பூக்களைப் ……..பறிக்காதீர்…….!

தும்கூரில் எங்கள் பள்ளியைச் சுற்றி விதவிதமான செடிகள், மரங்கள்; பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். ஒவ்வொரு வகுப்பறையை சுற்றிலும் வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகள்; பள்ளி வளாக சுற்று சுவரை ஒட்டினாற் போல விண்ணை முட்டும் உயரமான மரங்கள். பள்ளியில் நுழைந்த உடன் வேறு ஏதோ உலகத்திற்கு வந்து விட்டாற்போல ஒரு சூழ்நிலை. கண்ணுக்கு அத்தனை குளுமையாக இருக்கும். பள்ளியை சுற்றிப் பூங்காவா? அல்லது பூங்காவிற்குள் பள்ளியா என்று கேட்கத் தோன்றும். ரோஜாக்களில் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையையும் இங்கே பார்க்கலாம். எப்படி இயற்கை அன்னை இந்த இடத்தில் மட்டும் இத்தகைய எழிலைக் காட்டுகிறாள் என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும்.

நான் சங்கீத ஆசிரியை. என் வேலை பிரார்த்தனையை நடத்துவது. அது முடிந்தபின் எனது வகுப்பு உடனடியாக இருந்தால் அங்கேயே இருப்பேன். இல்லையென்றால் வீட்டிற்கு வந்து விடுவேன்.

ஒரு நாள் எங்கள் தலைமை ஆசிரியர் பிரார்த்தனை முடிந்தவுடன் என்னைப் பார்த்து “ஒரு ‘நேச்சர் வாக்’ போய்விட்டு வாருங்களேன்” என்றார்.

“’நேச்சர் வாக்……’ ?” நான் புரியாமல் பார்த்தேன்.

“அதோ, அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்…” என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் ஒரு ஆசிரியை குழந்தைகளுடன் பள்ளியைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். நானும் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு புதுமையான அனுபவம் எனக்காகக் காத்திருந்தது அங்கே. அந்த ஆசிரியை குழந்தைகளுக்கு ஒவ்வொரு செடியின் பெயரையும் சொல்லி, அது செடி வகையா, கொடி வகையா, புதர் வகையா, அல்லது நீண்டு நெடிதுயர்ந்து வளரும் மரமா  என்று சொல்லிக் கொண்டே வந்தார். அதுமட்டுமல்ல. ஒவ்வொரு குழந்தையும் செடிகளை தொட்டுப் பார்த்து அதன் இலை அமைப்பு, தன்மை, அளவு, வண்ணம் ஆகியவற்றை அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொல்லிக் கொண்டிருந்தன. அதேபோல பூக்களின் பெயர்கள், பூக்கும் காலம், அந்தச் செடியை எப்படிப் பயிரிடுவது – அதாவது விதையை நடவேண்டுமா அல்லது பதியன் போட வேண்டுமா என்ற விவரங்களையும் ஆசிரியை சொன்னார். சிறிது தூரம் சென்றபின் குழந்தைகள் தாங்களாவே அங்கிருந்த செடிகளைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.

“புதிதாக நட்ட செடிகளைப் பற்றி மட்டும்தான் நான் சொல்லுவேன். இந்தச் செடிகளை அவர்கள் பலமுறை பார்த்திருப்பதால், அவர்களுக்கே எல்லாம் தெரியும். வேறு எந்த இடத்தில் இந்தச் செடிகளைப் பார்த்தாலும் இந்தக் குழந்தைகளால் பெயர் சொல்லி அடையாளம் காட்ட முடியும்.” என்று எனக்கு விளக்கினார் ஆசிரியை.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகள் அவர்களது ஆசிரியைகளுடன் இந்த ‘நேச்சர் வாக்’ பண்ணுகிறார்கள்.

