இல்லத்தரசிகளின் ஊதியமில்லா வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்

குங்குமம் தோழி இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர் கட்டுரை:

 

முதல் பகுதி

 

இரண்டாம் பகுதி 

மூன்றாம் பகுதி

 

‘எல்லோரும் வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றியே பேசுகிறீர்களே, நாங்கள் செய்வதெல்லாம் கணக்கில் வராதா? ஒருநாள் அலுவலகம் செல்லாமல் வீட்டுவேலைகளைச் செய்து பாருங்கள். அப்பப்பா! எத்தனை வேலைகள்! சமையல் செய்வது அவ்வளவு எளிதான காரியமா? ஒவ்வொருநாளும் என்ன செய்வது என்று மண்டையை குடைந்து கொள்வதிலிருந்து, காய்கறிகள் வாங்கி வந்து, சாமான்கள் வாங்கி வந்து அரைக்க வேண்டியவற்றை அரைத்து, பொருட்கள் கெடாமல் பாதுகாத்து….. பட்டியல் இட்டு மாளாது. கூடவே குழந்தைகளை கவனித்து, வீட்டுப் பெரியவர்களை பார்த்துக்கொண்டு வரும் விருந்தினர்களை உபசரித்து…. இவையெல்லாம் அலுவலகம் செல்லும் பெண்கள் செய்யவில்லையா என்று கேட்காதீர்கள். செய்கிறார்கள். ஆனால் நாங்கள் இருபத்துநாலு மணிநேரம், வாரத்தில் ஏழுநாட்கள், வருடத்தில் 365 நாட்கள் செய்யும் வேலைகளுக்கு எங்களுக்கு யார் ஊதியம் கொடுக்கிறார்கள்? ஒரு அங்கீகாரம் இல்லை…! ஏன், ஒருநாள் விடுமுறை கூட கிடையாது. கணவருக்கும், குழந்தைகளுக்கும் விடுமுறை என்றால் எங்களுக்கு அன்று கூடுதல் வேலை! அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பணி ஓய்வு உண்டு. ஏன் தாங்களாகவே முன்வந்து முன்னாதாகவே கூட பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறலாம். ஆனால் எங்களுக்கு?’

 

இப்படிக் கேட்கும் இல்லத்தரசிகளுக்காக குரல் கொடுக்கிறார் திருமதி மிலிண்டா கேட்ஸ். யாரிவர்? மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர் திரு பில் கேட்ஸ்-இன் மனைவி! அத்தனை பெரிய செல்வச் செழிப்புள்ளவர் இல்லத்தரசிகளுக்காக குரல் கொடுக்கிறாரா என்று வியப்பாக இருக்கிறது அல்லவா? இவர் பேசினால் எல்லோரும் கேட்பார்கள் என்பதும் உண்மை. என்ன நடந்தது? இவர் இப்படிப் பேச என்ன காரணம்?

 

ஒவ்வொருநாளும் சமையல் அறையிலிருந்து இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு, எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு கடைசியாக வெளிவரும் ஆள் தானே என்பதை கண்ட மெலிண்டா கேட்ஸ் எல்லா இல்லதரசிகளையும் போல சும்மா இருக்கவில்லை. ஒரு எழுதப்படா விதியை தம் இல்லத்தில் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். ‘எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கையைத் துடைத்துக்கொண்டு போனால்? நான் ஒருத்தி தனியே எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டுமா? அம்மா சமையல் அறை வேலைகளை முடித்துக்கொண்டு வெளியே வரும் வரை யாரும் சமையல் அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது!’ என்று.  இந்த விதிமுறையை அவரது கணவரோ, அவரது மூன்று குழந்தைகளோ வரவேற்கவில்லை. ‘ஆனால் அந்த மாற்றம் வந்த நாளை இவர்கள் மறக்கவே இல்லை!’ என்கிறார் மெலிண்டா சிரித்துக்கொண்டே.

 

‘பெண்கள் ஊதியம் இல்லாமல் செய்யும் வீட்டுவேலைகளின் நேரத்தையும், ஆண்கள் இப்படிச் செய்யும் வேலைகளின் நேரத்தையும் ஒப்பிடும்போது மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது’ என்கிறார் இவர். ‘வளர்ந்த நாடுகளில் இந்த இடைவெளி 90 நிமிடங்கள் என்றால் வளர்ந்து வரும் நாடுகளில் 5 மணிநேரமாக இருக்கிறது. அதாவது பெண்கள் ஊதியம் இல்லாமல், ஆண்களின் வேலை நேரத்தைவிடக் கூடுதலாக 5 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இது போன்ற ஊதியம் இல்லாத வேலைகள் பெண்களின் செயல்வளங்களை முடக்குகிறது. இதைப்பற்றி நாம் இப்போது பேசியே ஆகவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னையின் ஆழம் புரியும்!’

