பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 22

 

 

மாணவர்களே!

செல்வத்தை நேர்வழியில் சம்பாதியுங்கள். அந்த செல்வம் தான் நிலைக்கும்.

எத்தனை படிப்பு படித்திருந்தாலும் உங்களைப் படைத்தவனை மறக்க வேண்டாம். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

நிறையப் படித்து உங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள். அதே சமயம் உங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் புரிந்த ஒரு விஷயம் உங்கள் வகுப்பில் இருக்கும் இன்னொரு மாணவனுக்குப் புரியாமல் இருக்கலாம். சொல்லிக் கொடுங்கள். கொடுக்கக் கொடுக்க அதிகமாவது அறிவு மட்டுமே.

உங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் மரியாதை கொடுங்கள். இருவருமே உங்கள் நலத்தில் அக்கறை உள்ளவர்கள். அவர்களது ஆசிகள் உங்களுக்கு எப்பொழுதும் தேவை.

உங்களின் இளமைக் காலத்தில் உங்கள் பெற்றோர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டது போல, அவர்களது வயதான காலத்தில் அவர்களை பார்த்துக் கொள்வது உங்கள் கடமை. மறக்க வேண்டாம். உங்கள் தந்தையை விட நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம். தாயை விட அதிகம் படித்திருக்கலாம். ஆனால் அவர்கள் தான் உங்களை ஆரம்பகாலத்தில் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டிப் படிக்க வைத்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எத்தனை நாட்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் நிழலில் வாழ முடியும்? நீங்கள் உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டாமா? மிகப் பரந்து விரிந்த இந்த உலகில் உங்களுக்கென்று ஓரிடத்தைப் பிடிக்க வேண்டாமா? அதற்கு உங்களைத் தயார் செய்து கொள்ளத்தான் இந்தப் பள்ளிப் பருவ ஆண்டுகள். கற்க வேண்டியவற்றைத் தெளிவுறக் கற்று கூட்டுப் புழு எப்படி தன்னைத் தானே ஒரு கூட்டில் அடைத்துக் கொண்டு உரிய காலம் வரும்போது அழகிய பட்டுப்பூச்சியாக வெளியே வருகிறதோ, அது போல நீங்களும் வெளி வந்து வானில் சிறகடித்துப் பறக்க வேண்டும். கூட்டுப்புழு போலத்தான் நீங்களும் பள்ளி என்னும் கூட்டில் அடைக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டால் தான் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும். உங்களில் பலருக்குப் பள்ளிக்கூடம் என்றாலே கசக்கிறது. ஓரிடத்தில் உட்கார்ந்து படிப்பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. கூட்டுப்புழு தன்னைச் சுற்றி சுவர் எழுப்பி அதனுள் அன்ன ஆகாரம் இல்லாமல் இருந்தால்தான் பட்டுப்பூச்சியாக வெளிவர முடியும். அதைப்போலத்தான் நீங்களும் பதினைந்து வருடங்கள் அடிப்படைக் கல்வி கற்றால் தான் வெளி உலகின் சவால்களைச் சந்திக்க முடியும்.

 

பள்ளிக்கூடம் ‘போர்’ தான். பாடங்களும் ‘போர்’ தான். ஆனால் என்ன செய்வது? அடிப்படைப் படிப்பு நிச்சயம் வேண்டும். பள்ளிக்குச் செல்லாமலேயே கல்லூரிக்குப் போக முடியுமா?

 

பள்ளிக்கூடப் பருவத்திலும் உங்களை அலைக்கழிக்கும் பல விஷயங்கள் நடக்கின்றன. மிக முக்கியமான ஒன்று எதிர்பாலரிடம் ஏற்படும் ஈர்ப்பு. அதன் காரணமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்/பெண் தோழர்கள். அவர்களுடனான தோழமை உணர்வு.

இப்போதெல்லாம் பெண் தோழி/ஆண் தோழர்கள் வைத்துக் கொள்வது மிகவும் சாதாரணமாகப் போய்விட்டது. இதற்குக் காரணம் எதிர்பாலரைப் பற்றி அறிய இனம் புரியாத ஆர்வம், சாதனை போன்ற ஒரு பிரமை, அவனுக்கு இரண்டு மூன்று பெண் தோழிகள் என்றால் எனக்கு ஒன்றாவது வேண்டாமா என்ற எண்ணம், ஒற்றைக் குழந்தையாகப் பிறந்து சகோதர சகோதரிகள் இல்லாத தனிமை ஏற்படுத்தும் வெற்றிடம், மற்றவர்களின் கவனத்தைக் கவருவது, பெற்றோர்களின் கவனிப்புப் போதாமை, பெற்றோர்கள் கொடுக்கும் அபரிமிதமான பணம்.  இவை மட்டுமல்ல;  தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் இவையும் இளம் மனங்களுடன் விபரீதமாக விளையாடுகின்றன.

தோழமை கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எல்லைக்குள் இருக்கும்வரை எல்லாமே நன்றாகத் தான் இருக்கும். எல்லையைத் தாண்டிவிட்டது என்பதை எப்படி அறிவது? இந்த ஈர்ப்பைக் காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டு படிப்பைக் கோட்டை விடும்போது  தான் அறிந்து கொள்ளுவீர்கள். இந்தத் தோழமை உங்களது படிப்பை பாதிக்காத வரை நீங்கள் பத்திரமாக இருப்பீர்கள். சிலரது வாழ்வில் இந்தத் தோழமை உயிரை மாய்த்துக் கொள்வது வரை கூடச் சென்று விடுகிறது.

இப்படி ஒரு சின்ன விஷயத்திற்காக உங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளவா நீங்கள் பிறந்தீர்கள்? நிச்சயம் இல்லை. சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள். எத்தனையெத்தனை கனவுகள் உங்கள் உள்ளத்தில். அதையெல்லாம் நிஜமாக்க வேண்டாமா? இந்தப் பருவத்தில் இதைப் போன்ற ஈர்ப்புகள் வருவது சகஜம் தான்.

இது போன்ற ஈர்ப்பை ‘நாய்க்குட்டி ஈர்ப்பு’ என்கிறார்கள். நாய்குட்டிகள் கண்ணை மூடிக்கொண்டு எப்படி சிலரைப் பின் தொடருமோ அதுபோலத் தான் இந்த ஈர்ப்பும். விஞ்ஞானரீதியாகச் சொல்ல வேண்டுமானால் உங்கள் ஹார்மோன்கள் பண்ணும் வேலை இது.

இதுதான் படிக்கும் வயது; இந்த வயதில்தான் இந்த மாதிரி மனதை அலைக்கழிக்கும் எண்ணங்கள் தோன்றும். இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது? நிச்சயம் படிப்பு தான். இந்த வயதில் தான் படிப்பு வரும். காதல் எண்ணங்கள் காத்திருக்கலாம்.

இந்த உணர்வுகளிலிருந்து எப்படி வெளிவருவது?

படிப்புடன் கூட வேறு ஏதாவது பொழுதுபோக்கையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். உங்களது லட்சியத்தை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோருடன் அதிகம் பேசுங்கள். உங்களது முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை செலுத்தும் நண்பர்களுடன் அதிக நேரத்தைக் கழியுங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள். இவை மறைந்து போகக்கூடிய உணர்வுகள். பிற்காலத்தில் நினைத்துப் பார்க்கும்போது உங்களுக்கே சிரிப்பு வரவழைக்கும் என்று உணர்ந்தீர்களானால் இவற்றைக் கடந்து வாழலாம்.

மேலும் பேசுவோம்……

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s