புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

தொலைக்காட்சியில் ஒரு பெண் சொல்லிக்கொண்டிருந்தார்: ‘சுருட்டையான உங்கள் தலைமுடியை நேராகச் செய்ய வேண்டுமா? மைதாவைக் கரைத்து…..’அவரது சொற்கள் காதில் விழுந்துக்கொண்டிருந்தாலும் மனதில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. முதலில் சுருட்டையான முடியை எதற்காக பணம் செலவழித்து நேராக்க வேண்டும்? வேலையற்ற வேலை! அப்படியே செய்துகொண்டாலும் அது நாய் வாலை நிமிர்த்தும் கதைதான்! ஆனால் எத்தனை பெண்கள் என்னைப்போல எண்ணுவார்கள்? புறஅழகே பெரிது என்று எண்ணும் பெண்களிடையே இதோ ஒரு நிஜப் பெண்:
ஹர்னாம் கௌர் – இங்கிலாந்தில் ஆசிரிய-உதவியாளராக இருக்கும் 23 வயதுப் பெண். தன் முகத்தில் வளர்ந்திருக்கும் தாடியை மிகவும் பெருமையுடன் காட்டுகிறார். என்னது, என்று தூக்கிவாரிபோடுகிறதா? சரியாகத்தான் படித்தோமா என்று திரும்பவும் மேலே உள்ள வரிகளைப் படிக்கிறீர்களா? நீங்கள் படித்தது நிஜம், நிஜம், முழுவதும் நிஜம். இந்தப் பெண்ணிற்கு இருக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இவருக்கு முகத்தில் முடியை உண்டு பண்ணியிருக்கிறது.
பள்ளிச் சிறுமியாக இருக்கும்போது 11 வயதில் இந்த பிரச்னை ஆரம்பித்துவிட்டது இவருக்கு. கூடப் படிக்கும் மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளானார். அவரை பெண்-உருவ-ஆம்பிளை என்று கூட அழைத்தனர். இதனால் தனது அறையை விட்டுக் கூட வெளியே வர அஞ்சினார்.  தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட பலமுறை யோசித்தார். கடைசியில் இந்த மனப்போராட்டங்களிலிருந்து வெளிவந்து தனது பயங்களையும், இந்த உலகத்தின் உணர்ச்சியற்ற தன்மையையும் தனது மனோபலத்தால் வெற்றி கொண்டார். சீக்கியரான இவர் தங்கள் குல வழக்கப்படி முடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார். தனது முகத்தில் வளரும் முடியை மறைக்க எடுத்த முயற்சிகளையெல்லாம் நிறுத்தினார்.
‘இதுதான் நான். நான் இப்படித்தான் இருப்பேன். இதுதான் எனது உள்ளழகு; வெளியழகு; இதுவே என் பரிபூரணத்துவம். நான் எல்லோரிடத்திலிருந்தும் வேறு பட்டிருக்கிறேன். இதை முழு மனதுடன் ஒப்புக்கொள்ள இப்போது கற்றுக் கொண்டுவிட்டேன்’ என்று தன்னை பேட்டி காண வந்தவர்களிடம் கூறினார் ஹர்னாம் கௌர். இவர் தன்னைத் தானே வெறுத்து ஒதுக்கியபோது, கேலி செய்த உலகம் இப்போது தனது பயங்களை தூரத்தள்ளி, நான் இப்படித்தான் என்று தைரியமாக முழங்கிய போது இவரை பார்த்து வியக்கிறது. ‘நாம் எல்லோருமே மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறோம், இல்லையா? இது என் தனித்தன்மை. இதை நான் மறைக்க விரும்பவில்லை’ என்று சொல்கிறார் ஹர்னாம்.

