இந்தப் பதினாறு வயதிற்கு ஒரு தனி பெருமை உண்டு.
பதிமூன்று வயதில் காலெடுத்து வைக்கும்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனம் மாறியிருக்கும். அதே சமயம் முழு பக்குவமும் வந்திருக்காது. பக்குவத்தை நோக்கி நடை போட ஆரம்பித்திருப்போம். எதிர்காலம் இப்படி இருக்க வேண்டும். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசனைகள் முளைவிடும் நேரம் அது. மருத்துவர் ஆக வேண்டும். ஆசிரியை ஆக வேண்டும் என்றெல்லாம் நமக்கென்று சில எண்ணங்கள், குறிக்கோள்கள் தோன்ற ஆரம்பித்திருக்கும். அந்த சமயத்தில் நாம் கற்பனை செய்து வைத்திருப்பது போலவே, நமது மனத்தைக் கொள்ளை கொள்ளும்படி ஒருவரைப் பார்த்துவிட்டால்? சரி இங்கு கொஞ்சம் நிற்போம்.
இந்த வயதில் நாங்கள் புரசைவாக்கம் லேடி முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் (1969 ஆம் ஆண்டு) படித்துக் கொண்டிருந்தோம். ஆசிரியைகள் எல்லோருமே சற்று வயதானவர்கள். தலைமையாசிரியை திருமதி ஷாந்தா, விஞ்ஞானம் சொல்லித் தரும் திருமதி ஆண்டாள் சுந்தரம், சமூகப் பாடம் நடத்தும் குமாரி லீலாவதி (திருமணம் ஆகாதவர் என்றாலும் முதிர் கன்னி), திருமதி மீனாட்சிஎல்லோருமே எங்களிடம் கறாரும் கண்டிப்புமாகத்தான் இருப்பார்கள். பெண்கள் படிக்கும், பெண் ஆசிரியைகளைக் கொண்ட பெண்கள் பள்ளி. தமிழ் வாத்தியார் சர்மா ஸார், சமஸ்கிருத வாத்தியார் தேசிகாச்சாரியார் இவர்களைத் தவிர பள்ளியைக் காவல் காக்கும் கூர்க்கா. மற்றபடி ஆண் வாசனையே கிடையாது.
இப்படி இருந்த நேரத்தில் தான் தென்றலாக வந்தார் லலிதா டீச்சர். இளம் வயது. தேவதை போல அழகு. நாங்கள் கனவு கண்டுகொண்டிருந்ததெல்லாம் நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தார் லலிதா டீச்சர். அவர் பள்ளியின் வாசலில் வரும்போதே (வகுப்பிற்குள் வருவதற்கு முன்பே) அவர் என்ன புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கிறார், என்ன பூ வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்திகள் வந்துவிடும். அவர் பள்ளிக்குள் நுழையும்போதே அவரைப் பார்த்து இந்தச் செய்திகளை சேகரித்து எல்லா வகுப்புகளுக்கும் அனுப்ப ஒரு படையே வாசலில் நின்று கொண்டிருக்கும்.
இப்போது இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா? பதினாறு வயதில் பார்த்துப் பரவசப்பட்ட தேவதையை ஐம்பது வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் எப்படி இருக்கும்? இதெல்லாம் நடக்குமா என்று சந்தேகம் கூட உங்களுக்கு வரலாம். ஆனால் எங்கள் சந்திப்பு நடந்தது. பேஸ்புக் மூலம் ஜெயா ரங்கராஜன், சுந்தரி ஹரன் இருவரும் சல்லடை போட்டுத் தேடி பல தோழிகளைக் கண்டுபிடித்தனர். அதில் நானும் ஒருத்தி. பிறகு எங்கள் ஆசிரியை யாரையாவது கண்டுபிடிக்க முடியுமா என்று மறுபடி சல்லடையை எடுக்க அகப்பட்டார் எங்கள் தேவதை லலிதா டீச்சர். ஆஹா! உடனே சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள் ஜெயாவும், சுந்தரியும். புரசைவாக்கம் உள்ளூர் செய்தித்தாளில் லேடி எம்.ஸி.டி. எம் பள்ளியின் 1969 ஆம் வருட மாணவிகள் சந்திக்க இருப்பதாக அறிவிப்பு கொடுக்க இன்னும் நிறைய பேர்கள் சந்திக்க ஆவலைத் தெரிவித்தனர். எங்களுக்கு முன்னும் பின்னும் அந்தப் பள்ளியில் படித்த பல மாணவிகள் லலிதா டீச்சரைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குத் தகவல் கொடுத்து வரச் சொன்னார்கள். அப்படி இப்படியென்று ஒரு நாற்பது பேர் சேர்ந்துவிட்டோம். தானாகச் சேர்ந்த கூட்டமுங்கோ இது. லலிதா டீச்சரைப் பார்க்க சேர்ந்த கூட்டம்! இந்தக் கூட்டத்தில் ஒரு விஐபி யும் உண்டு. அவர்தான் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன். எங்களுக்கு ஒருவருட ஜூனியர் அவர்.
