்களா?’

பேட்டியாளர்: ‘இல்லை’

திரு ஜக்கி: உங்களுக்குத் தெரிந்திராத பாதையில் போகும்போது நீங்கள் ஜிபிஎஸ் (GPS) -ஐ போட்டுக் கொள்ளுகிறீர்கள். முன்பின் தெரியாத ஒரு பெண் ‘வலதுபுறம் செல்லுங்கள்’, ‘இடதுபுறம் செல்லுங்கள்’, ‘யூ டர்ன் செய்யுங்கள்’ என்கிறார். நீங்களும் அவரது கட்டளைகளை ஏற்றுக்கொண்டு காரைச் செலுத்துகிறீர்கள். நீங்கள் போகவேண்டிய இடத்தை அடைகிறீர்கள், இல்லையா?’

ஒரு சிறிய மௌனம். சின்னதான ஒரு சிரிப்புடன் தொடர்கிறார்: ‘நீங்கள் அறிந்திராத பாதையில் செல்லும் போது GPS சொல்லும் கட்டளைகளை ஏற்றுக் கொள்வது புத்திசாலித்தனம். GPS என்பதை Guru Positioning System என்று நான் சொல்லுகிறேன்.’

இந்தியக் கலாசாரத்தில் குரு என்பவர் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்படுகிறார். நமது வாழ்க்கையில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. மாதா, பிதா இருவரையும் அடுத்து இறைவனின் நிலையில் குரு பார்க்கப்படுகிறார். பெற்றோர்கள் எதற்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று சற்று சிந்தித்தால், அங்கிருக்கும் ஒருவர் தம்மை விட தங்கள் குழந்தைகளை சிறந்த வழியில் அழைத்துச் செல்ல முடியும் என்று நம்புவதால் என்று சொல்லலாம். வளரும் குழந்தைகள் குருவுடனே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பது இந்த வாதத்திற்கு வலு சேர்க்கிறது, இல்லையா? குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிவதில் பெற்றோர்களை விட குரு முதலிடம் பெறுகிறார்.

இந்த இணைய யுகத்தில் எல்லாமே ஒரு ‘க்ளிக்’கில் அறிந்து கொள்ள முடியும் என்று நிலையில் குரு தேவையா? என்ற கேள்வி எழுகிறது. முதலில் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குரு என்பவர் வெறும் தகவல் சொல்பவர் அல்ல. அதற்கும் மேல் நம்மை நெறிப்படுத்துபவர். மாணவனாக தம்மிடம் வரும் குழந்தையை முழு மனிதனாக்குவது தான் அவரது முதல் கடமை. பாடப்புத்தகங்களில் இருப்பதை சொல்லிக் கொடுப்பது இரண்டாம் பட்சம் தான். மாணவனுக்கு கற்பதற்கு உந்துதலைக் கொடுத்து, இந்த உலகத்தைப் பார்க்கச் சொல்லிக் கொடுத்து, இந்த சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதனை உருவாக்கிக் கொடுக்கிறார்.

அந்தக் கால குருவும் இந்தக் கால ஆசிரியரும் ஒருவரே என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இனி ஆசிரியர் என்று குறிப்பிடுவோம்.

ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு என்னென்ன செய்கிறார்?

 • என்னால் இவ்வளவுதான் முடியும் என்று நினைக்கும் குழந்தையை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி அவன் செயல்திறனை நீட்டிக்கிறார்.
 • அவர்களின் வீட்டுப் பாட நோட்டுப்புத்தகத்தில் ஒரு தங்கநிற நட்சத்திரத்தை ஒட்டி, அவர்களைவிடச் சிறந்தவர்கள் இல்லை என்று பெருமிதம் கொள்ள வைக்கிறார்.
 • பெற்றோர்களால் 5 நிமிடம் ஓரிடத்தில் உட்கார வைக்க முடியாத குழந்தைகளை 40 நிமிடம் வகுப்பில் உட்கார வைக்கிறார் – அதுவும் ஐ-பேட், விடீயோ கேம்ஸ் இல்லாமல்!
 • அறிவியல் புதிர்களைச் சொல்லி அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.
 • அவர்களை கேள்விகள் கேட்க வைக்கிறார்.
 • தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வைக்கிறார். மன்னிப்பு என்பதை வாயளவில் இல்லாமல் மனதிலிருந்து வரவழைக்கிறார்.
 • பிறரிடம் மரியாதை காட்டச் சொல்லிக் கொடுக்கிறார். அவர்களது செயலுக்கு அவர்களே பொறுப்பு என்பதை புரிய வைக்கிறார்.
 • எப்படி எழுதுவது என்று சொல்லிக் கொடுத்து அவர்களை எழுதவும் வைக்கிறார். விசைப்பலகையில் தட்டுவது என்பது பெரிய விஷயமில்லை.
 • அவர்களைப் படி படி படி என்று சொல்லிப் படிக்க வைக்கிறார்.
 • கணக்குப் பாடத்தில் அவர்கள் போடும் வழிமுறைகளைக் காட்டச் சொல்லி விடையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சொல்லிக்கொடுக்கிறார்.
 • கடவுள் கொடுத்த அறிவை பயன்படுத்தச் சொல்லிக் கொடுக்கிறார், கால்குலேட்டர் இல்லாமல்.
 • வெளிநாட்டு மாணவர்களுக்கு தங்கள் கலாச்சாரப் பின்னணியிலிருந்து விலகாமல் எப்படி கற்பது என்பதைச் சொல்லித் தருகிறார்.
 • வகுப்பறை என்பதை ஒரு பாதுகாப்பான இடமாக உணரச் செய்கிறார்.
 • கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரங்களைப் பயன்படுத்தி, கடுமையாக உழைத்தால், வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார்.
 • தங்களிடமிருக்கும் செல்வத்தை வைத்து ஒரு ஆசிரியரை யாராவது எடை போட்டால் அவருக்குத் தெரியும் பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்று. அவர்களது அறியாமையைக் கண்டு அவர் சிரிக்க மாட்டார். மாறாகத் தனது நிலைமையை அறிந்து தலையை நிமிர்ந்து நடப்பார். யாராலும் எந்தக்காலத்திலும் அழிக்க முடியாத கல்விச் செல்வத்தை மாணவர்களுக்குத் தன் பரிசாகக் கொடுத்துவிட்டுச் செல்வார்.
 • அவரது மாணவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்து அவர்களை மருத்துவர்களாகவும், பொறியியலாளராகவும், வியாபார சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர்களாகவும் செய்கிறார்.

 

பச்சைக் களிமண் எப்படி தேர்ந்த குயவனின் கையில் ஒரு அழகிய பாண்டமாக மாறுகிறதோ, அதே போலத்தான் ஒன்றுமறியாத குழந்தை ஒரு நல்ல ஆசிரியரின் கைகளில் வந்து சேர்ந்து நல்ல மனிதனாக மாறுகிறது.

அதெல்லாம் அந்தக் காலம், இந்தக் காலத்தில் ஆசிரியர் என்பவர் இப்படியெல்லாம் இருப்பதில்லை என்று சொல்பவர்களுக்கு அடுத்த வாரம் பதில்.

 

 

 

 

 

 

உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்புவோம், வாருங்கள்!

 

 

twins 1

படம் உதவி, நன்றி: கூகிள்

 

 

போனவாரம் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் அந்தப் பெண். ஒரு ஆண், ஒரு பெண் என்று நான்கு வயதிலும் 2 வயதிலுமாக இரண்டு குழந்தைகள். என்னை மிகவும் கவர்ந்தது அந்த இரண்டாவது குழந்தை – பெண் குழந்தை. ஏற்கனவே பார்த்திருந்ததால் தயக்கம் இல்லாமல் என்னிடம் வந்தது. சென்ற முறை பார்த்திருந்த போது அதற்கு ஒரு பாட்டு –

‘பரங்கிக்காய பறிச்சு

பட்டையெல்லாம் சீவி,

பொடிப்பொடியா நறுக்கி,

உப்பு காரம் போட்டு

இம்(ன்)பமாகத் திம்(ன்)போம்.

இன்னும் கொஞ்சம் கேட்போம்,

குடுத்தா சிரிப்போம்;

குடுக்காட்டி அழுவோம்!’

– அபிநயத்துடன் சொல்லிக் கொடுத்திருந்தேன். என்னைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து தனது சின்னக்கைகளால் அந்த பாட்டிற்கு அபிநயம் செய்ய  ஆரம்பித்தது. அப்படியே அந்தக் குழந்தையை அணைத்துக்கொண்டேன். அது இப்போது புதிதாக ஒருபாட்டைப் பாடக் கற்றுக்கொண்டுள்ளது. ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாட்டு.

 

மழலையில் அது பாடும்போது வார்த்தைகள் சரியாகக் கேட்கவில்லை. ‘ல்லோ….ல்லோ’ மட்டும் நன்றாகக் கேட்டது. குழந்தையின் குரலில் பிடிக்காத பாட்டும் பிடித்ததாயிற்று. தேன் போல இனிக்கும் குரலில் வார்த்தைகளை முழுங்கி முழுங்கி, வாயில் ஜொள்ளு வழிய அது பாடியது ‘குழலினிது யாழினிது’ என்ற குறளை நினைவிற்குக் கொண்டு வந்தது.