ஹர்னாம் கௌர் 

இந்தப்பெண் இளம் பெண் எத்தனை பேர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார், பாருங்கள்:
  • சின்ன சின்ன தோல்விகளுக்குக் கூட தற்கொலை செய்து கொள்ளுபவர்களுக்கு;
  • ஒல்லியாக, வெளுப்பாக இருப்பது மட்டுமே அழகு என்று நினைக்கும் இன்றைய இளம்பெண்களுக்கு;
  • மூக்கு சரியில்லை, புருவம் சரியில்லை என்று அழகு நிலையங்களிலும், அறுவை சிகிச்சையிலும் பணத்தை வாரி இறைத்து, இறைவன் இயற்கையாகக் கொடுத்த தங்கள் அழகினை இழந்து வருந்தும் பெண்களுக்கு;
  • வெளி அழகு ஒன்றே தங்கள் தகுதி. அது சரியில்லாவிடில் தங்களால் முன்னேற முடியாது என்று நினைக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு.
வெளி அழகு ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் வரும் விதம் விதமான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி, எப்படியாவது அழகி என்ற பெயர் வாங்கிவிட வேண்டும் என்று பாடாய் படும் பெண்களின் மத்தியில் இவர் வித்தியாசமானவர்தான். தங்களுக்கு இறைவன் கொடுத்த உடலில் தாங்களாகவே ஒரு ‘குறை’ கண்டுபிடித்து அதை எப்படி சரி செய்வது என்ற கவலையில் இருக்கும் எத்தனையோ இளம் பெண்களுக்கு நடுவில் இவர் தனியாகத் தெரிகிறார், இல்லையா?
‘உங்கள் முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ எங்கள் க்ரீமை பயன்படுத்துங்கள்; எண்ணெய் இல்லா சருமம்’ என்று விளம்பரங்கள் வருகின்றன. பருவ வயதில் எண்ணெய் வடிவது வளர்ச்சியின் அறிகுறி. உங்கள் ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்கின்றன என்பதற்கு சாட்சி. அதைப் புரிந்து கொள்ளாமல் ஏங்கும் பெண்கள்; அவர்களது பலவீனத்தைப் புரிந்து கொண்ட அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தையை விரிக்கிறார்கள், கண்ட கண்ட க்ரீமுடன்.
முன்பெல்லாம் உடல் இளைக்க என்று மட்டும் விளம்பரங்கள் வரும். இப்போது உடலை செதுக்குகிறோம் (body sculpting) என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இவற்றை நம்பி எனது மூக்கு நன்றாகயில்லை, உதடு நன்றாகயில்லை என்று சொல்லி அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர்? நான் கருப்பு அதனால் இந்த வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்துகிறேன் என்று சொல்லும் இளம் பெண்கள் எத்தனை பேர்கள்? இளம் பெண்களை மட்டுமல்ல; இந்த விளம்பரங்கள் வயதான பெண்களையும் விடுவதில்லை. வயதை மறைக்க கிரீம்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. 50 கிராம் வெறும் 99 ரூபாய் தான் என்று வேறு விளம்பரப்படுத்துகிறார்கள். வயதாவதைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டாமா?
ஆண்-பெண் சமம் என்பது உலகமுழுவதும் சிறிது சிறிதாக வேர்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நல்ல வாய்ப்பினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நாம் முன்னேற வேண்டுமென்றால், நம்மைப் பற்றிய, நம் உடலைப் பற்றிய, நம் வெளி அழகு பற்றிய தவறான கண்ணோட்டத்திலிருந்து வெளிவருவோம்.
நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் இயற்கை அழகைப் பேணுவோம். நமது திறமையை வளர்த்துக் கொள்ளுவோம். திறமையை வளர்க்கக் கடின உழைப்பு ஒன்றே வழி என்பதை மறக்கக்கூடாது. நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் நிச்சயம் ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறார், இல்லையா? அதை வளர்த்துக் கொள்வோம். நமது திறமையை, ஆற்றலை உருப்படியான விஷயங்களில் ஆக்கபூர்வமாக செலவழித்து, நமக்கு நிகர் யாருமில்லை என்று வாழுவோம். இதுதான் ஒரு பெண்ணை எல்லோரிடமிருந்தும் தனித்துக் காட்டும். நமக்கென நாமே ஒரு பாதை வகுத்துக் கொள்வோம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி அதில் பயணம் செய்வோம். நாம் தேடிப்போகாமல், நமக்கான அங்கீகாரம் அதுவாகவே நம்மைத் தேடி வரும்.
இதற்கு உதாரணமாக இன்னொரு பெண் வீராங்கனைப் பற்றியும் இங்கே நான் சொல்ல வேண்டும். உலகம் புகழும் பெண் விளையாட்டு வீராங்கனை இவர். வெற்றி பெற்றுவிட்டால் உயர எம்பிக் குதிப்பார். ஒருமுறை அல்ல; பலமுறை. கையை மடக்கி காற்றில் குத்துவார். மண்ணில் விழுந்து உணர்ச்சி வசப்படுவார். சிரிப்பார் கடகடவென்று; அவரை, அவரது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது அவராலேயே முடியாத காரியம். தனது ஆட்காட்டி விரலை உயர்த்திக்காட்டி நானே நம்பர் ஒன் என்பார்.

