தங்ஜம் மனோரமா – ஆன்மாவைக் கிழிக்கும் குரல்

ஆழம் டிசம்பர் 2014 இதழில் வெளியான எனது கட்டுரை
 படம் நன்றி: கூகிள்
 பத்து வருடங்களாக  இருட்டில் இருந்த தங்ஜம் மனோரமாவின் கொலை பற்றிய அறிக்கை இப்போது வெளிவந்திருக்கிறது. காவல் கைதிகளின் மரணத்தைப் பற்றி ஆய்வு செய்யவேண்டுமென்று தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவு இட்டது.  2004 ஆம் ஆண்டு மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. . உச்ச நீதிமன்றத்தில் இப்போது சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை மனோரமா  மிகவும் கொடூரமான முறையில்  அசாம் 17வது ரைபிள்ஸ் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறது.
அதிர்ச்சியூட்டும் அறிக்கை
2004 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி மணிப்பூரி பெண்ணான தங்ஜம் மனோரமா தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு துணை இராணுவப்படையினரால் அவரது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டார். பீபிள்ஸ் லிபரேஷன் ஆர்மியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக நிச்சயமில்லாத ஒரு குற்றம் அவர் மேல் சுமத்தப்பட்டது. அடுத்த நாள் தங்ஜம் மனோரமாவின் உடல் அந்தரங்க உறுப்பிலும், தொடைகளிலும் பலமான துப்பாக்கிக் குண்டு துளைத்த காயங்களுடன்  வயல்வெளியில்  கண்டுபிடிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவரது ஆடையின் மீது இருந்த ஆண் விந்துக்கள் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவலை வெளிக்கொணர்ந்தது.
நீதித்துறை விசாரணைக் கமிஷன் கொடுத்துள்ள இந்த அறிக்கை, ஆயுதப் படை 17 ஆம் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் சித்திரவதைக்கு உள்ளான மனோரமாவின் கடைசி மணித்துளிகளை மிகத் தெளிவாக விவரிக்கிறது. இந்த கொலையின் விளைவாக  நாடு முழுவதும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு – முக்கியமாக நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவால் 2013 இல் கேட்டுக்கொள்ளப் பட்டது..
‘மிகுந்த அதர்ச்சி கொடுத்த காவல் நிலைய மரணங்களில் இதுவும் ஒன்று’ என்று விசாரணக் குழுவின் தலைவர் சி.உபேந்திர சிங், மணிபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தனது அறிக்கையில் எழுதினர். மனோரமா பலம் பொருந்திய அசாம் 17ஆம் துப்பாக்கிப் படைப்பிரிவினரால் ஜூலை 10-11 ஆம் தேதி இம்பால் கிழக்கு மாகாணத்திலிருக்கும் அவரது இல்லத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், பிறகு அவரது இறந்த உடல் பலத்த துப்பாக்கிக்குண்டு துளைத்த  காயங்களுடன் காரியன் யாயரிபோக் காவல் நிலையம் அருகே 2 கி.மீ. தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விவரமாகக் கூறுகிறது. மனோரமாவின் இளைய சகோதரன் தங்ஜம் பாசு ‘ராஜூ சாச்சா’ என்று ஹிந்தி திரைப்படத்தை அந்த நள்ளிரவில் பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளில் அசாம் ரைபிள்ஸ் ஆட்கள் வீட்டினுள் பலத்த ஓசையுடன் நுழைந்தனர். அம்மாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த மனோரமாவை பிடித்து அவர் ‘அம்மா, அம்மா இவர்களை நிறுத்து’ என்று அலற அலற இழுத்துக் கொண்டு சென்றனர். அவரது வீட்டின் முன்பகுதியிலேயே அவரது குடும்பத்தவர் கண் முன்னாலேயே அவர் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது சகோதரர் பாசு,’அந்தப் படையாட்கள் கேட்ட கேள்விகளுக்கு அவள் மங்கிய குரலில் முணுமுணுப்பாக எனக்குத் தெரியாது என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பிறகு அவளை வெளியே அழைத்துச் சென்றனர்’ என்று சொன்னதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அசாம் 17வது ரைபிள்ஸ் தாக்கல் செய்த இரண்டு முதல் அறிக்கைகள் மனோரமா அவர்களை கென்வுட் மாற்றம் சீன குண்டுகளையும் ஏகே 47 துப்பாக்கிளையும் மீட்பதற்காக அழைத்துச் சென்றதாகவும், அவர் தப்பிக்க முயலவே அவரை கால்களில் சுட்டதாகவும், இரத்தப்போக்கு அதிகமாகி அவர் இறந்துவிட்டதாகவும் கூறுகின்றன.
காவல்துறை இந்த வழக்கின் விசாரணையை அசாம் ரைபிள்ஸ்-இன் சுயேச்சையான விருப்பத்திற்கும், கருணைக்கும் விட்டுவிட்டதாக விசாரணைக் குழு குற்றம் சாட்டியது. அசாம் ரைபிள்ஸ், ஆயுதப்படையினரை இந்த வழக்கில் எப்படித் தூண்டிவிட்டனர் என்றும் விவரிக்கிறது இந்த அறிக்கை. ஆயுதப்படையினர் சுட்ட 16 குண்டுகளில் ஒன்று கூட மனோரமாவின் கால்களில் பாயவில்லை; அவர் தப்பிக்க முயன்றாதாகக் கூறுவது பச்சை போய் என்று விசாரணைக் குழு கூறுகிறது. 37 சாட்சிகளை விசாரித்தது இந்தக் குழு. அவர் உடலில் காணப்பட்ட முக்கால்வாசி காயங்கள் அவர் ஒன்றும் செய்ய இயலாதவராக இருந்தபோது சுடப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள். சில காயங்களைப் பார்க்கும்போது அவர் பாலியல் வன்முறைக்கும் ஆளானார் என்று தெரிகிறது என்றும் விசாரணைக் குழு கூறுகிறது.
இந்தக் கொலையைத் தொடர்ந்து ஒரு வினோதமான போராட்டம் நாட்டின் கவனத்தை கவரும் வகையில் நடந்தது. 2004, ஜூலை மாதம் 15 ஆம் தேதி முப்பது பெண்கள் – 45 வயதிலிருந்து 73வயதுவரை உள்ளவர்கள் – நிர்வாணமாக இம்பாலின் வீதிகளில் நடந்து அசாம் ரைபிள்ஸ் இருந்த கங்கள கோட்டைக்கு வந்தனர். ‘இந்திய இராணுவமே! எங்களை கற்பழி! நாங்கள் மனோரமாவின் அம்மாக்கள்!’ என்று இவர்களைப் பார்த்து விக்கித்துப் போய் நின்ற படைவீரர்களைப் பார்த்து கூக்குரலிட்டனர். இவர்கள் எல்லோருமே சாதாரணப் பெண்கள் – சிலருக்கு மட்டுமே மனோரமாவின் கொலைக்கு முன் அரசியல் அறிமுகம்  இருந்தது. இந்தப் பெண்கள் எல்லோருக்கும் கணவன், குழந்தைகள் சிலருக்கு பேரக்குழந்தைகள் கூட இருந்தனர். ஆனால் இதெல்லாம் அவர்களை இந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்க வைக்கவில்லை. ‘நாங்கள் யாருமே மனோரமாவை சந்தித்ததில்லை. ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை எங்களை அச்சுறுத்துகிறது. அரசு இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது மன்னிக்கமுடியாத குற்றம். ஒரு நாகரீக நாடு எப்படி இந்த மாதிரி விஷயத்தில் அமைதி காக்க முடியும்? ’மனோரமாவின் குண்டு துளைக்கப்பட்ட உடலைப் பார்த்த போது எங்கள் இதயம் நெருப்பில் வெந்துபோனது. அசாம் ரைபிள்ஸ் ஆட்கள் அவர்கள் செய்த கற்பழிப்பை மறைக்கக் அவளது அந்தரங்க உறுப்பில் துணியை அடைத்து அவளது உடம்பின் வழியே  குண்டு வெடித்திருக்கிறார்கள். அவர்களது வேலை முடிந்தபின் அவளது உடல் பயங்கரமான போர் நிகழ்ந்து முடிந்த போர்க்களம் போல இருந்தது’, என்று இந்த பெண்கள் கூறினார்கள்.
 ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA)
இந்த சட்டம் இந்தியப் பாராளுமன்றத்தால் 1958 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தேதி இயற்றப்பட்டது. இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களான அருணாச்சல் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் ‘கலவரப்பகுதிகள்’ அதாவது ‘அமைதி குறைவானப் பகுதி’ என்று சட்டம் குறிப்பிடும் இடங்களில் இந்தப் படையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்குகிறது. இந்தச் சட்டம் பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை (ஜம்மு காஷ்மீர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டம் என விரிவு படுத்தப்பட்டது.
மாநிலங்கள் தங்கள் பாதுகாப்பு பணிகளை தாங்களே நிர்வகித்து வந்தாலும், சில சமயங்களில் – உதாரணமாக தேர்தல் காலங்களில் – வழக்கமான பணிகளையும் பார்த்துக்கொண்டு கூடுதல் பொறுப்புகளை நிறைவேற்ற  முடியுமால் போகலாம்.  இதுபோன்ற தருணங்களிலும், தொடர்ந்து போராட்டங்கள் அல்லது புரட்சி ஏற்படும் சமயங்களில் – குறிப்பாக நாட்டின் எல்லைப் பகுதிகளில் அரசிற்கு அபாயம் வருமேயானால் அப்போது ஆயுதப்படைகள் இந்தப் பகுதிகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். இவர்களுக்கு எவரையும் கைது செய்யவும், சோதனை இடவும், கலவரம் ஏற்படும் சமயங்களில் சுடவும் அதிகாரங்கள் வழங்கப்படும்.
ஐரோம் சானு சர்மிளா
மார்ச் 14, 1972ஆண்டு பிறந்த சர்மிளா மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படுகிறார். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும், அதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட விளைவுகளுக்கும் காரணம் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம். இதை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2000 ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் பெண் இவர். உலகின் நீண்ட நாள் உண்ணாவிரதப் போராட்டமான இது 500 வாரங்களை தொட்டுவிட்டது.
2000ஆம் ஆண்டு நவம்பர்  2 ஆம் தேதி மலோம் என்ற சிற்றூரில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பத்து குடிமக்கள் அசாம் ரைபிள்சினால் சுட்டப்பட்டு மரணமடைந்தனர். இந்த நிகழ்வை மனித உரிமை போராட்டக்காரர்கள் ‘மலோம் படுகொலை’ என்று குறிப்பிடுகிறார்கள். சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு நீர் உண்ணாமல் தனது போராட்டத்தை ஆரம்பித்தார். போராட்டக்காரர்கள் என்று சந்தேகப்படும் எவரையும் காலவரையறையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பது இவரது முதல் கோரிக்கை. பிடிபட்டவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குதல், வேண்டுமென்ற காணாமல் போகச் செய்வது, நீதித் துறை சாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்தச் சட்டமே காரணம் என்று மனித உரிமைப் போராட்டக்காரர்கலும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.
உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய மூன்றாவது நாளே சர்மிளா ‘தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக’ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். அவரது ஆரோக்கியம் சீர் கெட்டதால் வலுக்கட்டாயமாக மூக்கு வழிய ஆகாரம் கொடுக்கப்பட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒருவரை ஓராண்டுக்கு மட்டுமே சிறையில் வைக்க முடியும் என்பதால் சர்மிளாவை ஒவ்வொரு வருடமும் விடுதலை செய்துவிட்டு மறுபடி கைது செய்து காவலில் வைக்கிறார்கள்.
இவரது உண்ணாவிரதப் போராட்டம் 14வது வருடத்தை தொட்டிருக்கிறது. பல அரசியல் தலைவர்களும், கட்சிகளும் இந்த போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டும் இவர் மறுத்துவிட்டார். இந்தக் கொடுமையான சட்டம் திரும்பப் பெற்றால் ஒழிய இந்த போராட்டத்தை தான் கைவிடுவதாக இல்லை என்கிறார் சர்மிளா. சர்மிளாவின் போராட்டம் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இரானிய மனித உரிமை ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான ஷிரீன் எபடி சர்மிளாவை சந்தித்து தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
‘எனக்கு வாழ்க்கையின் மேல் பிடிப்பு இருக்கிறது. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. எனக்கு வேண்டியது நீதியும் அமைதியும்’ என்கிறார் சர்மிளா. அமைதியை நிலைநாட்டுவதில் இவரது மனஉறுதியையும், தைரியத்தையும் பாராட்டி ரவீந்திரநாத் தாகூர் விருது கொடுக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசிற்கும் 2005 ஆம் ஆண்டு இவரது பெயர் கௌஹாத்தியில் உள்ள அரசு சாரா நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
இவரது முயற்சிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இவரது போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தங்ஜம் மனோரமாவுக்கு எதிராக இழைப்பட்டுள்ள அநீதியை எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண்ணுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு அநீதியாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது ஆபத்தானது. அனைவரும் ஒன்றுபட்டு உரத்தக் குரலில் இதனை எதிர்க்க வேண்டும். மக்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டாக வேண்டிய அவல நிலை இனியொருமுறை இன்னொரு உயிருக்கு ஏற்படக் கூடாது.

