யோகக் கலை என்றால் என்ன?

 

திரு ஜோதிஜி அவர்களின் ஆசான் பற்றிய பதிவுக்கு எனது வேண்டுகோள்:

 

அன்புள்ள ஜோதிஜி,

வணக்கம்.

 

நீங்கள் யோகக்கலை மற்றும் ஆசான் திரு கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய படம் (ஆவணப்படம்?) எடுப்பதைப்பற்றி எழுதியிருந்தீர்கள்.யோகக்கலை (நீங்கள் எழுதியிருப்பது போல யோகா கலை அல்ல) பற்றிய சில புரிதல்கள் தேவை. இந்தக்கலையை பற்றிய சில அடிப்படை விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

 

யோகம் ஆசனம் ஸ்திரம் சுகம் என்பார்கள்.

 

எந்த ஒரு யோகாசனம் செய்யும்போதும் – அதாவது ஆசனத்தில் நம் உடல் இருக்கும்போது – நமது நிலை ஸ்திரமாக இருக்கவேண்டும். உறுதியாக நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நமது உடல் எடையை நமது உறுப்புகளுக்கு சமமாக பிரித்து கொடுக்கத் தெரியவேண்டும். அப்போதுதான் இந்த ஸ்திரத் தன்மை வரும். இந்த ஸ்திரத்தன்மை வந்துவிட்டால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடல் லேசாக இருக்கும்.

 

நான் ஒரு ஆசனம் செய்யும்போது கால் சறுக்குகிறது; கை நடுங்குகிறது என்றால் என் ஆசிரியை உங்கள் உடல் எடையை நீங்கள் கை கால்களில் சமமாக விநியோகிக்கவில்லை என்பார். இதைப் புரிந்துக்கொண்டு செய்தால் கால் சறுக்காது; கை நடுங்காது. எங்கள் ஆசிரியை வகுப்பு முழுவதும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார். ஒவ்வொருவரையும் கவனித்து சரி செய்துகொண்டே இருப்பார்.

 

இரண்டாவதாக எந்த ஒரு ஆசனத்தில் இருந்தாலும் – காலைத் தூக்கி தலைமேல் வைத்தாலும், தலையைக் கீழே வைத்து சிரசாசனம் செய்தாலும் -அது எனக்கும் சுகமாக (comfortable) இருக்கவேண்டும் பார்க்கிறவர்களுக்கும் நான் ஏதோ கஷ்டப்பட்டு செய்வது போலவோ சர்க்கஸ் செய்வது போல இருக்கக்கூடாது. இந்த ஸ்திரம், சுகம் இரண்டும் யோகக்கலைக்கு மிகவும் முக்கியம்.

 

இதனாலேயே இந்தக் கலையை கற்றுத் தேர்ந்த ஒருவரின் மேற்பார்வையிலேயே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆசான் இரண்டு இடங்களில் தானே புத்தகத்தைப்பார்த்து செய்ய ஆரம்பித்ததாகச் சொல்லுகிறார், வீடியோவில். இது தவறான ஒரு செய்தியை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும். முடிந்தால் இதை எடிட் செய்துவிடுங்கள்.

 

இன்னொரு விஷயம்: ஆசான் செய்யும் ஆசனங்கள் எல்லாம் பலபல வருடங்களின் இடைவிடா பயிற்சி மூலம் வருவது. இப்படிச் செய்வதற்கான அடிப்படை இரண்டு விஷயங்கள் இருக்கின்றன யோகாவில். முதலாவது நீட்சி (streching) அடுத்து முறுக்குதல் (twisting). எந்த ஒரு ஆசனம் செய்வதற்கும் முன்னால் நமது உடலை தயார் செய்வது மிகவும் முக்கியம். அதற்குத் தான் இந்த நீட்சியும், முறுக்குதலும் தேவை.

 

சின்னக்குழந்தைகள் வெகு அனாயாசமாக கால் கட்டை விரலை எடுத்து வாய்க்குள் வைத்துக் கொண்டு விடுவார்கள், அவர்களிடம் இருக்கும் நெகிழ்வுத்தன்மை காரணமாக. நாமும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தோம். வயதாக ஆக, இந்த நெகிழ்வுத் தன்மை குறைகிறது. யோகாசனம் செய்வதால் இந்த இழந்த நெகிழ்வுத்தன்மையை மெல்ல மெல்ல மீண்டும் பெறலாம்.

 

நமது உடலுக்கு ஒரு தத்துவம் தான் அதாவது use it or lose it. எந்தவொரு அவயவத்தை நாம் பயன்படுத்தவில்லையோ அதை நாம் இழக்கிறோம். கால் வலிக்கிறது என்று சிலர் நடக்கவே மாட்டார்கள். முழங்கால் வலி என்று கீழே உட்காருவதையே தவிர்த்து விடுவார்கள். சில வருடங்களில் இரண்டுமே முடியாமல் போய்விடுகிறது.

 

அதேபோல எல்லோருக்கும் எல்லா ஆசனங்களும் செய்ய வராது. இதற்குக் காரணம் அவரவர்களுக்கு இருக்கும் நெகிழ்வுத்தன்மை (flexibility). நமக்கு ஏற்கனவே இருந்த நெகிழ்வுத்தன்மையை யோகாசனங்கள் மீட்டுத் தரும் – விடாமல் பயிற்சி செய்தால் மட்டும்.

 

ஹோமியோபதி மருந்து போலத்தான் யோகாசனங்களும் – நிதானமாகத்தான் பலன் கிடைக்கும். நிதானமாகத்தான் செய்ய வேண்டும். ஆசனங்களின் கடைசி நிலைக்கு நிதானமாகத்தான் செல்லவேண்டும். அதேபோல வெளியே வருவதும் நிதானமாகத் தான் வர வேண்டும். அதனாலோ என்னவோ நிதானமான எனக்கு இந்தக்கலையும் ஹோமியோபதி மருந்துகளும்  ரொம்பவும் பிடித்திருக்கிறது! இரண்டாலும் பலனும் காண்கிறேன். அவசர யுகத்தில் இந்த நிதானமான யோகக்கலையை நிறைய நபர்கள் கற்க வருகிறார்கள் – சில காலத்திற்குத்தான் பிறகு விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து செய்வதன் மூலமே இதன் நன்மையை உணர முடியும்.

 

இப்போது பவர் யோகா (Power Yoga) என்றெல்லாம் சொல்லுகிறார்கள். உடல் இளைப்பதற்கென்று யோகா என்றெல்லாம் விளம்பரப்படுத்துகிறார்கள். நிறைய காசும் பார்க்கிறார்கள்.

Guruji_nov2012

 

நான் கற்றுக் கொள்ளும் யோகாசனங்கள் திரு BKS ஐயங்கார் அவர்களால் முறைப்படுத்தப்பட்டவை. மைசூரைச் சேர்ந்த திரு ஐயங்காருக்கு இப்போது 96 வயது. பூனாவில் இருக்கிறார். இன்னும் திடமாக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். திரு ஐயங்காருக்கு வெளிநாட்டிலும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

 

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நெகிழ்வுத்தன்மை வயதாக ஆக குறையும். அப்படிப்பட்டவர்களுக்கு பயன்படுவதற்காக  திரு ஐயங்கார் சில பொருட்களை உபயோகப்படுத்தி செய்யும் ஆசனமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அவற்றை props (properties) என்று குறிப்பிடலானார். டேப் அல்லது பெல்ட், மரத்தால் ஆன செங்கல், யோகா நாற்காலி. (இன்னும் நிறைய இருக்கிறது) இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் என்னைப் போன்றவர்கள் ஸ்திரமாகவும், சுகமாகவும் ஆசனங்களைச் செய்ய முடியும். இதற்கான சில புகைப்படங்களை இணைக்கிறேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு props வைத்துக் கொண்டு யோகாசனம் செய்வோம். எங்கள் ஆசிரியை மிகத் திறமைசாலி. வேறு வேறு விதங்களில் எங்களை யோகாசனம் செய்ய வைத்து வகுப்பை ரொம்பவும் சுவாரஸ்யமாக்கி விடுவார். சில நாட்கள் பிராணாயாமம் மட்டுமே ஒரு மணி நேரம் செய்வோம்.

