இரண்டாவது மொழி  

வலம் மார்ச் 2019 இதழில் வெளியான கட்டுரை

ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’, ‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஓடின; ஓடின; ஓடின; வாழ்க்கையின் விளிம்பிற்கே ஓடின. ஒரு கட்டத்தில் தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது; நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே. என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம் சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’ என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று: ‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.

ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.

எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும் அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போது தான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில் பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.

என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான் பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது –  நாயெல்லாம் குலைக்கிறது – என்று நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே செத்து விழுந்து விடும்.

கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை வேடிக்கைப் பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத வேட்கை வந்துவிட்டது.

சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர் வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும் பொதுவான  நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும். முற்றத்தில் தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள் அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன் அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.

கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும் எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும் என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.

இந்த சமயத்தில் தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம் குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம். வரிசையாக குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம், காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப் பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன். அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியை சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும் ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா? என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வந்து மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று. ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில் அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாக பல வருடங்கள் தமிழைத் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.

திருமணம் ஆகி கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும் என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின் அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள். நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ’நீ இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக் கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.

பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம் கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ் தெரியவில்லை?’ என்று.

‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும் ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும்  ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள். மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம் நினைச்சுண்டே பார்க்காதே!. சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்

‘தோபஹர் (दोपहर) ………

3 மணிக்கு ………. (சீரியல் பெயர்)

3.30 மணிக்கு …… (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு என் பெண்ணிடம்  ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!

என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!

இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸா முகத்தை வைத்துக்கொண்டு டீவியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா. கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம் டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க ஆரம்பித்தேன்.

என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ் ஆகிவிட்டேன்.

அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி ஒன்று புது குடித்தனம்  வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை, எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு சர்க்கரையை போட்டு  சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.

‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்; இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது என்று ‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.

ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா. ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா. ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். ‘வாட் இஸ் யுவர் நேம்?’

‘மை நேம் இஸ் ருசி’

‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்

‘ஆண்டிஜி! ஐ ….. முஜே…….ஒன்லி ஒன் …. ஏக் ஹஸ்பெண்ட்….. ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்……..?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா? என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.

அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ?  கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை விட நான் ஹிந்தி கற்றுக் கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’ என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.

என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள் மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவை காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்தேன். ருசியை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரை கவனித்துக் கொள்ளும் மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.

ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச் சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது. அதனால் தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்னை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு; அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல் வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.

இரண்டாவது மொழி தானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன செய்ய?

 

 

 

 

 

பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3

ஆபிரகாம் லிங்கன்

 

சென்ற வாரம் ஒரு  அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்.

ஒரு குழந்தையை உருவாக்குவதுடன் தந்தையின் கடமை முடிவதில்லை. அந்தக் குழந்தை குடும்பத்தில் நல்ல மகனாக, பள்ளியில் சிறந்த மாணவனாக, அலுவலகத்தில் பொறுப்புள்ள ஊழியனாக, திருமணம் ஆனதும் அன்புக் கணவனாக, சமுதாயப் பொறுப்பு நிறைந்தவனாக  உருவாக்குவதில் தந்தையின் பங்கு கணிசமானது.

தந்தை ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் காரணகர்த்தாவாகவும், அவர்களது நலம் விரும்பியாகவும்,  அவர்களை நல்வழிப்படுத்துபவராகவும் இருக்கிறார்.

 

குழந்தை வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பாசம் மிகுந்த ஆதரவான தந்தை குழந்தையின் அறிவுத்திறன், மொழித்திறமை, சமூகத்திறன், படிப்புத்திறன், உள்ள உறுதி, சுய மரியாதை ஆரோக்கியமான சிந்தனை, நம்பகத்தன்மை போன்ற பன்முக வளர்ச்சிகளுக்கு வழி வகுக்கிறார்.

குழந்தைக்கு இளம் வயதில் தந்தையுடன் என்ன மாதிரியான உறவு ஏற்படுகிறதோ, அதுவே பிற்காலத்தில் மற்றவர்களுடனான அவனது உறவை தீர்மானிக்கிறது.

ஒரு குழந்தையை வளர்ப்பதில் அம்மா அப்பா இருவருக்குமே சரிசமமான பங்கு இருக்கிறது. அம்மா உணர்ச்சிபூர்வமான உறவை வளர்த்தால், அப்பா அறிவுபூர்வமாக குழந்தையுடன்  உறவாடுகிறார்.  இரண்டுமே குழந்தைக்குத் தேவை.

ஒரு மகனுக்கு அப்பாதான் முதல் ஹீரோ.ள மகளுக்கோ அவள் வாழ்வில் சந்திக்கும் முதல் ஆண் அப்பாதான். திருமண வயதில் இருக்கும் ஒரு பெண் அப்பாவைப் போல தனக்கு ஒரு துணை வேண்டும் என்றும் விரும்புகிறாள்.

ஒரு தந்தையின் முதல் கடமை தன் குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு கொடுப்பது. குழந்தைகளைச் சுற்றி அன்பு என்னும் அரண் அமைத்து, கூடவே பொருளாதாரப் பாதுகாப்பு கொடுப்பதும் தந்தைதான்.  குடும்பத்தினரின் தேவைகளை, ஆசைகளை, விருப்பங்களைப் பூர்த்தி செய்வது தந்தையின் தலையாய கடமையாகும்.

 

அதே சமயம் குழந்தைகள் சமூகத்தில் நல்ல மனிதர்களாக உருவாக அவர்களுக்கு உதாரணமாக நடந்து கொள்ள வேண்டியதும் தந்தையின் கடமைதான். குழந்தை பள்ளிப்பருவம் எய்தும் வேளையில் தந்தையின் பொறுப்பு பலமடங்கு அதிகரிக்கிறது.

 

எல்லா குழந்தைகளையும் போல தன் குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய  மதிப்பெண் வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் விரும்புகிறார். இதை தவிர ஒரு தந்தை வேறு என்ன எதிர் பார்க்க முடியும் என்று தோன்றுக்கூடும். இதோ ஒரு உதாரணத் தந்தை என்ன செய்கிறார் என்று  பார்க்கலாம்.

அந்தக் குழந்தை பள்ளி செல்லும் வயதை எட்டுகிறது. பள்ளியில் அவன் என்ன கற்கப்போகிறான்? யாருக்குத் தெரியும்? பள்ளியில் சேர்த்து விட்டு விட்டால் நம் கடமை முடிந்தது. டீச்சர் பாடு குழந்தை பாடு என்று அந்தத் தந்தையால் இருக்க முடியவில்லை. எடுக்கிறார் காகிதத்தையும் எழுதுகோலையும். எழுதுகிறார் இப்படி:

 

மரியாதைக்குரிய ஆசிரியரே!

எல்லா மனிதர்களும் நியாயமானவர்களோ, உண்மையானவர்களோ இல்லை என்று என் மகன் கற்கக் கூடும். ஆனால் ஒவ்வொரு கெட்ட மனிதனுக்கும் ஒரு நல்லவன் உண்டு; சுயநல அரசியல்வாதிகளிடையே அர்பணிப்பு செய்யும் ஒரு தலைவன் இருப்பான்;  பகைவன் இருக்கும் இடத்தில் ஒரு நண்பன் இருப்பான் என்பதை அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தெருவில் கண்டெடுக்கும் ஐந்து ரூபாயை விட அவனாகச் சம்பாதிக்கும் ஒரு ரூபாய் உயர்ந்தது என்று அவனுக்கு சொல்லிக் கொடுங்கள்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை ரசிக்கவும் கற்றுக் கொடுங்கள்.

பகைமை என்பதிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்யுங்கள்.

அமைதியான சிரிப்பின் ரகசியத்தை அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். அடாவடித்தனம் செய்பவனை மிகச் சுலபத்தில் வீழ்த்தி விடலாம் என்று அவன் அறியட்டும்.

புத்தகம் என்னும் அதிசயத்தை அவனுக்கு அறிமுகப் படுத்துங்கள். அதே சமயம் வானத்தில் பறக்கும் பறவைகள், வெய்யிலில் அலையும் தேனீக்கள், பசுமையான மலைப்பகுதியில் தோன்றும் மலர்கள் போன்ற இயற்கை அதிசய ங்களை ரசிக்கும் ஆர்வத்தையும் அவனுக்கு ஏற்படுத்துங்கள்.

பள்ளியில் ஏமாற்றி வெற்றி அடைவதை விட தோல்வியில் மரியாதை ஏற்படும் என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள்.

அவனது சுயசிந்தனைகள் தவறானவை என்று எல்லோரும் சொன்னாலும், அவற்றின் மேல் நம்பிக்கை வைக்கச் சொல்லிக் கொடுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், கரடுமுரடானவர்களிடம் கரடுமுரடாகவும் இருக்கக் கற்றுக் கொடுங்கள்.

ஆட்டுமந்தையில் ஒரு ஆடாக இல்லாமல் தனித்து நிற்கும் பலத்தை அவனிடத்தில் ஏற்படுத்துங்கள்.

எல்லோர் சொல்வதையும்  கேட்கட்டும். தான் கேட்டதையெல்லாம் உண்மை என்னும் வடிகட்டி மூலம் வடித்து எடுத்துவிட்டு நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுங்கள்.

இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொல்லிக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் எந்த வெட்கமும் இல்லை என்று புரிய வையுங்கள். வெட்டிப் பேச்சாளர்களை விலக்கி வைக்கவும், தேனொழுகப் பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் சொல்லிக் கொடுங்கள்.

அவனது உடல் உழைப்பையும், அறிவுத்திறனையும் மதிப்பவர்களிடம் அவற்றை விற்கச் சொல்லிக் கொடுங்கள். ஆனால் இதயத்திற்கோ, ஆன்மாவிற்கோ விலை இல்லை என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

வெற்றுக் கூச்சலுக்குக் காதுகளை மூடிக் கொள்ளவும், தன்னுடைய உரிமைகளுக்கு போராடவும் சொல்லிக் கொடுங்கள். தான் சரி என்று நினைப்பதை போராடிப் பெறவும் சொல்லிக் கொடுங்கள்.

அவனை மென்மையாகக் கையாளுங்கள். ஆனால் ரொம்பவும் செல்லம் கொடுக்க வேண்டாம். தங்கத்தைப் புடம் போட்டால் தான் நகைகள் செய்ய முடியும்.

 

அநியாயத்தைக் கண்டு பொங்குவதற்கு பொறுமை வேண்டாம்; ஆனால் பொறுமையாக இருப்பதுவும் வீரத்தில் ஒரு வகை என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள். அவனிடத்தில் அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவனுக்கு நம்பிக்கை வரும்.

நான் மிக அதிகமாகக் கேட்பது போல உங்களுக்குத் தோன்றலாம். உங்களால் என்ன  செய்ய முடியும் என்று பாருங்கள். என் மகன் அருமையான ஒரு குட்டிப்பையன்.

இப்படிக்கு

ஆபிரகாம் லிங்கன்

ஆம் இந்தக் கடிதத்தை எழுதியது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தான்.

