பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 6

 

‘உலகிலேயே மிகக்கடினமான வேலை எது?’

‘ஆசிரியப்பணி தான்’ உடனடியாக இந்த பதில் வந்தது. பதில் சொன்னவர் ஒரு ஆசிரியை.

‘அப்படியா? ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?’

‘ஸ்……..அப்பாடா……எத்தனை வேலை…….எத்தனை வேலை……..! பாடம் சொல்லித்தரணும், கேள்வி பதில் எழுத வைக்கணும், அதையெல்லாம் திருத்தணும், தேர்வு வைக்கணும், பதில் தாள்களைத் திருத்தணும்………’

மேற்சொன்ன பட்டியலில் இருப்பதை மட்டும் செய்வதல்ல ஒரு ஆசிரியரின் வேலை. அதையும் தாண்டி மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மிகச் சிறந்த ஆசிரியர்கள் எல்லோரும் அதைச் செய்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வெற்றி பெற்ற ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற ஆசிரியர்களின் குணாதிசயங்கள் என்னென்ன?

 

கற்பிப்பதை விரும்ப வேண்டும்.

27 ஆம் தேதி ஜூலை மாதம்.

நமது குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த திரு அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம். ‘பெரிதாகக் கனவு காண்’ என்று இளம் உள்ளங்களில் கனவு விதை விதைத்தவர். ‘உன்னைத் தூங்கவிடாமல் செய்வது தான் கனவு’ என்றவர்.

அவர் தனது பள்ளி நாட்களை நினைவு கூறும் போது தனது ஆசிரியர்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்: ‘நான் கல்வி கற்ற நாட்களில் மிகச் சிறந்த ஆசிரியர்கள் வாய்த்தது நான் செய்த பாக்கியம். ஒரு ஆசிரியர் கற்பிப்பதை விரும்ப வேண்டும். கற்பித்தல் என்பது தான் ஒரு ஆசிரியரின் ஆன்மாவாக இருக்க வேண்டும். இங்கு எனது ஆசிரியர்களில் ஒருவரை உதாரணமாகக் காண்பிக்க விரும்புகிறேன்:

1936 ஆம் வருடம். எனக்கு அப்போது 5 வயது. ராமேஸ்வரம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அந்த வகுப்பில் எனது ஆசிரியர் முத்து ஐயர். வகுப்புப் பாடப்பயிற்சிகளை நான் நன்றாகச்  செய்வேன். அதனால் என் மீது எனது ஆசிரியருக்கு தனியான ஒரு ஆர்வம். எனது வீட்டிற்கு வந்து எனது அன்னையிடம் நான் மிகவும் நன்றாகப் படிப்பதாகவும், நல்ல மாணவன் என்றும் கூறினார். என் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் அம்மா எனக்குப் பிடித்த இனிப்பு செய்து கொடுத்தார். ஒரு நாள் நான் பள்ளிக்கு செல்லவில்லை. அன்று மாலை முத்து ஐயர் என் வீட்டிற்கு வந்துவிட்டார். ஏதாவது பிரச்னையா நான் பள்ளிக்கு வருவதில் என்று கேட்டுவிட்டு, அவரால் முடிந்த உதவியைச்  செய்வதாக என் தந்தையிடம் கூறினார்.

 

எனது கையெழுத்து மோசமாக இருப்பதைப் பார்த்துவிட்டு எனது தந்தையிடம் ஒரு மூன்று பக்கங்கள் கொண்ட பயிற்சி புத்தகத்தைக் கொடுத்து நான் தினமும் அதில் எழுதிப் பழக வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார். அவர் ஒரு நல்ல ஆசிரியர் மட்டுமல்ல; ஒரு மாணவனை அவன் திறன் அறிந்து ஊக்குவித்து, அவனை நல்லபடியாக உருவாக்குவதும் தன் கடமை என்று நினைத்த ஒரு மாபெரும் மனிதரும் கூட. பள்ளி வளாகத்திற்கு வெளியேயும் மாணவனைப் பற்றிக் கவலைப்படும்  ஆசிரியரே சிறந்த ஆசிரியர் என்று சொல்ல வேண்டும்.