Yoga belts

 

சின்ன வயதுக்காரர்கள் மட்டுமே செய்யக் கூடிய ஆசனங்களை நாங்களும் (என்னைப்போன்றவர்களும் செய்யக் காரணம் திரு ஐயங்கார் தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளும், நமஸ்காரங்களும் உரித்தாகுக.

yogachairmontage4

 

உங்களது ஆவணப்படத்தில் இந்த விஷயங்களை எல்லாம் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்.

 

அன்புடன்,

ரஞ்சனி

திரு ஜோதிஜி அவர்களின் தளத்தில் படிக்க: அன்புள்ள ஆசான் 

 

 

யோகாசனம் பற்றி எனது வலைப்பதிவு தோழி திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதிய மின்னூல் இணைப்பு:

 

யோகாசனம் 

மரணம் என்பது என்ன?

kushwant singh

 

4tamilmedia.com – தளத்தில் இன்று பிரசுரம் ஆகியிருப்பது

20.3.2014 அன்று மறைந்த பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களின் Absolute Kushwant: The Low-Down on Life, Death & Most Things In-Between – என்ற  புத்தகத்திலிருந்து:

இறப்பு என்பதை நம் வீடுகளில் அவ்வளவாக பேசுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்ததுதானே – மரணம் என்பது வந்தே தீரும்; தவிர்க்க இயலாதது என்று. பின் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசுவது இல்லை என்று நான் வியப்பதுண்டு. உருது கவிஞர் யஸ் யகானா சாங்கேசி (Yas Yagana Changezi) வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘கடவுள் இருப்பதைநீ  சந்தேகிக்கலாம்; சந்தேகிக்காமல் இருக்கலாம். ஆனால் மரணம் என்பதன் நிச்சயத்தன்மையை நீ சந்தேகிக்க முடியாது’. மரணத்திற்கு ஒருவர் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.

 

இந்த 95வது வயதில் மரணத்தைப் பற்றி நான் நினைக்கிறேன். அடிக்கடி நினைக்கிறேன். ஆனால் அதை நினைத்து என் தூக்கத்தை இழப்பதில்லை. மறைந்து போனவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன். எங்கு இருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்? எங்கு இருக்கக்கூடும்? என்னிடம் விடைகள் இல்லை. எங்கு போகிறோம்? மரணத்திற்குப் பின் என்ன?

உமர் கய்யாம் சொல்லுகிறார் ‘எங்கிருந்தோ இந்த பூமியில் ஏன் என்று தெரியாமலேயே… மெல்ல ஓடும் நீர் போல…..’

‘அதோ ஒரு கதவு என்னிடம் திறவுகோல் இல்லை;

அதோ ஒரு திரை என்னால் ஊடுருவி பார்க்கமுடியவில்லை;

என்னைப் பற்றியும் போனவர்களைப் பற்றியும்

சின்ன சின்ன பேச்சு சில காலத்திற்கு

பிறகு பேச்சு நான், அவர்கள் யாரும் இருப்பதில்லை…..’

 

ஒருமுறை தலாய் லாமாவைக் கேட்டேன்: மரணத்தை ஒருவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று. அவர் தியானத்தை அறிவுறுத்தினார். மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. அது என்னை பயமுறுத்துவதும் இல்லை. மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்தைப் பற்றி நான் அதிகமாக நினைத்தாலும் அதை நினைத்து நினைத்து மாய்வதில்லை. மரணத்திற்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ளுகிறேன்.

 

அசதுல்லாகான் காலிப் சரியாகச் சொன்னார்:

‘வயது நாலுகால் பாய்ச்சலில் பிரயாணம் செய்கிறது;

யாருக்குத் தெரியும் அது எப்போது நிற்கும் என்று?

அதன் கடிவாளம் நம் கைகளில் இல்லை

நம் கால்களும் அதன் வளையத்தில் இல்லை’

 

என் வயதொத்தவர்கள், சமகாலத்தவர்கள் – இந்தியாவில், இங்கிலாந்தில், பாகிஸ்தானில் – எல்லோரும் போய்விட்டார்கள். இன்னும் இரண்டொரு வருடத்தில் நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. மரணத்திற்கு அஞ்சவில்லை; ஆனால் நான் பயப்படுவது ஒரு நாள் கண் தெரியாமல் போய்விட்டால்? வயதானதால் இயலாதவனாகிவிட்டால்? இப்படி ஒரு நிலையில் இருப்பதை விட இறப்பது மேல். ஏற்கனவே என் பெண் மாலாவிற்கு நான் பாரமாகவிட்டேன். மேலும் சுமக்க முடியாத பாரமாக விரும்பவில்லை.

 

நான் வேண்டுவது எல்லாம் மரணம் வரும்போது அது சடுதியில் வரட்டும்; அதிக வலி இல்லாமல், ஆழ்ந்த தூக்கத்திலேயே மறைவது போல. அதுவரை நான் வேலை செய்து கொண்டே ஒவ்வொரு நாளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ விரும்புகிறேன். இன்னும் நான் செய்து முடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் நான் ‘பெரிய அண்ணா’ (கடவுளை இப்படித்தான் குறிப்பிடுகிறேன்) விடம் சொல்ல விரும்புவது இது தான்: ‘நான் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை நீ எனக்காக காத்திரு’.

 

ஜெயின் தத்த்வத்தில் மரணத்தை கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நானும் இதை நம்புகிறேன். முன்பெல்லாம் உற்சாகம் குறைந்தால் நான் சுடுகாட்டிற்குப் போவதுண்டு. மனதை தூய்மைபடுத்தி, எனது மனவருத்தத்திற்கு சிகிச்சையாக இது இருக்கிறது.  பல வருடங்களுக்கு முன்பே எனக்காக நான் ஒரு கல்லறை வாசகம் எழுதினேன்.

இங்கே உறங்குகிறான் ஒருவன்

மனிதனையும், ஏன் இறைவனையும் கூட

சாடத் தயங்காத ஒருவன்

இவன் ஒரு பதர்,  இவனுக்காக உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள்

மோசமாக எழுதுவதை நகைச்சுவை என்று நினைத்தவன்

பாவி மகன் ஒழிந்தான் என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்

 

1943 ஆம் வருடத்திலேயே (எனது இருபது வயதுகளில் இருந்தேன் அப்போது) என்னுடைய நினைவுநாள் செய்தி எழுதினேன். பல வருடங்களுக்குப் பின் இது ‘இறப்பிற்குப் பின்’ என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் வெளியானது. என்னுடைய மறைவு ‘டிரிப்யூன்’ பத்திரிகையில் இப்படி வருகிறது:

முதல் பக்கத்தில் ஒரு சின்ன புகைப்படத்துடன்: ‘சர்தார் குஷ்வந்த் சிங் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஒரு இளம் விதவையையும், இரண்டு சின்னக் குழந்தைகளையும், ஏராளமான நண்பர்களையும், நேசித்தவர்களையும் விட்டுவிட்டுச் சென்று விட்டார், செய்தி அறிந்து சர்தாரின் வீட்டிற்கு வந்தவர்கள் தலைமை நீதிபதி, பல மந்திரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் உதவியாளர்கள்’.

