எடுத்ததை எடுத்த இடத்தில்

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88

18.9.2016 தினமலர் வாரமலரில் வெளியான எனது கதை இங்கே:

 

 

இன்னும் சிறிது நேரத்தில் அம்மாவைப் பார்த்து விடலாம் என்கிற நினைவே இனித்தது. இந்த முறை அம்மாவிற்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அம்மா தனியாக இருப்பது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் அது அவனுக்கும் சௌகரியமாகவே இருந்தது. ஒரே இடத்தில் மனைவியையும், அம்மாவையும் சமாளிப்பது என்பது பெரும் சவாலான வேலையாக இருந்தது. இத்தனைக்கும் இருவரும் படித்தவர்கள்; அம்மா வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவள். மருமகள் வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவள்.

 

அம்மா பர்பக்ஷனிஸ்ட். இது இது இந்தந்த இடத்தில்தான் இருக்கவேண்டும் என்று பழகிவிட்டதோடு குழந்தைளையும் அந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவள். ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்’ என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை கேட்டுக்கேட்டே வளர்ந்தவர்கள் அவனும் அவன்  அக்காவும். அக்கா திருமணம் ஆகி புக்ககம் போன பின்னும் அம்மாவின் தாரக மந்திரத்தை மறக்காமல் தன் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டு விட்டாள். இவன்தான் திருமணம் ஆனவுடன் தடம் மாறிப்போனான்.

 

திருமணம் ஆன புதிதில் மனைவியிடம் அம்மாவின் இந்தக் கொள்கையைச்  சொல்லாததன் பலனை வெகு சீக்கிரமே அனுபவிக்க ஆரம்பித்தான். அவன் மனைவிக்கு எதையுமே எடுத்த இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கமே இருக்கவில்லை. அவள் எடுத்து வைக்கவில்லை என்றால் என்ன, நாமே செய்வோம் என்று ஆரம்பித்து இன்று வரை அவன்தான் எல்லா ஒழுங்குமுறைகளையும் பின்பற்றி வருகிறான். அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. தலைவாரும் சீப்பிலிருந்து எது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கிடக்கும். ஆபீஸ் போகும் அவசரத்தில் அவளது சீப்பு கிடைக்கவில்லை என்றால் இவனுடைய சீப்பை எடுத்து வாரிக்கொண்டு போய்விடுவாள். அவனுக்கொன்றும் அதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அதில் சுற்றியிருக்கும் தலைமுடியை இடத்துச் சுற்றிப் போடாமல் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவாள். கோபம் தாங்காமல் அந்த சீப்பை எடுத்து அவளது கைப்பையில் போட்டிருக்கிறான், பலமுறை. பலன் எதுவுமில்லை. அவளைத் திருத்த அவனும் முயன்று முயன்று இன்றுவரை  தோல்விதான்.

 

காலையில் எழுந்ததிலிருந்து எதையாவது தேடிக்கொண்டே இருப்பாள். தேடுவதிலேயே நேரம் ஆகிவிடும். சரி இன்று தேடுகிறோமே, கிடைத்தவுடன்  சரியான இடத்தில் வைப்போம் என்று வைப்பாளா, அதுவும் கிடையாது. தினமும் தேடலோத்சவம் தான். காலைவேளையில் இவன் வீட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்திற்கு அம்மா வைத்த பெயர். இப்படிப் பெயர் வைப்பதில் அம்மாவிற்கு நிகர் அம்மாதான். பெங்களூர் வந்த புதிதில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போவார்கள். அங்கு ஒரு எழுதுபொருள் விற்கும் கடை. அங்கு எது கேட்டாலும் அந்தக்கடைக்காரர் தேட ஆரம்பிப்பார். ஒரே தடவையில், தேடாமல் கேட்டதை எடுத்துக் கொடுத்தே கிடையாது. அவருக்கு அம்மா ‘தேடல் மன்னன்’ என்று பெயர் வைத்துவிட்டாள். தேடல் மன்னன் கடை என்றே அம்மா சொல்லிச் சொல்லி அவரது கடைப்பெயர் என்னவென்றே மறந்து போய்விட்டது!

 

திருமணம் ஆகி அவள் வந்த ஒருவாரத்திலேயே அம்மாவிற்கு அவளது ஒழுங்கின்மை புரிந்துவிட்டது. அவனுக்காகப் பேசாமல் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தாள். புது மனைவி அதிகம் சொல்லமுடியவில்லை என்ற அவனது பலவீனம் அம்மாவிற்குப் புரிய, ‘தவிட்டுப்பானை தாடாளனை சேவித்துக்கொண்டு சீர்காழியிலேயே இருக்கிறேன்’ என்று கிளம்பிவிட்டாள்.

 

அம்மா அவனது திருமணத்திற்கு முன்பும் அங்கேதான் இருந்தாள். அவன் படித்ததும் அங்குதான். சின்ன வயதிலேயே அப்பா பரமபதித்துவிட, அப்பா வேலை பார்த்துக்கொண்டிருந்த வங்கியிலேயே அம்மாவுக்கு வேலை கிடைத்தது. மேல்படிப்பிற்காக சீர்காழியை விட்டு வெளியே வந்தவன், படித்து முடித்து சில வருடங்கள் வெளிநாடும் போய்விட்டு வந்தான். திருமணத்திற்கு முன் சென்னையில் வீடு வாங்கினான். அம்மாவிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். புது வீட்டைப் பார்த்துப்பார்த்து அலங்கரித்தாள். ஷோ-கேஸ் பொம்மைகளை தினமும் மாற்றி மாற்றி வைத்தாள். வீட்டினுள் செடிகளை வைப்பது அம்மாவிற்கு மிகவும் பிடித்த விஷயம். அவைகளையும் அவ்வப்போது மாற்றுவாள். ஒவ்வொரு செடியின் அடியிலும் ஒரு அலுமினிய தட்டு வைத்திருப்பாள். செடிகளுக்கு விடும் நீர் அவற்றில் தேங்கும். தரை பாழாகாது என்பாள் அம்மா. செடிகளின் இலைகளுக்கும் நீர் தெளிப்பானால் தண்ணீர் அடிப்பாள். பச்சைபசேல் என்று வீடே ஜொலிக்கும்.

 

முக்கியமாக தளிகை உள் அம்மாவின் மனதிற்கு நெருக்கமான இடம். ஒரே மாதிரியான கண்ணாடி பாட்டில்கள் வாங்கி சாமான்களைக் கொட்டி வைத்தாள். எல்லா சாமான்களுக்குள்ளும் ஒரு எவர்சில்வர் கரண்டி. அம்மா எதையும் கையால் தொடவே மாட்டாள். சிங்கில் ஒரு பாத்திரம் கூட இருக்காது. எவர்சில்வர் சிங்க் அம்மாவின் கைவண்ணத்தில் பளபளவென்று மின்னும்.

 

அம்மா எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவனுக்கு இன்னும் நினைவிருக்கும் ஒரு விஷயம்: அவர்கள் இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வருடமும் பள்ளி முடிந்தவுடன் அம்மா நோட்டுப் புத்தகங்களில் மீதியிருக்கும் எழுதாத பக்கங்களை எடுத்து ஒன்றாக வைத்துத் தைத்துக் கொடுப்பாள். அம்மாவின் கைத்திறன் இதிலும் தெரியும். வேறு வேறு நோட்டுப் புத்தகங்களில் இருக்கும் தாள்களை எடுத்து ஓரங்களை ஒரே அளவில் கத்தரித்து, அதற்கு வீட்டில் இருக்கும் பழைய காலண்டர்களின் கெட்டியான தாள்களை வைத்து அட்டை மாதிரி தைத்துக் கொடுப்பாள். பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும். இதை எங்கே வாங்கினாய் என்று அவர்களது வகுப்பு மாணவர்கள்  கேட்கும் அளவிற்கு அந்த நோட்டுப்புத்தகம் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். அதை ரஃப் நோட் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். சிலர் எங்களுக்கும் அதைப் போலத் தைத்துக் கொடுக்கச் சொல்லு என்று கேட்பார்கள். அம்மா மறுத்துவிடுவாள்.

 

எந்த வேலையையும் அம்மா ஒத்திப்போட்டதே இல்லை. செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். இவன் மனைவி நேர்மாறு. ‘இப்படி ஒரு மாமியாருக்கு இப்படி ஒரு மாட்டுப்பெண். உன்னோட தவிட்டுப்பானை தாடாளனின் திருவுள்ளம்!’ என்று அம்மாவைக் கிண்டல் அடிப்பான். அம்மாவும் இவனைப் பார்த்து ‘பாரதியார் உனக்காகத்தான் இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறார் ‘திக்குத் தெரியாத காட்டில் – ……………… தேடித்தேடி இளைத்தே……ஏ………ஏ……னே……! ‘ என்று பாடிவிட்டு, ‘அந்த கோடிட்ட இடத்தில் ‘சீப்பு சோப்பு இன்ன பிற என்று நிரப்புக….!’  என்று சொல்லி வாய்விட்டு சிரிப்பாள்.

 

ஒவ்வொருமுறை ஊருக்கு அம்மாவைப் பார்க்க வரும்போதும் அம்மாவை தன்னுடன் வரச்சொல்லிக் கூப்பிடுவான். மறுத்துவிடுவாள்.

‘என்னால அந்த ஊழல சகிச்சுக்க முடியாதுடா!’

‘ஏம்மா! அவகிட்ட இருக்கற நல்லத பார்க்கமாட்டியா?’

வாயைத் திறக்கமாட்டாள் அம்மா.

பிறகு ஒருநாளில் சொன்னாள்: ‘அடிப்படை சுத்தம் வேண்டாமா? நான் ஒன்றும் மடி ஆசாரம் என்று சொல்லிக்கொண்டு இதைத்தொடாதே, அதைத் தொடாதேன்னு சொல்றதில்லை. வீட்டுக்குள்ள நுழைஞ்சா எங்க பார்த்தாலும் சாமான்கள்! அததற்கு என்று இடம் இருக்கிறது இல்லையா? துப்பட்டாவை ப்ரிட்ஜ் மேல போடுவாளா? ஆபீஸ்ல சாப்பிட்ட டிபன் பாக்ஸ் ஒரு அலம்பு அலம்பி எடுத்துண்டு வரக்கூடாதா? வரக் வரக்குனு காஞ்சு போயி…… அப்படியே வெளி சிங்க்ல போடறா! என்னால பாக்க முடியலடா! வேற எந்த விஷயத்துலயும் அவ மேல எனக்குக் கோவம் இல்லை. புரிஞ்சுக்கோ!’