பள்ளியில் தன் மகன் என்ன கற்க வேண்டும் என்பதை சொல்வது போல தோன்றினாலும் ஒரு குழந்தையை உருவாக்குவதில்  ஆசிரியரின் பங்கு என்ன என்றும் நாசூக்காக சொல்லிச் செல்லுகிறார், இல்லையா?

அன்புள்ள இந்திரா நூயி….

குங்குமம் தோழி இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் எனது கட்டுரைத் தொடர்:

முதல் பகுதி 

இரண்டாவது பகுதி

 

‘உங்களிடமிருந்து நான் வித்தியாசமாக எதிர்பார்த்தேன்….!’

 

புதுயுகப் பெண்கள் வரிசையில் இல்லாவிட்டாலும் அவர்கள் தங்கள் உதாரண மனுஷியாகச் சுட்டிக் காண்பிப்பது திருமதி இந்திரா நூயியைத்தான். அவரது குற்றஉணர்ச்சி பற்றி புதுயுகப்பெண்களின் எதிர்வினை என்ன? அவர்கள் எப்படி இந்த விஷயத்தைப் பார்க்கிறார்கள்? ஸ்ருதி படேல் என்கிற பெண் ‘உங்களிடமிருந்து நான் வித்தியாசமாக எதிர்பார்த்தேன்….!’ என்கிறார் இந்திரா நூயிக்கு அவர் எழுதிய ஒரு பகிரங்கக்  கடிதத்தில். இதோ அந்தக் கடிதம்:

 

அன்புள்ள திருமதி இந்திரா நூயி,

 

நான் உங்கள் விசிறி அல்ல என்று சொன்னால் அது பொய். உங்கள் பதவி மிகவும் விரும்பத்தக்க ஒன்று. நீங்கள் எட்டிப்பிடித்த உயரத்தை யாராலும் உங்களிடமிருந்து பறித்துக்கொண்டு போய்விட முடியாது. ஆனால் தாய்மை என்பதைப் பற்றிய உங்கள் பார்வை பழைமையானது;  வெளிப்படையாகச் சொன்னால் அபத்தமானது. நீங்கள் உங்களது நேர்முகப்பேட்டியில் சொன்னதில் பல தவறானவை. அவற்றைப் பற்றித்தான் இப்போது நான் பேசப்போகிறேன்.

 

உங்கள் கலாச்சாரத்தில் வந்த ஒரு ஆசியப் பெண் நான் என்பதால் உங்கள் நிலைமை நன்றாகப் புரிகிறது. பிறந்த முதல்நாளிலிருந்து எப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் அம்மா சொன்னாரோ அப்படியே நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். வீட்டில் நீங்கள் ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மருமகள், ஒரு அம்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 

அலுவலகத்தில் நீங்கள் ஒரு வெற்றியாளராக இருந்தாலும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் CEO ஆகவே இருந்தாலும் உங்கள் கிரீடத்தை நீங்கள் ஏன் கார் நிறுத்துமிடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்பது தான் என் கேள்வி/ உங்களது சாதனைகள் குறித்து நீங்கள் ஏன் வீட்டிலும் பெருமைபடக்கூடாது? வீட்டிற்குள் நுழைந்தவுடன் நீங்கள் வேறு ஒருவராக மாறிவிடுகிறீர்களா, என்ன?

 

வீட்டில் நீங்கள் ஏற்கும் பாத்திரம் ஏன் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்காக மட்டுமே இருக்கவேண்டும்? நீங்கள் இந்திரா நூயி CEO பெப்சிகோ, மனைவி, மகள், மருமகள் கூடவே அம்மா என்று வீட்டிலும் ஏன் இருக்கக்கூடாது? உங்களுக்குக் கிடைத்திருக்கும் கிரீடம் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தது, உங்கள் குடும்பத்தினரை விட்டு அதை வேறு யாருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்?

 

உங்களுக்குப் போதிய அவகாசமில்லாததால், மற்ற அம்மாக்களைப் போல உங்கள் மகளுடன் சேர்ந்து வகுப்பறையில் காபி பருக முடியாமல் போய்விட்டதே என்று நீங்கள் விவாதிக்கலாம். இதுதான் இரண்டாவது பிரச்னை. இது உங்களுக்கே உரித்தானது மட்டுமில்லை. பெற்றோர் என்பது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவான வார்த்தை. புதன்கிழமைக்காலை காபி ஏன் அம்மாக்களுக்கு மட்டும் என்று இருக்கவேண்டும்? நமது சமூகத்தின் எழுதப்படாத விதியான ‘குழந்தைகளை அம்மா பார்த்துக்கொள்ள வேண்டும்; அப்பா வெளியில் போய் வேலை செய்வார்’ என்பதன் எதிரொலி இது.

 

அம்மாக்கள் இல்லாத குழந்தைகள் ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அன்பானவர்களாக, வெற்றி பெறுபவர்களாக ஆகிறார்கள். சிலருக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கலாம், அல்லது அப்பா மட்டும், அல்லது அம்மா மட்டும் இருக்கலாம். அவர்களால் புதன்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு வரமுடியாமல் போகலாம். அப்போது என்ன செய்வது? பிரச்னை என்பது பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது என்பதில் இல்லை; இந்த சமூகம் பெண்கள்தான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லுவதுதான் பிரச்னை. முதலில் அந்த  எண்ணத்தைத் தூக்கி எறியவேண்டும். உங்கள் கணவர் உங்களைப் புரிந்துகொள்பவராகவும், அன்பானவராகவும் இருப்பவர் என்று தோன்றுகிறது. உங்களுக்குப் பதில் புதன்கிழமைகளில் உங்கள் மகளின் பள்ளிக்கு அவர் ஏன் செல்லக்கூடாது?

 

ஒருவிஷயம் நீங்கள் சொன்னது சரி. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. ‘தி ப்ரிசனர் ஆப் அஸ்கபான்’ (The Prisoner of Azkaban) திரைப்படத்தில் வரும் ஹாரிபாட்டர் பாத்திரம் போல நேரத்தை திருப்பி வைப்பவர் ஆக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நமக்கெல்லாம் – ஆண்கள், பெண்கள் இருபாலருக்குமே – ஒரு நாளைக்கு 24 மணிநேரம் தான். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால், வீட்டில் இருக்கும் நேரம் குறையத்தான் செய்யும். உங்கள் கணக்கு எனக்குப் புரிகிறது. ஆனால் ஏன் நீங்கள் பெண்களை பற்றி மட்டும் பேசுகிறீர்கள்?

 

ஏனெனில் உங்கள் மனதிலும், பல்லாயிரக்கணக்கானவர்களின் மனதிலும் பெண்கள் பல விஷயங்களுக்குப் பொறுப்பு என்று தோன்றுகிறது. ஒரு மனைவியாகவும் அம்மாவாகவும் நம் குழந்தைகளையும், கணவரையும் பார்த்துக் கொள்வது நம் கடமை. அதேபோல ஒரு மகளாகவும், மருமகளாகவும் பெரியவர்களின் தேவைகளை கவனித்துக் கொள்வதும் நம் பொறுப்பு. ஆனால் நாம் மட்டும்தான் பொறுப்பா? நாம் எல்லோரும் ஒரு நல்ல அம்மா, மனைவி, மகள் ஆக இருக்க விரும்புகிறோம். ஆனால் ஆண்களுக்கும் இது போல பொறுப்புகள் இருக்கின்றன, இல்லையா?

 

நீங்கள் வெளிப்படையாகச் சொல்லுகிறீர்கள்: ‘தினம் தினம் இன்றைக்கு நாம் மனைவியா, அம்மாவா என்று முடிவு எடுக்க வேண்டும். உண்மையில் ஒரு நாளின் பல நேரங்களிலும் இதைப் போல முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்று.

 

நீங்கள் இப்படியெல்லாம் யோசனை செய்வது மிகப்பெரிய விஷயம் என்றாலும், ஒரு ஆண் CEO இதுபோன்று – நான் இன்று அப்பாவா? கணவனா? – என்ற முடிவுகளை எடுக்க வேண்டியிருக்குமா? இது பாலினம் சார்ந்த பிரச்னை அல்ல. உங்களுடைய நேர்முகப்பேட்டி பழமையான ‘குடும்பம்’ என்ற அமைப்பை சார்ந்து இருப்பதால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்களது கனவான ‘தலைமைத்துவ’த்திலிருந்து விலகிச் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

 

நான் உங்களிடமிருந்து வித்தியாசமாக எதிர்பார்த்தேன். ஒரு பெண் CEO வாக நீங்கள் எண்ணற்ற பெண்களைக் கவர்ந்திருக்கிறீர்கள். எதிர்காலப் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன்னோடி. தங்களது அலுவலக வேலைப்பணிகளிலும் வெற்றி அடைந்து, வீட்டிலும் மிகச்சிறந்த அம்மாவாக, மகளாக, மனைவியாக ஒரு பெண் மாறி மாறி இருக்க முடியும் என்பதை நம்பும் அளவு நான் ஒன்றும் தெரியாதவள் இல்லை.

 

அலுவலகப் பணிகளுக்காக நீங்கள் வீட்டுப் பணிகளில் செய்யும் தியாகம் என்பது  சாதனைகளின் ஒரு அங்கம் என்று நான் அடையாளம் காண்கிறேன். உங்கள் நேர்முகப்பேட்டியில் நீங்கள் உங்களை மற்ற அம்மாக்களுடன் ஒப்பிட்டுப்பார்த்து ‘நான் சிறந்த அம்மா இல்லையோ’ என்று சொல்லியிருக்கிறீர்கள். அது சரியல்ல. ஒரு வெற்றியாளராக, பணிகளைச் சிறப்பாகச் செய்யத் தூண்டுபவராக, பின்பற்றத் தகுந்தவராக ,உறவுகளை பேணிக் காப்பவராக உங்களிடமிருந்து உங்கள் கணவரும், குழந்தைகளும் நிறைய கற்றுக் கொண்டுள்ளார்கள். சமூகத்தினுடைய அளவுகோல்படி நீங்கள் சிறந்த அம்மா இல்லை என்று ஏதேதோ பேசி அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டவற்றை சிறுமை படுத்தாதீர்கள்.

 

இப்படிக்கு,

எதிர்கால அம்மா, எதிர்கால CEO

 

இந்தக் கடிதம் எழுதிய ஸ்ருதி படேல் 23 வயதான இளம் ஆசியப்பெண். நிறைய விஷயங்கள் பற்றி நிறைய யோசிப்பவர். பெண்ணியவாதி, சமஉரிமைக்காக குரல் கொடுப்பவர். பாடகி. பெண்கள் தங்கள் தகுதிகளை சரிவர அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பேசுபவர்.

எடுத்ததை எடுத்த இடத்தில்

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88

18.9.2016 தினமலர் வாரமலரில் வெளியான எனது கதை இங்கே:

 

 

இன்னும் சிறிது நேரத்தில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்கிற நினைவே இனித்தது. இந்த முறை அம்மாவிற்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அம்மா தனியாக இருப்பது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் அது அவனுக்கும் சௌகரியமாகவே இருந்தது. ஒரே இடத்தில் மனைவியையும், அம்மாவையும் சமாளிப்பது என்பது பெரும் சவாலான வேலையாக இருந்தது. இத்தனைக்கும் இருவரும் படித்தவர்கள்; அம்மா வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவள். மருமகள் வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவள்.