 

மெலிண்டா மேலும் சொல்லுகிறார்:

‘இந்த வேலைகளை வீட்டிலுள்ளவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றால், இந்த வேலைகளைச் செய்வதில் சமநிலை வேண்டும் என்பதை புரிந்து கொள்ளவில்லை என்றால் பெண்கள் தங்கள் செயல் திறனை பயன்படுத்த முடியவில்லை என்றால் நாம் எதிர்பார்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP- Gross Domestic Productivity) லாபம் அடைய முடியாது’.

 

‘வளர்ந்து வரும் நாடுகளில் பெண்கள் கேட்பது ‘எனக்கு இன்னும் நிறைய நேரம் வேண்டும்’ என்பது தான். ‘வீட்டுவேலை செய்து முடிக்க இருபத்துநாலு மணிநேரம் போதவில்லை’ என்பது உலகத்தில் இருக்கும் எல்லா இல்லத்தரசிகளும் சொல்லும் வார்த்தை தான் போலிருக்கிறது. தினம் தினம் இவர்கள் செய்யும் ஊதியமில்லா வேலைகளின் நேரமும் அதிகமாகிக் கொண்டே போவதுடன், இதற்கான அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இது ஒரு மிகப்பெரிய பிரச்னை என்பதுடன் சமூகத்தின் மீதும், பொருளாதாரத்தின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும். எத்தனை உழைப்புத் திறன் வீணாகிறது!’

 

‘மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு என்று கோடிக்கணக்கில் பணம் செலவழித்துவிட்டு, இல்லத்தரசிகள் வீட்டிற்குள் செய்யும் பணிகளை – பணிகள் என்று சொல்லாமலும், அதற்கான அங்கீகாரமும் கொடுக்காமல் இருப்பதும் நாம் 2016 ஆம் ஆண்டில் இருக்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது!’

 

ஒவ்வொரு வருடமும் கேட்ஸ் தம்பதி தங்களது இணையதளத்தில் தங்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்து கடிதம் எழுதுகிறார்கள். 2016 வருடம் திரு பில் எரிபொருள் இல்லாத உலகத்தைப் பற்றியும், திருமதி கேட்ஸ் பெண்களின் நேரம் எப்படி சமையலறையிலேயே கழிகிறது என்பதைப் பற்றியும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள்.

 

திருமதி மெலிண்டா தனது கடிதத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு விளம்பரத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில் ஒரு இல்லத்தரசி கூறுகிறார்: ‘எனது தேவைகளை கடைசியில் நிறைவேற்றிக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்ளுகிறேன்’ என்று.

திருமதி கேட்ஸ் சொல்லுகிறார்:

’50, ’60 களில் இது போன்ற விளம்பரங்கள் வரும். இப்போது அவற்றைப்பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் வகுப்புத் தோழர்கள் தங்கள் அம்மாக்கள் வீட்டிலேயே – அதாவது வெளியே போய் வேலை செய்யாமல் – வீட்டிலேயே இருப்பவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். நான் வளர்ந்த பிறகுதான் இது எத்தனை பெரிய பொய் என்று தெரிந்தது. அவர்கள் வீட்டில் சும்மா இருப்பவர்கள் இல்லை; வெளியில் ஒரு பெண் செய்யும் வேலை நேரத்தைவிட அதிக நேரம் வீட்டில் உழைத்துக் கொண்டு இருப்பவர்கள் என்று புரிந்தது’.

 

‘இவர்களது சமையலறை ஒரு முக்கோண வடிவில் இருக்கும். ஒரு மூலையில் அடுப்பு. ஒரு மூலையில் குளிர்சாதனப் பெட்டி; இன்னொரு மூலையில் பாத்திரங்களைக் கழுவும் தொட்டி. இந்த முக்கோணவடிவத்தின் மூன்று மூலைகளுக்கும் நடந்து நடந்தே இவர்களது சக்தி வீணாகும். உதாரணத்திற்கு ஒரு பெண் இதைபோன்ற ஒரு சமையலறையில் ஒரு கேக் செய்கிறாள் என்றால் அவள் 281 அடிகள் நடக்க வேண்டும். ஆனால் புதிதாக மாற்றி வடிவமைக்கப்பட்ட சமையலறையில் அதே கேக் செய்ய அவள் 41 அடிகள் மட்டுமே நடக்க வேண்டியிருக்கும். ஒரு கேக் செய்வதிலேயே பெண்களின் திறமை 85% மேம்படுத்தப்படும் என்கிறது இந்த உதாரணம்’.