 

சிறந்த கல்வியாளர் – கல்வி கற்பிப்பவர் என்ற நிலையை அடைய விரும்ப வேண்டும்

ஒரு ஆசிரியர் சிறந்த கல்வி கற்பிப்பவர் ஆக இருக்க வேண்டும். கற்பிப்பதற்கு வேறுவேறு முறைகளைக் கடைப்பிடித்தாலும், மாணவர்களையும் கற்பிப்பதில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். வெறும் கருத்துப்படிவங்களை மட்டும் கற்பிக்காமல் அவை நடைமுறையில் பயன்படுத்தப்படுவதையும் சொல்லித் தர வேண்டும். பாடப் புத்தகங்களில் படிப்பது ஏட்டுச் சுரைக்காய் என்று ஆகிவிடக்கூடாது. மாணவர்களின் கவனம் சிதறாமல் கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு ஆசிரியருக்கு ஆர்வம் இருக்குமானால் அதைப் பற்றிய அறிவை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அவரது அறிவுத்திறன் மேலும் கூடுகிறது.

 

ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல; தினமும் அவரும் மாணவர்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்ளுகிறார். ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு இந்தக் கற்றல் என்று கூடச் சொல்லலாம்.

 

ஒரு ஆசிரியர் ஆவதற்காக நீங்கள் கற்கும் கல்வி உங்கள் கண்களைத் திறக்கிறது.  மாணவர் எப்படிக் கற்கிறார்; நீங்கள் எப்படி ஒரு சிறந்த ஆசிரியராக இருப்பது போன்ற பலவிஷயங்களைக் கற்றுக் கொள்ளுகிறீர்கள். எந்த பாடத்தை நீங்கள் சொல்லிக் கொடுப்பதாக இருந்தாலும் அதைத்தவிர பல்வேறு விஷயங்களிலும் உங்கள் அறிவுத் திறன் ஆழமாகவும் அதிகமாகவும் ஆகிறது.

 

கற்பித்தல் என்பது பலவிதங்களில் உங்களை மாற்றுகிறது; மேன்மைப் படுத்துகிறது. உங்களைப்பற்றி நீங்களே அறியாத பலவிஷயங்கள் உங்களுக்குத் தெரிய வருகிறது. ஒரு விஷயத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கும் போது அதனை எளிதாக அவர்களுக்குப் எப்படி புரிய வைப்பது என்பதை நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள். அதற்கான வழிமுறைகளைத் தேடுகிறீர்கள். மாணவர்களுடன் பேசுவது, அவர்களது கவனத்தை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்வது, நீங்கள் பேசுவதை அவர்கள் கேட்கும்படி செய்வது என்று பல்வேறு கோணங்களில் சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள். இந்த சிந்தனையே உங்களுக்குப் பல கதவுகளைத் திறக்கும்.

 

வகுப்பில் நீங்கள் சொல்லித் தருவதுடன் நின்று விடாமல், மேலும் மேலும் தேட வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களிடையே உண்டாக வேண்டும். அவர்களது அறிவுப்பசியை மேலும் மேலும் தூண்டுவது கூட ஒரு ஆசிரியரின் கடமைதான்.

 

தொடர்ந்து பேசுவோம்.

 

அப்துல் கலாம் – கனவு விதை விதைத்தவர்

இந்திய இளைஞர்களை கனவு காணுங்கள் என்று திரும்பத்திரும்ப சொன்ன நமதருமை தலைவர் டாக்டர் அப்துல் கலாம் திரும்பி வர இயலாத உலகிற்குச் சென்று ஓர் ஆண்டு கடந்துவிட்டது. சென்ற ஆண்டு இதே நாள் நாங்கள் பூனேவிலிருந்து  பெங்களூருக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் செய்தி எங்களுக்கு கிடைத்தது. ஒரு சக பிரயாணி சொன்னார்: ‘என்ன ஒரு அனாயாச முடிவு பாருங்கள். ஆஷாட மாத (நம் ஆடி மாதம்) ஏகாதசியில் ஒரு நொடியில் மரணம் சம்பவித்திருக்கிறது. இனி அவருக்குப் பிறவி இல்லை!’ அவருக்குப் பிறவி இருக்கிறதோ இல்லையோ, நமக்கு இனி அவர் போல இன்னொரு உதாரணத் தலைவர் கிடைக்கமாட்டார் என்பது உறுதி.

