வாழி எதிராசன்!

நன்றி: கூகிள்

இன்றைக்கு சித்திரை மாதம் திருவாதிரைத் திருநாள். எம்பெருமானார் என்று உலகம் முழுவதும் உள்ளார்ந்த பக்தியுடன்அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜரின் 999 வது திருநட்சத்திரம் இன்று பூர்த்தியாகி 1000 வது வருடம் தொடங்குகிறது. எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு உத்சவங்கள் எல்லா திருக்கோவில்களிலும் ஆரம்பமாகியிருக்கின்றன.

 

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி எழுத பெரும் ஆசை மனதில் எழுகிறது. தினந்தோறும் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று திவ்ய பிரபந்தம் சேவிக்கத் தொடங்குவதைத் தவிர ஸ்வாமி பற்றி எழுத என்ன தகுதி இருக்கிறது என்று மனம் பரிதவிக்கிறது.

 

ஒருமுறை பிருந்தாவனம் போயிருந்தோம் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமியின் யாத்திரை கோஷ்டியுடன். அங்கு ஆண்டாளுக்கு என மிகப்பெரிய திருக்கோவில் – ரங்க்ஜி மந்திர் – இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் போலவே இங்கும் ஆண்டாள்-ரங்கமன்னார்-பெரியாழ்வார் மூவரும் ஒரே பீடத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். வடமாநிலத்தில் நம் ஆண்டாளுக்கு என்று ஒரு திருக்கோவில் என்பதே மிகவும் பரவசத்தைக் கொடுக்கும் விஷயம். இதற்கு முன்னாலும் ஒருதடவை இந்தத் திருக்கோவிலுக்குப் போயிருக்கிறேன்.

 

முதல்நாள் பெரிய கூட்டமாக எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் போன சமயம் திருகாப்பு நீக்கியிருக்கவில்லை. நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இங்கே காத்துக்கொண்டிருந்தால் அங்கே ஸ்வாமியின் பாகவத சப்தாகம் கேட்கமுடியாமல் போய்விடும். என்ன செய்வது என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தோம். சற்று நேரம் ஆனவுடன் திருகாப்பு நீக்கி எங்களை உள்ளே விட்டார்கள். கூட்டமான கூட்டம். மிகவும் அவசரம் அவசரமாக வெளியில் இருந்தபடியே சேவித்துவிட்டு பாகவதம் கேட்க சென்றோம். நாளை இன்னும் சீக்கிரமாக வந்து கியூவில் முன்னால் நின்று கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்.

 

எங்களுடன் கூட ஒரு ‘குடுகுடுப்பை’ மாமி – நீங்கள் நினைப்பது போல குடுகுடுப்பைக்காரரின் மனைவி இல்லை இவர். எல்லாவற்றிலும் அவசரம் இவருக்கு. பேருந்துவில் ஏறுவதிலிருந்து தான் தான் என்று முந்திக் கொள்ளும் சுபாவம் அந்த மாமிக்கு. இந்த மாமியைப் பற்றியே இரண்டு மூன்று பதிவுகள் எழுதலாம். கோவிலுக்குள் நுழைவதற்கும் முந்துவார். கோவிலுக்குள் நுழைந்தவுடன் விறுவிறுவென்று பிரதட்சணம் செய்ய ஆரம்பித்துவிடுவார். நிதானமாக சந்நிதியில் நின்று பெருமாளை சேவிக்கலாம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. ஒருமுறை பெங்களூரு வரும்போது எல்லோருக்கும் முன்னால் இறங்கி விடவேண்டும் என்ற பரபரப்பில் சிட்டி நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர் அவசரம் அவசரமாக கண்டோன்மெண்டில் இறங்கி சரித்திரம் படைத்தவர் இவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

 

