அப்துல் கலாம் – கனவு விதை விதைத்தவர்

இந்திய இளைஞர்களை கனவு காணுங்கள் என்று திரும்பத்திரும்ப சொன்ன நமதருமை தலைவர் டாக்டர் அப்துல் கலாம் திரும்பி வர இயலாத உலகிற்குச் சென்று ஓர் ஆண்டு கடந்துவிட்டது. சென்ற ஆண்டு இதே நாள் நாங்கள் பூனேவிலிருந்து  பெங்களூருக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் செய்தி எங்களுக்கு கிடைத்தது. ஒரு சக பிரயாணி சொன்னார்: ‘என்ன ஒரு அனாயாச முடிவு பாருங்கள். ஆஷாட மாத (நம் ஆடி மாதம்) ஏகாதசியில் ஒரு நொடியில் மரணம் சம்பவித்திருக்கிறது. இனி அவருக்குப் பிறவி இல்லை!’ அவருக்குப் பிறவி இருக்கிறதோ இல்லையோ, நமக்கு இனி அவர் போல இன்னொரு உதாரணத் தலைவர் கிடைக்கமாட்டார் என்பது உறுதி.

 

‘கனவு காணுங்கள்; கனவுகள் உங்கள் மனதில் எண்ணங்களாக உருவாகும்; எண்ணங்கள் செயல்களாக மாறும்’.

‘உங்கள் கனவுகள் நனவாக முதலில் கனவு காணத் தொடங்குங்கள்’

‘கனவு என்பது தூக்கத்தில் காணும் கனவு அல்ல; உங்களை தூங்க விடாமல் செய்யும் கனவு!’

 

இப்படி சொல்லிச்சொல்லி இந்திய இளைஞர்களின் மனதில் கனவு விதை விதைத்தவர். கனவுகளின் மேல் அவருக்கு என்ன அவ்வளவு மோகம் என்று கேட்கத் தோன்றுகிறது, அல்லவா? அவர் சிறுவயதில் கண்ட கனவுகள் படகோட்டி மகனான அவரை குடியரசுத்தலைவர் மாளிகை வரை கொண்டு சென்றதே! விண்வெளி பற்றி அவர் கண்ட கனவு அவரை இந்தியாவின் ஏவுகணை மனிதர் ஆக்கியதே! குடியரசுத்தலைவர் மாளிகை என்பது சாதாரண மனிதனுக்கும் எட்டக்கூடிய உயரம் தான் என்று நிரூபித்தவர் அவர். அத்தனை உயரம் சென்றாலும் எளிமையாக இருக்க முடியும் என்று காட்டியவர் அவர்.

 

1931 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தீவில் அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்த அப்துல் கலாம் பள்ளிப் படிப்பை தனது கிராமத்தில் முடித்தவர். ஏழைக் குடும்பத்தில், ஒரு படகோட்டிக்குப் பிறந்த பல குழந்தைகளில் அவரும் ஒருவர். கலாம் தனது குடும்பத்திற்கு பொருளாதாரத்தில் உதவ செய்தித்தாள் போடும் வேலையை செய்து வந்தார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் 1954 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்தில் கணிதத்திலும், இயற்பியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். இதன் பின் அன்றைய மதராசில் இருந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் விண்வெளி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு படித்து 1960 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் நிபுணரான டாக்டர் விக்ரம் சாராபாயின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை பார்த்தார். 1969 ஆம் ஆண்டு இந்திய வானியல் ஆராய்ச்சிக் கழகத்தில் விண்வெளியில் ராக்கெட்டுகளைச் செலுத்தும் பணியில் திட்ட இயக்குனராகச் சேர்ந்தார். 1970 ஆண்டிலிருந்து 1980 வரை இந்திய வானியல் ஆராய்ச்சி கழகத்தின் மேம்பாட்டுப் பணிகளில் முக்கியப் பங்காற்றி அக்னி மற்றும் ப்ருத்வி ராகெட்டுகளை செலுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கென  ஓரிடத்தை உருவாக்கினார். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது.

 

1992-1999 ஆண்டுகளில் பிரதம மந்திரியின் அலுவலகத்தில் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் செயலராகவும் இருந்தார். 1997 இல் அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது. கலாம் தலைமை திட்ட ஒருங்கிணப்பாளராக பதவி வகித்து வந்தபோது 1998 ஆம் ஆண்டு மே மாதம் போக்ரான் அணு வெடிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால்  அணு ஆயுத நாடுகளின் வரிசையில் இந்தியாவின் பெயரும் சேர்ந்தது.