 

பெண்கள் மட்டுமே சமையலறையில் பாடுபட வேண்டும் என்கிற இப்போதுள்ள நடைமுறை மாறினால் ஒழிய பெண்கள் தங்கள் சக்தியை ஆயிரக்கணக்கான மணித்துளிகளை வீட்டு வேலைகளில் மட்டுமே செலவழித்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் இந்த சமூகம் வீட்டு வேலை செய்வதை பெண்களின் கடமையாகவே பார்க்கிறது. ஆண்களை விட அதிக நேரம் பெண்கள் செய்யும் இந்த வேலைக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை என்பது இந்தப் பிரச்னையின் இன்னொரு முகம். பெண்கள் ஆண்களை விட அதிக நேரம் இந்தக் கூலி இல்லாத வேலைகளைச் செய்வது எல்லா நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக  பெண்களின் வேலைத்திறன் களவாடப்படுகிறது. ஒருநாளைக்கு 4.5 மணிநேரம் இந்த வேலைகளில் செலவிடப்படுகிறது. பெண்கள் செய்யும் இந்த சம்பளமில்லாத வேலை இந்தியாவில் 6 மணிநேரம். ஆண்கள் ஒருமணிநேரத்திற்கும் குறைவாகவே இத்தகைய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

 

பெண்கள் சுத்தம் செய்வதிலும், சமையல் செய்வதிலும் அதிகநேரம் செலவிடுவதால் சம்பளம் கிடைக்கும் வேலைகளை செய்ய அவர்களுக்கு  நேரம் கிடைப்பதில்லை. பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளையும் செய்வதால் பள்ளியில் பின்தங்கி விடுகிறார்கள். ‘வீட்டுவேலைகளை 5 மணி நேரத்திலிருந்து 3 மணிநேரமாகக் குறைப்பதால் பெண் பணியாளர்களின் உற்பத்தித்திறன் 10% அதிகரிக்கும்.பெண்களும் ஆண்களுக்கு சமமாக உழைத்தால் நாட்டின் பொருளாதார உற்பத்தி 12% அதிகரிக்கும்.

 

வீட்டுவேலைகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்: 1. சமையல் 2. சுத்தம் செய்தல் 3. வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் பார்த்துக்கொள்வது. இந்த மூன்றில் எதையெல்லாம் ஆண்களும் பங்கு போட்டுக்கொண்டு செய்ய முடியுமோ அப்படி வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்வதால் பெண்களின் சக்தி கணிசமாக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்.

 

கூடவே பெண்களின் ஆரோக்கியம் பற்றியும் அக்கறை அதிகம் வேண்டும். நல்ல குடிநீர் கிடைப்பதற்கு வழி வகுத்தால் பெண்களின் வேலைச் சுமை பாதியாகக் குறையும் என்கிறார் திருமதி கேட்ஸ். பல நாடுகளில் நல்ல தண்ணீரைத் தேடித் போவதே பெண்களின் தலையாய பணியாக இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் வீட்டு வேலைகளை எப்படிப் பங்கு போட்டுக்கொண்டு செய்யலாம் என்பது பற்றி பேசவேண்டும். உதாரணத்திற்கு டான்சானியா கணவர்களைச் சுட்டிக் காட்டுகிறார் திரு கேட்ஸ். இங்கு ஆண்கள் தண்ணீர் கொண்டுவரும் பணியை ஏற்கிறார்கள். பலமான உடல் அமைப்பு இருப்பதால், கடினமான பணிகளை ஆண்கள் செய்யமுடியும்.

 

திருமதி கேட்ஸ் போட்ட விதியால் அவரது வீட்டில் ஏதாவது பலன் உண்டா? நிச்சயம் உண்டு. இரவு வேலைகளை எல்லோரும் பங்கு போட்டுக்கொண்டு செய்வதால் சீக்கிரம் வேலைகள் முடிகின்றன. அதுமட்டுமில்லை; இப்போது தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வரும் வேலையை திரு கேட்ஸ் செய்கிறார். அதைப்பார்த்துவிட்டு ‘அத்தனை பெரிய மனிதரே தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு பள்ளியில் விடும்போது நீங்களும் செய்யலாம்’ என்று மற்ற அம்மாக்கள் தங்கள் கணவர்களை முடுக்கி விடுகிறார்களாம்!

தூ…….தூ…….போ……போ………! 

