குதிக்கும் ‘அவரை’ தெரியுமா?

avarekaai

உங்கள் அவரா? ரொம்பவும் குதிப்பாரோ? எப்பவுமா? இல்லைக் கோபம் வந்தால் மட்டும் தலைகால் புரியாமல் குதிப்பாரா?

அவர் குதித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஸ்வரஜதி போடுவீர்களா? இல்லை, அவருடன் சேர்ந்து நீங்களும் குதிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?

ஸ்டாப்! ஸ்டாப்!

எங்கள் ஊரில் இந்த சீசனில் கிடைக்கும் அவரைக் காய்க்குத்தான் இந்தப் பெயர். ஆங்கிலத்தில் இதனை ‘Jumping Bean’ என்பார்கள். கன்னட மொழியில் ‘இதுக்கு’ (பிதுக்கு) அவரை என்பார்கள். எதுக்கு அவரை என்று கேட்காதீர்கள்!

அவரேகாய் என்றாலும் பயன்படுத்துவது இதன் பருப்புகளை மட்டுமே. கிட்டத்தட்ட மொச்சக் கொட்டை போல கொஞ்சம் சின்ன சைஸில் இருக்கும்.

தினசரி செய்யும் சாம்பார் வகைகளிலிருந்து, ஸ்பெஷல் ஆகச் செய்யும், கோடுபளே, அக்கி (அரிசி) உப்பிட்டு, மிக்ஸர்  என்று விதம்விதமாக  இந்த அவரை பருப்புகளை பயன்படுத்துவார்கள். இந்தப் பருப்புகளை வைத்து செய்யும்போது கட்டாயம் இஞ்சி சேர்க்க வேண்டும் – ஜீரணம் ஆவதற்காக – இன்னொரு காரணம் கடைசியில் சமையல் குறிப்பில் காண்க. மிகவும் ‘ஹெவி’ யாக இருக்கும் என்பதால் பலர் – குறிப்பாக வயதானவர்கள் – இதனை சாப்பிடுவதில்லை.

உரித்த அவரேகாய்

முன்பெல்லாம் முழுதாகக் கிடைக்கும். அதை வாங்கி வந்து மேல்தோல் பிரித்து (பட்டாணி போல) உள்ளிருக்கும் பருப்புகளை எடுக்கலாம். இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்தப் பருப்புகளின் மேல் இருக்கும் தோலியையும் எடுத்துவிட்டு சமைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது.

எங்கள்  வீட்டு சொந்தக்காரரின் மனைவி ‘இதுக்(கு) பேக்கு’ (மேல்தோலை பிதுக்க வேண்டும்) என்று சொன்னவுடன் நான் மனதில் நினைத்துக் கொண்டேன்: ‘இதுக்கு பேக்கு, அதுக்கு பேக்கு, எதுக்கு பேக்கு, எல்லாத்துக்கும் பேக்கு?’ என்று!

பிறகு என் தோழி விளக்கம் கொடுத்தார். மேல்தோல் எடுத்தவுடன் கிடைக்கும் இந்த அவரை விதைகளை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறப் போட வேண்டும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்து ‘இதுக்க’ (பிதுக்க) வேண்டும்.

வேறு வேலை இல்லை என்று இதை வாங்குவதையே விட்டு விட்டேன். இப்போதெல்லாம் இதுக்கிய அவரேகாயே கிடைக்கிறது. உரிச்ச வாழைப்பழம் போல.

இந்த மாதங்களில் – அதாவது அவரேகாய் சீசனில் இங்குள்ளவர்கள் துவரம்பருப்பு வாங்கவே மாட்டார்களாம். அதற்கு பதில் இந்த பருப்பை பயன்படுத்துவார்களாம்.

இன்னொரு வேடிக்கையான விஷயமும் இந்தக் காயை பற்றி இருக்கிறது. இந்த சீசனில் தெருக்களின் நடுவில் இந்த பருப்புகளின் ‘இதுக்கிய’ தோலிகளை எறிந்து இருப்பார்கள்.