நேச்சர் வாக்’ முடித்துக் கொண்டு வந்த என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் மிகப் பெருமையாக சொன்னார்: “குழந்தைகளின் கையாலேயே பல செடிகளை நடச் செய்கிறோம். நட்டபின் தினமும் நீர் ஊற்றி அவற்றைப் பராமரிப்பது அவர்கள்தான். முளை விடுவதிலிருந்து ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். இதனால் இயற்கை தங்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்று சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகள் உணருகிறார்கள். எங்கள் பள்ளியில் ‘புற்களின் மேல் நடக்காதே’, ‘பூக்களைப் பறிக்காதே’ என்ற அறிவிப்பு பலகை கிடையாது. குழந்தைகள் இயற்கையைப் பேணுவது தங்கள் கடமை என்று பள்ளிப் பருவத்திலேயே தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.”

பிஞ்சுக் குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களால் தீண்டப்படுவதாலேயே இயற்கை இப்படி எழில் கோலம் காட்டுகிறாள் என்று எனது சந்தேகத்திற்கும் விடை கிடைத்தது அவரது பேச்சிலிருந்து. மனது நிறைந்து போயிற்று.

நானும் என் கணவரும் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் தினசரி நடைப் பயிற்சி செய்யும் போது இந்த நிகழ்ச்சி அடிக்கடி எனக்கு நினைவுக்கு வரும். எங்களைப் போல நிறைய பேர் நடப்பதற்காக வருவார்கள். பலபேரின் கையில் கைபேசி இருக்கும். அதில் பேசியபடியே நடப்பார்கள். பெங்களூருக்கு ‘பூங்கா நகரம்’ என்றே பெயர். எத்தனை பேருக்கு இயற்கையை ரசிக்கத் தெரிகிறது?

இப்படி ‘நேச்சர் வாக்’ பண்ணுவது மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது; நமது கவனம் கலையாமல் இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது என்று இன்று காலை செய்தித்தாளில் படித்தவுடன் எனக்குத் தும்கூர் பள்ளி நினைவு ஏகமாக வந்து விட்டது.

அதன் விளைவாக பூத்ததுதான் இந்தப் ‘பூக்களைப் பறிக்காதீர்”

உங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறதா?

 

 

 

 

 

 

உங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறதா? இல்லையென்றால் உடனே உடனே ஒன்று வாங்கி எல்லோருக்கும் கண்ணில்படும் படியாக மாட்டுங்கள். காரணம் சொல்லுகிறேன். உலக வரைபடத்தைப் பார்ப்பது மிக அருமையான பொழுது போக்கு. உங்கள் குழந்தைக்கு உலக வரைபடத்தைக் காட்டி நிறைய சொல்லிக் கொடுக்கலாம். Map reading என்பது எல்லா வயதினருக்கும் ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயமாக இருக்கும்..

பல சமயம் எனக்கு இந்த மேப் ரீடிங் பல விஷயங்களை அறிய உதவி இருக்கிறது.

என் அக்கா பிள்ளைக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தைக்கு 5 வயதில் ஸ்ரேயா என்று ஒரு அக்கா.

“தங்கச்சிப் பாப்பா பெயர் என்ன?” என்றேன் அவளிடம்.

அவள் “மேக்னா” என்றாள்.

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம். எந்தப் பெயரைக் கேட்டாலும் என்ன அர்த்தம் என்று கேட்பேன். இப்போதும் அதேபோலக் கேட்டேன்.

“ஒரு நதியின் பெயர்” என்றாள் ஸ்ரேயா.

நான் சிரித்துக் கொண்டே “எந்த நாட்டில்…..?” என்றேன்.

ஸ்ரேயா உடனே என்னை அழைத்துப் போய் அவர்கள் வீட்டில் மாட்டியிருந்த உலக வரைபடத்தைக் காண்பித்து “இதோ பாரு சித்தி, வங்க தேசத்தில் ஓடும் ஒரு நதியின் பெயர் மேக்னா” என்றாள். நான் அசந்து போனேன்.