 

அம்மா பர்பக்ஷனிஸ்ட். இது இது இந்தந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று பழகிவிட்டதோடு குழந்தைளையும் அந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவள். ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்’ என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை கேட்டுக்கேட்டே வளர்ந்தவர்கள் அவனும் அவன்  அக்காவும். அக்கா திருமணம் ஆகி புக்ககம் போன பின்னும் அம்மாவின் தாரக மந்திரத்தை மறக்காமல் தன் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டு விட்டாள். இவன்தான் திருமணம் ஆனவுடன் தடம் மாறிப்போனான்.

 

திருமணம் ஆன புதிதில் மனைவியிடம் அம்மாவின் இந்தக் கொள்கையைச்  சொல்லாததன் பலனை வெகு சீக்கிரமே அனுபவிக்க ஆரம்பித்தான். அவன் மனைவிக்கு எதையுமே எடுத்த இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கமே இருக்கவில்லை. அவள் எடுத்து வைக்கவில்லை என்றால் என்ன, நாமே செய்வோம் என்று ஆரம்பித்து இன்று வரை அவன்தான் எல்லா ஒழுங்குமுறைகளையும் பின்பற்றி வருகிறான். அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. தலைவாரும் சீப்பிலிருந்து எது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கிடக்கும். ஆபீஸ் போகும் அவசரத்தில் அவளது சீப்பு கிடைக்கவில்லை என்றால் இவனுடைய சீப்பை எடுத்து வாரிக்கொண்டு போய்விடுவாள். அவனுக்கொன்றும் அதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அதில் சுற்றியிருக்கும் தலைமுடியை இடத்துச் சுற்றிப் போடாமல் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவாள். கோபம் தாங்காமல் அந்த சீப்பை எடுத்து அவளது கைப்பையில் போட்டிருக்கிறான், பலமுறை. பலன் எதுவுமில்லை. அவளைத் திருத்த அவனும் முயன்று முயன்று இன்றுவரை  தோல்விதான்.

 

காலையில் எழுந்ததிலிருந்து எதையாவது தேடிக்கொண்டே இருப்பாள். தேடுவதிலேயே நேரம் ஆகிவிடும். சரி இன்று தேடுகிறோமே, கிடைத்தவுடன்  சரியான இடத்தில் வைப்போம் என்று வைப்பாளா, அதுவும் கிடையாது. தினமும் தேடலோத்சவம் தான். காலைவேளையில் இவன் வீட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்திற்கு அம்மா வைத்த பெயர். இப்படிப் பெயர் வைப்பதில் அம்மாவிற்கு நிகர் அம்மாதான். பெங்களூர் வந்த புதிதில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போவார்கள். அங்கு ஒரு எழுதுபொருள் விற்கும் கடை. அங்கு எது கேட்டாலும் அந்தக்கடைக்காரர் தேட ஆரம்பிப்பார். ஒரே தடவையில், தேடாமல் கேட்டதை எடுத்துக் கொடுத்தே கிடையாது. அவருக்கு அம்மா ‘தேடல் மன்னன்’ என்று பெயர் வைத்துவிட்டாள். தேடல் மன்னன் கடை என்றே அம்மா சொல்லிச் சொல்லி அவரது கடைப்பெயர் என்னவென்றே மறந்து போய்விட்டது!

 

திருமணம் ஆகி அவள் வந்த ஒருவாரத்திலேயே அம்மாவிற்கு அவளது ஒழுங்கின்மை புரிந்துவிட்டது. அவனுக்காகப் பேசாமல் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தாள். புது மனைவி அதிகம் சொல்லமுடியவில்லை என்ற அவனது பலவீனம் அம்மாவிற்குப் புரிய, ‘தவிட்டுப்பானை தாடாளனை சேவித்துக்கொண்டு சீர்காழியிலேயே இருக்கிறேன்’ என்று கிளம்பிவிட்டாள்.

 

அம்மா அவனது திருமணத்திற்கு முன்பும் அங்கேதான் இருந்தாள். அவன் படித்ததும் அங்குதான். சின்ன வயதிலேயே அப்பா பரமபதித்துவிட, அப்பா வேலை பார்த்துக்கொண்டிருந்த வங்கியிலேயே அம்மாவுக்கு வேலை கிடைத்தது. மேல்படிப்பிற்காக சீர்காழியை விட்டு வெளியே வந்தவன், படித்து முடித்து சில வருடங்கள் வெளிநாடும் போய்விட்டு வந்தான். திருமணத்திற்கு முன் சென்னையில் வீடு வாங்கினான். அம்மாவிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். புது வீட்டைப் பார்த்துப்பார்த்து அலங்கரித்தாள். ஷோ-கேஸ் பொம்மைகளை தினமும் மாற்றி மாற்றி வைத்தாள். வீட்டினுள் செடிகளை வைப்பது அம்மாவிற்கு மிகவும் பிடித்த விஷயம். அவைகளையும் அவ்வப்போது மாற்றுவாள். ஒவ்வொரு செடியின் அடியிலும் ஒரு அலுமினிய தட்டு வைத்திருப்பாள். செடிகளுக்கு விடும் நீர் அவற்றில் தேங்கும். தரை பாழாகாது என்பாள் அம்மா. செடிகளின் இலைகளுக்கும் நீர் தெளிப்பானால் தண்ணீர் அடிப்பாள். பச்சைபசேல் என்று வீடே ஜொலிக்கும்.

 

முக்கியமாக தளிகை உள் அம்மாவின் மனதிற்கு நெருக்கமான இடம். ஒரே மாதிரியான கண்ணாடி பாட்டில்கள் வாங்கி சாமான்களைக் கொட்டி வைத்தாள். எல்லா சாமான்களுக்குள்ளும் ஒரு எவர்சில்வர் கரண்டி. அம்மா எதையும் கையால் தொடவே மாட்டாள். சிங்கில் ஒரு பாத்திரம் கூட இருக்காது. எவர்சில்வர் சிங்க் அம்மாவின் கைவண்ணத்தில் பளபளவென்று மின்னும்.

 

அம்மா எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவனுக்கு இன்னும் நினைவிருக்கும் ஒரு விஷயம்: அவர்கள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வருடமும் பள்ளி முடிந்தவுடன் அம்மா நோட்டுப் புத்தகங்களில் மீதியிருக்கும் எழுதாத பக்கங்களை எடுத்து ஒன்றாக வைத்துத் தைத்துக் கொடுப்பாள். அம்மாவின் கைத்திறன் இதிலும் தெரியும். வேறு வேறு நோட்டுப் புத்தகங்களில் இருக்கும் தாள்களை எடுத்து ஓரங்களை ஒரே அளவில் கத்தரித்து, அதற்கு வீட்டில் இருக்கும் பழைய காலண்டர்களின் கெட்டியான தாள்களை வைத்து அட்டை மாதிரி தைத்துக் கொடுப்பாள். பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். இதை எங்கே வாங்கினாய் என்று அவர்களது வகுப்பு மாணவர்கள்  கேட்கும் அளவிற்கு அந்த நோட்டுப்புத்தகம் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அதை ரஃப் நோட் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். சிலர் எங்களுக்கும் அதைப் போலத் தைத்துக் கொடுக்கச் சொல்லு என்று கேட்பார்கள். அம்மா மறுத்துவிடுவாள்.

 

எந்த வேலையையும் அம்மா ஒத்திப்போட்டதே இல்லை. செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். இவன் மனைவி நேர்மாறு. ‘இப்படி ஒரு மாமியாருக்கு இப்படி ஒரு மாட்டுப்பெண். உன்னோட தவிட்டுப்பானை தாடாளனின் திருவுள்ளம்!’ என்று அம்மாவைக் கிண்டல் அடிப்பான். அம்மாவும் இவனைப் பார்த்து ‘பாரதியார் உனக்காகத்தான் இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறார் ‘திக்குத் தெரியாத காட்டில் – ……………… தேடித்தேடி இளைத்தே……ஏ………ஏ……னே……! ‘ என்று பாடிவிட்டு, ‘அந்த கோடிட்ட இடத்தில் ‘சீப்பு சோப்பு இன்ன பிற என்று நிரப்புக….!’  என்று சொல்லி வாய்விட்டு சிரிப்பாள்.

 

ஒவ்வொருமுறை ஊருக்கு அம்மாவைப் பார்க்க வரும்போதும் அம்மாவை தன்னுடன் வரச்சொல்லிக் கூப்பிடுவான். மறுத்துவிடுவாள்.

‘என்னால அந்த ஊழல சகிச்சுக்க முடியாதுடா!’

‘ஏம்மா! அவகிட்ட இருக்கற நல்லத பார்க்கமாட்டியா?’

வாயைத் திறக்கமாட்டாள் அம்மா.

பிறகு ஒருநாளில் சொன்னாள்: ‘அடிப்படை சுத்தம் வேண்டாமா? நான் ஒன்றும் மடி ஆசாரம் என்று சொல்லிக்கொண்டு இதைத்தொடாதே, அதைத் தொடாதேன்னு சொல்றதில்லை. வீட்டுக்குள்ள நுழைஞ்சா எங்க பார்த்தாலும் சாமான்கள்! அததற்கு என்று இடம் இருக்கிறது இல்லையா? துப்பட்டாவை ப்ரிட்ஜ் மேல போடுவாளா? ஆபீஸ்ல சாப்பிட்ட டிபன் பாக்ஸ் ஒரு அலம்பு அலம்பி எடுத்துண்டு வரக்கூடாதா? வரக் வரக்குனு காஞ்சு போயி…… அப்படியே வெளி சிங்க்ல போடறா! என்னால பாக்க முடியலடா! வேற எந்த விஷயத்துலயும் அவ மேல எனக்குக் கோவம் இல்லை. புரிஞ்சுக்கோ!’

 

‘ஆபீஸ் போறவம்மா….!’ அம்மா பளிச்சுன்னு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள். கோவம் இல்லை அந்தக் கண்களில். அடிபட்ட உணர்வு. ‘நானும் ஆபீஸ் போனவதாண்டா! உங்க அப்பா போகும்போது நீங்க ரெண்டுபேரும் பள்ளிக்கூடம் போற குழந்தைகள். உங்களையும் பார்த்துண்டு, வீட்டையும் கவனிச்சுண்டு, ஆபீஸுக்கும் போயிண்டு இருந்தேன். இத்தனைக்கும் வீட்டுல வேலை செய்ய ஆள் கூட இல்லை….! என்னிக்காவது அழுக்கான ட்ரெஸ் போட்டுண்டு போயிருக்கேளா? தோய்க்காத சாக்ஸ்? பெருக்காம, தண்ணி தெளிக்காம, வாசலுக்குக் கோலம் போடாம இருந்ததுண்டா? இங்க கைக்கு ஒரு ஆள், காலுக்கு ஒரு ஆள்…!’

 

‘அம்மா…! இது வீடா? இல்லை மியூசியமாம்மா? எல்லாம் அததோட இடத்துல இருக்கணும்னா?’ என்று ஜோக் அடித்து அம்மாவின் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பான்.