 

என் மனைவி இறந்த போது மரணத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஒரு லோகாயுதவாதி. மதம் சார்ந்த சடங்குகளில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. நான் ஒரு தனிமை விரும்பி ஆதலால் என் நண்பர்கள், உறவினர்கள் என்னை சமாதனப்படுத்த வருவதை தவிர்த்தேன். மனைவி இறந்த அன்று இரவு தனிமையில் இருட்டில் எனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அந்த இரவுப் பொழுதை கழித்தேன். சிலசமயம் அடக்க முடியாமல் அழுதேன். வெகு சீக்கிரம் தேறினேன். ஓரிரு நாட்களில் எனது மாமூல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். விடியலிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உழைத்தேன். இனி தனிமையில்தான் வாழவேண்டும் என்ற நிதர்சனத்தை, காலி வீட்டில் எனது மீதி வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்ற நிலையை என் மனதிலிருந்து மறக்க இந்த உழைப்பு உதவியது. நண்பர்கள் வந்து எனது சமநிலையை கெடுப்பதற்குமுன் கோவாவிற்குச் சென்றுவிட்டேன்.

 

இறந்த பின் புதைக்கப்படுவதையே விரும்பினேன். எந்த மண்ணிலிருந்து வந்தோமோ அதே மண்ணுக்குப் போகிறோம், புதைக்கப்படுவதால். பஹாய் முறையில் நம்பிக்கை கொண்ட நான் இறந்த பின் என்னைப் புதைக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் ஒப்புக்கொண்ட அவர்கள், பிறகு ஏதேதோ சட்டதிட்டங்களுடன் வந்தார்கள். ஒரு மூலையில் புதைக்கப்பட்டு எனது புதைகுழி அருகே ஒரு அரச மரம் நடவேண்டும் என்றேன். இதற்கும் சரி என்றவர்கள் பிறகு வந்து எனது புதைகுழி ஒரு வரிசையின் நடுவில் இருக்குமென்றும், மூலையில் இருப்பது சாத்தியம் இல்லையென்றும் சொன்னார்கள். எனக்கு இது சரிவரவில்லை. இறந்தபின் எல்லாம் ஒன்றுதான் என்று தெரிந்தாலும் ஒரு மூலையில் புதைக்கப்படுவதையே விரும்பினேன். இன்னொன்றும் அவர்கள் சொன்னார்கள் நான் இறந்தபின் சில பிரார்த்தனைகளை சொல்வார்கள் என்று. இதற்கும் நான் ஒப்பவில்லை –  நான் மதத்தையோ, மதச் சடங்குகளையோ நம்பாதவன் என்பதால்.

 

நான் இப்போதைக்கு நல்ல ஆரோக்கியத்தில் இருந்தாலும் அதிக நாட்கள் என்னிடம் இல்லை என்று தெரியும். மரணத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மரணம் என்பது எனது பாவ புண்ணியங்களுக்கு தீர்ப்பு சொல்லும் நாள் என்பதையும், சுவர்க்கம் நரகம் இவற்றிலும் நம்பிக்கை இல்லை. மறுபிறவியிலும் நம்பிக்கை இல்லை. அதனால் மரணம் என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும்.  மரணமடைந்தவர்களைக் கூட நீ விடுவதில்லையா என்று என்னை விமரிசிக்கிறார்கள் சிலர். மரணம் ஒருவனைத் தூய்மைப்படுத்துவதில்லை. ஒருவர் ஊழல்வாதியாக இருந்தால் மரணத்திற்குப் பின்னும் அவரை நான் விடுவதில்லை; சாடுகிறேன்.

 

மரணம் என்பதன் இறுதிநிலையை ஏற்றுக்கொள்ளுகிறேன். மரணத்திற்குப் பின் நமக்கு என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவர் அமைதியாக மரணத்தைத் தழுவ நாம் உதவ வேண்டும். தான் வாழ்ந்த வாழ்க்கை, இந்த உலகம் இரண்டிலும் சமாதானம் அடைந்தவனாக முழுமை அடைந்தவனாக மரணத்தை தழுவ வேண்டும்.

 

எல்லாவற்றையும் விட மரணவேளையில் வருத்தங்களோ, மனக்குறைகளோ இல்லாதவனாக ஒருவன் இருக்க வேண்டும். பாரசீகக் கவிஞன் இக்பால் சொன்னது போல: ‘உண்மையான மனிதனின் அறிகுறி என்ன என்று என்னைக் கேட்டால் – மரணம் வரும்போது அவனது இதழில் புன்னகை இருக்க வேண்டும்!’

 

தமிழ் மொழியாக்கம், கட்டுரை ஆக்கம்: ரஞ்சனி நாராயணன் 

 

சரியாத்தான் சொன்னாரு குஷ்!

 

நிம்மதி சூழ்க 

எல்லாம் இன்ப மயம்

 

 four hundred

ஜோசியம் பார்ப்பதை அதிகம் விரும்பாதவள் நான். காரணம் என்ன என்பதற்கு இன்னொரு பதிவு போடவேண்டும். அதனால் இப்போது வேண்டாம். ஆனால் இரண்டுமுறை என் கணவருடன் (மிகுந்த நம்பிக்கை அவருக்கு) எங்கள் எதிர்காலம் பற்றி அறிய போயிருந்தபோது (எதற்கு என்பதற்கு இன்னும் இரண்டு பதிவுகள் போடலாம்!) நேர்ந்த அனுபவங்கள் இன்றைக்கும் எனக்கு வியப்பு அளிப்பவை.

 

முதலாம் முறை போயிருந்தபோது என் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர், ‘குருபலன் நன்றாகயிருக்கிறது. ஆசிரியராவீர்கள். புத்தகங்கள் எழுதுவீர்கள்’ என்றவுடன், வாய்விட்டு சிரித்தேன். புத்தகங்கள் படிப்பதைத் தவிர எழுதுவதை நினைத்துக்கூடப் பார்க்காத நேரம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லவேண்டும். அனுராதா ரமணனின் கதைகள் படிக்கும்போது இவரைப் போல எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஜோசியர் சொன்ன இரண்டுமே வெகு விரைவில் நடந்தது. ஆங்கிலம் பேச சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஆனேன். வகுப்புகளுக்கு வேண்டிய புத்தகங்கள் தயார் செய்தேன். மற்றவர்கள் உருவாக்கிய புத்தகங்களை மெருகூட்டும் பணியும் செய்தேன். ஜோசியர் இன்னொன்றும் சொன்னார்: ‘பள்ளிக்கூடம் தொடங்குங்கள். உங்கள் நேரம் நன்றாக இருப்பதால் மிகச் சிறப்பாக நடக்கும்’. அந்தத் தப்பை மட்டும் செய்யவில்லை!