 

துளிக்கூட தயக்கம் இல்லாமல் எல்லோருடன் பழகியது. வாய் ஏதோ ஒரு பாட்டை பொரிந்து கொண்டே இருந்தது. ஏ,பி,ஸி,டி., பாபா ப்ளாக் ஷீப், என்று வீட்டைச் சுற்றிச்சுற்றி பாடியபடியே வளைய வந்து கொண்டிருந்தது. வீடே கலகலவென்று எங்கெங்கும் குழந்தையின் காலடி பட்டு மணத்துக் கொண்டிருந்தது. ‘காலைல எழுந்து வரும்போதே பாடிக்கொண்டே தான் வருவாள்’ என்று குழந்தையின் அம்மா சொன்னாள். என்ன ஒரு கொடுப்பினை! என்ன தவம் செய்தனை அம்மா என்று பாட வேண்டும் போல இருந்தது.

 

நாங்கள் சாப்பிடும்போது என் அருகிலேயே உட்கார்ந்து கொண்டது அந்தக் குழந்தை. என் தட்டிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து எடுத்து வாயில் வைத்துக் கொண்டது. வாயில் போனது கொஞ்சம், என்றால் கையிலிருந்து விழுந்தது நிறைய. ‘பாட்டி சாப்பிட்டும், தொந்தரவு செய்யாதே!’ என்ற அதனுடைய அம்மாவின் அதட்டலை அது கண்டுகொள்ளவேயில்லை. அம்மா பரிமாற வரும்போது முகத்தை சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு சாப்பிடுவது போல பாவ்லா காட்டும். அம்மா அந்தப்பக்கம் போனவுடன் குறும்பு சிரிப்புடன், கண்கள் மின்ன என் தட்டிலிருந்து எடுத்ததைத் திரும்பவும் தட்டிலேயே போடும். இப்படியாக எடுப்பதும், போடுவதுமாக –  அன்றைக்கு நான் சாப்பிட்டது சிறுகை அளாவிய கூழ்!

 

சாப்பிட்டு முடித்து சோபாவில் உட்கார்ந்தவுடன் என் முதுகுப் பக்கம் வந்த நின்று என்னைக் கட்டிக்கொண்டு ‘பாட்டி!’ என்றது. மெத்து மெத்தென்ற அதன் சின்ன உடல் தந்த சுகத்தை என்னவென்று சொல்லுவேன்? குழந்தையின் அம்மா அதை சற்று நேரம் தூங்கச் சொன்னாள். அது ‘பாட்டி, பாட்டி…’ என்று என்னைத் தொட்டுக் காண்பித்தது. நான் அந்தக் குழந்தையை அணைத்தவாறே படுத்துக் கொண்டேன். அதன் முதுகில் தட்டிக் கொண்டே ‘ஜோ, ஜோ கண்ணம்மா’ என்று பாடினேன். உடனே அந்தக் குழந்தையும் என்னைத் தட்டி ‘ஜோ ஜோ’ என்று பாட ஆரம்பித்தது. ‘நான் தான் வசுதா, நீதான் பாட்டி, சரியா?’ என்றேன். அந்தக் குழந்தைக்கு ரொம்பவும் குஷியாகிவிட்டது. ‘வசுதா, வசுதா’ என்று என்னைக் கூப்பிட ஆரம்பித்தது. நானும் ‘பாட்டி, பாட்டி, கதை சொல்லு பாட்டி! அப்போதான் தூங்குவேன்’ என்றேன். குழந்தை தன் மழலையில் ஏதேதோ சொல்லிற்று. எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. குழந்தையும் என்னுடன் சிரிக்க ஆரம்பித்தது. நானும் அந்தக் குழந்தையின் உலகத்திற்குள் சென்றுவிட்டேன்.

 

எத்தனை நாளாயிற்று இதுபோல சிரித்து! நாம் எல்லோருமே குழந்தைகளாக இதுபோல ஒருகாலத்தில் கவலை இல்லாமல் சிரித்தவர்கள் தான். வயது ஏற ஏற கவலைகளும், பலவிதமான அலைக்கழிக்கும் எண்ணங்களும் நம்மை இந்தக் குழந்தைத்தனத்தில் இருந்து வேறு உலகத்திற்குக் கடத்தி விடுகின்றன. சிரிக்க மறந்து விடுகிறோம். கோபம் என்பதே நம் குணமாகிவிடுகிறது. குழந்தைத்தனம் நம்மை விட்டு விலகி விடுகிறது. பெரியவர்களாகி விட்டால் சிரிப்பது என்பதே பாவச்செயல் என்று எண்ணத் தொடங்குகிறோம். மன்னிப்பது  மறப்பது இரண்டும் நம் அகராதியிலிருந்து அகன்று விடுகிறது.

 

ஒவ்வொரு பண்டிகை வரும்போதும் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறோம். ‘சின்னவளா இருந்தபோது……’ என்று ஏக்கத்துடன் நம் நினைவலைகளைப் பதிவு செய்கிறோம். அந்த நாட்கள் திரும்ப வராதா என்று ஏங்குகிறோம். அதெல்லாம் ஒரு காலம் என்று வருந்துகிறோம். ஏன் இப்படி? யாராவது சொன்னார்களா, நீ வளர்ந்தவுடன் உனக்குள் இருக்கும் குழந்தையை மறந்துவிடு என்று? அசந்து மறந்து சிரித்து விடாதே என்று யாராவது சொன்னார்களா? சந்தோஷமாக இருக்க எப்போது மறந்தோம்?

 

இன்றைக்கு குழந்தைகள் தினம். நாம் ஏன் இந்த தினத்தை நம்முள் உறங்கிக் கிடக்கும் குழந்தையை எழுப்பும் தினமாக மாற்றக்கூடாது? 24×7 இணையத்துடன் இணைந்திருக்க விரும்பும் நாம் நமது உற்றார் உறவினருடன் இணைந்திருக்க விரும்புவதில்லை. நமக்குள் ஒரு வெறுப்பு வந்து உட்காந்து விட்டது. குழந்தையாக இருந்த போது சீக்கிரம் பெரியவர்கள் ஆக விரும்பினோம். ஆகியும் விட்டோம். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறோமா?

 

குழந்தையின் மனதில் இருக்கும் உலகம் எளிமையானது; தூய்மையானது. அந்த உலகத்தில் தேவையில்லாதது நடந்தால் அந்தக் குழந்தை முதலில் அழுதாலும், மறந்து மன்னித்து கடந்து மேலே சென்று விடுகிறது. குழந்தைகள் நமது சிறு வயது நினைவுகளை பலமுறை நினைக்க வைத்து நம்மை மறுபடிஅந்த உலகிற்கு அழைத்துப் போகின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பழைய பகையை, விரோதத்தை மறக்காமல் மனதிற்குள் வைத்திருந்து மனதை எதிர்மறை எண்ணங்களால் நிரப்பி நம்மை நாமே வெறுக்கும் அளவிற்குப் போய்விடுகிறோம்.

 

குழந்தைகளிடம் இருக்கும் அப்பாவித்தனமோ அல்லது எல்லாவற்றையும் கண்டு வியக்கும் சக்தியோ நம்மிடம் குறைந்துவிட்டதால் நாம் இப்படி உம்மணாமூஞ்சிகளாக மாறவில்லை. குழந்தைகளாக இருந்தபோது நம்மிடம் இருந்த ‘தனித்துவம்’ நம்மைவிட்டுப் போனதாலேயே நாம் இப்படி எரிச்சலும், கோபமும் நிறைந்தவர்களாக ஆகிவிட்டோம். சோபா மேலிருந்து குதிக்காதே என்றால் அடுத்த நிமிடம் குதிப்போமே. எங்கே போயிற்று அந்த துணிச்சல்? எங்கிருந்து கற்றோம் இப்படி எல்லாவற்றிற்கும் பயப்பட?

 

பெரியவர்கள் ஆனால் இப்படி இருக்கவேண்டும். அப்படி இருக்கக்கூடாது என்று நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். அவர்கள் என்ன சொல்வார்களோ, இவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று நாலு பேருக்காக வாழ ஆரம்பித்துவிட்டோம். நம்முடைய சந்தோஷங்களை வெளிப்படுத்தத் தயங்குகிறோம்.

 

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் வேண்டாம். மறப்போம், மன்னிப்போம். பகைமையை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டாம். வாழ்க்கையின் நல்ல பக்கத்தை, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வரங்களை நினைப்போம்.

 

இந்தக் குழந்தைகள் தினத்தில் நம்மை நம் இறுக்கங்களிலிருந்து தளர்த்திக் கொண்டு நம்முள் நீண்ட காலமாக உறங்கிக் கிடக்கும் அந்தக் ‘குழந்தையை’ எழுப்புவோம், வாருங்கள்!

 

 

 

 

 

அலுவலகப்பணியும் குடும்பப்பொறுப்பும்

Image result for work-life balance images

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒருகாலத்தில் சொன்னார்கள். இப்போது பெண்களின் லட்சணமும் அதுவே என்றாகிவிட்ட நிலையில் எப்படி இரண்டையும் சமாளிப்பது? இந்திராநூயிகூட பெண்களுக்குக் குற்ற உணர்வுதான் மிச்சம் என்கிறாரே! என்ன செய்யலாம்?

 

ஒரு பெண்ணோ ஆணோ அவர்களுடைய நிறுவனப்பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்று தீர்மானிப்பது எது? பணம்? அங்கீகாரம்? சுய அதிகாரம்? இவை எதுவுமே இல்லை என்கிறது சமீபத்தில் அக்சென்ஷர் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வு. அவர்கள் எப்படி தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் நிறுவனப்பணிகளை சமாளிக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் தங்கள் பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்பதை தீர்மானிக்கிறதாம்.