 

2002-2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். ஒரு விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் பதவி ஏற்கமுடியும் என்பதை செய்து காட்டியவர். இந்தியாவின் முதல் பிரம்மச்சாரி குடியரசுத்தலைவர் அவரே ஆவார். தான் ஒரு தலையாட்டி குடியரசுத் தலைவர் இல்லை என்பதை தன் பதவிக் காலத்தில் பலமுறை மெய்ப்பித்துக் காட்டினார். எந்தவித கட்சியையும் சாராமல் நடுநிலையான ஒரு குடியரசுத் தலைவராக இருக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக் காட்டு. அரசியல் கலப்பு இல்லாமல், உயரிய நற்பண்புகளுடன், புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குடியரசுத் தலைவராக அவர் இருந்தது இந்திய மக்கள் அனைவரையும் கவர்ந்தது. குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர் அமைத்த மூலிகைத் தோட்டம், குழந்தைகளுடன் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் குணம், அவரது நேர்மை அவரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன் குடியரசுத்தலைவர் பதவியைச் சுற்றி இருந்த மாயையையும் தன செய்கைகள் மூலம் விலக்கியவர். திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருந்ததும் அவருக்குப் புகழையே சேர்த்தது. இந்திய இளைஞர்கள் எதிர்பார்த்த இந்தியாவில் பிறந்து வளர்ந்த ‘உள்ளூர் நாயகன்’ என்ற பட்டம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

 

குடியரசுத் தலைவர் மாளிகை என்பது பெரிய மனிதர்கள் வந்து போகும் இடம் என்பதை மாற்றி சாமான்யர்களும் அதனுள் நுழையலாம் என்று காட்டினார். சாமான்யனாகப் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்து எதிர்கால தலைமுறைக்கு ஒரு உதாரண மனிதராக வாழ்ந்து காட்டினார். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற பழமொழியை மாற்றி, உயர உயரப் பறந்து ஊர்க்குருவி பருந்தாக முடியும் என்று  காட்டியவர்.

 

தன்னுடைய இந்த எளிமையான குணத்திற்குக் காரணமாக தனது உள்ளூர், மற்றும் ராமநாதபுரம் பள்ளி ஆசிரியர்களையே சுட்டிக் காட்டுவார் கலாம். ஆசிரியர்களின் அற்பணிப்புத் தன்மை, தன்னை உருவாக்கியதாகக் கூறுவார். ஒரு மனிதனை உருவாக்குவதில் தாய், தந்தை, ஆசிரியர் இவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று நம்பியவர். அதை மக்களிடமும், குறிப்பாக குழந்தைகளிடமும் சொன்னவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளிடமும், மாணவர்களிடமும் தனது கனவுகளைப் பகிர்ந்து கொண்டவர். வளர்ச்சி என்பது எல்லோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து உடையவர்.

 

அப்துல் கலாம் என்ற பெயர் நம் முன் முதலில் கொண்டுவருவது எளிமை. அடுத்ததாக, இந்தியாவை 2020 ஆம் ஆண்டில் வல்லரசாக்குவோம் என்ற அவரது கனவு. தான் கனவு கண்டதுடன் நிற்காமல் அதை இளைஞர்களிடமும் கொண்டு சேர்த்தார். அதனாலேயே இன்று இந்தியா அவரை ஒரு விஞ்ஞானியாகவோ, குடியரசுத் தலைவராகவோ பார்க்காமல் சொந்தக்காரராகப் பார்க்கிறது. அவரது ஏவுகணை ஆராய்ச்சி, ராக்கெட் தொழில் நுட்பம் எத்தனை இந்தியர்களுக்குப் புரியுமோ தெரியாது. அவை சாதாரண மக்களின் அறிவுக்குப் புலப்படாதது. பின் எது அடிமட்ட இந்தியனை அவர்பால் ஈர்த்தது? நாட்டின் முதல் குடிமகன் ஆனபோதிலும் தனது வேர்களை மறக்காமல், கால்களை பூமியின் மேல் அழுந்த வைத்துக் கொண்டு நின்றது, ஊழல் இல்லாத மனிதர் என்ற நற்பெயர், எட்டாத உயரத்திற்குப் போன பின்னும் மிகச் சுலபமாக கீழே இறங்கி வந்து மக்களுடன் மக்களாகக் கலந்து உறவாடியது இவையே அவருக்கு பிராபல்யத்தையும், மக்களின் அன்பையும் பெற்றுத் தந்துள்ளது. தன்னுடைய தோட்டக்காரரைக் கூட தன் நண்பர் என்றே பிறருக்கு அறிமுகம் செய்வார். அவரைப் பொறுத்தவரை உலகம் தட்டையானது தான். உலக மக்கள் யாவரும் ஒரே மேடையில் இருப்பவர்கள் தான். மேடு பள்ளங்கள் அற்ற சமுதாயம் தான் அவர் கனவு கண்டது.