 

வலைச்சரம் நான்காம் நாள்

ரஞ்சனி நாராயணன்

சமையல் சாப்பாடு என்றால் என்ன அவஸ்தை பாருங்கோ. பேசாம சங்கீதம் பாடப் போயிடலாமா அப்படின்னு தோணறது. எல்லாம் அக்கரை பச்சை தான். சங்கீதம்னு நினைச்சாலே எனக்கு எங்க தமிழ் வாத்தியார் கேதாரேஸ்வர சர்மாவும், எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த சித்ரா தாசரதி தம்பதியும் தான் நினைவிற்கு வருவார்கள்.

 

முதலில் சர்மா ஸார்: பள்ளிக்கூடத்துல படிக்கறச்சே எங்க பள்ளி வளாகத்துக்குள்ளேயே சாயங்கால வேளைகள்ல காலக்ஷேபம், சங்கீத கச்சேரி நடக்கும். எனக்கு நன்றாக நினைவு இருப்பது டி.எஸ். பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகளோட ‘தியாகராஜ ராமாயணம்’ தான். தியாகராஜரோட கீர்த்தனங்களை வைத்து இராமாயணம் சொல்லுவார். அப்போல்லாம் ‘ஹரிகதை’ என்று ஒரு பாணி. நின்றுகொண்டே கதை சொல்லுவார்கள். ஹரிகதை உட்கார்ந்து சொல்லப்படாதோ? ஊஹூம். நின்னுண்டேதான் சொல்லணுமாம். கால்கடுக்க நின்னுண்டே சொல்லுவார். பாடல்கள் எல்லாம் ரொம்ப நன்றாகப் பாடுவார். ‘ஸ்வரராக சுதா ரஸ’ என்று கணீரென்று சங்கராபரணம் ஆரம்பித்தால் கூட்டம் பின்-ட்ராப் சைலன்ஸ்.

 

எங்கள் சர்மா ஸார் சொல்லுவார்: சங்கீத வித்வான்கள் எல்லாரும் பாடும்போது கையை ஆட்டி ஆட்டி இட்லிக்கு அரைப்பார்களாம்; அம்மில குழம்புக்கு அரைப்பார்களாம்; யந்திரத்துல உப்புமாவிற்கு உடைப்பார்களாம். குடுமியை (நான் சொல்வது அறுபதுகளில்) ஆட்டிண்டு ஆட்டிண்டு அவர்கள் பாடுவதே பெரிய காமெடி என்பார். அவர்கள் செய்வது போல செய்தும் காட்டுவார். எங்களுக்கு அவர் செய்வது ரொம்பவும் சிரிப்பாக இருக்கும். ‘ததரின…….’ என்று இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு ஒரு கையால் உரல்ல அரைப்பார். இன்னொரு கையால் ‘தா…..நா…’ என்று மாவைத் தள்ளி விடுவார். எங்களுக்கு சிரிப்பு பொங்கும். ஒரு பாடகர் நிரவல் செய்வது போல அவர் பாடிக் கேட்கவேண்டும்.

‘தூ…..ஊ……….ஊ……..தூ……….தூ..!.

தூ……ஊ….ஊ….தூ…….!

போ….ஓ…….போ….போ….!

போ……ஓ…..போ…..!

நா……நா….நா…….!

ஆ……..யே……’

என்று அவர் பாடப் பாட  நாங்கள் எல்லாம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடமே அதிரச் சிரிப்போம். ‘தூது போனாயே’ என்பதை அந்தப் பாடகர்  இப்படி நிரவல் செய்வார் என்பார் சர்மா ஸார்.

இன்றைய சிறப்புப் பதிவாளர்கள்:

நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு இணையதளம் தமிழ்மணம் அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி இங்கே படியுங்கள்.

காசியின் வலைப்பதிவுகள்

http://kasiblogs.blogspot.in/2006/07/1.html

தமிழ்மணம் தோற்றம், வளர்ச்சி

 

*********

கைகள் அள்ளிய நீர் சுந்தர் ஜி. பிரகாஷ் அவர்களின் வலைப்பூ. முகநூலில் அதிகம் எழுதும் இவர் இனி தனது இந்த வலைப்பூவிலும் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார். மிக நல்ல விஷயம்.

 

இரண்டு கதைகள்

இரண்டு ‘ம்’ களுக்கு நடுவில் என்ன நடக்க முடியும்? படியுங்கள் புரியும்.

 

முதுமையின் நாட்குறிப்பு

எல்லோரையும் தங்களது முதுமையைப் பற்றி நினைக்க வைக்கும்.

********

கீதமஞ்சரி http://geethamanjari.blogspot.in/2015/02/blog-post.html

 

என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே!

என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே!