இரண்டாம் நாள் நாங்கள் நால்வர் (குடுகுடுப்பை மாமியுடன் சேர்த்து) ஒரு ஆட்டோ பிடித்து ரங்கஜி மந்திர் வந்தோம். வழக்கம்போல கு.மாமி முன்னால் போய் நின்றார். கோவிலின் திருக்காப்பு நீக்க பட்டாச்சார் ஸ்வாமி வருவதைப் பார்த்தவுடன் இந்த மாமி பெரிய குரலில், ‘மாமா! மாமா! நாங்க கோமளா மாமிக்குத் தெரிந்தவர்கள். கோமளா மாமி உங்க கிட்ட சொல்லச் சொன்னாள். எங்களை கொஞ்சம் முன்னால உள்ள விடுங்கோ’ என்று இரைந்தார். கதவைத் திறக்கப் போனவர் கொஞ்சம் நின்று நம் குடுகுடு மாமியைப் பார்த்தார். பிறகு ஒன்றும் சொல்லாமல் சந்நிதிக்குள் நுழைந்துவிட்டார். சிறிது நேரத்தில் நாங்களும் உள்ளே சென்றோம். எங்களுக்கு சடாரி தீர்த்தம் கொடுத்த பட்டாச்சார் ஸ்வாமி எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். குடுகுடு மாமி ‘கிர்’ரென்று எல்லா சந்நிதிகளையும் சேவித்துவிட்டு நாலே எட்டில் வெளியே போய்விட்டார். அவர் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டாச்சார் ஸ்வாமி சொன்னார்: ‘கோமளா மாமிக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ, நம் எல்லோரையும் ஸ்வாமி இராமானுஜருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நாமெல்லாம் இராமானுஜ சம்பந்திகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர் தான் நமக்கு வழிகாட்டி. நாம் நமது வர்த்தமான (நிகழ்கால) ஆச்சார்யன் மூலம் சேவிப்பது எம்மிராமானுசனைத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கோமளா மாமிக்குத் தெரியும் என்று சொல்வதைவிட ‘அடியேன் இராமானுஜ தாசன் என்று சொல்லுங்கள். பெருமாளுக்கு அதுதான் உகப்பாக இருக்கும். எத்தனை கூட்டமாக இருந்தாலும் ‘அடியேன் இராமானுஜ தாசன் வந்திருக்கிறேன்’ என்று சொல்லுங்கள். பெருமாள் சேவை கிடைத்துவிடும். தினமும் 108 தடவை ‘ராமானுஜா, ராமானுஜா’ என்று சொல்லுங்கள். உங்களின் பாபங்கள், துக்கங்கள், நோய்கள், எல்லாம் போய்விடும்’ என்று மனமுருகக் கூறினார்.

 

எத்தனை பெரிய உபதேசம், ஒரு எளிய மனிதரிடமிருந்து என்று மெய் சிலிர்த்து நின்றோம் நாங்கள் மூவரும். குடுகுடு மாமிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அன்றிலிருந்து தினமும் எப்போதெல்லாம் ரங்க்ஜி மந்திர் ஸ்வாமி கூறியது நினைவிற்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஸ்வாமியின் திருநாமத்தை சேவித்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஸ்வாமியின் ஆயிரமாவது திருநட்சத்திரத்தை கொண்டாடும் இந்த வேளையில் இந்த பூமியில் நாம் இருப்பது எத்தனை பெரிய அதிர்ஷ்டம்!

 

பற்பமெனத் திகழ் பைங்கழலும் தண்பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்

முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!

 

இந்தப் பாடலைப் பாடும்போதே நம் கண் முன் ஸ்வாமியின் வடிவழகு தோன்றும். ஸ்வாமியின் திருத்தம்பி எம்பார் என்கிற கோவிந்தபட்டரால் இயற்றப்பட்ட பாடல் இது.

 

ஸ்வாமியை நினைத்தவர்களுக்கு எது எதிர்? வாழி எதிராசன்!

 

 

 

 

 

 

திருப்பாவை பிறந்த கதை

 

திரேதாயுகத்திலே மிதிலை ராஜன் ஜனகனுக்கு உழுபடைச்சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமான ஒருமகள் தோன்றினாள். அந்தக் குழந்தைக்கு அவ்வரசன் ‘சீதை’ என்று பெயரிட்டு தன் புத்திரியாக பாவித்து வளர்த்து வந்தான். அதேபோல கலியுகத்திலே பாண்டிய நாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூரிலே பெரியாழ்வார் தனது திருநந்தவனத்திலே திருத்துழாய் பாத்தியமைக்க களைக்கொட்டு கொண்டு கொத்துகையில், அக்கொத்தின நிலத்தில் ஸ்ரீதேவி, பூதேவிகளின் அம்சமான ஒரு மகள் தோன்றுகிறாள். திருவாடிப் பூரத்தில் உதித்த அந்தக் குழந்தைக்கு கோதை என்று திருநாமமிட்டு வளர்த்து வருகிறார் விஷ்ணுவை தன் சித்தத்திலே கொண்ட பெரியாழ்வார்.

 

சிறுவயதிலேயே கண்ணனின் பக்கத்திலே தீராத பக்திப் பெருவேட்கையுடனே அவனது கதைகளை தனது திருத்தகப்பனார் செந்தமிழில் பாடும் பாசுரங்கள் வழியே கேட்டு இன்புற்ற கோதை அவனையே மணாளனாகப் பெறவேண்டும் என்ற ஆசையுடனே வளர்ந்து வந்தாள். தனது திருத்தகப்பனார் வடபெருங்கோவிலுடையானுக்கு சாற்ற வேண்டுமென கட்டி வைத்திருக்கும் பூமாலைகளை அவரில்லாத சமயத்திலேயே சூட்டிக் கொண்டு, சிறந்த ஆடை, ஆபரணங்களையும் அணிந்து கொண்டு கண்ணாடியிலே ‘அந்தப் பெருமாளுக்கு நான் நேரொத்தவளா?’ என்று அழகு பார்த்துவிட்டு, தந்தை வருவதற்கு முன் அவற்றைக் களைந்து பூங்கூடையினுள்ளே வைத்துவிடுவாள். யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் நடக்கும் இதை அறியாத பெரியாழ்வார் அம்மாலைகளைப் பெருமாளுக்கு சாத்திவர, பெருமாளும் பரம ப்ரீத்தியுடனே அம்மாலைகளை ஏற்றான்.