‘ஏன் இப்படி நடுத்தெருவில் இந்தத் தோலிகளைப் போடுகிறார்களோ’ என்று நான் அலுத்துக் கொண்டதற்கு என் தோழி கூறினார்: எத்தனை பேர்கள் இதன் மேல் நடந்து போகிறார்களோ அதனைக்கத்தனை இதன் ருசி கூடும்’ என்று!

இது எப்படி இருக்கு? குதிக்கும் அவரை மாதிரியே குதிக்கத் தோன்றுகிறதா?

சரி. இதனை வைத்துக் கொண்டு ஒரு சின்ன சமையல் குறிப்பு:

அவரேகாய் அக்கி உப்பிட்டு

புழுங்கலரிசி ரவை – 1 கப்

நீர் இரண்டு கப்.

அவரேகாய் கால் கப்.

பச்சை மிளகாய் 2 அல்லது 3 – குறுக்கு வாட்டில் அரிந்து கொள்ளவும்.

கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு

தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் 2 அல்லது 3

பெருங்காயம் – சிறிதளவு

கட்டாயம் சேர்க்க வேண்டியது இஞ்சி (இல்லாவிட்டால் ஆட்டோகிராப் படத்தில் வரும் வாத்தியார் படும்பாடுதான்!)

தேங்காய்  துருவியது  கால் கப்

எண்ணெய் – 4 அல்லது 5 மேசைக் கரண்டி

உப்பு – ருசிக்கேற்ப

aval uppumaa

செய்முறை:

வாணலி அல்லது வெண்கல உருளியில் எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் போடவும். இஞ்சியை துருவிப் போடவும். பெருங்காயம் போடவும். கறிவேப்பிலை சேர்க்கவும். நீரை விடவும். தேவையான உப்பு சேர்க்கவும். நீர் கொதிக்கும் போது அவரேகாய் போடவும். 1௦ நிமிடம் கொதிக்க விடவும். ஒரு தட்டால் மூடி விட்டால் அவரேகாய் பாதி வெந்து விடும். பிறகு அரிசி ரவையைக் கொட்டிக் கிளறவும். உருளியின் மேல் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வைக்கவும். உப்புமாவிற்கு நீர் தேவைபட்டால் இந்தக் கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். அவரேகாய் நன்றாக வெந்து, அரிசியும் வெந்தவுடன் தேங்காய் பூவைப் போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.

சுடச்சுட சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பரிமாறும் முன்பு சிறிதளவு நெய்யை விடவும்.

பூப்பூவான அவரேகாய், அக்கி உப்பிட்டு தயார்!

avarekaai saaruஇந்த சீசனில் எல்லா உணவகங்களிலும் இந்தப் பருப்புகளை வைத்தே ரவை  உப்புமா, அவல் உப்புமா, கலந்த சாதங்கள் (சித்திரான்னம்) தோசை, அக்கி ரொட்டி, சாறு எனப்படும்  குழம்பு  முதலானவை தயாரிக்கப் படும். ருசியும், விலையும் வானத்தை தொடும்!

அவரேகாயில் செய்த மிக்சரை சாப்பிட்டுக் கொண்டே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது: வைரப் பதிவர்கள் 

நன்றி மனோ மேடம்!

 

இன்று இசைப்பா கேட்டீர்களா?

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!

உருளைக்கிழங்கு ஜூஸ் வயிற்றுப் புண்ணை ஆற்றும்!

மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உருளைக்கிழங்கில் இருக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த கிருமி எதிர்ப்பு மூலக்கூறு வயிற்றுப்புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

உருளைக்கிழங்கில் இருக்கும் இந்த மூலக்கூறை ஜூஸ் வடிவில் தயாரித்து தினமும் உணவுடன் கூட எடுத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.