என்கிறார் கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் எழுதுகிறார் திருமதி கீதா மதிவாணன்

ஆஸ்திரேலியாவின் அதிசயங்கள் கருப்பு அன்னங்கள்

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனுக்காக எழுதப்பட்ட மலையாளக் கவிதையின் மொழி பெயர்ப்புக் கவிதை இது:

மன்னியுங்கள் என்னை

சமீபத்தில் இவரது புத்தகம் ‘என்றாவது ஒருநாள்’ (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்) — மூல ஆசிரியர் – ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா) அகநாழிகை வெளியீடாக வந்திருக்கிறது.

 

*******************

 

அமுதவன் பக்கங்கள் – இவரைத் தெரியாதவர்கள் இணைய உலகில் இல்லை. பல பிரபல பத்திரிக்கைகளிலும் எழுதுபவர். இவரது என்றென்றும் சுஜாதா மிகவும் பிரபலமான புத்தகம்.

http://amudhavan.blogspot.com/2015/02/blog-post.html

சூப்பர் சிங்கர் ஜூனியர் சில சிந்தனைகள்

எட்டு போட்டு நடை பயிலுங்கள் http://amudhavan.blogspot.com/2012/12/blog-post_25.html

**********************

 

ரங்கன் மன மின்வான் என்னும் வலைத்தளத்தில் எழுதுபவர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். இவர் தொடாத விஷயங்களே கிடையாது எனலாம். ரவீந்திரநாத் தாகூரிலிருந்து Ayan Rand வரை எல்லோருடைய படைப்புகளையும் படித்து தானும் ரசித்து நம்மையும் ரசிக்க வைப்பவர்.

சிறுகதை என்றால் என்ன என்று சொல்லுகிறார். கதை சிறுத்து

காளீ! யாதுமாகி நின்றாய்.. 1

 

யாரு ஸார் இவரு? விவேகானந்தரை ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கு இவர் என்ன எளிமையாக அறிமுகம் செய்து வைக்கிறார், படியுங்கள்.

உண்மையாக இருக்குமோ? சிந்திக்க வைக்கும் முல்லா கதை

*************

 

‘சும்மா’ என்ற வலைத்தளத்தில் எழுதும் தேனம்மை. சாட்டர்டே போஸ்ட் – தேனம்மை லக்ஷ்மணின் பதிவில் பல சாதனையாலர்களைத் தெரிந்து கொள்ளலாம். இதோ திருமதி பத்மா மணி பற்றிய பதிவு.

நமது பதிவுலக சகலகலாவல்லி திருமதி கீதா சாம்பசிவமும் இந்த சாட்டர்டே போஸ்டில் எழுதியிருக்கிறார். இவரது பதிவு இதோ

 

வேதாவின் வலை

 

கோவைக்கவி திருமதி வேதா இலங்காதிலகம் நவீன பார்த்தசாரதி(யாரைச் சொல்லுகிறார்?) யுடன் சென்றது எங்கே என்று தெரிந்துகொள்ள படியுங்கள் இதை

வேதாவின் ஆத்திச்சூடி

பேரன் வெற்றிக்காக இவர் பாடும் சிறுவர் பாடல்கள் ஒன்று எண்ணுவோம்

இரண்டு எண்ணுவோம்

*************

https://andamantamilnenjan.wordpress.com/

அந்தமான் தமிழ் நெஞ்சம் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் திரு கிருஷ்ணமூர்த்தி.

அப்பாவை திட்டிபுட்டு அப்புறம் சமாதானம் ஆவது எல்லாம் அந்தக் காலத்திலிருந்தே நடக்கும் சேதி போலெ.. சாமான்யன்கள், நாமெல்லாம் விதிவிலக்கா என்ன? என்ன சொல்ல வருகிறார் என்று மேலே படியுங்கள்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

******************

சொல்லுகிறேன் என்ற வலைப்பதிவில் காமாக்ஷிமா எழுதும்

அன்னையர் தினப்பதிவு  அவரது அன்னையின் நினைவுகளை நமக்குக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அப்பா இறைவன் திருவடி அடைந்தபின் அந்தக் குடும்பத்தை இவரது அம்மா தனியாக நிர்வகித்ததையும், பேரன் பேத்திகளை வளர்த்துக் கொடுத்ததையும் நெகிழ்வாகப் பகிர்ந்து கொள்ளுகிறார்.

**********************

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் திருமதி மகாலக்ஷ்மி எழுதும் வலைத்தளம்.

நாம் தினசரி பயன்படுத்தும் இண்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் அடுப்பு முதலியன பற்றியும், குறட்டை, வாய்த்துர்நாற்றம் என்று பல விஷயங்களைப் பற்றி அழகான தமிழில் விளக்குகிறார்.

அடுப்படியில் இருக்கும் பிசாசு என்று யாரைச் சொல்லுகிறார் என்று படித்துப் பாருங்கள்.