 

நீங்கள் தினமும் அலுவலகத்திலிருந்து தாமதமாகத் திரும்புகிறீர்களா?  இரவு நெடுநேரம் உட்கார்ந்து கொண்டு அலுவலகத்தில் முடிக்க முடியாமல் போன வேலைகளை வீட்டில் செய்கிறீர்களா? உங்கள் பணி-வாழ்க்கை சமநிலை ஆபத்தில் இருக்கிறது என்று இதற்கு அர்த்தம்.

 

உங்கள் எரிச்சல்களையும் கோபத்தையும் குழந்தைகளின் மேலும், கணவனின் மேலும் காட்டுகிறீர்களா? ஆபத்து!

 

9 லிருந்து 5 வரை மட்டுமே அலுவலகப்பணி என்று இருக்க வேண்டாம் என்றாலும் ஒவ்வொருநாள் மாலையையும் அலுவலகத்தில் கழிப்பது என்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். அலுவலகப்பணிகளை அலுவலக நேரத்தில் முடிப்பது என்பது இயலாத காரியம்.  அதேசமயம் தொழில் வாழ்க்கையில் முதலிடம் வகிப்பதும் அவசியம். எப்படி?

 

இதோ சில யோசனைகள்:

தேவை சுய அலசல்:

வாரத்திற்கு 40 மணிநேர வேலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக 60 மணி நேரமாக மாறத்தொடங்கிவிட்டது என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சுயஅலசல் தான். அலுவலகத்தில் பணிநாட்களில் உங்களது பெரும்பாலான நேரத்தை எப்படிச் செலவழிக்கிறீர்கள் என்று கவனியுங்கள். உள்பெட்டி செய்திகளுக்கு பதில் சொல்லுவதிலும், அதிகாரிகளுடனான சந்திப்புக்களிலும் நேரம் வீணாகிறதா? இவைகளின் நேரத்தை மாற்றியமையுங்கள்; அல்லது அவற்றிற்கான நேரத்தைப் பாதியாகக் குறையுங்கள்.

 

பெரிய வேலைகளை முதலில் முடியுங்கள்:

முக்கியமான, நேரம் அதிகம் செலவழிக்க வேண்டிய வேலைகளை முதலில் முடித்துவிடுங்கள். காலைவேளைகளில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதனால் பெரிய வேலைகளை முடிப்பதும் சுலபமாக இருக்கும். அதிக வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யலாம். உள்பெட்டி செய்திகளுக்கு பதில் சொல்வது, அதிகாரிகளைச் சந்திப்பது போன்றவற்றை மதியம் உணவிற்குப் பின் வைத்துக் கொள்ளுங்கள்.

 

ஒரு அட்டவணை போடுங்கள்:

இன்று என்னன்ன செய்யவேண்டும் என்பதை சிலர் தினமும் எழுதுவார்கள். ஆனால் அதில் பாதி கூட செய்துமுடித்திருக்க மாட்டார்கள். அப்படிச் செய்யாமல் இன்றைக்கு எட்டு மணிநேரம் அலுவலகத்தில் இருக்கப்போகிறீர்கள் என்றால் ஒவ்வொரு வேலைக்கும் எத்தனை மணிநேரம் செலவழிக்கப் போகிறீர்கள் என்று – இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிவரை – என்று எழுதுங்கள். எவ்வளவு நேரம் ஒதுக்கி இருக்கிறீர்களோ அத்தனை மணி நேரத்திற்குள் ஒவ்வொரு வேலையையும் முடிக்கப் பாருங்கள்.

அப்படி திட்டமிடப்பட்ட நேரத்தில், மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது, தவறவிட்ட தொலைபேசி அழைப்புகளை கூப்பிடுவது போன்று நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள். இவற்றிற்கென்று தினமும் ஒரு அரை மணிநேரம் ஒதுக்குங்கள். தொலைபேசி பேச்சுக்களை சுருக்கமாக முடியுங்கள். மின்னஞ்சல்களை விஷயத்தை மட்டும் சொல்லி முடித்து விடுங்கள்.

 

கவனச் சிதறல்களை தவிர்த்துவிடுங்கள்:

கவனத்தை சிதற அடிக்கக்கூடிய விஷயங்களைத் தவிர்த்து வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் கணனியில் அனாவசியமாக நிறைய ஜன்னல்களைத் (tabs) திறந்து வைக்காதீர்கள். குறிப்பிட்ட வேலை முடியும்வரை தொலைபேசியை பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தால் தொலைபேசியை மௌனப்படுத்தி விடுங்கள்.

 

அவ்வப்போது இடைவெளி தேவை

தொடர்ச்சியாகப் பலமணிநேரம் வேலை செய்வதைவிட அவ்வப்போது சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வேலையைத் தொடர்வது உங்கள் வேலைத்திறமையை அதிகரிக்கும். ஒரு பெரிய வேலையை முடித்தவுடன் நாற்காலியிலிருந்து எழுந்து சிறிது கை கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். சுடச்சுட காபி அல்லது வேறு ஏதாவது பானம் குடித்துவிட்டு வேலையைத் தொடருங்கள். அதற்காக தோழிகளுடன் அரட்டை அடிக்கவோ, பேஸ்புக் பார்க்கவோ ஆரம்பித்து விடாதீர்கள். இவைதான் உங்கள் நேரத்தை விழுங்கும் பகாசுரன்கள்.

 

நோ’ சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்:

 

இன்றைக்கு வேலை கழுத்துவரை இருக்கிறது என்று தெரிந்தும், நமக்குத் தெரிந்தவர்கள் என்று தயவு தாட்சண்யம் பார்த்து சில விஷயங்களை செய்து தருவதாக ஒப்புக்கொண்டு விடுவோம். முடியாது என்று சொல்லவும் தயக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையை உறுதியாக தவிர்த்து விடுங்கள். முடியாது என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக வேலை மும்முரமாக இருக்கும்போது அனாவசிய வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.

 

முன்னோக்குடன் செயல்படுங்கள்:

சின்னச்சின்ன விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, பெரிய விஷயங்களைக் கோட்டை விடாதீர்கள். இரண்டொரு நாளில் முடிக்க வேண்டிய வேலைகளை உடனடியாக முடித்துவிடுங்கள். உங்களுக்கான பணிகள் வரும்போதே உங்களுக்குத் தெரியும் எந்தவேலையை எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும், காலக்கெடு எப்போது என்று. அதற்குத் தகுந்தாற்போல உங்கள் நேர ஒதுக்கீடு இருக்கட்டும்.

 

இன்று செய்யவேண்டியவை என்று பட்டியல் போடும்போதே சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். நாம் நினைத்தபடி நடக்காது சில வேலைகள். அல்லது நீங்கள் ஒருவரே சிலவேலைகளை செய்து முடிக்க முடியாது. வேறொருவரின் உதவி தேவைப்படலாம். அவர் அவரது வேலைகளை முடித்து விட்டுத்தான் உங்களுக்கு உதவுவார் என்று தெரியும். இந்தமாதிரியான வேலைகளுக்கு அதிகநேரம் ஒதுக்குங்கள். அவருக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகும் வேலை நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். அதேபோல நீங்கள் இன்னொருவருக்கு உதவ நேரலாம். அவருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். முன்கூட்டியே இருவருமாக திட்டமிட்டால் சின்னச்சின்ன மனஅழுத்தங்களைத் தவிர்க்கலாம். அடுத்தவாரம் உங்கள் பாஸ் வருகிறார் என்றால் உங்கள் திட்டப்படி எதுவும் நடக்காது என்று தெரியும். அந்த சமயங்களில் நீங்கள் நினைத்தபடி நடக்காமல் போகலாம். அதையெல்லாம் கருத்தில் கொண்டு உங்கள் வேலை நேரங்களைத் திட்டமிடுங்கள்.

 

செய்வன திருந்தச் செய்:

ஒருவேலையைச் செய்யும்போதே கூடியவரை திருத்தமாகச்  செய்துவிடுங்கள். ஒருமுறை செய்து முடித்த வேலையை மறுமுறை  செய்யும்படி இருக்கக்கூடாது. அன்றைக்கு செய்யவேண்டிய வேலை முடிந்துவிட்டது என்றால் உடனே அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுங்கள்.

மிகமிக முக்கியமானது:

அலுவலக நேரத்தை அலுவலகப்பணிகளுக்கு மட்டுமே செலவழியுங்கள். அரட்டை அடிக்கவோ, பேஸ்புக் பார்க்கவோ உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

உங்கள் மாலை வேளைகளை குழந்தைகள், கணவன், பெற்றோர்களுடன் செலவழியுங்கள். இப்படிச் செய்வது உங்களுக்கும் நல்லது. குடும்பத்தினரும் உங்களை அனுசரித்துக் கொண்டு போவார்கள். பெரும்பாலான நாட்கள் இப்படி இருந்தால் அலுவலகத்தில் வருடாந்திர முடிவின்போது நீங்கள் தாமதமாக வந்தாலும் குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

 

வீட்டில் அமைதி நிலவினால்தான் அலவலகத்தில் உங்கள் பணி சிறக்கும்.

 

எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான். அதை நாம் எப்படிச் செலவிடுகிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

எடுத்ததை எடுத்த இடத்தில்

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88

18.9.2016 தினமலர் வாரமலரில் வெளியான எனது கதை இங்கே:

 

 

இன்னும் சிறிது நேரத்தில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்கிற நினைவே இனித்தது. இந்த முறை அம்மாவிற்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அம்மா தனியாக இருப்பது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் அது அவனுக்கும் சௌகரியமாகவே இருந்தது. ஒரே இடத்தில் மனைவியையும், அம்மாவையும் சமாளிப்பது என்பது பெரும் சவாலான வேலையாக இருந்தது. இத்தனைக்கும் இருவரும் படித்தவர்கள்; அம்மா வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவள். மருமகள் வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவள்.