ஆனந்தமும் அழுகையும்

Mary com
‘சரிதாவின் உணர்வுகள் எனக்குப் புரிகின்றன. நடந்ததைப் பற்றி விமரிசிக்க நான் விரும்பவில்லை.அரையிறுதியில் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவரது வலி எனக்குப் புரிகிறது. அவர் எழுப்பிய பிரச்னைக்கு எனது முழு ஆதரவு உண்டு. ஆனால் நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் வேறு வகையில் எனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பேன். எப்படி என்று இப்போது சொல்லத் தெரியவில்லை’, என்கிறார் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.

சரிதா தேவி, மேரி கோம் இருவருமே மணிப்பூரில் பிறந்து வளர்ந்த குத்துச்சண்டை வீராங்கனைகள். இந்த வருட ஆசிய விளையாட்டுப் போட்டி முடிவுகள் இருவருக்கும் வேறு வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒருவருக்கு ஆனந்தம்; ஒருவருக்கு அழுகை.

ஆனந்தம்
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம், ஐந்து முறை உலக ஆரம்பநிலை குத்துச்சண்டை வீராங்கனை பட்டம், பத்மபூஷன் விருது என்று இவ்வளவு விருதுகள் கிடைத்தும், சிறிது கூட தலைக்கனம் இல்லாதவர்; தன் மேல் முழு நம்பிக்கை உடையவர் என்று மேரி கோமைப் புகழ்ந்து தள்ளுகிறது ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை. ஐந்து அடி இரண்டங்குல உயரம் தான் ஆனால் வெளிப்படையான பேச்சு, வலிமை மிக்க உடலமைப்பு, அளப்பரிய மனவலிமை இவற்றால் நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார் மேரி. நிமிர்ந்து உட்கார்ந்து பேசுகிறார். இவரது கனவுகளை பற்றிக் கேட்டால், அவை நிச்சயம் நிறைவேறும் என்ற முழு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகிறார்.

மாங்க்டே சுங்க்னேய்ஜங் மேரி கோம் மணிப்பூரின் உள்ள பழங்குடி இனக் குடும்பத்தில் ஏழ்மையான பெற்றோர்களுக்கு கங்கதெய் கிராமத்தில் பிறந்தவர். அவரது பாட்டி அவருக்கு செல்வச்செழிப்பு என்று அவர்களது மொழியில் பொருள் படும் ‘சுங்க்னேய்ஜங்’ என்ற பெயரை இட்டார். சிறுவயதில் பள்ளிக்கூடம் போய் வருவதைத்தவிர கூடப்பிறந்தவர்களைக் கவனித்துக் கொள்வதும் மேரியின் வேலை. ஹாக்கி, கால்பந்து, தடகள விளையாட்டு என்று எல்லாவிதமான விளையாட்டுகளும் விளையாடுவார். இவற்றுடன் கூட தனது பெற்றோர்களுக்கு வயலில் உதவியும் செய்வார். மணிபுரி குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் 1998 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் பெற்ற தங்க மெடலைப் பார்த்து ஈர்க்கப்பட்டு மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கு தடகளப் பயிற்சி பெற வந்தார். கிழிந்த, மோசமான உடையுடன் பதின்ம வயது மேரி பயிற்சியாளர் கே. கோசனா மைய்தெய் –ஐ இந்திய விளையாட்டு ஆணையத்தில் சந்தித்து தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ‘எல்லோரும் படுக்கப் போனபிறகு மேரி குத்துச்சண்டை பயிற்சி செய்வார்’ என்று அவரது பயிற்சியாளர் மேரியின் ஆரம்ப கால பயிற்சிகளை நினைவு கூறுகிறார். அவரது குறிக்கோள் எளிமையானது: ஏழ்மையிலிருந்து தன் குடும்பத்தை மீட்பது, தனக்கென ஓர் பெயரை சம்பாதிப்பது.