இப்படி ஒரு யோசனை வந்ததே ஓரு வேடிக்கையான நிகழ்ச்சி மூலம் தான். ஒரு ஞாயிறு அன்று, விஞ்ஞானி ஒருவர் தனது மதிய உணவிற்கு தனது ஆண் நண்பருடன் உருளைக்கிழங்கை ருசித்துக் கொண்டிருந்த போது ஆண் நண்பரின் பாட்டி வயிற்றுப்புண்களை சரி செய்ய அவர்கள் காலத்தில் உருளைக்கிழங்கை பயன்படுத்தியதாகக் கூறினாராம்.

அந்த விஞ்ஞானி உடனடியாக சந்தைக்குச் சென்று உருளைக்கிழங்கை வாங்கி வந்து ஆராயத் தொடங்கிவிட்டார்.

இந்த ஆராய்ச்சியில் இணைத்து பணியாற்றும் அயன் ராபர்ட்ஸ் கூறுகிறார்:

“முதல் முதலில் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், எனக்கு சிறிது ஐயம் இருந்தது. ஆனால் நமக்குத் தெரியாத பல சேர்மங்கள் காய்கறிகளில் இருக்கின்றன. இந்த ‘உருளைக்கிழங்கு ஜூஸ்’ வயிற்றுப்புண் வராமல் தவிர்க்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உதவும்”

“மக்களுக்கு பயன்படும் வகையில் எங்கள் புதிய கண்டுபிடிப்புகள் அமைவது எங்களுக்கு நிரம்ப உற்சாகத்தைக் கொடுக்கிறது. எங்களது பல வருட ஆராய்ச்சிகள் பலன் அளிக்க ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம்” என்று வர்த்தக நிர்வாகி டாக்டர்  சுநீதா ஜோன்ஸ் கூறுகிறார்.

உருளைக்கிழங்கு ஜூஸ் வடிவில் வர கொஞ்ச நாட்கள் அல்லது வருடங்கள் ஆகலாம். அதுவரை……

பெரியோர்களே! தாய்மார்களே! உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிடவும். ரோஸ்ட், சிப்ஸ் என்று எண்ணையில் பொறித்து எடுத்து, அதன் இயற்கையான சத்துக்கள் அழியும்படி செய்து சாப்பிடாதீர்கள்!

தங்க மேனிக்குத் தக்காளி!

தினசரி மேக்-அப்புக்கு எக்கச்சக்கமாக செலவு செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. யானை விலை குதிரை விலை கொடுத்து இனிமேல் சருமப் பாதுகாப்புக் க்ரீம் வாங்க வேண்டாம்; தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கிறது தக்காளி.

தக்காளிக் கூழை சாப்பிடுவதால் சூரிய ஒளியால் சருமம் வயதானதைப் போல காணப்படுவதைத் தடுக்கலாம் என்று நியுகேசில் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

தக்காளிக்கு அதன் சிவப்பு நிறத்தை கொடுக்கும் லைகொபேன் என்னும் இயற்கை நிறமி தான் நம் சருமம் வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. லைகொபேன் சமைத்த தக்காளியிலும், கெச்சப், சூப், ஜூஸ் ஆகிய தக்காளியை வைத்து செய்யப்படும் பொருட்களிலும் அதிக அளவில் காணப் படுகிறது.

இந்த ஆராய்ச்சிக்காக 20 (21 வயதிலிருந்து 47 வயதுள்ள) பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பாதிப் பேருக்கு தினமும் 5 மேசைக்கரண்டி தக்காளிக் கூழும் (55gms) 10g ஆலிவ் எண்ணையும் 12 வாரங்களுக்கு கொடுக்கப் பட்டது. மற்ற பெண்களுக்கு வெறும் ஆலிவ் எண்ணெய் மட்டும் கொடுக்கப்பட்டது.

சோதனைக்கு முன்னும் பின்னும் எல்லா பெண்களும் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டனர். அவர்களது சருமத்தின் மாதிரிகளும் எடுக்கப்பட்டன.