 

ஆ…..பக்கங்கள்

என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் ஆமருவி திரு தேவநாதன்

ஆள் தேடி நின்று கொண்டிருக்கிறார் பெருமாள் என்கிறார்.

சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்

இவர் எழுதும் பல பதிவுகள் நம்மை உருக வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன.

 

கடைசிபெஞ்ச் என்ற வலைத்தளத்தில் பாண்டியன் திரைப்பட அனுபவம், (நிறைய) புத்தக விமரிசனம் என்று சிறப்பாக எழுதி வருகிறார். ஜெமோ வின் விசிறி. பெயர் தான் கடைசி பெஞ்ச். பதிவுகள் தரத்தில் முதல் ராங்க்!

எழுத்தாளர் ஜெயமோகன் உடன் கலந்துரையாடல் http://wp.me/p2IK8Q-ow

 

http://wp.me/p2IK8Q-kr ராஜீவ்காந்தி கொலைவழக்கு

 

**********************

Musings of a small town boy என்ற வலைத்தளத்தில் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதும் ராகவன்,  ஆன்மீகப் பதிவுகளும் எழுதுகிறார்.

 

ராசிபலன் இது குட்டிகதை அல்ல என்கிறார்.

கோபாலும் கணிதத் தேர்வும்

புதிய பறவை சினிமாவிற்கும், கணிதத்திற்கும் சம்மந்தம் உண்டா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

 

நாளை சந்திக்கலாம்!

ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம்

Doller nagaram2

ரயில் பிரயாணத்தில் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தடங்கலில்லாமல் நேரம் கிடைக்கும். நடுநடுவில் எழுந்து போய் வீட்டுவேலை செய்ய வேண்டாம். சமையல் வேலை இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மாதிரி பயணங்களில் படிப்பதற்கென்றே சில புத்தகங்களை தனியாக எடுத்து வைப்பேன்.

இந்தமுறை எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகம்: டாலர் நகரம். பதிவர்களுக்கு மிகவும் பழக்கமான,தான் நினைத்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லும் திருப்பூர் தேவியர் இல்லம் என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு ஜோதிஜியின் புத்தகம். இவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது.

திருப்பூர் நகரத்தின் பெயரைத் தவிர எனக்கு அந்த ஊரைப் பற்றி  தெரிந்த ஒரு விஷயம் அங்கு உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது விஷயம் திருப்பூர் குமரன். இந்த நகரத்திற்கு டாலர் நகரம் என்ற பெயர் என்பதும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பே தெரிய வந்தது. இதனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிய எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள்  இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.

நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னலாடை நகர், பனியன் நகரம் என்ற பலபெயர்கள் கொண்ட திருப்பூருக்கு நாலுமுழ வேஷ்டி அணிந்து  ஒரு கையில் துணிக்கடை மஞ்சள் பையுடன் வரும்  ஜோதிஜி நம்மையும் இன்னொரு கையால் பிடித்து இந்தப் புத்தகத்தினுள் – இல்லை டாலர் நகரத்தினுள் அழைத்துக் கொண்டு செல்லுகிறார்.

ஒன்றுமே தெரியாமல், கிடைத்த முதல் வேலையில் சேர்ந்து, தொடர்ந்து பல வேலைகளுக்கு மாறி ஒவ்வொரு வேலையிலும்  தனக்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களையும் அதில் தான் பட்ட வலிகளையும், தோல்விகளையும் எழுதும் ஆசிரியர், பலமுறை ‘நான் தோற்றுக் கொண்டே இருந்தேன்’ என்று குறிப்பிட்டாலும், அந்தத் தோல்விகளிலும், வலிகளிலும் இருந்து பல பாடங்களைக் கற்று, தனது வாழ்க்கை குறிக்கோளை அடைய மேற்கொண்ட தனது பயணத்தின் கூடவே  இந்த நகரத்தின் வளர்ச்சியையும், இதனை நம்பி வரும் மக்களின் மனநிலையும்  கூறுகிறார்.