உண்மையான பெயரை விட்டுவிட்டு ஏன் மேரி என்ற பெயர்? ‘விளையாட்டில் எனக்கென ஒரு இடம் கிடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது எல்லோருக்கும் எளிதாக வாயில் நுழையக்கூடிய பெயராக இருக்கட்டும் என்று ‘மேரி’ என்ற பெயரை வைத்துக் கொண்டேன். கிறிஸ்துவ மதத்தின் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்தப் பெயர் காட்டுகிறது’ என்று பதிலளிக்கிறார்.

தனது 12 வருட அனுபவத்தில் மேரி பலவகையில் தனது தகுதியை உயர்த்திக்கொண்டே போக வேண்டியிருந்தது. விளையாட்டில் முதலிடத்தைப் பிடிப்பதை விட எல்லோரையும் விட முன்னிலையில் இருப்பது மிக அவசியமாக இருந்தது. தனது குத்துச்சண்டை அனுபவம் பற்றி இப்படிச் சொல்லுகிறார் மேரி: ‘என்னைவிட பலசாலிகளை எதிர்த்துப் சண்டையிடுவது கடினம். அவர்கள் கொடுக்கும் அடியும் பலம் வாய்ந்ததாக இருக்கும். நான் அவர்களை மின்னல் வேகத்தில் அடித்துவிட்டு அவர்கள் கையில் அடிவாங்குவதை தவிர்த்துவிடுவேன். எனது எதிரியை காயப்படுத்துவது எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். அதிலும் அழகான பெண்களைக் காயப்படுத்துவது வருத்தமாக இருக்கும். என் எதிரியைக் காயப்படுத்தி விட்டால் சண்டை முடிந்தவுடன் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவேன். போட்டியில் களமிறங்கி விட்டால் என் சிந்தனை சண்டையைப் பற்றியே இருக்கும். ஒரு கணநேர கவனக்குறைவு ஆட்டத்தை சிதற அடித்துவிடும். எப்போதுமே நேர்மறையான எண்ணங்களே என் மனதில் நிறைந்திருக்கும். ‘குழந்தைகளைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ கவலைப்படாதே. உன் முழு கவனத்தையும் ஆட்டத்தில் செலுத்து’ என்று என் கணவர் அங்கோலர் சொல்லுவார். இத்தனை வருடங்களில் எனது பலம் பலவீனம் இரண்டையும் நன்கு அறிந்துள்ளேன்’

2001 ஆம் ஆண்டு தில்லியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கோலரை சந்தித்தார் மேரி. மூன்று வருடங்கள் கழித்து அவரை மணந்து கொண்டார். ‘மண வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு விளையாட்டில் முழு கவனம் செலுத்த விரும்பினேன். அங்கோலருக்கு திருமணத்துக்குப் பிறகும் குத்துச்சண்டையை தொடர விரும்பும் எனது லட்சியம் தெரியும்’.

2007 இல் எம்.சி. மேரி கோம் அகாதமியை இம்பாலிலுள்ள லாங்கோல் விளையாட்டு கிராமத்தில் துவக்கினார் மேரி. அடிக்கடி பயிற்சிக்காகவும் போட்டிகளுக்காகவும் வெளியூர் சென்றாலும் நேரம் கிடைக்கும்போது தனது மாணவர்களுடன் செலவிடுகிறார். ‘என்னிடம் வரும் ஆண் பெண் யாராக இருந்தாலும் பயிற்சி கொடுக்கிறேன். மணிபூருக்கு வெளியில் இருப்பவர்களை சேர்த்துக்கொள்வதில்லை. என்னுடன் 15 மாணவர்கள் என் வீட்டிலேயே இருக்கிறார்கள். அவர்கள் தங்குமிடம் உணவு ஆகியவற்றை நாங்கள் கவனித்துக் கொள்ளுகிறோம். மாணவர்களின் உடல் தகுதியைப் பார்த்து அவர்களை சேர்த்துக் கொள்ளுகிறேன். சேர்ந்த சில நாட்களில் சிலர் நின்றுவிடுவார்கள். இந்த விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி செய்ய மிகுந்த மனவலிமை வேண்டும். கடுமையான பயிற்சி இந்த விளையாட்டிற்கு முக்கியத் தேவை. நேரம் கிடைக்கும் போது ஓய்வு எடுத்துக்கொள்வேன். தினமும் பைபிள் படிக்கிறேன். பைபிளில் வரும் டேவிட் கோலியாத் கதையை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். டேவிட் மிகவும் சிறியவன். அவனால் எப்படி கோலியாத்தை வீழ்த்த முடிந்தது? நானும் மணிப்பூர் என்னும் சிறிய இடத்திலிருக்கும் சிறியவள். பிரார்த்தனையும், விடா முயற்சியும் இருந்தால் என்னால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியும். கூடவே கடவுளின் அருளும் வேண்டும்’ என்கிறார் மூன்று குழந்தைகளின் தாயான மேரி கோம்.

அழுகை

01-sarita

தங்க பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வெண்கல பதக்கத்தையும் அழுது கொண்டே ஏற்க மறுத்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் சரிதா தேவி. அரையிறுதி சுற்றில் கொரிய வீராங்கனை பார்க் ஜி-னா விடம் தோற்றுவிட்டதாக நீதிபதிகள் அறிவித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை இவர். தீர்ப்பு சரியில்லை என்றார். பதக்கம் வழங்கும் விழாவின் போது தலையைக் குனிந்து கொண்டு கையைக் கட்டிக்கொண்டு மேடைக்கு வந்தவர் வெண்கலப் பதக்கம் கொடுக்கப்பட்ட போது வாங்கிக் கொள்ள மறுத்தார். இரண்டு அதிகாரிகள் பதக்கத்தை வாங்கிக்கொள்ள வற்புறுத்தியும் வாங்கிக் கொள்ளவில்லை. பதக்கம் கொடுத்து முடிந்தவுடன் மேடையை விட்டு இறங்கியவர், வெண்கலப் பதக்கத்தை அதிகாரியிடமிருந்து வாங்கிக் கொண்டு நேராக பார்க் ஜி-னாவிடம் சென்றார். அவர் தங்கள் நாட்டு வழக்கப்படி தலையைக் குனிந்து நன்றி சொல்லும்போது அவரது கழுத்தில் வெண்கலப்பதக்கத்தைப் போட்டார் சரிதா. ‘இது உங்களுக்கும், கொரியா நாட்டிற்கும். ஏனெனில் நீங்கள் வெண்கலப் பதக்கத்திற்கு மட்டுமே தகுதி பெற்றவர்’ என்று அவரிடம் தான் சொன்னதாக பிறகு சரிதா கூறினார்.

‘நான் உலகத்திலுள்ள எல்லா விளையாட்டு வீரர்களுக்காகவும் அநீதிக்கு எதிராகப் போராடினேன்’ என்று தனது செய்கையை நியாயப்படுத்துகிறார் சரிதா.

லைட்-வெயிட் பிரிவில் அரையிறுதி குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி கொரியாவின் பார்க் ஜி-னாவை அதிரடியாக கீழே வீழ்த்தியதை பார்த்த பார்வையாளர்கள், பார்க் ஜி-னாவை வெற்றியாளராக நடுவர் அறிவித்தவுடன் அதிர்ந்துதான் போனார்கள். கூச்சல் போட்டனர். இந்த முடிவு சரிதாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. வெள்ளிப் பதக்கம் – ஏன் தங்கப்பதக்கம் கூடக் கிடைத்திருக்கலாம். கைநழுவிப் போனது. அன்றே இதேபோல இரண்டு முரண்பாடான முடிவுகள் இரண்டுமே தென்கொரிய குத்துச்சண்டை வீரர்களுக்கு சாதகமாக அறிவிக்கப்பட்டது.

