நிக்கிமோ நிகாடோ

தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் பெண் ஒருவர், சீனப்பிரதமர் Xi Jinping அவர்களின் பெயரை இலெவன் (11) Jinping என்று படித்ததால் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று. படித்தவுடன் வாய்விட்டு சிரித்துவிட்டேன். அவர் என்ன செய்வார் பாவம்? Xi –ஐப் பார்த்தவுடன் அவருக்கு பள்ளியில் படித்த ரோமன் கணித எண் நினைவிற்கு வந்திருக்கிறது செய்தியை தயாரித்த மகானுபாவராவது அந்தப் பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் – சீனப்பிரதமரின் இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று.

சீனர்கள் பெயர் வைக்கும் முறை தெரியுமா? ‘குழந்தை பிறந்தவுடன் ஒரு தட்டை (plate) கீழே போடுவார்களாம். அது போடும் சத்தத்தை வைத்து ‘டிங்….டாங்..பங்’ அல்லது ‘தங்….கிங் …சங்’ என்று பெயர் வைப்பார்களாம். இந்தப் பிரதமர் பிறந்தவுடன் அவரது அம்மா கீழே போட்ட தட்டு ஜீ…ய் என்று சுற்ற ஆரம்பித்து ஜிங்….பிங் என்று நின்றுவிட்டதோ என்னவோ?

நமக்கு எப்படி அவர்கள் பெயர் வாயில் நுழையவில்லையோ, அதேபோலத்தான் நம் பெயர்களும் அவர்களுக்கு வாயில் நுழையாது போலிருக்கு. சீனர்கள் மட்டுமில்லை; வெளிநாட்டுக்காரர்கள் எல்லோருக்குமே நம் பெயர்கள் விசித்திரம் தான். இல்லையென்றால் என் மகனுக்கு நான் அருமையாக வைத்த ‘மாதவன்’ என்ற பெயர் அவனது வெளிநாட்டு சகாக்களால் ‘maddy’ ஆகியிருக்குமா? நாராயணன் என்ற பெயர் நட்டு-வாகியிருக்குமா?

இதனாலோ என்னவோ வெளிநாட்டிலிருக்கும்  நம்மவர்கள் அங்கு குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டுக்காரர்கள் வாயில் நுழையும் பெயராக தேடுகிறார்கள். எனது மகனின் நண்பனின் முதல் குழந்தையின் பெயர் சியா. இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது என்றவுடன் நான் கேட்டேன்: ‘குழந்தையின் பெயர் ‘மியா(வ்)?’ என்று!

எனது வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பாக கொரியன்ஸ் இந்தப் பிரச்னையை அழகாக சமாளிப்பார்கள். அவர்கள் நிஜப்பெயரை சொல்லவே மாட்டார்கள். ஜேம்ஸ், ஜான், மேரி என்று நமக்குத் தெரிந்த பெயராகச் சொல்லிவிடுவார்கள். மங்கோலியாவிலிருந்து ஒரு மாணவர். தனது பெயரைச் சொல்லிவிட்டு ‘Teacher! you can call me NUTS!’ என்றவுடன் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். சிறிது நேரம் நான் ஏன் இப்படிச் சிரிக்கிறேன் என்று புரியாமல் விழித்துவிட்டு அவரும் அசடு வழியச் சிரித்தபடியே வகுப்பில் உட்கார்ந்து கொண்டார்.

ஒரு பெயரை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை நான் முதன்முதலில் தெரிந்து கொண்டது 9 ஆம் வகுப்பில் படித்த போதுதான். பள்ளி அப்போதுதான் கோடைவிடுமுறைக்குப் பின் திறந்திருந்தது. எங்கள் வகுப்பிற்கு புதிதாக ஓர் பெண் வந்திருந்தாள். நாங்களாகப் போய் அவளுடன் பேசவில்லை. வகுப்பு ஆரம்பித்து சிறிது நேரத்தில் எங்கள் வகுப்பு ஆசிரியர் லில்லி கான்ஸ்டன்டைன் ஆசிரியர் வந்தார். அவர் கையில் ஒரு காகிதம். நாற்காலியில் உட்கார்ந்தவர் ‘புது அட்மிஷன் யாரு?’ என்றார். இந்தப் பெண் மெதுவாக எழுந்து நின்றாள். தன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்து  ‘பசுபாதம், (வகுப்பு முழுவதும் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்தது) இன்னா பேருடி இது? பசுபாதமா? cowfoot? உம்பேரு இன்னா?’ என்றார். பாவம் அவள். கொஞ்சம் திணறியபடியே, ‘எம்பேரு பாசுபதம், டீச்சர்,’ என்றாள். ‘ஏண்டி வேற பேரே கிடைக்கலையா? முருகன், சீனிவாசன் அப்படின்னு?’ ‘டீச்சர், அதெல்லாம் ஆம்பளைங்க பேரு….!’ கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குரல்! ‘என்ன கஷ்டமோ! ஒக்காரு’ என்றபடியே பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து பாசுபதம் எஸ்எஸ்எல்சி முடிக்கும்வரை லில்லி டீச்சரால் பசுபாதமாகவே கூப்பிடப்பட்டாள். எங்களுக்கெல்லாம் அவளைப் பார்த்தால் பாவமாக இருக்கும். சே! கொஞ்சம் நல்ல பேராக வைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் அவள் என்னவோ அப்படியெல்லாம் ‘feel’ பண்ணியதாகத் தெரியவில்லை. ‘மகாபாரதத்துல அர்ஜுனன் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து வாங்கிய அஸ்த்திரம் என்னோட பேரு!’ என்று பெருமிதமாகவே சொல்லிக்கொள்ளுவாள்.

சமீபத்தில் நாங்கள் ஜோக் செய்து சிரித்த பெயர்: குனால் கெம்மு. ‘கெம்மு என்றால் கன்னட மொழியில் ‘இருமல், இருமு’ என்று அர்த்தம்! அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் கெம்முவார்கள் போலிருக்கு என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம்.

சரி, தலைப்புல என்னவோ சொல்லிட்டு இப்ப என்னவோ பேசிகிட்டு இருக்கீங்களே என்கிறீர்களா? இதோ ஒரு ஜோக்:

ஜப்பானியர்களும், தமிழர்களுமாகச் சேர்ந்து ஒரு கட்டிடம் கட்டுகிறார்கள். பாதிவரை நன்றாக நிமிர்ந்து நின்ற கட்டிடம் பாதி கட்டியபின் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது பைசா கோபுரம் போல. ஜப்பானிய பொறியாளர் சொன்னார்: ‘இப்படி ஒரு பக்கமாக சாய்கிறதே! எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் போல இருக்கு. சீக்கிரமா இதற்கு ஒரு பெயர் வைத்துவிடலாம். பாதி ஜப்பான் பெயராகவும், பாதி தமிழ் பெயராகவும் இருக்க வேண்டும்’ என்று. நம்மாளு சொன்னார் பட்டென்று: ‘நிக்கி(கு)மோ நிகாடோ(தோ)!’

கண்டேன் ரிமோட்டை!

 

DSCN3260

உங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும்?

கேள்வியே தப்பு! சோபாவில் ஜடப்பொருள் இருக்குமா? யாரெல்லாம் இருப்பார்கள் – உட்கார்ந்திருப்பார்கள் என்று கேட்க வேண்டும்!

சரி, நீங்கள் உட்கார்ந்திருப்பீர்கள் கூட என்னவெல்லாம் இருக்கும்?

ம்ம்…..செய்தித்தாள்?…..

அப்புறம்?

ம்ம்ம்…..

விடுங்கள்…. ரொம்ப யோசிக்க வேண்டாம். எங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும், தெரியுமா?

ம்ம்ம்.. அதே செய்தித்தாள்….கூடவே ரிமோட் கண்ட்ரோல் ஒன்றல்ல இரண்டு…. ஒன்று தொலைக்காட்சியை ஆன் செய்ய… இன்னொன்று வால்யூம் கூட்ட, சானல் மாற்ற….

கூடவே இன்னொன்றும் இருக்கும்… எனது கணவரின் இன்சுலின் பென். பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும். உணவு வேளையின் போது வெளியே வரும்.

நேற்று காலை.

‘டிபன் ரெடி, நீங்க மருந்து எடுத்துக்கலாம்!’

