பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 20

 

குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என்ற தணியாத வேட்கையினால் பெற்றோர்கள் செய்யும் செலவுகள் பணம் என்பது ஏதோ மரத்தில் காய்ப்பது போன்ற உணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடுகிறது. அதுமட்டுமல்ல; எத்தனை வாங்கிக்கொடுத்தலும் திருப்தி அடைவதில்லை. சிறுவயது முதலே தங்களை விட தங்கள் குழந்தைக்கு மிகச்சிறந்தவற்றை கிடைக்கச்செய்ய வேண்டும் என்கிற எண்ணம் குழந்தைகளின் மனதில் அதிருப்தி என்னும் விதையை விதைத்து விடுகிறது என்கிறார் சைக்காலஜிஸ்ட் டாக்டர் சப்னா ஷர்மா. இதன் காரணமாக அவர்கள் சோம்பேறிகளாகவும், எதையும் எதிர்கொள்ளப் பயப்படுபவர்களாகவும், அதேசமயத்தில் பேராசையும், அக்கறையின்மையும் கொண்டவர்களாகவும் உருவாகுகிறார்கள்.  இதை Parent Induced Wastefulness (PIW) என்று குறிப்பிடுகிறார் டாக்டர் சப்னா.

 

இதற்கு என்ன தீர்வு?

நீங்கள் உங்கள் குழந்தையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறீர்கள் என்பது சரி. அதற்காக சிறுவயதிலிருந்தே அவர்களை வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரியாமல் வளர்க்காதீர்கள். இப்படி வளர்ப்பதால் ஒரு காலகட்டத்தில் வெளி உலகை சந்திக்க அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தை சந்திக்கத் தயாராக இல்லை. எல்லாவற்றிலிருந்தும் ஓடி ஒளிய விரும்புகிறார்கள். இந்த உலகத்தில் தான் அவர்கள் வாழ வேண்டும். எப்போதும் உங்கள் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் நீங்கள்  பரிகாரம் தேட முடியாது.

 

அதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை உண்மையில் விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்ய வேண்டும். தடைகளை எதிர்கொள்ளத் தயார் செய்யுங்கள்.அவர்களுடன் பேசுங்கள். உங்கள் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு என்று உறுதி கூறுங்கள். அதேசமயம் படிப்பு, நண்பர்கள், வெளி உலகில் ஏற்படும் ஏமாற்றங்கள், கேலிகள் எல்லாவற்றையும் அவர்கள் தான் கையாள வேண்டும் என்பதையும் கறாராகச் சொல்லுங்கள்.

பணம் என்பது எல்லாவற்றையும் கொடுக்காது. உங்களிடமிருந்து ‘இல்லை’ என்ற வார்த்தையை உங்கள் குழந்தைகள் அதிக அளவில் கேட்கட்டும். அதுதான் அவர்களை எதிர்காலத்திற்குத் தயார் செய்யும்.

 

வெளி உலகில் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் பல. அவைகளை எதிர்கொள்ள அவர்களைத் தயார் செய்வது பெற்றோரின் முதல் கடமை. இப்போது இன்னொரு வகையான சவாலையும் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்ற பெயரில் தொலைக்காட்சிகள் செய்யும் அக்கிரமம் கொஞ்சநஞ்சமல்ல. இசைப்போட்டி, நடனப் போட்டி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். சின்னக் குழந்தைகளை அவர்களது வயதுக்கு மீறிய பாடல்களைப் பாட வைப்பது; அசிங்கமான வரிகள் கொண்ட பாடலுக்கு இளம் குழந்தைகளை ஆட வைப்பது. ‘இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாடி இருக்கலாம்; ஆடி இருக்கலாம்’ என்று நடுவர்கள் என்ற பெயரில் உட்கார்ந்திருக்கும் வயதானவர்கள் கருத்துத் தெரிவிப்பது. பெண் குழந்தைகளுக்கு நாகரீகம் என்ற பெயரில் கன்னாபின்னாவென்று உடை அணிவிப்பது இவை எல்லாமே நிச்சயம் கண்டிக்கப்பட விஷயங்கள்.  இவற்றையெல்லாம் ரசித்துப் பார்க்கும் வெட்டிக் கூட்டம் ஒன்று. இவர்களில் யாருக்குமே குழந்தைகளைப் பற்றிய அக்கறை இல்லை. நாளைய தலைமுறை இவர்கள் என்ற சமூக உணர்வும் இல்லை.

 

பெற்றோர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். சின்னஞ்சிறு வயதில் இப்படிப்பட்ட புகழ் தேவையா? புகழ் என்பது போதைபொருள். உங்கள் குழந்தை பிறவி மேதையாக இருக்கலாம். அந்த மேதைத்தனத்தை பாதுகாத்து, தேவையான பயிற்சிகள் கொடுத்து வளர்த்து வாருங்கள். அதை வைத்துப் பணம் பண்ண எண்ணாதீர்கள். தானாகப் பழுக்க வேண்டிய பழத்தை தடி கொண்டு அடித்துப் பழுக்க வைப்பது தான் இந்தப் போட்டிகளில் உங்கள் குழந்தைகளைக் கலந்து கொள்ள வைப்பது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

ரியாலிட்டி ஷோ என்று சொல்லி கண்களில் நீரை வரவழைப்பது கலப்படம் இல்லாத வியாபாரத்தனம் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜூரிகள் என்று பத்து பேர்கள் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்களில் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? எத்தனை பேர்கள் புகழின் உச்சத்தில் இருக்கிறார்கள்? இதுவரை பாடி பரிசு வாங்கிய  சிறுவர்கள் எல்லாம் எங்கே? எத்தனை பேர்களுக்கு திரைத் துறையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது?

 

மாணவப்பருவத்தில் இது போன்ற அலைக்கழிப்புகள் தேவையில்லை. அவர்களது முழு கவனமும் படிப்பதில் இருக்கட்டும். மாணவப் பருவம் முடிந்த பின் பாடுவதில் கவனம் செலுத்தலாம். மாணவப் பருவத்தைத் தாண்டிவிட்டால் படிப்பு ஏறாது. படிக்கும் வயதில் படிக்க வேண்டும்.

 

ஐந்து வயது ஆறுவயதுக் குழந்தைகள் எல்லாம் இப்படிப்பட்ட போட்டிகளில் கலந்து கொள்வதைப் பார்க்கும்போது இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பதைபதைப்பு எனக்கு ஏற்படும். உங்கள் குழந்தையின் திறமையை வைத்து தொலைக்காட்சிகள் பணம் செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தாற்காலிகமான புகழ். நிலைத்து நிற்காது. இந்த சீசனில் உங்கள் குழந்தையை நினைவு வைத்துக் கொள்பவர்கள் அடுத்த சீசனில் வேறு ஒரு குழந்தையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

படிப்பிற்கு மட்டுமல்ல; பாட்டுப்பாடவும் உழைப்பு வேண்டும். எதுவுமே நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடாது. கிடைக்கக் கூடாது. பிறகு அதன் மேல் மரியாதை இருக்காது. கடின உழைப்பு ஒன்று மட்டுமே மாணவர்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கும்.

 

பெற்றோர்களும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். பாட்டு என்பதை பொழுது போக்காக வைத்துக் கொள்ளட்டும். குழந்தைகள் பட்டதாரி ஆனவுடன் உங்களது பாடும்/ஆடும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.