 

அடுத்தபடியாக என் தோழி ஒருவர் சொன்னார் என்று ஒரு பெண்மணியைப் பார்க்கப் போனோம். அப்போது நான் ஆசிரியை ஆகவில்லை. ஆனால் நேர்முகத்தேர்வு முடிந்திருந்தது. அந்தப் பெண்மணி தன்னை Energy Specialist என்று சொல்லிக் கொண்டார். என்னைப் பார்த்தவுடன் கண்களை மூடிக் கொண்டார் (அவ்வளவு மோசமாக இருந்தேனா?) சில நிமிடங்கள் கழித்து சொன்னார்: நீங்கள் ஆசிரியப் பதவியில் மிகப்பெரிய வெற்றியடைவீர்கள்’ என்று. மூடிய கண்களில் என்ன தெரிந்தது என்று கேட்டேன். நாதஸ்வரம் இசை கெட்டிமேளத்துடன்  வந்தது என்றார். இரண்டாம் முறையும் சிரித்து இவரது கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில், இந்தமுறை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

 

இந்தப்பெண்மணி சொன்னதும் நடந்துவிடவே கொஞ்சம் ஜோசியத்தில் நம்பிக்கை வந்தது. தொடர்ந்து ஜோசியம் பார்க்காமல் நிறுத்திக் கொண்டேன்.

 

என் பெண்ணின் திருமணம் எனது முதல் கதையாக, மங்கையர் மலர் ஆண்டு இதழில் வந்தது. என் மகனின் திருமணம் எனது முதல் வலைப்பதிவாக மலர்ந்தது. எனது முதல் புத்தகம் வரும் ஆண்டு வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தச் செய்தியையும் கூடிய விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

2 two

எனது வலைபதிவிற்கு இரண்டு வயது நிரம்பியிருக்கிறது. இது எனது 400 வது வலைபதிவு.

 

இந்த இரண்டு சந்தோஷங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி எனக்கு. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

 

 

(தி)சின்ன (தி)சின்ன ஆசை!

 

jilebi

 

எங்கள் தெருவில் நாங்கள் தவறாமல் பார்க்கும் ஒரு ‘ஒன் மேன் ஷோ’ இது:  எண்ணெய் நிறைந்த பெரிய வாணலி; ஒருவர் நின்று கொண்டு விடாமல் ஜிலேபிகளை அதில் பிழிந்து பிழிந்து வெந்தவுடன் எடுத்து பக்கத்தில் பெரிய தட்டையான பாத்திரத்தில் இருக்கும் சர்க்கரை பாகில் முக்கி முக்கி எடுத்து வைத்துக் கொண்டிருப்பார். அவர் இப்படி எடுத்து வைப்பதற்குள் அப்படி காணாமல் போய்விடும் இந்த ஜிலேபிகள். பொன்னிறத்தில் – இல்லையில்லை – ஆரஞ்சு நிறத்தில் பளபளக்கும் இந்த ஜிலேபிகளை பார்க்கும்போதே ‘ஜொள்ளு’ – ஸாரி, வாயில் நீர் ஊறும். எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு முறையாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஆனால் என்னவர் ரொம்ப கோபித்துக் கொள்வார். ‘தெருவில் போற வர வண்டியெல்லாம் அந்த ஜிலேபி மேல புழுதியை வாரி அடித்துவிட்டு போகிறது. அத வாங்கி சாப்பிடணுமா? உனக்கு வேணும்னா சொல்லு, அகர்வால் பவன், இல்ல பாம்பே மிட்டாய்வாலா லேருந்து வாங்கிண்டு வரேன்….’ வாங்கி வந்து சாப்பிட்டும் இருக்கிறேன். ஆனாலும் புழுதி அடித்த ஜிலேபி ருசி எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.

bajji

அதேபோல தெரு திரும்பியவுடன் ஒரு சின்ன உணவகம். கையேந்திபவன் தான். அதன் வாசலில் ஒருவர் ட்கார்ந்து கொண்டு பஜ்ஜி செய்வார். ஆஹா! அந்த வாசனை! ஊரையே தூக்கும். ஒரு நாள் என்னவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு இங்கிருந்து பஜ்ஜி(கள்) வாங்கி வந்தேன். நன்றாகவே இருந்தது. சாப்பிட்ட பிறகும் ஒன்றும் ஆகவில்லை என்று நான் மகிழ்ந்திருந்த வேளை. மாடியில் இருக்கும் இவரது நண்பர் வந்தார். ‘நாராயணன், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்’, எனக்கு வலது கண் துடித்தது. ஆ! ஏதோ கெட்டசெய்தி எங்கிருந்து வரப்போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர் தொடர்ந்தார்: ‘ரெண்டு நாள் முன்னால உங்க வைஃப் தெருக்கோடில இருக்கற பஜ்ஜி கடையில பஜ்ஜி வாங்குறத பாத்தேன். அதெல்லாம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு நல்லதல்ல; என்ன மாவோ, எத்தனை நாள எண்ணையோ, யாருக்கு தெரியும்?…..சொல்லுங்க….’

 

வலது கண் துடித்ததன் அர்த்தம் புரிந்தது.

 

கிணற்றுக்குள் சொம்பு!

well

என் மாமியார் ரொம்பவும் ஆசாரம் பார்ப்பவர். திருமணம் ஆன புதிதில் சமையலறைக்குள் செல்ல வேண்டுமென்றால் கையை அலம்பிக்கொண்டுதான் நுழைய வேண்டும். இது என்ன பெரிய இதுவா என்கிறீர்களா? சற்று பொறுங்கள், நான் இன்னும் மெயின் கதைக்கே வரவில்லையே!

சமையலறைக்கு வெளியே ஒரு சொம்பு இருக்கும். தங்கம், வெள்ளி, பித்தளை, மண் இவற்றால் ஆன சொம்பு அல்ல; சிமென்ட் சொம்பு! என் வாழ்க்கையில் அப்போதுதான் முதன்முதலாக சிமென்ட் சொம்பு பார்க்கிறேன். குளியலறைக்குள் போய் அந்த சொம்பில்  இருக்கும் நீரில் கையை அலம்ப வேண்டும்.

சரி, கையை அலம்பியாயிற்று; உள்ளே போய் ஏதாவது எடுக்கலாம் என்றால், ‘இரு, இரு…’ என்று என் மாமியாரின் குரல் ஒலிக்கும் – அவர் எங்கிருந்தாலும் நான் சமையலறைக்குள் நுழைவது அவருக்குத் தெரிந்துவிடும். இது என்ன மாய மந்திரம் என்று இதுவரை எனக்குப் புரிந்ததே இல்லை!

அடுத்தாற்போல சமையலறையில் இருக்கும் குழாயில் கையை அலம்ப வேண்டும். அந்தக் குழாயை –  விரல்களால் அல்ல – மேல் கைகளால் இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு –– திறந்து கையை அலம்ப வேண்டும்.