‘என்னோட இது எங்க?’

‘உங்களோட எது எங்க?’

‘அதாம்மா… நான் போட்டுப்பேனே!’

‘மருந்து பவுச்?’

‘மருந்தைப் போட்டுப்பேனா? மருந்தை சாப்பிடுவேன். நான் கேட்கறது இன்னொண்ணு…’

சிறிது நேரம் மவுனம். கிடைத்துவிட்டதோ? சமையலறையிலிருந்து எட்டி பார்த்தேன். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அனுமனை மனதில் நினைத்துக் கொண்டு, பஜ்ரங் பலி, எட்டணா வைக்கிறேன், தேடுவது கிடைக்கட்டும் என்று வேண்டினேன்.

சட்டென்று கண்ணில் பட்டது. இன்சுலின் பென், சோபாவின்  மேல் ரிமோட் அருகில்.

‘இதோ இருக்கே…!’ எடுத்துக் கொடுத்தேன். அப்பாடா!

சற்று நேரம் கழித்து, ‘இன்னொண்ணைக் காணுமே!’

பஜ்ரங் பலி! இன்னிக்கு உனக்கு ஒரு ரூபா வேணுமா?

இந்த மாதிரி தேடும்போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் நினைவு வருகிறது. சின்ன வயதில் நாங்கள் ஏதாவது தேடினால், ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கணும்….’ என்பாள் அம்மா. அதேபோல நடக்கும்போது காலில் ஏதாவது இடறினால், ‘காலுக்கு கண் வைக்கணும்….!’ அந்தக்காலத்தில் ஒவ்வொரு அறையிலும் அலமாரிகள் இருக்காது. எங்கள் புத்தகங்கள் எங்கள் பைகளிலேயே இருக்கும். பைகள் அறையின் ஒரு முலையில். புத்தகங்கள் நாங்கள் எங்கு உட்கார்ந்து படிக்கிறோமோ, அங்கேயே இருக்கும். தேடுதலும் காலில் பொருட்கள் இடறுதலும் தினசரி நடக்கும் விஷயங்கள். அம்மாவின் இந்த இரண்டு வாக்கியங்களும் தினமும் கேட்டு கேட்டு பழகிப் போன ஒன்று.

‘இப்போ என்ன காணும்?’

‘ரிமோட்!’

‘அதோ இருக்கே!’

‘இன்னொண்ணு……?’

செந்தில் மாதிரி அதுதாங்க இது என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.

தீவிரமான தேடுதலைப் பார்த்துவிட்டு ஜோக் அடித்தால் எனக்கு அடி கிடைக்கும் போல இருக்கவே, சும்மா இருந்தேன்.

‘எங்க வைச்சீங்க?’

‘அது நினைவு இருந்தால் உன்னை ஏன் கேட்கிறேன்….?’

அதுவும் சரிதான்.

‘காலைலேருந்து டீவி போட்டீங்களா?’

என்னைத் திரும்பி, நீ என்ன துப்பறியும் சாம்புவா? என்பது போல ஒரு பார்வை.

‘இல்ல…..’

‘…………………………….?’

‘இங்க தான் சோபா மேல இருந்தது. டிபன் சாப்பிடறதுக்கு முன்னால இருந்தது. மூணும் ஒண்ணா….’

மூணும் ஒண்ணா இருந்ததா? கேள்வி கேட்கவில்லை. மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

‘இன்சுலினைப் போட்டுண்டு பார்க்கறேன்…காணோம்..!’

கொஞ்சம் யோசித்தேன். எங்கே போய்விடும்?

வர வர தேடுதல் அதிகமாகிவிட்டது. ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் ஒரு ஸ்டேஷனரி கடை. எந்த பொருள் கேட்டாலும் அந்த கடை சிப்பந்தி தேடுவார். அவருக்குத் தேடல் மன்னன் என்று பெயர் வைத்தேன். இப்போது என்ன ஆயிற்று தெரியுமோ? கடையின் நிஜப்பெயர் மறந்து போய் தேடல் மன்னன் கடை என்று ஆகிவிட்டது.

காலையிலிருந்து டீவியைப் போடவில்லை. எங்கே போயிருக்கும்? மறுபடியும் எங்கள் வீட்டு சோபாவைப் பார்த்தேன். ஒரு ரிமோட், பக்கத்தில் பென்சுலின் இன். கடவுளே! மறதி என்னையும் குழப்புகிறதே! இன்சுலின் பென்!

ஆ! பளிச்! மின்னல்! துப்பு கிடைத்துவிட்டது!

ஃபிரிட்ஜை திறந்தேன். ‘குளுகுளு’வென இன்சுலின் பென் இருக்குமிடத்தில் அமர்ந்திருந்தது அந்த ‘இன்னொண்ணு!’

பைதாகரஸ் போல ‘யுரேகா….’ – ச்சே! ஆர்க்கமீடிஸ் இல்லையோ யுரேகா? நமக்கு இவர்களெல்லாம் வேண்டாம். எனக்கு உதவிய அனுமனைப் போல கண்டேன் ரிமோட்டை!

எப்படிக் கண்டுபிடித்தேன் என்கிறீர்களா? நேற்று இரவு இன்சுலின் போட்டுக் கொண்டு அதை உள்ளே வைப்பதாக நினைத்துக் கொண்டு ரிமோட்டை வைத்து விட்டாரோ, என்று தோன்றியது.

என் யூகம் சரிதான். இன்சுலின்  பென்னிற்கு பதிலாக ரிமோட் உள்ளே போயிருக்கிறது!

பஜ்ரங் பலிக்கு இன்று ஒரு ரூபாய்!

 

(தி)சின்ன (தி)சின்ன ஆசை!

 

jilebi

 

எங்கள் தெருவில் நாங்கள் தவறாமல் பார்க்கும் ஒரு ‘ஒன் மேன் ஷோ’ இது:  எண்ணெய் நிறைந்த பெரிய வாணலி; ஒருவர் நின்று கொண்டு விடாமல் ஜிலேபிகளை அதில் பிழிந்து பிழிந்து வெந்தவுடன் எடுத்து பக்கத்தில் பெரிய தட்டையான பாத்திரத்தில் இருக்கும் சர்க்கரை பாகில் முக்கி முக்கி எடுத்து வைத்துக் கொண்டிருப்பார். அவர் இப்படி எடுத்து வைப்பதற்குள் அப்படி காணாமல் போய்விடும் இந்த ஜிலேபிகள். பொன்னிறத்தில் – இல்லையில்லை – ஆரஞ்சு நிறத்தில் பளபளக்கும் இந்த ஜிலேபிகளை பார்க்கும்போதே ‘ஜொள்ளு’ – ஸாரி, வாயில் நீர் ஊறும். எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு முறையாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஆனால் என்னவர் ரொம்ப கோபித்துக் கொள்வார். ‘தெருவில் போற வர வண்டியெல்லாம் அந்த ஜிலேபி மேல புழுதியை வாரி அடித்துவிட்டு போகிறது. அத வாங்கி சாப்பிடணுமா? உனக்கு வேணும்னா சொல்லு, அகர்வால் பவன், இல்ல பாம்பே மிட்டாய்வாலா லேருந்து வாங்கிண்டு வரேன்….’ வாங்கி வந்து சாப்பிட்டும் இருக்கிறேன். ஆனாலும் புழுதி அடித்த ஜிலேபி ருசி எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.

bajji

அதேபோல தெரு திரும்பியவுடன் ஒரு சின்ன உணவகம். கையேந்திபவன் தான். அதன் வாசலில் ஒருவர் ட்கார்ந்து கொண்டு பஜ்ஜி செய்வார். ஆஹா! அந்த வாசனை! ஊரையே தூக்கும். ஒரு நாள் என்னவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு இங்கிருந்து பஜ்ஜி(கள்) வாங்கி வந்தேன். நன்றாகவே இருந்தது. சாப்பிட்ட பிறகும் ஒன்றும் ஆகவில்லை என்று நான் மகிழ்ந்திருந்த வேளை. மாடியில் இருக்கும் இவரது நண்பர் வந்தார். ‘நாராயணன், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்’, எனக்கு வலது கண் துடித்தது. ஆ! ஏதோ கெட்டசெய்தி எங்கிருந்து வரப்போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர் தொடர்ந்தார்: ‘ரெண்டு நாள் முன்னால உங்க வைஃப் தெருக்கோடில இருக்கற பஜ்ஜி கடையில பஜ்ஜி வாங்குறத பாத்தேன். அதெல்லாம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு நல்லதல்ல; என்ன மாவோ, எத்தனை நாள எண்ணையோ, யாருக்கு தெரியும்?…..சொல்லுங்க….’