 

அம்மா பர்பக்ஷனிஸ்ட். இது இது இந்தந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று பழகிவிட்டதோடு குழந்தைளையும் அந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவள். ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்’ என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை கேட்டுக்கேட்டே வளர்ந்தவர்கள் அவனும் அவன்  அக்காவும். அக்கா திருமணம் ஆகி புக்ககம் போன பின்னும் அம்மாவின் தாரக மந்திரத்தை மறக்காமல் தன் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டு விட்டாள். இவன்தான் திருமணம் ஆனவுடன் தடம் மாறிப்போனான்.

 

திருமணம் ஆன புதிதில் மனைவியிடம் அம்மாவின் இந்தக் கொள்கையைச்  சொல்லாததன் பலனை வெகு சீக்கிரமே அனுபவிக்க ஆரம்பித்தான். அவன் மனைவிக்கு எதையுமே எடுத்த இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கமே இருக்கவில்லை. அவள் எடுத்து வைக்கவில்லை என்றால் என்ன, நாமே செய்வோம் என்று ஆரம்பித்து இன்று வரை அவன்தான் எல்லா ஒழுங்குமுறைகளையும் பின்பற்றி வருகிறான். அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. தலைவாரும் சீப்பிலிருந்து எது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கிடக்கும். ஆபீஸ் போகும் அவசரத்தில் அவளது சீப்பு கிடைக்கவில்லை என்றால் இவனுடைய சீப்பை எடுத்து வாரிக்கொண்டு போய்விடுவாள். அவனுக்கொன்றும் அதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அதில் சுற்றியிருக்கும் தலைமுடியை இடத்துச் சுற்றிப் போடாமல் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவாள். கோபம் தாங்காமல் அந்த சீப்பை எடுத்து அவளது கைப்பையில் போட்டிருக்கிறான், பலமுறை. பலன் எதுவுமில்லை. அவளைத் திருத்த அவனும் முயன்று முயன்று இன்றுவரை  தோல்விதான்.

 

காலையில் எழுந்ததிலிருந்து எதையாவது தேடிக்கொண்டே இருப்பாள். தேடுவதிலேயே நேரம் ஆகிவிடும். சரி இன்று தேடுகிறோமே, கிடைத்தவுடன்  சரியான இடத்தில் வைப்போம் என்று வைப்பாளா, அதுவும் கிடையாது. தினமும் தேடலோத்சவம் தான். காலைவேளையில் இவன் வீட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்திற்கு அம்மா வைத்த பெயர். இப்படிப் பெயர் வைப்பதில் அம்மாவிற்கு நிகர் அம்மாதான். பெங்களூர் வந்த புதிதில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போவார்கள். அங்கு ஒரு எழுதுபொருள் விற்கும் கடை. அங்கு எது கேட்டாலும் அந்தக்கடைக்காரர் தேட ஆரம்பிப்பார். ஒரே தடவையில், தேடாமல் கேட்டதை எடுத்துக் கொடுத்தே கிடையாது. அவருக்கு அம்மா ‘தேடல் மன்னன்’ என்று பெயர் வைத்துவிட்டாள். தேடல் மன்னன் கடை என்றே அம்மா சொல்லிச் சொல்லி அவரது கடைப்பெயர் என்னவென்றே மறந்து போய்விட்டது!

 

திருமணம் ஆகி அவள் வந்த ஒருவாரத்திலேயே அம்மாவிற்கு அவளது ஒழுங்கின்மை புரிந்துவிட்டது. அவனுக்காகப் பேசாமல் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தாள். புது மனைவி அதிகம் சொல்லமுடியவில்லை என்ற அவனது பலவீனம் அம்மாவிற்குப் புரிய, ‘தவிட்டுப்பானை தாடாளனை சேவித்துக்கொண்டு சீர்காழியிலேயே இருக்கிறேன்’ என்று கிளம்பிவிட்டாள்.

 

அம்மா அவனது திருமணத்திற்கு முன்பும் அங்கேதான் இருந்தாள். அவன் படித்ததும் அங்குதான். சின்ன வயதிலேயே அப்பா பரமபதித்துவிட, அப்பா வேலை பார்த்துக்கொண்டிருந்த வங்கியிலேயே அம்மாவுக்கு வேலை கிடைத்தது. மேல்படிப்பிற்காக சீர்காழியை விட்டு வெளியே வந்தவன், படித்து முடித்து சில வருடங்கள் வெளிநாடும் போய்விட்டு வந்தான். திருமணத்திற்கு முன் சென்னையில் வீடு வாங்கினான். அம்மாவிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். புது வீட்டைப் பார்த்துப்பார்த்து அலங்கரித்தாள். ஷோ-கேஸ் பொம்மைகளை தினமும் மாற்றி மாற்றி வைத்தாள். வீட்டினுள் செடிகளை வைப்பது அம்மாவிற்கு மிகவும் பிடித்த விஷயம். அவைகளையும் அவ்வப்போது மாற்றுவாள். ஒவ்வொரு செடியின் அடியிலும் ஒரு அலுமினிய தட்டு வைத்திருப்பாள். செடிகளுக்கு விடும் நீர் அவற்றில் தேங்கும். தரை பாழாகாது என்பாள் அம்மா. செடிகளின் இலைகளுக்கும் நீர் தெளிப்பானால் தண்ணீர் அடிப்பாள். பச்சைபசேல் என்று வீடே ஜொலிக்கும்.

 

முக்கியமாக தளிகை உள் அம்மாவின் மனதிற்கு நெருக்கமான இடம். ஒரே மாதிரியான கண்ணாடி பாட்டில்கள் வாங்கி சாமான்களைக் கொட்டி வைத்தாள். எல்லா சாமான்களுக்குள்ளும் ஒரு எவர்சில்வர் கரண்டி. அம்மா எதையும் கையால் தொடவே மாட்டாள். சிங்கில் ஒரு பாத்திரம் கூட இருக்காது. எவர்சில்வர் சிங்க் அம்மாவின் கைவண்ணத்தில் பளபளவென்று மின்னும்.

 

அம்மா எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவனுக்கு இன்னும் நினைவிருக்கும் ஒரு விஷயம்: அவர்கள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வருடமும் பள்ளி முடிந்தவுடன் அம்மா நோட்டுப் புத்தகங்களில் மீதியிருக்கும் எழுதாத பக்கங்களை எடுத்து ஒன்றாக வைத்துத் தைத்துக் கொடுப்பாள். அம்மாவின் கைத்திறன் இதிலும் தெரியும். வேறு வேறு நோட்டுப் புத்தகங்களில் இருக்கும் தாள்களை எடுத்து ஓரங்களை ஒரே அளவில் கத்தரித்து, அதற்கு வீட்டில் இருக்கும் பழைய காலண்டர்களின் கெட்டியான தாள்களை வைத்து அட்டை மாதிரி தைத்துக் கொடுப்பாள். பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். இதை எங்கே வாங்கினாய் என்று அவர்களது வகுப்பு மாணவர்கள்  கேட்கும் அளவிற்கு அந்த நோட்டுப்புத்தகம் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அதை ரஃப் நோட் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். சிலர் எங்களுக்கும் அதைப் போலத் தைத்துக் கொடுக்கச் சொல்லு என்று கேட்பார்கள். அம்மா மறுத்துவிடுவாள்.

 

எந்த வேலையையும் அம்மா ஒத்திப்போட்டதே இல்லை. செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். இவன் மனைவி நேர்மாறு. ‘இப்படி ஒரு மாமியாருக்கு இப்படி ஒரு மாட்டுப்பெண். உன்னோட தவிட்டுப்பானை தாடாளனின் திருவுள்ளம்!’ என்று அம்மாவைக் கிண்டல் அடிப்பான். அம்மாவும் இவனைப் பார்த்து ‘பாரதியார் உனக்காகத்தான் இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறார் ‘திக்குத் தெரியாத காட்டில் – ……………… தேடித்தேடி இளைத்தே……ஏ………ஏ……னே……! ‘ என்று பாடிவிட்டு, ‘அந்த கோடிட்ட இடத்தில் ‘சீப்பு சோப்பு இன்ன பிற என்று நிரப்புக….!’  என்று சொல்லி வாய்விட்டு சிரிப்பாள்.

 

ஒவ்வொருமுறை ஊருக்கு அம்மாவைப் பார்க்க வரும்போதும் அம்மாவை தன்னுடன் வரச்சொல்லிக் கூப்பிடுவான். மறுத்துவிடுவாள்.

‘என்னால அந்த ஊழல சகிச்சுக்க முடியாதுடா!’

‘ஏம்மா! அவகிட்ட இருக்கற நல்லத பார்க்கமாட்டியா?’

வாயைத் திறக்கமாட்டாள் அம்மா.

பிறகு ஒருநாளில் சொன்னாள்: ‘அடிப்படை சுத்தம் வேண்டாமா? நான் ஒன்றும் மடி ஆசாரம் என்று சொல்லிக்கொண்டு இதைத்தொடாதே, அதைத் தொடாதேன்னு சொல்றதில்லை. வீட்டுக்குள்ள நுழைஞ்சா எங்க பார்த்தாலும் சாமான்கள்! அததற்கு என்று இடம் இருக்கிறது இல்லையா? துப்பட்டாவை ப்ரிட்ஜ் மேல போடுவாளா? ஆபீஸ்ல சாப்பிட்ட டிபன் பாக்ஸ் ஒரு அலம்பு அலம்பி எடுத்துண்டு வரக்கூடாதா? வரக் வரக்குனு காஞ்சு போயி…… அப்படியே வெளி சிங்க்ல போடறா! என்னால பாக்க முடியலடா! வேற எந்த விஷயத்துலயும் அவ மேல எனக்குக் கோவம் இல்லை. புரிஞ்சுக்கோ!’