‘மூன்று நடுவர்களுமே கொரிய வீரருக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்ததிலிருந்து யார் வெற்றி பெற வேண்டுமென்று முதலிலேயே தீர்மானம் செய்திருப்பது தெரிகிறது. மோதிய இரு வீரர்களும் சமமாக சண்டையிட்டிருந்தால் இந்தத் தீர்ப்பை புரிந்து கொண்டிருக்கமுடியும். ஆரம்பத்திலிருந்தே இந்தப் போட்டியில் சரிதாவின் கை ஓங்கியிருந்தது’ என்று இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளர் ப்ளாஸ் இக்லேசியஸ் பெர்னாண்டஸ் கூறினார். சரிதாவிற்கும், கொரிய நாட்டைச் சேர்ந்த பார்க் ஜி-நாவிற்கும் இடையேயான அரையிறுதிப் போட்டி அமைதியாக ஆரம்பித்தாலும் போகப்போக சரிதாவின் வலிமை மிக்க குத்துகள் எதிராளியை நிலை குலையச் செய்தன. பாதியில் சரிதா தன் எதிராளியை குத்துச்சண்டை வளையத்திலிருந்த கயிறுகளின் மேல் தள்ளினார். சரிதாவின் அதிரடி குத்துக்களைத் தாங்க முடியாமல் தட்டுத்தடுமாறி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார் பார்க் ஜி-னா. ஆனாலும் 10-9 என்று பார்க்கிற்கு ஆதரவாக புள்ளிகளை நடுவர்கள் கொடுத்தனர். இரண்டாவது சுற்றில் சரிதா தன் அதிரடிக் குத்துக்களை தொடர்ந்து கொடுக்க, இரண்டு நடுவர்கள் சரிதாவிற்கும் மூன்றாமவர் கொரியனுக்கும் புள்ளிகளைக் கொடுத்தனர்.

கொரியாவைச் சேர்ந்த விசிறிகள் தங்கள் நாட்டு வீராங்கனையை உற்சாகப்படுத்தியவாறே இருந்தனர். ஆனால் சரிதாவின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டுவிட்டனர். கொரிய வீராங்கனைக்கு ஆதரவாக நடுவர் தீர்ப்பு வழங்கியவுடன் அரங்கமே அமளி துமளி பட்டது. சரிதாவின் கணவர், ‘என்ன நடக்கிறது இங்கே? சரிதா தான் வெற்றி பெற்றிருக்கிறார். நீங்கள் கொரிய வீராங்கனைக்குக் கொடுத்துவிட்டீர்கள். இந்த விளையாட்டைக் கொன்று விட்டீர்கள்!’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

பத்திரிக்கையாளர்களிடம் சரிதா அழுதவாறே கூறினார்: ’இத்தனை தூரம் இந்தப் போட்டியில் வருவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் எங்களுக்குக் கிடைப்பது இதுதான். எனக்கு நேர்ந்த இந்தத் தவறு வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. எனது ஒரு வயதுக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன். நடுவர்கள் ஒரே நிமிடத்தில் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள்!’

பலத்த ஆலோசனைக்குப் பின் இந்திய குழு தனது அதிகாரபூர்வ எதிர்ப்பை தெரிவித்தது. நடுவர்கள் இதனை நிராகரித்தனர். நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து யாரும் கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்று பதில் கொடுக்கப்பட்டது. ‘சரிதா அதிகாரபூர்வமான தீர்ப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டு வீரருக்குரிய குணம் அவரிடம் இல்லை’ என்று ஆசியா விளையாட்டுக் கமிட்டி கூறுகிறது. சரிதா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிறகு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சரிதாவிற்கு கடுமையான எச்சரிக்கைக் கொடுத்திருக்கிறது. ‘ஒரு விளையாட்டு வீராங்கனையாக நடுவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு ஒரு சிறந்த இடம் கிடைத்திருக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் பதக்கத்தை வாங்க மறுத்ததன் மூலம் அவர் மற்ற விளையாட்டு வீராங்கனைகளின் மகிழ்ச்சியையும் கொன்றுவிட்டார்!’ என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவர் ஷேக் அஹமத் அல்-பஹாத் அல்-சபா கூறினார்.

‘இதைப் போன்ற புகார்கள் ஐந்து நேஷனல் ஒலிம்பிக் கமிட்டிகளிடமிருந்து வந்திருக்கின்றன. நாங்கள் இவற்றைக் குறித்து விரைவில் ஒரு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்’ என்று அஹமத் மேலும் கூறினார்.

மேரியின் வெற்றியும், சரிதாவின் அழுகாச்சியும் பலவருடங்களுக்கு நினைவில் நிற்கும்.

நவம்பர் 2014 ஆழம் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை

சீரழியும் பூங்கா நகரம்

              

 

 

ஆகஸ்ட் 2014 ஆழம் பத்திரிகையில் வந்திருக்கும்  எனது கட்டுரை

மண்டூர் மக்களுக்கு பெங்களூருவாசிகளின் மேல் தீராத கோபம். ‘உங்கள் நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கு சேரும் திடக்கழிவுகளை எங்கள் புழக்கடையில் கொண்டுவந்து கொட்டுவது எந்த விதத்தில் நியாயம்?’ என்று கேட்கிறார்கள். பெங்களூருவின் வெளிப்புற எல்லையில் இருக்கும் மண்டூர், தினந்தோறும் சுமார் 200 லாரி குப்பைகள்   கொட்டப்பட்டு பெங்களூரின் கழிவுத்தொட்டியாக மாறியிருக்கிறது.

 

கேள்வி கேட்பதுடன் நிற்கவில்லை மண்டூர் மக்கள். அங்கு வசிக்கும் திரு கோபால்ராவ் தலைமையில் ஒன்று சேர்ந்து தங்களுக்கு நேர்ந்திருக்கும் அநியாயத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். கர்நாடக முதல்வரை ஒரு நாள் மண்டூர் வந்து அழுகும் குப்பைகளால் அங்கு வீசும் துர்நாற்றத்தை அனுபவிக்கும்படியும், இதன் காரணமாக பல்வேறு வியாதிகளுக்கு அவர்கள் ஆளாவதையும் நேரடியாகப் பார்த்து ஆவன செய்யும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த மோசமான நிலைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற இறுதி எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்கள்.

 

பூங்கா நகரம் என்றும் வயதானவர்களின் சொர்க்கம் என்றும் அழைக்கப்பட்ட பெங்களூரு, இந்தியாவின் சிலிக்கன் வாலியாக மாற்றப்பட்டதில் சந்திக்கும்  முக்கியப் பிரச்னைகளில் இந்தக் கழிவு அகற்றும் பிரச்னையும் ஒன்று. மேடு பள்ளமான தெருக்கள், அகலம் குறைந்து வரும் நடைபாதைகள், பலமுறை காலக்கெடு தாண்டியும் முடிக்கப்படாத மெட்ரோ ரயில் கட்டுமானங்கள், மின்சாரப் பற்றாக்குறை, போதிய நீர் கிடைக்காமை, வற்றிவரும் ஏரிகள், அழிந்துவரும் பசுமை, மக்கள் வாழும் சின்னச்சின்ன தெருக்களில் கூட நெரிசலான ஆமைவேக போக்குவரத்து இவையெல்லாம் பெங்களூருவின் அதிவேக, திட்டமிடாத வளர்ச்சியின் அடையாளங்கள்.

 

பெங்களூருவின் ஜனத்தொகை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. கர்நாடகாவின் ஜனத்தொகையில் ஆறுபேர்களில் ஒருவர் பெங்களூருவில் இருக்கிறார்கள். 2011 மக்கள் ஜனத்தொகை கணெக்கெடுப்பின்படி கர்நாடகாவின் மொத்த ஜனத்தொகையான 6.11 கோடியில், பெங்களூரு நகரவாசிகளின் எண்ணிக்கை 96.21 லட்சங்கள். இந்தியாவின் பெருநகரங்களின் ஜனத்தொகை பெருக்கத்தில் பெங்களூரு முதலிடம் வகிக்கிறது. கர்நாடகாவின் 10 வருட ஜனத்தொகை பெருக்கம் 16 சதவிகிதம் என்றால் பெங்களூருவின் ஜனத்தொகை மட்டும் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது –பத்து வருடங்களில்.  ஜனத்தொகை பெருக்கத்தில் இந்தியாவின் தலைநகர்  டெல்லி கூட 21 சதவிகித ஜனத்தொகையுடன் இரண்டாவது இடம் தான். பெங்களூரு நகரத்தில் ஒரு சதுர கிலோமீட்டரில் 4,300 பேர்களுக்கு மேல் வாழ்கிறார்கள்.