 

ஒவ்வொருமுறை இவன் ஊருக்கு வரும் போதும் அம்மாவின் மனதை மாற்ற ஆனவரை முயலுவான்.

 

‘நான் உனக்கு முக்கியமில்லையா?’ என்று கூட கேட்டுவிட்டான். ‘நீ எனக்கு முக்கியம். கூடவே வீடு ஒழுங்கா இருக்கறது இன்னும் முக்கியம்!’

 

அவனுக்கு குழந்தை பிறந்தவுடன் அம்மா குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக வந்தாள். குழந்தைக்கு என்று தனது காட்டன் புடவைகளை நான்காக மடித்து ஓரங்கள் தைத்துக் கொண்டு வந்திருந்தாள். குழந்தைக்கு கீழே போட்டிருந்த பிளாஸ்டிக் ஷீட்டை எடுத்துவிட்டு தன் புடவைகளைப் போட்டாள். ‘இந்த காலத்துல யாரு மாமி இப்படித் துணி போட்டு குழந்தையை விடறா?’ என்று கேட்ட சம்பந்தி மாமியை அம்மா கண்டுகொள்ளவே இல்லை. வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு டயபர் கட்டக்கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னாள். கொஞ்சநாட்கள் தான் அம்மாவின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது. குழந்தைத் துணிகள் வீடு முழுவதும் இறைந்து கிடக்க ஆரம்பித்தன. சகிக்க முடியாமல் அம்மா சீர்காழிக்குத் திரும்பினாள்.

 

குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. அவனால் முன் போல அதிகம் ஊருக்குப் போகமுடியவில்லை. அம்மா ஒன்று இரண்டில் வந்த போய்க்கொண்டிருந்தாள். குழந்தையின் சாமான்கள் இப்போது வீடு முழுவதும்! குழந்தை விளையாடுகிறதோ, இல்லையோ, காலையில் அதனுடைய விளையாட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு வந்து ஹாலில் கொட்டிவிடுவாள் இவன் மனைவி. அம்மா வரும்போது குழந்தையின் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டுப் போவாள்.

 

ஒரு விஷயம் இவனுக்கு அம்மாவிடம் பிடித்தது – மாட்டுப்பெண்ணிடம் சகஜமாகவே இருந்தாள். தன்னால் முடிந்தவரை அவளுக்கு உதவினாள். அவள் செய்யும் தளிகையைப் பாராட்டினாள். முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்தாள்.

 

‘ஏம்மா! நீயே அவளிடம் சொல்லேன், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள் என்று. உன்னோட தாரக மந்திரத்தையும் சொல்லிக்கொடேன்…!’ என்று சீண்டினான். அம்மா சொன்னாள் : ‘சுத்தம், ஒழுங்கெல்லாம் பிறவியிலேயே வரணும்டா! சொல்லி வராது. அட்லீஸ்ட் என்னைப் பார்த்தாவது கத்துக்கலாம்….!’ அதைக்கூட அவளிடம் சொல்லமாட்டாள். இவனிடம் தான் சொல்லி வருத்தப்படுவாள்.

 

நினைவுகளில் பயணித்துக் கொண்டிருந்தவன் ‘சீர்காழி, சீர்காழி’ என்ற கூவல் கேட்டுக் கண் விழித்தான். பேருந்திலிருந்து இறங்கி குழந்தையையும் அழைத்துக் கொண்டு  நடந்தான். அம்மா இவனுக்காகக் காத்திருந்தாள். குழந்தை ‘பாட்டீ…..! என்று ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக்கொண்டது. ‘அட என் பட்டுகுட்டி! நீயும் வந்திருக்கியா?’ என்று ஓடிவந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அணைத்து முத்தமிட்டாள். குழந்தை பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ‘நீயும் எங்களோட ஊருக்கு வந்துடு பாட்டி!’ என்றது.

 

இவனும் பின்னாலேயே வந்து வீட்டுக்கூடத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தான். குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு, அம்மா இவனுக்கு சுடச்சுட காப்பி கொண்டுவந்தாள். ‘இந்தா, முதலில் இதைச் சாப்பிடு! சாப்பாடும் ரெடி’ என்றாள்.

 

‘கோந்தைக்கு என்ன கொடுக்கட்டும்?’ என்று கேட்டவாறே குழந்தைக்காகத் தான் வாங்கிவைத்திருந்த புது விளையாட்டு சாமான்களை குழந்தையிடம் கொடுத்தாள். குழந்தை சந்தோஷமாக விளையாட ஆரம்பித்தது.

 

அவன் உட்கார்ந்த இடத்திலேயே செருப்பைக் கழற்றிவிட்டு, ‘இரும்மா! கைகால் அலம்பிக்கொண்டு வருகிறேன்’ என்று எழுந்தான். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இவனைத் திரும்பிப் பார்த்து சொல்லிற்று:

 

‘செருப்பை செருப்பு அலமாரில விடுப்பா! அத அத அந்தந்த இடத்தில வைக்கணும்!’

 

அம்மாவும் அவனும் அதிர்ந்து போனார்கள். அதிர்ச்சியிலிருந்து முதலில் விடுபட்டது அம்மாதான். ‘எனக்கு வாரிசு வந்துட்டா! இந்த தடவை உன்னோட ஊருக்கு வரேண்டா!’ என்றபடியே குழந்தையை இறுக்கிக்கட்டிக்கொண்டாள் அம்மா.

 

அவனும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்!

 

 

 

பழைய பெங்களூர் சில புகைப்படங்கள்

Fraser Town Underbridge

கார்டூனிஸ்ட் திரு பால் பெர்னாண்டஸ்-இன் ஓவியங்கள் பெங்களூரின் அந்த நாளைய வாழ்வைச் சுற்றியே இருக்கின்றன. இந்தியாவைச் சேர்ந்த இவர் 60,70 களில் பெங்களூரில் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை தனது வாட்டர் கலர் கார்ட்டூன்கள் மூலம் சொல்லுகிறார்.

இந்த தொடர் சித்திரங்களில் அவர் பெங்களூரின் பிரபல இடங்களையும் தனது மூதாதையர்களின் வீட்டையும் வரைந்திருக்கிறார்.

‘பத்து வருடங்களுக்கு முன் எங்கள் பழைய வீடு எனக்கும் என் உடன்பிறந்தவர்களுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. அந்த வீடு மிகப்பெரியது. அழகான தோட்டங்களுடன் 40  பழமரங்களுடன் இருந்தது.

வீடு தரைமட்டமானவுடன் எனக்கு இந்த நகரம் எப்படி மாறியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் நான் வளர்ந்த இந்த நகரத்தை – என் நினைவில் இருக்கும், எனக்குப்பிடித்த, நான் ஆசை ஆசையாகச் சுற்றி வந்த பல இடங்களையும் வரைய ஆரம்பித்தேன்.

இதன் விளைவு 75 ஓவியங்களும், வரைபடங்களும். முழுமையாக அந்த நாட்களின் நினைவுகளுடன் வரைந்தவை இவை’ என்கிறார்.

 

 

Bangalore Club

தி பெங்களூர் க்ளப் – பிரிட்டிஷ் கட்டிடக்கலைக்கு ஒரு மாதிரி. இன்னும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 1868 ஆம் ஆண்டு சில பிரிட்டிஷ் அதிகாரிகளால் நிறுவப்பட்ட இந்த க்ளப்பில் நிறைய சிறப்பு அங்கத்தினர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பழைய இங்கிலாந்து பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில். இவர் கொடுக்காது போன பில் ரூ 13 (20 சென்ட்ஸ், 14 பென்ஸ்) இன்னும் பாக்கி இருக்கிறது. பிரபல படத்தயாரிப்பாளர் திரு டேவிட் லீன் கடும் விமரிசனத்திற்கு ஆளான தனது பாசேஜ் டு இந்தியா (Passage to India) திரைப்படத்தின்  சில பகுதிகளை இந்த க்ளப்பில் எடுத்தார். ‘இன்னும் இயங்கி வரும் இந்த க்ளப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்த அங்கத்தினர்கள் இன்னும் இருக்கிறார்கள்’ என்கிறார் திரு பெர்னாண்டஸ்.

 

Barber's house call

அந்தக்காலத்தில் மக்கள் சலூனுக்குப் போகமாட்டார்கள். பதிலாக முடிதிருத்துபவர் வீடுகளுக்கு வருவார். ஒரு சைக்கிளில் தனது கருவிகளை (தலைமுடி வெட்டத்தான்!) ஒரு துணிப்பையில் எடுத்துக்கொண்டு வருவார். வீட்டின் மரத்தடியில் ஒரு நாற்காலி போடப்பட்டு வீட்டில் இருக்கும் சிறுவர், சிறுமியர், ஆண்கள் எல்லோரும் தலைமுடி வெட்டிக்கொள்ள வரிசையில் நிற்பார்கள்.

‘இதில் ஒரு சங்கடம் என்னவென்றால் அவருக்கு தலைமுடி வெட்ட ஒரே ஒரு ஸ்டைல் தான் தெரியும். எல்லோருடைய தலையையும் – சாரி தலைமுடியையும் அதே ஸ்டைலில் வெட்டிவிடுவார். என் சகோதரிகள் அவரிடம் சர்வதேச பத்திரிகைகளில் வரும் புதுப்புது வகையான முடி அலங்காரங்களை காட்டி அதுபோல வெட்டச் சொல்வார்கள். அவர்களது ஆசை ஒருநாளும் நிறைவேறாது’

‘70களில் நாங்க ஹிப்பி ஸ்டைலில் முடியை நீளமாக வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். பாவம் அவர், ‘இது எனது வியாபாரத்திற்கு நல்லதல்ல என்று வருத்தப்படுவார்!’ என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் பெர்னாண்டஸ்.

 

Coffee house

‘எம்.ஜி. ரோடில் இருக்கும் காபி ஹௌஸ் எங்களது உலகத்தின் மையப்பகுதி என்றே சொல்லவேண்டும். அப்போதே அது மிகவும் பிரபலமான இடம். நிறைய பத்திரிக்கையாளர்கள் வருவார்கள். ருசியான காபி அன்றும் இன்றும் அங்கு கிடைக்கும். அத்துடன் தோசை, ஆம்லெட் இவைகளும் கிடைக்கும். மதிய உணவு வேளையின் போது கூட்டம் அலைமோதும்.

சிலசமயங்களில் பத்திரிக்கையாளர்கள் எங்களது பக்கத்து மேஜையில் உட்கார்ந்துகொண்டு அடுத்தநாளைக்கான தலைப்புச் செய்திகளை அலசுவார்கள். அடுத்த நாள் அந்தத் தலைப்புகளில் செய்தி வரும்போது எங்களுக்கு மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கும்’

 

Commercial Street

கமர்ஷியல் ஸ்ட்ரீட் அந்தக்காலத்து ஷாப்பிங் மையம். உடைகள், நகைகள், வீட்டு உபயோக சாமான்கள், செருப்புகள் என்று எல்லாவிதமான பொருட்களும் கிடைக்குமிடம் இது. பொம்மைக்கடைகளும் தையற்கடைகளும் இங்கு நிறைந்து இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை கிறிஸ்துமஸ் சமயத்தில் என் அம்மா எங்களை இங்கு அழைத்துவந்து எனக்கும் என்னுடன் பிறந்த 9 சகோதர சகோதரிகளுக்கும் ஒரே மாதிரியான துணி வாங்குவார். பிறகு தையற்காரரிடம் அழைத்துப்போவார். அவர் எங்களின் அளவுகளை எடுத்துக்கொண்டு எங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடைகளை தைத்துக் கொடுப்பார்.