 

அவரது மிகப்பெரிய நம்பிக்கை, இந்திய நாடும், அதன் இளைஞர்களும். தனது கடைசிப் பயணத்தில் கூட தனது ஆலோசகரிடம் அவர் மிகவும் கவலையுடன் பேசியது நாடாளுமன்றம் சமீப காலமாக செயல்படாமல் இருப்பதைப் பற்றியும், அதிகரித்து வரும் தீவிரவாதம் பற்றியும் தான். தனது மாணவர்களிடையே தாம் இவை பற்றி பேசி இவற்றிற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 

‘நீ நுண்ணறிவாளனாக இருந்தால், அந்த நுண்ணறிவை கல்வியால் உயர்த்திக் கொள்ள முடிந்தால் இந்த உலகத்தை மாற்றவேண்டிய பொறுப்பு உன்னுடையது’ என்று தனது மாணவர்களிடம் அடிக்கடி சொல்வாராம். ‘இந்தியாவின் நூறு கோடி மக்களின் முகத்திலும் நூறு கோடி புன்னகைகளைக் காணவேண்டும் என்பதே என் கனவு’ என்று சொன்னவர். தேசபக்தி நிரம்பியிருந்தது போலவே தெய்வ நம்பிக்கையும் அவரிடத்தில் நிறைந்திருந்தது. ‘உங்கள் காலத்திற்குப் பிறகு மக்கள் உங்களை எப்படி நினைவில் கொள்ளவேண்டும் என்று கேட்டபோது, ஒரு ஆசிரியராகவே எல்லோரும் என்னை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியவரின் ஆசையை கடவுள் நிறைவேற்றியதில் எந்த அதிசயமும் இல்லை.

 

அவர் நம்மிடையே இன்று இல்லை என்பது உண்மை. அதனால் என்ன? அவரது கனவுகளை, நம்பிக்கைகளை வாழ வைத்து அடுத்த தலைமுறைக்கும் அவற்றைக் கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நடக்கலாம், என்று இருந்த இந்திய இளைஞர்களை, கனவு காண வைத்து, கனவு நனவாக நல்ல எண்ணங்களை மனதில் வளர்க்கலாம், அயராது உழைக்கலாம் என்று தன் வாழ்க்கை மூலம் நடந்து காட்டிய இந்த மாபெரும் மக்களின் தலைவருக்கு நமது உளப்பூர்வமான அஞ்சலிகள்.

 

 

கையால் சாப்பிட வாங்க!

eating with hand

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ‘சினேகிதி’ ஜூலை இதழில் வெளியான கட்டுரை.

 

இப்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் கையால் சாப்பிடுவது பத்தாம்பசலித்தனம், பழங்கால வழக்கம், ஆரோக்கிய குறைச்சல், நாகரீகமில்லாத செயல் என்று கருதப் படுகிறது.

 

ஆனால் கையால் சாப்பிடும் பழக்கம் நம் உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்திற்கும், ஆன்மாவிற்கும் வலுவூட்டும் என்கிறது ஒரு பழைய சொல்வழக்கு.

 

 

இப்போது பல வீடுகளில் கையால் சாப்பிடுவதைத் தவிர்த்து ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள்.

 

ஏன் நம் முந்தைய தலைமுறை கையால் சாப்பிட்டு வந்தார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆயுர்வேதத்திலிருந்து இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. வேத காலத்து மக்களுக்கு நம் கைகளில் இருக்கும் வல்லமை தெரிந்திருந்தது.