 

‘ஆபீஸ் போறவம்மா….!’ அம்மா பளிச்சுன்னு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள். கோவம் இல்லை அந்தக் கண்களில். அடிபட்ட உணர்வு. ‘நானும் ஆபீஸ் போனவதாண்டா! உங்க அப்பா போகும்போது நீங்க ரெண்டுபேரும் பள்ளிக்கூடம் போற குழந்தைகள். உங்களையும் பார்த்துண்டு, வீட்டையும் கவனிச்சுண்டு, ஆபீஸுக்கும் போயிண்டு இருந்தேன். இத்தனைக்கும் வீட்டுல வேலை செய்ய ஆள் கூட இல்லை….! என்னிக்காவது அழுக்கான ட்ரெஸ் போட்டுண்டு போயிருக்கேளா? தோய்க்காத சாக்ஸ்? பெருக்காம, தண்ணி தெளிக்காம, வாசலுக்குக் கோலம் போடாம இருந்ததுண்டா? இங்க கைக்கு ஒரு ஆள், காலுக்கு ஒரு ஆள்…!’

 

‘அம்மா…! இது வீடா? இல்லை மியூசியமாம்மா? எல்லாம் அததோட இடத்துல இருக்கணும்னா?’ என்று ஜோக் அடித்து அம்மாவின் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பான்.

 

ஒவ்வொருமுறை இவன் ஊருக்கு வரும் போதும் அம்மாவின் மனதை மாற்ற ஆனவரை முயலுவான்.

 

‘நான் உனக்கு முக்கியமில்லையா?’ என்று கூட கேட்டுவிட்டான். ‘நீ எனக்கு முக்கியம். கூடவே வீடு ஒழுங்கா இருக்கறது இன்னும் முக்கியம்!’

 

அவனுக்கு குழந்தை பிறந்தவுடன் அம்மா குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக வந்தாள். குழந்தைக்கு என்று தனது காட்டன் புடவைகளை நான்காக மடித்து ஓரங்கள் தைத்துக் கொண்டு வந்திருந்தாள். குழந்தைக்கு கீழே போட்டிருந்த பிளாஸ்டிக் ஷீட்டை எடுத்துவிட்டு தன் புடவைகளைப் போட்டாள். ‘இந்த காலத்துல யாரு மாமி இப்படித் துணி போட்டு குழந்தையை விடறா?’ என்று கேட்ட சம்பந்தி மாமியை அம்மா கண்டுகொள்ளவே இல்லை. வீட்டில் இருக்கும்போது குழந்தைக்கு டயபர் கட்டக்கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னாள். கொஞ்சநாட்கள் தான் அம்மாவின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது. குழந்தைத் துணிகள் வீடு முழுவதும் இறைந்து கிடக்க ஆரம்பித்தன. சகிக்க முடியாமல் அம்மா சீர்காழிக்குத் திரும்பினாள்.

 

குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. அவனால் முன் போல அதிகம் ஊருக்குப் போகமுடியவில்லை. அம்மா ஒன்று இரண்டில் வந்த போய்க்கொண்டிருந்தாள். குழந்தையின் சாமான்கள் இப்போது வீடு முழுவதும்! குழந்தை விளையாடுகிறதோ, இல்லையோ, காலையில் அதனுடைய விளையாட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு வந்து ஹாலில் கொட்டிவிடுவாள் இவன் மனைவி. அம்மா வரும்போது குழந்தையின் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டுப் போவாள்.

 

ஒரு விஷயம் இவனுக்கு அம்மாவிடம் பிடித்தது – மாட்டுப்பெண்ணிடம் சகஜமாகவே இருந்தாள். தன்னால் முடிந்தவரை அவளுக்கு உதவினாள். அவள் செய்யும் தளிகையைப் பாராட்டினாள். முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்தாள்.

 

‘ஏம்மா! நீயே அவளிடம் சொல்லேன், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள் என்று. உன்னோட தாரக மந்திரத்தையும் சொல்லிக்கொடேன்…!’ என்று சீண்டினான். அம்மா சொன்னாள் : ‘சுத்தம், ஒழுங்கெல்லாம் பிறவியிலேயே வரணும்டா! சொல்லி வராது. அட்லீஸ்ட் என்னைப் பார்த்தாவது கத்துக்கலாம்….!’ அதைக்கூட அவளிடம் சொல்லமாட்டாள். இவனிடம் தான் சொல்லி வருத்தப்படுவாள்.

 

நினைவுகளில் பயணித்துக் கொண்டிருந்தவன் ‘சீர்காழி, சீர்காழி’ என்ற கூவல் கேட்டுக் கண் விழித்தான். பேருந்திலிருந்து இறங்கி குழந்தையையும் அழைத்துக் கொண்டு  நடந்தான். அம்மா இவனுக்காகக் காத்திருந்தாள். குழந்தை ‘பாட்டீ…..! என்று ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக்கொண்டது. ‘அட என் பட்டுகுட்டி! நீயும் வந்திருக்கியா?’ என்று ஓடிவந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அணைத்து முத்தமிட்டாள். குழந்தை பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ‘நீயும் எங்களோட ஊருக்கு வந்துடு பாட்டி!’ என்றது.

 

இவனும் பின்னாலேயே வந்து வீட்டுக்கூடத்திலிருந்த சோபாவில் உட்கார்ந்தான். குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு, அம்மா இவனுக்கு சுடச்சுட காப்பி கொண்டுவந்தாள். ‘இந்தா, முதலில் இதைச் சாப்பிடு! சாப்பாடும் ரெடி’ என்றாள்.

 

‘கோந்தைக்கு என்ன கொடுக்கட்டும்?’ என்று கேட்டவாறே குழந்தைக்காகத் தான் வாங்கிவைத்திருந்த புது விளையாட்டு சாமான்களை குழந்தையிடம் கொடுத்தாள். குழந்தை சந்தோஷமாக விளையாட ஆரம்பித்தது.

 

அவன் உட்கார்ந்த இடத்திலேயே செருப்பைக் கழற்றிவிட்டு, ‘இரும்மா! கைகால் அலம்பிக்கொண்டு வருகிறேன்’ என்று எழுந்தான். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இவனைத் திரும்பிப் பார்த்து சொல்லிற்று:

 

‘செருப்பை செருப்பு அலமாரில விடுப்பா! அத அத அந்தந்த இடத்தில வைக்கணும்!’

 

அம்மாவும் அவனும் அதிர்ந்து போனார்கள். அதிர்ச்சியிலிருந்து முதலில் விடுபட்டது அம்மாதான். ‘எனக்கு வாரிசு வந்துட்டா! இந்த தடவை உன்னோட ஊருக்கு வரேண்டா!’ என்றபடியே குழந்தையை இறுக்கிக்கட்டிக்கொண்டாள் அம்மா.

 

அவனும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்!

 

 

 

ரமாவும் ரஞ்சனியும் 2

 ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதைப்படித்துவிட்டு என் அக்கா ரமா ரொம்பவும் நெகிழ்ந்து போனாள். ஆனால் இந்தக் கட்டுரையை நான் மிகவும் மனம் நொந்து, நெகிழ்ந்து எழுதுகிறேன். இதைப் படிக்க அவள் இல்லை என்கிற உண்மை என்னை மிகவும் வதைக்கிறது.

அக்கா பிறக்கும்போதே ‘பெரியவள்’ ஆகப் பிறந்தாள் என்று எனக்குப் பல சமயங்களில் தோன்றும். கோடை விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் போகும்போது நான் தெருவில் பாண்டி, கோலி எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பேன் என் சகோதரர்களுடன். இவள் என் பாட்டியுடன் இருப்பாள். பாட்டியுடன் கூடவே வெளியே போவாள். வீட்டிலும் பாட்டியுடன் அடுப்படியில் என்னவோ பேசிக்கொண்டு இருப்பாள். பாட்டியும் அவளை பெரியவள் ஆகவே நினைத்து எல்லாக் கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பாள். திரும்ப ஊருக்கு வந்தாலும் இவள் என் அம்மாவுடனே இருப்பாளே தவிர தன் வயதை ஒத்த தோழிகளுடன் விளையாட மாட்டாள். என் அம்மா, பெரியம்மா, பாட்டி இவர்களே இவளது தோழிகள் என்று தோன்றும் அளவிற்கு அவர்களுடன் பழகுவாள்.

 

அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெகு அக்கறையாகக் கேட்பாள். என்னிடம் பேசும்போது ‘பாவம், பாட்டி, பாவம் பெரியம்மா’ என்பாள். எனக்குத் தெரியாத உறவினர்களை எல்லாம் இவள் தெரிந்து வைத்திருப்பாள். அவளுடன் கோவிலுக்குப் போனால் எதிரில் வருகிறவர்கள் அத்தனை பேர்களும் இவளை விசாரித்துவிட்டுப் போவார்கள். ‘பாட்டியோட அத்தான் மன்னி இவர்’, ‘பாட்டியோட அம்மாஞ்சி இவர்’ என்று உறவுமுறை சொல்லுவாள். ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!’ என்றால் ‘நீ எப்போ பார்த்தாலும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறாய். பாட்டி பெரியம்மாவுடன் எல்லாம் பேச வேண்டும்’ என்பாள். என்னால் முடியவே முடியாத காரியம் இது என்று நினைத்துக் கொள்ளுவேன்.

 

ஸ்கூல் முடித்தவுடன் ‘மேலே படிக்க விருப்பம் இல்லை. நான் வேலைக்குப் போய் உனக்கு உதவறேன்’ என்று அப்பாவிடம் சொல்லிவிட்டாள். நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடனே என்னிடமும், ‘மேலே படிக்க வேண்டாம். வேலைக்குப் போய் அப்பாவிற்கு உதவி செய்’ என்று அதையே சொன்னாள். எனக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் (திருமணத்திற்கு ஐந்தாறு மாதங்கள் இருக்கும்போது) வேலையை விட்டுவிட்டேன். அவளுக்கு ரொம்பவும் வருத்தம். திருமணம் ஆகும்வரை வேலைக்குப் போனால் அப்பாவிற்கு உதவியாக இருந்திருக்கும், இல்லையா என்றாள்.

 

மொத்தத்தில் அக்கா உண்மையில் அக்காவாக இருந்தாள். பாட்டி, அம்மா, பெரியம்மா என்று எல்லோருடைய கஷ்டங்களையும் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ அக்காவிற்கும் கஷ்டங்களே வாழ்க்கை ஆனது. 22 வயதில் திருமணம். 34 வயதில் அத்திம்பேரை இழந்தாள். யாரையும் எதிர்பார்க்கவில்லை. யார் கூடவும் இருக்கவும் விரும்பவில்லை. கையில் வேலை இருந்தது. அம்மாவின் துணையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். எதற்கும், யாரையும் அண்டி இருக்காமல் தன் முடிவுகளைத் தானே எடுத்தாள்.

 

தன் வாழ்க்கையை அலுவலகம், வீடு என்று அமைத்துக் கொண்டாள். அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு திவ்ய தேச யாத்திரை. அம்மாவையும் அழைத்துக் கொண்டு எல்லா திவ்ய தேசங்களையும் சேவித்துவிட்டு வந்தாள். முக்திநாத் தவிர மற்ற திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்திருக்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஒரு வீடு வாங்கினாள். முடிந்த போதெல்லாம் போய் நம்பெருமாளை சேவித்துவிட்டு வருவாள். ஸ்ரீரங்கம் போவது என்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். தன் பேத்திகள் இருவர் மேலும் உயிரை வைத்திருந்தாள். பேத்திகள் இருவரையும் பார்த்துக் கொள்வதை ஆசைஆசையாகச் செய்தாள். பேத்தியை மடியில் விட்டுக் கொண்டு நிறைய பாட்டுக்கள் பாடுவாள்.