 

வலது கண் துடித்ததன் அர்த்தம் புரிந்தது.

 

நானும் என் மொழிப் புலமையும்!

தலைப்பை படித்தவுடன் நானும் நமது முன்னாள் பிரதமர் (17  மொழிகளில் மௌனம் சாதிப்பவர் என்று திரு மதன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்!) திரு நரசிம்மராவ் மாதிரி பன்மொழி புலமை உடையவள் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பாளி அல்ல!

திரு அப்பாதுரை சொன்னது போல ஆங்கிலத்தையும் தமிழில் கற்றவள் நான். அந்த காலத்து வழக்கப்படி என் அக்காவின் வழியில் SSLC முடித்தவுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஒரு அலுவலகத்தில் வேலையும் கிடைத்து, 1971 ஜூன் 2 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். நேர்முக தேர்வில் எனது ஆங்கில அறிவு தடையாக இல்லை. ஆனால் போகப் போக,  வெறும் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் மட்டுமில்லாமல் தொலைபேசிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று வந்தபோது ரொம்பவும் தவித்தேன். ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது.

என் அப்போதைய பாஸ் கொஞ்சம் முரடர். அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ‘sslc – வரைக்கும் ஆங்கிலம் படித்திருக்கிறாய் இல்லையா? பேசு!’ என்பார். கடிதங்கள் எழுதுவதிலேயோ, வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவதிலேயோ எனக்கு எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை. பேசுவதற்குத் தயங்கினேன்.

இன்னொரு பிரச்சினை என் பாஸ்- களின் பெயர்கள்! நான் பொதுமேலாளருக்கு உதவியாளியாக இருந்துபோதும் சேர்மன், மானேஜிங் டைரக்டர் என்று எல்லோருக்கும் வரும் தொலைபேசி அழைப்புகளை பெற்று அவர்களுக்கு தொடர்பு கொடுக்கும் வேலையையும் செய்ய வேண்டி வந்தது.

எனது நேர் பாஸ் பெயர் நடராஜ். சேர்மன் எதிராஜ். மானேஜிங் டைரக்டர் (சேர்மனின் தம்பி) நாகராஜ். சேர்மனின் பிள்ளை ஹரிராஜ்!

முதலே ஆங்கிலம் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஒரேமாதிரியான பெயர்களும் சேர்ந்து என்னைபோட்டுக் குழப்பியதில் (நான் என் ஆங்கிலத்தில் கவனம் செலுத்துவேனா, பெயர்களை கவனிப்பேனா?) இந்த ராஜ்-க்கு வரும் அழைப்பை அந்த ராஜ்-க்கும், இளைய  ராஜ்-ஜின் பெண் தோழியின் அழைப்பை அவரது அப்பாவிற்கும் மாற்றி மாற்றிக் கொடுத்து……

இதெல்லாம் நடந்து சிறிது காலம் ஆயிற்று. ஒரு நாள் காலை எனது நேர் பாஸ் அலுவலகத்திற்கு வந்தவர் ஏதோ அவசர அழைப்பு வர தலைமை அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டார். தலைமை அலுவலகம் பாரி முனையில். நான் வேலை பார்த்தது தொழிற்சாலை – திருவேற்காடு பக்கத்தில். இனி இவர் எங்கே திரும்பி வரப் போகிறார் என்ற தைரியத்தில் தட்டச்சு இயந்திரத்திற்கு உறையைப் போட்டு மூடி, ஆனந்தமாக கையோடு எடுத்துப் போன ஆனந்த விகடனில் மூழ்கினேன்.

நிஜமாகவே மூழ்கிப் போனவள் பாஸ் வந்ததையே பார்க்கவில்லை. ஏதோ ஃபைலை எடுத்துப் போக திரும்பி வந்திருக்கிறார். எனது அறையில் தான் ஃபைல் ராக் இருக்கிறது.

‘ரஞ்ஜனி…!’ அவரது இடி முழக்கம் கேட்டு ஆ. வி. யில் மூழ்கி போனவள் திடுக்கிட்டு எழுந்தேன்.

கையில் ஆ.வி!

என் கையிலிருந்த ஆ.வி.யை ஒரே பிடுங்காகக் பிடுங்கி இரண்டாகக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்!

(அப்போதெல்லாம் ஆ.வி. குண்டு புத்தகமாகவே வரும். இவர் எப்படி ஒரே தடவையில் இரண்டாகக் கிழித்தார் என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்!)

‘காச் மூச் என்று கத்த ஆரம்பித்தார். சாரம் இதுதான்: உன்னை ஆங்கிலம் கற்க சொன்னால் தமிழ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்….. இன்னொரு தடவை நீ தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்தால்….என்ன நடக்கும் தெரியுமா?’

(என்ன நடக்கும் இதேபோல கிழித்துப் போடுவாய்!)

பதிலே பேசவில்லை நான்.

‘உனக்கு வேலையில்லை, ‘போர்’ அடிகிறது என்றால்…..’ என்று சொல்லியபடியே அவரது அறைக்குள் போய் அவரது மேஜை டிராயரில் இருந்து கேம்ப்ரிட்ஜ் அட்வான்ஸ்ட் டிக்ஷனரியை கொண்டு வந்து என் மேஜை மேல் போட்டார்.

‘இதைப் படி…வாழ்வில் உருப்படுவாய்….என்று சொல்லியபடியே திரும்ப காரில் ஏறிக் கொண்டு போய்விட்டார்.

வீட்டிற்குப் போய் என் அப்பாவிடம் இனி ஆபீசுக்குப் போகவே மாட்டேன் என்று நடந்ததை சொல்லி என் பாஸ்-ஐ கன்னாபின்னாவென்று (இடியட், ஸ்டுபிட்….என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்!) திட்டித் தீர்த்தேன்.

‘சரி தூங்கு, காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் அப்பா.

அடுத்த நாள் கலையில் வழக்கம்போல அப்பா என்ன சீக்கிரமே எழுப்பினார். எங்கள் வீட்டிலிருந்து பூந்தமல்லி ஹை ரோட் வரை நடராஜ சர்வீஸ். அங்கிருந்து அலுவலகத்திற்கு பேருந்து. அதனால் 8.30 மணி ஆபிசுக்கு சீக்கிரமே எழுந்து 7 மணிக்கு கிளம்ப வேண்டும்.

‘நான்தான் போகப் போவதில்லையே!’ என்றேன்.

‘யார் மேல தப்பு? நிதானமா யோசி. உன் மேல தப்பு என்றால் உடனே கிளம்பு. பாஸ் மேலே என்றால் போக வேண்டாம்’ என்றார் அப்பா.

அடுத்த அரை மணியில் கிளம்பி அலுவலகம் போய் சேர்ந்தேன். என் பாஸ்-க்கும் என்னைத் திட்டியது ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டும். மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. என்னைக் கொஞ்சம் கருணையுடன் நடத்தத் தொடங்கினார்.

நானும் அன்றிலிருந்து அவர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு டிக்ஷனரி படிக்க ஆரம்பித்தேன். பெரிய ஆங்கில அகராதியில் ஒரு வார்த்தைக்கு வெறும் அர்த்தம் மட்டும் கொடுத்திருக்க மாட்டார்கள். அதை வைத்து எப்படி வாக்கியம் பண்ணுவது என்றும் உதாரணங்கள் கொடுத்திருப்பார்கள். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

இன்றும் எனக்கு டிக்ஷனரி படிப்பது மிகவும் விருப்பமான பொழுது போக்கு.

இன்றைக்கு என் மாணவர்கள் என் ஆங்கிலத்தை மதிக்கிறார்கள் என்றால் எனக்குப் பிடிக்காத அந்த பாஸ் தான் காரணம்.

நாளை நானும் கன்னடமும்……!

ஹிந்தி மாலும்…?

 

 

ஏப்ரல் 16, 2000 மாவது வருடம். எனது வாழ்வில் முக்கியமான நாள்.