 

கைகளினால் பல்வேறு முத்திரைகள் காண்பிக்கும் பழக்கம் பரத நாட்டியத்தில் உண்டு. அதேபோல தியானம் செய்யும்போதும் விரல்களை மடக்கியும், நீட்டியும் வேறு வேறு விதமான முத்திரைகளுடன் அமருவது வழக்கம். இது போன்ற முத்திரைகளினால், அவற்றில் இருக்கும் நன்மைகளை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் கையினால் சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம்.

 

நமது செயல்களுக்கு கைகள் தான் மிகச்சிறந்த உறுப்பு. வேதத்தில் வரும் ஒரு இறைவணக்கம் இதை சொல்லுகிறது. காலையில் எழுந்தவுடன் ‘கர தரிசனம்’ செய்ய வேண்டும். அப்போது கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

 

‘கராக்ரே வசதே லக்ஷ்மி; கர மூலே சரஸ்வதி; கர மத்யே து கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’

 

‘நமது கைகளில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். கைகளின் மூலையில்  சரஸ்வதி தேவி; கைகளின் நடுவில் கோவிந்தன் இருக்கிறான். இதை ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே சொல்ல வேண்டும்.

 

அன்றைய நாள் நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஸ்லோகம் தருகிறது.

 

நம் கைகள், கால்களின் வழியாகத்தான் பஞ்சபூதங்களும் நம் உடம்பில் நுழைகின்றனவாம். ஒவ்வொரு விரலும் இந்த ஐம்பூதங்களின் நீட்சிகள் என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது.

 

நமது கட்டை விரல் அக்னி. சின்னக் குழந்தைகள் விரல் சூப்புவதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களால் உடல்ரீதியான செயல்கள் செய்ய முடியாத போது, உண்ட உணவு செரிக்க இயற்கை கட்டை விரலை சூப்புவதன் மூலம் அவர்களின் செரிமானத்திற்கு இப்படி உதவுகிறது.

 

ஆட்காட்டி விரல் வாயு. நடுவிரல் ஆகாசம். (இதையே ஈதர் என்கிறார்கள். அதாவது மனித உடலில் உள்ள செல்களின் நடுவில் இருக்கும் வெற்றிடங்கள்.) மோதிர விரல் ப்ருத்வி (பூமி). சுண்டு விரல் நீர்.

 

ஆக ஒவ்வொரு விரலும் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. விரல்களிலேயே செரிமானம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. கையால் உணவை அள்ளி எடுக்கும்போது ஐம்பூதங்களின் ஆற்றலும் தூண்டப் படுகிறது. அக்னி செரிமான நொதிகளை சுரக்க உதவுகிறது.  செரிமானம் தூண்டப் படுவதுடன், உண்ணும் உணவின் சுவை, தன்மை, வாசனை முதலிய அம்சங்களும் அதிகரித்து  உணவை நன்கு அனுபவித்து ருசித்து உண்ணமுடிகிறது.

 

நம் வீட்டில் அந்தக் காலத்துப் பெரியவர்கள்  உணவுப் பொருட்களை அளக்க ஆழாக்கு, கரண்டி அல்லது ஸ்பூன் பயன்படுத்த மாட்டார்கள். ‘ஒரு பிடி அரிசி, ஒரு சிட்டிகை உப்பு,  சின்ன கோலி அளவு புளி’ என்று கை விரல்களாலேயே அளவு காண்பிப்பார்கள். புட்டு மாவிற்கு பதம் சொல்லும்போது கையால் பிடித்தல் பிடிபடவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும் என்பார்கள். வெல்லப்பாகுப் பதமும் இரண்டு விரல்களால் கரைந்த வெல்லத்தைத் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம், இரண்டு கம்பிப் பதம் என்பார்கள்.

 

கெட்டியான உணவுப் பொருளோ, அல்லது திரவப் பொருட்களோ அவற்றை அளக்க, 6 விதமான கையளவுகள் இருக்கின்றன.

 

சின்ன வயதில் அம்மா கையால் கலந்து நம் கையில் சாதம் போடுவாள். அதில் சின்னதாக ஒரு குழி செய்து அதற்குள் குழம்பு விட்டுக் கொண்டு சாப்பிடுவோமே, அந்த ருசி இன்னும் நாவில் இனிப்பதற்குக் காரணம் அம்மாவின் கை ருசி தானே?