‘மாணிக்கம் கட்டி, வயிரமிடை கட்டி….’ என்று பாசுரம் பாடிப் பாடி அவர்களை கொஞ்சி மகிழ்வாள்.

ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பதே அவளது வாழ்நாளின் குறிக்கோள் என்பது போல அடிக்கடி ஸ்ரீரங்கம் போவாள். நம்பெருமாளை அவள் சேவிக்கும் அழகைக் காண வேண்டும். அந்தப் பக்கம் நின்று சேவிப்பாள். இந்தப் பக்கம் வந்து சேவிப்பாள். வீதியில் எழுந்தருளும் போதும் இந்த வீதியில் சற்று நேரம் சேவித்துவிட்டு அடுத்த வீதிக்கு பெருமாள் எழுந்தருளுவதற்குள்  அங்கு போய் நிற்பாள்.

 

சமீபத்தில் ஒருநாள் அடையாறு அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு போக ஆசைப்பட்டிருக்கிறாள். அவள் பிள்ளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறான். ‘கோவிலுக்குள் நுழைந்தவுடன் அம்மா கிடுகிடுவென சந்நிதிக்குள் சென்ற வேகம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, சித்தி. அம்மாவிற்கும் பெருமாளுக்கும் நடுவில் ஏதோ பேச்சு வார்த்தை நடப்பது போல இருந்தது. அம்மாவை அவர் வா என்று சொல்வது போலவும் அம்மாவும் வேறு எங்கும் பார்க்காமல் உள்ளே சென்றதும்….. என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சட்டென்று வேகமாக நடக்கும் அம்மாவைப் பிடித்துக் கொண்டேன்’ என்றான் அக்கா பிள்ளை. அதுதான் ரமா.

தனது சோகங்களை சற்று மறந்து பேத்திகளுடன் வாழ்க்கையை கழிக்க ஆரம்பித்த வேளை அந்தக் கொடிய நோய் அவளை பீடித்தது. சென்ற பிப்ரவரி மாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் போயிருந்தோம். இரண்டு நாட்களில் அக்காவும் வருவதாக இருந்தது. முதல் நாள் போன் செய்து ரொம்பவும் வயிற்றுவலி அதனால் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்துவிட்டேன் என்று அவள் கூறியபோது மனதில் இனம் புரியாத சங்கடம். என்னவானாலும் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்யாதவள் இப்போது செய்கிறாள் என்றால்…என்று மனதை கவலை சூழ்ந்து கொண்டது. சில நாட்களில் தெரிந்துவிட்டது, வயிற்றில் புற்றுநோய் இருப்பது. அப்போதே முற்றிய நிலை தான். ஆறு கீமோதெரபி என்று மருத்துவர் கூறினார். ஒவ்வொரு மாதமும் நான் சென்னைக்குப் போய் அவளுடன் மருத்துவமனையில் தங்குவேன். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தபின் இரண்டு நாட்கள் அவளுடன் இருந்துவிட்டு திரும்புவேன்.

 

40 வருடங்களுக்கு முன் எங்கள் அப்பாவை இந்த நோய் தாக்கியபோது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்த நினைவுகள் வந்து என்னை பயமுறுத்தின. ஆனால் இத்தனை வருடங்களில் மருத்துவம் நிறைய முன்னேறியிருக்கிறது அதனால் அக்கா பிழைத்துவிடுவாள் என்று நினைத்தேன். அம்மா தினமும் திருவள்ளூர் பாசுரம் சேவிக்க ஆரம்பித்தாள். நாளாக ஆக, எங்கள் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

 

இன்றைக்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்று அக்கா நினைத்தால் அதை செய்து முடித்துவிட்டு மறுவேலை பார்ப்பாள். அசாத்திய சுறுசுறுப்பு. அம்மா சொல்வாள்: ‘ரமா அடுப்படியில் நுழைந்தால் அடுப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். உலை தானாகவே கொதிக்கும்!’ என்று. எப்போதும் ஒரு பரபரப்பில் இருப்பாள். ஒருநிமிடம் அயர்ந்து உட்கார மாட்டாள். அப்படிப்பட்டவளை இந்தக் கொடிய நோய் முடக்கிப் போட்டுவிட்டது. மிகவும் சுதந்திரமானவள் அக்கா. அப்படிப்பட்டவள் இப்போது துணையில்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. கூடவே ஒரு ஆள் அவளுடன் இருக்க வேண்டியிருந்தது. இந்த நிலை அவளை மிகவும் பாதித்திருக்க வேண்டும்.

 

அவள் செய்யும் காரியங்களில் எல்லாம் ஒரு ஒழுங்கு இருக்கும். ‘போன் பேசுவது எப்படி என்று ரமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அவள் தோழிகள் சொல்வார்கள். ‘சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென்று சொல்லிவிட்டு ‘வைக்கட்டுமா?’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். வளவளவென்று பேசவே மாட்டாள்’

 

நிறைய தானதர்மம் செய்வாள். கோவில்களுக்கு வாரி வழங்குவாள். அவளுக்கு வரும் கடிதங்கள் எல்லாமே கோவில்களிலிருந்து வரும் பிரசாதக் கவர்கள் தான். சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வைகுண்ட ஏகாதசி பிரசாதம் செல்வர் அப்பம் வந்திருந்தது. அவளால் அதை சாப்பிட முடியவில்லை, பாவம்.

 

நான் அவளுடன் மருத்துவமனையில் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை. எங்கள் திருமணத்திற்கு முன் நாங்கள் இருவரும் எப்படி இருந்தோமோ அதேபோல இப்போது இருந்தோம். அக்கா தங்கை என்ற உறவை மீறி தோழிகள் போல இருவரும் ஒருவரின் அண்மையை இன்னொருவர் விரும்ப ஆரம்பித்தோம். நான் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாள். ‘நீ வந்துட்டயா? நான் பிழைத்துவிடுவேன்’ என்பாள். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். நான் அறியாத ரமாவை இந்த ஒரு வருட காலத்தில் அறிந்தேன். எத்தனை வேதனை பட்டிருக்கிறாள்! தனி ஒரு ஆளாக எல்லாவற்றையும் தாண்டி சற்று நிம்மதியாக இருக்க வேண்டிய நிலையில் எதற்கு இப்படி ஒரு நோய் அவளுக்கு? ‘யார் சோற்றில் மண்ணைப் போட்டேனோ, சாப்பிடக்கூட முடியவில்லையே’ என்று மனம் நொந்து அழுவாள். கடைசியாக நான் அவளைப் பார்த்தது ஜனவரி 9. நான் ஊருக்குப் போகிறேன் என்றவுடன் முகத்தில் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள். கட்டாயம் போகணுமா என்றாள். பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் வருகிறேன் என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டேன். ‘சீக்கிரம் என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளச் சொல்லி நம்பெருமாளை வேண்டிக் கொள்’ என்றாள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

 

மருத்துவர்கள் சொன்ன காலக்கெடு 3 மாதங்கள். ஆனால் ஒரே வாரத்தில் அக்காவின் கதை முடிந்துவிட்டது. இனி அவள் பிழைக்க மாட்டாள் என்று தெரிந்தவுடன் நான் நம்பெருமாளிடம் இந்தக் கோரிக்கையைத் தான் வைத்தேன்: ‘இனியும் இந்த சித்திரவதை அவளுக்கு வேண்டாம். நிறைய பாடுபட்டு விட்டாள். அதிக சிரமம் கொடுக்காமல் அவளுக்கு இரங்கு’

 

ஜனவரி 13 காலையிலேயே அக்காவிற்கு நினைவு தப்பிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். நினைவு போன நிலையில் ஒருமுறை என் பெயரை சொன்னாள் என்று அக்காவின் பிள்ளை சொன்னான். அவ்வளவுதான். நாங்கள் காஞ்சீபுரம் அருகில் போய்க்கொண்டிருந்த போது செய்தி வந்துவிட்டது. ‘அம்மாவின் முகம் ரொம்பவும் அமைதியாக இருக்கிறது’ என்று அக்கா பிள்ளை சொன்னான். அவளது எல்லாக் கஷ்டங்களும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டன பிறகு அமைதி தானே!

 

‘நீ இப்படி எனக்காக ஓடி ஓடி வருகிறாயே!’ என்பாள் ஒவ்வொருமுறை நான் போகும்போதும். என்ன பலன்? அவளுடைய வலி, வேதனைகளை என்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லையே! நான் மாறனேர் நம்பி இல்லையே! பலமுறை இப்படி நினைத்து அவளுக்குத் தெரியாமல் அழுவேன்.

சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின

ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின

என்ற நம்மாழ்வாரின் வாக்குப்படி என் அக்காவிற்கும் பரமபதத்தில் வரவேற்பு கிடைத்திருக்கும். முமுக்ஷுக்களுக்கு (மோக்ஷத்தை விரும்பும் நாரணனின் பக்தர்கள்) கிடைக்கும் திரும்ப வர முடியாத உலகத்தில் என் அக்கா ரமாவிற்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும்.  அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று விரஜா நதியில் நீராடி வந்திருக்கும் அவளை நம்பெருமாள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு ‘ரொம்பவும் சிரமப்பட்டு விட்டாயோ?’ என்று முதுகை தடவி விட்டுக் கொண்டிருப்பார்.

 

இனி அவளுக்குப் பிறவி கிடையாது. இந்த ரஞ்சனியின் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்திருப்பாள் ரமா.

 

அதீதம் இதழில் படிக்க இங்கே

 

 

 

ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளி

படம் நன்றி கூகுள்

ஸ்ரீரங்கத்து வீடு

ஒருமுறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது என் அக்காவுடன் ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அக்கா அங்கே படித்துக் கொண்டிருந்தாள். மே மாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் போகும்போது கோடை விடுமுறையாக இருக்கும். ஒருநாள் என் அக்கா என்னிடம் ‘எங்கள் ஸ்கூலுக்கு வருகிறாயா?’ என்று கேட்டாள். மிகவும் மகிழ்ச்சியுடன் அவளுடன் போனேன். அவள் படித்துக் கொண்டிருந்த பள்ளியின் பெயர் ஸ்ரீரங்கம் கேர்ல்ஸ் ஹை ஸ்கூல். உள்ளே நுழைந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியில் என் அக்கா ஓரிடத்தில் நின்றாள். அண்ணாந்து பார்த்து என்னிடம் சொன்னாள்: ‘ இதோ பார், இவர் தான் நம் கொள்ளுத் தாத்தா. இவர் தான் இந்த ஸ்கூலை ஆரம்பித்தவர்’.

