மாலை மயங்குகின்ற நேரம்

எங்கள் ப்ளாக் வாட்ஸப் குழுவில் சில நாட்களுக்கு முன் மேற்கண்ட பாட்டைப் பற்றிய ஓர் கலந்துரையாடல் நடந்தது. இந்தப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு என் அக்காவின் நினைவு தான் வந்தது. அவளது சங்கீத ஞானம் இதைப் போன்ற பாடல்களை கேட்கும்போது அதிகம் தெரியவரும். அக்கா நன்றாகப் பாடுவாள். குரல் மெலிதாக இருக்கும். ரொம்பவும் ரசித்துப் பாடுவாள் – அது ஆனந்தப் பாட்டாக இருந்தாலும், சோகப் பாட்டாக இருந்தாலும். சோகப் பாட்டுகளைப் பாடும்போது, அந்தப் பாடல்களை பாடும் பாடகர்களை மட்டுமல்லாமல் அந்தக் காட்சிகளில் நடித்திருக்கும் நடிக நடிகளையும் நினைவு கூர்வாள். அதுதான் அவளது சிறப்பு. கூடவே அந்த திரைப்படங்களின் கதைகளையும் சொல்லுவாள். ஆனந்தப் பாடல்களை விட சோகப்பாடல்களைத் தான் அவள் அதிகம் விரும்பினாள் என்பது நிஜம். அவற்றைத்தான் பாடவும் செய்தாள். பாலும் பழமும் படத்தில் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்ற பாடலை விட ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி’ பாடல் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். ‘என்ன கஷ்டம் பாரு! தனது கணவன் எதிரிலேயே அவளுக்கு நடிக்க வேண்டியிருக்கிறது! பெண்டாட்டி எங்கே போனாள் என்று தெரியாமல் அவனும் அவளை நினைத்து உருகி உருகி பாடுகிறான்!’ என்று கண்கள் கசியச் சொல்லுவாள். நான் சிரிப்பேன். ‘சே! என்னடி, இதெல்லாம் சினிமா. அதைப்போய் நிஜம் என்று நினைத்துப் பேசுகிறாய்’ என்றால் ரொம்பவும் கோபித்துக் கொள்வாள். ‘நிஜ வாழ்க்கையிலும் இப்படியெல்லாம் நடக்கும், தெரியுமா?’ என்று என்னுடன் சண்டைக்கு வருவாள். நிறைய சினிமா பார்த்துப் பார்த்து இப்படி ஆகிவிட்டாள் என்று கூட சிலசமயம் எனக்குத் தோன்றும்.

கர்நாடக சங்கீதத்தைத் தழுவி இசையமைக்கப்படும் பாடல்களும் அவளது விருப்பத்திற்குரியவை. கேட்ட உடனே இன்ன ராகம் என்று சொல்லுவாள். கொஞ்சம் சந்தேகம் இருந்தால் அடுத்தவாரம் இலங்கை வானொலியில் மயில்வாகனன் சொல்வார், கேட்க வேண்டும் என்பாள். மறக்காமல் கேட்பாள். ‘பாரு, நான் சொன்ன ராகம் சரி’ என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வாள். பேத்தியை மடியில் போட்டுக் கொண்டு ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ என்று ஆரம்பிப்பாள். ‘என்ன பாட்டு பாடுகிறாய் குழந்தைக்கு? வேறே பாடேன்’ என்றால் ‘எத்தனை நல்ல பாட்டு தெரியுமா? சிம்மேந்திர மத்யமத்தை ஜி. ராமநாதன் பிழிந்து கொடுத்திருக்கிறார்’ என்பாள். அடுத்தபடி ‘பொன்னான வாழ்வு மண்ணாகிப் போச்சே!’ என்று ஆரம்பிப்பாள். நான் ஆயாசத்துடன் எழுந்து போய்விடுவேன். இல்லை ஏதாவது புத்தகத்தைப் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். அவள் பாடிய சந்தோஷமான பாட்டு என்றால் ‘சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ பாடல் மட்டுமே. அதிலும் இரண்டாவது சரணம் வரும்போது நான் சொல்லுவேன் ‘குழந்தைக்கு இதைப் பாடாதே’ என்று. அவள் விடாமல் ‘பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா…..! பொல்லாத கண்களாடா புன்னகையும் வேஷமடா நன்றி கேட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா…’ என்று முகமெல்லாம் சோகம் இழையோடப் பாடுவாள். மடியில் படுத்திருக்கும் குழந்தை ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அக்காவின் நினைவு வருவதற்கு மாலை மயங்குகின்ற நேரம் பாடல் மட்டுமல்ல காரணம்.  ஆர். சூடாமணி எழுதிய ‘அந்நியர்கள்’ என்ற கதையைப் படித்ததிலிருந்து அவள் நினைவுதான். அதுவும் அவளும் நானும் எத்தனை எதிரெதிர் துருவங்களாக இருந்தோம்  என்பதைப் பற்றிய மலரும் நினைவுகள். அவளுடைய அந்திமக் காலத்தில் அவளுடன் மருத்துவமனையில் நான் தங்கியிருந்த போது நிறைய பேசினாள். அப்போது கேட்டேன்: ‘உன் கஷ்டங்களைப் பற்றியே பேசுகிறாயே? நீ சந்தோஷமாக இருந்ததேயில்லையா? எத்தனை திவ்ய தேசங்களை சேவித்திருக்கிறாய்? எத்தனை முறை அமெரிக்கா போய் வந்திருக்கிறாய்? ஏன் அதைப்பற்றியெல்லாம் பேசமாட்டேன்னென்கிறாய்?’ நீண்ட நேரம் மௌனமாகவே இருந்தாள். இரண்டு நாட்கள் கழித்து சொன்னாள்: ‘எனக்கு உன்ன மாதிரி இருக்கத் தெரியலை. கொஞ்சம் மாற்றிக் கொள்ளப் பார்க்கிறேன். எனக்கு உடம்பு சரியானவுடன் உன்னுடன் பெங்களூருக்கு வருகிறேன். உன்னுடன் நிறைய பேச வேண்டும் போலிருக்கு’  என்றாள்.

அவள் பரமபதித்த போது என் உறவினர் ஒருவர் சொன்னார்: அக்கா நன்றாக வாழ்ந்துவிட்டுத்தான் போயிருக்கிறாள். என்ன ஒண்ணு உங்க அம்மா இருக்கிறாள் அது தான் வருத்தமான விஷயம்’. நிஜம் தான். ஆனால் தன் வாழ்க்கை கஷ்டங்கள் நிரம்பியது என்று மனதில் அந்தக் கஷ்டங்களையே நினைத்து வருந்தியவளுக்கு உடலாலும் பலவித கஷ்டங்களைக் கொடுத்த கடவுள் அவளுக்குத் தன்னை மாற்றிக் கொள்ள கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.