 

‘ஆபீஸ் போறவம்மா….!’ அம்மா பளிச்சுன்னு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள். கோவம் இல்லை அந்தக் கண்களில். அடிபட்ட உணர்வு. ‘நானும் ஆபீஸ் போனவதாண்டா! உங்க அப்பா போகும்போது நீங்க ரெண்டுபேரும் பள்ளிக்கூடம் போற குழந்தைகள். உங்களையும் பார்த்துண்டு, வீட்டையும் கவனிச்சுண்டு, ஆபீஸுக்கும் போயிண்டு இருந்தேன். இத்தனைக்கும் வீட்டுல வேலை செய்ய ஆள் கூட இல்லை….! என்னிக்காவது அழுக்கான ட்ரெஸ் போட்டுண்டு போயிருக்கேளா? தோய்க்காத சாக்ஸ்? பெருக்காம, தண்ணி தெளிக்காம, வாசலுக்குக் கோலம் போடாம இருந்ததுண்டா? இங்க கைக்கு ஒரு ஆள், காலுக்கு ஒரு ஆள்…!’

 

‘அம்மா…! இது வீடா? இல்லை மியூசியமாம்மா? எல்லாம் அததோட இடத்துல இருக்கணும்னா?’ என்று ஜோக் அடித்து அம்மாவின் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பான்.

 

ஒவ்வொருமுறை இவன் ஊருக்கு வரும் போதும் அம்மாவின் மனதை மாற்ற ஆனவரை முயலுவான்.

 

‘நான் உனக்கு முக்கியமில்லையா?’ என்று கூட கேட்டுவிட்டான். ‘நீ எனக்கு முக்கியம். கூடவே வீடு ஒழுங்கா இருக்கறது இன்னும் முக்கியம்!’

 

அவனுக்கு குழந்தை பிறந்தவுடன் அம்மா குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக வந்தாள். குழந்தைக்கு என்று தனது காட்டன் புடவைகளை நான்காக மடித்து ஓரங்கள் தைத்துக் கொண்டு வந்திருந்தாள். குழந்தைக்கு கீழே போட்டிருந்த பிளாஸ்டிக் ஷீட்டை எடுத்துவிட்டு தன் புடவைகளைப் போட்டாள். ‘இந்த காலத்துல யாரு மாமி இப்படித் துணி போட்டு குழந்தையை விடறா?’ என்று கேட்ட சம்பந்தி மாமியை அம்மா கண்டுகொள்ளவே இல்லை. வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு டயபர் கட்டக்கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னாள். கொஞ்சநாட்கள் தான் அம்மாவின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது. குழந்தைத் துணிகள் வீடு முழுவதும் இறைந்து கிடக்க ஆரம்பித்தன. சகிக்க முடியாமல் அம்மா சீர்காழிக்குத் திரும்பினாள்.

 

குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. அவனால் முன் போல அதிகம் ஊருக்குப் போகமுடியவில்லை. அம்மா ஒன்று இரண்டில் வந்த போய்க்கொண்டிருந்தாள். குழந்தையின் சாமான்கள் இப்போது வீடு முழுவதும்! குழந்தை விளையாடுகிறதோ, இல்லையோ, காலையில் அதனுடைய விளையாட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு வந்து ஹாலில் கொட்டிவிடுவாள் இவன் மனைவி. அம்மா வரும்போது குழந்தையின் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டுப் போவாள்.

 

ஒரு விஷயம் இவனுக்கு அம்மாவிடம் பிடித்தது – மாட்டுப்பெண்ணிடம் சகஜமாகவே இருந்தாள். தன்னால் முடிந்தவரை அவளுக்கு உதவினாள். அவள் செய்யும் தளிகையைப் பாராட்டினாள். முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்தாள்.

 

‘ஏம்மா! நீயே அவளிடம் சொல்லேன், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள் என்று. உன்னோட தாரக மந்திரத்தையும் சொல்லிக்கொடேன்…!’ என்று சீண்டினான். அம்மா சொன்னாள் : ‘சுத்தம், ஒழுங்கெல்லாம் பிறவியிலேயே வரணும்டா! சொல்லி வராது. அட்லீஸ்ட் என்னைப் பார்த்தாவது கத்துக்கலாம்….!’ அதைக்கூட அவளிடம் சொல்லமாட்டாள். இவனிடம் தான் சொல்லி வருத்தப்படுவாள்.

 

நினைவுகளில் பயணித்துக் கொண்டிருந்தவன் ‘சீர்காழி, சீர்காழி’ என்ற கூவல் கேட்டுக் கண் விழித்தான். பேருந்திலிருந்து இறங்கி குழந்தையையும் அழைத்துக் கொண்டு  நடந்தான். அம்மா இவனுக்காகக் காத்திருந்தாள். குழந்தை ‘பாட்டீ…..! என்று ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக்கொண்டது. ‘அட என் பட்டுகுட்டி! நீயும் வந்திருக்கியா?’ என்று ஓடிவந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அணைத்து முத்தமிட்டாள். குழந்தை பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ‘நீயும் எங்களோட ஊருக்கு வந்துடு பாட்டி!’ என்றது.

 

இவனும் பின்னாலேயே வந்து வீட்டுக்கூடத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தான். குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு, அம்மா இவனுக்கு சுடச்சுட காப்பி கொண்டுவந்தாள். ‘இந்தா, முதலில் இதைச் சாப்பிடு! சாப்பாடும் ரெடி’ என்றாள்.

 

‘கோந்தைக்கு என்ன கொடுக்கட்டும்?’ என்று கேட்டவாறே குழந்தைக்காகத் தான் வாங்கிவைத்திருந்த புது விளையாட்டு சாமான்களை குழந்தையிடம் கொடுத்தாள். குழந்தை சந்தோஷமாக விளையாட ஆரம்பித்தது.

 

அவன் உட்கார்ந்த இடத்திலேயே செருப்பைக் கழற்றிவிட்டு, ‘இரும்மா! கைகால் அலம்பிக்கொண்டு வருகிறேன்’ என்று எழுந்தான். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இவனைத் திரும்பிப் பார்த்து சொல்லிற்று:

 

‘செருப்பை செருப்பு அலமாரில விடுப்பா! அத அத அந்தந்த இடத்தில வைக்கணும்!’

 

அம்மாவும் அவனும் அதிர்ந்து போனார்கள். அதிர்ச்சியிலிருந்து முதலில் விடுபட்டது அம்மாதான். ‘எனக்கு வாரிசு வந்துட்டா! இந்த தடவை உன்னோட ஊருக்கு வரேண்டா!’ என்றபடியே குழந்தையை இறுக்கிக்கட்டிக்கொண்டாள் அம்மா.

 

அவனும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்!

 

 

 

திருப்பாவை பிறந்த கதை

 

திரேதாயுகத்திலே மிதிலை ராஜன் ஜனகனுக்கு உழுபடைச்சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமான ஒருமகள் தோன்றினாள். அந்தக் குழந்தைக்கு அவ்வரசன் ‘சீதை’ என்று பெயரிட்டு தன் புத்திரியாக பாவித்து வளர்த்து வந்தான். அதேபோல கலியுகத்திலே பாண்டிய நாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூரிலே பெரியாழ்வார் தனது திருநந்தவனத்திலே திருத்துழாய் பாத்தியமைக்க களைக்கொட்டு கொண்டு கொத்துகையில், அக்கொத்தின நிலத்தில் ஸ்ரீதேவி, பூதேவிகளின் அம்சமான ஒரு மகள் தோன்றுகிறாள். திருவாடிப் பூரத்தில் உதித்த அந்தக் குழந்தைக்கு கோதை என்று திருநாமமிட்டு வளர்த்து வருகிறார் விஷ்ணுவை தன் சித்தத்திலே கொண்ட பெரியாழ்வார்.

 

சிறுவயதிலேயே கண்ணனின் பக்கத்திலே தீராத பக்திப் பெருவேட்கையுடனே அவனது கதைகளை தனது திருத்தகப்பனார் செந்தமிழில் பாடும் பாசுரங்கள் வழியே கேட்டு இன்புற்ற கோதை அவனையே மணாளனாகப் பெறவேண்டும் என்ற ஆசையுடனே வளர்ந்து வந்தாள். தனது திருத்தகப்பனார் வடபெருங்கோவிலுடையானுக்கு சாற்ற வேண்டுமென கட்டி வைத்திருக்கும் பூமாலைகளை அவரில்லாத சமயத்திலேயே சூட்டிக் கொண்டு, சிறந்த ஆடை, ஆபரணங்களையும் அணிந்து கொண்டு கண்ணாடியிலே ‘அந்தப் பெருமாளுக்கு நான் நேரொத்தவளா?’ என்று அழகு பார்த்துவிட்டு, தந்தை வருவதற்கு முன் அவற்றைக் களைந்து பூங்கூடையினுள்ளே வைத்துவிடுவாள். யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் நடக்கும் இதை அறியாத பெரியாழ்வார் அம்மாலைகளைப் பெருமாளுக்கு சாத்திவர, பெருமாளும் பரம ப்ரீத்தியுடனே அம்மாலைகளை ஏற்றான்.