நான் அப்படியே ஸ்தம்பித்துப் போய் அந்தப் புகைப்படத்தையே பார்த்தபடி நின்றேன். அக்கா சொன்னதை உள்வாங்கிக் கொள்ளவே எனக்கு நேரம் ஆயிற்று. ஒரு பள்ளியை ஆரம்பிப்பதா? எத்தனை பெரிய காரியம்! அதைச் செய்தவர் என் கொள்ளுத் தாத்தா! நம்பவே முடியவில்லை. ‘நிஜமாவா?’ என்றேன். ‘இதற்கெல்லாம் யாராவது ஜோக் அடிப்பார்களா?’ என்றாள்.

ஸ்ரீரங்கம் என்கிற ஊர் எப்போதுமே ஒரு யாத்திரை ஸ்தலமாகவே அன்றும் இன்றும் அறியப்பட்டு வரும் நிலையில், நான்கு தலைமுறைகளுக்கு முன்பு ஒருவருக்கு அந்த ஊரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியது என்பது எத்தனை ஆச்சர்யமான விஷயம்! அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துவந்த போது. கிழக்கிந்திய கம்பனியின் கையிலிருந்த அதிகாரம் பிரிட்டிஷ் கைக்கு வந்து 38 வருடங்களே ஆகியிருந்த சமயம் அது. 1896 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீமான் ஆர். வீரராகவாச்சாரி அவர்கள் இந்தப் பள்ளிக்கு தனது சொந்த நிலத்தை கொடுத்தார். எனது கொள்ளுத் தாத்தா ஸ்ரீமான் திருமஞ்சனம் ராமானுஜ ஐய்யங்கார் கையில் சல்லிக்காசு இல்லை; அரசு இயந்திரத்திலும் அவருக்குத் தெரிந்தவர்கள் யாரும் அந்தநாளில் இருக்கவில்லை. ஆனாலும் பள்ளிக்கூட ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது ஆசையை எப்படியோ நிறைவேற்றிக் கொண்டார்.

‘க்வீன் விக்டோரியா கோல்டன் ஜுபிலி லோயர் செகண்டரி ஸ்கூல்ஸ்’ (Queen Victoria Golden Jubilee Lower Secondary Schools) என்ற பெயரில் ஸ்ரீரங்கத்திலேயே பல பள்ளிகளை ஆரம்பித்தார் ஸ்ரீமான் ராமானுஜ ஐய்யங்கார். ஆனால் பள்ளிகளுக்கு மாணவர்களின் சேர்க்கை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. ஊரில் நடந்து கொண்டிருந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஸ்ரீரங்கத்துக் குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்து, கணிதம் ஆகியவற்றை போதித்துக் கொண்டிருந்தன. அதிலிருந்து மாறி முழு நேரப் பள்ளி என்பது அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் கொள்ளுத் தாத்தா வீடு வீடாகச் சென்று தனது பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்த செய்கை ஊர்காரர்களுக்கு ‘இவர் எதற்கு இந்த வேண்டாத வேலையைச் செய்கிறார்’ என்ற எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கக்கூடும்!

இதையெல்லாம் எங்கள் தாத்தா ஸ்ரீமான் திருமஞ்சனம் ஸ்ரீனிவாச ஐய்யங்கார் தனது அழகான தொடர்சங்கிலிக்  கையெழுத்தில் தனது தந்தையைப் பற்றிய நெகிழ்வான  நினைவுகளாகப் பதிந்து வைத்திருக்கிறார். மாணவர்களின் சேர்க்கைப் பிரச்னையுடன் பள்ளியை நடத்துவதிலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் இனிய முடிவாக ஸ்ரீமான் சி.ஏ. கிருஷ்ணமூர்த்தி ராவ் என்பவர் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றார். ‘ஸ்ரீமான் ராவ் மிகச்சிறந்த கனவான்; ஒழுக்கத்திலும், அறிவிலும் கற்பிக்கும் முறையிலும் ஒப்பற்றவராக இருந்தது மட்டுமல்ல கவர்ந்திழுக்கும் ஆளுமையையும் கொண்டிருந்தார். பள்ளியை நிர்வகிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். எனது தந்தைக்கு வலது கையாக இருந்து பள்ளியை நடத்தினார். அவர் ஒரு சிறந்த ஆங்கிலக்கவி. பல கவிதைகளைப் புனைந்தவர். என் தந்தையை மிகவும் நேசித்ததுடன் தனது தந்தைக்கு நிகரான மரியாதையையும் அவருக்கு அளித்தார்’ என்று எங்கள் தாத்தாவின் குறிப்பு ஸ்ரீமான் சி.ஏ. கிருஷ்ணமூர்த்தி ராவ் பற்றிக் கூறுகிறது. இவரே பிற்காலத்தில் ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளிக்கு மாறி, பிறகு சென்ட்ரல் ஹிந்து கல்லூரி, மதுரையில் சரித்திர உதவி விரிவுரையாளராகவும் இருந்தார்.

எங்கள் கொள்ளுத் தாத்தா 1912 ஆம் ஆண்டு பரமபதித்தார். அவரது பள்ளிகள் எல்லாம் அப்போதைய பள்ளி இயக்குனர் ஸ்ரீ பென்னிங்க்டன் என்பவரது சிபாரிசினால் 1909 ஆம் ஆண்டு தி ஹை ஸ்கூல் ஆப் ஸ்ரீரங்கம் என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன. அந்தப் பள்ளியின் வளர்ச்சியைப் பார்க்க எங்கள் கொள்ளுத் தாத்தாவிற்கு ஆயுசு இருக்கவில்லை.

தன் தந்தையைப் பற்றி எங்கள் தாத்தா எழுதிய குறிப்பிலிருந்து மேலும் சிலவரிகள்: ‘எனது தந்தை கையில் காசில்லாமலேயே தனது வாழ்க்கையைத் துவங்கினார். தனது நேர்மை, திறமையுடன் கூடிய நன்முயற்சிகள், ஒழுக்கமான நடவடிக்கை முதலியவற்றால் இந்த உலகத்திலும், தன் மாணவர்களின் இதயங்களிலும்  ஒரு மிக உயரிய இடத்தையும் பிடித்தார். அவரது அயர்வில்லாத காலநேரம் பார்க்காத உழைப்பு, அவரைச் சோர்வடையச் செய்து அவரது ஆயுளை அகாலத்தில் முடித்துவிட்டது. தனது 49வது வயதில் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் திருவடி நீழலை அடைந்தார். கடைசி நாட்களில் ஆழ்வார்களின் ஈரச்சொற்களைக் கொண்டு பெருமாளின் திருநாமங்களை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தார். தனது இரு மகன்களுடன் கூடப் பெருமாளையும் தனது மூன்றாவது குழந்தையாகவே நினைத்து வாழ்ந்தார்’.

இந்தத் தகவல்கள் எனது மாமா திருமஞ்சனம் சுந்தரராஜன், ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழா மலரில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு

பின் குறிப்பு:

நீண்ட நாட்களுக்குப் பின் ஸ்ரீரங்கத்து வீடு தொடர்ந்து எழுதுகிறேன். இந்த விவரங்களைச் சேகரிக்க எனக்கு நேரம் தேவைப்பட்டது. இனி இந்தத்தொடர் தொய்வின்றி தொடரும்…பெரிய பெருமாள், நம்பெருமாள் அருளாலே.

யேன் கேன் குக் ஸோ கேன் யூ!

வலைச்சரம் ஆறாம் நாள்

Yan can cook so can you!

அந்தக்காலத்தில் நம் தூரதர்ஷன் மட்டுமே செங்கோலோச்சிக் கொண்டிருந்த நாட்களில் முதன்முதலாக ஸ்டார் ஆங்கில சானல் வர தொடங்கியது.  அதில் நாங்கள் விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சி நான் மேலே எழுதியிருக்கும் தலைப்பு. சமையல் நிகழ்ச்சி யேன் என்ற சைனாகாரர் வந்து சமைப்பார். எல்லாமே அசைவ உணவு தான். ஆனாலும் அதை நான் விரும்பிப் பார்க்கக் காரணம் அவர் செய்யும் விதம். அப்புறம் அந்த சமையலறை. பளபளவென்று இருக்கும். அவர் பயன்படுத்தும் பாத்திரங்களும் கத்திகளும் கண்ணைப் பறிக்கும் சுத்தம். ஒவ்வொரு முறை காய்கறி கட் பண்ணிவிட்டு டேபிளை அழகாத் துடைத்து விடுவார். துளிக்கூட சிந்தாமல் சிதறாமல் பொருட்களை – ஒன்றைக்கூட கையால் தொடமாட்டார் – அதுவே எனக்குப் பிடித்தது. அவர் கொண்டு வரும் மீன், இறைச்சி ஆகியவை மிகவும் சுத்தமாக இருக்கும். நம்மூர் சமையல் நிகழ்ச்சி செய்பவர்கள் நிச்சயம் அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் அவர் உயிருடன் பாம்பை கொண்டு வந்தவுடன் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அன்று பாம்பு பஜ்ஜியோ என்னவோ, அத்துடன் அந்த நிகழ்ச்சி பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

 

இப்போது FoodFood, khana khazana ஆகிய ஹிந்தி சானல்கள் முழுக்க முழுக்க சமையலுக்காகவே – 24 மணி நேரமும் சமைக்கிறார்கள். அய்யோ! என்னால் ஒரு மணி நேரம் சமைக்க முடியவில்லையே! இந்த இரண்டு சானல்களிலும் கூட சமையலறை மிகவும் சுத்தம். அதேபோல பயன்படுத்தும் பாத்திரங்கள் பளபள!

 

இதையெல்லாம் பார்த்துவிட்டு நம்மூர் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்க்கவே பிடிப்பதில்லை. அதுவும் வெள்ளிக்கிழமைகளில் வரும் டாக்டர் பட்டம் வாங்கியவர் கையாலேயே உப்பையும் போடுவார். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் அதே கையாலேயே….! பார்க்கவே பிடிக்காது!

 

ஒரே ஒரு விஷயம் எனக்கு ரொம்ப நாட்களாக புரியவில்லை. சமையல் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிப்பவர்கள் நாளாக நாளாக குண்டாகி விடுகிறார்களே! அது எப்படி? சமைத்ததை தாங்களே சாப்பிட்டு விடுவார்களோ!

 

இன்றைய வலைச்சரத்தை சிறப்பிக்கும் பதிவர்கள்

 

 

ஷைலஜா

எண்ணிய முடிதல் வேண்டும் என்ற வலைத்தளத்தின் சொந்தக்காரர். நிறைய பத்திரிகைகளில் எழுதி வருகிறார். கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். நிறைய போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறார்.

இன்றைய வலைச்சரத்தில் காதலர் தின சிறப்புப் பதிவு இவருடையது தான்.

நின்னையே ரதியென்று….

காதல் புதிதா  , பழசா?

 

உயிர்களிடத்து அன்பு வேண்டும்  சிறுகதை

காரிலிருந்து இறங்கிய ஸ்ரீதரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சென்னைக்கு அருகில் இத்தனை அருமையான கிராமமா? எங்கு திரும்பினாலும் பசுமை. நிறைய மரங்கள். அழகான தோப்புகள். வாசலில் மாடுகள்.