 

 

இரண்டு குழுவிலுள்ள பெண்களின் சருமமும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. தக்காளி சாப்பிட்டவர்களின் சருமத்தில்  சூரியனின் புற ஊதக் கதிர்களின் தாக்குதலிலிருந்து  காத்துக்கொள்ளும் சக்தி 33% அதிகரித்திருப்பது தெரிய வந்தது. ப்ரோ கொலாஜென் (procollagen) என்ற சருமத்தின் கட்டமைப்புக்கு உதவும் மூலக்கூறுகளின் அளவும் அதிகரித்து இருப்பது தெரிய வந்தது.

சரும வல்லுநர் ப்ரொபசர் திரு பிர்ச்-மாசின் கூறுகிறார்: “தக்காளி சாப்பிடுவதால் கூடுதலான சருமப் பாதுகாப்பு கிடைக்கிறது”. தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி என் ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டி என் ஏ தான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப் படுகிறது. தக்காளியின் இந்தப் பாதுகாப்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட தக்காளியினால் செய்யப்படும் கெச்சப், சூப், ஜூஸ் முதலியவற்றில் லைகோபென் அதிக அளவில் இருக்கிறது; இது நம் உடலால் மிக எளிதில் கிரகித்துக் கொள்ளப் படுகிறது.

லைகோபென் என்னும் அற்புத இரசாயனப் பொருள் :

சருமத்தில் சுருக்கம் விழுவதை குறைக்கிறது;

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அளவுக்குமீறி லைகோபென் உட்கொள்ளுவதும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்; அமெரிக்காவில் ஒரு பெண்மணி எக்கச்சக்கமாக தக்காளி ஜூஸ் குடித்ததால் அவரது சருமம் ஆரஞ்சு நிறமாக மாறிவிட்டது.

லைகோபென்னின் மூலக்கூறுகள் நீரில் கரைவதில்லை அதனால் தக்காளிக் கரை துணியிலோ, சமையலறை தரையிலோ பட்டால் எளிதில் அகற்ற முடியாது.

சீனாவில் கிடைக்கும் Gac என்னும் ஒருவகை இனிப்பு பூசணி வகையில் அதிகபட்ச லைகோபென் (தக்காளியைவிட 70% அதிகம்) இருக்கிறது. பப்பாளியிலும், rosehips இலும் கூட லைகோபென் இருக்கிறது.

பச்சை தக்காளியை விட சமைத்து உண்ணுவது அதிக பலன் அளிக்கும்.

லைகோபென் சூடக்கப்படும் போது அதன் கட்டமைப்பு மாறுகிறது; அதனால் இரத்த ஓட்டத்தில் எளிதாக எடுத்துச் செல்ல படுகிறது.

ஆகவே இதனால் அறியப்படுவது என்னவென்றால், தக்காளியை அதிகம் சாப்பிட்டு மேக்கப் செலவைக் குறைக்கலாம்!

உருளைகிழங்கு: ஓர் அற்புதமான உணவு!


உருளைக்கிழங்கை ரசித்து ருசிக்காதவர்கள் உண்டா? சிப்ஸ், பொறியல், போண்டா, பஜ்ஜி, ரோஸ்ட், பூரி மசால் என்று அணுஅணுவாக அனுபவித்தாலும் அதைச் சாப்பிடும்போது மனதிற்குள் ஒரு சின்ன குற்ற உணர்ச்சி ‘ஐயோ! குண்டாகிவிட்டால் என்ன செய்வது?’ என்று. இல்லையா?

உடம்பு இளைக்க வேண்டும் என்று உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை கண்ணால் பார்க்கவும் மாட்டார்கள். அதன் பெயரைக் காதால் கேட்கவும் மாட்டார்கள். கையால் அதைத் தொட்டு வாங்கவும் மாட்டார்கள். அப்படியொரு தீண்டாமை அதனிடத்தில்!