 

ஒருநாள் ஆழ்வார் சீக்கிரம் திரும்பி வர, பெருமாளுக்கென்று வைக்கப்பட்டிருந்த மாலைகளை தனது மகள் சூடியிருக்கக் கண்டு வெகுவாக துக்கித்து, இனி இப்படி செய்ய வேண்டாம் என்று மகளுக்கு அறிவுரை சொல்லிவிட்டு பெருமாளின் கைங்கரியம் தடைபட்டுப் போனதே என்று வருந்தி இருந்தார். அன்றிரவு ஆழ்வாரின் கனவிலே வந்த வடபத்ரசாயி, ‘ஆழ்வீர்! இன்று மாலைகளைக் கொண்டு வராதது ஏன்?’ என்று வினவ, ஆழ்வாரும் தன் மகள் பெருமாளுக்கென்று வைத்திருந்த மாலைகளை தெரியாமல் சூடிக் கொண்டதைச் சொல்ல, ஆலிலைத் துயில்பவன், ‘கோதை சூடிக் களைந்த மாலையே எமக்கு மிகவுகப்பு. இனி அவள் சூடிக் களைந்த மாலைகளையே நமக்குக் கொண்டுவருவீராக’ என்று பணித்தான்.

 

மிகவும் மனமகிழ்வுற்ற ஆழ்வார் தன் மகள் மலர்மங்கை என்றே எண்ணி அவள் மீது அளவற்ற அன்பு கொண்டு பேணி வந்தார்.  இவள் வேறு யாருமல்ல அனைத்து உலகையும் ஆண்டு வரும் அந்த இலக்குமியே இப்படி ஒரு அவதாரம் எடுத்திருக்கிறாள் என்று உணர்ந்து கோதைக்கு ‘ஆண்டாள்’ என்றும், பெருமாளுக்கு உகந்த மாலைகளைத் தான் சூடிப் பார்த்து கொடுத்த காரணத்தால் ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்றும் திருப்பெயர்களை இட்டு அழைத்து வந்தார்.

 

வயது ஏற ஏற, பருவத்திற்குத் தகுந்தாற்போல கோதையின் ஞானபக்திகளும் வளர்ந்து வர, கடல்வண்ணனையே தன் காதலனாகக் கருதி அவன் விஷயமாக பெருவேட்கை கொண்டு அவனை அடைய வேண்டுமென்ற அவா மீதூற ஆயர் குலப்பெண்கள் போலே தானும் நோன்பு நோற்று அந்த நினைவிலேயே உயிர் வாழ்பவளாய் திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற திவ்யப்பிரபந்தங்களை இயற்றி தன் எண்ணங்களை பகவானிடத்தில் விண்ணப்பம் செய்து வாழ்ந்து வந்தாள்.

 

தன் திருமகள் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்த பெரியாழ்வார் அவளுக்கு கொழுநன் ஆக வரக்கூடியவன் யாரென்று யோசிக்கலானார். சரியாக யாரும் அமையாமையால், கோதையிடமே ‘நீ யாருக்கு வாழ்க்கைப் பட விரும்புகிறாய்?’ என்று வினவ, அவளும், ‘மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன். பெருமாளுக்கே உரியவளாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறுகிறாள். இவள் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் வடபெரும் கோயிலுடையானை விரும்பிச் சென்றாள். அவனோ இவளைக் கண் திறந்து பார்க்கவில்லை; புன்சிரிப்புக் காட்டவில்லை; வாவென்றழைக்கவில்லை. இதனால் மனம் மிகவும் வருந்தி இவனுடன் கலந்து பழகியவர்கள், வாழ்ந்தவர்கள் உண்டோ என்று ஆராயும்போது, திருவாய்ப்பாடியிலே இவன் கண்ணனாக வந்து அவதரித்த காலத்திலேஆய்ப்பாடிப் பெண்கள் நோன்பு நோற்று இவனை அடைந்தார்கள் என்று கேள்விப்படுகிறாள்.

 

‘ஆனால் அவன் நடமாடிய பிருந்தாவனம், அவனும் ஆய்ப்பாடிச் சிறுமிகளும் நீர் விளையாட்டு செய்து மகிழ்ந்த யமுனை ஆறு, அவன் கல்லெடுத்துக் கல்மாரி காத்த கோவர்த்தனம் இவையெல்லாம் நெடுந் தூரமாயிருக்கிறபடியாலே என் செய்வது’ என்று வருந்தி யோசித்தாள். கிருஷ்ணாவதாரத்திலே நடந்த ராசக்ரீடையின் போது கிருஷ்ணன் மறைந்து போக அவனது பிரிவை ஆற்றாத கோபிகைகள் தங்களையே கண்ணனாக பாவித்து அவன் செய்த செயல்களை அநுகாரம் (பிறர் செய்வது போல செய்தல்) செய்து உயிர் தரித்தார்கள் என்ற செய்தி நினைவிற்கு வர, அதேபோல தானும் செய்யலாம் என்று முடிவு செய்தாள். கோபிகைகள் கிருஷ்ணனை அனுகரித்தார்கள். ஆண்டாள் கோபிகைகளை அநுகாரம்  செய்யத் தலைப்பட்டாள். கண்ணனை அடைய அவர்கள் நோற்ற நோன்பையே தானும் நோற்றாள். அதுவே திருப்பாவையாக உருவெடுத்தது.

 

ஆயர்பாடியில் கண்ணன் பிறந்து வளர்ந்துகொண்டிருக்கும் போது அவன் வயதொத்த இளம் பெண்கள் அவனது அழகிலும், குணங்களிலும், அதிமாநுஷ செயல்களிலும் மனதைப் பறிகொடுத்து அவனால் கவரப்பட்டனர். இதைக் கண்ட இடையர்கள் பெண்களைப் பிரித்து சிறையிட்டார்கள். இதன் காரணமாக மழை வராமல் போயிற்று. கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் நோன்பு நோற்றால் பசுக்களும், நாமும் நன்றாக இருப்போம்; நாடும் செழிக்கும் என்றறிந்த இடையர்கள் பெண்களைக் கூப்பிட்டு நோன்பு நோற்கச் செய்தனர். ஆனால் அவர்களுக்கு நோன்பு பற்றிய அறிவு இல்லாததால், கண்ணனையே கூப்பிட்டு நோன்பு நோற்கும் வழியை சொல்லித் தருமாறு அழைத்துப் பிரார்த்தித்தனர். கண்ணனும் சம்மதிக்க, பெண்களை கண்ணனிடம் ஒப்படைத்து நோன்பு நோற்கச் செய்தனர். பெண்களும் அதிக சந்தோஷத்தை அடைந்து தங்கள் தோழிகளை எழ்ப்பி, நப்பின்னையை எழுப்பி அவளை முன்னிட்டுக் கொண்டு நோன்பு நோற்று நோன்பின் பலனாக கண்ணனை அடைந்தனர்.

கோபிகைகள் கிருஷ்ணன் செய்தது போன்ற செயல்களைச் செய்தார்கள் அதாவது காயிகம் – காரியம் செய்தல். ஆண்டாள் செய்ததோ மானசீகம். கோபிகைகளைப் போல செயல் செய்யாமல் மனத்தால் பாவித்தல். கிருஷ்ணனைப் பிரிந்து வருந்திய ஆயர் சிறுமியரில் தன்னையும் ஒருத்தியாக பாவித்தாள். அந்த பாவனையில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடி ஆயிற்று. வடபெருங்கோயில் நந்தகோபனின் திருமாளிகை ஆயிற்று. வடபத்ரசாயி கண்ணன் ஆனான். தன் தோழிப்பெண்களை ஆயர்பாடிச் சிறுமிகளாக வைத்துக்கொண்டு கண்ணனை அடைய நோன்பு நோற்றாள். அவர்கள் மட்டுமல்ல; நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை, கோயில் காப்பான், வாசல் காப்பான் எல்லோரும் கோதையின் கற்பனையில் உதித்தனர். இந்த பாவனை மனதில் தோன்றிய பின்பே அவளுக்கு நிம்மதி உண்டாயிற்று. இந்த பாவனை முதிர முதிர தான் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை என்பதை மறந்தாள். இடைப் பேச்சும், இடை நடையும் உண்டாக இடைச்சியாகவே மாறினாள். இவளது திருமேனியில் கூட இயற்கையான வாசனை மறைந்து முடைநாற்றம் (இடைச்சிகள் எப்போதும் பால், தயிர், வெண்ணெய் இவற்றுடனேயே காலம் கழிப்பதால் அவர்களிடமிருந்து வரும் இந்த வாசனைகளை முடைநாற்றம் என்பார்கள்) ஏற்பட்டதாம்!

 

இனி திருப்பாவையின் தனியன் ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

 

 

 

.