 

இன்னம்புரான்

‘இ’ ஸார் என்று எங்கள் குழுவினரால் (வல்லமை மற்றும் மின்தமிழ் குழுமங்கள்)  அன்புடன் அழைக்கப்படும் இன்னம்புரான் சௌந்தரராஜன். இந்திய அரசில் மிகப்பெரிய அதிகாரியாக பல வருடங்கள் டெல்லியில் இருந்தவர். எதைப்பற்றி எழுதினாலும் அதில் ஒரு தீர்மானம், தெளிவு இருக்கும். நிதானமாகப் படிக்க வேண்டிய எழுத்து.

நிறைய எழுதும் இவரது எழுத்துக்களிலிருந்து ஒரு துளி இங்கே.

‘மடல்பெரிது தாழை மகிழினிது…’:3

மொத்தம் ஐந்து கடிதங்கள். இந்த மூன்றாவது கடிதம் நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்று. அதனால் இதற்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன். இதற்கு முன் பின் இருக்கும் கடிதங்களையும் படியுங்கள்.

‘மடல்பெரிது தாழை மகிழினிது…’:6

கடிதம் எழுதுவது பற்றியும், அதை எழுதியவர்கள் பற்றியும் மிக மிக சுவாரஸ்யமாகச் சொல்லுகிறார்.

மொத்தம் ஐந்து கடிதங்கள். ஒவ்வொன்றாகப் படியுங்கள்.

ஆலோசனை – பார்வதி ராமச்சந்திரன்

விரதம் பூஜைகள் என்று ஆன்மீக அனுபவங்கள் இங்கு நிறையக் கிடைக்கும். வயதில் இளையவர் ஆனாலும் இந்த விஷயங்களை மிகச் சிறப்பாக எழுதுகிறார்.

நாராயணீயத்தை கண்ணனை நினை மனமே என்று தொடராக எழுதி வருகிறார்.சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு தமிழில்  சிறப்பான விளக்கங்களும்,  கூடவே ஆழ்வார்களின் பாசுரங்களையும் மேற்கோள்காட்டி நம்மை மனமுருகச் செய்கிறார்.

கோலங்கள்…கோலங்கள்…..

கோலங்கள் பெண்களின் கலா ரசனை மாற்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதர்காக மாத்திரம் அல்ல. கோளங்களின் சக்தி வாய்ந்த எந்திரங்கள் மறைந்திருக்கின்றன. கோலங்கள் தெய்வீக சக்தி கொண்டவை என்கிறார்.

 

 

அரும்புகள் மலரட்டும் அ. பாண்டியன்

க00 – 100 – C – நூறின் வரலாறு

100 என்பது மூன்றிலக்க எண்களின் முதல் எண். எந்த எண்ணுக்கும் இல்லாத சிறப்பு இந்த நூறு எனும் எண்ணிற்கு உண்டு. எப்பவும் ஆண்டின் முதல் நாளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் போல மூன்றிலக்க எண்ணின் முதல் எழுத்தான நூறுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

 

பின்லாந்து கல்விமுறை – ஒரு பார்வை

அப்படி  என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்

தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்,இரண்டரை வயதில்

ப்ரீ-கேஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற

சித்ரவதை அங்கே இல்லை.

 

கோமதி, குங்குமம்தோழியில் சிறப்பு விருந்தினராக அடையாளம் காணப்பட்டவர்.

மாற்றம் ஒன்றே மாறாதது

மதுரையில்  டெம்பிள் சிட்டி என்ற ஓட்டலில்,  காலம் மாறும்போது நம் உணவு  உண்ணும் முறை மாறியதை  வருடங்கள் போட்டுப்   படம் வரைந்து பிரேம் போட்டு  மாட்டி  வைத்து இருந்தார்கள்.

 சிக்கு புக்கு ரயிலே ரயிலே !

இவர்கள் அமெரிக்காவில் பயணம் செய்த பழைய காலத்து ரயிலைப் பற்றி (விண்டேஜ் ரயில்!) இந்த பதிவு. இந்தப் பதிவின் முன்னுரை சுவாரஸ்யம். கூடவே கணவர் வரைந்த ரயிலடி அத்தை வீட்டின் வண்ணப்படமும்.

 

 

எழிலாய் பழமை பேச என்று அந்தியூரான் பழமைபேசி எழுதுகிறார் தனது

மணியின் பக்கங்கள் என்ற வலைத்தளத்தில்.

பட்டி நோம்பி

“ஆமாமாங். இப்பெல்லாம் ஆருங் முன்ன மாதர தை நோம்பியெல்லாங் கும்புடுறாங்க? அல்லாம் மாறிப் போச்சு பாருங்!”

இவரது கவிதை ஒன்று:

கதிரேசன் பெண்டாட்டி

 

 

சொக்கன் சுப்பிரமணியன் உண்மையானவன் என்ற வலைப்பதிவின் சொந்தக்காரர்.

பணமா படிப்பா சாதிக்க எது தேவை  அவர் இருக்கும் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு வழக்காடு மன்றம் பற்றிச் சொல்லுகிறார். ஆடியோவும் கேட்கலாம்.

ஆஸ்திரேலியா செல்ல விருப்பம்ள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டி தொடர் இங்கே

 

 

 

ஊமைக்கனவுகள்

ஜோசப்விஜூ

நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும் ஒரு பூட்டின் சாவியும்

திருக்குறளில் 135 அதிகாரங்களோடு ஒரு சுவடி பிரான்சில் இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கவிஞர் பாரதிதாசன் ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்ததை வைத்து இவர் எழுதிய பதிவு இது.

 

 

வெங்கட் நாகராஜ்

இடைத்தேர்தல் மற்றும் தேர்தல் – திருவரங்கத்தின் இடைத்தேர்தல், டெல்லியின் தேர்தல் பற்றிய பதிவு.

இவரது மாஸ்டர் பீஸ் பயணக் கட்டுரைகள் தான். இவை தவிர வெள்ளிக்கிழமைதோறும் வரும் ப்ரூட் சாலட்.

நிறைய புத்தகங்கள் படிப்பவர். அதனால் புத்தக விமரிசனங்களும் வரும். சமீபத்திய புத்தக விமரிசனம்:

அக்கா – துளசி கோபால்

தம்பதிகளை சேர்த்தே சொல்லிவிடலாம்.

இதோ ஆதி வெங்கட் – கோவை2தில்லி என்ற வலைத்தளத்தில் எழுதுகிறார்.

தனது வலைச்சர வாரத்தில் கணவருக்கு இணையாக பயண கட்டுரை எழுதி அசத்தியவர். இவரும் புத்தக விமரிசனங்கள் எழுதுகிறார். சமையல் குறிப்புகளும் இவரது தளத்தில் உண்டு.

சாப்பாட்டுப் புராணம்! – சமஸ்!

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!!!!

எந்தப் பரீட்சையில்?

திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது முகநூல் கணக்கு இருக்கா என்று கேட்க வேண்டுமாம்!

 

சித்ரா சுந்தர்

சித்ராவின் பொழுதுபோக்குப்  பக்கங்கள்  என்ற பெயரில் இரண்டாவது தளம் வைத்திருக்கும் சித்ரா சுந்தர். இவங்க வீட்டு பிரேம்குமார் இவர் தான். வேர்ட்ப்ரெஸ் –இல் இருக்கும் தளம் சமையலுக்கு என்றால் இந்தத் தளம் பல்சுவைக்கும்.

பரலெ பஞ்ஞானு னுன்னெ…

தனது ‘மிமிக்ரி’ திறமையை வைத்து தன் கணவரை ஒட்டியதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லுகிறார்.

 

தில்லையகத்து க்ரானிகல் வலைத்தளத்தின் சொந்தக்காரர் துளசிதரன்.

கற்க கசடற…. கற்பிக்கவும் கசடற… என்கிறார்.

கல்வி என்பது கற்றல். கற்றல் என்பதன் அர்த்தத்தை நமது கல்வியாளர்கள் மறந்துவிட்டார்களோ என்ற ஐயம் அடிக்கடி எழுகின்றது என்பவர் ஆசிரியர்களின் கடமை பற்றிப் பேசுகிறார்.

இப்படியும் புத்தக விமரிசனம் எழுதலாம் என்று காட்டுகிறார்.

வாத்தியாரின் சரிதாயணம், சிரிதாயணமே!

நிகழ்காலம்

பெண்களும் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள்….

‘கவிதை,கதை, சமையல் அத்தோடு அரசியலும் கொஞ்சம் பேசுங்கள் பெண்களே…. உங்களின் பங்கும் இருக்கிறது இந்த சமுதாய மாற்றத்தில்…ஆண்களே உங்கள் வீட்டுப் பெண்களை வீட்டு அரசியலை விடுத்து நாட்டு அரசியலை பேச உதவுங்கள்….’ என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

 கொட்டுங்கள் உங்கள் மனதின் குப்பைகளை ….

முருகானந்தன் கிளினிக்

சமையலறைத் தூய்மையில் வெட்டும் பலகையின் (Cutting board)  சுத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவற்றை உரிய முறையில் கழுவி கிருமி நீக்கம் செய்து உபயோகிப்பதை வழமையாகச் செய்ய வேண்டும். இல்லையேல் நோய்களை உண்டாக்கக் கூடிய E. Coli and Salmonella  போன்ற கிருமிகள் அதில் தங்கியிருந்து நோய்களைப் பரப்பக் கூடும் என்கிறார்.

சமையலறை வெட்டும் பலகையால் நோய்கள்

பாட்டா பாட்டிகளின் பாலுணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்

அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது. அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கும் செயற்பாட்டிற்கும் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அவ் விடயத்தில் அவர்களது செயற்பாடுகளை ஏளனமாகப் பார்ப்பதையும், குற்றம் குறை சொல்வதையும் நிறுத்துங்கள். இது பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலை சம்பந்தப்பட்டவருடன் தனிப்பட்ட முறையில் ஆரம்பியுங்கள்.

அவர்களது வாழ்வில் வசந்தம் மீண்டும் மலரட்டும்.

அருமையான ஆலோசனைகள்.

விமரிசனம் – காவிரி மைந்தன்

பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி …

என் அம்மா அனுபவித்த துன்பங்களை உடனிருந்து

பார்த்ததால் – நான் எனக்குள் எடுத்துக் கொண்ட

உறுதி என்னவென்று படியுங்கள்.

 

நிறைய அரசியல் பதிவு எழுதினாலும் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவு. ஒரு நல்ல மனிதரின் உள்ளம் நமக்குப் புரிகிறது.

 

ராமலக்ஷ்மி : முத்துச்சரம் என்ற வலைத்தளம் வைத்திருப்பவர்.

பல்கலை வித்தகி. நிறைய பத்திரிகைகளில் இவரது கவிதைகள், கதைகள், புகைப்படங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. பல ஆங்கிலக் கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்கிறார்.