 

‘கனவு காணுங்கள்; கனவுகள் உங்கள் மனதில் எண்ணங்களாக உருவாகும்; எண்ணங்கள் செயல்களாக மாறும்’.

‘உங்கள் கனவுகள் நனவாக முதலில் கனவு காணத் தொடங்குங்கள்’

‘கனவு என்பது தூக்கத்தில் காணும் கனவு அல்ல; உங்களை தூங்க விடாமல் செய்யும் கனவு!’

 

இப்படி சொல்லிச்சொல்லி இந்திய இளைஞர்களின் மனதில் கனவு விதை விதைத்தவர். கனவுகளின் மேல் அவருக்கு என்ன அவ்வளவு மோகம் என்று கேட்கத் தோன்றுகிறது, அல்லவா? அவர் சிறுவயதில் கண்ட கனவுகள் படகோட்டி மகனான அவரை குடியரசுத்தலைவர் மாளிகை வரை கொண்டு சென்றதே! விண்வெளி பற்றி அவர் கண்ட கனவு அவரை இந்தியாவின் ஏவுகணை மனிதர் ஆக்கியதே! குடியரசுத்தலைவர் மாளிகை என்பது சாதாரண மனிதனுக்கும் எட்டக்கூடிய உயரம் தான் என்று நிரூபித்தவர் அவர். அத்தனை உயரம் சென்றாலும் எளிமையாக இருக்க முடியும் என்று காட்டியவர் அவர்.

 

1931 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தீவில் அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்த அப்துல் கலாம் பள்ளிப் படிப்பை தனது கிராமத்தில் முடித்தவர். ஏழைக் குடும்பத்தில், ஒரு படகோட்டிக்குப் பிறந்த பல குழந்தைகளில் அவரும் ஒருவர். கலாம் தனது குடும்பத்திற்கு பொருளாதாரத்தில் உதவ செய்தித்தாள் போடும் வேலையை செய்து வந்தார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் 1954 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்தில் கணிதத்திலும், இயற்பியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். இதன் பின் அன்றைய மதராசில் இருந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் விண்வெளி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு படித்து 1960 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் நிபுணரான டாக்டர் விக்ரம் சாராபாயின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை பார்த்தார். 1969 ஆம் ஆண்டு இந்திய வானியல் ஆராய்ச்சிக் கழகத்தில் விண்வெளியில் ராக்கெட்டுகளைச் செலுத்தும் பணியில் திட்ட இயக்குனராகச் சேர்ந்தார். 1970 ஆண்டிலிருந்து 1980 வரை இந்திய வானியல் ஆராய்ச்சி கழகத்தின் மேம்பாட்டுப் பணிகளில் முக்கியப் பங்காற்றி அக்னி மற்றும் ப்ருத்வி ராகெட்டுகளை செலுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கென  ஓரிடத்தை உருவாக்கினார். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது.

 

1992-1999 ஆண்டுகளில் பிரதம மந்திரியின் அலுவலகத்தில் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் செயலராகவும் இருந்தார். 1997 இல் அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது. கலாம் தலைமை திட்ட ஒருங்கிணப்பாளராக பதவி வகித்து வந்தபோது 1998 ஆம் ஆண்டு மே மாதம் போக்ரான் அணு வெடிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால்  அணு ஆயுத நாடுகளின் வரிசையில் இந்தியாவின் பெயரும் சேர்ந்தது.