 

25 வருட இல்லத்தரசி வேடத்தைக் கலைத்து விட்டு வெளியில் வேலைக்கு வந்திருக்கிறேன். அலுவலத்தில் நாற்காலியில் உட்காந்து செய்யும் வேலை இல்லை. மாணவர்கள் முன்னிலையில் நின்று கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்…எப்படி இருக்குமோ?

 

முதல்முறையாக பள்ளிக்கு போகும் குழந்தையைப் போல ஒரு கலக்கம்.

 

ஆங்கிலம் பேச வரும். சொல்லிக் கொடுப்பது வேறு இல்லையா?

 

முதல் வகுப்பு. முதல் நாள். உள்ளூர பட பட வென்று பல பல பட்டாம்பூச்சிகள் பறந்தாலும் முகத்தில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்கள் கவுன்சிலரிடம் கேட்டேன்

 

‘எத்தனை மாணவர்கள்?’

 

‘இது அடிப்படை நிலை வகுப்பு. ஒன்லி டென்..’ என்று இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

‘ஓ! ஒன்லி டென்…?’

எனது முதல் வகுப்பு flop-show- வாக முடியப் போகிறது என்பதை அறியாமலேயே முகத்தில் இருந்த தைரியம் உடலிலும் பரவ வகுப்பினுள் நுழைந்தேன்.

‘குட் மார்னிங்’

9 குட் மார்னிங்-கு களுக்கு நடுவே ‘ஹிந்தி மாலும்..?’ என்று பத்தாவதாக ஒரு குரல்!

குரல் வந்த பக்கம் திரும்பினேன். ஒரு இஸ்லாமியப் பெண்மணி தலையில் பர்த்தாவுடன்!

எனக்குள் எழுந்த முதல் வியப்பு. எனக்கு ஹிந்தி தெரியாது என்று  இந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

அடுத்து என்ன மொழியில் பதில் சொல்வது? நோ என்று ஆங்கிலத்திலா? நஹி என்று ஹிந்தியிலா?

சவாலே சமாளி….

கொஞ்சம் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன்.

‘நீங்கள் இங்கே வந்திருப்பது ஆங்கிலம் கற்க. அதை நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன். கவலைப் படாதீர்கள்….!’

தன் தலை மேல் போட்டிருந்த பர்தாவை இழுத்து முகத்தை மூடியபடி அந்த பெண் எழுந்தே விட்டாள்.

நான் பதறிப் போனேன். ‘நோ, நோ, டோன்ட் கோ. ப்ளீஸ் சிட் டௌன்…!

நான் பேசியதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஒரு முறை திரும்பிப் பார்த்து மறுபடி ஹிந்தியில் மூச்சு விடாமல் ஏதோ சொன்னாள். சுத்தமாக எதுவும் புரியவில்லை.

மற்ற மாணவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். ‘அவளிடம் சொல்லுங்கள். அவளை வகுப்பிற்குள் வரச் சொல்லுங்கள்…’ என்றேன்.

என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிலர் அவளை உட்காரச் சொன்னார்கள். எதற்கும் மசியவில்லை அந்தப் பெண். போயிந்தே! Gone!

என்னைப் பரிதாபமாகப் பார்த்த 9 பேருக்கு, பேருக்குப் பாடம் எடுத்து விட்டு வெளியே வந்தேன்.

மையத்தின் கவுன்சிலர், ‘ஹிந்தி வராதா….?’ என்றாள். ஏற்கனவே நொந்திருந்த நான் மேலும் நொந்து நூடுல்ஸ் ஆனேன்.

‘நாளைக்கு வரட்டுமா வேண்டாமா?’

‘டோன்ட் ஒரி. அந்தப் பெண்ணை ஹிந்தி பேசத் தெரிந்த ஒரு டீச்சரிடம் அனுப்பி விட்டேன். ரோனிலா உங்களிடம் பேசுவாள்’ என்று என் வயிற்றில் புளியை கரைத்தாள்.

வீட்டிற்கு வந்து ‘இங்கிலீஷ் வகுப்புக்கு வந்து விட்டு இந்தி தெரியுமான்னு கேக்கறா?’ என்று புலம்பித் தீர்த்தேன்.

கொஞ்ச நேரத்தில் எனது பாஸ் என்கிற பாஸ்கரன் இல்லை – ரோனிலா விடமிருந்து தொலைபேசி.

கொஞ்சம் பயமாக இருந்தது. என்ன சொல்லுவாளோ?

என் மாமா Single Speech Hamilton என்று ஒருவரைப் பற்றிக் கூறுவார். ஒரே ஒரு முறை மேடையில் பிரமாதமாகப் பேசிவிட்டு நிறுத்திவிட்டாராம். அதன் பிறகு அவர் பேசவே இல்லையாம். அதைப்போலவே நானும் Single English Class – அதுவும் Flop Show பண்ணிவிட்டு நிறுத்தி விடப் போகிறேன். தினம் ஒரு புது கதை கேட்கும் என் பேரனுக்கு என் கதையை சொல்லலாம்.

என்னென்னவோ நினைத்தபடியே தொலைபேசியில் ‘ஹலோ..ரோனிலா…!’ என்றேன்.

‘வாட் ஹப்பென்ட்..?’

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே என்று சொல்ல ஆரம்பித்தேன்.

‘ஸாரி ரோனிலா…எனக்கு ஹிந்தி வராது…..’

‘எனக்குப் புரிகிறது. நீ ஒண்ணு பண்ணு. உன்னிடம் வரும் மாணவர்களிடம் நீ லண்டனில் பிறந்து, தேம்ஸ் தண்ணி குடித்து வளர்ந்தவள் என்று சொல்லு….’

‘ரோனிலா…?’ நான் நம்ப முடியாமல் கேட்டேன். நான் ஸ்ரீரங்கத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்து, பெங்களூர் வந்து காவேரி நீர் குடித்து வருபவளாயிற்றே!

‘ஆமாம் , உனக்கு இந்திய மொழி எதுவும் வராது இன்னிலேருந்து சரியா?’

‘…………….’?

‘ஹிந்தியும் பேசாதே, கன்னடமும் பேசாதே…தமிழும் பேசாதே….’

‘ஆனா…. ரோனிலா வீட்டில…..’

‘ரஞ்ஜனி…! நான் வகுப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்…..புரிகிறதா?’

அவளுக்கு கோபம் அதிகமாவதற்குள் ‘நன்றி…என்னைப் புரிந்து கொண்டதற்கு…’ என்று சொல்லிவிட்டு தொலை பேசியை கீழே வைத்தேன்.

அதற்குப்பின் ஒவ்வொரு வகுப்பிலும் சில பல ஹிந்தி பேசும் மாணவர்கள். ஹிந்தி கற்காமலேயே அன்றிலிருந்து இன்றுவரை வகுப்புகளை மட்டுமல்ல; வாழ்க்கையையும் தான் சமாளிக்கிறேன்!

முதல் கோணல்…முற்றிலும் வெற்றி!

 

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!

 

இந்தக் கட்டுரை நான் எழுதியது இல்லை. 1949 ஆனந்த விகடன் தீபாவளி இதழில் வெளியானது.

பகிர்ந்துகொள்ள அனுமதி கொடுத்த திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!

இப்படியெல்லாம் இருந்த ஆனந்த விகடனின் இன்றைய நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது!

 

”குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்…” என்று ஒரு பாடல் கேட்டு இருக்கீங்களா! சில சமயங்களில் அந்தப் பாட்டில் சொன்னது உண்மை தானோ என்று நம்பும்படியாக நாம் நடந்து கொள்கிறோமே! சரி இன்னிக்கு என்ன குரங்கு பற்றிய பதிவு…  ஒண்ணுமில்ல…  நம்ம கோபுலு இருக்காரே அவர் ஆனந்த விகடனில் வரைந்த படங்கள் எத்தனை எத்தனை.

 

இப்படி ஒரு தீபாவளி மலரில் வந்திருந்த படங்களும் கட்டுரையும் இந்த வார பொக்கிஷமாக உங்களுக்குத் தந்திருக்கிறேன்.  கட்டுரையை எழுதியதும் கோபுலு சார் தான் என நினைக்கிறேன். அத்தனை ஹாஸ்யம் – அவரது நகைச்சுவையான படங்களைப் போலவே!