நான் பெங்களூரிலிருந்து போக வர பயணச்சீட்டு வாங்கினேன். இது ஒன்றுதான் நான் செய்தது. மற்ற ஏற்பாடுகள் எல்லாம் சென்னையிலிருந்த ஜெயாவும் மும்பையிலிருந்த சுந்தரியும் செய்தனர். அவர்களிடமிருந்து வந்த கட்டளைகளை நிறைவேற்றுவதில் நாராயணி, கெளரி, பானு இவர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். லலிதா டீச்சரை கூட்டிக் கொண்டு வந்து சந்திப்பு முடிந்தவுடன் திருப்பிக் கொண்டு விடுவதை சுந்தரி தன் தலையாய கடமையாகச் செய்தாள். எத்தனை பெரிய பாக்கியம்!
எல்லோரும் கூடினோம். ஐம்பது வருடங்கள் எங்களையெல்லாம் நிறைய மாற்றியிருந்தது. எங்களுக்குள் டாக்டர்களும், அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்களும் இருந்தனர். வாழ்க்கையில் மாமியார்களாகவும் பாட்டிகளாகவும் ஆகியிருந்தோம். ஆனாலும் அன்று அத்தனை பேர்களும் பதினாறு வயதுப் பெண்களாகவே மாறியிருந்தோம். ஒவ்வொருவருக்கும் பேசி மாளவில்லை. ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டோம். எங்கள் அன்பிற்குரிய லலிதா டீச்சருடன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை ஒருவர் விடாமல் நினைவு கூர்ந்தோம்
எங்கள் நாட்டியத் தாரகை நாராயணி, பாடும் நிலா பானு (நகுமோமு புகழ்!) என்று பலரும் தங்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். லலிதா டீச்சரைத் தவிர பள்ளி அலுவலகத்தில் பணி புரிந்த திருமதி முத்துலட்சுமி, திருமதி மங்கை ஆகியோரும் இந்தக் சந்திப்பிற்கு வந்திருந்தனர்.
டீச்சரும் எங்கள் ஒவ்வொருவரையும் நினைவில் கொண்டு வந்து எங்களுடன் பேசினார். அதுதான் அதிசயம். அவருக்கு ஆயிரம் ஆயிரம் மாணவிகள். அப்படியும் நாங்கள் சம்மந்தப்பட்ட சில சிறப்பு நிகழ்வுகளை அவர் நினைவில் வைத்துக்கொண்டு பேசியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், இந்தப் பிறவி எடுத்ததன் பலன் கிடைத்தாற்போலவும் இருந்தது என்றால் மிகையில்லை.
1969 ஆம் வருட மாணவிகள் அவரை அழைத்துக்கொண்டு மதிய உணவிற்குச் சென்றோம். பிறகு அவரை அவருடைய இல்லத்திற்கு கொண்டு போய் விட்டுவிட்டு கிளம்பும்போது அவரது காலில் விழுந்து வணங்கினோம். எங்கள் கண்கள் மட்டுமல்ல, டீச்சரின் கண்களும் கலங்கிவிட்டன.
இந்த ஆசிரியர் தின நன்னாளில் எங்களுக்கு கல்வி அறிவைத் தந்த அத்துணை ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது நமஸ்காரங்கள்.
என்ன ஒரு அனுபவம்… இத்தனை வருடங்களுக்கு அப்புறம் தங்கள் டீனேஜ் ஆசிரியை சந்திப்பதும், அவங்களை பற்றியெல்லாம் தனிப்பட்ட நினைவுகள் வைத்திருந்து பேசுவதும்…
என்ன தவம் செய்தனை…
பெரிய பாக்கியம்…
சிறப்பான அனுபவம் அம்மா…
எனக்கு உடனே சொல்ல நினைத்தது :- சென்ற வருடம் எனக்கும் இதே போல் ஒரு சந்திப்பு – 33 வருடங்களுக்கு பின்…
என்ன ஒரு பாக்கியம் ரஞ்சனி. என் தோழிகள் ஒருவரையும் இப்படித் தேட முடியவில்லையே.
உங்கள் சர்மா சார் ,வெள்ளாளத் தெருவில் குடியிருந்தாரா.
உங்கள் தோழமை நீடிக்கட்டும்.
அனைவருக்கும் என் அன்பு.
அன்புள்ள ரஞ்சனி
வணக்கம்.அருமையான பதிவு.அன்பு நெஞ்சங்களின் அருமையான சந்திப்பு.என் கண்களும்
கசிந்தன.
ருக்மணி சேஷசாயி