ஒரொரு சமயம் இப்படியாவது கையை அலம்பி அலம்பி சமையலறையிலிருந்து ஏதாவது எடுக்க வேண்டுமா என்று தோன்றும். உள் பாத்திரங்கள், வெளி பாத்திரங்கள் என்று இருக்கும். உள் பாத்திரங்களை வெளியே கொண்டு வரக் கூடாது. வெளியில் இருப்பது உள்ளே போகக் கூடாது.  வெளியே குடிக்கும் நீருக்கு தனியாக ஒரு பாத்திரம். அதில் நீர் காலியாகிவிட்டால், சமையலறைக்குள் போய் சொம்பில் (இது வேறு சொம்பு – பித்தளை சொம்பு!)  இருக்கும் கொதித்து ஆறின நீரை மேலே சொன்ன முறையில் கையை அலம்பிக் கொண்டு எடுத்து வந்து வெளியில் இருக்கும் பார்த்திரத்தில் ஊற்ற வேண்டும். பொதிகை தொலைக்காட்சியில் வரும் ‘அத்தே! நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வரேன்’ விளம்பர மாமியார் போல என் மாமியாரும் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

எனக்கு சவாலாக இருந்தது அந்த சிமென்ட் சொம்பு தான். (இப்போது கூட அவ்வப்போது கனவில் வந்து ‘ஹா…..ஹா…..!’ என்று வீரப்பா ஸ்டைலில் சிரிக்கும் அந்த சொம்பு) திருமணம் ஆன அடுத்த நாள் ‘வாசல் தெளித்து கோலம் போடு’ என்றார் என் மாமியார். ‘கிணற்றிலிருந்து தண்ணி சேந்திக்கோ..!’ இது உபரி கட்டளை. கிணறு, தண்ணி இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு சேந்திக்கோ என்றால் இறைப்பது என்று அர்த்தம் புரிந்து கொண்டேன். (I am always good at reading in between the lines….!)

நான் கேட்க மறந்தது எதால் சேந்திக் கொள்வது? நான் மரியாதையாக (திரு திரு) முழிப்பதைப் பார்த்து ‘அந்த சிமென்ட் சொம்பு இருக்கு பாரு, அதில் சேந்திகோ..!’ என்றார் என் மாமியார்.

‘எனக்குதான் கிணற்றில் நீர் சேந்த வருமே! ஸ்ரீரங்கத்தில் என் பாட்டி அகத்தில் கிணற்றில் நீர் ‘சேந்தி’ இருக்கிறேனே’ என்று மனதிற்குள் தன்னைபிக்கை ஊற்றுப் பெருக்கெடுக்க, சிமென்ட் சொம்பை தூக்கிக் கொண்டு கிணற்றை நோக்கி நடந்தேன். தாம்பக் கயிற்றில் சொம்பைக் கட்டி உள்ளே இறக்கினேன். மேலே இழுத்தால் கனமே இல்லை. சிமென்ட் சொம்பில் இத்துனூண்டு தண்ணீர்!

அசோக்நகரில் எங்கள் வீடு. MIG அடுக்குக் குடியிருப்பு. 2 பெட்ரூம் வீடு. வீட்டின் முன்னாலும் பின்னாலும் நிறைய இடம் இருக்கும். சிமென்ட் சொம்பில் வந்த நீரைப் பார்த்து எனக்கு கண்ணில் நீர்! இத்தனூண்டு இத்தனூண்டாக எத்தனை முறை நீர் சேந்தி வாசல் தெளிப்பது?

‘மொதல் தடவ சேந்தினத கீழ கொட்டிடு…!’ பின்னாலிருந்து கட்டளை. ‘ரெண்டாவது தடவ தண்ணி எடுத்து வாசல் தெளி…!’

‘ராத்திரில கிணற்றை பூதம் காவல் காக்கும். அதனால மொத தண்ணியை கொட்டிடணும்…!’ காரணம் புரிந்தது.

‘இத்துனூண்டு தண்ணி தான் வரது…’ தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டேன். ‘இன்னொரு தடவ தண்ணி எடுத்துண்டு வா…!’

‘எத்தன தடவ?’

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ‘சரி பெரிய பக்கெட் எடுத்துக்கோ!’ ஒரு வழியாக பெரிய பக்கெட்டில் நீர் எடுத்து வாசல் தெளித்து எனக்கு தெரிந்த ‘மாடர்ன் ஆர்ட்’ கோலத்தைப் போட்டு முடித்தேன்.

‘புள்ளிக் கோலம் வராதா?’

‘வராது…’

அரிச்சந்திரனின் தங்கை நான்!

ஒரு நாள் காலை எழுந்திருக்கும்போதே தூக்கமான தூக்கம். முதல் நாள் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வந்ததன் விளைவு.

‘ஆவ்வ்வ்….!’ என்று கொட்டவி விட்டுக் கொண்டே சிமென்ட் சொம்பை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கினேன். மேலே இழுத்தால் சிமென்ட் சொம்பு காணோம்! அய்யய்யோ!

சட்டென்று தூக்கம் கலைந்து, கயிற்றைப் பார்த்தால் சொம்பின் கழுத்து மட்டும் கயிற்றில்!  தூக்குப்போட்டுக் கொண்டு விட்டதோ? சொம்பு கிணற்று சுவற்றில் பட்டு உடைந்து விட்டது. தூக்கக்கலக்கத்தில் எனக்கு இது உறைக்கவே இல்லை!

மாமனார் வேறு ரொம்ப கோபக்காரர். என்ன செய்வது? கயிற்றை மறுபடி கிணற்றில் இறக்கிவிட்டு – சொம்பின் கழுத்துடன் தான் – ஆபத் பாந்தவா, அனாத ரக்ஷகா என்று கணவரிடம் ஓடி – இல்லையில்லை – நடந்து தான் – போய் சொன்னேன்.

ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு சொன்னார்: ‘ அந்தக் (சொம்பின்) கழுத்தையும் கிணற்றில் போட்டுவிடு. அம்மாவிடம் சொம்பு கிணற்றுக்குள் விழுந்துடுத்து அப்படின்னு சொல்லிடு’ என்றார்.

மாமியாரிடம் போய் சொன்னேன் ‘சொம்பு கிணத்துக்குள் விழுந்துடுத்து!’ நான் சொன்னது மாமனாரின் காதிலும் விழுந்துவிட்டது.

மாமனார் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தார். மாமியார் சொன்னார் : ‘புது பொண்ணு; விடுங்கோ!’

அப்பாடி பெரிய ரிலீப். மாமனார் மாமியார் கோவிச்சுக்கலை என்பதற்காக இல்லை.

NO MORE சிமென்ட் சொம்பு!

பாவம் அந்த சொம்பு. நான் கரித்து கொட்டியதிலேயே தற்கொலை பண்ணிண்டுடுத்தோ?

well 1

ராகிங் – ஆன்லைன் தீர்வு

ragging image

 

ராகிங் என்பது கல்லூரிகளில் புது மாணவர்கள் சேரும்போது பழைய மாணவர்கள் – அதாவது சீனியர்ஸ் என்று அழைக்கப்படுபவர்கள் – செய்யும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு மூலம் புது மாணவர்கள் தங்களது பயம் நீங்கி பழைய மாணவர்களுடன் சுலபமாகப் பழக முடியும். இதுவே இந்த விளையாட்டின் உண்மையான நோக்கம்.

 

இந்த விளையாட்டு எல்லைமீறிப் போகும் போது பல புது மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குப் போகிறார்கள். சில சமயங்களில் கொலை செய்யும் அளவிற்கும் மாணவர்களிடையே தீராத கோவம், பழி வாங்கும் மனோ நிலையையும் இந்த ராகிங் உண்டு பண்ணியிருக்கிறது.  நாவரசுவை அவரது பெற்றோர்கள் மட்டுமல்ல, நாமும் சுலபத்தில் மறக்கமுடியாது.

 

எந்த ஒரு விஷயமுமே எல்லை மீறிப் போகும்போது அபாயகரமாகிறது. எந்தக் காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகள் இப்படிப்பட்ட அவமானத்திற்கு ஆளாகக் கூடாது. இது சரியல்ல. இது மனிதத் தன்மையும் அல்ல. சட்டத்தை மீறிய செயல் இது.