 

‘ப்ராண்ட் பெங்களூரு’ ஒருங்கிணைந்த உலகளாவிய பொருளாதார சேவைக்கு முன்னோடி நகரமாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே இங்கு திறமை வாய்ந்த நபர்கள் நிறைந்திருந்தனர். தொழில்நுட்பதுறையின் வளர்ச்சி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் திறமைசாலிகளை பெங்களூருவிற்குள் வரவழைத்தது. இன்றைய தேதியில் சுமார் 10 லட்சம் நபர்கள் நேரடியாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், அதைச் சார்ந்த துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.

 

இவர்களைத் தவிர ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை செய்யும் இளம் பெண்கள் (விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்தக் குடும்பங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு தள்ளப்படுபவர்கள்), பெருகி வரும் பல மாடிக் கட்டிடங்களில் வேலை செய்யும் கட்டிடப் பணியாளர்கள், வேலை தேடி வருபவர்கள், தங்கள் ஊர்களைவிட்டு புலம் பெயர்ந்து வருபவர்கள் என பெங்களூருவின் தொழிலாள ஜனத்தொகை பல்வேறு வகையினர்.

 

பெங்களூருவில் பங்களாக்களும், தனி வீடுகளும் பெருகி வந்தாலும் குடிசைகளுக்கும் குறைவில்லை. இரண்டாம் நிலை நகரங்கள் என்று சொல்லப்படும் அஹமதாபாத், கொச்சி, விசாகப்பட்டினம், கோயமுத்தூர் ஆகியவை அந்தந்த மாநிலங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்  நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மட்டுமே மொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இரண்டாவது நிலை நகரங்கள் 26 இருந்தபோதிலும் பெங்களூருக்கு சரிசமமாக எந்த நகரமும் ஜனத்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. கர்நாடகாவின் இரண்டாவது பெரிய நகரமான ஹூப்ளி-தார்வாட்டின் கடந்த பத்து வருட ஜனத் தொகைப் பெருக்கம்  1.57 லட்சம் மட்டுமே.

 

கர்நாடகாவின்  முக்கியமான ஏற்றுமதி மென்பொருள். இதன் ஏற்றுமதி  பற்றிய புள்ளிவிவரங்கள் பெங்களூருவின் சரிசமநிலையற்ற வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். 2013-14 ஆண்டில் கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி 1.51 லட்சம் கோடி (அதாவது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 37 சதவிகிதம்). இதில் 95 சதவிகிதம் பெங்களூருவிலிருந்து மட்டுமே. இரண்டாம் நிலை நகரங்களான மைசூரு, மங்களூரு, ஹூப்ளி-தார்வாட் பகுதியிலிருந்து ஏற்றுமதி ஆகியிருப்பது  சின்னஞ்சிறு அளவே.

 

 

பெங்களூருவை மட்டுமே இலக்காக கொண்டு பலரும் இங்கு வர ஆரம்பித்த பின்னர் நிலம், வீட்டுமனை, வீடு போன்ற அசையாச் சொத்துக்களின் விலை வானுயரத்திற்கு உயர்ந்தது. மும்பை, தில்லி நகரங்களுக்குப் பிறகு நிலம், வீடு வாங்க, சொத்து சேர்க்க பெங்களூரு என்ற நிலை உருவாயிற்று. இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொண்ட நிலச்சுரண்டல்காரர்கள்  அரசியல் செல்வாக்குடன் மனைகளை வாங்கி விற்க ஆரம்பித்தனர்.  அடுக்குமாடிக் கட்டிடக் கலாச்சாரம் இங்கும் பரவ ஆரம்பித்தது. பசவனகுடி, சாம்ராஜ் பேட், நரசிம்ம ராஜா காலனி போன்ற பெங்களூருவின் பழைய இடங்களில் இருந்த பிரம்மாண்டமான தனி பங்களாக்கள் பலமாடிக் கட்டிடங்களாக மாறத் தொடங்கின. நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருக,  தெருக்களை அகலப்படுத்தபடுவதற்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்களை கட்டவும், பல நூறுஆண்டுகளாக வளர்ந்து நிழல் கொடுத்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. வானிலை மாறியது. மழை குறைந்தது. வெயில் கொளுத்த ஆரம்பித்தது. காற்றின் தூய்மை குறைந்தது.

 

திரு ஏ.டி. ராமசுவாமி தலைமையில் கூட்டு சட்டமன்ற குழு ஒன்று நிலச் சுரண்டல்களை கண்டுபிடிக்கவும், முன்னாள் அதிகாரி திரு வி. பாலசுப்பிரமணியம் தலைமையில் செயல்குழு ஒன்று சுரண்டப்பட்ட நிலங்களை மீட்கவும் அமைக்கப்பட்டன. பெங்களூரிலும், அதைச்சுற்றி இருக்கும் முக்கியப் பகுதிகளில் உள்ள நிலங்களும், ஏரிக்கரைகளும் அரசியல் செல்வாக்குப் பெற்ற பெரிய தலைகளின் உதவியுடன் சூறையாடப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 27,336 ஏக்கர் நிலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று இந்த குழுக்கள் தகவல் தெரிவித்தன.

 

‘அழுகி நாற்றமடிக்கும் குப்பை மலைகளும், கூடிய விரைவில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது என்பதை காட்டும் குறைந்து கொண்டே வரும் நிலத்தடி நீரின் அளவும்  நமக்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணிகள். இவை யாருக்குமே கேட்கவில்லையா? திடீரென வளர்ந்த பெங்களூரு நகரம் இப்போது எதிர்பாராத சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதைப்   பற்றி யாருமே கவலைப்படவில்லையே!’ என்று அங்கலாய்க்கிறார் திரு பாலசுப்பிரமணியம்.

 

ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியும், மனித வள தலைமைப் பொறுப்பாளர் மற்றும் கர்நாடக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழுவில் ஒருவருமான திரு மோகன் பை ‘பெங்களூரு நகரம் இந்தப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வரும்’ என்ற நம்பிக்கையை முன்  வைக்கிறார். ‘பெங்களூருவின் சவால் அதன் முன்னேற்றம்தான். கர்நாடகாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதமும், வரிகள் மூலம் வரும் வருமானத்தில் 65 சதவிகிதமும் பெங்களூரிலிருந்தே கிடைக்கிறது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வேண்டுமென்றே பெங்களூருவின் உள்கட்டமைப்பில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டன’ என்கிறார்.

 

குருவியின் தலையில் பனங்காய் என்பதுபோல சிறிய நகரமான பெங்களூரு இந்த திடீர் அசுர வளர்ச்சியில் – சரியான உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் – திணறுகிறது. கர்நாடக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழு சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.

 • பெங்களூரின் நகர வருமானம், மாநில வரிப் பணத்தில் ஒரு பங்கு, கடனுதவி இவைகளைக் கொண்டு அடுத்த 15 ஆண்டுகளில் 2,55,00 கோடி ரூபாய் பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவழிக்க வேண்டும்.
 • பெங்களூரைத் தவிர்த்து கர்நாடகாவிலுள்ள புதிதாக வளர்ந்து வரும் 7 தகவல் தொழில் நுட்ப மையங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

 

தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் பேராசிரியர் திரு நரேந்தர் பணி சொல்கிறார்: ‘நகரத்தின் வரிவருமானத்தை நகரத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்த வேண்டும் என்பது இயலாத காரியம். வருமானவரி, மக்களின் மற்ற நலன்களுக்காகவும் பயன்படுத்தப் பட வேண்டும். பெங்களூருவிலிருந்து வரும் அபரிமிதமான வரி, மற்ற நகரங்களின் பொருளாதார வருமானத்திறன் மேம்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. இதை முதலில் சரி செய்ய வேண்டும்’.

 

‘இந்தியாவின் நகரமயமாக்குதலில் சில குறிப்பிட்ட பாணிகள் தெளிவாக   காணக் கிடைக்கின்றன. கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஒரே ஒரு நகர வளர்ச்சியை மட்டுமே பார்க்கமுடியும். கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பெங்களூருவும் ஹைதராபாத்தும் அடைந்திருக்கும் வளர்ச்சி அந்த நகரங்களுக்கே பாதகமாக அமைந்திருக்கிறது. தெலுங்கானா மாநில உதயம் ஹைதராபாத்தை இந்த நிலையிலிருந்து வெளிக் கொண்டுவந்து விடும். பெங்களூருவை மையப்படுத்தி ஏற்படும் வளர்ச்சியிலிருந்து கர்நாடகா வெளிவர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்’ என்கிறார் நரேந்தர் பணி.