 

2002-2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். ஒரு விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் பதவி ஏற்கமுடியும் என்பதை செய்து காட்டியவர். இந்தியாவின் முதல் பிரம்மச்சாரி குடியரசுத்தலைவர் அவரே ஆவார். தான் ஒரு தலையாட்டி குடியரசுத் தலைவர் இல்லை என்பதை தன் பதவிக் காலத்தில் பலமுறை மெய்ப்பித்துக் காட்டினார். எந்தவித கட்சியையும் சாராமல் நடுநிலையான ஒரு குடியரசுத் தலைவராக இருக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக் காட்டு. அரசியல் கலப்பு இல்லாமல், உயரிய நற்பண்புகளுடன், புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குடியரசுத் தலைவராக அவர் இருந்தது இந்திய மக்கள் அனைவரையும் கவர்ந்தது. குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர் அமைத்த மூலிகைத் தோட்டம், குழந்தைகளுடன் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் குணம், அவரது நேர்மை அவரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன் குடியரசுத்தலைவர் பதவியைச் சுற்றி இருந்த மாயையையும் தன செய்கைகள் மூலம் விலக்கியவர். திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருந்ததும் அவருக்குப் புகழையே சேர்த்தது. இந்திய இளைஞர்கள் எதிர்பார்த்த இந்தியாவில் பிறந்து வளர்ந்த ‘உள்ளூர் நாயகன்’ என்ற பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

 

குடியரசுத் தலைவர் மாளிகை என்பது பெரிய மனிதர்கள் வந்து போகும் இடம் என்பதை மாற்றி சாமான்யர்களும் அதனுள் நுழையலாம் என்று காட்டினார். சாமான்யனாகப் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்து எதிர்கால தலைமுறைக்கு ஒரு உதாரண மனிதராக வாழ்ந்து காட்டினார். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற பழமொழியை மாற்றி, உயர உயரப் பறந்து ஊர்க்குருவி பருந்தாக முடியும் என்று  காட்டியவர்.

 

தன்னுடைய இந்த எளிமையான குணத்திற்குக் காரணமாக தனது உள்ளூர், மற்றும் ராமநாதபுரம் பள்ளி ஆசிரியர்களையே சுட்டிக் காட்டுவார் கலாம். ஆசிரியர்களின் அற்பணிப்புத் தன்மை, தன்னை உருவாக்கியதாகக் கூறுவார். ஒரு மனிதனை உருவாக்குவதில் தாய், தந்தை, ஆசிரியர் இவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று நம்பியவர். அதை மக்களிடமும், குறிப்பாக குழந்தைகளிடமும் சொன்னவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளிடமும், மாணவர்களிடமும் தனது கனவுகளைப் பகிர்ந்து கொண்டவர். வளர்ச்சி என்பது எல்லோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து உடையவர்.

 

அப்துல் கலாம் என்ற பெயர் நம் முன் முதலில் கொண்டுவருவது எளிமை. அடுத்ததாக, இந்தியாவை 2020 ஆம் ஆண்டில் வல்லரசாக்குவோம் என்ற அவரது கனவு. தான் கனவு கண்டதுடன் நிற்காமல் அதை இளைஞர்களிடமும் கொண்டு சேர்த்தார். அதனாலேயே இன்று இந்தியா அவரை ஒரு விஞ்ஞானியாகவோ, குடியரசுத் தலைவராகவோ பார்க்காமல் சொந்தக்காரராகப் பார்க்கிறது. அவரது ஏவுகணை ஆராய்ச்சி, ராக்கெட் தொழில் நுட்பம் எத்தனை இந்தியர்களுக்குப் புரியுமோ தெரியாது. அவை சாதாரண மக்களின் அறிவுக்குப் புலப்படாதது. பின் எது அடிமட்ட இந்தியனை அவர்பால் ஈர்த்தது? நாட்டின் முதல் குடிமகன் ஆனபோதிலும் தனது வேர்களை மறக்காமல், கால்களை பூமியின் மேல் அழுந்த வைத்துக் கொண்டு நின்றது, ஊழல் இல்லாத மனிதர் என்ற நற்பெயர், எட்டாத உயரத்திற்குப் போன பின்னும் மிகச் சுலபமாக கீழே இறங்கி வந்து மக்களுடன் மக்களாகக் கலந்து உறவாடியது இவையே அவருக்கு பிராபல்யத்தையும், மக்களின் அன்பையும் பெற்றுத் தந்துள்ளது. தன்னுடைய தோட்டக்காரரைக் கூட தன் நண்பர் என்றே பிறருக்கு அறிமுகம் செய்வார். அவரைப் பொறுத்தவரை உலகம் தட்டையானது தான். உலக மக்கள் யாவரும் ஒரே மேடையில் இருப்பவர்கள் தான். மேடு பள்ளங்கள் அற்ற சமுதாயம் தான் அவர் கனவு கண்டது.