 

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதீத நம்பிக்கை வைக்கிறார்கள், தங்கள் குழந்தைகள் இந்த அத்துமீறிய விளையாட்டை விளையாட மாட்டார்கள் என்று. ஆனால் இன்னொருவகை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வந்து இதுபோல கல்லூரியில் தன்னை யாரோ ‘ராக்’ செய்தார்கள் என்று சொன்னால் உடனே பயந்து போய் ‘நீ ஒன்றும் சொல்லாதே, எதிர்த்துப் பேசாதே, எதுவும் செய்யாதே, பேசாமல் இரு’ என்று ராகிங்கை பொறுத்துக் கொள்ளும்படி சொல்லுகிறார்கள்.

 

இந்த விளையாட்டில் ஈடுபடும்படி சொல்லாவிட்டாலும், இதைப் பொறுத்துக் கொள்ளச் சொல்வது நிச்சயம் சரியல்ல. பல பெற்றோர்கள் இதைபோல தப்பான அறிவுரை கொடுத்து பின்னால் வருத்தப் படுகிறார்கள்.

 

இப்போது இந்த அத்துமீறல் ராகிங்கிற்கு ஆன்லைனில் தீர்வு காண ஆன்டி-ராகிங் மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.

 

EMAIL: helpline@antiragging.in

 

ANTI RAGGING CALL CENTRE NUMBER IS: 1800 180 5522

 

தகவல் உதவி: திரு அனந்தநாராயணன்

கையால் சாப்பிட வாங்க!

eating with hand

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ‘சினேகிதி’ ஜூலை இதழில் வெளியான கட்டுரை.

 

இப்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் கையால் சாப்பிடுவது பத்தாம்பசலித்தனம், பழங்கால வழக்கம், ஆரோக்கிய குறைச்சல், நாகரீகமில்லாத செயல் என்று கருதப் படுகிறது.

 

ஆனால் கையால் சாப்பிடும் பழக்கம் நம் உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்திற்கும், ஆன்மாவிற்கும் வலுவூட்டும் என்கிறது ஒரு பழைய சொல்வழக்கு.

 

 

இப்போது பல வீடுகளில் கையால் சாப்பிடுவதைத் தவிர்த்து ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள்.

 

ஏன் நம் முந்தைய தலைமுறை கையால் சாப்பிட்டு வந்தார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆயுர்வேதத்திலிருந்து இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. வேத காலத்து மக்களுக்கு நம் கைகளில் இருக்கும் வல்லமை தெரிந்திருந்தது.

 

கைகளினால் பல்வேறு முத்திரைகள் காண்பிக்கும் பழக்கம் பரத நாட்டியத்தில் உண்டு. அதேபோல தியானம் செய்யும்போதும் விரல்களை மடக்கியும், நீட்டியும் வேறு வேறு விதமான முத்திரைகளுடன் அமருவது வழக்கம். இது போன்ற முத்திரைகளினால், அவற்றில் இருக்கும் நன்மைகளை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் கையினால் சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம்.

 

நமது செயல்களுக்கு கைகள் தான் மிகச்சிறந்த உறுப்பு. வேதத்தில் வரும் ஒரு இறைவணக்கம் இதை சொல்லுகிறது. காலையில் எழுந்தவுடன் ‘கர தரிசனம்’ செய்ய வேண்டும். அப்போது கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

 

‘கராக்ரே வசதே லக்ஷ்மி; கர மூலே சரஸ்வதி; கர மத்யே து கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’

 

‘நமது கைகளில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். கைகளின் மூலையில்  சரஸ்வதி தேவி; கைகளின் நடுவில் கோவிந்தன் இருக்கிறான். இதை ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே சொல்ல வேண்டும்.

 

அன்றைய நாள் நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஸ்லோகம் தருகிறது.

 

நம் கைகள், கால்களின் வழியாகத்தான் பஞ்சபூதங்களும் நம் உடம்பில் நுழைகின்றனவாம். ஒவ்வொரு விரலும் இந்த ஐம்பூதங்களின் நீட்சிகள் என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது.

 

நமது கட்டை விரல் அக்னி. சின்னக் குழந்தைகள் விரல் சூப்புவதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களால் உடல்ரீதியான செயல்கள் செய்ய முடியாத போது, உண்ட உணவு செரிக்க இயற்கை கட்டை விரலை சூப்புவதன் மூலம் அவர்களின் செரிமானத்திற்கு இப்படி உதவுகிறது.

 

ஆட்காட்டி விரல் வாயு. நடுவிரல் ஆகாசம். (இதையே ஈதர் என்கிறார்கள். அதாவது மனித உடலில் உள்ள செல்களின் நடுவில் இருக்கும் வெற்றிடங்கள்.) மோதிர விரல் ப்ருத்வி (பூமி). சுண்டு விரல் நீர்.

 

ஆக ஒவ்வொரு விரலும் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. விரல்களிலேயே செரிமானம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. கையால் உணவை அள்ளி எடுக்கும்போது ஐம்பூதங்களின் ஆற்றலும் தூண்டப் படுகிறது. அக்னி செரிமான நொதிகளை சுரக்க உதவுகிறது.  செரிமானம் தூண்டப் படுவதுடன், உண்ணும் உணவின் சுவை, தன்மை, வாசனை முதலிய அம்சங்களும் அதிகரித்து  உணவை நன்கு அனுபவித்து ருசித்து உண்ணமுடிகிறது.

 

நம் வீட்டில் அந்தக் காலத்துப் பெரியவர்கள்  உணவுப் பொருட்களை அளக்க ஆழாக்கு, கரண்டி அல்லது ஸ்பூன் பயன்படுத்த மாட்டார்கள். ‘ஒரு பிடி அரிசி, ஒரு சிட்டிகை உப்பு,  சின்ன கோலி அளவு புளி’ என்று கை விரல்களாலேயே அளவு காண்பிப்பார்கள். புட்டு மாவிற்கு பதம் சொல்லும்போது கையால் பிடித்தல் பிடிபடவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும் என்பார்கள். வெல்லப்பாகுப் பதமும் இரண்டு விரல்களால் கரைந்த வெல்லத்தைத் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம், இரண்டு கம்பிப் பதம் என்பார்கள்.

 

கெட்டியான உணவுப் பொருளோ, அல்லது திரவப் பொருட்களோ அவற்றை அளக்க, 6 விதமான கையளவுகள் இருக்கின்றன.

 

சின்ன வயதில் அம்மா கையால் கலந்து நம் கையில் சாதம் போடுவாள். அதில் சின்னதாக ஒரு குழி செய்து அதற்குள் குழம்பு விட்டுக் கொண்டு சாப்பிடுவோமே, அந்த ருசி இன்னும் நாவில் இனிப்பதற்குக் காரணம் அம்மாவின் கை ருசி தானே?

 

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் சாப்பிடுவோமே, நினைவிருக்கிறதா? கல்சட்டியில்  இரவு நீர் ஊற்றப்பட்ட சாதத்தில்  காலையில் உப்பு, மிளகாய், துளி பெருங்காயம்  நுணுக்கிப் போட்டு  நீர் மோர் ஊற்றி பாட்டி தரும் ஆரோக்கிய பானம் சாதேர்த்தம் (சாதமும் நீரும் கலந்த திரவம்) அது நமது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதையும் குளிரப் பண்ணுமே, அதற்குக் காரணம் உப்பு மிளகாய் பெருங்காயம் மட்டுமா? இல்லையே, பாட்டியின் கை மணமும் அதில் சேர்ந்திருப்பதால் தானே?