வங்க தேசத்தில் ஓடும் ஒரு முக்கியமான நதி மேக்னா. பிரம்மபுத்ரா நதியிலிருந்து பிரியும் இந்த நதி கங்கையுடன் சேர்ந்து கங்கை படுகையை ஏற்படுத்திவிட்டு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மேக்னா நதியைப் பற்றி இத்தனை செய்திகளையும் (இன்னும் நிறைய செய்திகளையும்) அந்தக் குழந்தை சொன்ன ஒரு செய்தியிலிருந்து தெரிந்து கொண்டேன்.

இதைப் போல இன்னொரு அனுபவம். ஒரு முறை குடும்பத்துடன் கர்நாடகாவிலுள்ள கெம்மணங்குடி என்ற மலைபிரதேசத்துக்குப் போயிருந்தோம். 4 நாட்கள் தங்கலாம் என்று போனவர்கள் ஒரே நாளில் கீழே இறங்கிவிட்டோம். வேறு எங்கு போவது? மெதுவாக காரை ஓட்டிக் கொண்டு வந்தார் என் கணவர். வழியில் ஒரு பேருந்து நிலையம். வண்டியை நிறுத்தி உள்ளே விசாரிக்கப் போனோம். அங்கு ஒரு வரைபடம். அதைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு உடுப்பி போய் கிருஷ்ணனைசேவிக்க வேண்டும் என்று தீராத ஆசை. நாங்கள் அப்போது நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து உடுப்பி 100 கி.மி. தூரத்தில் இருப்பது அந்த வரைபடத்திலிருந்து தெரிய வந்தது.

எந்த மாநிலத்துக்குப் போனாலும் அதன் வரைபடத்தை வாங்கிவிடுவேன். என் கணவர் கார்  ஓட்டும்போது முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு வழி காட்டுவது எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.

சின்ன வயதில் உலக வரைபடத்தை பார்க்கும் போது உலகம் உருண்டை என்கிறார்களே, ஆனால் எல்லா நாடுகளும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றனவே என்று தீராத சந்தேகம். தையரியத்தை வரவழைத்துக் கொண்டு லீலாவதி டீச்சரை கேட்டே விட்டேன். அவர் உடனே “மக்கு! மக்கு! உலக உருண்டையை பார்த்ததில்லையா? ஆபீஸ் ரூமிலிருந்து கொண்டு வா!” என்று சொல்லி ஒவ்வொரு நாடும் எங்கெங்கு இருக்கிறது என்று விளக்கினார். பிறகு உலக வரைபடத்தை க்ளோப் வடிவில் மடித்து “இப்போது பார், உலகம் உருண்டையாக இருக்கிறதா?” என்றார். எனது மேப் ரீடிங் ஆசைக்கு லீலாவதி டீச்சரும் ஒரு காரணம்.

வேர்ட்பிரஸ் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து உலக வரை படத்தின் மேல் எனக்கு ஒரு தனி மதிப்பு! ஏன் தெரியுமா? தினமும் எனது எழுத்துக்களை எத்தனை பேர் எந்தெந்த நாட்டிலிருந்து படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வருகிறதே!

கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. குழந்தைகளுக்கு பொழுது போவது மிகவும் கஷ்டம். அவர்களுக்கு இந்த மேப் ரீடிங் பற்றி சொல்லிக் கொடுங்கள். அவர்களை அருகில் உட்கார்த்திக் கொண்டு நீங்கள் பிறந்த ஊர்,

வளர்ந்த ஊர், நீங்கள் இதுவரை பார்த்த இடங்கள் என்று காண்பியுங்கள். ஒவ்வொரு இடத்தின் விசேஷங்கள், சுற்றுலா இடங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நாடுகளின் தலை நகரம், பேசும் மொழி, அங்கு ஓடும் நதிகள், சுற்றி இருக்கும் கடல்கள் என்று எத்தனை எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொடுக்கலாம்.

வீட்டில் ஒரு உலக வரைபடம் இருந்தால் போதும் நாம் இப்போது இருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து உலகையே ஒரு சுற்று சுற்றி வரலாம் – உட்கார்ந்த இடத்திலிருந்தே பைசா செலவில்லாமல்!

Joke courtesy: Cartoonstock