குழந்தைகளின் அழுகை பாடல் 1 எலிசபெத் பேரட் ப்ரௌனிங்

 

வயலோடு உறவாடி – தினமணிகதிரில் வந்த சிறுகதை

சென்ற வருடம் இவரது சிறுகதை தொகுப்பு ‘அடைமழை’, கவிதைத் தொகுப்பு ‘இலைகள் பழுக்காத காலம்’ இரண்டு புத்தகங்கள் வெளியாகின.

 

 

 

 

 

 

 

‘நல்லாத்தான் செஞ்சிருக்காரு கண் ஆபரேஷன்…!’

well_done

 

குமுதம்மா என்ற பெயர் எப்படி மாறியது?

போனபதிவில் இந்தக் கேள்வி கேட்டிருந்தேன்.

குமுதம்மா – குண்டம்மாவாக மாறியிருந்தார்! அந்த பெண்மணி கொஞ்சம் அகலமாகவே இருப்பார். ஆனாலும் இப்படிக் கூப்பிட்டவுடன் அவருக்கு பொல்லாத கோவம் வந்து மருத்துவரைப் பார்க்காமலேயே வந்துவிட்டார். ஏரி மேலே கோவப்பட்டவன் கதை ஆயிற்று குண்டம்மாவின் ஸாரி ஸாரி குமுதம்மாவின் கதை.

 

போகட்டும். அதே மருத்துவமனையில் இன்னொரு விஷயமும் நடந்தது. அதையும் இங்கு நான் எழுதியே ஆகவேண்டும். காடராக்ட் அறுவை சிகிச்சை முடிந்து என் கணவரை முதல் செக்கப்பிற்காக அழைத்துச் சென்றிருந்தேன். வழக்கம்போல மருத்துவர் எங்கள் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தார். உள்ளே ஒரு வயதான தம்பதி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ‘இந்த வயசாளிங்க உள்ளே போனாலே இப்படித்தான். பேசிகிட்டே இருப்பாங்க. நோய்நொடிய பத்தி மட்டும் பேசமாட்டாங்க. தங்களோட கஷ்டநஷ்டத்தையும் டாக்டர் கிட்ட சொல்லணும். வெளில நாமெல்லாம் உட்கார்ந்திருக்கிறது கண்ணுலேயே படாது!’ என்று எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளம் பெண் அலுத்துக்கொண்டாள். அவளும் ஒன்றைக் கண்ணால் அங்கு ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது ‘ச்..’ கொட்டிக் கொண்டிருந்தாள்.

 

ஒருவழியாக தாத்தாவும் பாட்டியும் வெளியில் வந்தனர். எங்களுக்கு முன்னாலேயே நிறைய பேர்கள் காத்திருந்தனர். அதனால் எங்களுக்கு கடைசி இருக்கையில் தான் இடம் கிடைத்தது. பாட்டி வரும்போதே என்னைப் பார்த்துக் கொண்டே வந்தார். சுமார் தூரத்தில் வரும்போதே சட்டென்று என்னைப் பார்த்து ‘நீவு நளினி தாயி தானே?’ (நீங்கள் நளினியோட அம்மா தானே?) என்று கன்னடாவில் கேட்டார். எனக்கு கொஞ்சம் ஷாக். யார் இவர்? என் தோழியா? பெயர் நினைவிற்கு வரவில்லையே! யார் இவர் என்று எனது மூளையின் ஞாபக அடுக்குகளில் தேட ஆரம்பித்தபடியே சட்டென்று என்னையும் அறியாமல் எழுந்து அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு ‘ஹவுது. சென்னாகிதீரா?’ என்றேன். யாருன்னு சீக்கிரம் தேடு, தேடு என்று என் மனதிற்குக் கட்டளையிட்டேன்.

 

என் பெண்ணைப் பற்றிப் பேசுகிறார். அதனால் அவள் புக்ககத்து உறவாக இருக்கலாம். சடசடவென அவள் புக்ககத்து மனிதர்களை நினைவிற்குக் கொண்டு வந்தேன். ஊஹூம், எனக்குத் தெரிந்த எந்த மாமியின் முகத்துடனும் இந்த மாமியின் முகம் மேட்ச் ஆகவில்லை. தும்கூரில் என் பெண்ணிற்கு தெரிந்தவரா? மறுபடி மூளையில் ஒரு CD ஓடியது. தும்கூர் ஹோய்சள கர்நாடக குடும்பத்து மாமிகள் ஒவ்வொருவராக வந்து போனார்கள். இந்த மாமிக்கு பக்கத்தில் கூட யாரும் வரவில்லை. அடக் கடவுளே! இவர் யாரென்று தெரியவில்லையே! என்னை நன்றாக அடையாளம் சொல்லுகிறார். எனக்கு இவர் யாரென்று தெரியவில்லையே! மூளையின் இண்டு இடுக்கெல்லாம் தேடிவிட்டேன். ஊஹூம், ஊஹூம், ஊஹூம்!

 

பரிதாபமாக என் கணவரைத் திரும்பிப் பார்த்தேன். உதவுவாரோ என்று பார்த்தால்…. அவர் ரொம்பவும் சந்தோஷமாக என் திண்டாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டில் எப்போதும் அவர்தான் மனிதர்களின் பெயர்களை மறந்து விடுவார். நான் நினைவு படுத்துவேன். பழிக்குப் பழி!

 

என் ஞாபக சக்தி என் காலைவாரி விட்டுவிட்ட, வேறு வழியில்லாமல் ‘தாவு?’ (தாங்கள்?) என்று கேட்டேன். ‘அனிதன் அம்மா…!’ (அனிதாவின் அம்மா) என்றார். மறுபடி யோசிக்க ஆரம்பித்தேன். யாரு அனிதா? அப்போதுதான் மூளையின் திரையில் எல்லோரும் வந்து போயிருந்ததால் சட்டென்று அனிதா எதிரில்…. ஸாரி மனதில் வந்து சிரித்தாள். அப்பாடி! ஒரு பெருமூச்சு விட்டபடியே (கொஞ்சம் அசடும் வழிந்தது!) ‘ஓ! இப்போ நினைவு வந்துவிட்டது….!’ என்றேன்.

 

நினைவு வந்துவிட்ட சந்தோஷத்தில் என் கணவரிடம் அவரை அறிமுகம் செய்தேன். ‘நளினியோட நாத்தனார் உஷாவோட ஓர்ப்படி அனிதாவோட அம்மா….!’ (மாரத்தான் ஓடி வந்தது போல மூச்சிரைத்தது!) எத்தனை நெருங்கிய உறவு! பரஸ்பர குசலம் விசாரித்தபின் அந்தப் பெண்மணி கூறினார். ‘ரொம்ப நல்ல டாக்டர்…. தங்கமான மனிதர். எனக்கு வேற ஒரு டாக்டர் காடராக்ட்  ஆபரேஷன் செய்தார். காடராக்ட் – ஐ எடுக்காமலேயே லென்ஸ் வைத்துவிட்டார். இந்த டாக்டர் தான் சரி செய்தார். இப்போ கண்ணு நன்னா தெரியறது’ என்றார்.

 

‘ஆமா, ஆமா, டாக்டர் ரொம்ப நன்றாகவே அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்…’ என்று நானும் சிலாகித்தேன்… காரணம் உங்களுக்கும் தெரியுமே!

 

 

இதேபோல இன்னொருவரிடமும் நான் மாட்டிக்கொண்டேன். அதையும் சொல்லிவிடுகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன் ஒரு சதாபிஷேகத்திற்குப் போயிருந்தேன். அக்கா வழி உறவினர் அவர். என் அக்காவின் புக்ககத்து உறவினர்களை எல்லாம் பல வருடங்கள் கழித்துப் பார்க்கிறேன் அங்கு. பலரையும் அடையாளம் கண்டு கொண்டேன். சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டு குசலம் விசாரித்தனர். சிலர் அவர்களாகவே வந்து ‘நான்தான் குஞ்சம்மா, தெரிகிறதா?’ ‘நான் உங்க அக்கா வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தேனே’ என்று சமர்த்தாக அடையாளம் சொல்லிவிட்டு விசாரித்துவிட்டுப் போனார்கள்.

 

அப்புறம் ஒரு பெண்மணி வந்தார். மிகவும் உரிமையுடன் என் தோளில் கை வைத்து, ‘யார் தெரியறதா?’ ஆஹா! என்னே எனக்கு வந்த சோதனை! சுத்தமாகச் தெரியவில்லை. திரு திருவென்று முழித்துக் கொண்டு என் அக்காவைப் பார்த்தேன். அவளோ ‘தெரியாம என்ன? உன்னைப் போய் மறப்பாளா?’ என்கிறாள். அந்த பெண்மணி எனக்கு அவரைத் தெரிந்ததா தெரியவில்லையா என்பதைப் பற்றிக் கவலையே படாமல் ‘பொண்ணா? பிள்ளையா?’ என்றார். மறுபடி திரு திரு. யாரைக் கேட்கிறார்? என்னையா? ‘யாருக்கு? என் பெண்ணிற்கா, என் பிள்ளைக்கா?’ என்றேன். ‘உனக்குத்தான்….!’ என்றார். எனக்கா? எனக்கு இரண்டு பேர் பிறந்து பேரன்களும் எடுத்தாயிற்றே! சாவகாசமாக இப்போது எனக்கு பெண்ணா பிள்ளையா என்கிறாரே! ‘நான் உன்ன உன் கல்யாணத்தன்று பார்த்தது…!’ என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அடக் கஷ்டமே! இப்போது நான் நாற்பது வருடக் கதையைச் சொல்லவேண்டுமா? என்னை மேலே யோசிக்கவிடாமல், ‘எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பிள்ளை. பொண்ணு அங்க உக்காந்திருக்கா பாரு…!’ என்று அறையின் ஒரு கோடியில் உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண்ணைக் காட்டினார். ‘அவளுக்குத்தான் கல்யாணத்திற்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராவது பிள்ளை இருந்தால் சொல்லு…!’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அப்பாடி என்று பெருமூச்சு விட்டேன். மெதுவாக என் அக்காவிடம் கேட்டேன். ‘யாரு இது?’

‘என்னடி தெரியலையா? ராதிகா!’

‘எந்த ராதிகா?’

‘என்னடி இது? அதான்… எங்க பெரிய மாமியாரோட…..(மறுபடி ஒரு மேரத்தான்!)

 

படங்கள் நன்றி: கூகிள்

கூடப்பிறந்தவர்களுக்குள் போட்டி, பொறாமை

 

 

செல்வ களஞ்சியமே 63

 

‘அவளை மட்டும் நிறைய கொஞ்சற..?’

‘ஏன்தான் இந்த பாப்பா பொறந்ததோ? நான் மட்டும் இருந்திருந்தா நன்னா இருந்திருக்கும்….!’

‘இந்த பாப்பாவ கண்டாலே எனக்குப் பிடிக்கல….!’