 

 

இந்தப் பதிவின் மீதிப் பகுதியைப் படிக்க:

http://venkatnagaraj.blogspot.com/2012/10/blog-post_17.html

 

 

 

அத்தையும் ராகி முத்தையும்!

002.jpg

(இது ‘மங்கையர் மலரில்’  2000 மாவது ஆண்டு வெளியான என் முதல் கதை.)

முன்குறிப்பு: ராகி முத்தை என்பது கர்நாடக மாநிலத்தின் முக்கிய உணவு. ‘ஹள்ளி’ (கிராமம்) யிலிருந்து தில்லிக்குச் சென்ற நமது மாஜி பிரதமர் திரு.ஹெச்.டி. தேவே கௌடாவை ‘முத்தே கௌடரு’ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு அவரால் பிரபலப் படுத்தப்பட்ட உணவு.

“பன்னி, அத்தை, பன்னி மாவா,” என்று வாய் நிறைய வரவேற்றாள் எங்கள் மாட்டுப் பெண் ஷீதல். என் கணவர் அவரிடம், “பன்னியாச்சும்மா, சென்னகிதியா?” என்று கேட்டு வி.ட்டு பெருமை பொங்க என்னைத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு ‘என்னம்மா கன்னடம் பேசுகிறேன், பார்’ என்று அர்த்தம்.

நானும் என் பங்கிற்கு அவளை குசலம் விசாரித்து விட்டு, ஊரிலிருந்து நான் பண்ணிக் கொண்டு வந்திருந்த பட்சணங்களை அவளிடம் கொடுத்தேன்.

இதற்குள் என் அருமைப் புதல்வன் எங்களது பெட்டி படுக்கைகளை வீட்டினுள் வைத்துவிட்டு வந்தான்.

‘ஏம்மா! பிரயாணம் சௌகரியமாக இருந்ததா? அப்பா வழியெல்லாம் படுத்தினாரா?”

“இல்லடா, உன் அப்பாதான் பக்கத்து சீட்டில் இருந்த சீனியர் சிட்டிசனிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டார்,” என்றவள் அவரது முறைப்பை அலட்சியம் செய்தேன்.

குளித்து முடித்து டிபன் சாப்பிட உட்கார்ந்தோம்.

“இன்னிக்கு என்னம்மா டிபன்? சீக்கிரம் கொண்டா” என்ற என் கணவரை, “ஸ்..ஸ்.. பரக்காதீர்கள், வரும்” என்று அடக்கினேன்.

“இன்னிக்கு டிபன் அக்கி ரொட்டி” என்றபடி வந்தாள் ஷீதல்.

“என்னடாது அக்கி, படை என்று ஏதேதோ சொல்கிறாளே” என்று பதறிப்போய் மகனிடம் கேட்டேன்.

“அய்யோமா! அக்கி என்றால் அரிசி. அரிசி மாவில் ரொட்டி செய்திருக்கிறாள்.

சாப்பிட்டுப் பார். சூப்பரா இருக்கும்!”

“சரியான சாப்பாட்டு ராமன் ஆகி விட்டாய் நீ!” என்று அவனை செல்லமாகக் கடிந்து கொண்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தேன். நிஜமாகவே சூப்பராக இருந்தது. மாட்டுப் பெண்ணை மனதார பாராட்டிவிட்டு, ”அடுத்த முறை வருவதற்கு கன்னடம் கற்றுக் கொண்டு விட வேண்டும்,” என்றேன்.

“ஆமா, ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் சொல்லுகிறாய்!”

“அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தாயா?” என்றேன்.

மகன் கப்சிப்.

விஷயம் இதுதான்: எங்கள் பிள்ளை மாதவன் கன்னடப் பெண்ணை ப்ரீதி மாடி (காதலித்து) கல்யாணம் செய்து கொண்டு பெங்களூரில் இருந்தான். நாங்கள் வரும்போதெல்லாம் இந்தக் கூத்து தான்.

டிபன் சாப்பிட்டு முடிந்ததும், “சொல்ப காபி குடிக்கிறீங்களா மாவா?” என்றாள் ஷீதல். என் கணவர் அவசர அவசரமாக “சொல்ப போறாது. தும்ப (நிறைய) வேண்டும்,” என்றார். வேறொன்றுமில்லை. முதல் தடவை நாங்கள் வந்திருந்தபோது அவள் காபி கொண்டு வந்த டம்ளரைப் பார்த்து அசந்து விட்டோம். அதைவிட சின்ன சைஸ் டம்ளரை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது. அந்த சின்னஸ்ட் டம்ளர் காப்பியை சூப்பி சூப்பி அவள் குடிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். தண்ணீரைக் கூட இந்த ஊரில் எச்சில் பண்ணித்தான் குடிக்கிறார்கள்.

“என்ன இது! தண்ணீரையாவது தூக்கிக் குடிக்கக் கூடாதா?” என்றேன்.

“சின்ன விஷயம்மா, இதையெல்லாம் பெரிசு படுத்தாதே” என்று என் வாயை அடக்கி விட்டான் என் மகன்.

இது மட்டுமா? இதைப்போல பல சின்ன(!) விஷயங்களில் அவனது கல்யாணத்தின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவனது கல்யாணத்திற்கு முதல் நாள் பெங்களூர் வந்து இறங்கியவுடன் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். காரிலிருந்து பெண்ணின் வீட்டு முன் இறங்கியவுடன் ‘திக்’ கென்றது. இது முதல் ‘திக்’.

வீட்டு வாசலில் பச்சைத் தென்னை ஓலையில் பந்தல்! அவர்கள் வழக்கமாம் இது. பெண் வீட்டாரின் உபசரிப்பில் மயங்கிப் போயிருந்த என் உறவினர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. நானும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பேசாமல் இருந்து விட்டேன். அன்று மாலை வரபூஜை எனப்படும் மாப்பிள்ளை அழைப்பு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

மறுநாள் காலை கல்யாணம். கெளரி பூஜையுடன் ஆரம்பமாயிற்று. கௌரம்மனுக்கு பூஜையை முடித்துவிட்டு, எனக்குக் கைகளில் மஞ்சள் பொடியைக் கொடுத்து மணைமேல் அமரச் செய்தனர். என் கால்களுக்கு மஞ்சள் பூசினாள் என் மாட்டுப் பெண். பிறகு ‘மொறத பாகணா’ வை  (ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கண்ணாடி, சீப்பு, வளையல், ரவிக்கைத் துணி ஆகியவற்றை வைத்து இன்னொரு முறத்தால் மூடி) தன் மேல் புடவையால் மூடி என்னிடம் கொடுத்தாள். நானும் அவர்கள் சொன்னபடி என் புடவைத் தலைப்பால் மூடி வாங்கிக் கொண்டேன்.

என் கைகளில் அக்ஷதையைக் கொடுத்து நமஸ்கரித்து எழுந்தவளைப்  பார்க்கிறேன். மறுபடி ‘திக்’. இரண்டாவது ‘திக்’. அவள் கழுத்தில் தாலி! என் திகைப்பை மறைத்துக் கொண்டு அசட்டுச் சிரிப்புடன் அவள் முகத்தையும், அவள் கழுத்திலிருந்த தாலியையும் மாறி மாறிப் பார்த்தேன். நான் ‘திரு திரு’ வென முழிப்பதை பார்த்துவிட்டு, என் சம்மந்தி அம்மாள் “ஏன் பேக்கு? ஏன் பேக்கு?” என்றார். என்ன இவர் நம்மைப் பார்த்து பேக்கு, பேக்கு என்கிறாரே! (அதுவும் இரண்டு தடவை வேறு!) என்று நினைத்துக் கொண்டே தாலியைக் காட்டினேன்.

“ஓ! அதுவா? அது ‘தவருமனே’ தாலி (பிறந்தகத்துத் தாலி) கெளரி பூஜை பண்ணும்போது பெண்ணின் கழுத்தில் தாலி இருக்க வேண்டும். பெண்ணின் தாயார் இதைக் கட்டி விடுவார்” என்று விளக்கம் அளித்தார். ஓ! இந்த சம்பிரதாயத்தை வைத்துத்தான் ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்ற படம் எடுத்தார்களோ? என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், “அப்படியா? சந்தோஷம். என் பிள்ளையும் தாலி கட்டுவான் இல்லையா?” என்று ஜோக் அடித்தேன். அவர்கள் யாரும் சிரிக்காததால் நானே ‘ஹஹ ஹஹ!’ என்று சிரித்து விட்டு நகர்ந்தேன்.