 

 

இட்லிக்கு அரைத்து வைக்கும்போது என்னதான் அரவை இயந்திரம் அரைத்தாலும் கடைசியில் நம் கைகளால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலந்து வைக்கிறோம், இல்லையா? அடுத்தநாள் காலையில் பொங்கி இருக்கும் மாவைப் பார்த்து நம் மனமும் பொங்கி, இன்றைக்கு மல்லிகைப் பூ போல இட்லி என்று பூரிக்கிறோமே!

 

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நீரை சிறிது சிறிதாக கொட்டி, மாவை கைகளால் நன்றாக அளைந்து, உருட்டி  பிசையுங்கள். நீங்கள் அதிக  நேரம் பிசையப் பிசைய மிக மிக மிருதுவான சப்பாத்திகள் வரும். முக்கியமாக ஃபூல்கா சப்பாத்திக்கு கையால்தான் கலக்க வேண்டும். அப்போதுதான் நெருப்பில் நேரிடையாக சப்பாத்திகளைப் போடும்போது அவை உப்பும்.

 

பழைய விஷயங்கள் என்றாலே ஒரு மாதிரி பார்த்து ‘இப்போ இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க, யாராவது கைகளை பயன்படுத்தி ஏதாவது செய்கிறார்களா சொல்லுங்க’ என்பவர்களுக்கு:

 

6 விதமான கையளவுகள் பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடியபோது ஒரு காணொளி கிடைத்தது.

 

அதில் அரிசோனா மாநில பல்கலைகழக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் பணி புரியும்  திருமதி சிமின் லேவின்சன் என்ற பெண்மணி நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை ஒருவேளைக்கு எந்த அளவில் சாப்பிடுவது என்பதை நமது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டு விளக்கினார். ரொம்பவும் வியப்பாக இருந்தது.

 

மாவுப்பொருள்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்? கை விரல்களை மடக்கிக் காட்டுகிறார்: ஒரு கைப்பிடி;

பழங்கள்: கையை விரித்து ஒரு கையளவு;

பச்சை காய்கறி, கீரைவகைகள் இரண்டு கைகளையும் விரித்து சேர்த்து வைத்து இரண்டு கையளவு;

கொழுப்பு: (வெண்ணை, நெய், எண்ணெய்) கட்டை விரலின் நுனியிலிருந்து கட்டைவிரலின் பாதி வரை;

சீஸ்: முழு கட்டைவிரலின் அளவு – ப்ரோடீன் இருப்பதால்.

திரவங்கள்: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் விரித்து ஒரு டம்ளர் அளவு என்கிறார்.

 

காணொளி இணைப்பு: http://usatoday30.usatoday.com/video/measuring-food-with-the-palm-of-your-hand/2308102638001

 

பாருங்கள், இந்த விஷயங்களை நம் முன்னோர்கள் என்றைக்கோ செயல் படுத்தி இருக்கிறார்கள்.

 

பழைய விஷயங்கள் இவற்றில் என்ன இருக்கின்றன என நாம் ஒதுக்கும் பலவற்றில் நிறைய விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மறைந்து இருக்கின்றன. இவற்றை அறிந்து கொண்டு நம் வாழ்வை சீராக அமைத்துக் கொள்வோம்.

 

இந்த காணொளியையும் காணுங்கள்.

இந்திய உணவை எப்படி கையால் எடுத்து சாப்பிடுவது என்று விளக்குகிறார்கள்!

புதிய தொடர் ஆரம்பம்

health image

 

போன மாதம் தும்கூர் போயிருந்தேன். கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருத்துவரிடம் போனேன். கூட்டமோ கூட்டம். உட்காரக் கூட இடம் இல்லை. எனக்குக் கிடைத்த டோக்கன் எண் 21. ‘இப்போதுதான் 9 ஆம் டோக்கன் உள்ளே போயிருக்கு’ என்றார் அங்கே காத்திருந்த ஒரு பெண்மணி. மருத்துவ மணிக்குள்ளேயே இருந்த  மருந்துக் கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு, ‘இங்க வாங்கம்மா’ என்று சொல்லி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டு உட்காரச் சொன்னார். வயதானால் இது ஒரு சௌகரியம்!

9 ஆம் நம்பர் வெளியே வந்தார். மிகவும் சிறிய வயது. காலில் ஏதோ அடி. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து வகைகள் ஒவ்வொன்றிலும் 5 கொடுங்கள் போதும் என்று வாங்கிக் கொண்டார். வசதி இல்லாதவர், அதிகம் படிக்காதவர் என்று அவரது நடை உடை பாவனைகளிலிருந்தே தெரிந்தது. பாவம் என்ன உடம்போ என்று நினைத்துக் கொண்டேன்.

ஒவ்வொருவராக மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்து, மருந்துக் கடைக்காரரிடம் மருத்துவர் சொன்ன மருந்துகளில் பாதி அளவே வாங்கிக் கொண்டு போனார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. சில மருந்துகள் மருத்துவர்கள் சொல்லும் அளவிற்கு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் – குறிப்பாக anti- biotic மருந்துகள்.

இவர்களுக்கெல்லாம் யார் சொல்வது இதை என்று ஆயாசம் ஏற்பட்டது.

 

நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம் தேவை. என்னால் முடிந்தது நான் படிக்கும் மருத்துவக் கட்டுரைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது.

நான்கு பெண்கள் தளத்தில் வரும் புதன்கிழமையிலிருந்து மருத்துவம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும், செய்திகளையும் எழுத இருக்கிறேன்.

இந்தக் கட்டுரைக்கான முன்னுரையை கீழே இணைப்பில் படிக்கலாம்.

நோய்நாடி நோய்முதல் நாடி

அப்பாவாகப் போறீங்களா?

happy father's day!

குழந்தை பிறக்கப் போகிறது என்றால் எல்லோருமே தாயாகப் போகும் பெண்களுத்தான் யோசனை சொல்வார்கள். தந்தையாகப் போகும் ஆண்களை யாரும் ‘கண்டு’ கொள்ளவே மாட்டார்கள். அவர்களும் ‘பாவம்’ தானே!

ஒரு பெண்ணுக்கு இருக்கக் கூடிய பயங்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் இருக்கும். வெளியில் காட்டிக் கொள்வதில்லை அவ்வளவுதான்!

குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார்; ஆணா, பெண்ணா தெரியாது; நல்லவரா கெட்டவரா தெரியாது. யாரைப்போல இருப்பார் தெரியாது; சாதுவாக இருப்பாரா, ரொம்பவும் demanding ஆக இருப்பாரா தெரியாது. தன்னைப் போல இருப்பாரா, தன் மனைவியைப் போல இருப்பாரா, தெரியாது.

இப்படி எதுவுமே தெரியாத ஒருவரை எதிர்பார்த்து 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும்! அப்பாவாகப் போகிறவர்களுக்கு என்ன ஒரு சோதனை!

பார்க்கிறவர்கள் எல்லோரும் ‘அப்பாவாகப் போறியாமே, வாழ்த்துக்கள்’ என்று கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு போய்விடுவார்கள். யாரிடம் தனது பயங்களைக் சொல்வது? முதலில் தான் பயப்படுவது சரியா? ஆண் என்றால் வாய்விட்டு அழக்கூடாது; அதேபோல பயப்படவும் கூடாது; ஆண் என்றால் வீரமாக இருக்க வேண்டும், இல்லையா? எல்லா ஆண்களுக்கும் இந்த பயங்கள்  இருக்குமா? மனைவியிடம் சொல்ல முடியாது. அவள் கருத்தரித்த நாளிலிருந்து ஒரு புதிய உலகத்தில் இருக்கிறாள். அவளும் அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் மட்டுமேயான ஒரு உலகம்! அதில் இனிமேல் தனக்கு இடம் உண்டா?