 

 

 

Cubbon Park Police Station

கப்பன் பார்க் (Cubbon Park) போலீஸ் ஸ்டேஷன் மிகவும் அழகான கட்டிடம். உண்மையில் இது ஒரு பழைய கால பிரிட்டிஷ் வீடு. 1910 ஆம் வருடம் போலீஸ் ஸ்டேஷன் ஆக மாற்றப் பட்டு இப்போதும் அப்படியே அழகாக இருக்கிறது.

‘60, 70 களில் பெங்களூர் மிகவும் சோம்பேறியான ஊர். குற்றங்கள் இல்லாமல் இருக்கும். எப்போதாவது ஒரு சைக்கிள் திருடு போகும்’ என்கிறார் பெர்னாண்டஸ்.

‘அப்போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். சைக்கிளில் ஊர் சுற்றிகொண்டிருப்பேன். அந்தக்கால போலீஸ்காரர்கள் தலையில் பூந்தொட்டி போல ஒரு தொப்பி அணிந்துகொண்டிருப்பார்கள். நாங்கள் போகிற போக்கில் அவர்களைத் தொட்டு, லேசாகத்தட்டி விட்டுவிட்டுப்போவோம். ஒருமுறை நான் அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டேன். என் அம்மா வந்து மன்னிப்புக் கேட்டபின்புதான் என்னை வெளியில் விட்டார்கள்’.

 

 

Good Manners

இந்த ஓவியத்தில் இருப்பது திரு பெர்னாண்டஸ் அவர்களின் மூதாதையர்களின் வீடு. அங்கு நிற்பது அவரது சகோதரிகளில் ஒருவர்.

‘என் தங்கை வெகு அழகாக இருப்பாள். இளைஞர்கள் வந்து அவளை பார்த்து ‘விஷ்’ பண்ணிவிட்டுப் போவார்கள். அங்கே என் மாமா அவளது பாதுகாப்பிற்காக கையில் துப்பாக்கியுடன், வாயில் வசவுகளுடன் இந்தப் பையன்களை பயமுறுத்தி விரட்ட சுற்றிக்கொண்டிருப்பார்’.

 

இன்னும் சில படங்கள் அடுத்த பதிவில்…….

 

நன்றி: மண்டயம் குழும மின்னஞ்சல்

 

 

 

 

 

 

 

 

 

 

‘பெண்கள் எல்லாவற்றையும் அடைய முடியாது!

 குங்குமம் தோழி 15.7.2016 இதழில் வெளிவந்த கட்டுரை

 kungmam 16.7.16

சென்ற பகுதியில் திருமணம் வேண்டும் ஆனால் குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெண்களைப் பார்த்தோம். இந்தப்பகுதியில் நீங்கள் சந்திக்கப்போவது ஒரு வித்தியாசமான பெண்மணி:

 

‘என் பெண்களைக் கேட்டீர்களானால் என்னை ஒரு நல்ல அம்மாவாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’

இப்படிச் சொன்னது ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருந்திருந்தால் நான் இதை இங்கு எழுதியே இருக்கமாட்டேன். அது ஒரு செய்தியாகவே ஆகி இருக்காது. சொன்னது உலகில் உள்ள – முக்கியமாக இந்தியாவில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பொறாமை கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்மணி! போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் 13 ஆம் இடத்தைப் பிடித்தவரும், உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்தின் உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி! அவர் இப்படிச் சொன்னார் என்றால் உலகமே கவனிக்காதோ? ஆம் கவனித்தது! உலகின் அத்தனை பகுதியிலிருந்தும் இவர் இப்படிச் சொன்னது குறித்து வாதங்கள், விவாதங்கள் என்று ஒரே அல்லோலகல்லோலம் தான்!

 

இத்துடன் இவர் நிற்கவில்லை. தனது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். கீழே அவர் சொன்னது:

 

‘14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். எப்போதும் நான் வெகு நேரம் வேலை செய்பவள். ஒரு முக்கியமான மீட்டிங்கின் நடுவே என் மேலதிகாரி என்னைக் கூப்பிட்டார். அப்போது மணி இரவு 9.30. ‘இந்திரா, உன்னை நமது நிறுவனத்தின் பிரெசிடென்ட் என்று அறிவிக்கப் போகிறேன். இயக்குனர் குழுவில் நீயும் இருக்கப் போகிறாய்’ என்றார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை – என்னுடைய பின்னணி, எனது பயணத்தின் ஆரம்பக் கட்டங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது – உலகின் மிகச் சிறந்த ஒரு அமெரிக்கா நிறுவனத்தின் ப்ரெசிடென்ட், இயக்குனர் குழுவில் இடம் என்பது எனக்குக் கிடைத்திருக்கும் தனிச்சிறப்பு என்று நினைத்தேன்.

 

சாதாரண நாட்களில் அலுவலகத்திலேயே இருந்து நடுநிசி வரை வேலை செய்பவள் அன்று வீட்டிற்கு சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை என் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். பத்து மணிக்கு வீட்டை அடைந்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பினால் என் அம்மா மாடிப்படிகளின் உச்சியில் நின்றுக்கொண்டிருந்தார். ‘அம்மா! உனக்கு ஒரு நல்ல செய்தி!’ என்றேன்.

 

‘நல்ல செய்தி கொஞ்சநேரம் காத்திருக்கட்டும்! வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வர முடியுமா?’ என்றார்.

நான் கார் நிறுத்துமிடத்தைப் பார்த்தேன். என் கணவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

‘எத்தனை மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தார்?’ நான் கேட்டேன்.

‘8 மணிக்கு!’

‘அவரை வாங்கிக் கொண்டு வரச் சொல்வது தானே?’

‘அவர் ரொம்ப சோர்வாக இருந்தார்!’

‘சரி சரி. நம் வீட்டில் இரண்டு பணியாட்கள் இருக்கிறார்களே!’

‘அவர்களிடம் சொல்ல நான் மறந்துவிட்டேன்!’

‘………………..!’

‘போய் பால் வாங்கிக் கொண்டு வா! அவ்வளவுதான்!’

ஒரு கடமை தவறாத மகளாக நான் வெளியில் போய் பால் வாங்கிக் கொண்டு வந்தேன்.

 

வீட்டிற்குள் சென்று சமையலறை மேடை மேல் பால் பாக்கட்டை ‘பொத்’ என்று வைத்தேன். ‘நான் உனக்காக ஒரு பெரிய செய்தி கொண்டுவந்தேன். எங்கள் நிறுவன இயக்குனர் குழுவில் நான் தலைவராகப் பதவியேற்கப் போகிறேன். நீ என்னவென்றால் ‘போய் பால் வாங்கிக் கொண்டு வா’ என்கிறாய்! என்ன அம்மா நீ?’ பொரிந்து தள்ளினேன்.

 

என் அம்மா அமைதியாகச் சொன்னார்: ‘சில விஷயங்களை நீ தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நீ பெப்ஸிகோ வின் தலைவராக இருக்கலாம். இயக்குனர் குழுவில் இருக்கலாம். ஆனால் இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், நீ ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மருமகள், ஒரு தாய். இவை எல்லாம் கலந்த ஒரு கலவை நீ. அந்த இடத்தை வேறு யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அந்தப் பாழாய்ப்போன அலுவலகக் கிரீடத்தை கார் நிறுத்தத்திலேயே விட்டுவிட்டு வா! அதை வீட்டினுள் கொண்டு வராதே! நான் அந்த மாதிரி கிரீடங்களைப் பார்த்ததே இல்லை!’

 

இதைச் சொன்னவர் யாரென்று இதற்குள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். திருமதி இந்திரா நூயி CEO, பெப்ஸிகோ!

 

இவர் மேலும் சொல்லுகிறார்:

‘பெண்களால் எல்லாவற்றையும் அடைய முடியாது. முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நமக்கு எல்லாம் கிடைத்துவிட்டது போல நாம் பாவனை செய்கிறோம். எனக்குத் திருமணம் ஆகி 34 வருடங்கள் ஆகின்றது. எங்களுக்கு இரண்டு பெண்கள். தினமும் நீங்கள் இன்று ஒரு மனைவியாக இருக்கப் போகிறீர்களா, அல்லது அம்மாவாக இருக்கப் போகிறீர்களா என்று முடிவு எடுக்க வேண்டும். காலை நேரத்தில் அந்த முடிவை எடுக்க வேண்டும். இதற்கு பலரின் உதவி தேவை. நாங்கள் இருவரும் எங்கள் குடுக்பத்தினரின் உதவியை நாடினோம். ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்க நாங்கள் இருவரும் மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறோம். ஆனால் நீங்கள் என் பெண்களைக் கேட்டால் நான் ஒரு நல்ல அம்மா என்று அவர்கள் சொல்லுவார்களா தெரியாது. எல்லாவிதத்திலும் அனுசரித்துக் கொண்டு போக நான் முயலுகிறேன்.

 

என்னுடைய பெண்ணின் பள்ளியில் நடந்ததைக் கூறுகிறேன். ஒவ்வொரு புதன்கிழமையும் அவளது பள்ளியில் ‘ வகுப்பறை காபி’ என்ற நிகழ்வு இருக்கும். மாணவர்கள் தங்கள் அம்மாக்களுடன் சேர்ந்து வகுப்பறையில் காபி அருந்துவார்கள். அலுவலகத்திற்குப் போகும் என்னால் காலை 9 மணிக்கு அதுவும் புதன்கிழமை எப்படிப் போக முடியும்? முக்கால்வாசி நேரம் நான் வகுப்பறைக் காபியை மிஸ் பண்ணிவிடுவேன். என் பெண் மாலையில் வீட்டிற்கு வந்து யார் யாருடைய அம்மாக்கள் வந்தார்கள் என்று பெரிய லிஸ்ட் படித்துவிட்டு, ‘நீதான் வரலை’ என்பாள். ஆரம்பத்தில் மனது மிகவும் வலிக்கும், குற்ற உணர்ச்சி கொன்றுவிடும். கொஞ்சம் கொஞ்சமாக சமாளிக்கக் கற்றேன். அவளது கோபத்திற்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து யார் யாருடைய அம்மாக்கள் வரவில்லை என்ற பட்டியலைப் பெற்றேன். அடுத்தமுறை அவள் வந்து ‘நீ வரலை, நீதான் வரலை’ என்று சொன்னபோது, ‘மிஸஸ் கமலா வரலை; மிஸஸ் சாந்தி வரலை; நான் மட்டுமே கெட்ட அம்மா இல்லை’ என்றேன்.