நல்லபடியாக மாங்கல்ய தாரணம் ஆயிற்று. எங்கள் பக்கத்து உறவினர்கள் சாப்பாட்டிற்கு உட்கார்ந்து இருந்தனர். பந்தி விசாரிக்க ஆரம்பித்தேன்.

“ஏண்டி கோமளி! ஒரு வாழைக்காய் கறியமுது இல்லை. ஒரு தயிர் வடை இல்லை. என்ன கல்யாண சாப்பாடு, போ!” என்று ஒரு குரல்! மூன்றாவது ‘திக்’. குரல் வந்த திசையைத் திரும்பியே பார்க்காமல் சம்மந்தி அம்மாவைத் தேடி விரைந்தேன். அவர் ரொம்பவும் ‘கூலா’க “ஓ! பாளேகாய் பல்யா? உத்தின் வடே! அதெல்லாம் கல்யாணத்திற்குப் போட மாட்டோம். ஆகாது” என்றார்.

‘வாழைக்காய் கறியமுதும் தயிர் வடையும் சாப்பிட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்ட நாங்கள் எல்லாம் பேக்கா?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அட! எனக்கும் சாக்கா, பேக்கா என கன்னடம் பேச வந்து விட்டதே!)

ஒரு வழியாக எல்லா திக், திக், திக்குகளையும் சமாளித்துவிட்டு என் பிள்ளைக்கு பெங்களூரிலேயே வேலையானதால் குடித்தனத்தையும் வைத்து விட்டு சென்னைக்குத் திரும்பினோம்.

சும்மா சொல்லக் கூடாது. என் பிள்ளை எள் என்றால் எண்ணையாக வழிவான்; வெட்டிண்டு வா, என்றால் கட்டிண்டு வரும் சமத்து. காதலிக்க ஆரம்பித்த உடனேயே காஸ் புக் பண்ணிவிட்டான். கல்யாணம் நிச்சயம் ஆன உடன் வீடு பார்த்து அட்வான்ஸும் கொடுத்து விட்டான்.

என் ஸொசே (மாட்டுப் பெண்)  மிக மிக நல்ல மாதிரி. நாங்கள் பெங்களூர் போகும் போதெல்லாம் புதிய புதிய ஐட்டங்கள் சாப்பிடப் பண்ணித் தருவாள். மிகவும் ருசியாகப் பண்ணுவாள். நானும் அவளிடமிருந்து சக்லி, கோடுபளே, பிஸிபேளே பாத் எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டேன்.

முதலில் கொஞ்ச நாள் இருவரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டோம். பிறகு கொஞ்சம் தமிழ், கொஞ்சம் கன்னடம், மீதி ஆங்கிலம் என்று கலந்து கட்டி பேச ஆரம்பித்தோம். என் கணவர் பாடு தேவலை. அவளுக்கு புரிகிறதா இல்லையா என்று கவலையே பட மாட்டார். தமிழிலேயே பிளந்து கட்டிவிட்டு கடைசியில் “கொத்தாயித்தா?” என்பார். அவளும் சிரித்துக் கொண்டே “ஆயித்து மாவா” என்பாள்.

பழைய நினைவுகளை அசை போட்டபடியே கண்ணயர்ந்து விட்டேன்.

“அத்தை, மாவா, மதிய சாப்பாடு தயார். உண்ண வாருங்கள்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

“அட, என்னம்மா ஷீதல்! தமிழ் கற்றுக் கொண்டு விட்டாயா? பேஷ் பேஷ்!” என்ற என் கணவரின் குரலைக் கேட்டவுடன் தான் தமிழில் பேசியது ஷீதல் என்று புரிந்தது. ஒன்றும் புரியாமல் நான் என் மகனைப் பார்த்தேன். அவனோ முகமெல்லாம் பல்லாக “பாத்தியாம்மா! ஷீதல் ‘முப்பது நாட்களில் தமிழ்’ கற்று வருகிறாள். என்னமா பேசறா பார்! கார்த்தாலயே தமிழில் பேசுகிறேன் என்றாள். நான்தான் அம்மாவுக்கு ஹார்ட் வீக். காலங்கார்த்தல பயமுறுத்தாதே என்றேன்” என்றான்.

“நல்லதா போச்சு! நீயே எனக்கு கன்னடம் கற்றுக் கொடுத்து விடு” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவளுக்கு நடைமுறை பேச்சுத் தமிழை விளக்கினேன்.

டைனிங் டேபிளில் எல்லோரும் உட்கார்ந்தோம். இந்த முறை புதிதாக என்ன செய்திருக்கிறாளோ என்று ஒருவித ஆவலுடன் உட்கார்ந்திருந்தேன். மகன் கையை அலம்பிக் கொண்டு வருகிறேன் என்று போனான்.

“இன்னிக்கு மத்தியான சாப்பாட்டிற்கு ராகி முத்தே பண்ணியிருக்கேன். தொட்டுக் கொள்ள பாகற்காய் கொஜ்ஜூ” என்ற சொல்லியபடியே வந்தவள் எங்கள் தட்டுகளில் பெரிய பிரவுன் கலர் உருண்டையை வைத்து விட்டு சுடச்சுட கொஜ்ஜையும் ஊற்றி விட்டு உள்ளே போனாள்.

மெதுவாக அந்த உருண்டையைத் தொட்டேன். ஒரு விரலால் மெள்ள அழுத்தினேன். அய்யயோ! விரல் உள்ளே போய்விட்டது. கையை ஆட்டி ஆட்டி விரலை எடுக்க நான் செய்த முயற்சியில் கை முழுவதும் ராகி ஒட்டிக்கொண்டு விட்டது. இது என்னடா கஷ்டகாலம் என்று நொந்த படியே என் கணவரைப் பார்த்தேன். அவர் நிலைமை இன்னும் பரிதாபமாக இருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கையை உதறியபடியே எழுந்து அவரருகில் வந்து, “என்னாச்சு, என்னாச்சு?” என்றேன்.

“ழ…ழ…ழ….” என்றார்.

“ழ..ழா ழி, ழீ சொல்ல இதுவா நேரம்? வாயில் என்ன கொழுக்கட்டையா?” என்றேன் கோபமாக.

“இழ்ழை, இழ்ழை, ழாழி முழ்ழை…” என்றார்.

அந்தச் சமயம் கையை அலம்பிக் கொண்டு வந்த என் பிள்ளை எங்களைப் பார்த்து ஒரு வினாடி திகைத்துப் போனவன், அடுத்த நொடி வயிற்றைப் படித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். எனக்கோ பயங்கர டென்ஷன்.

“என்னடாது? எங்க அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா?” என்றேன் எரிச்சலுடன்.

கண்களில் நீர் வரச் சிரித்தவன், “ஸாரிமா, ஸாரிபா!” என்று சொல்லிவிட்டு “ஷீது! ராகி முத்தையை எப்படி சாப்பிடறதுன்னு நீ சொல்லிக் குடுக்கலையா?” என்றான். நானும், என் கணவரும் பரிதாபமாக அவனைப் பார்த்தோம்.

அவன் நிதானமாக எங்களிடம் “அம்மா, இந்த ராகி முத்தையா சாப்பிடுவது ஒரு கலை. இப்போ பார், நான் சாப்பிட்டுக் காண்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “இந்த உருண்டையை கொஞ்சமாகக் கிள்ளி கொஜ்ஜில் இப்படிப் புரட்டிவிட்டு வாயில் போட்டுக் கொண்டு முழுங்கி விட வேண்டும்” என்று செய்முறை விளக்கமும் காட்டி விட்டு ஒரே நிமிடத்தில் தட்டைக் காலி செய்தான். “இதை சாதம் மாதிரி பிசையவோ, கடிக்கவோ கூடாது” என்றான்.

ஒரு வழியாக நானும் என் கணவரும் ராகி முத்தியை சாப்பிட்டு முடித்தோம்.

ஊருக்குத் திரும்பியதும், “பெங்களூர் எப்படி?” என்று கேட்டவர்களிடம் ராகி முத்தையை சாப்பிடக் கற்றுக் கொண்ட விதத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனேன்.