 

பெங்களூருவின் இன்னொரு பிரச்னை குற்றங்கள் பெருகி வருவது. எந்த வேலையானாலும் சரி, பெங்களூரு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற மனநிலையில் வரும் இளைஞர்கள் சிறிது காலத்தில் தாங்கள் நினைத்தபடி இங்கு வேலை கிடைப்பது சுலபமில்லை என்று புரிய சின்னச்சின்ன குற்றங்களில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். இந்த சிறு குற்றங்கள் நாளடைவில் பெரிய குற்றங்களாக மாறுகின்றன. வீட்டில் தனியே இருக்கும் பெண்கள், முதியவர்கள் கொல்லப்படுவது, ஏடிஎம் கொள்ளைகள், பெருகி வரும் பாலியல் குற்றங்கள் என்று பெங்களூரு இன்று பாதுகாப்பு இல்லாத நகரமாகவும் மாறி வருகிறது.

 

பெங்களூரு பற்றிய சில புள்ளி விவரங்கள்: (2011 மக்கள் தொகைக் கணெக்கெடுப்பின்படி)

 • பெங்களூரு நகர கோட்டத்தின் ஜனத்தொகை: 9,621,551 (இப்போது ஒரு கோடியைத் தாண்டிவிட்டது).
 • பத்து வருட ஜனத்தொகை அதிகரிப்பு: 47.18 சதவிகிதம். (2001 லிருந்து 2011 வரை)
 • மக்கள் நெருக்கம்: ஒரு சதுர கி. மீ.க்கு 4,381 நபர்கள். (2001 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,985 ஆக இருந்தது.)
 • குழந்தைகள்: 1000 ஆண் குழந்தைகளுக்கு 944 பெண் குழந்தைகள். இந்த எண்ணிக்கை 2001 இல் 943 ஆக இருந்தது.
 • படித்தவர்களின் எண்ணிக்கை: 87.67 சதவிகிதம். பெண் படிப்பாளிகள் 96 சதவிகிதம்

 

‘ஒரு காலத்தில் இந்த நகரத்தில் நிலவும் பருவ நிலைக்காகவே பெயர் பெற்ற பெங்களூரு, இன்று அளவிற்கு அதிகமான போக்குவரத்தாலும், அவற்றால் ஏற்படும் புகை, தூசி முதலியவைகளாலும் பருவநிலை முற்றிலும் மாறிய நிலையில் மூச்சு விடமுடியாமல் திணறுகிறது’ என்கிறார் ஞானபீட பரிசு பெற்ற எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தி. பெங்களூர் என்ற பெயரை பெங்களூரு என்று மாற்ற வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தவர் இவரே.

 

1990 வரை சிறிய நகரமாக குளுகுளு வானிலையுடன், இருபுறமும் மரங்கள் நிறைந்த தெருக்களும், வண்ண வண்ண ரோஜாப் பூக்கள் பூத்துக் குலுங்கும் வீடுகளும், நீர் நிறைந்த ஏரிகளும், பெரிய பெரிய பங்களாக்களும், அமைதியும் சாந்தமும் நிலவும் இடமாக இருந்த பெங்களூருவின் பழைய தலைமுறைகள் தங்கள் கண் முன்னாலேயே இந்த நகரம் அழிவதை பார்த்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லையா என்று குமுறுகிறார்கள். முன்னேற்றம் வேண்டும் அதற்காக ஒரு நகரம் தனது பழம் பெருமைகளை, எழிலை இழக்கலாமா என்பது இவர்களின் கேள்வி.

 

பெங்களூருவை எப்படிக் காப்பாற்றுவது என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மண்டூர் மக்களுக்கு பெங்களூருவாசிகளின் பதில் என்ன என்பதும் விவாதத்திற்குரியது தான்.

`நான் ஒரு பெண்; எனவே, நான் பாதுகாப்பாக இல்லை!’

image-12

 

 

ஜூலை 2014 ஆழம் இதழில் வெளியானா எனது கட்டுரை

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களிலேயே சற்று  அச்சுறுத்தப்பட்டே வாழப் பழகிக்கொள்கிறாள்’

-இவா வைஸ்மன், தி கார்டியன் இதழ்

மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறப்பதே அபாயகரமானதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு பெண்ணும் எப்போது என்ன நேருமோ என்ற பயத்திலேயே வாழ்கிறாளா? நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மக்கள் கொதித்து எழுந்தனர். பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஒரு கட்டாய, நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்று அரசாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால் நடப்பது என்ன? இன்னும் இன்னும் பல நிர்பயாக்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம்.

பாலியல் வன்புணர்ச்சி மட்டுமல்ல; அடி, உதை போன்ற வன்முறைகளும் பல பெண்களின் தினசரி வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. உடலால் மட்டுமல்ல, மனரீதியிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். வீதியில் மட்டுமல்ல, இணையத்திலும்கூட ஒரு பெண்ணால் அச்சமின்றி உலாவமுடிவதில்லை. பலவாறான பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் அவள் ஆளாகவேண்டியிருக்கிறது.

‘ஒவ்வொரு பெண்ணும் அந்நியர்களின் அடக்குமுறைக்கு ஆளாகிறாள்; ஒவ்வொரு பெண்ணும் ‘வேசி’, ‘வெட்கங்கெட்ட நாயே’, ‘தூய்மையற்றவளே’ என்று அழைக்கப்படுகிறாள்; பயமுறுத்தப்படுகிறாள்;  ‘உஸ்….உஸ்…’ என்று அழைக்கப்படுகிறாள்; அவளது காதுகளில் கீழ்த்தரமான வார்த்தைகள் கிசுகிசுக்கப்படுகின்றன; தெருவில் நடக்கும்போது, பேருந்துப் பயணத்தின் போது ஒரு ஆணால் வேண்டுமென்றே அழுத்தப்படுகிறாள், இடிக்கப்படுகிறாள். தேவையில்லாமல் தொடப்படுகிறாள்’ என்கிறார் தி கார்டியன் இதழில் பத்தி எழுதும் இவா வைஸ்மன்.

எத்தகைய பெண்கள் பலியாகிறார்கள்?

படிக்காத, வருமானம் இல்லாத, கணவனை அண்டி வாழும் பெண்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்தியாவில் அதிகம் படித்த, நிறைய சம்பாதிக்கும் பெண்களே அதிக வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலை ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட நியூ யார்க் பல்கலைக்கழக மாணவி அபிகைல் வீட்ஸ்மன் கூறுகிறார்: ‘அதிகச் சம்பாத்தியம், அதிக படிப்பு பெண்களுக்கு உதவுவதில்லை. மாறாக கணவனின் வெறுப்பையும் கூடவே அடி உதையையும் பெற்றுத் தருகிறது’. இது குறித்து ஏற்கெனவே இரண்டு கருத்துகள் நிலவுகின்றன.

 • முதலாவது: நிறைய சம்பாதிக்கும் பெண் குறைவான வன்முறையை எதிர்கொள்வாள். ஏனெனில் தான் தவறாக நடந்து கொண்டால் எங்கே தன் மனைவிக்குப் பிடிக்காமல் போய்விடுமோ, அவள் தன்னை விட்டுவிட்டுப் போய்விடுவாளோ, அவள் சொத்துக்கள் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று ஆண் நினைப்பதால் அவளைப் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டான்.
 • இன்னொரு கருத்து: தன்னைவிட தன் மனைவி அதிகம் படித்திருப்பது, சம்பாதிப்பது அவள் முன் தன்னை சிறுமைப்படுத்தும்; அவளை தன் பிடியில் வைத்துக் கொள்வது கடினம். அதனால் வன்முறையால் மட்டுமே அவளை அடக்கமுடியும் என்று ஒரு ஆண் நினைக்கிறான்.

அபிகைல் செய்த ஆய்வு இந்த இரண்டாவது கருத்தை உறுதி செய்கிறது.