ஆண்களின் பயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்:

உறவு பற்றிய பயம்:

பிறக்கப் போகும் குழந்தை தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை பலப் படுத்துமா? இல்லை இடைவெளி உண்டு பண்ணுமா? இனி தன் மனைவி தன் மேல் முன் போலவே அக்கறை காட்டுவாளா? இல்லை குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து தன்னை பின்னுக்குத் தள்ளி விடுவாளா? இத்தனை நாள் மனைவியுடன் தான் அனுபவித்து வந்த உறவு என்னாகும்?

உண்மையில், குழந்தை உங்கள் இருவருக்கும் ஒரு பாலமாகத் தான் இருக்கும். உங்கள் உறவு இன்னும் பலப்படும். உங்கள் உறவில் புதிய பரிமாணம் உண்டாகும். இருவரும் சேர்ந்து குழந்தையை கவனிக்கும்போது உங்களிருவருக்கும் இடையே புதிய புரிதல் ஏற்படும்.

இரவு பகல் என்று குழந்தையை பார்த்துக் கொண்டாலும், உங்கள் மனைவி உங்களை இப்போது இன்னும் அதிகமாகக் காதலிக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களைவிட குழந்தைக்கு அவள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனைவி என்ற நிலையிலிருந்து அம்மா என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறாள். அவளுக்கும் அந்த நிலை புதிது. அதற்கும் அவள் தயாராக வேண்டும். உங்கள் இருவரின் தேவையையும் அவள் பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தை 100% அவளைச் சார்ந்து இருக்கிறது. அதனால் அவள் தன் நேரத்தில் பெரும்பாலும் குழந்தையுடன் செலவழிக்க நேரலாம்.

பணவசதி:

‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்று இருக்க முடியாது. வேலைக்குப் போகும் மனைவி என்றால், திருமணம் ஆனவுடன் இரட்டை வருமானம் என்று பழகி இருக்கும். இப்போது ஒருவரின் வருமானத்தில் இன்னும் ஒரு நபரையும் கவனித்துக் கொள்வது என்பது கொஞ்சம் சிரமமே. குழந்தை பெற்றுக் கொள்ளத் தீர்மானித்த அன்றிலிருந்து குழந்தைக்கு என்று இருவருமாக சேமியுங்கள். கருத்தரித்த நாளிலிருந்து மனைவிக்கும் செலவழிக்க வேண்டியிருக்கும். சாதாரண பிரசவத்திற்கே இப்போதெல்லாம் ஒரு ‘ல’ கரம் தேவைப்படுவதாக சொல்லுகிறார்கள். மனைவி வேலைக்கு செல்பவராக இருந்தால் கொஞ்சம் மூச்சு விட முடியும். பிரசவத்திற்கு முன் எத்தனை மாதங்கள் வரை அவரால் வேலைக்குப் போக முடியும், பிரசவித்த பின் எப்போது திரும்ப வேலையில் சேர முடியும் என்பதையெல்லாம் கருத்தரித்த உடனேயே சொல்ல முடியாது. அதனால் சேமிப்பு முதலிலிருந்தே ஆரம்பிப்பது மிக மிக அவசியம்.

பிரசவத்தின் போது மனைவியுடன் இருக்க வேண்டுமா / முடியுமா?

நம் நாட்டில் பிரசவத்தின் போது மனைவியுடன் கணவனும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலை இன்னும் வரவில்லை. நம் மருத்துவர்களும்  கட்டாயப்படுத்துவது இல்லை. அதனால் பயம் தேவையில்லை. இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போகும் இளைஞர்களுக்கு அங்கு போனவுடன் தைரியசாலிகளாகிவிடுகிறார்கள்.

மனைவி படும் வலியைத் தாங்குவதை விட, அந்தச் சமயத்தில் வெளியேறும் இரத்தத்தைப் பார்க்க அசாத்தியமான மனோதிடம் வேண்டும். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் மறுத்து விடுங்கள்.

பிறக்கப் போகும் குழந்தைக்கோ மனைவிக்கோ ஏதாவது  நேர்ந்துவிடுமோ என்ற பயம்.

மனைவியின் ஆரோக்கியம், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் இரண்டையும் பற்றி மருத்துவரிடம் சரியான முறையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் மனைவியுடன் மருத்துவரைப் பார்க்க செல்லுங்கள். உங்களுக்கு வரும் எல்லா சந்தேகங்களையும் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

சிலருக்கு தனக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று கூட பயம் வரலாம். அனாவசிய பயங்கள் வேண்டாம்.

பெண் மருத்துவர், பெண் நோய்கள், பெண் மருந்துகள் பற்றிய பயம்

இந்த மாதிரியான பயங்களுக்கு முக்கிய காரணம் கருத்தரித்தல், பிரசவம், குழந்தை பிறத்தல் இவை பெண்களுக்கு மட்டுமே என்று நினைத்து பல ஆண்கள் ஒதுங்கி விடுவதுதான். அல்லது வீட்டிலிருப்பவர்கள் இதெல்லாம் ‘பொம்பளைங்க சமாச்சாரம்’ என்று சொல்லி கணவன்மார்களை ஒதுக்கிவிடுவார்கள்.

ஆனால் இன்றைய இளம் தந்தைமார்கள் இதைபோல ஒதுங்கி இருப்பதில்லை என்பது ஆறுதலான விஷயம்.

புதிதாக பெற்றோர் ஆகப்போகிறவர்களுக்காக  பயிற்சி முகாம்கள் சில மருத்துவ மனைகளில் நடத்துகிறார்கள். பிரசவம் என்பது என்ன, எப்படி குழந்தையை தூக்க வேண்டும், எப்படி உடை, டயபர் மாற்ற வேண்டும், எப்படி குழந்தையை தூங்கப் பண்ணுவது என்றெல்லாம் சொல்லித் தருகிறார்கள் இந்தப் பயிற்சி முகாம்களில். மனைவியை மட்டும் அனுப்பாமல், நீங்களும் சென்று எல்லாவற்றையும் பார்த்து வாருங்கள்.

பிரசவம் பற்றிய காணொளிகளை மனைவியுடன் உட்கார்ந்து கொண்டு பாருங்கள். அவள் சாப்பிடும் மருந்து, ஆகாரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  அவளுக்கு எல்லாவிதத்திலும் உதவுங்கள்.

மருத்துவ மணிக்குப் போகும் முன் என்னென்ன தேவை என்று நீங்களும் சேர்ந்து உட்கார்ந்து எல்லாவற்றையும் தயார் செய்யுங்கள்.

வெளியூரில் இருந்தால் விடுமுறை எடுத்துக் கொண்டு பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருந்து அவளை மருத்துவ மனைக்கு அழைத்துப் போகலாம்.

தாய் ஆவது எப்படி ஒரு பெண்ணுக்கு முழுமையை கொடுக்கிறதோ அதேபோலத்தான் தந்தை ஆவதும் ஆணுக்கு வாழ்வில் புதிய உறவினை அறிமுகப் படுத்துகிறது.

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

 

ஒரு தந்தையின் எண்ணங்கள்: திரு நிக்கி ஜாக்சன் அவர்களின் உணர்வுகளைப் படியுங்கள்