 

அவரது மிகப்பெரிய நம்பிக்கை, இந்திய நாடும், அதன் இளைஞர்களும். தனது கடைசிப் பயணத்தில் கூட தனது ஆலோசகரிடம் அவர் மிகவும் கவலையுடன் பேசியது நாடாளுமன்றம் சமீப காலமாக செயல்படாமல் இருப்பதைப் பற்றியும், அதிகரித்து வரும் தீவிரவாதம் பற்றியும் தான். தனது மாணவர்களிடையே தாம் இவை பற்றி பேசி இவற்றிற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 

‘நீ நுண்ணறிவாளனாக இருந்தால், அந்த நுண்ணறிவை கல்வியால் உயர்த்திக் கொள்ள முடிந்தால் இந்த உலகத்தை மாற்றவேண்டிய பொறுப்பு உன்னுடையது’ என்று தனது மாணவர்களிடம் அடிக்கடி சொல்வாராம். ‘இந்தியாவின் நூறு கோடி மக்களின் முகத்திலும் நூறு கோடி புன்னகைகளைக் காணவேண்டும் என்பதே என் கனவு’ என்று சொன்னவர். தேசபக்தி நிரம்பியிருந்தது போலவே தெய்வ நம்பிக்கையும் அவரிடத்தில் நிறைந்திருந்தது. ‘உங்கள் காலத்திற்குப் பிறகு மக்கள் உங்களை எப்படி நினைவில் கொள்ளவேண்டும் என்று கேட்டபோது, ஒரு ஆசிரியராகவே எல்லோரும் என்னை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியவரின் ஆசையை கடவுள் நிறைவேற்றியதில் எந்த அதிசயமும் இல்லை.

 

அவர் நம்மிடையே இன்று இல்லை என்பது உண்மை. அதனால் என்ன? அவரது கனவுகளை, நம்பிக்கைகளை வாழ வைத்து அடுத்த தலைமுறைக்கும் அவற்றைக் கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடக்கலாம், என்று இருந்த இந்திய இளைஞர்களை, கனவு காண வைத்து, கனவு நனவாக நல்ல எண்ணங்களை மனதில் வளர்க்கலாம், அயராது உழைக்கலாம் என்று தன் வாழ்க்கை மூலம் நடந்து காட்டிய இந்த மாபெரும் மக்களின் தலைவருக்கு நமது உளப்பூர்வமான அஞ்சலிகள்.

 

 

அன்புள்ள இந்தியர்களே!

வல்லமை இதழில்   இன்று வெளியான கடிதம்

 

அப்துல் கலாம் நலமாக இருக்கிறார் - வதந்திகளை நம்ப வேண்டாம்: உதவியாளர் தகவல்!

திரு அப்துல் கலாம் அவர்களின் கடிதம்:

அன்புள்ள இந்தியர்களே,

இந்த உரையை நான் ஹைதராபாத் நகரத்தில் ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு 14 வயது பெண் என் கையெழுத்து வேண்டுமென்றாள். நான் அவளிடம் அவளது எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள்: முன்னேறிய இந்தியாவில் நான் வாழ வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் நானும் இந்த முன்னேறிய இந்தியாவை உருவாக்க வேண்டாமா?

 

இந்தியா பின்தங்கிய நாடு அல்ல; மிகவும் முன்னேறிய நாடு தான் என்று நாம் பிரகடனப்படுத்த வேண்டும். எப்போது இதைச் செய்யப் போகிறோம்?

நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

 

நமது அரசாங்கம் திறமையானது அல்ல என்கிறோம்;

நமது சட்டங்கள் மிகப் பழமையானவை என்கிறோம்;

மாநகராட்சி கழிவுகளை சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்கிறோம்;

தொலைபேசிகள் இயங்குவதில்லை; இரயில் நிர்வாகம் ஒரு ஜோக். விமானப் போக்குவரத்து உலகிலேயே படுமட்டமான ஒன்று. தபால்கள் ஆமை வேகத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதே இல்லை. இன்னும் இன்னும் எத்தனையோ குறைகள் இந்த நாட்டைப்பற்றி சொல்லுகிறோம். நாம் என்ன செய்தோம் இவற்றை சரிசெய்ய?

 

இந்தியாவிலிருந்து சிங்கபூர் செல்லும் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள்; உங்கள் முகத்தைக் கொடுங்கள்; இப்போது அந்த ‘நீங்கள்’ சிங்கபூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறீர்கள். நன்னடத்தையின் உருவமாக அங்கு இருக்கிறீர்கள். அங்கு சிகரெட்டை பிடித்துவிட்டு மீதியை தெருவில் போடுவதில்லை நீங்கள். அவர்களது பாதாள இரயில் பற்றி அவர்களைப் போலவே பெருமிதம் அடைகிறீர்கள்; நமது மாஹிம் கடல்வழிப் பாதை போலவே அமைந்திருக்கும் ஆர்செர்ட் சாலையில் மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை போக 5 டாலர்கள் (இந்தியப்பணம் சுமார் 60 ரூபாய்) கூசாமல் கொடுக்கிறீர்கள்; மால் அல்லது உணவகத்தின் வெளியில் நிறுத்தியிருக்கும் காரை எடுக்கத் தாமதமானால் அதிகப்படியான பார்க்கிங் பணத்தை செலுத்துகிறீர்கள்; சிங்கப்பூரில் இதற்கெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லுவதில்லை.

ரமதான் சமயத்தில் துபாயில் இருந்தால் வெளியில் சாப்பிட பயப்படுவீர்கள்;

ஜெட்டாவில் தலையை துணியால் மூடிக்கொள்ளாமல் எங்கும் செல்ல மாட்டீர்கள்;

‘என்னுடைய வெளியூர் தொலைபேசிக் கட்டணத்தை இன்னொருவருக்கு அனுப்பிவிடு’ என்று சொல்லி இந்தியாவில் தொலைபேசி ஊழியரை விலைக்கு வாங்கலாம்; லண்டனில் இது நடக்குமா? காரில் அநாயாசமாக வேக அளவை தாண்டி சென்றுவிட்டு காவல்துறை அதிகாரியிடம், ‘நான் யார் தெரியுமா?’ என்று இந்தியாவில் பெருமை பேசலாம்; வாஷிங்கடனில் முடியுமா?

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்கரைகளில் காலி சாக்லேட் பேப்பரை  குப்பைத் தொட்டிகளில் போடுவீர்கள், இங்கு?

டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை சாற்றைத் துப்பத் துணிவீர்களா?

பாஸ்டனில் உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை பரீட்சை எழுத வைக்கவோ, பொய் சர்டிபிகேட் வாங்கவோ உங்களால் முடியுமா?

இப்போதும் ‘உங்களைப்’ பற்றித்தான் பெசிகொண்டிருக்கிறோம்.

நீங்கள் மற்ற தேசங்களில் உள்ள சட்டதிட்டங்களுக்கு தலை வணங்குவீர்கள் ஆனால் உங்கள் தேசத்தில் இதைச் செய்ய மாட்டீர்கள்.

இந்திய மண்ணைத் தொட்டவுடன், சிகரெட் துண்டை, கையிலிருக்கும் துண்டுக் காகிதங்களை வீதியில் வீசி எறிவீர்கள். அந்நிய தேசங்களுக்குப் போய் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொண்டு அங்குள்ளவர்களை போற்றத் தெரிந்த உங்களால் உங்கள் தேசத்தில் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அமெரிக்காவில் ஒவ்வொரு நாய் சொந்தக்காரரும் தெருவில் நாயுடன் நடக்கும்போது, தங்கள் நாய் சுச்சூ, கக்கா போனவுடன் சுத்தம் செய்வார்கள். எந்த இந்தியனாவது செய்வானா?