எல்லாத் தொழில் நகரங்களுக்கும் உண்டான சாபக்கேடுகள் இங்கேயும் இருக்கின்றன. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் போவது, நம்பிக்கை துரோகம், ஆணும் பெண்ணும் சேர்ந்து தொழில் செய்யும்போது ஏற்படும் பாலியல் வரம்பு மீறல்கள், தங்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு முதலாளிகளை சுரண்டும் இடைத் தரகர்கள்  என்று ஜோதிஜியின் எழுத்துக்கள் மூலம் திருப்பூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். ஒரு நகரத்தின் வாழ்வு தாழ்வு, அங்கு வாழும் மனிதர்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். திருப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நகரம் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிகையுடன் வருபவர்கள், தங்களை இங்கு நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கும் முடிவுகள், அவற்றின்  விளைவாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் அல்லல்கள் என்று அடுக்கடுக்காக நிகழ்வுகளின் பிடியில் நம்மை சிக்க வைக்கிறார் ஆசிரியர். பின்னலாடைத் தொழிலாளர்களின் – உழைப்பு, உழைப்பு, இன்னும் கடின உழைப்பு என்பதை மட்டுமே அறிந்த அவர்களின் – வாழ்க்கைப்பயணம்  இந்த நகரத்தின் வளர்ச்சியுடன் எப்படிப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று வாசிக்கும்போது அதிர்ச்சி, வியப்பு, சோகம் என்று மனதில் பலவிதமான உணர்வுகள். சிலர் மட்டுமே இந்தப் பின்னலிலிருந்து வெளிவந்து முன்னேறுகிறார்கள். சிலர் இந்த மாயவலையில் காணாமலேயே போகிறார்கள்.

தன்னுடன் படித்த, தமிழில் கூட ததிங்கிணத்தோம் போட்ட ஆறுமுகம் இன்று ஒரு நிறுவன முதலாளியாக இருப்பதையும், வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த இருவர் வாழ்க்கை பயணத்தில் பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டு  அனுபவக் கல்வியில் தேர்ந்தவர்களுக்கே வாழ்க்கை என்னும் பாடத்தை கற்றதாக கூறுகிறார். இது படிக்கும் அத்தனை பேருக்கும் பாடம் தான்.

‘திருப்பூரில் வருடா வருடம் எகிறிக் கொண்டிருக்கும் மில்லியன், பில்லியன் அந்நியச்செலாவணி வரைபட குறியீடு அத்தனையுமே பலருக்கும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே தந்த வெற்றியாகும். திருப்பூரில் எல்லோருமே மெத்தப் படித்தவர்கள் அல்ல. எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளிலும் படித்தவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு. சாத்தியமான திட்டங்கள். உறக்கம் மறந்த செயற்பாடுகள், தொழிலுக்காகவே தங்களை அர்பணித்த வாழ்க்கை.’

அனுபவக் கல்வியில் செல்வந்தர் ஆனபின் பணம் தந்த மிதப்பில் தான் செய்த தவறுகளுக்காக அதே ஆறுமுகம் இப்போது கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதையும் ‘டாலர் நகர’த்தில் படிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோரும் ‘கருணா என்னும் கூலி’ என்ற  அத்தியாயத்தைப் கட்டாயம் படிக்க வேண்டும். ஆறுமுகங்கள் மட்டுமில்லை திருப்பூரில், கருணாகரன்களும் உண்டு என்று புரியும்.

மனத்தை கசக்கும் ஒரு அத்தியாயம் : காமம் கடத்த ஆட்கள் தேவை.

ஆர்வத்துடன் படித்த அத்தியாயம்:ஆங்கிலக்கல்வியும் அரைலூசு பெற்றோர்களும். என் தொழில் சம்மந்தப்பட்ட விஷயமாயிற்றே!

‘நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒரு உலகம். ஒவ்வொரு துறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்கள் முதல், கோடிகளை வைத்துக் கொண்டு துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்தத் தொழிலில் உண்டு’ (அத்தியாயம் – நம்பி கை வை)

அத்தனை துறைகளையும் பல நுணக்கமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர். ‘விதவிதமான பல வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக உருமாறும் நேரமென்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போலவே இருக்கும்’. நமக்கும் இந்த அனுபவம் ஏற்படுகிறது என்றால் அது ஜோதிஜியின் எழுத்துக்களின் வீரியம் தான்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் குழந்தைகளும் கூட இந்த டாலர் நகரத்தை நம்பி வருகிறார்கள். குடும்பம் முழுவதற்கும் இங்கு வேலை கிடைக்கும். ஆனால் வாழ்க்கை?

வருகின்ற அரசுகளும் தங்கள் சுய லாபத்திற்காகவே இந்த நகரைப் பயன்படுத்திக் கொண்டு,உழைக்கும் மனிதர்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்காமல் சும்மா இருப்பதையும் சாடுகிறார் ஆசிரியர். ‘கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் சிறிய ஏற்றுமதி நிறுவனங்களிடம் ‘உங்களுக்கு என்னப்பா பிரச்சனை?’ என்று தமிழ் நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்? ஆட்சிகள் மாறியது. ஆனால் காட்சிகள் எதுவுமே மாறவில்லை.