 

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் முதல் குழந்தையின் முணுமுணுப்புகள்தான் இவை. இருவரும் நட்பாக இருப்பார்கள். என் தம்பி, என் தங்கை என்று உறவாடுவார்கள். நீங்கள் எத்தனை தூரம் இருவருக்கும் இடையில் பாலமாக இருந்தாலும் இந்த பிரச்னை வரத்தான் வரும். அடிக்கடி உரசல்கள், சண்டைகள் – வாய், கை சண்டைகள் எல்லாம் நடக்கும். அப்படி நடக்கையில் நீங்கள் முதலில் டென்ஷன் ஆகாமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். சின்னக் குழந்தைக்கு உங்கள் டென்ஷன் அதிக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், முதல் குழந்தைக்கு புரியும். ‘ஓ! பாப்பாவை ஏதாவது செய்தால், அம்மாவிற்கு பிடிக்காது. அம்மாவின் கவனத்தை கவர வேண்டுமானால் இது ஒரு வழி’ என்று தன் வழியில் தப்பாகப் புரிந்து கொள்ளும். உங்களை இன்னும் படுத்தும்.

 

ஒரு சின்ன விஷயம் பூதாகாரமாக வடிவெடுக்கும் போது பெற்றோர்கள் அயர்ந்து போவது சகஜம் தான். இந்த பொறாமைக்குக் காரணம் இத்தனை நாட்கள் பெற்றோரின் ஒரே செல்லமாக இருந்த குழந்தைக்கு தனது இடத்தில் இன்னொரு குழந்தை வந்தது பிடிக்கவில்லை என்பது ஒன்றுதான். பெற்றோர்கள் இருவருக்கும் சொந்தம் என்பது புரிய நாட்கள் ஆகும். அதேபோலத் தான் விளையாட்டு சாமான்களும். இருப்பதில் தங்கைக்கும் பங்கு என்றாலும் முதல் குழந்தைக்குக் கோவம் வரும். சரி, புதிதாக வாங்கிக் கொடுத்தாலும் கோவம் வரும். பெற்றோர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் வேண்டும். விளையாட்டு விளையாட்டாகவே இருக்கும்வரை இரண்டு குழந்தைகளுக்கும் நடுவில் பெற்றோரின் தலையீடு தேவையில்லை. விளையாட்டு என்பது அடிதடியாக மாறும் போது உடனடியாகத் தலையிட்டு இருவரின் கவனத்தையும் திசை திருப்ப வேண்டியது பெற்றோரின் கடமை.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள் twins 1

முதல் குழந்தை -இரண்டாவது குழந்தை வித்தியாசம்

IMG_7066

 

செல்வ களஞ்சியமே 62

 

அந்தக்காலத்தில் நாங்கள் 5 வயதில்தான் பள்ளிக்கூடம் சேருவோம். அதுவரை வீட்டில் கொட்டம் அடித்துக்கொண்டு ஆடிபாடிக் கொண்டிருப்போம்.  திருமணங்கள், பண்டிகைகள் கொண்டாட உறவினர் வீடு, கோவில் குளம் என்று  அம்மா எங்கு போனாலும் கூடவே போவோம். அ, ஆ கூட வீட்டில் சொல்லித் தரமாட்டார்கள். ஆங்கிலம் என்பது நாங்கள் அறியாத ஒன்று! ஐந்தாம் வகுப்பில்தான் ஆங்கில எழுத்துக்கள் சொல்லித் தருவார்கள். நாள் முழுவதும் கொண்டாட்டம்தான். கவலையில்லாத காலம்.

 

இப்போது எவ்வளவு மாறிவிட்டது! வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லையென்றால் எட்டு ஒன்பது மாதத்திலேயே டே கேர் மையத்தில் விட்டுவிடுகிறார்கள். அங்கும் அவை சந்தோஷமாக இருக்க முடியாது. அவர்களின் ஆளுகையில் அந்தக் குழந்தை தனது சுதந்திரத்தை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பிக்கிறது. அம்மா கொடுத்தனுப்பும் உணவு என்றாலும் அம்மாவின் பாசம் அரவணைப்பு கிடைக்காது.

 

இதெல்லாம் காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். காலம் மாறி வருகிறது. அதனால் இப்படி என்று காரணம் காட்டலாம். ஆனால் வீட்டிற்கு வந்த பின்பாவது அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும். அந்த வசதியை, சின்ன சுகத்தை குழந்தைகளுக்கு நாம் கொடுக்கலாம், இல்லையா?

 

முதல் குழந்தை எப்போதும் சில வருடங்களுக்கு குழந்தையாக இருக்கும் – அதாவது அதற்கு தம்பி அல்லது தங்கை பிறக்கும்வரை. தம்பி தங்கை பிறந்துவிட்டால் அடுத்த நொடி அது அக்கா (அ) அண்ணா ஆகிவிடும். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் புதிதாகப் பிறந்த குழந்தையின் மேல் அக்கறை காட்டத் துவங்குவார்கள். முதல் குழந்தை தான் ஓரம் கட்டப்படுவதாக நினைக்க ஆரம்பிக்கும். இதனால் சில குழந்தைகள் உடல் இளைத்து காணப்படுவார்கள். இவர்களை செவலை குழந்தைகள் என்பார்கள்.

 

தொடர்ந்து படிக்க: நான்குபெண்கள்

குழந்தையின் பேச்சுத் திறன்

children speak

செல்வ களஞ்சியமே – 45

 

நேற்று என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அக்காவிற்கு அழகழகான இரண்டு பேத்திகள். நேற்று வீட்டில் பேத்திகளுக்குள் சண்டை. அக்கா இருவரையும் ‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியிருக்கிறாள். சின்னவள் சொல்லுகிறாளாம்: ‘ஐயம் அப்செட் வித் யு, பாட்டி’ என்று. இதை சொல்லிவிட்டு அக்கா சிரித்துக்கொண்டே சொன்னாள்: ‘ மூணரை வயதில் என்ன பேச்சு பேசுகிறது, பாரு..!’ எனக்கும் சிரிப்புதான். எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தேன். இதோ இப்போது உங்களிடமும் சொல்லிவிட்டேன்.

 

குழந்தைகளின் பேச்சு எந்த நிலையிலும் நம்மை ரசிக்க வைக்கும். போனவாரம் சொன்னதுபோல சில குழந்தைகள் மெதுவாகப் பேச ஆரம்பிக்கும். ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து பெற்றோர் குழந்தைகளின் பேச்சுத் திறன் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும்.

 

நாம் பேசுவதைக் கேட்டுக்கேட்டுத்தான் குழந்தைகள் பேசக் கற்கிறார்கள். அதனால் குழந்தையுடன் அதிகம் பேசுங்கள். சின்ன சின்ன விஷயங்களைக் கூட அதனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘இன்னிக்கு என்ன சமையல் செய்யலாம்?’ ‘உனக்கு புடலங்காய் பிடிக்குமா?’ ‘அம்மாவுக்கு இந்தப் புடவை/சூடிதார் நன்னா இருக்கா?’ ‘ இன்னிக்கு அம்மாவுக்கு சமையல் செய்யவே பிடிக்கல, ராத்திரி அப்பா வந்தவுடன் 1947 (உணவகம்) போகலாமா?’ என்று நீங்கள் மனதில் நினைப்பதையெல்லாம் குழந்தையிடத்தில் சொல்லுங்கள்.

 

பெற்றோர் எப்போது தங்கள் குழந்தைகளின் பேச்சுத் திறன் பற்றி கவலை கொள்ள வேண்டும்? பொதுவாக குழந்தைகளின் பேச்சுத் திறனில் சில மைல்கல்களை அறிந்து கொள்வது நல்லது.

 

மூன்றாம் மாதம்:

சத்தங்களைக் கேட்டால் மிரண்டு, தூக்கிவாரிப் போடும்; அழும். கையில் எடுத்து வைத்துக் கொண்டு வாயால் பேசி சமாதானப்படுத்தினால் அழுகை நிற்கும். அழும்போது தொண்டையில் எச்சில் சேர்ந்து ‘களகள’ சத்தம் உண்டாக்கும். ‘குர் குர்’ என்று மெல்லிய சத்தம் உண்டாக்கும்.

 

ஆறாம் மாதம்:

குழந்தை என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ள : நான்குபெண்கள்

எங்கள் பாட்டி!

patti

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கோடை விடுமுறை என்றால் பாட்டி வீடுதான். மூன்று மாமாக்களும் பாட்டியும்  ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்  என் பெரியம்மாவின் மகன், மகள், என் அண்ணா,  என் அக்கா (சில வருடங்கள் ) ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் தங்கிப் படித்தவர்கள்.

 கோடைவிடுமுறை முழுக்க அங்குதான். பாட்டியின் கை சாப்பாடு, கொள்ளிடக் குளியல், மாலையில் கோவில், வெள்ளைக் கோபுரம் தாண்டி இருக்கும் மணல்வெளியில் வீடு கட்டி விளையாட்டு, சேஷராயர் மண்டபத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு – இவைதான் தினசரி பொழுது போக்கு.

தாத்தா மிகச் சிறிய வயதிலேயே (45 வயது) பரமபதித்துவிட்டார். கடைசி மாமாவுக்கு 1 1/2 வயதுதான் அப்போது. தாத்தாவிற்கு ஆசிரியர் வேலை – ஊர் ஊராக மாற்றல் ஆகும் வேலை. பாட்டிக்கு மொத்தம் 14 குழந்தைகள். எங்களுக்கு நினைவு தெரிந்து 6 பேர்தான் இருந்தனர். பெரிய பிள்ளைக்கும் பெரிய பெண்ணிற்கும் தாத்தா இருக்கும்போதே திருமணம்.

எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் பாட்டி எப்படி இத்தனை குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினாள்  என்பது இன்றுவரை புரியாத புதிர்தான்.

கணவரின் மறைவுக்குப் பிறகு இன்னொரு மகளுக்கு (என் அம்மா) திருமணம் செய்தாள் பாட்டி. இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 1944 இல் அன்றைய மதராசில் திருமணம். மகள்களுக்குத் திருமணம் செய்தபின் தொடர்ந்து அவர்களது பிரசவங்கள். பெரியம்மாவிற்கு நான்கு குழந்தைகள்; நாங்கள் நாலுபேர்கள்.

நாங்கள் கோடைவிடுமுறை க்குப் போகும்போது நல்ல வெயில் கொளுத்தும். ஆனாலும் பாட்டி வீடு தான் எங்களின் சொர்க்கம். வாசலிலேயே காய்கறி, பழங்கள் என்று வரும். மாம்பழங்கள் டஜன் கணக்கில் வாங்கி கூடத்தில் இருக்கும் உறியில் தொங்கவிடப்படும். இரவு எல்லோருக்கும் கட்டாயம் பால் உண்டு.

இத்தனை செலவுகளை பாட்டி எப்படி சமாளித்தாள்? தெரியாது. மூன்று வேளை  சாப்பாடு, மதியம் ஏதாவது நொறுக்குத் தீனி. எதற்குமே குறைவில்லை.