இவர்களுக்காகவே இந்தச் செய்தி: உருளைக்கிழங்கை ‘சூப்பர் உணவு’ என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

வாழைப்பழம், புரோக்கோலி, பீட்ரூட், பட்டர் ப்ரூட் (avocado) ஆகியவற்றை விட உருளைக்கிழங்கு உடம்பிற்கு நன்மை பயக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

முக்கியமாக வேகவைத்த உருளைகிழங்கில் (Baked or jacket potato) ஒரு சாதாரண வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்தைப் போல 5½  அடங்கு அதிக நார்ச்சத்து இருக்கிறது. பட்டர் ஃப்ரூட்டில் இருக்கும் ‘சி’ விட்டமினை விட அதிக ‘சி’ வைட்டமின் இருக்கிறது.. நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் கொட்டை வகைகள், விதை வித்துக்களை விட உருளைக்கிழங்கில் செலினியம் என்கிற தாதுப் பொருள் அதிகம் காணக் கிடைக்கிறது.

இரண்டு வேளை வேக வைத்த உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு நன்மை செய்வது போலவே, நம் உணவில் உருளைக்கிழங்கின் பங்களிப்பும் அதிகம் என்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும் போது, வேறு ஏதாவது சுவாரஸ்யமான தகவல் கிடைக்குமா என்று ‘கூகிள்’ தேடு பொறியில் தேடியபோது மேற்சொன்ன ‘ஜாக்கட் பொடேடோ’ எப்படி செய்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. இதோ அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

கன்வெக்ஷன் (convection oven) அவன், மைக்ரோவேவ் அவன், பார்பிக்யு (Barbeque) க்ரில் அல்லது நேரடியாக நெருப்பிலும் உருளைக்கிழங்கை வேகவைக்கலாம். நீர் தேவையில்லை. இப்படி வேகவைத்த உருளைக்கிழங்கு வெளியில் கரகரப்பாகவும் உள்ளே மெத்துமெத்தென்று இருக்கும். இதனை வெண்ணெய், தக்காளி, இறால், சீஸ், மற்றும் ஹாம் (Ham)  உடன் சாப்பிடலாம்.

சமைப்பதற்கு முன் கிழங்கை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். மேலிருக்கும் கண்கள், அழுக்குகள் போக அலம்பித் துடைத்து விட்டு சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் கொஞ்சம் உப்பு வேண்டுமானால் சேர்த்து கிழங்கின் மேல் தடவி வேக வைக்கலாம். இதனால் மேல் தோல் கரகரப்பாக இருக்கும். சமைக்கப்படும் போது ஃபோர்க் அல்லது கத்தியால் கிழங்கைக் கீறுவது அதன் உள்ளிருக்கும் நீராவி வெளியேற உதவும்.

உருளைக்கிழங்கை அலுமினியம் ஃபாயில் கொண்டு சுற்றியும் வேக வைக்கலாம். இதனால் உள்ளுக்குள் இருக்கும் ஈரத்தன்மை போவதில்லை. ஆனால் மேல்தோல் இந்த முறையில் கரகரப்பு ஆவதில்லை. பார்பிக்யு (Barbeque) க்ரிலில் சமைக்கும் போது அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைத்தால் மேல்தோல் கருகாமல் இருக்கும். முழு உருளைக்கிழங்கை கரி அடுப்பில் நெருப்புத் தணல்களுக்கு இடையில் புதைத்து வைத்தும் சமைக்கலாம். ஆனால் மேல்தோல் கருகி சாப்பிட முடியாமல் போய்விடும்.

ஆகவே, பெரியோர்களே, தாய்மார்களே, உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிடவும். ரோஸ்ட், சிப்ஸ் என்று எண்ணையில் பொறித்து எடுத்து, அதன் இயற்கையான சத்துக்கள் அழியும்படி செய்து சாப்பிடாதீர்கள்!