‘திருப்பூருக்குள்  இரண்டு உலகம் உண்டு ஒன்று உள்நாட்டு தயாரிப்புகளான ஜட்டி,பனியன்கள். இன்னோன்று ஏற்றுமதி சார்ந்த ஆடை ரகங்கள். இரண்டுக்குமே நூல் என்பது முக்கிய மூலப் பொருள். அரசாங்கத்தின் பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன’.

‘இலவச செல்போன் கொடுக்கத் திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்கத் தயாரா இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டம் தீட்டி இந்த ஊர் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களோ?’

இந்தக் கேள்வியுடன் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஜோதிஜி.

திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த  மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு  நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

இந்த முகம் தெரியாத மனிதர்களுக்காக ‘இவர்களுக்கு ஒரு விடியல் சீக்கிரம் வரட்டும்’ என்று இறைவனிடம் பிரார்த்திப்பதை தவிர எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

இனி புடவைக் கடையில் போய் இந்தப் புடவை நன்றாக இல்லை என்று சொல்வேனா?

இந்தப் புத்தகத்தில் குறைகள் இல்லையா? புத்தகமே திருப்பூர் என்ற டாலர் நகரத்தின் குறைகளையும் நிறைகளையும் சொன்னாலும், குறைகளே மிகுந்திருப்பது போல ஒரு தோற்றத்தை நம்முள் ஏற்படுத்துகிறது. நான் வேறு என்ன குறை சொல்ல முடியும்?

அட்டவணை போட்டிருக்கலாம். புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்களை எழுதத் தொடங்கிய போதுதான் இந்தக் குறையை உணர்ந்தேன்.

இதைத் தவிர்த்துப் பார்த்தால், திரு ஜோதிஜி நிச்சயம் ஒரு வரலாறு படைத்திருக்கிறார். திருப்பூர் தொழிலாளிகளின் உழைப்பை விட இந்தப் புத்தகம் எழுத கடினமாக உழைத்திருக்கும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

நான் இதுவரை புத்தக விமரிசனம் எழுதியதில்லை. முக்கியமாக திரு ஜோதிஜி அவர்களின் எழுத்துக்களை விமரிசிக்கும் தகுதி எனக்கில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் ஏற்பட்ட தாக்கங்களை இங்கு எழுதியிருக்கிறேன். இவை என் எண்ணங்கள் அவ்வளவுதான்.

ஜோதிஜியின் வலைத்தளம்

புத்தகம் வாங்க கீழ்கண்ட வங்கி முகவரிக்கு ரூபாய் 190/- அனுப்பவும்.

வங்கி விபரம்  

SRM JOTHI GANESAN
KOTAK MAHINDRA BANK
TIRUPUR
ACCOUNT (S/B) NO. 0 4 9 1 0 1 1 0 0 1 2 7 6 4
IFC CODE NO.     KKBK0000492   

 

Dollar_Nagaram

செல்வ களஞ்சியமே : பகுதி -14

அலுவலகம் செல்லும் பெண்களுக்கு …..

‘உங்க பேரு என்ன?’

‘என் பேரா?’
‘ஆமாங்க…’
‘வசந்தி….’
‘என்ன பண்றீங்க வசந்தி?’
‘நானா?’
‘ஆமாங்க நீங்கதான்…..’

‘ஒண்ணுமில்லீங்க, வீட்டுல சும்மா ஹவுஸ்வைஃப் – ஆ இருக்கேன்….!’
நம்ம ஊரு தொலைக்காட்சிகளில் அடிக்கடி கேட்கும் உரையாடல் இது.
இந்த உரையாடலைக் கேட்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். ஹவுஸ்வைஃப் வீட்டுல சும்மாவா இருக்காங்க? அதென்னவோ வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைக்குப் போனால்தான் தங்களுக்கு மதிப்பு; அலுவலகம் செல்லும் பெண்களைப் போல நாம இல்லையே என்ற மனக்குறை. அக்கரைப் பச்சை!

இந்தப் பகுதியை தொடர்ந்து படிக்க:

பின்குறிப்பு: இந்தச் செல்வ களஞ்சியமே தொடர் இந்தமுறை 14 வது வாரத்தை தொட்டிருக்கிறது. 3 மாதங்கள் முடிந்து நான்காவது மாதம், இரண்டாவது வாரத்தில் காலடி வைத்திருக்கிறது.

எனக்கு உற்சாகம் கொடுத்து தொடர்ந்து படித்து ஊக்கம் அளிக்கும் எல்லா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என்னை எழுதச் சொல்லி உற்சாகம் கொடுக்கும் நான்குபெண்கள் தளத்திற்கு ஸ்பெஷல் நன்றி!

 

எல்லோருக்கும் விஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்!