“நல்ல கூத்து, சாப்பிடக் கற்றுக் கொண்டாளாம்” என்று முகவாய் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு போனார்கள்.

அவர்களுக்கு என்ன! எங்களுக்கல்லவா தெரியும் ராகி முத்தை சாப்பிடும் வித்தை!

கனவெல்லாம் குப்பை!

அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி!

வழக்கம்போல் உலகம் முழுக்க பொழுது புலர்ந்தாலும்….எங்களுக்கு – பெங்களூரு வாசிகளுக்கு வேறு விதமாக விடியல் தொடங்கியது.

“இந்தக் குப்பையை எந்த குப்பைக் கூடைல போடறது?”

“வெட்டா? (wet) ட்ரையா? (dry)”

“ட்ரைல ரெண்டு மூணு வகை இருக்கு…பாத்துப் போடு…..!”

எதில் போடுவது என்று தெரியாமல் நானும் என் மாட்டுப் பெண்ணும் கையில் ஆளுக்கொரு ‘குப்பை’ யை வைத்துக் கொண்டு ‘திரு திரு’ வென்று நின்று கொண்டிருதோம். என் கணவர் கையில் ‘டெக்கான் ஹெரால்ட்’ உடன்.

ஒவ்வொன்றாகப் படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“காய்கறி, பழத்தோல், இதெல்லாம் ‘வெட்’. …..”

“புளிச்சக்கை……?”

நான் கையில் புளிச்சக்கையுடன் கேட்டேன். பாதி சமையல் நடந்து கொண்டிருந்தது. பிள்ளையும், மாட்டுப் பெண்ணும் அலுவலகம் கிளம்ப வேண்டுமே!

பொதுவாக சமையல் அறையில் ஒரு குப்பைத் தொட்டி. (ஆங்கிலத்தில் அழகாக டீசண்டாக ‘Waste basket’!) ஒவ்வொரு குளியலறையிலும் ஒவ்வொன்று. எப்போது எங்கு எது சௌகரியமோ நாங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு குப்பைத்தொட்டியையும் பயன்படுத்துவோம்.

என்னுடைய ஆரோக்கியத்திற்காக கணவரும், பிள்ளையும் நின்ற, உட்கார்ந்த  இடத்திலிருந்தே குப்பைத் தொட்டியை நோக்கி வாழைப் பழத்தோலை அவ்வப்போது எறிவதும் உண்டு. கொஞ்சம் குனிந்து, நிமிர்ந்தால் உடம்புக்கு நல்லது – எனக்கு மட்டும்! கீழே குறி தப்பி விழும் குப்பையை நான்தான் குனிந்து எடுத்துப் போட வேண்டும்!

இரண்டு மூன்று நாட்களாக பெங்களூரே அல்லலோல கல்லோலம்! அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் குண்டு கட்டாகக் கட்டி குப்பை வண்டியில் – பாதி –  கீழே மீதி! –  போடக் கூடாது என்று பெங்களூரு மஹா நகர பாலிகே ( நம்மூரு நகரசபை தாங்க!) கண்டிப்பாக உத்தரவு போட்டிருக்கிறது.

பெங்களூரு வாசிகளான நாங்கள் ‘என்னடா இது? நம்மூருக்கு வந்த சோதனை?’ என்று செய்வதறியாமல் உட்கார்ந்திருந்தோம்.

காலையில் வேலைக்காரி வந்தாள். வழக்கம் போலக் குப்பை கூடையை எடுக்கப் போனவளைப் பார்த்துப் பதறினேன். “தொடாதே!, தொடாதே….!”

பயந்து பின் வாங்கினாள்.

“ஏம்மா….! குப்பை கொட்ட வேண்டாமா….?”

“வேணாம், வேணாம், அது…..வெட் குப்பை, ட்ரை குப்பைன்னு தனித் தனியா பிரிச்சு போடணுமாம், இன்னியிலேருந்து…!”

“அப்டீன்னா?”

கணவர் திரும்ப டெக்கன் ஹெரால்ட் தினசரியைப் பிரிக்க, நான் அவசரமாக அவளிடம், “நீ குப்பை கொட்ட வேண்டாம்…..”

“நீயே குப்பைக் கொட்டிக்கீறீயா….. அப்பால….?” என்று கேட்டவாறே கையை வீசிக் கொண்டு  வெளியேறினாள் ‘நைட்டி லச்சுமி’.

இந்தக் காலத்து இல்லத்தரசிகளின் ‘தேசீய உடை’ யான நைட்டியை இவளும் அணிந்து வருவதால் அவளுக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர் ‘நைட்டி லச்சுமி’.

அக்டோபர் 2 ஆம் தேதி. வீடு முழுக்க குப்பை இறைந்து கிடப்பதைபோல இரவெல்லாம் கனவு. ‘கனவெல்லாம் குப்பை’ – ன்னு ஒரு பதிவு எழுது’ என்று என் மனம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொக்கரித்தது!

வீட்டில் தலைக்கு மேல் குப்பை. என்ன செய்வது? சே! சே! என்னையும் அறியாமல் தலையை தட்டி விட்டுக் கொண்டேன். தொலைகாட்சியில் மூழ்கி இருந்த என்னவர் என்னைத் திரும்பிப் பார்ப்பதை ‘கண்டும் காணாமல்’ இருந்தேன்.

வாசலில் காலிங் பெல். எங்கள் அபார்ட்மெண்ட் பராமரிப்பு செய்யும் கௌடா.

“ஸார்! இன்னிக்கு ‘குப்பை மீட்டிங்’ 11 மணிக்கு. கட்டாயமா வந்துடுங்க”.

“ஒருத்தருக்கும் ஒண்ணும் புரியாது பாரு…நான்தான் போயி……” என்றவாறே ஒரு புது உற்சாகத்துடன் ‘குப்பை மீட்டிங்’ கிற்கு தயாரானார் என் கணவர்.

‘ஏதாவது ஒரு வழி பிறந்தால் தேவலை….’ என்ற என்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே என் மாட்டுப் பெண் “நீங்க ஏம்மா இதுக்குப் போயி இத்தனை டென்ஷன் ஆறேள்?” என்றாள்.

என் கவலை யாருக்குத் தெரியும் (புரியும்?) அடுத்த வாரம் வலைச்சரம் ஆசிரியர். அதற்காக பதிவுகளை பொறுக்கிக்… சே! குப்பைதான் மனம் முழுக்க…..(இந்தத் தலைப்புக் கூட நன்றாக இருக்கிறது – மனம்!) சாரி, சாரி, தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என் கணவர் மறக்காமல்(!) டெக்கான் ஹெரால்ட் தினசரியை எடுத்துக் கொண்டு மீட்டிங்குக்குச் சென்றார்.

அவர் வந்தவுடன் பாய்ந்தேன்: ‘என்னாச்சு…?’

“வெட் குப்பை, ட்ரை குப்பை ன்னு தனித்தனியா……”

“அதான் தெரியுமே…!”

“ரெண்டு மூணு குப்பைத்தொட்டி வச்சிக்கணும்…”

“அதான் தெரியுமே…!”

“வீட்டுக் வீடு …..”

“குப்பைதான்….”

கணவர் கோபமாக முறைக்க மௌனித்தேன்.

“….ரொம்ப தமாஷு…….. மாடி வீட்டு ஏ.கே. குமார் சொல்றான், ஒவ்வொரு வீட்டுக்கும் போய்  யாராவது தினமும் குப்பையை கலெக்ட் பண்ணனும். ஒரு வீட்டுக்கு தினம் நூறு ரூபா கொடுத்துடலாம்-ன்னு! நான் சொன்னேன்: நானே கலெக்ட் பண்றேன். 40 வீடு இருக்கு. தினம் 4000 ரூபா! வருடத்துக்கு…… 1,20,000!…..சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகம் கிடைக்கும்…நான் இப்படி சொன்னவுடனேதான் அவனுக்கு புரிஞ்சுது. நீ சரியாதான் பெயர் வச்சிருக்கே அறிவு கெட்ட குமார்-ன்னு!”

அபூர்வமாக என் கணவர் என்னைப் பாராட்டுவது கூட ரசிக்கவில்லை எனக்கு.