வெள்ளரிக்காயின் நற்பண்புகள்

வெள்ளரிக் காயை விரும்பாதவர்கள் மிகச் சிலரே. அதுவும் பிஞ்சு வெள்ளரி என்றால் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்த காய் இது. சமைக்காமலேயே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் இதுவும் ஒன்று. வெள்ளரிப் பச்சடி, வெள்ளரி துவையல் என்று பலவிதமாக சமைக்கவும் செய்யலாம். நீர் நிறைந்த காய், கலோரி குறைந்தது என்பதனால் உணவு கட்டுப் பாட்டில் இருப்பவர்களும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடும் பொருளாக மட்டுமில்லாமல் வேறு பலவிதங்களிலும் இதனை பயன் படுத்தலாம்.

 • வெள்ளரிக் காயில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான வைட்டமின் B1, B2, B3, B5, B6, போலிக் ஆசிட், வைட்டமின் C, கால்சியம், மக்னேசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் ஆகிய அத்தனை சத்துப் பொருட்களும் இருக்கின்றன.
 • மதிய நேரத்தில் உண்டாகும் சோம்பலைப் போக்க காப்பி குடிப்பவரா நீங்கள்? காப்பிக்கு பதில் ஓர் வெள்ளரிக் காயை சாப்பிடுங்கள். இதில் இருக்கும் வைட்டமின் B யும், கார்போஹைடிரெட்டும் சட்டென்று ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இப் புத்துணர்ச்சி நீண்ட நேரம் நிலைத்தும் இருக்கும்.
 • குளித்து முடித்தவுடன் குளியலறைக் கண்ணாடியில் நீர்படலம் படிந்துள்ளதா? ஒரு வெள்ளரித் துண்டத்தை எடுத்து கண்ணாடியில் தேய்க்கவும். நீர்படலம் மறைவதுடன், வெள்ளரியின் மணமும் குளியலறையில் வீசும்.
 • உங்களது அருமையான தோட்டத்தில் செடிகள் பயிரிட என்று தயார் செய்து வைத்திருக்கும் இடங்களில் பூச்சிகள் தொல்லையா? சிறு சிறு அலுமினியக் கிண்ணங்களில் வெள்ளரித் துண்டங்களை போட்டு ஆங்காங்கே வைத்துவிடுங்கள். வெள்ளரியிலிருந்து வெளி வரும் நீர் அலுமினியத்துடன் கலந்து ஒரு வாசனையைப் பரப்பும். மனிதர்களால் நுகர முடியாத இந்த வாசனைக்கு பூச்சிகள் ஓடிவிடும்.
 • முதல் நாள் இரவு பார்ட்டி முடிந்து வரும் ‘hangover’ அல்லது தலையைப் பிளக்கும் தலைவலி இவற்றைப் போக்க  படுக்கப் போகுமுன் சில வெள்ளரித் துண்டங்களை சாப்பிடுங்கள். வெள்ளரியில் இருக்கும் வைட்டமின் B, சர்க்கரைச் சத்து மற்றும் மின் அயனிகள் (electrolytes) உடலுக்குத்  தேவையான சத்தை கொடுப்பதுடன் உடலை சம நிலையில் வைக்கவும், ‘hangover’, மற்றும் தலை வலியைப் போக்கவும் உதவும்.