 

சமாளிக்க வேண்டும்; ஈடு கொடுக்க வேண்டும். இல்லாவிடில் குற்ற உணர்ச்சியிலேயே மடிய நேரிடும். நமது சொந்த வாழ்க்கை கடியாரமும் தொழில் வாழ்க்கைக் கடியாரமும் எப்போதுமே ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கிறது. மொத்தமான, முழுமையான முரண்பாடு! நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; தொழில் வாழ்க்கையின் ஆரம்பநிலையைத் தாண்டி நடுக்கட்டத்திற்கு வரும்போது, குழந்தைகள் பதின்ம வயதில் காலடி வைத்திருப்பார்கள்.

 

அதே சமயம் உங்கள் கணவரும் குழந்தையாக மாறியிருப்பார். அவருக்கும் நீங்கள் வேண்டும்! குழந்தைகளுக்கும் நீங்கள் வேண்டும். என்ன செய்ய முடியும்? உங்களுக்கு வயது ஏற ஏற உங்கள் பெற்றோர்களுக்கும் வயது ஏறிக்கொண்டே போகும். அவர்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஊஹூம்! பெண்களால் எல்லாவற்றையும் அடையவே முடியாது. எல்லாவற்றையும் சமாளிக்க ஒரே வழி – எல்லோருடனும் ஒத்துப்போவதுதான். உங்களுடன் வேலை செய்பவர்களை பழக்குங்கள். உங்கள் குடும்பத்தை ஓர் நீட்டிக்கப்பட்ட குடும்பமாக மாற்றுங்கள்.

 

பெப்சியில் இருக்கும்போது நான் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனது குழந்தைகள் சின்னவர்களாக இருந்த போது குறிப்பாக இரண்டாமவள் நான் எங்கிருந்தாலும் – சீனா, ஜப்பான் – எனது ஆபிஸிற்கு போன் செய்வாள். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு நான் மிகவும் கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருந்தேன். எனது வரவேற்பாளர் போனை எடுப்பார். ‘நான் என் அம்மாவிடம் பேச வேண்டும்!’ எல்லோருக்கும் தெரியும் அது யார் என்று. ‘என்ன வேண்டும் உனக்கு? ‘எனக்கு கேம்ஸ் விளையாட வேண்டும்’ வரவேற்பாளர் உடனே சில வழக்கமா கேள்விகளைக் கேட்பார் : ‘உன்னுடைய வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டாயா?’ என்பது போல. கேள்விகள் முடிந்தவுடன் ‘சரி, நீ ஒரு அரைமணி நேரம் விளையாடலாம்!’ என்பார்.

 

எனக்கும் செய்தி வரும். ‘டீரா கூப்பிட்டாள். நான் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். அவளுக்கு அரைமணி நேரம் விளையாட அனுமதி கொடுத்திருக்கறேன்’ என்று. இதுதான் அல்லது இப்படித்தான் தடங்கல் இல்லாத குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோருடனும், வீட்டில், அலுவலகத்தில் உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் சுமுகமாக இயங்கினால் தான் எல்லாம் நடக்கும். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் ஆக இருப்பது என்பது மூன்று ஆட்கள் செய்யும் முழு நேரப்பணியை ஒருவர் செய்வது. எப்படி எல்லாவற்றிற்கும் நியாயம் செய்ய முடியும்? முடியாது. இவ்வளவையும் சமாளித்துக் கொண்டு போகையில் உங்களை அதிகமாகக் காயப்படுத்துபவர்  உங்கள் துணைவராக இருக்கக்கூடும். என் கணவர் சொல்லுவார்: ‘உன்னுடைய லிஸ்டில் பெப்ஸிகோ, பெப்ஸிகோ, பெப்ஸிகோ, உன் இரண்டு குழந்தைகள், உன் அம்மா பிறகு கடைசி கடைசியாக கீழே நான்…!’ இதை நீங்கள் இரண்டு விதமாகப் பார்க்கலாம் நீங்கள் லிஸ்டில் இருக்கிறீர்களே என்று நினைக்க வேண்டும். புகார் செய்யக் கூடாது!’ இப்படிச் சொல்லித்தான் கணவரை சமாளிக்க வேண்டும்!’

 

இப்படிச் சொல்லியதற்காக இவருக்கு வந்த கண்டனங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

 

 

 

 

 

டபிள் டக்கர் என்னும் நரகம்!

ரயில் பயணங்களில் தொடர்ச்சி……

இரண்டாவது முறை இந்த டபிள் டக்கரில் (ஒரு எமர்ஜென்சி வேறு வழியில்லாமல் இந்த வண்டியில் போக நேரிட்டது.) போக நேர்ந்த போது ஒற்றை சீட் கிடைத்தது. அப்பாடா! ஒரு மகிழ்ச்சி பெருமூச்சு விட்டேன். அப்புறம் தான் தெரிந்தது அது எத்தனை பெரிய அசௌகரியம் என்று.

 

இருக்கையில் உட்கார முயன்றேன்.  கைப்பிடியை எடுத்துவிட்டு உள்ளே நுழையலாம் என்றால் அது பெர்மனென்ட் ஆக உட்காந்திருந்தது!  கஷ்டப்பட்டு என்னை திணித்துக் கொண்டு உட்கார்ந்தேன், எழுந்திருக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று. ஜன்னல் ஓரம் என்று வேறு சந்தோஷப்பட்டேன். ஆந்திரா வந்தவுடன் ஒரு வெயில் அடித்தது பாருங்கள். ஜன்னலுக்குப் போட்டிருந்த பச்சைத் திரையையும் தாண்டி வெயில். சுருண்டு விட்டேன். சாப்பிட்டு விட்டு கையலம்ப போவதற்கும் யோசனையாக இருந்தது. மறுபடி இருக்கையில் இருந்து வெளியே வந்து என்னை மறுபடியும் உள்ளே திணித்துக் கொள்ள வேண்டுமே!

 

கொஞ்ச நேரம் candy crush விளையாடிவிட்டு, கொஞ்சநேரம் புத்தகம் படித்துவிட்டு…எப்படியோ காலத்தை கழித்தேன். இந்த ஸ்மார்ட் போன் வேறு அவ்வப்போது சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் கேம்ஸ் விளையாடினால் சீக்கிரம் காலியாகிறது. எனக்கு முன் இருக்கைக்கு மேலே இருந்த சார்ஜரில் போட்டேன் – அங்கு உட்கார்ந்தவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுதான் – அவர் மேல் வயர் வராதபடி இழுத்து விட்டு இருக்கைக்கு முன்னால் இருந்த ட்ரேயில் வைத்தேன். முன்னால் உட்கார்ந்திருந்தவர் ஒரு இளைஞர்தான். ஏதோ அவரது வீட்டு சார்ஜரில் என் போனைப் போட்டது போல நொடிக்கு ஒருதரம் அந்த வயரை பார்த்து பார்த்து ‘ப்ச்…..ப்ச்….’ என்றார். அவருக்கு என்ன பிரச்னையோ என்னவோ?

 

கையில் இட்லி எடுத்துப் போயிருந்தேன். கஷ்டகாலக் காபி மட்டும் குடித்துவிட்டு எப்போது சென்னை வரும் என்று காத்திருந்தேன். பக்கத்து மூன்று இருக்கையில் ஒரு இளம் வயது தம்பதி இரண்டு குழந்தைகளுடன் வந்து அமர்ந்திருந்தனர். பெரிய குழந்தைக்கு 9 அல்லது பத்து வயது இருக்கும். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தேமேன்னு வந்தது. ஆனால் இரண்டாவது குழந்தை ஒரு கத்தல் கத்திற்று, பாருங்கள். காது கிழிந்து போயிற்று! என்ன சொன்னாலும் அழுகை, கத்தல், அம்மாவையும் அப்பாவையும் பட்பட்டென்று அடித்துக் கொண்டே வந்தது. ஆறுமணி நேரப்பயணத்தில் நமக்கே தாங்க முடியவில்லையே, எப்படித்தான் 365 தினங்கள் சமாளிக்கிறார்களோ என்று நினைத்துக் கொண்டே வந்தேன். வெயிலுடன் அந்தப் பாப்பா வேறு என் பொறுமையை சோதித்தது.

இந்த ரயிலில் பிரயாணம் செய்பவர்கள் எல்லோருமே வயதானவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. சின்ன வயதுக்காரர்கள் இதில் வருவதில்லை. எப்போது டிக்கட் வேண்டுமென்று பார்த்தாலும் இந்த ரயிலில் இடம் இருக்கிறது. கீழே இறங்குவதும், மேலே ஏறுவதும் மிக மிகக் கடினமாக இருக்கிறது. உயரமான படிகள். சென்னை வருவதற்கு முன்பே நான் என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு – எனக்கு சீட் கீழ் வண்டியில் – படியில் ஏறமுடியாமல் ஏறி… …ஆறுபடிகளுக்குப் பதில் எட்டு படிகள் சின்னச்சின்னதாக (உயரம் கம்மியாக) வைத்திருக்கலாம்.

நல்லகாலம், சென்னை வந்தவுடன் உறவினரின் கார் எனக்காகக் காத்திருந்தது. அதில் ஏறி உட்கார்ந்து அந்த ஏசியில் சற்று ஆசுவாசப்படுத்திக் ஒருகொண்டேன்.

திரும்பி வரும்போது எனது சம்பந்தி ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். எனது அந்தப் பக்கத்து இரண்டு சீட் இருக்கையில் ஒரு அம்மா, பெண். அம்மாவிற்கு 93 வயது என்றார் 70+ இல் இருந்த மகள். ‘அம்மா நன்றாக இருக்கிறாள். ஒரு பிரச்னையும் இல்லை. காதுதான் கொஞ்சம் கேட்கவில்லை’ என்று என்னுடன் பேச ஆரம்பித்தார் மகள். என் சம்பந்தி என்னிடம் ‘மாமி உங்களுக்கு இன்னைக்குப் பொழுது நன்றாகப் போகும்’ என்று சொல்லிச் சிரித்தார். காது கொஞ்சம் கேட்கவில்லை என்பதன் முழு அர்த்தத்தை ரயில் கிளம்பத் தொடங்கியவுடன்தான் உணர்ந்தேன். ரயில் சத்தத்தையும் மீறி ‘ஓ’ என்று பேசிக்கொண்டிருந்தார் மகள். அவரது அம்மாவிற்குக் கேட்டதோ இல்லையோ, பெங்களூரில் இருப்பவர்களுக்குக் கேட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ரயிலில் கொடுக்கும் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் இருவரும். தாங்கள் கையோடு எடுத்து வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அம்மா அப்படியே தூங்கலானார். பெண்ணும் அப்படியே. ரயில் சத்தமில்லாமல் ஓடுவது போல இருந்தது!

