பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 21

 

 

 

‘அனன்யா எப்போ ஸ்கூல் போவாள்?’

கேட்டது மூன்றாம் வகுப்புப் படிக்கும் சித்தார்த் – அனந்யாவின் அண்ணா. அனன்யாவிற்கு இப்போதுதான் ஒரு வயது நிரம்பி இருக்கிறது. ‘அடுத்த வருடம் ப்ளே ஸ்கூல் போவாள்’ என்றேன் நான். ‘பாவம்! அப்புறம் அவளுக்கு சாட் டேஸ் (sad days) தான்!’ என்றான் சித்தார்த். நான் உடனே சிரித்தாலும் அவன் சொன்னது என்னை மிகவும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்..

 

பல குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் என்பது பிடிக்காத ஒரு இடமாகவே இருக்கிறது. இந்த நிலைக்கு காரணம் யார்? பள்ளிக்குச் செல்லவே ஆரம்பிக்காத குழந்தையைப் பார்த்து, ‘ரொம்ப விஷமம் பண்ணுகிறாயா? இரு இன்னும் கொஞ்ச நாட்களில் உன்னை ஸ்கூலில் போடுகிறேன். அங்கே டீச்சர் உன்னை நல்லா அடி அடின்னு அடிச்சு…..உன் வாலை ஓட்ட நறுக்கிடுவாங்க……!’ என்று சொல்லும் பெற்றோர் முதல் காரணம். அடுத்து பள்ளிக்குச் செல்லும் குழந்தையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ‘சொன்ன பேச்சைக் கேட்கிறாயா? உங்க டீச்சர் கிட்ட சொல்லவா?’ என்று எல்லாவற்றிற்கும் டீச்சரைக் காட்டி பயமுறுத்தும் பெற்றோர். பள்ளிக்கூடம் என்றாலே பயங்கரமான ஒரு இடம், ஆசிரியர் என்பவர் ஒரு அரக்கர் என்ற பிம்பத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்கி விடுகிறார்கள்.

 

இந்த பயமுறுத்தல்களை மீறி பள்ளிக்கு வந்தால் ஆசிரியர் சுவாரஸ்யமே இல்லாமல் பாடங்களை நடத்துகிறார். முதலில் குழந்தைகளை ஓரிடத்தில் உட்கார வைப்பது என்பது மிகவும் கடினமான வேலை. குழந்தைகள் என்றால் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அவர்களை ஒரு அறையில் உட்கார வைத்து படி, படி என்றால் என்ன செய்வார்கள்?

 

உடல் உழைப்பு அல்லது மூளைக்கு வேலை இரண்டு மட்டுமே அவர்களை அமைதிப்படுத்தும். அவர்களுக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும்.

 

பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்கள்? அவர்களும் அவர்களுக்குரிய கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

திரு பில் கேட்ஸ் ஒரு பள்ளிக்கூடத்தில் பேசியபோது சொன்னவை மிகவும் சிந்திக்க வைக்கிறது. பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியாத பதினோரு விஷயங்கள் பற்றிப் பேசியிருக்கிறார். எப்போதுமே நல்லதையே காட்டும், சரியான விஷயங்களையே கற்பிக்கும் கல்வியால் இந்தத் தலைமுறை வாழ்வியலின் சில கடினமான உண்மைகளை உணருவதில்லை. நிறைய படிப்புப் படித்திருந்தும் நிஜ வாழ்க்கையில் பலர் தோல்வி அடைய இவை காரணம் என்கிறார் திரு. பில் கேட்ஸ்.

மாணவர்களே!