 • களைப்புற்ற கண்களுக்கு புத்துணர்வு கொடுக்கவும், கண்ணின் கீழ் காணும் கருவளையங்களை போக்கவும் வெள்ளரி உதவுகிறது.
 • நம் உடலில் ஆங்காங்கே தெரியும் வேண்டாத மடிப்புகளையும் ‘டயர்’ களையும் குறைக்க வெள்ளரி உதவுகிறது. வெள்ளரித் துண்டங்களை இந்த இடங்களில தேய்க்க வெள்ளரியில் உள்ள பைடோ கெமிக்கல்ஸ் சருமத்தில் உள்ள கொலோஜென்னை இறுக்குவதுடன், மடிப்புகளை குறைத்துத் தோற்றமளிக்க செய்கிறது.
 • சாயங்காலத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தால் வெள்ளரிக் காயை நறுக்கி சிறிது உப்பு, காரப் போடி போட்டு சாப்பிடலாம். மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் அருமையான ஸ்நாக் இது.
 • அவசரமாக ஒரு மீடிங்க்குக்குப் போக வேண்டும்; ஷூ பாலீஷ் போட நேரம் இல்லையா? வெள்ளரித் துண்டத்தை ஷூக்களின் மீது தேய்க்க, ஷூக்கள் பள பள!
 • கதவுகளின் கீல்கள் க்றீச் க்றீச்? வெள்ளரித் துண்டத்தை எடுத்து கீல்களின் மேல் தேய்க்க, க்றீச் க்றீச் மாயம்!
 • அலுவலகத்திலும், வீட்டிலும் வேலை செய்து செய்து அலுத்து விட்டதா? அழகு நிலையம் போக முடியவில்லையா? கவலை வேண்டாம்: இருக்கவே இருக்கிறது வெள்ளரி மசாஜ்: ஒரு முழு வெள்ளரியை வளையம் வளையமாக நறுக்கி கொதிக்கும் நீரில் போடவும். அதிலிருந்து வரும் ஆவியைப் முகத்தில் பிடிக்க அலுப்பு போயே போச்! இது குழந்தை பெற்ற புது தாய்மார்களுக்கும், காலேஜ் மாணவிகளுக்கு பரீட்சை சமயத்திலும் மிகவும் உதவியாக இருக்கும்.
 • அலுவலக பார்ட்டியா? மேலதிகாரியுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டதில் கடைசியாக பான் போட மறந்து விட்டீர்களா? ஒரு வெள்ளரித் துண்டத்தை எடுத்து நாக்கின் மேல் 30 நொடிகள் வைத்திருங்கள். வெள்ளரியில் இருக்கும் பைடோ கெமிக்கல்ஸ் வாய் துர்நாற்றத்தைப் போக்கும் வல்லமை வாய்ந்தது.
 • குழாய்கள், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் சிங்க் முதலியவற்றை கழுவ ‘சுற்றுச் சூழல்’ நண்பனான ஒரு கிருமி நாசினி வெள்ளரிக்காய் தான். வெள்ளரித் துண்டங்கள் விடாப் பிடி கரையைப் போக்குவதுடன், கைகளுக்கும் நல்லது.
 • பேனாவினால் எழுதியதை அழிக்கவும், உங்கள் சுட்டிப் பெண்ணின் சுவர் சித்திரங்களை அழிக்கவும் வெள்ளரி ஒரு அருமையான அழிப்பான்.