 

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் சாப்பிடுவோமே, நினைவிருக்கிறதா? கல்சட்டியில்  இரவு நீர் ஊற்றப்பட்ட சாதத்தில்  காலையில் உப்பு, மிளகாய், துளி பெருங்காயம்  நுணுக்கிப் போட்டு  நீர் மோர் ஊற்றி பாட்டி தரும் ஆரோக்கிய பானம் சாதேர்த்தம் (சாதமும் நீரும் கலந்த திரவம்) அது நமது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதையும் குளிரப் பண்ணுமே, அதற்குக் காரணம் உப்பு மிளகாய் பெருங்காயம் மட்டுமா? இல்லையே, பாட்டியின் கை மணமும் அதில் சேர்ந்திருப்பதால் தானே?

 

 

இட்லிக்கு அரைத்து வைக்கும்போது என்னதான் அரவை இயந்திரம் அரைத்தாலும் கடைசியில் நம் கைகளால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலந்து வைக்கிறோம், இல்லையா? அடுத்தநாள் காலையில் பொங்கி இருக்கும் மாவைப் பார்த்து நம் மனமும் பொங்கி, இன்றைக்கு மல்லிகைப் பூ போல இட்லி என்று பூரிக்கிறோமே!

 

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நீரை சிறிது சிறிதாக கொட்டி, மாவை கைகளால் நன்றாக அளைந்து, உருட்டி  பிசையுங்கள். நீங்கள் அதிக  நேரம் பிசையப் பிசைய மிக மிக மிருதுவான சப்பாத்திகள் வரும். முக்கியமாக ஃபூல்கா சப்பாத்திக்கு கையால்தான் கலக்க வேண்டும். அப்போதுதான் நெருப்பில் நேரிடையாக சப்பாத்திகளைப் போடும்போது அவை உப்பும்.

 

பழைய விஷயங்கள் என்றாலே ஒரு மாதிரி பார்த்து ‘இப்போ இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க, யாராவது கைகளை பயன்படுத்தி ஏதாவது செய்கிறார்களா சொல்லுங்க’ என்பவர்களுக்கு:

 

6 விதமான கையளவுகள் பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடியபோது ஒரு காணொளி கிடைத்தது.

 

அதில் அரிசோனா மாநில பல்கலைகழக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் பணி புரியும்  திருமதி சிமின் லேவின்சன் என்ற பெண்மணி நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை ஒருவேளைக்கு எந்த அளவில் சாப்பிடுவது என்பதை நமது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டு விளக்கினார். ரொம்பவும் வியப்பாக இருந்தது.

 

மாவுப்பொருள்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்? கை விரல்களை மடக்கிக் காட்டுகிறார்: ஒரு கைப்பிடி;

பழங்கள்: கையை விரித்து ஒரு கையளவு;

பச்சை காய்கறி, கீரைவகைகள் இரண்டு கைகளையும் விரித்து சேர்த்து வைத்து இரண்டு கையளவு;

கொழுப்பு: (வெண்ணை, நெய், எண்ணெய்) கட்டை விரலின் நுனியிலிருந்து கட்டைவிரலின் பாதி வரை;

சீஸ்: முழு கட்டைவிரலின் அளவு – ப்ரோடீன் இருப்பதால்.

திரவங்கள்: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் விரித்து ஒரு டம்ளர் அளவு என்கிறார்.

 

காணொளி இணைப்பு: http://usatoday30.usatoday.com/video/measuring-food-with-the-palm-of-your-hand/2308102638001

 

பாருங்கள், இந்த விஷயங்களை நம் முன்னோர்கள் என்றைக்கோ செயல் படுத்தி இருக்கிறார்கள்.

 

பழைய விஷயங்கள் இவற்றில் என்ன இருக்கின்றன என நாம் ஒதுக்கும் பலவற்றில் நிறைய விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மறைந்து இருக்கின்றன. இவற்றை அறிந்து கொண்டு நம் வாழ்வை சீராக அமைத்துக் கொள்வோம்.

 

இந்த காணொளியையும் காணுங்கள்.

இந்திய உணவை எப்படி கையால் எடுத்து சாப்பிடுவது என்று விளக்குகிறார்கள்!