 • வாழ்க்கை நியாயமானதாக இல்லை என்று உங்களுக்குத் தோன்றும். உண்மை. அதை பழக்கி கொள்ளுங்கள்.
 • உங்கள் சுயமரியாதை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். உங்களைப் பற்றி நீங்கள் பெருமைப்படுவதற்கு முன் நீங்கள் ஏதாவது சாதித்திருக்க வேண்டும் என்று இந்த உலகம் எதிர்பார்க்கிறது.
 • பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடனேயே உங்களால் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியாது. நீங்கள் ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவராக, ஒரு கார், ஒரு கைபேசி வைத்திருப்பவராக ஆக முடியாது. இவற்றையெல்லாம் நீங்கள் தான் சம்பாதிக்க வேண்டும்.
 • உங்கள் ஆசிரியர் மிகவும் கடுமையானவராக இருக்கிறார் என்று தோன்றினால் உங்களுக்கு ஒரு மேலதிகாரி வரும் வரை காத்திருங்கள்.
 • உங்களுடைய தவறுகளுக்கு உங்கள் பெற்றோர் பொறுப்பாக முடியாது. தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். தவறுகளுக்கு வருந்துவதை விட அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
 • நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் பெற்றோர் இவ்வளவு ‘போர்’ அடிப்பவர்களாக இருக்கவில்லை. அப்படி அவர்கள் ஆனதற்கு நீங்கள் தான் காரணம். உங்களுக்காக செலவு செய்வது, உங்கள் துணிமணிகளை சுத்தம் செய்வது, நீங்கள் உங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதை கேட்பது என்று இதையெல்லாம் செய்து செய்து இப்படி ஆகிவிட்டார்கள். அப்பா அம்மாவின் தப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முன் உங்கள் துணி அலமாரியை சுத்தம் செய்யுங்கள்.
 • பள்ளியில் வெற்றியாளர் தோல்வியாளர் என்ற பாகுபாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. பல பள்ளிகளில் ‘பெயில்’ என்பதே இல்லை என்று சொல்லி எத்தனை முறை வேண்டுமானாலும் பரீட்சை எழுதலாம் என்று சொல்லுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் இப்படி எதுவுமே நடக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
 • வாழ்க்கை செமெஸ்டர்களால் ஆனது இல்லை. இங்கு கோடை விடுமுறை கிடையாது. உங்களுக்கு உதவ யாருக்கும் இங்கு ஆர்வம் இருக்காது. நீங்களே தான் உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.
 • தொலைக்காட்சி நிஜ வாழ்க்கை இல்லை. நிஜ வாழ்க்கையில் மக்கள் காபிக்கடையில் காப்பியைக் குடித்துவிட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
 • உங்கள் கீழ் வேலை செய்பவர்களிடம் மரியாதை வையுங்கள். சொல்லமுடியாது நாளை நீங்கள் அவர்கள் ஒருவரின் கீழ் வேலை செய்ய வேண்டி வரலாம்.
 • நான் படித்த படிப்பிற்கு இந்த வேலையா என்று பொங்காதீர்கள். வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்.

தைத்த்ரிய உபநிஷதம் மாணவர்களுக்குக் கூறும் நல்லுரைகள்:

உண்மையான நிலைப்பாடு உடையவராக இருங்கள். உண்மை மட்டுமே  உங்களைப் பாதுகாக்கும். பொய் உங்களைக் காட்டிக் கொடுக்கும் எத்தனை நீங்கள் பாதுகாத்தாலும். உண்மை உங்களுக்கு பலத்தைக் கொடுக்கும்; வாய்ப்புக்களைப் பெருக்கும். பொய் உங்களை பலவீனப் படுத்தும். வாய்ப்புக்களைத் தட்டிப் பறிக்கும்.

நியாயமும், கருணையும் மனதில் நிலைத்து இருக்கட்டும்.

உங்களை வளர்த்த இந்த சமுதாயத்திற்கு நல்லதைச் செய்யுங்கள். சமுதாயத்தில் பிரச்னை வருவது பொல்லாதவர்களின் செயல்பாட்டினால் அல்ல; நல்லவர்கள் செயல்படாமல் இருப்பதால்.

மேலும் பேசுவோம்……