 

திடீரென்று ஒருவர் வந்து எல்லோருடைய கைகளிலும் ஒரு படிவத்தைக் கொடுத்துச் சென்றார். ரயில் பிரயாணம் பற்றிக் கேட்டிருப்பார்கள் என்று நினைத்தேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளைஞன் ‘சென்றமுறை பிரயாணத்தின் போது இதுபோல ஏற்கனவே ஒன்று கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். அப்போது சொன்ன குறைகளை நிவர்த்தி செய்ய  ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா என்று தெரியவில்லை. இப்போது புதிதாக இன்னொன்று…..!’ என்றார். கடைசியில் அந்தப் படிவத்தில்  பிரயாணத்தைப் பற்றிக் கேட்கவில்லை. மாறாக ரயிலில் Wi-Fi வேண்டுமா, ப்ரீயா? பிரயாணிகளிடமிருந்து பணம் வசூலிக்கலாமா? என்றெல்லாம் அந்தப் படிவத்தில் கேட்டிருந்தது. எனக்கு வந்த கோவத்தில், முதலில் பிரயாணிகளுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கவனியுங்கள். பிறகு இதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சுடச்சுட எழுதிக் கொடுத்தேன்!

 

வளவளப் பெண்….நாளை

ரமாவும் ரஞ்சனியும் 2

 ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதைப்படித்துவிட்டு என் அக்கா ரமா ரொம்பவும் நெகிழ்ந்து போனாள். ஆனால் இந்தக் கட்டுரையை நான் மிகவும் மனம் நொந்து, நெகிழ்ந்து எழுதுகிறேன். இதைப் படிக்க அவள் இல்லை என்கிற உண்மை என்னை மிகவும் வதைக்கிறது.

அக்கா பிறக்கும்போதே ‘பெரியவள்’ ஆகப் பிறந்தாள் என்று எனக்குப் பல சமயங்களில் தோன்றும். கோடை விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் போகும்போது நான் தெருவில் பாண்டி, கோலி எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பேன் என் சகோதரர்களுடன். இவள் என் பாட்டியுடன் இருப்பாள். பாட்டியுடன் கூடவே வெளியே போவாள். வீட்டிலும் பாட்டியுடன் அடுப்படியில் என்னவோ பேசிக்கொண்டு இருப்பாள். பாட்டியும் அவளை பெரியவள் ஆகவே நினைத்து எல்லாக் கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பாள். திரும்ப ஊருக்கு வந்தாலும் இவள் என் அம்மாவுடனே இருப்பாளே தவிர தன் வயதை ஒத்த தோழிகளுடன் விளையாட மாட்டாள். என் அம்மா, பெரியம்மா, பாட்டி இவர்களே இவளது தோழிகள் என்று தோன்றும் அளவிற்கு அவர்களுடன் பழகுவாள்.

 

அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெகு அக்கறையாகக் கேட்பாள். என்னிடம் பேசும்போது ‘பாவம், பாட்டி, பாவம் பெரியம்மா’ என்பாள். எனக்குத் தெரியாத உறவினர்களை எல்லாம் இவள் தெரிந்து வைத்திருப்பாள். அவளுடன் கோவிலுக்குப் போனால் எதிரில் வருகிறவர்கள் அத்தனை பேர்களும் இவளை விசாரித்துவிட்டுப் போவார்கள். ‘பாட்டியோட அத்தான் மன்னி இவர்’, ‘பாட்டியோட அம்மாஞ்சி இவர்’ என்று உறவுமுறை சொல்லுவாள். ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!’ என்றால் ‘நீ எப்போ பார்த்தாலும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறாய். பாட்டி பெரியம்மாவுடன் எல்லாம் பேச வேண்டும்’ என்பாள். என்னால் முடியவே முடியாத காரியம் இது என்று நினைத்துக் கொள்ளுவேன்.

 

ஸ்கூல் முடித்தவுடன் ‘மேலே படிக்க விருப்பம் இல்லை. நான் வேலைக்குப் போய் உனக்கு உதவறேன்’ என்று அப்பாவிடம் சொல்லிவிட்டாள். நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடனே என்னிடமும், ‘மேலே படிக்க வேண்டாம். வேலைக்குப் போய் அப்பாவிற்கு உதவி செய்’ என்று அதையே சொன்னாள். எனக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் (திருமணத்திற்கு ஐந்தாறு மாதங்கள் இருக்கும்போது) வேலையை விட்டுவிட்டேன். அவளுக்கு ரொம்பவும் வருத்தம். திருமணம் ஆகும்வரை வேலைக்குப் போனால் அப்பாவிற்கு உதவியாக இருந்திருக்கும், இல்லையா என்றாள்.

 

மொத்தத்தில் அக்கா உண்மையில் அக்காவாக இருந்தாள். பாட்டி, அம்மா, பெரியம்மா என்று எல்லோருடைய கஷ்டங்களையும் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ அக்காவிற்கும் கஷ்டங்களே வாழ்க்கை ஆனது. 22 வயதில் திருமணம். 34 வயதில் அத்திம்பேரை இழந்தாள். யாரையும் எதிர்பார்க்கவில்லை. யார் கூடவும் இருக்கவும் விரும்பவில்லை. கையில் வேலை இருந்தது. அம்மாவின் துணையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். எதற்கும், யாரையும் அண்டி இருக்காமல் தன் முடிவுகளைத் தானே எடுத்தாள்.

 

தன் வாழ்க்கையை அலுவலகம், வீடு என்று அமைத்துக் கொண்டாள். அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு திவ்ய தேச யாத்திரை. அம்மாவையும் அழைத்துக் கொண்டு எல்லா திவ்ய தேசங்களையும் சேவித்துவிட்டு வந்தாள். முக்திநாத் தவிர மற்ற திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்திருக்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஒரு வீடு வாங்கினாள். முடிந்த போதெல்லாம் போய் நம்பெருமாளை சேவித்துவிட்டு வருவாள். ஸ்ரீரங்கம் போவது என்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். தன் பேத்திகள் இருவர் மேலும் உயிரை வைத்திருந்தாள். பேத்திகள் இருவரையும் பார்த்துக் கொள்வதை ஆசைஆசையாகச் செய்தாள். பேத்தியை மடியில் விட்டுக் கொண்டு நிறைய பாட்டுக்கள் பாடுவாள்.

‘மாணிக்கம் கட்டி, வயிரமிடை கட்டி….’ என்று பாசுரம் பாடிப் பாடி அவர்களை கொஞ்சி மகிழ்வாள்.

ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பதே அவளது வாழ்நாளின் குறிக்கோள் என்பது போல அடிக்கடி ஸ்ரீரங்கம் போவாள். நம்பெருமாளை அவள் சேவிக்கும் அழகைக் காண வேண்டும். அந்தப் பக்கம் நின்று சேவிப்பாள். இந்தப் பக்கம் வந்து சேவிப்பாள். வீதியில் எழுந்தருளும் போதும் இந்த வீதியில் சற்று நேரம் சேவித்துவிட்டு அடுத்த வீதிக்கு பெருமாள் எழுந்தருளுவதற்குள்  அங்கு போய் நிற்பாள்.

 

சமீபத்தில் ஒருநாள் அடையாறு அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு போக ஆசைப்பட்டிருக்கிறாள். அவள் பிள்ளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறான். ‘கோவிலுக்குள் நுழைந்தவுடன் அம்மா கிடுகிடுவென சந்நிதிக்குள் சென்ற வேகம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, சித்தி. அம்மாவிற்கும் பெருமாளுக்கும் நடுவில் ஏதோ பேச்சு வார்த்தை நடப்பது போல இருந்தது. அம்மாவை அவர் வா என்று சொல்வது போலவும் அம்மாவும் வேறு எங்கும் பார்க்காமல் உள்ளே சென்றதும்….. என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சட்டென்று வேகமாக நடக்கும் அம்மாவைப் பிடித்துக் கொண்டேன்’ என்றான் அக்கா பிள்ளை. அதுதான் ரமா.

தனது சோகங்களை சற்று மறந்து பேத்திகளுடன் வாழ்க்கையை கழிக்க ஆரம்பித்த வேளை அந்தக் கொடிய நோய் அவளை பீடித்தது. சென்ற பிப்ரவரி மாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் போயிருந்தோம். இரண்டு நாட்களில் அக்காவும் வருவதாக இருந்தது. முதல் நாள் போன் செய்து ரொம்பவும் வயிற்றுவலி அதனால் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்துவிட்டேன் என்று அவள் கூறியபோது மனதில் இனம் புரியாத சங்கடம். என்னவானாலும் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்யாதவள் இப்போது செய்கிறாள் என்றால்…என்று மனதை கவலை சூழ்ந்து கொண்டது. சில நாட்களில் தெரிந்துவிட்டது, வயிற்றில் புற்றுநோய் இருப்பது. அப்போதே முற்றிய நிலை தான். ஆறு கீமோதெரபி என்று மருத்துவர் கூறினார். ஒவ்வொரு மாதமும் நான் சென்னைக்குப் போய் அவளுடன் மருத்துவமனையில் தங்குவேன். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தபின் இரண்டு நாட்கள் அவளுடன் இருந்துவிட்டு திரும்புவேன்.

 

40 வருடங்களுக்கு முன் எங்கள் அப்பாவை இந்த நோய் தாக்கியபோது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்த நினைவுகள் வந்து என்னை பயமுறுத்தின. ஆனால் இத்தனை வருடங்களில் மருத்துவம் நிறைய முன்னேறியிருக்கிறது அதனால் அக்கா பிழைத்துவிடுவாள் என்று நினைத்தேன். அம்மா தினமும் திருவள்ளூர் பாசுரம் சேவிக்க ஆரம்பித்தாள். நாளாக ஆக, எங்கள் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

 

இன்றைக்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்று அக்கா நினைத்தால் அதை செய்து முடித்துவிட்டு மறுவேலை பார்ப்பாள். அசாத்திய சுறுசுறுப்பு. அம்மா சொல்வாள்: ‘ரமா அடுப்படியில் நுழைந்தால் அடுப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். உலை தானாகவே கொதிக்கும்!’ என்று. எப்போதும் ஒரு பரபரப்பில் இருப்பாள். ஒருநிமிடம் அயர்ந்து உட்கார மாட்டாள். அப்படிப்பட்டவளை இந்தக் கொடிய நோய் முடக்கிப் போட்டுவிட்டது. மிகவும் சுதந்திரமானவள் அக்கா. அப்படிப்பட்டவள் இப்போது துணையில்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. கூடவே ஒரு ஆள் அவளுடன் இருக்க வேண்டியிருந்தது. இந்த நிலை அவளை மிகவும் பாதித்திருக்க வேண்டும்.

 

அவள் செய்யும் காரியங்களில் எல்லாம் ஒரு ஒழுங்கு இருக்கும். ‘போன் பேசுவது எப்படி என்று ரமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அவள் தோழிகள் சொல்வார்கள். ‘சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென்று சொல்லிவிட்டு ‘வைக்கட்டுமா?’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். வளவளவென்று பேசவே மாட்டாள்’

 

நிறைய தானதர்மம் செய்வாள். கோவில்களுக்கு வாரி வழங்குவாள். அவளுக்கு வரும் கடிதங்கள் எல்லாமே கோவில்களிலிருந்து வரும் பிரசாதக் கவர்கள் தான். சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வைகுண்ட ஏகாதசி பிரசாதம் செல்வர் அப்பம் வந்திருந்தது. அவளால் அதை சாப்பிட முடியவில்லை, பாவம்.