 

ஒருநாள் ஆழ்வார் சீக்கிரம் திரும்பி வர, பெருமாளுக்கென்று வைக்கப்பட்டிருந்த மாலைகளை தனது மகள் சூடியிருக்கக் கண்டு வெகுவாக துக்கித்து, இனி இப்படி செய்ய வேண்டாம் என்று மகளுக்கு அறிவுரை சொல்லிவிட்டு பெருமாளின் கைங்கரியம் தடைபட்டுப் போனதே என்று வருந்தி இருந்தார். அன்றிரவு ஆழ்வாரின் கனவிலே வந்த வடபத்ரசாயி, ‘ஆழ்வீர்! இன்று மாலைகளைக் கொண்டு வராதது ஏன்?’ என்று வினவ, ஆழ்வாரும் தன் மகள் பெருமாளுக்கென்று வைத்திருந்த மாலைகளை தெரியாமல் சூடிக் கொண்டதைச் சொல்ல, ஆலிலைத் துயில்பவன், ‘கோதை சூடிக் களைந்த மாலையே எமக்கு மிகவுகப்பு. இனி அவள் சூடிக் களைந்த மாலைகளையே நமக்குக் கொண்டுவருவீராக’ என்று பணித்தான்.

 

மிகவும் மனமகிழ்வுற்ற ஆழ்வார் தன் மகள் மலர்மங்கை என்றே எண்ணி அவள் மீது அளவற்ற அன்பு கொண்டு பேணி வந்தார்.  இவள் வேறு யாருமல்ல அனைத்து உலகையும் ஆண்டு வரும் அந்த இலக்குமியே இப்படி ஒரு அவதாரம் எடுத்திருக்கிறாள் என்று உணர்ந்து கோதைக்கு ‘ஆண்டாள்’ என்றும், பெருமாளுக்கு உகந்த மாலைகளைத் தான் சூடிப் பார்த்து கொடுத்த காரணத்தால் ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்றும் திருப்பெயர்களை இட்டு அழைத்து வந்தார்.

 

வயது ஏற ஏற, பருவத்திற்குத் தகுந்தாற்போல கோதையின் ஞானபக்திகளும் வளர்ந்து வர, கடல்வண்ணனையே தன் காதலனாகக் கருதி அவன் விஷயமாக பெருவேட்கை கொண்டு அவனை அடைய வேண்டுமென்ற அவா மீதூற ஆயர் குலப்பெண்கள் போலே தானும் நோன்பு நோற்று அந்த நினைவிலேயே உயிர் வாழ்பவளாய் திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற திவ்யப்பிரபந்தங்களை இயற்றி தன் எண்ணங்களை பகவானிடத்தில் விண்ணப்பம் செய்து வாழ்ந்து வந்தாள்.

 

தன் திருமகள் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்த பெரியாழ்வார் அவளுக்கு கொழுநன் ஆக வரக்கூடியவன் யாரென்று யோசிக்கலானார். சரியாக யாரும் அமையாமையால், கோதையிடமே ‘நீ யாருக்கு வாழ்க்கைப் பட விரும்புகிறாய்?’ என்று வினவ, அவளும், ‘மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன். பெருமாளுக்கே உரியவளாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறுகிறாள். இவள் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் வடபெரும் கோயிலுடையானை விரும்பிச் சென்றாள். அவனோ இவளைக் கண் திறந்து பார்க்கவில்லை; புன்சிரிப்புக் காட்டவில்லை; வாவென்றழைக்கவில்லை. இதனால் மனம் மிகவும் வருந்தி இவனுடன் கலந்து பழகியவர்கள், வாழ்ந்தவர்கள் உண்டோ என்று ஆராயும்போது, திருவாய்ப்பாடியிலே இவன் கண்ணனாக வந்து அவதரித்த காலத்திலேஆய்ப்பாடிப் பெண்கள் நோன்பு நோற்று இவனை அடைந்தார்கள் என்று கேள்விப்படுகிறாள்.