கோழியின் பின்னால் ஓடும் குஞ்சுகளைப் போல பாட்டி எங்கு போனாலும் – காவேரி வீட்டிற்கு பால் வாங்க (சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் உனக்கு – நீ கொடுக்கற பாலில்  காவேரிதான் இருக்கு,  என்று என் பாட்டி அவளைக் கடிந்து கொள்வாள்.) செக்கிற்குப் போய் எண்ணெய் வாங்க என்று பாட்டி எங்கு போனாலும் அவள் பின்னே  நாங்கள் – பாட்டி சொல்வாள் – ‘பட்டணத்துலேருந்து குழந்தைகள் வந்திருக்கா பால் இன்னும் கொஞ்சம் கொசுறு ஊற்று, மாம்பழம் குழந்தைகள் கையில் ஆளுக்கு ஒண்ணு கொடு’ என்று பாட்டியின் வியாபர தந்திரங்கள் எங்களுக்கு வேடிக்கையாய் இருக்கும்.

பாட்டி காலையில் தீர்த்தாமாடிவிட்டு வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொள்வாள். மூக்கின் மேல் திருமண்; அதற்கு மேல்  சின்னதாக ஸ்ரீசூர்ணம். பாட்டியை நெற்றிக்கு இல்லாமல் பார்க்கவே முடியாது.

அக்கம்பக்கத்தில் இருக்கும் அத்தனை பேருடனும் சுமுக உறவு. பாட்டிக்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவுதான் அம்மாஞ்சி (மாமாவின் பிள்ளை) அவரது மனைவி  அம்மாஞ்சி மன்னி, அத்தான் (அத்தையின் பிள்ளை) அத்தான் மன்னி (அத்தானின் மனைவி) அத்தங்கா (அத்தையின் பெண்) அத்தங்கா அத்திம்பேர் (அத்தங்காவின் கணவர்) என்று பல பல உறவுகள்.

இவர்களுடன் பாட்டி பேசும் ‘என்னங்காணும், ஏதுங்காணம் வாருங்காணம், சொல்லுங்காணம், சௌக்கியமாங்காணம்’ என்கிற பாஷை எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நாங்களும் இப்படியே பேசிப் பார்ப்போம்.

பாட்டி கொஞ்சம் கனத்த சரீரம். லோ பிரஷர் வேறு. அவ்வப்போது தலை சுற்றுகிறது என்று உட்கார்ந்து கொள்வாள். ஓடிப் போய் சோடா வாங்கி வருவோம். ‘சோடா வேண்டுமென்றால் சொல்லேன். வாங்கித் தருகிறோம் அதற்கு ஏன் லோ பிரஷரைத்  துணைக்குக் கூப்பிடுகிறாய்’ என்று என் பெரிய அண்ணா கேலி செய்வான்.

அங்கிருக்கும் நாட்களில் கட்டாயம் குறைந்த பட்சம் இரண்டு சினிமா உண்டு. காலையிலிருந்தே நாங்கள் ஆரம்பித்து விடுவோம்: ‘பாட்டி சீக்கிரம் கிளம்பணும். லேட் பண்ணாத; எங்களுக்கு முதல் ஸீன் லேருந்து பார்க்கணும்’. ஸ்ரீரங்கத்தில் நான் பார்த்த எனக்கு நினைவில் இருக்கும் சினிமாக்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், பார்த்தால் பசி தீரும்.

பாட்டி பட்சணம், தீர்த்தம் எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்புவதற்குள் நாங்கள் பரபரத்துப் போய்விடுவோம். மாட்டு வண்டி வேறு எங்கள் அவசரம் புரியாமல் நிதானமாக நடக்கும்.

பேரன்கள் முதலிலேயே போய்  (சேர் (chair) 8 அணா, தரை 4 அணா ) டிக்கட் வாங்கிவிடுவார்கள். பாட்டியுடன் போனால் தரை டிக்கட்டுதான். பாட்டிக்கு காலை நீட்டிக் கொண்டு உட்கார வேண்டும்.  பாட்டிக்கு அங்குதான் ஓய்வு கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.

பாட்டி கையால் கட்டாயம் ஒரு முறை எல்லோருக்கும் விளக்கெண்ணெய்  கொடுக்கப்படும். பாட்டி அன்று பண்ணும் சீராமிளகு சாத்துமுதுவும், பருப்புத் தொகையலும் ஆஹா! ஓஹோ! தான்.

என்னுடன் ஒருமுறை வந்து இருந்தபோது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பண்ணுவது சொல்லிக் கொடுத்தாள் பாட்டி. மோர்க்களி செய்து தளதளவென்று அப்படியே தட்டில் போட்டு மைசூர் பாகு மாதிரி துண்டம் போட்டுக் கொடுப்பது பாட்டியின் ஸ்பெஷாலிடி!

இத்தனை வேலை செய்து ஓய்வு ஒழிச்சல் இல்லாத போதும் பாட்டி கைவேலைகளிலும் ஆர்வம் மிகுந்தவள். வண்ண  வண்ண உல்லன்  நூலில் ரோஜாப்  பூ போடுவாள். 10, 15       ரோஜாப்பூக்கள் பின்னியதும் அவற்றிற்கு பொருத்தமான நூலில் அவற்றை வைத்துப் பின்னி ரோஜாப்பூ சவுக்கம் (டவல்) தயார் செய்வாள். பாட்டி பின்னிய கைப்பைகள் சதுரம் வட்டம்,அறுகோணம் என்று எல்லா வடிவங்களிலும் இருக்கும். அவற்றிக்கு உள்ளே தடிமனான அட்டை வைத்து ஜிப் வைத்துத் தைப்பது என் அம்மாவின் கைவேலை.

பாசிமணி எனப்படும் சின்னச்சின்ன மணிகளில் பொம்மைகள் செய்து, அந்த மணிகளிலேயே செடி, கொடி, மரம் செய்து இந்தப் பொம்மைகளை அவற்றின்மேல் உட்கார வைத்து அவற்றை ஒரு பாட்டிலுக்குள் நுழைத்து செய்யும் கைவேலையும் பாட்டி செய்வாள். ‘பாட்டிலுக்குள் இதெல்லாம் எப்படி போச்சு?’ என்ற எங்கள் கேள்விகளுக்கு ‘நான் உள்ள போ அப்படின்னு சொன்னேன் போயிடுத்து’ என்பாள்  பாட்டி!

பாட்டிக்குக் கோவமே வராது. சாப்பிடும் நேரம் யாராவது முதலில் சாப்பிட்டுவிட்டு  ‘எனக்கு, எனக்கு’ என்றால் பாட்டி சொல்வாள்: ‘முதல் பசி ஆறித்தா? கொஞ்சம் சும்மா இரு!’

இன்றும் நாங்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் எங்கள் குழந்தைகளிடத்தில் – தற்சமயம் பேரன் பேத்திகளிடத்தில்.

பாட்டி எங்கள் அம்மாவிற்குக் கொடுத்து எங்கள் அம்மா எங்களுக்கு கொடுத்தது என்று வெள்ளிப் பாத்திரங்கள் இன்றும் எங்களிடம் உள்ளன. ஒரு சின்ன துரும்பைக் கூட வீணாக்காமல் பாட்டி அன்று நடத்திய குடும்பம்தான் இன்று எங்களிடம் வெள்ளிச் சாமான்களாக இருக்கின்றன.

பாட்டி நிறைய துக்கப் பட்டிருக்கிறாள். கணவனை இழந்த பாட்டியின் வாழ்க்கையில் எனது பெரிய மாமா அதே 45 வயதில் பரமபதித்தது பெரிய துக்கம். பாட்டி ரொம்பவும் ஒடுங்கிப் போனது இந்த  ஈடுகட்ட முடியாத இழப்பிற்குப் பிறகுதான்.

ஒரு கோடைவிடுமுறையில் சித்திரை த் தேர் எங்கள் வீட்டு வாசலைத் தாண்டியபின் மாமாவின் இழப்புச் செய்தி வந்தது. ‘ராமாஞ்ஜம் …!’ என்று கதறியபடியே பாட்டி நிலைகுலைந்து போனது இன்னும் எனக்கு நினைவில் நீங்காமல் இருக்கிறது.

அதேபோல பாட்டியுடன் கூடவே இருந்து ஸ்ரீரங்கத்தில் படித்து IPS ஆபிசர் ஆன  எங்கள் பெரியம்மாவின் மகன் இளம்வயதில் இறைவனடி சேர்ந்தது, என் அக்காவின் கணவர் மறைந்தது என்று என் பாட்டி பல இழப்புகளைப் பார்த்து மனம் நொந்து போனாள்.

எனக்கும் வயதாவதாலோ என்னவோ இன்று பாட்டியின் நினவு அதிகமாக வந்து விட்டது. அன்னையர் தினத்தன்று எங்கள் அருமைப் பாட்டியைப் பற்றி எழுதுவதில் ரொம்பவும் சந்தோஷப் படுகிறேன்.

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

***************************************************************************

இந்தப் பதிவு படித்துவிட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் என் மாமா (திருமஞ்சனம் சுந்தரராஜன்) எழுதிய கடிதம் இது. சில திருத்தங்கள் சொல்லியிருக்கிறார். அவற்றை அப்படியே மாமாவின் கடிதத்திலிருந்தே கொடுக்கிறேன். மாமாவின் பாராட்டையும் இணைத்துள்ளேன்.

சௌபாக்யவதி ரஜிக்கு 
சுந்துமாமாவின் ஆசீர்வாதம் 
 
பாட்டியைப் பற்றி உனது கட்டுரை படித்தேன், (தில்லியில் ஆண்டு 1985 கண்ணப்பா மாமா எடுத்த) போட்டோவும் பார்த்து சந்தோஷப் பட்டேன்.
 
இரண்டு வாஸ்தவமான திருத்தங்கள்  ~ 
 
என் தகப்பனார் (மாத்த்யூ ஆர்னல்ட் போன்று) 
ஸ்கூல்ஸ்-இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார், 
அவர் ஆயுள் 54 வருஷம்.
மாமா” (ராமாநுஜம்) ஆயுள் 49 வருஷம் 7 மாசம் 
கொண்டது.   தான் பிறந்தது ருஷ்ய போல்ஷ்விக் புரட்சி
நிகழ்ந்த ஆண்டு 1917 என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.  
அவர் நீங்கியது மே-1967. 
உன் கட்டுரை மிக அருமை.
ஏதோ இலக்கிய உத்தி / ரீதி என்று கற்பனை
பண்ணிக்கொண்டு முண்டும் முடிச்சுமாக
எழுதி அவஸ்தைப் படுகிறவர்களை நான்
பார்த்திருக்கிறேன்.
 
உன் எழுத்து கி. ராஜநாராயணன் என்கிறவர்
நடை போல ஸ்வதந்த்ரமாக, போலி இன்றி 
அமைந்திருக்கிறது.
 
உன்னுடைய readers’ feedback புகழ்ச் சொற்கள் 
அனைத்தும் தகும்.    பாராட்டுகள்.   மிக அருமை.
 
நான் எனது சுய-சரிதை எழுதி, அதற்கு  முன்னர் 
உன் கட்டுரை கிடைத்திருந்தால், அதை அப்படியே 
தூக்கி ஒரு முழு அத்தியாயமாகச் சேர்த்திருப்பேன் !
அன்புடன்,
சுந்து மாமா
(ஸ்ரீரங்கம்)