இவர் பிறந்தது கறுப்பினம். அதனாலேயே இவரது வெற்றிகளை வெள்ளையர்கள் அலட்சியம் செய்தனர். வெள்ளையர்கள் வெற்றி பெற்றால் அது இமாலய சாதனை. ஆனால் இந்தக் கறுப்பினப் பெண்ணின் வெற்றி மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வு. ‘இது என்ன பெரிய வெற்றி என்று இந்தக் கறுப்பி இப்படி கூத்தாடுகிறாள்?’ என்று உதட்டைச் சுழிப்பார்கள். இந்த பெண்ணும் இவரது சகோதரியும் அசைக்க முடியாத வீராங்கனைகளாக இருப்பது வெள்ளையர்களுக்கு ஒரு சாதாரண விஷயம்! இந்தப் பெண்களைப் பற்றி இவர்களது இனத்தைப் பற்றி ’கறுப்பினப் பெண்கள் அதிகம் வளர்ந்த ஆண்கள்’ என்று  வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். ‘இவர்கள் இருவரும் சகோதரிகளா? இல்லையில்லை சகோதரர்கள்..! இருவரும் தோற்றத்தால் நம்மை பயமுறுத்துகிறார்கள்…!’ என்று கேலியும் கிண்டலுமாகப் பேசுவார்கள் அவர்கள் காதுபடவே!

ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே ஒரு நம்பிக்கை: இனவெறியை தோற்கடிக்க வேண்டுமானால் அவர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்; இன்னும் நன்றாக உழைக்க வேண்டும்;  இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும். நூறு சதவிகிதத்திற்கு மேல் நூற்றைம்பது சதவிகிதம் கொடுத்தால் தான் வெள்ளை அமெரிக்கர்கள் கருப்பு நிறத்தவர்களின் வெற்றியை அங்கீகரிப்பார்கள். அப்படி உழைத்து அந்த வெற்றி கிடைத்தபின் அந்த வெற்றியை வெளிப்படையாகக் கொண்டாடக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம் – உங்களை ஆட்ட மைதானத்தில் உங்கள் இனத்தை வைத்து யார் என்ன பேசினாலும் வாயைத் திறக்கக்கூடாது. வெற்றி பெற்றபின் உணர்வு பூர்வமாக அழக்கூடாது. குதிக்கக்கூடாது; காற்றில் முஷ்டியைக் குத்தக்கூடாது.
கற்பனை செய்து பாருங்கள்:  25 முறை கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் கலந்துகொண்டு 21 முறை வென்றவர். நான்கு முறை வரிசையாக இந்தப் பந்தயங்களில் வென்றவர். இந்த வெற்றியை ‘செரீனா ஸ்லாம்’ என்றே குறிப்பிட்டனர். முதல்முறை வென்றது பத்து வருடங்களுக்கு முன்பு. இந்த வருடம் மறுபடியும் வென்றிருக்கிறார். ‘இதைப் போன்ற ஒரு நிகழ்வு நூறு வருடங்களுக்கு ஒருமுறையே நடக்கும்’, ‘இவரைப் போன்ற ஒரு வீராங்கனை இதுவரை இல்லை’ என்று பெரிய பெரிய விளையாட்டு வீரர்கள் புகழ்ந்த போதிலும் இவரை மைதானத்தில் இழிவாகப் பேசியவர்களும் உண்டு.
வெள்ளையர்களைப் பொறுத்தவரை இந்த இனவெறி கருத்துக்களை கறுப்பின மக்கள் அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை இந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இவரை யாராலும் கட்டுப்படுத்த இயலாது. தன் உடலமைப்பைப் பற்றிப் பேசியவர்களை இவர் சும்மா விட்டதேயில்லை. வெற்றிக்குப் பின் தன் கடும் உழைப்பு இருப்பதால் வெற்றியைத் தான் கொண்டாடுவதை யாரும் தடைபோட இயலாது என்பார். தனது கடும் உழைப்பை வெள்ளையர்கள் சுலபமாகத் தள்ளிவிட்டுப் போவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். தனது எதிர்ப்பைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பார். யாருக்காகவும், எதற்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்.
நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர் தான் வில்லியம்ஸ் சகோதரிகள் என்று அழைக்கப்படும் இருவரில் ஒருவரான செரீனா வில்லியம்ஸ் – டென்னிஸ் விளையாட்டில் ஒன்றாம் இடத்தில் இருப்பவர்.
பெண்களே இப்போது புரிகிறதா? உங்கள் முன்னேற்றத்திற்குத் தடை உங்கள் புறஅழகு இல்லை. இந்த இரு பெண்களை நினைவில் கொள்ளுங்கள். தடைகளை உடைத்து எறிந்து முன்னேறுங்கள். வாழ்க பெண்கள்! வளர்க அவர்களது முன்னேற்றம்!
———————————————————————————*—————————————————

“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே.  ஐந்து வகையான போட்டிகளில் வகை-(3) பெண்கள் முன்னேற்றம்  கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இதற்கு முன் இப்படைப்பு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டியின் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதியளிக்கிறேன்