published in a2ztamilnadunews.com

வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:

வெண்டைக் கையின் மருத்துவ குணங்கள்:

“பையன் கணக்கில் ரொம்ப வீக்.”
“வெண்டைக்காய் சாப்பிடச் சொல்லுங்கள். கணித மேதை ராமானுஜம் கூட இதைதான் சாப்பிட்டாராம்”
பையன்: “ஆமா, இவர்தான்  நேர தோட்டத்தில் இருந்து பறிச்சுக் கொடுத்தாப்பல …….”
சரி, சரி, விஷயத்திற்கு வருவோமா?கணிதத்தை தவிர வேறு சில நன்மைகளும் வெண்டைக்காய் சாப்பிடுவதால் வரும்
என்று சொல்லத்தான் இந்தக் கட்டுரை.அரை கப் வேகவைத்த வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள்:
கலோரிகள்: 25 kcal
நார் சத்து: 2 gm
புரத சத்து: 1.5 gm
கார்போஹைடிரேட்: 5.8 gm
வைட்டமின் A : 460 IU (international unit)
வைட்டமின் C :13 mg
போலிக் அசிட் :36 .5 micrograms
கால்சியம் 50 mg
அயர்ன் : ௦.4 mg
பொட்டாஷியம் : 256 mg
மேக்னிஷியம் : 46 mg”இந்த வழ வழ கொழ கொழ வெண்டைக்காயை யார் சாப்பிடுவார்கள்?” என்று கேட்கும் ஆசாமியா நீங்கள்? இல்ல அண்ணாச்சி அப்படி இல்ல! உங்களுக்குத் தான் இந்த செய்தி:
வெண்டைக்காயின் வழ வழ கொழ கொழாவுக்குக்  காரணம் அதில் இருக்கும் gum மற்றும் pectin. இவை இரண்டும் ஜாம் மற்றும் ஜெல்லி களில் அவை கெட்டி படுவதற்காக பயன்படுத்தப் படுகின்றன. ஆப்பிள்,, ஆரஞ்சு பழங்களின் மேல் தோலில் பெக்டின் காணப் படுகிறது. இவையிரண்டும் சொல்யுபில் பைபர் (soluble fiber) அதாவது கரையக் கூடிய நார்சத்து.  இவை சீரம் கொலஸ்ட்ரால்(serum cholesterol) -ஐ குறைப்பதுடன் மாரடைப்பு நோய் வருவதையும் குறைக்கின்றன. வெண்டைக்காயில் பாதிக்கு மேல் சொல்யுபில் பைபர் இருக்கிறது. மறு பாதியில் இன் சொல்யுபில் பைபர் (insoluble fiber) அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாதது. இந்த வகை நார் சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் உண்டாகும் புற்று நோய் வராமல் காக்கிறது.
 • வெண்டைக் காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது.
 • வெண்டைக் காயில் இருக்கும் கோந்து (gum) கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்தி  பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.
 • எல்லா நோய்களும் பெருங்குடலில் தான் உருவாகின்றன. வெண்டைக் காயில் இருக்கும் நார் சத்துக்கள் நீரை உறிஞ்சி
  அதிக மலம் வெளியேற உதவுவதால் மலச் சிக்கல் தடுக்கப்படுகிறது.
 • பல உணவுப் பொருட்களில் நார் சத்து இருந்தாலும், வெண்டை காயில் இருக்கும் நார் சத்தானது ஆளிவிதை (flax seed) யில் இருக்கும் நார் சத்துக்கு சமமாக கருதப் படுகிறது.
 • கோதுமைத் தவிட்டில் இருக்கும் நார் சத்து வயிற்றை எரிச்சல் படுத்துவதுடன் குடலையும் புண்ணாக்கி விடுகிறது. ஆனால் வெண்டை காயில் இருக்கும் கொழ கொழ சத்து குடலுக்கு இதத்தை அளிப்பதுடன், வேண்டாத கழிவுகளை வெளியேற்றவும் உதவி செய்கிறது.
 • மேற் சொன்ன செயல்களைப் புரிவதால் இந்த அற்புதமான கறிகாய் பல நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கிறது.
 • எந்த விதமான நச்சுப் பொருட்களும் இதில் இல்லவே இல்லை. சாப்பிடுவதால் பக்க விளைவுகளும் கிடையாது. சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கிறது.
 • நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.

இதில் இருக்கும் போஷாக்குகள் முழுவதும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இதை கொஞ்சமாக சமைக்க வேண்டும். மிதமான தீயில் அல்லது ஆவியில் வேகவைப்பது நல்லது. சிலர் இதனைப் பச்சையாகச் சாப்பிடுகிறார்கள்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ( மேல் அடிக் காம்புகளை நீக்கிவிட்டு)ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.

கடைசியாக ஒரு வார்த்தை: நீங்கள் சில நோய்களுக் காக தினமும் மருந்து சாப்பிடுபவர் என்றால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின் இந்தக் குறிப்புகளைப் பின் பற்றவும். மொத்தத்தில் வெண்டை காய் சாப்பிடுவது நல்லது என்று சொல்லுவதுதான் இக் கட்டுரையின் நோக்கம். ஆனால் மருந்தாக பயன் படுத்த வேண்டுமானால் மருத்துவரை அணுகவும்

publishded in a2ztamilnadunews.com