கணவனைவிட அதிகம் படித்த மனைவி, மற்ற மனைவியரைவிட 1.4 மடங்கு வன்முறையை அனுபவிக்கிறாள். பெண் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பத்தில் 2.44 மடங்கு வன்முறையை அனுபவிக்கிறாள். உலகளாவிய பெண்கள் முன்னேற்றம் என்று சொல்லும்போது பெண் கல்வி, பெண்ணின் பொருளாதார சுதந்தரம் இவை இரண்டும் முக்கிய இடம் பெறுகின்றன.  ஆனால் இந்தத் தகுதிகளே அவளை வன்முறைக்கு இரையாக்குகிறது என்பதை  இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

திருமணம் செய்துகொள்ள உரிமையில்லை

தங்கள் திருமணத்தைப் பற்றி கருத்து சொல்ல இந்தியாவில் பல பெண்களுக்கு உரிமை இல்லை என்று சமீபத்திய தி ஹிந்து ஆய்வு சொல்கிறது. அந்த ஆய்வின் சாராம்சம் இது:

 • இந்தியாவில் 40% பெண்களுக்கு அவர்களது விவாகத்தைப் பற்றி முன்கூட்டிச் சொல்லப்படுவதில்லை.
 • 18% பெண்கள் தான் கணவரைப் பற்றி முன்பே சற்று அறிந்திருந்தார்கள். இது பல காலமாக மாறாத துன்ப நிலை.
 • 80% பெண்கள், குடும்பத்தாரின் முன் சம்மதமின்றி மருத்துவ உதவியை நாட இயலாது.
 • 60% பெண்கள் தலையையும் மூடிக்கொள்கிறார்கள்.
 • சராசரி வரதட்சணை முப்பதாயிரம் ரூபாய்.
 • குழந்தை (18 வயதுக்குள்) திருமணம்  60 சதவிகிதத்திலிருந்து 48 ஆகக் குறைந்துள்ளது. மகப்பேறுகூட குறைந்து வருகிறது.
 • உறவுகளில் திருமணம் செய்வது ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.
 • சொத்து சுதந்தரம் 10 சதவிகிதம்கூட இல்லை.
 • 80 சதவிகிதப் பெண்களுக்கு சொத்தில் சட்டப்படி பங்கில்லை.
 • 50 சதவிகிதப் பெண்கள் அனுமதி இல்லாமல் வெளியில் சென்றால், அடி வாங்குகிறார்கள்!

உலகெங்கும் இதே நிலை

இந்த வன்முறைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கிலும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. சூடான் நாட்டில் ஒரு பெண் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறாள். குழந்தை பிறந்தவுடன் அப்படியே கிடந்து சாகவேண்டும் என்பது தண்டனை. காரணம் அவள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள். பாகிஸ்தானில் குடும்பத்தாரின் அனுமதியின்றி காதலித்து கருவுற்ற ஒரு பெண்ணை லாகூர் நீதிமன்றம் எதிரில் அடித்தே கொன்றிருக்கிறார்கள். அவளது மரணத்துக்குப் பிறகு தெரிந்த இன்னொரு விஷயம். அவளை மணப்பதற்காக அவள் கணவன் தனது முதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறான். சிரியா, தெற்கு சூடான், காங்கோ, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளில் கூட்டம் கூட்டமாகப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள்.

போர்க்கால வன்முறைகள்

‘போராட்டங்கள் நடக்கும் இடத்தில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது எப்படி? போராட்டங்கள் நாட்டின் வளங்களைக் காக்க அல்லது வறுமையை ஒழிக்க என்று எந்த வகையில் இருந்தாலும் பாலியல் வன்முறைகள் தினசரி நடைமுறையாகிவிட்டது எங்கள் நாட்டில்.  போராட்டங்களே இல்லாமல் செய்வது ஒன்றே இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஒரேவழி’  என்கிறார் காங்கோ நாட்டைச் சேர்ந்த தெரசா மெமா மாபென்சி.

இவர் அந்த நாட்டில் புகாவு நகரில் நீதி மற்றும் அமைதி ஆணையத்தில் வேலை செய்கிறார். தினமும் ஒரு போராட்டம் நடக்கும் தனது நாட்டைப் பற்றிக் கூறுகிறார் இவர். ‘பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையிலிருந்து வயதான பெண்கள் வரை வன்புணர்ச்சிக்கு ஆளானவர்களை நான் சந்திக்கிறேன். எனது நாடான காங்கோ குடியரசில் நாங்கள் தினமும் அனுபவித்துவரும் பாலியல் வன்முறைகள் மனிதாபிமானமற்றவை என்பதுடன் எங்களுக்கு நீதியும் மறுக்கப்படுகிறது. எங்களை அவமானப்படுத்தியவர்கள், வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் எங்களின் முன்னிலையிலேயே சுதந்தரமாக உலா வருகிறார்கள். புரட்சியாளர் என்ற போர்வையில் குற்றம் இழைத்தவர்கள் படைவீரர்களாக நியமனம் பெறுகிறார்கள். தன்னைக் கற்பழித்தவனை ஒரு காவல்துறை அதிகாரியாக, ஒரு பாதுகாவலனாக ஒரு பெண் பார்க்க நேரும் கொடுமையை என்ன சொல்ல?’

அவர் தொடர்கிறார். ‘பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் வாழ்நாள் முழுவதும் அதன் கொடுமையை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல; அடுத்த தலைமுறையும் சேர்ந்து அனுபவிக்கிறது. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் களங்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டு, கல்வியும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்தக் குழந்தைகளை அடையாளம் காண்பது கடினமான காரியம் அல்ல. பல பெண்கள் தங்கள் உறவினர்களின் கண்ணெதிரிலேயே வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள். இவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது ‘இவன் வயிற்றில் உருவான அன்று என் மகனை, தந்தையை, பக்கத்து வீட்டுக்காரனை இவன் அப்பா கொன்றான்’ என்ற நினைவு அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு வருவதை தவிர்க்கமுடியாது. இந்தக் களங்கத்தைப் போக்க சர்வதேச உதவி தேவை. வன்புணர்ச்சிமூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு கல்வியும் இன்னபிற உதவிகளும் தேவை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீடித்த மருத்துவ உதவியும், உடல்நலக் கண்காணிப்பும் தேவை’.

கல்லூரி வளாகங்களும் தப்பவில்லை

இந்த வன்முறைக்கு கல்லூரிகள் கூட விலக்கு அல்ல. ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற புகழ் பெற்ற கல்லூரி வளாகங்களிலும் கூட பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன. இக்கொடுமைக்கு எதிரான மாணவர் போராட்டம் ‘வெள்ளை ரிப்பன் போராட்டம்’ என்ற பெயரில் நடந்துவருகிறது. இந்தப் போராட்டத்துக்கான பிரசாரம் அங்கு படிக்கும் பெண்கள் குழுவினரால் நடத்தப்படுகிறது. இதில் பங்குகொள்ளும் மாணவர்கள் பரிட்சை எழுதும்போது தங்கள் மேலங்கியில் வெள்ளை ரிப்பனை அணிந்துகொண்டு வருகின்றனர்.

‘ரிப்பன் அணிவது ஒரு சிறு செயல் தான். ஆனால் அதன் எதிரொலி சக்தி வாய்ந்த செய்தியை உலகுக்குத் தெரிவிக்கும். நாங்கள் அணியும் மேலங்கி ஓர் ஆடம்பரமான குறியீடு.  இறுதியாண்டில் படிப்பவர்கள் முதல் ஆண்டில் முதல் தரவரிசையில் இடம் பெற்றிருந்தால் ‘ஸ்காலர் கவுன்’ அணிவார்கள். இரண்டாம் தரவரிசை அதற்குக் கீழ் இருப்பவர்கள் சாதாரண கோடுகள் போட்ட மேலங்கி அணிவார்கள். மாணவர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப சிவப்பு, பிங்க், வெள்ளை கார்னேஷன் மலர்களை அணிவார்கள். எந்தவகை மேலங்கி அணிந்தாலும் இந்த வெள்ளை ரிப்பன் அணிவது பாலியல் வன்முறை என்ற தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் குரலை, எழுச்சியை, எதிர்ப்பை உலகுக்குச் சொல்லும். இப்படி மேலங்கி அணிவது இந்த பல்கலைக்கழகத்தின் தொன்மையான, விசித்திரமான கடந்த காலத்தையும், அதில் செருகப்பட்டிருக்கும் வெள்ளை ரிப்பன் இப்போது நடக்கும் உண்மையான, ஒப்புக்கொள்ள முடியாத நிகழ்வுகளையும் குறிக்கும்’ என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி.