 

செல்வ களஞ்சியமே 100

twins 1

சமீபத்தில் புனே சென்றிருந்தபோது உறவினர் வீட்டில் ஒரு இரண்டு வயது, இல்லை இன்னும் கொஞ்சம் பெரியதாகவோ ஒரு  குழந்தை. ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் அது படுத்திய பாடு! பாவம் அந்தக் குழந்தையின் பின்னால் ஆறு பேர்கள்! குழந்தையின் அப்பா, அம்மா, அம்மாவின் அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா அப்பா! ‘சாப்பிடு! சாப்பிடு!’ என்று சாப்பாட்டு வேளையை வியர்த்து வழிய வழிய ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடவே மாட்டேனென்கிறான்’ என்று எல்லோரிடமும் தாத்தா பாட்டிகள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

‘அப்பளாம், அப்பளாம்’ என்றால் வாயைத் திறக்கும். அப்பளத்தை குழந்தையின் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு கீழே சாதத்தை மறைத்து ஊட்டுவாள் அந்தப் பெண். இரண்டு முறை அப்படி சாப்பிட்ட அந்தக் குழந்தை மூன்றாவது முறை உஷாராகிவிட்டது. சாப்பிட மறுத்துவிட்டது. இப்போது அதற்கு வேறு ஏதாவது காண்பிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை பெரிய மனஅழுத்தம் கொடுக்கும் விஷயமாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது. அந்த பெண் வேலைக்குப் போகிறவள். அவளுக்கு அலுவலக நாட்களில் சீக்கிரம் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அதை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டுப் போகவேண்டிய கட்டாயம். இப்போது லீவு தானே நிதானமாக வேலைகளைச் செய்யலாம் என்றால் குழந்தையின் சாப்பாட்டு வேளை நாள் முழுவதும் அவளை உட்காரவிடாமல் செய்கிறது, என்ன செய்ய? இந்தச் சின்னக் குழந்தையை கையாள பெரியவர்களால் முடியவில்லையா?

 

baby creeping

தட்டு நிறைய சாதத்தை வைத்துக்கொண்டு குழந்தையின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அவளைக் கூப்பிட்டேன். ‘இதோ பாரும்மா! முதலில் நீ இத்தனை சாதத்தைக் கொண்டு வராதே. நாலே நாலு ஸ்பூன் கொண்டுவா. குழந்தை அதை சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் நாலு ஸ்பூன் கொண்டுவா. முதல் நாலு ஸ்பூன் குழந்தையின் வயிற்றினுள் போனாலே உனக்கு சந்தோஷமாக இருக்கும். நீ கொண்டு வந்ததை குழந்தை சாப்பிட்டுவிட்டது என்று சந்தோஷம் கிடைக்கும். நீ இத்தனை சாதத்தை ஒரேயடியாகக் கொண்டு வந்தால் குழந்தையின் வயிற்றில் எத்தனை போயிற்று என்று தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தைப் பார்த்து குழந்தை சாப்பிடாததுபோல உனக்குத் தோன்றும்’ என்றேன். நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு ரசிக்கவில்லை. ‘எத்தனை முறை மாமி திரும்பத் திரும்ப சாதம் கலப்பது?’ என்று அலுத்துக் கொண்டாள். அவள் அம்மாவிற்கு நான் சொன்னது ரொம்பவும் பிடித்துவிட்டது. ‘சாப்பிடலை சாப்பிடலை என்று நொந்து கொள்வதைவிட நாலு ஸ்பூன் உள்ள போச்சே என்று சந்தோஷப்படலாம் அது அவளுக்குப் புரியவில்லை, பாருங்கோ’ என்றார் என்னிடம்.

 

‘ரயில் பயணங்கள்’ பாதியில் நிற்கிறது; ஸ்ரீரங்கத்து வீட்டுப் புழக்கடையில் நின்று கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போ என்ன குழந்தைக்கு சாதம் ஊட்டுவது பற்றி பேச்சு?

 

நான் நான்குபெண்கள் தளத்தில் எழுதிவந்த செல்வ களஞ்சியமே நூறாவது வாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது.  என்னை குழந்தைகள் வளர்ப்புப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்புப் பற்றி என்று ரொம்பவும் யோசித்தேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என்றவுடன் உற்சாகமாக ஆரம்பித்தேன். என்னுடன் கூட டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் சேர்ந்து கொண்டார். படிக்கும் செய்திகள், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்.

 

சமீபத்தில் ஒரு வாசகி இந்தத் தொடர் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். திருமதி ஆதி வெங்கட் ஸ்ரீரங்கத்தில் பார்த்த போது அதையே சொன்னார். முதல் வேலையாக மின்னூல் ஆக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டு பாகமாக வரும். இந்தத் தொடரைப் படித்து பயனுள்ள கருத்துரைகள் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

 

எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நான் எழுதுவதை அப்படியே பிரசுரம் செய்த நான்குபெண்கள் ஆசிரியை திருமதி மு.வி. நந்தினிக்கு சொல்லில் அடங்காத நன்றி. நடுவில் என்னால் எழுத முடியாமல் போனபோது மிகுந்த பொறுமையுடன் நான் திரும்பி வரக் காத்திருந்தது மிகப்பெரிய விஷயம்.

உடல் நலக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ அடுத்த இதழிலிருந்து தொடரும்.

எனது இந்த சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்து கொள்ள முடியும்? இந்தக் கட்டுரையைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்களது தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.

 

இன்னொரு சந்தோஷச் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதீதம் இணைய இதழில் எனது தொடர் ‘எமக்குத் தொழில் அசைபோடுதல்’ நாளையிலிருந்து ஆரம்பமாகிறது. எல்லோரும் படித்து இன்புற்று கருத்துரை இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

விளக்கெண்ணெய் க்ளைமாக்ஸ்!

patti

 

எங்கள் ஸ்ரீரங்கம்மாள் பாட்டி

க்ளைமாக்ஸ் அன்னிக்கு காலையில் எழுந்திருக்கும்போதே நாங்கள் எல்லோரும் பலியாடு மாதிரி முகத்தில் சுரத்தே இல்லாமல் இருப்போம். (பின்னணியில் சோக வயலின் சத்தம் கேட்கிறதா?) பல் தேய்த்துவிட்டு வந்தவுடன் காபியில் விளக்கெண்ணெய் விட்டுக் கொடுத்து விடுவாள் பாட்டி. அதற்குப் பிறகு அன்றைக்கு மென்யூ வெறும் பருப்புத் துவையலும், சீராம் மொளகு ரசமும் தான். வேறு ஒன்றும் கிடைக்காது. இதையெல்லாம் விட இப்போது நினைத்தாலும் சுவாரஸ்யம் என் சகோதரன் செய்யும் ரகளை. எப்போதுமே அவன் கொஞ்சம் வாலு தான். அவனை ரங்கவிலாசம் அழைத்துக்கொண்டு போய்விட்டால் போச்சு! பார்க்கும் சாமானையெல்லாம் வாங்கிக்கொடு என்று அழ ஆரம்பிப்பான். வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் அவ்வளவுதான்! அங்கேயே தரையில் கீழே விழந்து பிரண்டு அழுதுத் தள்ளிவிடுவான். பார்க்கிறவர்கள் இவன் அழும் அழுகை தாங்காமல்,  ‘பாவம், குழந்தை, கேட்டதை வாங்கிக் கொடேன். என்னத்துக்கு இப்படி அழ விடற?’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். என் பெரியம்மா சொல்வாள்: ‘இவன அழைச்சிண்டு போனா ரொம்ப தொல்லை. பார்க்கறதெல்லாம் வாங்கிக்குடு வாங்கிக்குடுன்னு  உசிர வாங்குவான்.  இல்லன்னா உருண்டு பிரண்டு அழுகை. பார்க்கறவா நான் ஏதோ குழந்தைய  கொடுமை பண்ணிட்டேன் போல ஏம்மா குழந்தையை இப்பிடி அழ விடறேன்னு கேட்டுட்டுப் போறா. அதே இந்த ரஜினியை (நான்தான்!) பாரு. தேமேன்னு கையை பிடிச்சுண்டு எல்லாத்தையும் கண் கொட்டாமல் பார்த்துண்டு வரது. வாய தொறந்து இது வேணும், அது வேணும்னு கேட்டதே கிடையாது!’ அப்பவே நான் ரொம்ப நல்ல பொண்ணு!

 

சரி. இப்போ மறுபடியும், விளக்கெண்ணெய் படலத்திற்கு வருவோம். என் சகோதரன் காலையில் எழுந்திருக்கும்போதே ‘ஓ! என்ற அலறலுடன் தான் அன்று எழுந்திருப்பான். நாங்கள் எல்லோரும் எழுந்துவிட்ட பின்னாலும், தூங்குவது போல பாசாங்கு செய்வான். என் மாமாக்களில் யாராவது ஒருவர் அவனை குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் புழக்கடையில் நிறுத்தி, ‘பல்லை தேய்!’ என்று ஒரு மிரட்டல் போடுவார்கள். அவன் வீறிட்டுக் கொண்டு அவர்கள் பிடியிலிருந்து திமிறி  ‘முடியாது!’ என்று சொல்லிக்கொண்டு திண்ணைக்கு ஓடி வருவான் மறுபடி தூங்க! மாமாக்களிடம் அதெல்லாம் நடக்காது. ஒருவழியாக அழுதுகொண்டே பல்லைத் தேய்ப்பான் – தேய்ப்பான், தேய்ப்பான், தேய்ப்பான் ரொம்ப நேரம் தேய்த்துக்கொண்டே இருப்பான். ‘ம்ம்ம்! சீக்கிரம்’ என்று மாமா அவனை மிரட்டிக்கொண்டே இருப்பார்.

 

இந்தக் களேபரம் புழக்கடையில் நடந்து கொண்டிருக்கும்போதே நாங்கள் ஒவ்வொருவராக தளிகை உள்ளில்  உட்கார்ந்து கொண்டிருக்கும் பாட்டியினிடம் போவோம். பாட்டிக்கு ஒரு பக்கத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் காப்பி – சாப்பிடும் சூட்டில் இருக்கும். இன்னொரு பக்கத்தில் விளக்கெண்ணெய் பாட்டில் இருக்கும். பாட்டி காப்பியை ஒரு டம்ப்ளரில் கொட்டி அதில் இரண்டு ஸ்பூன் வி.எண்ணையை விட்டுக் கலக்கிக் கொடுப்பாள்.  பாட்டிலைப் பார்க்கும்போதே எங்களில் ஒருவருக்கு ‘உவ்வே….!’ என்று குமட்டும். ‘யாரது, அது?’என்று அதட்டுப் போடுவாள் பாட்டி. முதல் நாளே நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுவோம். யாரு பெரியவாளோ அவா முதலில் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். அப்புறம் அவர்களை விட சிறியவர்கள் என்று. இல்லையில்லை சின்னவர்கள்  முதலில்  சாப்பிடவேண்டும்  என்று போட்டியும் வரும்.