 

தேர்தலில் ஓட்டு போட்டவுடன் நம் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைத்து, வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொள்வோம். அரசு நமக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் நமது பங்களிப்பு வெறும் பூஜ்யம். மாநகராட்சி தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம், ஆனால் குப்பைகளை தெரு முழுவதும் போடுவது நம் தப்பு என்று உணர மாட்டோம். அல்லது தெருவில் கிடக்கும் ஒரு துண்டு காகிதத்தையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போடமாட்டோம்.

ரயில்வே நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தமாக வைக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால் நாம் அவைகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பது நம் பொறுப்பு என்பதை உணர மாட்டோம். விமானப் பயணங்களில் மிகச்சிறந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த சோப்பு, ஷாம்பூ இவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் இவைகளை திருடக்கூடத் தயங்கமாட்டோம்.

 

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சிணை, பெண்சிசு கொலை போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு வாய்கிழியப் பேசுவோம். வீட்டில் பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று சிந்திப்போமா?

 

இப்படி நடந்துகொள்ள நாம் சொல்லும் சால்ஜாப்புகள் என்ன?

‘அமைப்பு மாறவேண்டும், நான் ஒருவன் மாறி என்ன ஆகப்போகிறது?’

யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்? இந்த அமைப்பில் அங்கத்தினர்கள் யார்? நம்மைப் பொறுத்தவரை இந்த அமைப்பில் இருப்பவர்கள் நமது அக்கம்பக்கத்தவர்கள், மற்ற வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமூகங்கள் இவை தவிர அரசு. நிச்சயமாக நீங்களும் நானும் இதில் இல்லை.

 

உண்மையில் நமக்கு இந்த சமூகத்தை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். ஏதாவது நேர்மறையாக நமது பங்களிப்பை கொடுப்போமா? குடும்பத்துடன் பத்திரமான இடத்திற்கு போய், ஒரு கூண்டுக்குள் ஒளிந்துகொண்டு விடுவோம். யாரோ ஒரு திருவாளர் ‘சுத்தம்’ வந்து தனது கையை ‘விஷுக்’ கென்று வீசி ஏதாவது அற்புதங்கள் செய்ய வேண்டும். அல்லது நாம் வேறு ஏதாவது வெளிதேசத்திற்கு கோழைகள் போல ஓடிவிடுவோம். அமெரிக்காவிற்கு சென்று அவர்களது நாட்டின் அமைப்பைப் புகழுவோம் அவர்களது பெருமையில் குளிர் காய்வோம். நியூயார்க் நகரம் பாதுகாப்பானதாக இல்லையா, ஓடு இங்கிலாந்திற்கு; இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டமா, அடுத்த விமானத்தைப் பிடித்து ஓடு வளைகுடா நாட்டிற்கு; வளைகுடா நாடுகளில் போர் அபாயமா? உடனே இந்திய அரசு ஓடிவந்து உங்களை காப்பாற்றவேண்டும்!

 

இங்கிருப்பவர்கள் எல்லோரும் இந்த நாட்டை தூற்றவும், மோசமாகப் பேசவும் தான். யாருக்குமே இந்த நாட்டின் அமைப்பின் மீது அக்கறை இல்லை. நமது மனசாட்சியை பணத்திற்கு அடமானம் வைத்துவிட்டோம்.

 

அன்புள்ள இந்தியர்களே, இந்த கட்டுரை உங்களை சிந்திக்க வைக்கவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து கொள்ளவும்தான் எழுதப்படுகிறது. இந்தக் கேள்விகள் உங்கள் மனசாட்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பும் என்றுதான்.

 

ஜான் எப் கென்னடி சொன்னதை நானும் திரும்பச் சொல்லுகிறேன்: ‘இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்தால் அமெரிக்காவும் பிற நாடுகளும் இன்றிருக்கும் நிலைமைக்கு இந்தியா வரமுடியுமோ அதைச் செய்வோம்.’

 

இந்தியாவிற்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இந்தக் கடிதத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் அனுப்புங்கள் – ஜோக்குகள் அனுப்புவதற்குப் பதிலாக!

 

நன்றியுடன்,

அப்துல் கலாம்.