 

‘ஆனால் அவன் நடமாடிய பிருந்தாவனம், அவனும் ஆய்ப்பாடிச் சிறுமிகளும் நீர் விளையாட்டு செய்து மகிழ்ந்த யமுனை ஆறு, அவன் கல்லெடுத்துக் கல்மாரி காத்த கோவர்த்தனம் இவையெல்லாம் நெடுந் தூரமாயிருக்கிறபடியாலே என் செய்வது’ என்று வருந்தி யோசித்தாள். கிருஷ்ணாவதாரத்திலே நடந்த ராசக்ரீடையின் போது கிருஷ்ணன் மறைந்து போக அவனது பிரிவை ஆற்றாத கோபிகைகள் தங்களையே கண்ணனாக பாவித்து அவன் செய்த செயல்களை அநுகாரம் (பிறர் செய்வது போல செய்தல்) செய்து உயிர் தரித்தார்கள் என்ற செய்தி நினைவிற்கு வர, அதேபோல தானும் செய்யலாம் என்று முடிவு செய்தாள். கோபிகைகள் கிருஷ்ணனை அனுகரித்தார்கள். ஆண்டாள் கோபிகைகளை அநுகாரம்  செய்யத் தலைப்பட்டாள். கண்ணனை அடைய அவர்கள் நோற்ற நோன்பையே தானும் நோற்றாள். அதுவே திருப்பாவையாக உருவெடுத்தது.

 

ஆயர்பாடியில் கண்ணன் பிறந்து வளர்ந்துகொண்டிருக்கும் போது அவன் வயதொத்த இளம் பெண்கள் அவனது அழகிலும், குணங்களிலும், அதிமாநுஷ செயல்களிலும் மனதைப் பறிகொடுத்து அவனால் கவரப்பட்டனர். இதைக் கண்ட இடையர்கள் பெண்களைப் பிரித்து சிறையிட்டார்கள். இதன் காரணமாக மழை வராமல் போயிற்று. கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் நோன்பு நோற்றால் பசுக்களும், நாமும் நன்றாக இருப்போம்; நாடும் செழிக்கும் என்றறிந்த இடையர்கள் பெண்களைக் கூப்பிட்டு நோன்பு நோற்கச் செய்தனர். ஆனால் அவர்களுக்கு நோன்பு பற்றிய அறிவு இல்லாததால், கண்ணனையே கூப்பிட்டு நோன்பு நோற்கும் வழியை சொல்லித் தருமாறு அழைத்துப் பிரார்த்தித்தனர். கண்ணனும் சம்மதிக்க, பெண்களை கண்ணனிடம் ஒப்படைத்து நோன்பு நோற்கச் செய்தனர். பெண்களும் அதிக சந்தோஷத்தை அடைந்து தங்கள் தோழிகளை எழ்ப்பி, நப்பின்னையை எழுப்பி அவளை முன்னிட்டுக் கொண்டு நோன்பு நோற்று நோன்பின் பலனாக கண்ணனை அடைந்தனர்.

கோபிகைகள் கிருஷ்ணன் செய்தது போன்ற செயல்களைச் செய்தார்கள் அதாவது காயிகம் – காரியம் செய்தல். ஆண்டாள் செய்ததோ மானசீகம். கோபிகைகளைப் போல செயல் செய்யாமல் மனத்தால் பாவித்தல். கிருஷ்ணனைப் பிரிந்து வருந்திய ஆயர் சிறுமியரில் தன்னையும் ஒருத்தியாக பாவித்தாள். அந்த பாவனையில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடி ஆயிற்று. வடபெருங்கோயில் நந்தகோபனின் திருமாளிகை ஆயிற்று. வடபத்ரசாயி கண்ணன் ஆனான். தன் தோழிப்பெண்களை ஆயர்பாடிச் சிறுமிகளாக வைத்துக்கொண்டு கண்ணனை அடைய நோன்பு நோற்றாள். அவர்கள் மட்டுமல்ல; நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை, கோயில் காப்பான், வாசல் காப்பான் எல்லோரும் கோதையின் கற்பனையில் உதித்தனர். இந்த பாவனை மனதில் தோன்றிய பின்பே அவளுக்கு நிம்மதி உண்டாயிற்று. இந்த பாவனை முதிர முதிர தான் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை என்பதை மறந்தாள். இடைப் பேச்சும், இடை நடையும் உண்டாக இடைச்சியாகவே மாறினாள். இவளது திருமேனியில் கூட இயற்கையான வாசனை மறைந்து முடைநாற்றம் (இடைச்சிகள் எப்போதும் பால், தயிர், வெண்ணெய் இவற்றுடனேயே காலம் கழிப்பதால் அவர்களிடமிருந்து வரும் இந்த வாசனைகளை முடைநாற்றம் என்பார்கள்) ஏற்பட்டதாம்!

 

இனி திருப்பாவையின் தனியன் ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

 

 

 

.