 

நான் இந்தப் போட்டிக்கெல்லாம் வரவே மாட்டேன். கிடுகிடுன்னு போயி பாட்டி குடுக்கறத வாங்கி வாயில குத்திண்டு வந்துடுவேன் சமத்தா! சில வருடங்கள் எல்லோரையும் போல காப்பில விளக்கெண்ணெய் விட்டு சாப்பிட்டு வந்தேன். அப்புறம் சே! ஏன் காப்பியையும் கெடுக்கணும், வி. எண்ணைய் சேர்த்து என்று ஒரு ஞானோதயம் பிறந்தது. அதனால முதல்ல வி.எண்ணையை வாங்கி ஒரே மடக்கு. குரங்கை நினைக்காமல் குடித்துவிடுவேன். பிறகு காப்பியை என்ஜாய்! எல்லோருக்கும் என்னைப் பார்த்து அதிசயம். ‘எப்படி நீ ஜாலியாக வி.எண்ணையை வாங்கிக் குடிக்கிறாய்? குமட்டலையா?’ என்று நேர்முகப் பேட்டி எல்லாம் எடுப்பார்கள்.’காப்பில கலந்தாலே எங்களால குடிக்கமுடியலையே! உன்னால எப்படி அப்படியே குடிக்க முடியறது?’ ன்னு  அதிசயப் பிறவி மாதிரி என்னைப் பார்ப்பார்கள். நான் என்னோட லாஜிக்கை சொல்வேன்: ‘வி.எண்ணைய் குடிக்கறது கஷ்டம் தான். அதை காப்பில போட்டு காப்பியையும் ஏன் கெடுக்கணும்? அப்புறம் ஏன் அதைக் கஷ்டப்பட்டு குடிக்கணும்? இரண்டுமே கஷ்டமா இருக்கறத விட, வி.எண்ணையை தனியா கஷ்டப்பட்டு குடிச்சுட்டு, காப்பியை ரசிச்சு குடிக்கலாமே!’

 

‘இதுக்கு இருக்கற சாமர்த்தியத்தைப் பாரேன்’ என்று எல்லோரும் சொன்னாலும் யாருமே என்னை மாதிரி ரிஸ்க் எடுக்க விரும்பல. வி.எண்ணையை காப்பில கலந்து காப்பியையும் கெடுத்து, காப்பியை ‘கொழ கொழ’ன்னு சாப்பிடவே செய்தார்கள். நான் மட்டும் என் தனி வழில குடித்துக் கொண்டிருந்தேன். எங்களில் சிலர் வி.எண்ணையைக் குடிக்க பயந்து தாங்களாகவே பாட்டியிடம் போய், ‘பாட்டி நீயே மூக்கை பிடித்து என் வாயில வி.எண்ணைய் கலந்த காப்பியை கொட்டிட்டு’ என்று பாட்டியிடம் ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய’ என்று தஞ்சம் புகுந்து விடுவார்கள்!

 

இவ்வளவும் இங்கே நடந்துகொண்டிருக்கும் போது இந்தக் கதையின் நாயகன் மாமாக்களின் பிடியில்    “எனக்கு வேண்டாம்….நான் சாப்பிட மாட்டேன்…!’ என்று அலறிக்கொண்டே  வருவான். அப்போதுதான் தளிகை உள் களைகட்டும். பாட்டி சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் பயன்படுத்துவாள். ‘சமத்து நீ! தங்கக்கட்டி நீ! வாடா ராஜா!’ என்று கொஞ்சலில் ஆரம்பிப்பாள். ‘நான் சமத்து இல்ல. தங்கக்கட்டி இல்ல. நான் வரமாட்டேன் போ!’ என்று தொண்டை கிழிய கத்துவான் நாயகன். ‘இந்த ஒரு தடவ தான். அடுத்த வருஷத்துலேருந்து வேண்டவே வேண்டாம், சரியா? நீ சமத்தா என் மடில படுத்துப்பாயாம்; நான் வாயில காப்பியை கொட்டுவேன். நீ டக்குன்னு முழுங்கிடுவயாம். வா! வா!’ என்று அடுத்த அஸ்த்திரத்தை விடுவாள். நாங்கள் எல்லாம் குசுகுசுவெனப் பேச ஆரம்பிப்போம். ‘களுக்’ என்று சிரிப்பும் வரும் எங்களுக்கு. பாட்டி எங்களைக் கோபமாகப் பார்த்து பேதத்தில் இறங்குவாள்.  ‘எல்லோரும் அவாவா வேலையைப் பார்த்துண்டு போங்கோ! இங்க என்ன கூட்டம்? இங்க என்ன வேடிக்கையா நடக்கிறது?’ என்று எங்களையெல்லாம் விரட்டுவாள் பாட்டி. நாங்க இந்த வேடிக்கையைப் பார்க்கத்தானே இத்தனை நேரம் காத்திருந்தோம்? அதனால கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொள்வோம்.

 

‘வாடண்ணா! நீ எத்தனை சமத்து! ஓட்டை கூடல ஒன்றரை கூடை சமத்து!’ என்று நைச்சியானுசந்தானம் ஆரம்பிக்கும். ‘ஓட்டை கூடைன்னா எனக்குத் தெரியும். அதுல ஒண்ணும் நிக்காது! நான் சமத்து இல்ல…நீ பொய் சொல்ற….நான் வரமாட்டேன் போ…!’ என்று நாயகன் ஓட எத்தனிக்க, இனி பொறுக்க முடியாது என்று என் மாமாக்கள் இருவர் அவனைக் கட்டிப் பிடித்து பாட்டியிடம் கொண்டு வருவார்கள். அவர்களிருவரையும் கால்களாலும் கைகளாலும் அடித்து, உதைத்து ஒருவழி செய்துவிடுவான் நாயகன். ‘எமப்பய….! போன ஜென்மத்துல கழுதையாப் பொறந்துருப்பான்…!’ என்று என் மாமா ஒருவர் அவனிடம்  உதை வாங்கும் சமயத்திலும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று ஜோக் அடிப்பார்.

 

இப்போது பாட்டியும் வைய ஆரம்பித்து விடுவாள். கடைசி வழி தண்டம் ஆயிற்றே! பாட்டியின் மடியில் அவனைப் படுக்க வைத்து, இரண்டு பேர்கள்  கையைக் காலைப் பிடித்துக் கொள்ள, பாட்டி அவன் மூக்கை இறுக்கப் பிடித்து ‘ஆ…..!’ என அவன் அலறும்போது வி.எண்ணைய் கலந்த காப்பியை அவன் வாயில் கொட்டுவாள். அப்பாடா என்றிருக்கும் எங்களுக்கு! ஆனால் அத்துடன் முடியாது அந்த நிகழ்வு. வாயில் இருப்பதை முழுங்காமல் தொண்டையில் வைத்துக் கொண்டு ‘களகள’ என சத்தம் செய்வான். எங்களுக்கு சிரிப்புத் தாங்காது. நாங்கள் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிடுவோம். இறுக்கமான சூழ்நிலை அப்படியே மாறிவிடும். நாங்கள் சிரிப்பதைப் பார்த்து பாட்டி சிரிக்க, மாமாக்கள் அந்த சிரிப்பில் கலந்து கொள்ள, நாயகன் கம்பீரமாகப் பாட்டியின் மடியிலிருந்து எழுந்து கொள்வான். திடீரென நினைவு வந்தாற்போல பாட்டி ‘டேய்! விளக்கெண்ணெய் என்னாச்சுடா?’ என்று பதறிப் போய் கேட்பாள். ‘முழுங்கிட்டேன்!’ என்று சொல்லிவிட்டு நாயகன் சிட்டாகப் பறந்துவிடுவான்!

சம்மர் கேம்ப் தேவையா?

 

 

செல்வ களஞ்சியமே 66

 

எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது அவனும் யோகாசனம் கற்க வருகிறான் என்று. துறுதுறுவென்று இருக்கும் அந்தக் குழந்தைக்கு எதற்கு யோகாசனம் இப்போது? ஓடிவிளையாடும் குழந்தையை இப்படி ஒரு இடத்தில் உட்காரச் சொல்வது பெரிய கொடுமை, இல்லையோ?

 

கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. குழந்தைகள் வீட்டில் என்ன செய்வார்கள்? சம்மர் கேம்ப் என்று குழந்தைகளை வதைக்கும் வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒன்று மட்டும் நான் பார்த்துவிட்டேன். குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு வகுப்பிற்கு அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். என்ன கற்கிறார்கள்? யாருக்குக் கவலை? பள்ளி மூடியிருக்கும் சமயங்களிலும் பெற்றோர்களிடமிருந்து பணம் கறக்க பள்ளிகள் கண்டுபிடித்திருக்கும் புதுவழி இந்த சம்மர் கேப்ம்ஸ். முன்பெல்லாம் தனியார்கள் நடத்தி பணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நாமே செய்யலாமே என்று பள்ளிகளும் களத்தில் இறங்கிவிட்டன.

 

தொடர்ந்து படிக்க : நான்குபெண்கள்

 

செல்வ களஞ்சியமே 65