சே! என்னோட பிரச்சினை தீரவே இல்லை. சேர்ந்திருக்கும் குப்பையை என்ன செய்வது? இன்றும் கனவெல்லாம் குப்பைதானா? யோசித்து யோசித்து எனக்கே இந்தத் தலைப்புல பதிவு போடலாம்னு தோன்ற ஆரம்பித்து விட்டது.

“குப்பை விஷயம் சொல்லுங்கோ….” பொறுமை போயே விட்டது எனக்கு.

“சானிடரி நாப்கின்ஸ், பாப்பாவோட டயபர்ஸ் எல்லாம் பேப்பர்ல சுத்தி சிவப்பு கலர் பேனாவுல பெருக்கல் குறி போட்டு தனியா வைக்கணுமாம். இப்போ மார்க்கர் பேனா வேற வாங்கணும்….!”

“காலைல லாரி வரும்…..செக்யூரிட்டி விசில் அடிச்ச ஒடனே குப்பையைப் போய் போட வேண்டும்…..”

இன்று காலையில் எழுந்ததிலிருந்து விசில் சத்தம் வருகிறதா என்றே பார்த்துக் கொண்டிருந்தேன். ஊஹூம்! ஒரு சமயம் நானே விசில் அடிக்கலாமானு கூட யோசித்தேன். லாரி வரணுமே!

பாதி சமையல் ஆகிக்கொண்டு இருந்தது. வாசலில் என்னவோ பேச்சு சத்தம். எட்டிப் பார்த்தேன். தினமும் குப்பை அள்ளும் வண்டி!

“கௌடா! கசா தகோண்ட் பர்லா?” (குப்பையை எடுத்துக்கொண்டு வரட்டுமா?)

“பன்னி…பன்னி…(banni, banni) – வாங்க வாங்க…”

அத்தனை குப்பை தொட்டிகளையும் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

“இது வெட், இது ட்ரை….” ஆரம்பித்த என்னை “இன்னிக்கு எல்லாவற்றையும் ஒண்ணா போடுங்க…..” என்ற குரல் அடக்கியது.

மாற்றங்களை ஏற்பது எத்தனை கஷ்டம்!

பி.கு. குப்பை கொட்டிய சந்தோஷத்தில் என் மனம் சொன்ன தலைப்பிலேயே பதிவும் எழுதிவிட்டேன்!

ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவு!

 

தலைப்பு எங்கே……?

‘நாமாக நாம்’ இருந்து யோசித்தால் எழுத விஷயம்  நிறையக் கிடைக்கும். சில சமயங்களில் நம் பதிவுகளிலிருந்தே புது புது விஷயங்கள் கிடைக்கலாம்.

தினமும் என் பதிவுகளை வாசிக்க வருபவர்கள் எதைத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்பேன். பாதிக்கு மேற்பட்டவர்கள் ‘உடல் மெலிய’ ‘இரண்டு மாதத்தில் உடல் இளைக்க’, ‘உடனடியாக இளைக்க’ என்று தேடிக் கொண்டு வந்திருப்பார்கள். அது எப்படி ‘உடல் மெலிய’ என்று என் வலைதளத்திற்கு வருகிறார்கள் என்பது பெரிய புதிர்!  நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்கு எப்படித்  தெரியும் என்பது அதைவிடப் புரியாத புதிர்!

அதேபோல அழகுக் குறிப்புகளுக்காகவும் என் வலைதளத்திற்கு வருவார்கள். ‘உடல் மெலிய’ குறிப்புகள் கொடுக்க நான் கொஞ்சம் (‘கொஞ்சம் அல்ல; நிறைய நீ யோசிக்க வேண்டும்’- இது என் மனசாட்சி) யோசிப்பேன். அழகுக் குறிப்பு கொடுக்க யோசிக்கவே மாட்டேன். அழகுக் குறிப்பு கொடுக்க அழகாக இருக்க வேண்டும் என்று இல்லையே!

‘உடல் மெலிய’ குறிப்பு கொடுக்க முடியாத குறையை ‘புகைப்படத்தில் ஸ்லிம் ஆகத் தெரிய’ குறிப்புகள் கொடுத்துப் போக்கிக் கொண்டேன்!

ஒரு வாசகி என்னுடைய ‘முகத்தின் அழகு மூக்குத்தியிலே’ படித்துவிட்டு மூக்குத்தி பற்றிய உங்கள் சொந்தக் கதையை எழுதுங்களேன் என்று கருத்துரை இட்டு இருக்கிறார். எழுதிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு, அவருக்கு விரைவில் எதிர்பாருங்கள் என்று பதிலும் எழுதி விட்டேன். மனதில் இப்போதே இப்போதே என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஏகத்துக்கு யோசனைகள்!

‘மூக்குத்தியும் நானும்’, ‘நானும் என் மூக்குத்தியும்’, ‘நானும் என் வைர மூக்குத்தியும்’(!!), நானும் என் 8 கல் வைர பேசரியும்’ (உனக்கே இது கொஞ்சம் ‘ஓவர்’ ஆகத் தெரியல?’ – மறுபடியும் மனசாட்சி!)

அடடா! எத்தனை அருமையான ‘பளபள’, ‘ஜிலுஜிலு’ தலைப்புகள்!

நிறையபேர் என்னைக் கேட்கும் கேள்வி இது:

பதிவு எழுதுவதால் என்ன பயன்? எனக்கு வியப்பாக இருக்கும். என்ன கேள்வி இது? படிப்பதனால் என்ன பயன்? படிப்பதுதானே? அதுபோலத்தான் இதுவும். என்ன பயன்? எழுதுவதுதான்! படிப்பதும் படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் தரும் இன்பம் வேறு எதில் கிடைக்கும்?

சில சமயம் தனிமையில் யோசிப்பதும் உண்டு. சற்று சிந்தித்தால் ‘பதிவர்’ என்ற அடையாளம் கிடைக்கிறது. எழுத்தாளர் என்றால் எதில் எழுதுகிறீர்கள் என்பார்கள். ‘ஓ!, நான் அந்தப் புத்தகம் படிப்பதில்லை’ என்று பதில் வரும்.

பதிவர் என்றால் இந்தக் கேள்வியே வராது. நம் எழுத்துக்கள் அச்சில் வருமா, வராதா என்ற கவலை இல்லை; நாமே அச்சேற்றி விடலாம். இதைவிடப் பயன் வேறு என்ன வேண்டும்?

அடுத்து என்ன எழுதுவது என்று மனதில் சதா ஒரு சிந்தனை, அதற்கான தேடல்கள், ஆயத்தங்கள்  இவை நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இந்த ஒரு பலன் போதாதா?

திரைப்படத்துக்கும் மேடை நாடகத்துக்கும் உள்ள வேறுபாடுதான்  பதிவர் என்பதற்கும் எழுத்தாளர் என்பதற்கும்  என்று கூடச் சொல்லலாம். திரைப்படம் வெளிவந்த பிறகே விமரிசனம். மேடை நாடகங்கள்  அரங்கேறும்போதே கைத்தட்டல் அல்லது அழுகின தக்காளிகள் – இரண்டுமே பறக்கும்!

பத்திரிகை வெளிவந்தபின் தான் நம் எழுத்து வெளிவந்திருக்கிறதா என்றே தெரியும். வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டவுடன் பின்னூட்டம் வந்துவிடும் என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம் இல்லையா?

முகம் தெரியாத பலரின் நட்பு கிடைக்கும். எந்தவித பாசாங்குகளும் இல்லாத, எழுத்துக்களை மட்டுமே அடையாளமாகக் கொண்ட நட்பு! பதிவு நன்றாக இருந்தால் பின்னூட்டம் இடலாம். இல்லையென்றால் சும்மா இருந்துவிடலாம்! எவ்வளவு சௌகரியம்! சிலசமயங்களில் நம் கருத்துக்களையும் நாசூக்காகத் தெரிவிக்கலாம். யாரும் யாருக்கும் எந்தவிதத்திலும் கட்டுப் பட்டவர்கள் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட, பிறர் எழுதும் எழுத்துக்களிலிருந்து நாம் கற்பது இருக்கிறதே, அதை எதனுடனும் ஒப்பிட முடியாது.

படிப்போம், எழுதுவோம் கற்போம்!

 

 

தொழிற்களத்தில் என் இன்றைய பதிவு:

http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_7945.html