 

நான் அவளுடன் மருத்துவமனையில் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை. எங்கள் திருமணத்திற்கு முன் நாங்கள் இருவரும் எப்படி இருந்தோமோ அதேபோல இப்போது இருந்தோம். அக்கா தங்கை என்ற உறவை மீறி தோழிகள் போல இருவரும் ஒருவரின் அண்மையை இன்னொருவர் விரும்ப ஆரம்பித்தோம். நான் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாள். ‘நீ வந்துட்டயா? நான் பிழைத்துவிடுவேன்’ என்பாள். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். நான் அறியாத ரமாவை இந்த ஒரு வருட காலத்தில் அறிந்தேன். எத்தனை வேதனை பட்டிருக்கிறாள்! தனி ஒரு ஆளாக எல்லாவற்றையும் தாண்டி சற்று நிம்மதியாக இருக்க வேண்டிய நிலையில் எதற்கு இப்படி ஒரு நோய் அவளுக்கு? ‘யார் சோற்றில் மண்ணைப் போட்டேனோ, சாப்பிடக்கூட முடியவில்லையே’ என்று மனம் நொந்து அழுவாள். கடைசியாக நான் அவளைப் பார்த்தது ஜனவரி 9. நான் ஊருக்குப் போகிறேன் என்றவுடன் முகத்தில் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள். கட்டாயம் போகணுமா என்றாள். பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் வருகிறேன் என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டேன். ‘சீக்கிரம் என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளச் சொல்லி நம்பெருமாளை வேண்டிக் கொள்’ என்றாள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

 

மருத்துவர்கள் சொன்ன காலக்கெடு 3 மாதங்கள். ஆனால் ஒரே வாரத்தில் அக்காவின் கதை முடிந்துவிட்டது. இனி அவள் பிழைக்க மாட்டாள் என்று தெரிந்தவுடன் நான் நம்பெருமாளிடம் இந்தக் கோரிக்கையைத் தான் வைத்தேன்: ‘இனியும் இந்த சித்திரவதை அவளுக்கு வேண்டாம். நிறைய பாடுபட்டு விட்டாள். அதிக சிரமம் கொடுக்காமல் அவளுக்கு இரங்கு’

 

ஜனவரி 13 காலையிலேயே அக்காவிற்கு நினைவு தப்பிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். நினைவு போன நிலையில் ஒருமுறை என் பெயரை சொன்னாள் என்று அக்காவின் பிள்ளை சொன்னான். அவ்வளவுதான். நாங்கள் காஞ்சீபுரம் அருகில் போய்க்கொண்டிருந்த போது செய்தி வந்துவிட்டது. ‘அம்மாவின் முகம் ரொம்பவும் அமைதியாக இருக்கிறது’ என்று அக்கா பிள்ளை சொன்னான். அவளது எல்லாக் கஷ்டங்களும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டன பிறகு அமைதி தானே!

 

‘நீ இப்படி எனக்காக ஓடி ஓடி வருகிறாயே!’ என்பாள் ஒவ்வொருமுறை நான் போகும்போதும். என்ன பலன்? அவளுடைய வலி, வேதனைகளை என்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லையே! நான் மாறனேர் நம்பி இல்லையே! பலமுறை இப்படி நினைத்து அவளுக்குத் தெரியாமல் அழுவேன்.

சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின

ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின

என்ற நம்மாழ்வாரின் வாக்குப்படி என் அக்காவிற்கும் பரமபதத்தில் வரவேற்பு கிடைத்திருக்கும். முமுக்ஷுக்களுக்கு (மோக்ஷத்தை விரும்பும் நாரணனின் பக்தர்கள்) கிடைக்கும் திரும்ப வர முடியாத உலகத்தில் என் அக்கா ரமாவிற்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும்.  அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று விரஜா நதியில் நீராடி வந்திருக்கும் அவளை நம்பெருமாள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு ‘ரொம்பவும் சிரமப்பட்டு விட்டாயோ?’ என்று முதுகை தடவி விட்டுக் கொண்டிருப்பார்.

 

இனி அவளுக்குப் பிறவி கிடையாது. இந்த ரஞ்சனியின் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்திருப்பாள் ரமா.

 

அதீதம் இதழில் படிக்க இங்கே

 

 

 

நான்தான் சீதை!

1

நன்றி: கூகுள்

 

ஒரு பிரபலப் பள்ளியின் வளாகம். யூகேஜியில் இடம் பெற வேண்டி, நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர். அதில் ஒரு குழந்தை. எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்று புரியாமலேயே எல்லோரையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது. அங்கு வந்த அந்தப் பள்ளியின் முதல்வர் அந்தக் குழந்தையுடன் பேச ஆரம்பித்தார் – ஆங்கிலத்தில்தான்!

‘உன் பெயர் என்ன?’

‘சரித்ரா….!’

‘ஓ! நல்ல பெயர். சரி இப்போது உனக்கு என்ன தெரியுமோ அதைச்சொல்லு…..!’

‘எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். உங்களுக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லுங்கள்!”

ஐயையோ! இவளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கிடைக்காது போலிருக்கிறதே! குழந்தையின் அம்மாவிடத்தில் ஒரு பதட்டம் தென்பட்டது. ‘அவள் வந்து……..!’ என்று ஆரம்பித்த அவரை முதல்வர் நிறுத்தினார். குழந்தையைப் பார்த்து ‘ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லு!’

குழந்தை விடவில்லை: ‘பாட்டா? கதையா?’

‘சரி. கதையே சொல்லு….!’

‘உங்களுக்கு நான் படித்த கதை வேணுமா? இல்லை நான் எழுதின கதை வேணுமா?’

முதல்வருக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆயினும் சமாளித்துக் கொண்டு, ‘ஓ! நீ கதை எழுதுவியா?’

‘ஏன் எழுதக் கூடாதா?’

இப்போது சுற்றியிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி! ஆனால் அவள் சொன்ன கதையை யாருமே கேட்டிருக்க மாட்டார்கள்.

‘சரி, நீ எழுதின கதையைச் சொல்லு….!’

சரித்ரா ஆரம்பித்தாள்: ‘ராவணன் சீதையைக் கடத்திக்கொண்டு போய் சிறிலங்காவில் வைத்தார்…..’

இந்தக் கதை தானா என்று மனதிற்குள் நினைத்தாலும், முதல்வர் ‘ம்…மேலே சொல்லு…’ என்றார்.

‘ராமன், ஹனுமானின் உதவியைக் கேட்டார். ஹனுமானும் சரி என்று உதவ சம்மதித்தார்……’

‘அப்புறம்?’

‘இப்போ ஹனுமான் தன்னோட நண்பன் ஸ்பைடர்மேனைக் கூப்பிட்டார்….’

இந்த திருப்பத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை!

‘எதற்கு?’

‘எதற்குன்னா, இந்தியாவுக்கும், சிறிலங்காவிற்கும் நடுவில் நிறைய மலைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன் இருந்தால் அவரோட கயிற்றைப் பிடித்துக்கொண்டு நாம சுலபமாக அங்க போகலாம்……!’

‘ஆனா ஹனுமானால பறக்க முடியுமே…இல்லையா?’

‘ஆமா. ஆனா அவர் ஒருகையில சஞ்சீவி மலையை வச்சிண்டு இருக்காரே! அதனால அவரால ரொம்ப வேகமா பறக்க முடியாது….!’

கதையை கேட்டுக் கொண்டிருந்தவர்களின் நடுவில் அமைதி.

சற்றுப் பொறுத்து சரித்ரா கேட்டாள்: ‘நான் கதையை தொடரட்டுமா? வேணாமா?

;சரி, சரி நீ மேலே சொல்லு…..!’

‘ஹனுமானும் ஸ்பைடர்மேனும் சிறிலங்காவிற்குப் போய் சீதையைக் காப்பாத்தினாங்க. சீதை இருவருக்கும் நன்றி சொன்னாள்’.

‘ஏன்?’

‘உங்களுக்கு யாராவது உதவி செய்தால் நன்றி சொல்லணும், இல்லையா? அதற்குத்தான்!’

‘……………..!’

‘அப்புறம் சீதா ஹனுமானிடம் ஹல்க்- ஐ  கூப்பிடச் சொன்னாள்’

.எல்லோருடைய வியப்பையும் உணர்ந்தவள் போல அந்தக் குழந்தை சொல்லிற்று: ‘சீதையை பத்திரமா ராமன் கிட்ட அழைத்துக் கொண்டு போக ஹல்க்- ஐ கூப்பிட்டாள் சீதை!’

‘ஹனுமானால் சீதையைத் தூக்கிக்கொண்டு போகமுடியுமே! எதுக்கு ஹல்க்?’

‘ஆமா, ஆனா ஹனுமானோட ஒரு கையில சஞ்சீவி மலை; இன்னொரு கையில் ஸ்பைடர்மேனைப் பிடித்துக் கொண்டிருந்தாரே!’

எல்லோர் முகத்திலும் புன்னகை. ‘எல்லோரும் இந்தியாவுக்கு வரும் வழில என்னோட தோழன் அக்ஷய் –யைப் பார்த்தார்கள்….!’

‘அக்ஷய் எப்படி இங்கு வந்தான்?’

‘இது என்னோட கதை. எனக்கு யாரைப் பிடிக்குமோ அவங்களை கொண்டு வருவேன்!’

 

முதல்வருக்குக் கோபம் வரவில்லை.மாறாக கதையில் வரப்போகும் அடுத்த திருப்பத்திற்குக் காத்திருந்தார்.

‘எல்லோரும் இந்தியாவிற்கு வந்து வேளச்சேரி பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாங்க….!’

குழுமியிருந்தவர்களில் ஒருவர் கேட்டார்: ‘வேளச்சேரி பஸ் ஸ்டாப்பிற்கு எதற்கு?’

‘ஏன்னா, அவங்களுக்கு வழி மறந்து போச்சு. ஹல்க்கிற்கு  ஒரு ஐடியா தோணிச்சு அவரு டோராவைக் கூப்பிட்டாரு!’

‘டோரா வந்து சீதையை வேளச்சேரி வீனஸ் காலனிக்கு அழைச்சிகிட்டுப் போனா. கதை அவ்வளவுதான்!’

முகத்தில் பெரிய சிரிப்புடன் குழந்தை கதையை முடித்தது.

முதல்வர் கேட்டார்: ‘ஏன் வீனஸ் காலனி?’

‘ஏன்னா, சீதை அங்கேதான் இருக்கிறாள்….நான் தான் அந்த சீதை!’

முதல்வர் மிகவும் மகிழ்ந்து அந்தக் குழந்தையை அப்படியே கட்டிக்கொண்டார். அந்தக் குழந்தைக்கு அந்தப் பள்ளியில் இடம் கிடைத்தது. கூடவே ஒரு டோரா பொம்மையும் பரிசாகக் கிடைத்தது.

 

குழந்தைகள் எப்போதுமே எதிர்பாராத விதத்தில் நம்மை அசத்துபவர்கள். நாம் தான் அவைகளின் கற்பனையை வெட்டி விடுகிறோம். நம் கோணத்திலேயே அவர்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களது கோணத்தில் இந்த உலகத்தைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.

 

குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுப்போம். அவர்களது கனவுகள் எல்லாம் நிஜமாகட்டும்!

 

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின்  தமிழாக்கம்.