அமெரிக்காவில் டார்ட்மத் காலேஜில் வன்முறைக்கு ஆளான ஒரு மாணவியின் அறைகூவல் 50,000 தன்னார்வலர்களை ஒன்றுகூட்டியது. அப்போது வெளியே வந்த விஷயம்: அந்த காலேஜில் மாணவர் தளம் ஒன்றில் ‘வன்முறை கையேடு’ இருக்கிறது. அல்ட்ரா வயலெட் என்ற பெண்ணிய குழு விண்ணப்பம் ஒன்றை காலேஜுக்கு ‘குற்றம் புரிந்தவனை வெளியில் அனுப்பு’  என்ற கோரிக்கையுடன் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘வன்முறையும், பாலின தாக்குதல்களும் அந்த டார்ட்மத் காலேஜில் பலப்பல ஆண்டுகளாக இருக்கிறது. ‘தாங்கொண்ணா நிலைக்கு வந்துவிட்டோம், இணையத்தளத்தில் வந்து எங்கள் உரிமைக்குப் போராடுவோம்’ என்கிறார்கள், இந்தக் கல்லூரி மாணவிகள்.

சமூகத்தின் நிலை என்ன?

இந்த வன்முறைகள் யாரால் நடத்தப்படுகின்றன? இவை எந்தவித ஆதாரமுமில்லாமல் நடுவானத்தில் நடப்பவை அல்ல என்கிறார் இவா. ஆண்களின் நலத்துக்குக் குரல் கொடுப்பவர்கள், பெண்ணியம் என்ற சொல்லை எதிரியாக நினைப்பவர்கள், பெண்களைக் கவரும் திறமையுள்ள ஆண்கள், கொடுமைப்படுத்தப்பட்ட ஆண்கள் இப்படிப் பலவிதமானவர்கள் பெண்கள்மீது வன்முறையை ஏவிவிடுகிறார்கள். இத்தகைய குழுமங்களில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் ஒரு குழு, Reddit’s Red Pill. இதில் சுமார் 53,000 அங்கத்தினர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே பெண் என்பவள் போகப்பொருள், வீட்டில் சமைப்பவள் என்று நினைப்பவர்கள். ‘பெண்கள் அமைப்புகள் வாழ்க்கை வட்டத்தை உடைப்பவை; எங்கள் மனிதத்தன்மையையும் பாதிப்பவை’ என்று சொல்பவர்கள்.

சென்ற மாதம் கலிபோர்னியா, இஸ்லா விஸ்டாவில் நடந்த படுகொலைகள் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகின்றன: பெண் வெறுப்பாளர்கள் கொலை செய்கிறார்கள். இந்தக் கொலைகளை செய்தவர் ஆண்கள் உரிமை போராட்டக்குழுவினருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். தனது காணொளிகளை இணையத்தளத்தில் போடும்போது ‘என்னை ஒதுக்கிய வேசியை வெட்டிக் கொலை செய்வேன்’ என்று சூளுரைத்திருக்கிறான் ஒருவன். இந்த நிகழ்ச்சி தொடர்பாக ட்விட்டரில் சில ஆண்கள் ‘துப்பாக்கியைக் குறை சொல்லவேண்டாம். பெண்களைக் குறைசொல்லுங்கள்’, ‘பெண்களே! இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு உங்கள் செயல்களை நிறுத்துங்கள்’ என்று ‘ட்வீட்’ செய்திருக்கிறார்கள். கொலையாளியின் வாக்குமூலமும் வன்முறையும், வெறுப்பும் நிறைந்ததாகவே இருக்கிறது.

‘இதைப்போல இணையத்தில் பெண்களை பரிகசிப்பவர்கள். ரயில்களில் பெண்ணைத் தொட்டுத் தடவுபவர்கள், பெண்களைக் கொல்லுபவர்கள் எல்லோரும் பெண்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்தும், பெருமைப்படுத்தும் கலாசாரங்களால் உருவானவர்கள். ஆண் என்பவன் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவன். பெண்கள் அவனுக்குக் கடமைப்பட்டவர்கள். இந்தப் பின்னணியில் வாழும் பெண் இவற்றை தடுத்து நிறுத்தக் கற்கிறாள். வாழ்வின் ஆரம்ப நிலையிலேயே அச்சுறுத்தல்களுடன் வாழப் பழகுகிறாள். இனிமேலும் நம்மால் இந்த மின்னஞ்சல்களை, பயமுறுத்தல்களை, கருத்துக்களை ஒதுக்கித் தள்ளமுடியுமா? இனிமேலாவது இவற்றைப் பார்த்துச் சிரிப்பதை நிறுத்துவோமா?’ என்று கேட்கிறார் இவா.

ஒரு முயற்சி

போராட்டங்கள்/போர்கள் நடக்கும் நாடுகளில் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டும் முயற்சியில் முதல்படியாக லண்டனில் சர்வதேச உச்சி மாநாடு கடந்த மாதம் 10&13 தேதிகளில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டுக்கு பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலர் வில்லியம் ஹாக், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதர் ஏஞ்சலினா ஜோலி இருவரும் தலைமை தாங்கினர்.

இந்த உச்சி மாநாட்டின் குறிக்கோள்கள்:

 • குற்றம் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்கிற மனப்பான்மையை வலுவான உள்நாட்டு சட்டங்கள் மூலம் உடைத்துத் தள்ளுவது.
 • உலகம் முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை நடைமுறைக்கு ஏற்றவகையில் குறைப்பது. பாலியல் கொடுமைகளின் கொடூரத்தை உணர்ந்து அதைத் தவிர்க்குமாறும், மக்களைக் காப்பாற்றுவதை அவர்கள் கடமையாக மேற்கொள்ளுமாறும் போர்வீரர்களுக்கும், அமைதிப்படையினருக்கும் அறைகூவல் விடுப்பது.
 • பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களுக்குப் போதுமான ஆதரவு கொடுப்பது. இவர்களுக்குக் குரல் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது.
 • இந்தக் குற்றங்களைப் பார்க்கும் மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி செய்வது. போர்க்காலங்களில் இந்த மாதிரியான குற்றங்கள் சகஜம் என்ற மனநிலை மாறவேண்டும். ஆண்களும் பெண்களும் அரசுகளும், மதத் தலைவர்களும் இந்த வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து தங்களால் முடிந்த அளவுக்கு இக்குற்றங்கள் மேலும் வளராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பின் தலைவி (Phumzile Mlambo-Ngcuka) இந்த மாநாட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் நஷ்ட ஈடு பெறவேண்டும் என்பதற்கான புதிய சட்டதிட்டங்களை முன்வைத்தார்.

‘போர்கள் பெண்களை பலவிதங்களிலும் பாதிக்கிறது. உடல், உள்ளம், பொருளாதாரம் என்று பல தளங்களில் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். போர் முடிந்தவுடன் அவர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைப்பதில்லை. உடலளவிலும், மனதளவிலும் நொறுங்கிப் போகும் இவர்கள், தங்கள் நிலை பற்றிய தகவல் தெரிந்தால் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயத்தால் எந்தவிதமான நஷ்ட ஈட்டையும் பெறத் தயாராகயில்லை. இவர்கள் நிலை பற்றிய மனிதாபிமானமற்ற, பொறுப்பில்லாத அதிகாரிகளாலும், ஏமாற்றும் ஆதரவு மையங்களாலும் நஷ்ட ஈடு இவர்களுக்குக் கிடைப்பதில்லை. கொலையாளிகள் ஆதரவு பெறுகிறார்கள். ஆனால் இவர்களால் வாழ்வைத் தொலைத்தவர்கள் கைவிடப்படுகிறார்கள். குற்றம் இழைத்தவர்கள் சிறைக்குப் போவதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த லாபமும் இல்லை. இவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். வேலை வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். பொருளாதாரச் சுதந்தரம் இருந்தால் தங்களுக்கு துரோகமிழைத்த கணவர்களை விட்டுவிட்டு வெளியே வந்து, குழந்தைகளைப் படிக்க வைப்பார்கள். இந்தப் பெண்களுக்கு பொருளாதார உதவியும், மனநல உதவியுடன், சமூகம் சார்ந்த உதவியும் தேவை’ என்கிறார் இவர்.

நம்மால் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டமுடிந்தால்; கடந்த காலத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு மருந்து போட முடிந்தால்; நீதியையும், அமைதியையும்  இணைக்க முடிந்தால் நம்பிக்கையுடன் கூடிய ஒரு எதிர்காலத்தை பெண்கள் அமைத்துக் கொள்ளலாம். நடக்குமா?